Wednesday, March 31, 2010

ஸநகாதி சமாராத்யா, சிவக்ஞான ப்ரதாயினி


ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர் ஆகிய நால்வரும் ப்ரம்மாவின் மானஸ புத்ரர்கள் என்பது நமக்குத் தெரியும். இவர்கள் தக்ஷிணாமூர்த்தியின்சிஷ்யர்கள் என்பதும், தக்ஷிணாமூர்த்தியின் மெளனத்திலேயே ஞானத்தை அடைந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், இவர்கள் நால்வரும் அம்பாளுடைய பக்தர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அம்பிகையின் உபாசனா மார்க்கங்களில் முக்யமான ஸமய மதத்தை தெரிவிக்கும் சுபாகம பஞ்சகம் என்பதை நமக்கு அளித்தவர்கள் இவர்களே!. இவர்களால் இயற்றப்பட்டதான ஸனக சம்ஹிதா, ஸனந்தன ஸம்ஹிதா, ஸனத்குமார ஸம்ஹிதா ஆகிய மூன்றும் இவர்கள் நமக்கு அளித்ததே. இவர்கள் அம்பிகையின் பரம பக்தர்கள் என்பதாக ப்ரம்ஹாண்ட புராணத்திலும் கூறப்பட்டிருக்கிறது. இவர்களால் வழிபடப்படுபவளை "ஸநகாதி சமாராத்யா" என்று வாக்தேவதைகள் கூறுகிறார்கள். இந்த நால்வரும் குரு பரம்பரையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.


சிவனை அறிவதற்கே (அறிந்த பிறகே, உணர்வது, பக்தி பண்ணுவது என்று நீண்டு, அவனில் கலப்பது எல்லாம்) சக்தியின் அருள் வேண்டும். சலனம் என்று ஒன்று இருந்தால்தான் நிச்சலனம் தெரியவரும்?. சலனமற்ற பிரம்மத்தை சலனத்தில் இருக்கும் நாம் அறியவே அம்பிகையின் அருள் வேண்டும். இதையே "சிவக்ஞான ப்ரதாயினி" எனலாம். இன்னொரு விதத்தில் சிந்தித்தால், எப்படி த்ரிமூர்த்திகள் பற்றிய ஞானம் ருத்ரனை அறிவதன் மூலமாக வரும் என்று வராஹ புராணம் சொல்கிறதோ அது போல அம்பிகை பற்றி அறியத்தருபவனே சிவன் என்றும் கூறலாம்.

Wednesday, March 24, 2010

ஸர்வ வியாதி ப்ரசமநீ..


மனிதர்களாகிய நமக்கு கண்களைக் கொட்டுதல், அதாவது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை கண்களை மூடித் திறப்பது இயல்பு. ஆனால் தேவர்களுக்கு இது போன்ற இயல்பு கிடையாதாம். இந்த மாதிரி இயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாதவள் அம்பிகை. அவள் எப்போதோ ஒரு முறை கண்களை மூடித் திறக்கும் நேரத்திலேயே ப்ரளயமும், மீண்டும் உலகங்களின் ஆக்கமும் நடத்தி அருள்கிறாள் என்பதாகப் பொருள் தருவதே "உந்மேஷ நிமிஷோத்பந்த விபந்த புவனாவளி". உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமேஷம் என்றால் கண்களை மூடுதல், புவனாவளி என்பது வரிசையான பல உலகங்கள். அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து-மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது.இந்த நாமாவளியைத்தான் பூத்தவளே புவனம் பதினான்கையும் என்று அபிராமி அந்தாதியில் பட்டர் கூறுகிறார் போல. இதை ஆதி சங்கரரும் செளந்தர்ய லஹரியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். இதே போன்ற இன்னொரு நாமம் "ஆ ப்ரம்ஹ கீட ஜநநீ" - பிரம்மன் முதலாக பல நுண்ணுயிர்களை பெற்றவள் என்பது பொருள். ஜநநீ என்றால் பெற்றவள் என்று சொல்லலாம். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைப்பவன் பிரம்மா. அந்த பிரம்மாவையும்,கீடம் என்று சொல்லப்படும் நுண்ணுயிர்களையும் படைப்பவள். உலகனைத்தையும் படைக்கும் பிரம்மாவிலிருந்து நுண்ணுயிர்கள் வரையில் எல்லாவற்றையும் படைப்பவள் அன்னை என்று கூறலாம்.

அன்னையின் கண்களைக் குறிப்பிடும் ஒரு நாமம் "மஹாகாமேச நயன குமுத ஆஹ்லாத கெளமுதீ". மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை. கார்த்திகை மாதத்து முழுநிலவுக்குப் பெயர் கெளமுதீ. நிலவு எப்போதுமே குளிர்ச்சி தருவதுதான், இதில் கார்காலமான கார்த்திகையில் அதன் குளிர்ச்சி, முழுமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதை அன்னையின் கண்களுக்கு உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள் வசினி தேவதைகள்.

"தாப த்ரய அக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா" - தாப த்ரயம் என்பது மூன்று விதமான இடர்களைக் குறிக்கும். முன்வினையால் விளையும் துன்பமாகிய 'ஆதியாத்மிகம்', இப்பிறப்பில் பிற உயிர்களால் விளையும் துன்பமாகிய 'ஆதிபெளதிகம்' மற்றும் 'ஆதிதெய்விகம்' எனப்படும் இயற்கைச் சீற்றங்கள் போன்றவை நம்மை வருந்தச் செய்பவை. இந்த மூன்றிலிருந்தும் காக்கும் குளிர் நிலவாம் அம்பிகை. இதத்தான் அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் என்பார். இதே போல 'பிணிக்கு மருந்தே' என்றும் 'அபிராமி என்னும் அருமருந்தே' என்றும் அபிராமி பட்டர் கூறுவதற்கு ஏற்ற நாமம் "ஸர்வ வியாதி ப்ரசமநீ" என்பது. எல்லா வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்தானவளாம் அம்பிகை.

