Friday, July 31, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 3 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)பதிவு -1 இங்கே!

பதிவு -2 இங்கே!

அன்னை காஞ்சியில் பிரதிஷ்ட்டை ஆன பிறகு அந்த பிரதேசத்தை ஆள்வதற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்க பிரம்மாவிடம் வேண்டுகின்றனர். பிரம்மா தனது திருஷ்டியால் வானிலிருந்து ஒருவனை வரவழைத்து அவனுக்கு ஆகாச பூபதி என்று பெயரிட்டு, அப்பகுதியை ஆளவும், அன்னைக்கு பூஜைகள் நடத்தவும் அவனுக்கு உத்தரவிடுகிறார். வருஷங்கள் கடக்கிறது. ஆகாச பூபதி அன்னையை வழிபட மறந்து கேளிக்கைகளில் ஈடுபடத் துவங்குகிறான்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாக மக்களும் அன்னைக்கு பூஜை, மற்றும் உத்ஸவங்களை நடத்த தவறினர். தேசத்தில் வறுமை தலைவிரிக்க ஆரம்பிக்கிறது. மன்னனை மிகப் பெரிய வறுமை ஒன்றும் வாட்டியது. ஆம்!, ஆகாச பூபதிக்கு மழலைச் செல்வம் இல்லை. தீமை காட்டி விலக்கிடும் தெய்வமல்லவா அன்னை?. தனக்கு மக்கட் செல்வம் இல்லாததும், நாட்டில் நிலவும் பஞ்சமும் ஆகாச பூபதிக்கு பராசக்தியை நினைவுபடுத்துகிறது. அன்னை காமாக்ஷிக்கு நித்ய மஹோத்ஸவங்களைச் செய்து, அரசனும் அவன் மனைவியும் குழந்தை வேண்டி அனுதினமும் அன்னையை ஆராதிக்கின்றனர். இதன் விளைவாக அரசியின் கருவறையிலும் உயிர் வளர ஆரம்பிக்கிறது.

தன்னையே தனது சேய்களுக்குத் தரும் காமாக்ஷி, தனக்கும் மேலான ஒன்றை அரசனுக்குத் தர முடிவெடுக்கிறாள். தன்னையே தருவதையும் விட தனது புத்ரனைத் தருவது எந்தத் தாயாலும் முடியாது, ஆனால் லோகமாதா தனது ஸீமந்த புத்ரனை, செல்வ/செல்ல கணபதியை அரச தம்பதிக்கு மகனாக அளிக்க முன்வருகிறாள். அதிலும் ஒரு திருவிளையாடலாக கணபதியை, கஜமுகனாக அன்றி, சாமானிய நரமுகத்துடனான மானிடக் குழந்தையாகவே பிறக்குமாறு செய்து, அக்குழந்தை விக்னேஸ்வரன் என்பதை மறைக்கிறாள். இவ்வாறாக சைவ பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் பிருத்வீ க்ஷேத்ரமாகவும், சாக்த பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் ஆகாச தலமுமான காஞ்சியில் விக்ன விநாயகன் அரச குடும்பத்தில் அவதரிக்கிறான். நாடு முழுவதும் கொண்டாட்டம், அரசனது குழந்தைக்குப் பெயரிடும் நாளும் நெருங்குகிறது. இனியும் கணேசனது ப்ரபாவத்தை மறைக்கலாகாது என்று எண்ணுகிறாள் பராசக்தி. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசன் மக்களுக்கு வாரி வழங்குகிறான். அரண்மனையில் மக்களுக்கு அறுசுவை உண்டி வழங்கப்படுகிறது. முதலில் ஆடவர் உண்டு பின்னரே பெண்கள் உணவருந்துவது என்பது பொது வழக்காக இருந்தாலும், இங்கே அரசன், இவ்விழாவில் "தவதேவி பேதா: ஸத்ரிய: ஸமஸ்தா ஸகலா ஜகத்ஸு" என்னும் சண்டி மந்திரத்தின்படி பெண்களை எல்லாம் முதலில் அமர்த்தி சுவாசினி பூஜை செய்து உணவிடுகிறான். சஹஸ்ர நாமத்தில் "ஸுவாஸிந்யார்ச்சன ப்ரீதா" என்று சொல்வதால் ஸுமங்கலிகளையே காக்கும் தேவியாகக் கருதி அவர்களைக் காக்க வைக்காது முதலில் விசேஷமாக உணவளிக்கிறான்.

