Monday, December 22, 2008

கூடலழகரை தரிசிப்போம்....

ஒரு வாரம் நிம்மதியாக மதுரையில் கழிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆரம்பிக்கலாம் என்றதும் செல்ல தோன்றிய கோவில்கள் மீநாக்ஷி கோவிலும் கூடலழகர் கோவிலும் தான். பலவருடங்கள் முன் தினமும் அஷ்டாங்க விமானப் பிரதக்ஷணம் செய்திருந்தாலும், கடந்த 1.5 ஆண்டுகளாகச் இரு கோவில்களுக்கும் செல்ல இயலவில்லை. ஆகவே முதலில் இம்முறை பெருமாள் தரிசனம். மார்கழியில், பிரம்ம முஹுர்த்த நேரத்தில், பெருமாள் பார்க்கப்-பார்க்கத் தெவிட்டாத பரிபூரணனாக இருந்தார். கூடலழகர் கோவில் சிறப்புக்களை யாரும் எழுதியதாக நினைவில்லை, ஆகவே இந்த பதிவு.

பிரம்மாவின் புத்திரரான சனத் குமாரருக்கு பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். இந்த விருப்பம் நிறைவேற கிருதமால் நதி தீரத்தில் தவமிருக்கிறார். அப்போது தவத்தின் பயனாக பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அவருக்கு காக்ஷி அளித்தார். அவ்விடத்தில் பெருமாளுக்கு கோவிலமைக்க முடிவு செய்த சனத் குமாரர் விஸ்வகர்மாவை அழைத்து இறைவன் தமக்கு அளித்த தரிசனத்தை விவரித்து, அத்தோற்றத்தில் பெருமாளுக்கு விக்ரஹம் அமைக்கச் செய்கிறார். அந்த விக்ரஹத்தை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்ட்டை செய்து வழிபாட்டினை தொடங்குகிறார். இவ்வாறாக கூடல் மாநகரில், அமர்ந்த கோலத்தில் கூடலழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். இக்கோவில் கிருத யுகத்திலேயே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்றுத் திகழும் எம்பெருமானாரை சதுர்யுகப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

பெருமாள் கோவில்கள் பலவகையான விமானங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் அஷ்டாங்க விமானம் என்பது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே இந்த அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் சேவை சாதிக்கிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், கலசம் 10 உயரமும் கொண்டது. எட்டு பகுதிகளாக இருக்கும் இந்த விமானமே ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தின் கீழ் இருக்கும் பெருமாளை 48 நாட்கள், தினத்திற்கு 11 முறை சுற்றி வந்தால் நினைத்த கார்யம் சித்திக்கும் என்பது மதுரை-வாழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள்.

மூன்று நிலைகளில், பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் அழகிய சுதைச் சிற்பங்களாக இருப்பினும், கீழ்த் தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் கூடலழகருக்கே நித்ய பூஜைக்கும், மற்ற விழாக்களும். இங்கு தாயார் பெயர் மதுரவல்லி, உற்சவர் சுந்தர-ராஜப் பெருமாள் என்ற திருநாமம். மூலவருக்கு ஆகூய திருக்கரத்தான் என்ற திருநாமமும் இருக்கிறது. இடது கையால் பக்தனை அழைத்து, வலது கையால் அருள் பாலிப்பவன் என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். மதுரையை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றி பெற இவரை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது நிலையில் பெருமாள் சூரிய நாராயணராக தேவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இந்த சன்னதியை ஓவிய மண்டபம் என்று அழைக்கின்றனர். இச்சன்னதியில் பிரம்மா, சிவன் விஷ்ணு, அஷ்ட திக்பாலகர்கள் ஓவிய வடிவில் காக்ஷி அளிக்கின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர் என்ற திருநாமத்துடன் சயனித்திருக்கிறார். இவர்களைத் தவிர, விமானத்தில் லக்ஷ்மி நரசிம்ஹர், பூவராஹர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மற்றும் வைஷ்ணவ ஆச்சார்யார்களது திருவுருவங்களைத் தரிசிக்கலாம். எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிராகாரங்களுடன் அமையப் பெற்ற கோவில் இது.