Tuesday, March 23, 2010

பத்மநாப சஹோதரி


நித்யமானது, சைதன்ய ஸ்வருபமானது என்றெல்லாம் சொல்லப்படுகிற பரப்ரம்ஹம் பலவாறாக பிரிகையில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகள் உருவாகிறார்கள். இவர்களில் பிரம்மாவுடன் பிறந்தவள் லக்ஷ்மியும், ருத்ரனுடன் பிறந்தவள் சரஸ்வதியும், விஷ்ணுவுடன் பிறந்தவள் கெளரியும் ஆவர். திருவுந்தியில்/நாபியில் தாமரையைக் கொண்டவன் பத்ம நாபன். அவனது சகோதரியாக அம்பிகை பிறந்ததால் பத்மநாப சஹோதரி. இதைத்தான் அபிராமி பட்டர், "அலையாழி அரிதுயலும் மாயனது தங்கை", "செங்கண்மால் திருதங்கச்சி", "முகுந்ததற்கு இளையவள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

உலகத்தை ஐந்து விதமான பிரிவுகளாகச் சொல்லலாம். அவை ஸத், சித், ஆனந்தம், நாமம், ரூபம் என்பவை. இந்த ஐந்தில் முதல் மூன்றும் பரப்ரம்ஹத்தின் ரூபமாகச் சொல்கிறார்கள். மற்ற இரண்டும் உலகின் ரூபம், அதாவது உலகில் இருக்கும் அனைத்துக்கும் நாமமும், ரூபமும் உண்டு. நாமம், ரூபம் ஆகிய இரண்டும் மாயையால் உருவாவது. ஆகவே இந்த மாயையைக் கடந்தவளை நாமரூப விவர்ஜிதா. அதாவது நாமத்தையும், ரூபத்தையும் கடந்தவள், இவ்விரண்டிலிருந்தும் விடுபட்டவள் என்பதே நாமரூப விவர்ஜிதா.

ராஜீவம் என்றால் தாமரை, மீன்கள், மான் என்று மூன்று பொருள்களைச் சொல்லலாம். தாமரை போன்ற கண்களால் மட்டுமா அவள் ராஜீவலோசநா?, மீனைப் போன்ற கண்களால் அவளை மீனாக்ஷி என்று சொல்கிறோமே, அதுவும் இந்த நாமத்தில் அடக்கம் தான். மான் போன்ற மருண்ட விழிகள் என்று கவிஞர்கள் பெண்களின் கண்களுக்கு உவமை சொல்வதைப் பார்த்திருக்கிறோம்?, பெண்களுக்கெல்லாம் முதன்மையாக ஜகன் மாதாவான அம்பிகையின் கண்ணழகையும் மான் விழிகளுடன் ஒப்புமை கூறினாலும் வியக்க ஒன்றுமில்லை. ஆகவே அம்பிகைக்கு ராஜிவ-லோசநா என்ற நாமம். இதைச் சொல்லும் போது தேதியூரார், ராஜீவ என்பதற்கு அண்டியிருப்பவள் என்றும் பொருள் சொல்லி, ஈசனை/பரபிரம்ஹத்தை அண்டியிருந்து பக்தர்களை வாத்ஸல்யத்துடன் பார்ப்பவள், ஆகவே அவள் ராஜீவ லோசநா என்கிறார்.

Monday, March 22, 2010

கெளரீ, ஞானதா, ஞான-விக்ரஹா...தங்கம் போன்ற நிறத்தை கெளர-வர்ணம் என்று சொல்லியிருக்கிறது. அம்பிகையின் உடலானது ஸ்வர்ணம்/தங்கம் போன்று இருப்பதால் கெளரீ என்று பெயர் வந்ததாகச் சொல்லலாம். கெளரீ என்றால் வெண்மை என்றும் ஒரு பொருள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்பிகை ஹிமவானுக்குப் புத்ரியாகப் பிறந்த காலத்தில் அவளது சரீரமானது சங்கு, மல்லிகைப்பூ, களங்கமற்ற சந்திரனது ஒளி ஆகியவைபோல வெளுப்பாக இருந்ததாம், அதனாலும் அவளுக்கு கெளரீ என்று பெயர் என்று கூறியிருக்கிறார்கள். இவை தவிர பத்து வயதேயான கன்னிகையை கெளரீ என்று கூறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. பத்ம புராணத்தில் கன்யாகுப்ஜத்தில் இருக்கும் சக்தி பீடத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை கெளரீ என்று குறிப்பிட்டிருக்கிறது.

அம்பிகையே ஞான வடிவம் என்பதை அவளது ரூபமான சரஸ்வதி, வசின் தேவதைகள் போன்ற நாமங்களின் மூலமாக அறிந்தோம். அவளே ஞானத்தை அருள்பவள் என்பதால் ஞானதா என்னும் நாமம். அவித்தை/மாயையால் சூழப்படுவதற்கும், அவற்றிலிருந்து காத்து ஞானத்தைத் தருபவள் என்பது பொருள். இவள் ஞான ரூபமாக இருப்பதால்தான் ஞான விக்ரஹா என்றும் ஒரு நாமம் இருக்கிறது. ஞானத்தையே தன் சரீரமாகக் கொண்டவள் என்பதுதான் ஞான விக்ரஹா என்பதன் பொருள். விக்ரஹம் என்றால் 'பரந்து-விரிந்த/விஸ்த்தாரமான' என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகையின் அருளால் ஞானம் பரவுகிறது என்றாலும் சரியாகவே இருக்கிறது

Sunday, March 21, 2010

சாரதாராத்யா...

ஆதி சங்கரர் அவதாரத்தின் போது பிரம்மாவே மண்டனமிச்ரராகவும், சரஸ்வதி தேவியே சரஸவாணியாகவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மண்டனமிச்ரரை வாதத்தில் வென்றபிறகு சரஸ்வதியின் அம்சமான சரஸவாணிய சிருங்ககிரியில் சாரதா என்று எழுதருளச் செய்தார் ஸ்ரீஆசார்யாள் என்பது சங்கர விஜயம் சொல்லும் வரலாறு. மூலமூர்த்தியான சரஸ்வதியுடன் இணைவதற்காக புறப்பட்ட சரஸவாணியை பூவுலகத்தில் நமக்கெல்லாம் புகலிடமாக சிருங்கேரியில் ஸ்தாபித்தார் என்றால் அது மிகயாகா. சரஸவாணியாக இருந்த போதிலும் அவள் ஞானத்தில் சிறந்தவள் என்றே தெரிகிறது. சாரதையாக எழுந்தருளிய பிறகு பக்தர்களுக்கு எல்லாம் ஞான சாரத்தை வழங்கி வருகிறாள். அந்த சாரதையாலேயே வழிபடப்படுபவள் என்பதுதான் சாரதாராத்யா என்னும் நாமம். கலைமகளும், திருமகளும் வணங்கும் தெய்வம் ஸ்ரீலலிதை என்பதை முன்னமே பார்த்தோம், அதுவே இங்கும் பொருளாக, கலைமகளால் வழிபடப்படுபவள் என்பதாகச் சொல்வதே சாரதாராத்யா.