பந்தியில் பெண்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே மழை 'சோ' என்று பொழிய ஆரம்பிக்கிறது. போஜன கூடத்தின் முற்றத்தில் மழைத்துளிகள் சல-சலவென விழுகின்றன. ஆஹா! பொன் மழையல்லவா பொழிகிறது. மழை நீருடன் பொன் துகள்களும் வர்ஷிப்பதை ஆச்சர்யத்துடன் காண்கின்றனர் மக்கள். ஒரு முஹுர்த்தகாலம் இவ்வாறாக ஸ்வர்ண மணிகள் கொண்ட மழை பொழிந்த பின்னர் அங்கே இருந்த தவஸ்ரேஷ்டர்களுக்கு வானில் மற்றொரு காக்ஷி தெரிகிறது. அன்னை காமாக்ஷியின் எழிலான தரிசனம் தருகிறாள். வறுமையில் வாடின நாட்டைக் குபேர ஸாம்ராஜ்யமாக ஆக்கிவிட்டாள். இது அவள் அனுக்ரஹமே என்று உணர்ந்த எல்லோரும் ஆச்சர்யத்துடன் போஜன சாலைக்குள் வருகின்றனர். போஜன சாலையிலேயே ஒரு மஞ்சத்தில் அரசனது மகவும் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் பந்தி விசாரணை செய்கிறான், அப்போது பிறந்த குழந்தை அரசனை நோக்கி நகர்ந்து சென்று அவனை நோக்குகிறது. பிறந்து பன்னிரு நாட்களே ஆன குழந்தை தவழ்வதே ஆச்சர்யம் என்றிருக்கையில் அக்குழந்தை தனது தந்தையிடம் பேசவும் ஆரம்பிக்கிறது. 'பொன் மழை பெய்த காரணம் சொல்கிறேன் கேளுங்கள் அப்பா, இன்று நீங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த விருந்தில் பயற்றம் பொங்கலும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொங்கலுக்காக எடுத்து வைக்கப்பட்ட பயற்றில் ஒரு பொன் மணி கலந்திருந்தது. என்னைப் பெற்ற அன்னை பயறு நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் போது அவளது நெளி-மோதரத்தில் இருந்த ஒரு தங்க முத்து இப்பயற்றுடன் கலந்து, அது பொங்கலாயிற்று. அந்த பொன்னாலான பயறு செய்த பாக்யம் அது அன்னை காமாக்ஷியின் திருவயிற்றில் சேர்ந்தது. அதன் பலனே இந்த பொன்மழை" என்று கூறி நிறுத்தியது அக்குழந்தை.

குழந்தை சொல்வதைக் கேட்ட ஆகாச பூபதி, பொங்கலில் கலந்த பொன்மணி எப்படி பராசக்தியின் வயிற்றை அடைந்தது என்று குழந்தையிடம் கேள்வி கேட்க, 'இது கூட புரியவில்லையா?, சகல உலகிற்கும் தாயான தேவி அந்தப் பந்தியில் தானே ஒரு சுமங்கலிக் கோலத்தில் அதோ அந்த பந்தி வரிசையில் உணவருந்திக் கொண்டிருக்கிறாள். வாருங்கள் காண்பிக்கிறேன்' என்று கூறி தந்தையை அழைத்துச் செல்கிறது. குழந்தை காட்டிய இடத்தில் யாரும் இருக்கவில்லை, ஆனால் அங்கே அந்த சுமங்கலிகள் பந்தியில் ஒருவர் உணவருந்தியதற்கான தடையமாக இலையும், அதில் பறிமாறிய உணவு உண்ணப்பட்டதாகவும் தெரிகிறது. பறிமாறப்பட்ட பயற்றம் பொங்கலில் விரல்-சுவடுகளும் தெரிகிறது. அதைக் கண்டதும் அரசன் ஆனந்தக் கண்ணீர் விடுகிறான். மஹா-மாயா தனக்கு தரிசனம் தராது அந்தர்யாமியாகி-விட்டாளே என்ற வருத்தம் ஒருபுரம், இன்னொரு பக்கம், தான் அளித்த விருந்தில் அன்னையே பங்கேற்றாளே என்ற பரவசம். சிறு குழந்தையோ, அந்த இலையில் இருந்த, அந்த மீதமான பொங்கலை அள்ளி அருந்துகிறது. தான் மட்டுமல்லாது அங்கிருந்த எல்லோருக்கும் தேவீயின் ப்ரசாதம் என்று வாரி-வாரி வழங்குகிறது. அப்-பிரசாதமும், அள்ள-அள்ளக் குறையாது அக்ஷயமாக வளர்ந்தது.