பிரகாரங்களில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் போன்றோரது சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. இக்கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு நவக்கிரஹ சன்னதி. சாதாரணமாக பெருமாள் கோவில்களில் நவக்கிரஹங்களுக்கு என்று சன்னதி கிடையாது, ஆனால் இக்கோவிலில் தனியாக நிறுவப்-பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது.


நரசிம்ஹ விக்ரஹங்கள் யோக நிலையிலோ அல்லது லக்ஷ்மியை மடியில் இருத்திக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹராகவோ பார்த்திருக்கிறோம். அபூர்வமாக, இக்கோவிலில் நரசிம்ஹர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பிரகாரத்தில் காக்ஷி தருகிறார். இங்கு பெருமாள் சன்னதியின் வலப்புறத்தில் மதுரவல்லித் தாயார் சன்னதி. இங்கு தாயார் "படிதாண்டாப் பத்தினி" என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெயருக்கு ஏற்றார்ப்போல அன்னை உற்சவ காலங்களில் சன்னதிக்குள் மட்டுமே புறப்பாடு ஆகிறாள். நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு. இங்கு தாயாருக்கு லக்ஷ்மி அஷ்டோத்திரமும், பெருமாளுக்கு ராமாஷ்ட்டோத்திரமும் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கான தீர்த்தம் "ஹேம புஷ்கரிணி" என்று அழைக்கப்படுகிறது. இப்பெருமாளின் தெப்பக்குளம்தான் தெப்பக்குளத்தெரு என்று அழைக்கப்படுகிறது, டவுன்ஹால் ரோட்டின் ஒருபுறம் அமைந்துள்ளது.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம் என்று அர்ச்சகர் கூறினார். இப்பகுதியை வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்ட காலத்தில், பரம்பொருள் யார் என்ற கேள்விக்குச் சரியான விளக்கம் சொல்லப் படவேண்டும் என்று போட்டி வைக்கிறான். கேள்விக்குச் சொல்லப்படும் விளக்கம் சரியானால் பொற்கிழி கட்டப்பட்ட கம்பம் வளைந்து கொடுத்து பொற்கிழியை எடுக்க ஏதுவாக வேண்டுமென்று கூறி அதற்கேற்ப ஓர் உயர்ந்த கம்பத்தில் பொற்கிழியை இணைத்து வைக்கிறான். வில்லிப்புத்தூரில் இருந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள், அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கப் பணிக்கிறார். விஷ்ணு சித்தரும் ஆதிமூலமாகிய பரம்பொருள் விஷ்ணுவே என்று கூறிட அப்போது கம்பம் வளைந்து கொடுத்ததாம். இக்காக்ஷியைக் கண்ட மன்னன், விஷ்ணு சித்தரை வணங்கி தனது பட்டத்து யானையில் வைத்து வலம் வரச் செய்ததாகவும், அப்போது பக்தனின் பெருமையைக் காண பெருமாளும் கருடாரூடராக வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த பெருமாளின் அழகில் மயங்கிய விஷ்ணு சித்தர், ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி திருஷ்டி கழிப்பாளோ அது போல பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டுவிடுமே என்று கலங்கிப் பாடியதுதான் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்னும் பாசுரம் என்று கூறுகிறார்கள். இந்தப் பெருமாள் சதுர் யுகங்களும் கண்டவர் என்பதாலும் அவ்வாறு பாடியிருக்கிறார் என்றால் மிகையில்லை. பெருமாளுக்கே தாயாக, திருஷ்டி கழித்து அவரை வாழ்த்தியதால் அன்று முதல் அவர் 'பெரியாழ்வார்' என்று அழைக்கப் பெற்றாராம்.
மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில் மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.

Wednesday, December 17, 2008

சமர்த்த ராமதாஸர் - 2

சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறதுஇவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்

ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....
ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.