வசந்தகாலத்தில் வரும் நவராத்ரி வசந்த நவராத்ரி என்பதைப் போல சகலரும் கொண்டாடும் நவராத்ரியை சாரத நவராத்ரி என்பது வழக்கம். சாரதாராத்யா என்பதை சரத்-ஆராதித்யா என்று பிரித்தால் சரத்காலத்தில் பூஜிக்கப்படுபவள்,சரத்காலத்தில் வரும் நவராத்ரியில் வழிபடப்படுபவள் என்று பொருள். காளிகா புராணம் மற்றும் சப்தசதீ ஆகிய இரு நூல்களும் சரன்நவராத்ரியை இவ்வாறே குறிப்பிட்டுள்ளன.

சஹஸ்ரநாமத்தை அருளிய வசின் தேவதை/வாக்தேவதைகளும் ஞானத்தை அருள்பவர்கள்தாம், அவர்களையும் சாரதைகள் என்றே கூறுகிறார்கள் பெரியோர். ஆக, சாரதாரார்த்யா என்பதற்கு வசின் தேவதைகளால் ஆராதிக்கப்பட்டவள் என்றும் பொருள் கொள்ளலாம். சம்பந்தர், ஆதிசங்கரர் மற்றும் பல ஞான ஆசார்யர்களையும், யோகிகளையும், துறவிகளையும் விசாரதர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறான விசாரதர்களால் வணங்கப்பட்ட சாரதை என்று ஸ்ரீபாஸ்கர ராயர் குறிப்பிட்டுளதாகத் தெரிகிறது.

துராராத்யா - துர்+ஆராத்யா என்பது இன்னொரு நாமம். இங்கு 'துர்' என்பதற்கு 'கெட்ட/தீய' என்று பொருள் கொள்ளக்கூடாது. துர் என்றால் விடாப்பிடியாக/அடைந்தே தீருவது என்பதான பொருளைக் கொள்ள வேண்டும். கடுமையான விரதமுறைகளால் அம்பிகையை ஆராதிப்பது என்பதாக பொருள் கொள்ள் வேண்டும். இன்றும் நாம் தீ மிதித்தல், அலகு குத்திக்கொள்ளுதல் போன்ற வழிபாடுகளைக் காண்கிறோம். இவையெல்லாம் இந்த நாமத்தை அடிப்படையாகக் கொண்டே என்று கூறலாம். இதையே இன்னொரு விதத்தில் மிகவும் சிரமப்பட்டு ஆராதிக்கப்படுபவள் என்றும் சொல்கிறார்கள். அதாவது சபலமுடையவர்கள், இந்திரியங்கக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிரமமானவள் என்று பொருளாகும். இந்த நாமத்துடன் வாமாசாரம், ஆபிசாரம் போன்ற வழிபாடுகளை நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது மிக முக்கியம்.


இன்று சிருங்கேரி ஆசார்யாளது 60ஆம் வார்ஷிக ஜெயந்தி. பராம்பிகையின் அருளைப் பெற்ற அவரை வணங்கிடுவோம். சாரதா பீடத்தின் நாயகரான ஸ்ரீ பாரதி தீர்த்தரது அருளுக்குப் பாத்திரமானால் கண்டிப்பாக ஸ்ரீசாரதா நம்மிடம் கருணை கொள்வாள்.

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!
சிருங்கேரி சங்கர!
ஸ்ரீசாரத சங்கர!

Wednesday, March 17, 2010

சம்பக அசோக புன்னாக ஸெளகந்திகா லஸத்கசா


நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரம்மாண்ட மண்டலா

தனது சிவந்த மேனியின் ஒளிவெள்ளத்தால் பிரம்மாண்டத்தை மூழ்கச் செய்பவள் என்பதே இந்த நாமத்தின் பொருள். ஆயிரக்கணக்கான சூரியன்களது உதயக்கிரணங்கள் போன்ற காந்தியுடையவள் சிதக்னியில் இருந்து வெளிவருகையில் அண்ட-பேரண்டங்கள் முழுவதிலும் தனது சிவப்பான ஒளியினை படரச் செய்வாள் தானே?.

நிஜாருண ப்ரபா என்றால் இயற்கையாகவே சிந்த ஒளியுடைய என்று சொல்லலாம். அன்னையின் நிறம் செயற்கை கலவையால் சிவந்த நிறத்தை அடையவில்லை, இயற்கையாகவே சிவந்த ஒளிவீசிடும் நிறத்தை உடையவள் என்று அர்த்தம்.

சூரிய குடும்பம், நக்ஷத்திரங்கள், ஆகாயம் இவை எல்லாம் சேர்ந்தது பிரம்மாண்டம் என்று சொலப்படுகிறது. இவற்றைப் போல பலபிரம்மாண்டங்கள் சேர்ந்தால் அது பிரம்மாண்ட மண்டலம். ஆக ஆயிரக்கணக்கான சூரியன்களது உதயக்கிரணங்கள் போன்ற காந்தியுடையவளது நிறமானது இயற்கையாகவே சிவந்து இருக்கிறது என்பது சொல்கிறார்கள் வாக்தேவதைகள். இந்த நாமத்தைப் போலவே, 'அருணாம் கருணா தரங்கிதாக்ஷிம்' என்றும் ஸிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்' என்று ஸ்லோகங்கள் சொல்கின்றன.