இவ்வளவும் செய்யும் இக்குழந்தை உண்மையில் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. அங்கிருந்த அருந்-தவத்தோருக்கு புரிந்தது விஷயம். கணபதிராயனே ராஜகுமாரனாகப் பிறந்திருக்கும் உண்மை புரிந்தது. சரி, ராஜகுமாரனை ஏன் முருகனாகச் சொல்லவில்லை?. முருகனுக்கு உகந்தது தினை, அவன் அண்ணனுக்கு உகந்தது பயறு. கணநாதனுக்கு உரிய சக்ரத்தில், மூலாதாரத்திற்கு உரிய இடத்தில் வசிக்கும் பாரசக்தியின் பரிவார-சக்தியின் பெயரே 'முத்கெளதனாஸக்த சித்தா'. முத்க ஓதன = பயற்றம் சோறு, முத்கம் = பயறு. அழகாலும், குழந்தை உள்ளத்தாலும், முக்தி அருள்வதாலும் அவன் முக்தன். துதிக்கை இல்லாமல் கையாலேயே அம்பிகையின் பிரசாதத்தை தனது வாயில் அடைத்துக் கொண்டு, பிறருக்கும் அள்ளி-அள்ளித்தரும் குழவியைக் கண்ட அங்கிருந்த அனுபூதிமான்கள் குழந்தையை நோக்கி 'அம்மாவை நீ இனம் கண்டு, அவளை எங்களுக்கும் உணர்த்திவிட்டாய், துதிக்கை இன்றித் தோன்றினாலும் நீ துண்டீரனே! என்று கூறித் தொழுதனர். துண்டம் என்றால் துதிக்கை; துதிக்கையை உடையவன் துண்டீரன். அரசன் குழந்தைக்குத் 'துண்டீரன்' என்றே பெயரிட்டு வாழ்த்தொலி எழுப்ப, மக்களும் ஜய கோஷம் செய்கின்றனர். அப்போது குழந்தை மீண்டும் வாய்திறந்து 'அன்னை நம் கண்களுக்குப் புலப்படவில்லையே என்ற விசனம் வேண்டாம். அவள் போஜனத்தின் போது பாதியில் சென்றது தனது உச்சிஷ்ட்டம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அவளது க்ருபை, மேலும் தரிசனம் தராமைக்குக் காரணம் என்மீது இருக்கும் வாத்சல்யமே. அவளது தரிசனத்திற்குப் பிறகு என்னை விநாயகன் என்று நீங்கள் அறிந்தால் அது, தேவாம்ருதம் அருந்திய மக்களுக்கு தேனின் சுவை எப்படி மிகுந்த களிப்பை ஏற்படுத்தாதோ அது போன்ற உணர்வைத் தரும். என்னால் விளையும் ஆனந்தம் குறைவாக தெரியக்கூடாது என்ற கருத்தில் என்னை பெருமைப்படுத்தவே அவள் காக்ஷி தரவில்லை' என்று கூறி முடிக்கிறார்.

மஹாகாயரான துண்டீரர் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார். உரிய நேரத்தில் அரசன் ஆகாச பூபதி துண்டீரருக்கு மாலதி என்ற மங்கை நல்லாளை திருமணம் செய்வித்துப் அரச பட்டாபிஷேகமும் செய்வித்த பின்னர் தவம் செய்ய வனம் புகுகிறார். துண்டீரரது பட்டாபிஷேகம் அரசவையில் நடக்கவில்லை, அன்னை காமாக்ஷி கோவிலில் அவள் முன்னால் நடந்ததாம். பூத கணங்களையே ஆளும் ஐயன் நரர்களையும் சேர்த்து அரசாண்டார். நாடெங்கும் லெளகீக, மற்றும் ஆன்மிகச் செல்வமும் தழைத்தோங்கியது. ஆண்டுகள் கடந்தன, போதுமெனக் கருதிய துண்டீரர் தவ-வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்கிறார். ஆனால் தன் தந்தையைப் போல் கானகம் செல்லாது கனகம் பொழிந்த காமாக்ஷி ஆலயத்தையே தனது ஆன்மா லயிக்கும் இடமாக கொண்டார். மூல காமாக்ஷிக்கு எதிராக அமர்ந்து தாம் தியானம் செய்தால் பக்தர்களுக்கு பாதகமாகும் என்று உத்ஸவ காமாக்ஷி எதிரே ஓரமாக நின்றபடியே தவம் செய்து சாய்ஜ்யம் அடைந்தார். துண்டீர கணபதி ஆண்ட பிரதேசம் துண்டீர நாடு என்று வழங்கலாயிற்று.

மூகாசார்யாள், 'துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி' என்று மூக பஞ்சசதியில் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை மனதில் வைத்தே தியாகராஜ ஸ்வாமிகள், "விநாயகு நிவலெநு ப்ரோவவே - அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி" (விநாயகனைப் போல என்னையும் கருதிக் காப்பாயாக ஸ்ரீ காமாக்ஷி) என்று பாடியிருக்கிறார். நாமும் இந்த நன்னாளில் அவளருளை வேண்டிடுவோம்.

இன்று வரலக்ஷ்மி விரதம்!. 'ராவே மா இண்டிகி' அப்படின்னு வரலக்ஷ்மியை/காமாக்ஷியை அழைத்து வணங்கிடுவோம். வர-லக்ஷ்மி எல்லோருடைய இல்லங்களுக்கும் வந்து பொன் மழை மட்டுமல்லாது, கல்வி, ஞானம் மற்றும் அன்பு எங்கும்-எப்போதும் செழிக்க வரமளிக்கட்டும்.


ஜெய ஜெய காமாக்ஷி!!!
ஜெய ஜெய காமாக்ஷி!!!

Friday, July 24, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 2 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)


முதல் பகுதி இங்கே!