Saturday, December 6, 2008

திருநெல்வேலி - சேரன்மாதேவி [நவ-கைலாசங்கள் -3]நவகைலாசங்களில் பாபநாசத்திற்கு அடுத்ததாக வருவது வானாளாவிய அதிகாரம் கொண்ட சேரன்மா தேவி. நவ-கைலாசங்களில் இரண்டாவது ஊர் இது. நவக்கிரஹங்களில் சந்திரனுக்கான ஊர். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான ஊர், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நான் 20 வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன்.


கிழக்கு நோக்கிய வாசலுடன், அழகிய சிறு ராஜ கோபுரம் கொண்ட அழகான கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமம் அம்மநாத ஸ்வாமி, அன்னையின் பெயர் ஆவுடைநாயகி. இறைவன் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறினார்கள். கோவில் நந்தி, கொடிமரம் என்று ஆகமத்தில் சொல்லியிருக்கும் எல்லா சிறப்புக்களும் உடையதாக இருக்கிறது. கோவிலின் தல விருக்ஷம் ஆல மரம். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையாருடன் இருக்கிறார். சூரிய-சந்திரர்கள் இறைவனை நோக்கியவாறு காட்சி தருகின்றனர். மதுரைக் கோவிலிலும் இந்தச் சிறப்பினைக் காணலாம். அதாவது சூரிய-சந்திரர்கள் இறைவனைப் பூஜிப்பதாக அமைந்த சன்னதிகள்.


கோவிலின் மேற்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வடமேற்கில் வள்ளி-தெய்வயானையுடன் சுப்ரமண்யர், சண்டீசர், கஜலக்ஷ்மி என்று தென்-பாண்டி நாட்டின் சிவ ஆலயத் தோற்றம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நித்தியத்துவம் வேண்டிய ரோமச முனிவருக்கு இந்த இடத்தில் தரிசனம் தந்ததாக கோவில் குருக்கள் கூறினார். கோவில் பற்றி தல புராணம் ஒன்று சொல்லப்பட்டது. அதைப் பார்க்கலாமா?.

வானம் பார்த்தபடி இருந்த சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் இரண்டு சகோதரிகள். கோவில் கட்டுவதற்கான பொருளை தமது தொழிலான நெற்குத்தும் தொழிலில் பணம் சேர்த்து செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டனர். காலம் கடக்கிறது, மூலஸ்தானம் கட்ட வேண்டி அளவு கூட அவர்களிடத்தில் பொருள் சேரவில்லை. மிகுந்த கவலை அடைந்த சகோதரிகள் ஈசனை வழிபட்டு தமது மனக்குறையை கூறுகின்றனர். ஈஸ்வரன் உடனடியாக மானிட வடிவில் சகோதரிகளது இல்லத்துக்கு வந்து உணவளிக்க வேண்டுகிறார். பெண்கள் பெருமானை அமரவைத்து உணவிட்டனர். நன்றாக உண்டு, பெண்களை வாழ்த்தி, அவர்களது மனதில் நினைத்திருப்பது நிறைவேறும் என்றும் கூறிச் செல்கிறார். அன்றிலிருந்து அவர்களது செல்வ செழிப்பு அடைந்து கோவிலைக் கட்டினர் என்று தல புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சான்றாக அங்குள்ள் தூண் ஒன்றில் இரு சகோதரிகள் நெல் குத்துவது போல அமைந்த சிற்பம் இருக்கிறது.


ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்கள், மற்றும் கோச்சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் ஆகியோர் இக்கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரே சேரன்மாதேவி மங்கலம் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இங்கே ஐப்பசியில் திருக்கல்யாணமும், மஹா-சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம். தாமிரபரணி ஆற்றின் இந்த ஊர் படித்துறையினை வியாச தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மார்கழி மாதம் மூன்று நாட்கள் இங்கே எல்லாம் நதிகளும் சங்கமிக்கும் என்று தாமிரபரணி மஹாத்மீயத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போது அம்ம்நாதர் தீர்த்தவாரிக்கு வருவார் என்று கூறுகின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!