சிந்தூரமேனியள், சிந்தூரவண்ணத்தினள் என்று அபிராமி பட்டர் அந்தாதியில் அம்பிகையின் வர்ணத்தைப் போற்றுகிறார். ஆதிசங்கரரர் செளந்தர்யலஹரியில் அம்பிகையின் சிவப்பழகைச் சொல்வதை அருணரூப த்யானம் என்றே சொல்லுவார்கள் பெரியோர்.

சம்பகாசோக புன்னாக ஸெளகந்திகா லஸத்கசா

அம்பிகையின் கூந்தலைச் சொல்கையில், சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம் ஆகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள் என்பது நேரடிப் பொருள். பாஸ்கரராயர் இதற்குப் பொருள் சொல்கையில் அம்பிகையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று கூறி அவள் சூடியிருக்கும் மலர்களால்
அந்த மணம் இல்லை, ஆனால் அம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமே என்றும் கூறியிருக்கிறார் என்று கூறியதாகத் தெரிகிறது.

செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும என்று
சொல்வது பாஸ்கரராயரது விளக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கிறது. அபிராமி பட்டரும் அன்னையின் கூந்தலைச் சொல்கையில் அவள் சூடியிருக்கும் மலரை, 'பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்' என்று பிச்சிப்பூ சூடியவளாகச் சொல்லுகிறார்.

Tuesday, March 16, 2010

அன்னையின் கரங்கள்...
பனிமலர்ப் பூங்கணையும் கருப்புச் சிலையு மென்பாசங்குசமும்
கையில் அனையும் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே

என்கிறார் அபிராமி பட்டர். மன்மதன் கரும்பு வில்லையும், மலர்பாணங்களையும் கொண்டே சகல ஜீவராசிகளையும் மோகத்தில் ஆழ்த்துகிறான். 'என்பக்தர்களை இப்படி மோகத்தில் ஆழ்த்தி துன்பப்படுத்தாதே' என்றே அம்பிகை மன்மதனிடத்திருந்து வில்லையும், பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டாள் என்பார்கள் பெரியோர். இதற்குள் ஒரு பெரிய யோக தத்துவம் அடங்கியிருப்பதாகவும் சொல்வர். மன்மதனைப் பற்றி ஒரு செய்தி முன்பே பார்த்தோம். மன்மதன் பராம்பிகையின் பரம பக்தன்.அம்பிகையின் தலைசிறந்த 12 பக்தர்களில் மன்மதனும் ஒருவன். இவன் அம்பிகையை வணங்கிய முறை 'காதி'வித்தை என்று ஸ்ரீவித்யையில் ஒரு முறை. இந்த காதி-வித்யைக்கு அனங்கனே அதிபதி. சரி அனங்கனிடத்திருந்து பெற்ற பஞ்சபாணங்கள்களில் இருக்கும் மலர்கள் என்ன என்று பார்த்துவிடுவோம். அவை, தாமரை, அசோகம், சூதம் என்னும் மாம்பூ, முல்லை மற்றும் நீலோத்பலம்.

சாதாரணமாக என்னைப் போன்றவர்களிடத்து, கோபம், லோபம் போன்ற கெட்ட எண்ணங்கள் மதம் கொண்ட யானையைப் போன்று வெறித்து அலைக்கழிப்பது தெரிகிறது. அதை அடக்கி நல்வழிப்படுத்த அம்பிகை வைத்திருப்பதுதான் அங்குசமும், அடக்கியபின் கட்ட ஒரு பாசக் கயிறும்.


இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞான ரூபிணிம்
க்ரியாசக்தி மயே பாண தனுஷீ தத்த உஜ்வலம்

என்பது ஞானார்ணவத்தில் சொல்லப்படுவது. இங்கே பாசம் என்பது இச்சாசக்தி, அங்குசம் என்பது ஞானசக்தி, பாணம், தனுஸ் ஆகிய இரண்டும் க்ரியாசக்தி. அம்பிகையின் பாசம் என்னும் சக்திதான் நம்மை மாயையில் ஆழ்த்துகிறது. இந்த பாசத்தை நீக்க வேண்டுமானால் அதற்கு ஒரு ஆயுதம் வேண்டும். இந்த மாயை என்னும் பாசக் கட்டை அகற்ற, அதைவிட பலமான கட்டு ஒன்றைப் போடவேண்டும். அம்பிகையின் தயவு இருந்தால் மாயையை விட பலமான பக்தி என்னும் கட்டை போட்டு பாசம் என்னும் மாயையை நீக்கலாம். அம்பிகையின் ஆயுதமான பாசக் கயிற்றுக்கு அதிஷ்ட்டான தேவதையாகச் சொல்வது அச்வாரூடா. இந்த அச்வாரூடாவே அம்பிகையின் குதிரைப்படைத் தலைவி. அம்பிகையின் இந்த அச்வாரூடா என்னும் ரூபத்தில் அவள் குதிரையில் அமர்ந்ததாகவே சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவள் அமர்ந்திருக்கும் குதிரைக்கு 'அபராஜிதா'என்று பெயர். மன அடக்கம், இந்திரிய அடக்கம் போன்றவை வாய்க்க அச்வாரூடா அருள் தேவை என்பது சாக்த மொழி.

அம்பிகையின் இன்னொரு கையில் இருப்பது அங்குசம். இந்த ஆயுதத்திற்கு அதிஷ்ட்டான தேவதை சம்பத்கரி, இவள் அம்பிகையின் யானைப்படை தலைவி. இவள் யானை மீது அமர்ந்திருப்பவள், இவள் அமர்ந்திருக்கும் யானையின் பெயர் ;கோலாகலம்'. 'நான்' என்னும் அஹங்காரம் நீங்க இவளது அருள் வேண்டும். மனித வாழ்க்கை பல சிக்கலான பிரச்சனைகளுடன் கூடியது, இரட்டை இயல்பு கொண்டது. இவ்விரண்டில், ஒன்று, உடம்பை வளர்க்க-சுக சாதனங்களைத் தேடுவது, இன்னொன்று பரபிரம்மத்தை, ஈஸ்வரனை அடையும் முயற்சி. இவற்றில் ஒரு முயற்சி அதிகமானால் இன்னொன்று தடைபடும். சம்சாரத்தில் ஈடுபடுவனுக்கு ஆத்ம வளர்ச்சிக்கு நேரம் கிடைப்பதில்லை. அதேபோல ஆத்ம வளர்ச்சியில் ஈடுபடுபவனுக்கு உலகாயமான வஸ்துக்களில் மனது செல்வதில்லை.ஆக இதற்கு என்னதான் வழி என்று பார்த்தோமானால், பராசக்தியின் பாதங்களே சிறந்த வழி என்று தோன்றுகிறது.