பரமசிவன் தக்ஷிணாமூர்த்தியாக யோகவடிவில் இருந்த நேரத்தில் காமவேளான மன்மதன் அவரை நோக்கி தனது மலரம்புகளை விடுத்து, அதன் காரணமாக கோபம் கொண்ட ஈசன் தனது நெற்றிக்-கண்ணால் மனஸிஜன் என்று அழைக்கப்படும் மன்மதனை நோக்க, அவன் சாம்பலாகிறான். ஈசனது பூதகணங்களின் தலைவர்களில் ஒருவனான சித்ரஸேனன் என்பவன் மன்மதனது சாம்பலை பிடித்து ஒரு அரக்கன் போன்ற உருவத்தைச் செய்கிறான். அழகனான மன்மதன் தமது அரக்க குணத்தாலேயே ஈசனிடம் விளையாடி அழிந்தான் என்பதாக நினைத்து இந்த பிம்பத்தைச் செய்கிறான். பின்னர், யோகம் கலைந்த தக்ஷிணாமூர்த்தி கண்களில் அந்த பிம்பம் படுகிறது. ஈசனது பார்வை பெற்ற அந்த பிரதிமை உயிர் கொண்டு ஓர் அசுரனாகிறது, அதுவே பண்டாசுரன். தான் படைத்த உருவம் உயிர் பெற்றதால் அதன் மீது மிகுந்த அன்பு கொண்டு அவனுக்கு "சத ருத்ரீயம்" என்னும் மந்திரத்தை உபதேசிக்கிறான் சித்ரஸேனன். இந்த மந்திரத்தால் ஈசனை உபாசித்து, ஆசுதோஷியான அவரிடத்து பல வரங்களைப் பெறுகிறான். தாம் பெற்ற வரத்தின் பலத்தால் தேவர்கள் முதலான எல்லோரையும் ஜெயித்து ஸர்வ-லோகங்களுக்கும் சக்ராதிபதியாகி இன்னல்களைச் செய்கிறான் பண்டன். அவனை வதைக்க தேவர்கள் செய்த யாகத்தில் ஞான வடிவாக உதித்தவளே ஸ்ரீ லலிதை. இதைக் கூறுவதே லலிதோபாக்யானம்.

மன்மதன் ரஜோ வடிவானவன், அவனது சாம்பலில் உருவான பண்டனும் ரஜோ குணத்துடனே இருந்து அன்னையால் அழிக்கப்பட்டு, அல்ல அன்னையால் ஸ்த்வ குணவானாக்கினாள். ரஜோ குணத்தின் இரு கிளைகளான காமம், க்ரோதம் ஆகிய இரண்டுமே ஜீவாத்மாவின் பெரும் பகைவர்கள் என்று கீதை முதலான எல்லா ஞான நூல்களும் கூறுகின்றன. இங்கே மன்மதன் காமம், பண்டன் க்ரோதம், காமம் முற்றி நிறைவேறாத போது க்ரோதம் என்னும் கோபம் உருவாகிறது. காமம் தானாக கரைந்து ஒழியாமல் எறிந்து தணலாகிச்-சாம்பலாக, அதுவே குரோதமாகிறது போலிருக்கிறது. ரஜோ குணம் என்பது செயல் துடிப்பு என்றால், தமோ குணமோ செயலற்ற சோம்பலும் மயக்கமும் ஆகும். ரஜோ குணத்திப் போல பல செயல்களைச் செய்து அதன் மூலமாக பாவச் சுமையை அதிகமாக்கவில்லை தமோ குணம் என்றாலும், செயலூக்கம் இல்லாவிடில் ஸாதனை ஏது?, நன்னெறிப்பட முயற்சி ஏது?அல்லது முடிவில்லா ஆனந்தமடைவதேது?. ஏறுமாறான ரஜோ குணச் செயல்களை ஒழுங்குபடுத்தி ஸத்வமாக்கும் அன்னை, தமோ குணத்தையும் மாற்றுகிறாள் அன்னை.

இதே போன்று இன்னொரு அசுரன் பந்தகன் என்ற பெயரில் பிரம்மாவிடம் வரங்களைப் பெற்றிடுகிறான். இவன் தமோகுணமான செயலின்மைக்கு ரூபகம். ஒரு செயலுமின்றி ஓர் அசுரன் இருந்தல் அவனால் எவருக்கும் தீமை விளையாதே?. பிறகேன் அவனை அசுரன் என்று கூறவேண்டும்?. கும்பகர்ணனைப் போலஇவனும் போர் அற்ற காலங்களில் மாதக்கணக்கில் ஆழ்ந்து உறங்குவதில் வல்லன். ஆனால் இவன் போர்க்களத்தில் இருக்கும் போது இருளைப் பரப்பி எதிரிகளை அந்தகர் போல மருள வைப்பதில் வல்லவன். "தம ஸோமா ஜ்யோதிர் கமய" என்பது உபநிஷத வாக்யம், ஆனால் ஒருசமயம் பந்தகன் ஜோதி லோகமாகியதேவ லோகத்தையும் இருளில் மூழ்கச் செய்துவிட்டான். தேவர்கள் எப்போதும் போல இந்த முறையும் கைலாயத்திற்கு ஓடிச் சென்று ஈசனிடம் மன்றாடுகின்றனர். தேவர்கள் அன்னையை மறந்ததன் விளைவே இது என்றறிந்த ஈசன் , இந்த இடர்பாடு அவளாலேயே களையப்பட வேண்டியது என்று உணர்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