அந்தந்த காலங்களில் அந்தத வேகங்கள், இயற்கையின் உத்தல்கள் ஏற்பட்டாலும், மனத்தை அச்வாரூடாவின் த்யானத்தால் அடக்கி, கலங்காத மனத்துடன் பராம்பிகையைப் பிரார்த்திக் கொண்டே இருப்போமானால், பிஞ்சு காயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து விடுபடுவது போல சம்சாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று கூறுவார்கள். மனம் என்பது எண்ணங்களே என்பார் எனது தந்தை. ஒருவனது வாழ்வில் 4 விஷயங்களை முக்கியமானதாகச் சொல்லலாம், அவை ஊக்கம், கற்பனை, அறிவு, அன்பு. ஒருவனுக்கு தான் செய்யும் கற்பனையாலும், சிந்தனையாலுமே 'நான்','எனது' என்னும் பற்று ஏற்படுகிறது என்பார் என் தந்தை. அம்பிகையை அடைவதற்கு முன்னர் குதிரையைப் பழக்குவது போல மனதை பழக்கவேண்டும், அஹங்காரம் என்னும் யானையை ஒடுக்கவேண்டும் என்பார். இதனை எல்லாம் எவ்வளவு சாதிக்கிறானோ அவ்வளவு தூரம் அம்பிகையை நெருங்க முடியும் என்பார். ஆக உலகத்தில் சம்சார பந்த பாசங்களில் இருந்து கொண்டே, தர்ம மார்க்கத்தில் குடும்பத்தை நடத்தியவாறு அம்பிகையின் மீது ஈடுபாட்டைப் பெற்று, 'நான்' என்னும் மமதையை ஒழித்துவிட்டால் அவளை அடைந்திடலாம்.

சரி இவ்வளவு சொல்லிவிட்டு மற்ற இரு அஸ்திரங்களின் அதிதேவதையின் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி?. கரும்பு விலலுக்கு சியாமளா என்கிற ராஜ மாதங்கி என்பவள் அதிதேவதை. மனம் என்னும் வில்லைக் கொண்டு புத்தியை கட்டுப்படுத்துகிறது. இந்த ராஜமாதங்கியின் அருளிருந்தால் மனமும், புத்தியும் அம்பிகையிடம் லயிக்கும் என்பார்கள். இவளுடைய இடம் பராம்பிகையின் வலது புறம். பராம்பிகையின் முத்திரை மோதிரத்தை தரித்தவள், ஆகையால் இவள் மந்திரிணி எனப்படுவாள். மதுரை மீனாக்ஷியை மந்திரிணியாக ரூபமாகச் சொல்வார் ஆதிசங்கரர் முதலான பெரியோர்கள். புஷ்பபாணங்களுக்கு அதிதேவதை வாராஹி. அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதி இந்த வாராஹி, ஆகையால் இவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்ற பெயர் உண்டு. பிறரை தண்டித்து அடக்கும் செயலைச் செய்வதால் இவளை தண்டினி என்பர். திருவானைக்காவல் அகிலாண்ட நாயகியை தண்டினி/வாராஹி ஸ்வரூபம் என்பர் பெரியோர். இவள் உக்ரமானவள், ஆனால் அம்பிகையின் பக்தர்களுக்கு சகல அரிஷ்ட தோஷங்களையும் நீக்கி சாதகனுக்கு அருள்பவள். ''வாராஹி வீர்யநந்தனா' என்பதன் காரணமாக "வாராஹிக்காரனுடன் வாதாடாதே" என்பதன் மூலமாக இவளைச் சிறப்பாகச் சொல்வது வழக்கு.

ராஜ மாதங்கி மற்றும் வாராஹி பற்றி நிறையப் பேசலாம். சாக்தத்தில் இவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. பின்னர் இந்த இருவரையும் பற்றி தனி இடுகைகள் எழுத எண்ணம் இருக்கிறது. அடுத்த நாமாவை நாளை பார்க்கலாமா?

Friday, March 12, 2010

சிதக்னி குண்ட ஸம்பூதா...


பிரம்மாண்ட புராணத்தில் வருவது லலிதோப்பாக்யானம் என்னும் பகுதி. லலிதை என்றாலே இனிமை என்று பொருள். இனிமையானவள் அம்பிகை என்பதால்தான் அவள் லலிதா. யாருக்கு இனிமையானவள்?. தேவர்களுக்கு, நம்மை போன்ற மானிடர்களுக்கு இனிமையானவள். பண்டாசுரன் என்பவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால், இந்த நாமத்தின் பொருளை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்ததால் மன்மதன் சாம்பலானான். அவனது சாம்பலில் இருந்து உருவானவன்தான் பண்டாசுரன் என்கிறது பிரம்மாண்ட புராணம். மன்மதன் தனது உருவத்தை விடுத்துச் சாம்பலானாலும் ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவள் கண்களுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான் என்று அவளுக்கு வரம் கிடைத்தது.இவ்வாறு அனங்கனாக - உருவமற்றவனாக இருப்பதால்தான் மன்மதனுக்கு 'அனங்கன்' என்ற பெயர் வந்தது. பண்டாசுரனது கொடுமைகளால் தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் துன்பத்தை பண்டனது கொடுமைகளை அனுபவித்தனர். அக்கொடுமைகளிலிருந்து மீள்வதற்காக அம்பிகையை நோக்கித் தவமிருந்தனர். பண்ட வதத்திற்காக இமயமலைச் சாரலில் தேவேந்திரன் செய்த தவத்தின் பயனாக, அவனது யாகத்தீயின் நெருப்பிலிருந்து ஒர் தங்கத்தட்டில் யெளவனம் மிகுந்த 16 வயதுப்பெண்ணாக உருவானவள்தான் ஸ்ரீலலிதா. அக்னிகுண்டத்தில் இருந்து வந்ததால் 'அக்னிகுண்ட ஸம்பூதா. இது போலதான் மலையத்வஜ பாண்டியனது யாகத்தீயில் உருவானவளே அன்னை மீனாக்ஷி.