'தேவர்களே நீங்கள் இந்த இடரிலிருந்து மீள அன்னை பராசக்தியை வழிபட வேண்டும். அவள் அருளாலேயே பந்தகனிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும், ஆனால், அடைக்கலம் என்று என்னிடம் வந்த உங்களை பந்தகனிடமிருந்து காப்பாற்றிட ஒரு உபாயம் சொல்கிறேன். இதோ நான் அமர்ந்திருக்கும் இந்த பீடத்தின் அடியில்இருக்கும் கோமுகத் த்வாரத்தின் வழியாக புகுந்து செல்லுங்கள். அங்கு நீங்கள் நிலையாக வாசம் செய்யாது, தொடர்ந்து செல்லுங்கள். பூமிக்கடியில் செல்லும் த்வாரத்தில்/பிலத்தில்/குகையில் தொடர்ந்து தென்முகமாகச் சென்றால் பிரளயத்திலும் அழியாத 'பிரளயஜித்' என்றழைக்கப்படும் இடத்தை அடைவீர்கள். ஊழி வெள்ளத்திலும் தலை ஓங்கி நிற்கும் ஒரு 'மா'மரம். ஆமாம், மஹா பெருமை பெற்ற மரம் அது. நான்கு வேதங்களும் நாலு கிளைகளாகவும், அவ்வேதங்களின் சாகைகள் எல்லாவற்றுக்குமான பலம்/பயன் ஒன்றேயான பரம்பொருள் என்று உணர்த்தும் ஒரே கனியைக் கொண்ட மரம். இதனாலேயே அந்த க்ஷேத்ரம் 'ஏகாம்ரம்' (ஆம்ர பலம் = மாம்பழம்) என்று கூறப்படும். விராட ஸ்வரூபத்தில் சராசரி வடிவு கொண்ட அன்னையின் நாபி ஸ்தானம் அவ்விடமே!. இந்த கைலாஸ பிலம் அங்கே ஏகாம்ர/காஞ்சி பிலத்தில்தான் முடிவடைகிறது. நாபியின் மீது அணியும் மேகலா என்ற ஆபரணத்தின் பெயரே காஞ்சி. பிலத்தினைச் சூழ்ந்த தலமாதலால் காஞ்சிபுரமாகிறது. அங்கே சென்று சுகமாக/கிளியாக அம்மரத்தில் வாழ்ந்து அன்னையைநோக்கித் தவம் செய்யுங்கள். அவள் உங்களூக்கு சுகம் தருவாள்'.

பந்தகனிடத்திருந்து விமோசனம் பெறும் வழியறிந்த தேவர்கள் அவ்வாறே பிலத்தின் வழியே சென்று ஏக-ஆம்ர மரத்தில் வசித்து அன்னையை வழிபடுகின்றனர். பிலத்தையும், ஆம்ர மரத்தையும் பலகாலம் சுற்றிவந்து போற்றுகின்றனர் தேவர்கள். அன்னை அருள் தர முன்வந்து அவர்கள் முன்பாகத் தரிசனம் தருகிறாள். பின்னர் தேவி அவர்களிடத்தே 'தேவர்களே உங்களைத் தேடி பந்தகனும் கைலாஸம் சென்று அங்கு உங்களைக் காணாது சோம்பிச் சலித்துத் தூங்குகிறான் பாருங்கள்' என்று அந்தக் காக்ஷியைக் காண்பிக்கிறாள். தனது பார்வையாலேயே தூங்கும் அசுரனை கொணர்ந்து பிலத்துக்கு அருகில் எறிகிறாள். விழுந்த வேகத்தில் அவுணன் தனது நித்திரை கலைந்து எழுந்தான். அன்னை பதினெட்டு புஜங்களுடன் பைரவியாக உருக்கொண்டு அவன் மீது பாய்ந்து அவனை அழிக்கிறாள். அழித்த அவுணனது உயிரற்ற சடலத்தைப் புதைக்க, தனது காலால் நிலத்தில் கீரி, அங்கு ஒரு குழியினைப் பறிக்கச் சொல்கிறாள். தேவர்கள் அவ்விடத்தை அகழ்கையில் பூமிக்கடியில் இருந்து ஒரு ஹுங்கார கர்ஜனை கேட்டது. அவ்விடத்தில் மண்ணுக்குள்ளே மல்லகன் என்னும் அசுரன் மூச்சை அடக்கி உக்ர தவம் செய்வது அறிகிறார்கள்.

தபஸ்வியைக் கொல்வது பாபமாகுமே என்று தேவர்கள் யோசிக்கையில், பொது நலனுக்காக பாபத்தை மேற்கொள்ளத் துணிந்த ஸ்ரீமந் நாராயணர், தமது சக்ராயுதத்தை ஏவுகிறார். சக்ராயுதம் அரக்கன் மேனியை பதம் பார்க்க, அவன் உடலில் இருந்து ரத்தம் கொப்பளிக்கிறது. அச்சோ!, இதென்ன விபரீதம், அந்த ரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் அசுரனாக உருவெடுக்கிறதே!. தேவியின் பாகவதத்தில் வரும் ரக்த பீஜன் கதை போல் இருக்கிறதே என்று எல்லோரும் மிரள, பரமசிவன் முன்பு தனது சடையிலிருந்து வீரபத்ரரை உருவாக்கியது போல இப்போது ஆணும், பெண்ணுமாக இரு பூதங்களை உருவாக்கிவிடுகிறார். அந்த பூதங்கள் மல்லகனின் ரத்தத்தை குடித்து, அதன் மூலமாக மல்லகனையும், அவனது உதிரத்திலிருந்து தோன்றும் அசுரர்களையும் நிர்மூலமாக்குகின்றனர். இவ்வாறாக மஹாவிஷ்ணுவின் சக்ராயுதத்தால் மல்லகன் அழிந்தாலும், ஈசன் உருவாக்கிய பூதங்கள் மல்லகனின் ரத்தத்தை குடித்ததால் அசுர குணம் கொண்டு விஷ்ணு மீதே பாய்கின்றனர். ஈசனது பூதகணங்கள் மேல் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்று பெருமாள் அவர்களை நிலத்தில் தள்ளி அழுத்தி அவர்கள்மீதே பள்ளி கொண்டுவிடுகிறார். பேரருளாளனது த்வ்ய சரீரம் அந்த பூத கணங்கள் மேல் அழுந்தியவுடன் அவர்களது உன்மத்தம் அழிந்து தங்களை மன்னிக்க வேண்டுகின்றனர்.


மண்ணுக்குள் மல்லகன் தியானம் செய்த இடத்தில் தோன்றப்பட்ட குழியில் பந்தகனை புதைத்து அங்கே அன்னைக்கு ஒரு ஜய ஸ்தம்பத்தை ஏற்படுத்துகின்றனர் தேவர்கள். பின்னர் அன்னையின் அருளாணைப்படி அந்த ஜய-ஸ்தம்பத்திலிருந்து பிலம் வரையில் உள்ள இடத்தில் 24 அக்ஷரங்களைக் கொண்ட 24 தூண்களால் ஆன மண்டபத்தை ஸ்தாபித்து, அம்மண்டபத்தின் சுவர்களாகநால்வகை வேதங்களை நிறுத்தி, கருவறையை மூலத்ரிகோணமாக அமைத்து, அதன் நடுவில் ஓங்கார பீடத்தில் அன்னையை இருக்க வேண்டுகின்றனர். கோடி சந்திரர்களின் குளுமையைக் கொண்ட அன்னை, கோடி சூர்யர்களது உதய நேரத்துச் செவ்வொளிப் பிழம்பு நிறத்தில் இருந்த அன்னை, தானே பளபளக்கும் சாளக்ராமச் சிலையாக மாறி, தனது அங்க செளந்தர்யங்கள் அனைத்தும்அந்த மூல விக்ரஹத்தில் இருக்கும்படியான உருவத்தைக் கொள்கிறாள்."சதுஷ் சஷ்டி உபசாராட்யா" என்பதற்கு ஏற்ப, அன்னைக்கு சகலவிதமான உபசாரங்களும் தேவர்களால் செய்யப்படுகிறது. அன்னைக்கு உபசாரமாக தேவ தச்சன் முத்துப் பல்லக்கும், பிரம்மா முத்துக் குடையும், விஷ்ணு நவரத்ன கிரீடமும் அணிவிக்கின்றனர். பரமேஸ்வரன் ஸ்ரீசக்ரகாரமான பதக்கத்தை அணிவிக்கிறார். வாக்தேவியின் வடிவான அன்னை அந்த உபசாரங்களில் மகிழ்ந்து, "இந்த காமகோஷ்ட காயத்ரி மண்டபத்தில் என் நித்ய ஸாந்நித்யம் துலங்கும். நான் இவ்விடத்திலே நித்ய வாஸம் செய்வேன்" என்று கூறுகிறாள். ஸ்ரீபுரத்தைவிட அதிகமாக தனது ஸாந்நித்தியம் உள்ள இடமாக இவ்விடம் இருக்கும் என்பதாக 'ஸ்ரீபுராத் அதிகே அத்ர ஏவ' என்கிறாள். பின்னர் மஹேசனைப் பார்த்து, "இன்று அமரர்களால் நடத்தப்பட்ட இந்த வழிபாடு என்றும் நடக்கட்டும், எனக்கு ஸ்ரீசக்ர பதக்கம் அளித்த தாங்களே இந்த சன்னதியில் என் சிலா ரூபத்தின் முன்னால் ஸ்ரீசக்ரத்தை ஸ்தாபியுங்கள். நீங்கள் ஸ்தாபிக்கும் அந்த ஸ்ரீசக்ரமானது கோடி காமனைகளையும் (விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாகவும், தர்ம-அர்த்த-காம-மோக்ஷ என்பதில் காமத்தின் கடைசியில் இருக்கும் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு இட்டுச் செல்லவும் காரணமான அது, 'காமகோடி பீடம்' என்று அழைக்கப்படட்டும்" என்று அருளுகிறாள்.

இவ்வாறு பிலாகாசமாக, அரூபமாக இருந்த அன்னை, காமாக்ஷியாக உருக்கொண்டது ஒரு ஆச்வயுஜி பூர்வ பல்குனித் திருநாளில், அதாவது ஐப்பசி மாதத்துப் பூர நக்ஷத்திர தினத்தில். இப்போதும் காஞ்சியில் அன்னை காமாக்ஷிக்கு ஐப்பசி பூரத்தில் பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

ஜெய ஜெய காமாக்ஷி!
ஜெய ஜெய காமாக்ஷி!