இந்த நாமத்தை நாம் சற்றே பிரித்துப் பார்க்க வேண்டும், சித்+அக்னிகுண்ட ஸம்பூதா என்பதாகப் பிரித்தல் வேண்டும். சத்-சித்-ஆனந்தம் என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். இதில் 'சத்' என்பது சகல உலகத்திற்கும் சத்யமான பரமாத்மா. 'சித்' என்பது சைதன்யத்தை, அதாவது நமக்குள் இருக்கும் பரமாத்ம ஸ்வரூபத்தை குறிப்பது. சத்+சித் = ஆனந்தம், அதாவது பரமாத்மாவும், நமது ஜீவாத்மாவும் இணைந்தால்/ஐக்கியமானால் வருவது சச்சிதானந்தம். இந்த சத்தும், சித்தும் இணைகின்ற ஆனந்த நிலையே சிதக்னி. அந்த சிதக்னியில் பிறந்தவள் 'சிதக்னி குண்ட ஸம்பூதா'. ஆக என்றோ நடந்த தேவேந்திரனது யாகத்தில் பிறந்தவளை நாம் லலிதாவாகக் கொண்டாடவில்லை. நமது சிதாகாசத்தில் உள்ள அக்னியிலிருந்துபிறந்தவள் லலிதா. ஸ்ரீமாதாவான அம்பிகை, நமது சிதக்னி நன்றாக, பூரணமாக இருக்குமானால் அதில் அவள் தோன்றாது இருப்பாளா?.

சித் என்பதை ஞானஒளியாகவும், அதிலிருந்து பிறந்தவளாதலால் சிதக்னிகுண்ட ஸம்பூதா என்றும் பெரியவர்கள் சொல்வதுண்டு. அவித்தை என்பது இருட்டைக் குறிக்கும் சித் என்னும் ஞானஒளியில் தோன்றுபவள் என்பதும் சரியாகத்தானே இருக்கிறது.

நல்லவை பெருகப் பெருக அல்லவை/தீயவை அழிந்திடும். இவ்வாறாக நம்முள் நல்லவை பெருகிடும் நேரத்தில் அம்பிகை நம்முள்ளேயே, நம் சிந்தையில் உதித்திடுகிறாள். ரஹோயாகம் என்று ஒன்று சொல்லப்படுகிறது. இந்த யாகம் நமக்குள்ளே நாமே செய்வது. உடலாகிய யாக குண்டத்தில், அறிவாகிய தீயில் நமது கெட்ட எண்ணங்களையும், தீய குணங்களையும் ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால் அங்கு இறைவன் தோன்றுவான் என்பதே ரஹோயாகம். எனவே அபிராமி பட்டர் வெளியில் இருந்த தீயின் மேல் மட்டும் இருந்து அந்தாதி பாடவில்லை, அவரது மனத்துள்ளும் அக்னியை உருவாக்கி அதன் மூலமாகவே அபிராமியை வரவழைத்திருக்கிறார் என்றால் அது தவறல்ல அல்லவா?.

நம்பிக்கைக் குழுவுக்காக எழுதப்பட்ட இடுகை.

Wednesday, March 10, 2010

ஸ்ரீமத் ஸிம்ஹாசனேச்வரிமிருகங்களில் சிங்கம் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. அரசர்கள் சபையில் உட்காரும் ஆஸனமானது சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதையும் அதனை ஸிம்ஹாசனம் என்பதையும் நாமெல்லாம் அறிவோம். அம்பிகை இந்த பிரபஞ்சத்துக்கே அரசி என்பதால் அவளது ஆசனம் ஸிம்ஹாசனமாகத்தானே இருக்க முடியும். அதுமட்டுமா, முந்தைய நாமத்தில் மஹாராக்ஞி என்று சொல்லிவிட்டு அடுத்து அவளது ஆசனத்தை எப்படிச் சொல்லாது இருக்க முடியும்?.

'பச்யகன்', 'வசி' என்ற பதங்கள் எப்படி 'கச்யபன், சிவ' என்று மாற்றிச் சொல்லப்படுகிறதோ அது போல, 'ஸிம்ஹ' என்னும் பதத்தை மாற்றி 'ஹிம்ஸ' என்றாக்கினால் ஹிம்ஸாசனேஸ்வரி என்று வரும். ஜகத்தை எல்லாம் ஸம்ஹாரம் பண்ணும்படியான சக்தியவள் என்று பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். [இந்த வசி-சிவ/ஹம்ஸ-ஸிம்ஹ-ஹம்ஸ போன்றவை எனது குறிப்பில் இருந்தே சொல்லியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் இல்லை]. இதை சொல்லும்போது இன்னொன்றையும் சொல்வார்கள், அதாவது முதலில் படைத்தல் தொழிலை (ஸ்ரீமாதா) சொல்லி, பின்னர் காக்கும் தொழிலை (மஹாராக்ஞி) சொல்லி அடுத்ததாக சம்ஹாரத்தைச் சொல்லியிருக்கிறார்கள் வசின் தேவதைகள் என்பார்கள். லலிதையின் ஆயிரம் நாமங்களில் முதல் மூன்று மட்டுமே முத்தொழிலை குறிப்பிடுவது, மற்ற எல்லா நாமங்களும் திரோதானத்தையும், அனுக்ரஹத்தையுமே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

மந்திரார்த்தமாக இந்த நாமாவிற்கு வேறு பொருள் சொல்லப்படுகிறது. ஸ்ரீவித்யா க்ரமத்தில் ஞானார்ணவ தந்திரம் என்று ஒரு நூல், அதில் 8 வித பைரவி மந்திரங்கள் (சைதன்ய பைரவியில் ஆரம்பித்து, ஸம்பத் ப்ரதா வரையில்) உண்டு. அங்கு இந்த பைரவிகளை ஸிம்ஹாசனத்தின் திசைகளுக்கு ஒன்றாகச் சொல்லி,அந்த சிம்ஹாஸனங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாக அம்பிகை ஸ்ரீலலிதையை சொல்வதுண்டு. பின்னர் ஒருமுறை இந்த தந்திரங்களைப் பற்றி தனியாக ஒரு அறிமுகத்தைப் பார்க்கலாம்.இந்த வகையான வழிபாட்டு முறைகள் தகுந்த குருவிடத்து விரிவாகத் தெரிந்து கொள்ளத்தக்கது. இவை அவரவர் குலாசாரம், குருவின் வழிகாட்டல் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும். எந்த ஒரு வழியில் சென்றாலும் செல்லும் இடத்திற்க்கான மற்ற வழிகளை அறிந்து கொள்வது போல, மற்றவற்றை அறிந்து கொள்ளுதல் நலமே.