Thursday, July 16, 2009

ஸ்ரீமதி பட்டம்மாள் அவர்களுக்கு அஞ்சலி...பத்ம விபூஷன், கலைமாமணி D.K.பட்டம்மாள் மறைந்தார் என்று தெரிகிறது. 90 வயதாகிய அவர் சற்று உடல் நலமில்லாது இருந்து இன்று இறைவனடி சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. கர்நாடக சங்கீத உலகில் த்ரிரத்னங்களாக எம்.எல்.வி, எம்.எஸ், ஆகியோருடன் கூறப்படுபவர்.

தமிழிசைக்கு திருமதி பட்டம்மாள் மிகுந்த சேவை செய்துள்ளார் என்றால் மிகையாகா. இந்தியாவின் சுதந்திரம் பெற்ற தினத்தன்று சென்னை வானொலியின் இவர் பாரதி பாடல்களைப் பாடி மகிழ்ச்சியை எங்கும் பரவச் செய்தவர். தீக்ஷதர் கிருதிகளை இவரும் இவர் சகோதரர் டி.கே. ஜெயராமனும் அதிக அளவில் பாடி பிரபலம் செய்தனர் என்று சொல்வர்.


அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.


Get this widget Track details eSnips Social DNA

Tuesday, July 7, 2009

வியாஸ பூஜையும் சாதுர்-மாஸ்யமும்


வேத வ்யாஸர் என்றவுடன் நமக்கு முதலில் தோன்றுவது மஹாபாரதம் தான். சதுர் வேதங்களில் நாம் எந்த வேதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அதை நமக்களித்தவர் வேத வ்யாஸர் தான். இவை மட்டுமல்லாது 18 புராணங்களும் எழுதி அவற்றின் மூலமாக வேதத்தை எளிமையாக்கி எல்லோருக்கும் தந்தவர் ஸ்ரீ வேத வ்யாஸர். வேதாந்த சாஸ்திரத்தின் சிகரமான பிரம்ம சூத்திரத்தை அளித்தவரும் இவரே!. ஒவ்வொரு வருஷமும் ஆஷாட பெளர்ணமி தினத்தில் வேத மார்க்கத்தை அனுசரிக்கும் ஸ்மார்த்த, வைஷ்ணவ, மாத்வ பிரிவுகளைச் சார்ந்த எல்லா ஸன்யாசிகளும் இவருக்குப் பூஜை செய்கின்றனர்.

வேதங்களை பிரித்து ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாக அளித்தமையால் ஸ்ரீ வேத வ்யாஸர் என்று அழைக்கப்பட்டாலும், இவருக்கு இன்னும் சில பெயர்கள் உண்டு. கங்கையின் நடுவில் இருந்த த்வீபத்தில் பிறந்ததால் "த்வைபாயனர்" என்றும், இவரது உடல் ஸ்ரீக்ருஷ்ணனது நிறமாக இருந்ததால் "க்ருஷ்ண-த்வைபாயனர்" என்றும், பதரீவனம் எனப்படும் இலந்தைக் காட்டினருகில் வசித்ததால் "பாதராயணர்" என்றும் கூறக்காணலாம்.

ச்ரவண பெளர்ணமியில் உபாகர்மா செய்யும் போது பிரம்மச்சாரியும், கிருஹஸ்தனும் வ்யாசரை வழிபடுவது போல சன்யாஸிகள் ஆஷாட பெளர்ணமி நாளில் வேத வ்யாஸரை குறித்து பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் இருக்கிறார்கள். இந்நாளில் கிருஹஸ்தர்களும் தமது குலாசார்யர்கள் செய்யும் பூஜையில் கலந்து கொண்டு அவர்களது அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாதல் வேண்டும். ஆஷாட பூர்ணிமையே குரு பூர்ணிமா என்று வட தேசங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பூஜையில் இருந்து சன்யாஸிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை ஆரம்பிக்கிறார்கள். சன்யாஸிகள் அஹிம்சையை ஆதாரமாகக் கொண்டவர்கள். அவர்கள் தங்களால் எந்த உயிருக்கும் ஹிம்ஸை/உபத்திரவம் வரக்கூடாது என்று மழைக் காலமான ஆடியில் இருந்து கார்த்திகைவரையில் பிரயாணத்தைத் தவிர்த்து ஒரே இடத்தில் இருந்து வேதாந்த விசாரம் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தனியாகச் செய்ய இயலாத சன்யாஸிகள் தங்களது குருவுடன் இருந்து இந்த பூஜையில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள். 4 மாதங்கள் இல்லாவிடினும் 4 பக்ஷங்களாவது இவ்விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளையிட்டிருக்கிறதாகத் தெரிகிறது. இதே போல சன்யாஸிகள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது அவர்களுக்கு பிக்ஷை, பாத பூஜை போன்றவற்றைச் செய்து அவர்களது விரதத்தை ஆதரித்து, அவர்களிடத்தே வேதாந்தக் கருத்துக்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று க்ருஹஸ்தர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