இதுவும் நம்பிக்கை குழுமத்திற்காக எழுதப்பட்டது

Tuesday, March 9, 2010

ஸ்ரீ மஹாராக்ஞி-2


அடுத்த நாமமான ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது. ராஜராஜன் என்ற பதம் ஈஸ்வரனைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனுக்கே ஈஸ்வரி என்பது ராஜராஜேஸ்வரி என்ற நாமம். எந்த ஒரு பொருளையும் படைப்பது என்பது ஒரு செயலானால், அவற்றை நல்ல/சிறந்த முறையில் படைத்தல் என்பது சிறப்பானது என்றாலும் படைத்த படைப்பை காப்பாற்றுவது படைப்பதைவிட கடினமான செயல்தான். சர்வ லோகங்களையும் படைத்த ஸ்ரீமாதா, தான் படைதத உலங்களை சீராக இயக்கவும், அதில் உள்ள ஜீவராசிகளைக் காப்பதுமான செயலைச் செய்கையில் அவள் மஹாராக்ஞிஎன்று போற்றப்படுகிறாள். முற்காலத்தில் நாட்டை ஆண்ட ராஜாவை மஹாவிஷ்ணு ஸ்வரூபமாக வர்ணித்த கவிதைகளை இன்றும் நாம் படிக்கிறோம். ராஜாக்கள் தமது நாட்டை, நாட்டிலுள்ள சகல ஜீவன்களுக்கும் நன்மையானவற்றைச் செய்கையில் அவர்களது செயல் ஸ்ருஷ்டி என்னும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கு இணையாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஈஸ்வரன் பஞ்சகிருத்யங்களை சக்தியின் உதவியாலேயே செய்கிறான். அன்னைக்கே இன்னுமோரு பெயர் "பஞ்சகிருத்திய பராயணா" என்றும் உள்ளது. அது என்ன பஞ்சகிருத்தியம்?, அப்படியென்றால் என்றால் என்ன?.

பஞ்சகிருத்தியம் என்பது ஐந்து தொழில்கள். பஞ்சகிருத்திய பராயணா என்றால் ஐந்தொழிலைச் செய்பவள் என்றே அர்த்தம். இந்த ஐந்து தொழில்களையே சற்று எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்)
ஆகிய முத்தொழில்கள் என்று சொல்கிறோம்.உலகில் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்க வேண்டும், ஸ்ருஷ்டித்தவற்றை காக்க (ஸ்திதி) வேண்டும். தகுந்த காலத்தில் அவற்றை நீக்கவும் வேண்டும். சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா?. இதனையே கம்பர் தனது பாயிரத்தில் "தாமுளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்" என்று கூறுகிறார்.

ஆக, இந்த மூன்று செயல்களும் நடைபெற வேண்டுமானால் இன்னும் இரு செயல்கள் வேண்டியிருக்கிறது, அதுவே திரோபாவம் (அ) திரோதானம் என்று கூறப்படும் மாயை (அ) மறைத்தல். ஐந்தாவது செயல் அனுக்ரஹம். ஆக இந்த ஐந்து தொழிகளையும் அன்னையின் சக்தியாலேயே செய்கிறானாம் ஈஸ்வரன். மஹாராணியான அம்பிகையின் உற்ற தோழிகள் லக்ஷ்மியும், சரஸ்வதியும், இதையே இன்னொரு நாமத்தில், 'ஸசாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண ஸ்திதா' மஹாராணிக்கு சாமர கைங்கர்யம் செய்பவர்களாகச் சொல்லியிருக்கிறார்கள் வசின் தேவதைகள். அம்பிகையின் இடது புறத்தில் லக்ஷ்மியும், வலது புறத்தில் சரஸ்வதியும் நின்று கொண்டு, அம்பிகையின் அருள் நாடுபவர்களுக்கு ஐஸ்வர்யத்தையும், ஞானத்தையும் வாரிவழங்குகிறார்கள்.

அம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி என்றும் ஒரு நாமம் உண்டு என்று பார்த்தோம். தேவராஜனான இந்திரன் மற்றும் மற்ற மேல்-கீழ் உலத்து ராஜாக்களுக்கும், மூம்மூர்த்திகளுக்கும் ஈஸ்வரியானவளை ராஜராஜேஸ்வரி என்று கூறியிருக்கிறார்கள் தேவி மஹாத்மியத்தில். இவற்றை எல்லாம் எளிமையாக நமக்குத் தந்துவிடுகிறார் அபிராமி பட்டர்,

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

ஸ்ரீமாதா என்பதை ஆத்தாளை, அதாவது உலகனைத்தையும் படைத்தவளை (பூத்தாளை), சகல உலகங்களுக்கும் தாயான ஜகன்மாதாவை/ஸ்ரீமாதாவை (ஆத்தாளை), சகல லோகங்களையும் காப்பவளை (காத்தாளை) என்று கூறியிருக்கிறார். அடுத்து வரும் இருவரிகள் பின்னர் லலிதையின் நாமங்களுக்கு நயமாகப் பொருந்தும், அதை அப்போது பார்க்கலாமா?...

[இந்த இடுகையும் முன்பு இங்கே எழுதியதுதான். மேலே இருப்பது நம்பிக்கை குழுமத்திற்காக தற்போது சற்று மாற்றி எழுதியிருக்கிறேன்]

Sunday, March 7, 2010

ஸ்ரீமாதா - 2


ஸ்ரீமாதா என்கிற நாமம் அன்னையின் ஸ்ருஷ்டிச் செயலையும், கருணையையும் எப்படி எடுத்துக் காண்பிக்கிறதென்று முன்பு இந்த இடுகையில் சிறிது பார்த்தோம். தற்போது நம்பிக்கைக் குழுமத்தில் இதனை எழுத எண்ணிய போது சில விஷயங்கள் இன்னும் கோர்வையாகத் தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை.

பக்திமார்க்கத்தில் இறையை வழிபட பல விதங்களைச் சொல்லியிருக்கிறார்கள் நம் பெரியோர் அவை, 'சத்புத்ர மார்க்கம்' என்று இறையை தாயாக வழிபடுதலையும், 'சகா மார்க்கம்' என்று இறைக்கு தோழனாக வழிபடுதலையும், தாஸ மார்க்கம்' என்று இறைக்கு அடிமையாக வழிபடுதலையும், இறையையே குருவாகக் கொள்ளுதலை 'சன்மார்க்கம்' என்றும், இறை சக்தியை கணவன் அல்லது தோழனாக வழிபடுதலை 'நாயகி மார்க்கம்' என்பவை. ஆதி சங்கரர் ஆறுவகை சமயங்களை தொகுத்து அளித்தாலும், அவருக்கு உபாசனா மூர்த்தியாகக் கொண்டது சக்தியையே. அதிலும் அவர் மற்ற மார்க்கங்களை எடுத்துக் கொள்ளாது, சக்தியின் சத்புத்ரனாகவே தன்னை பாவித்துச் செய்த பல ஸ்லோகங்களே அதிகம்.

தாயின் வயிற்றிலிருந்துதான் நாம் எல்லோரும் வந்திருக்கிறோம். தாயை தெய்வமாக நினைப்பது நமக்கு எளிதான ஒன்று, நாம் எல்லோரும் அப்படியே நினைத்து பெற்றவளை வணங்குகிறோம். இதையே திருப்பி தெய்வத்தை தாயாக வழிபடுதல் என்பதே அம்பிகையின் தியானம். நாம் என்ன தவறுகள் செய்தாலும் தாய் ஒருத்திதான் அவற்றை எல்லாம் மன்னித்து நம்மை பேணுகிறாள். தந்தை, குரு போன்றவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளித்தே நம்மைத் திருத்துவார்கள். நாம் பல தவறுகள் செய்தாலும் அதற்கான தண்டனை என்று ஏதுமில்லாது, நம்மிடம் கருணை காட்டுகின்ற அம்பிகையைத் தாயாக தியானிப்பது சரிதானே?. இதனால்தான் வசினி தேவதைகள் அன்னையை 'ஸ்ரீமாதா' என்று தியானித்து சஹஸ்ரநாமத்தை தொடங்குகிறார்கள் போலும்.

சிறுவயதில் நான் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய போது, என் தாயிடம், 'அப்பாவிடம் சிபாரிசு செய்து இந்த முறை பிராகரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்கிக் கொடுத்துடும்மா, அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிவிடுவேன் என்று அவரிடம் சொல்லு' என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். இன்று அதை நினைத்துப் பார்க்கையில், பலபட்டை சொக்கநாதர் என்னும் புலவர் எனக்கு நினைவுக்கு வருகிறார். என்னைப் போன்றே அவரும் அன்னை, ஜகன்மாதாவின் மூலமே தனது கோரிக்கைகளை இறைவனிடம் தெரிவிக்கிறார். அந்தப்பாட்டு,

ஆய் முத்துப் பந்தரில்
மெல்லணைமீது உன் அருகிருந்து
'நீ முத்தம் தா' என்றூ அவர் கொஞும்
வேளையில் நித்தம் நித்தம்
வேய் முத்தரோடு என் குறைகள்
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால்
வாய் முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அம்மையே!

இந்தப் புலவருக்கு அன்னை சிபாரிசு செய்யாது இருந்திருப்பாளா?. தாயிடம் மட்டுமே நாம் இவ்வளவு உரிமையுடன் பழக முடியுமன்றோ?.

ஆதிசங்கரர் சிவ-சங்கராஷ்டகம் என்று ஒரு ஸ்துதி செய்திருக்கிறார். அந்த அருமையான ஸ்லோகத்தில்,'யம கிங்கரர்கள் என்னைப் பயமுறுத்தி இழுத்துச் செல்லும் சமயத்தில், கருணையோடு கூடிய எனது தாய் உமையோடு நீ என் இதயத்தில் வந்தமர்ந்து, யம வாதனையை நிவாரணம் செய் என்று துதித்திருக்கிறார். இதில் அம்பிகையை சொல்லும் போது குறிப்பாக "கருணையோடு கூடிய எனது தாய் உமை" என்பது எத்துணை அருமையாக நமக்கு அவளது கருணையைத் தெளிவுபடுத்துகிறது?.

'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊணினை உருக்கி உள்ளொளி பெருக்கி' என்றும்

'தாயாய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் போக மாட்டேனா' என்றும் மாணிக்கவாசகர் சொல்வதிலிருந்தும் நமக்கு தாய் என்பவளது கருணை, அருள் புலனாகிறது.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே அம்பிகையின் உருவம்தான். அவளுக்கு உருவமே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் சாமனியனான நிலையில் நமக்கு உருவமே இல்லாத தெய்வம் என்பதை ஏற்க முடிவதில்லை. அவளிடமிருந்தே இந்த உலகம், மற்றும் நாம் வந்ததால் அவள் நமது அம்மா. நாம் அவளது குழந்தைகள். அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தால் போதுமா?, அவளை பார்க்க வேண்டும், அவளுடன் பேசி, கொஞ்சி, விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசை படுகிறோம் அல்லவா?. இவ்வாறான ஆசைகளை பூர்த்தி செய்வதற்காகவே அவள் பல ரூபங்களில் காக்ஷி தந்திருக்கிறாள். அந்த ரூபங்கள் எல்லாம் ஆயிரம் நாமங்களில் ஒவ்வொன்றாக இருந்தாலும், 'ஸ்ரீமாதா' என்று விளிக்கும் இந்த மஹா மந்திரத்தினை மீண்டும் மீண்டும் சொல்வதாலேயே நமக்கு அவளது கருணா கடாக்ஷம் கிடைக்கும் என்றால் அது மிகையாகா.