ஹேமாத்ரி என்ற தர்ம சாஸ்திர கிரந்தத்திலும், பவிஷ்ய புராணத்திலும் இந்த நான்கு மாதங்களில் குரு வந்தனம் செய்தல் பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. குரு பூர்ணிமை தினத்தில் வ்யாஸ பூஜை செய்தாலும், இந்த விரதமானது ஸயன ஏகாதசி தினத்தன்று ஆரம்பிக்கப்படுவதாக ஹேமாத்ரியில்கூறப்பட்டுள்ளது. அதாவது ஆஷாட சுக்ல ஏகாதசியில் ஆரம்பித்து, பிரபோத துவாதசி எனப்படும் கார்த்திகை சுக்ல துவாதசியில் (உத்தான ஏகாதசிக்கு அடுத்த நாள்) முடிவடையும் என்று சொல்லியிருக்கிறது. அதாவது மஹாவிஷ்ணு உறங்க ஆரம்பித்தது முதல் அவர் எழுந்திருக்கும் வரையில் என்பதாகவும் சொல்கிறார்கள்.

இவ்விரதம் சன்யாஸிகள் மட்டுமல்லாது பல குடும்பங்களிலும் பெரியவர்கள் கடைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். சாதுர்மாஸ்ய விரத்திற்கு என்று ஆகார நியமங்கள் தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி முதல் மாதத்தில் காய்கறி, கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும், இரண்டாம் மாதம் ததி/தயிர் சாப்பிடக் கூடாது. மூன்றாம் மாதம் பாலும், நான்காம் மாதம் பருப்புக்கள் போன்ற இரண்டாகப் பிளக்கக் கூடிய தான்ய வகைகளும் உணவில் இருந்து விலக்கப்பட வேண்டியது.

ஸ்ரீ மடங்களில், குறிப்பாக காமகோடி மடத்தில் இந்த பூஜைக்கென்றே தனியாக ஒரு மடம் அமைக்கப்பட்டு, அதில் அக்ஷதையைப் பரப்பி நடுவில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்பதாக கீதையில் சொல்லியிருப்பதற்கேற்ப ஸ்ரீக்ருஷ்ணரை ஆவாஹனம் செய்து, சுற்றிலும் தேவதைகளையும், ரிஷிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் ருத்ராக்ஷங்களிலோ அல்லது எலுமிச்சம் பழங்களிலோ ஆவாஹனம் செய்து பூஜிக்கின்றனர். இந்த அமைப்பிற்கு பஞ்சக பூஜை என்று பெயர். ஐந்தைந்து பேர்களைக் கொண்ட ஆறு பஞ்சகங்கள் அமைத்து அதில் ஆசார்ய பரம்பரையினரை பூஜை செய்வர். அவையாவன;1. மண்டப நடுவில் க்ருஷ்ண பஞ்சகம் - க்ருஷ்ணனை நடுவிலும், நான்கு மூலைகளில் வாசுதேவர், பிரத்யும்னர், அனிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆவாஹனம்

2. வ்யாஸ பஞ்சகம் - நடுவில் வ்யாஸர், சுற்றிலும் பைலர், வைசம்பாய்னர், ஜைமினி மற்றும் ஸுமந்து

3. பகவத்பாத பஞ்சகம் - நடுவில் ஆதி சங்கரர், சுற்றிலும் பத்மபாதர், சுரேஸ்வரர், ஹஸ்தாமலகர் மற்றும் தோடகர்

4. ஸனக பஞ்சகம் - நடுவில் ஸனகர், சுற்றிலும் ஸநந்தனர், ஸ்நாதனர், ஸநத்குமாரர் மற்றும் ஸநத்ஸுஜாதர்

5. த்ராவிட பஞ்சகம் - நடுவில் த்ராவிடாச்சார்யார், சுற்றிலும் கெளட பாதர்,கோவிந்த பகவத்பாதர், ஸங்க்ஷோபாசார்யர், மற்றும் விவரணாசார்யர்

6. குரு பஞ்சகம் - பூஜை செய்பவரின் குரு நடுவிலும், சுற்றிலும் நான்கு பக்கங்களில் பரம குரு, பரமேஷ்டிகுரு, பராபர குரு, மற்றும் ப்ரம்ம வித்யா சம்பிரதாயத்தை ஏற்படுத்திய மற்ற பெரியோர்கள் அடங்கிய மண்டலம்.

ஆகக்கூடி இந்த 5x6 = 30 பேர்களுக்கும் பூஜை ஆன பிறகு சுகர், நாரதர், துர்க்கை, கணபதி, க்ஷேத்ர பாலர், சரஸ்வதி மற்றும் திக்பாலகர்கள் ஆகியவர்களுக்கும் பூஜை செய்து முடிவில் குணம், உருவம் அற்ற பரபிரம்மத்திற்கும் தனித்தனியாக பூஜைகள் செய்து, பின்னர் சமஷ்டியாகவும் பூஜைகளும் உபசாரங்களும் செய்யப்படுகிறது. இந்த பூஜைக்குப் பின்னர் ஆசார்யாளது பாஷ்ய க்ரந்தங்கள் படிக்கப்பட்டும், சாந்தி மந்திரங்கள் சொல்லப்படும். பின்னர் தக்ஷிணா மூர்த்தி அஷ்டகத்தில் ஆரம்பித்து, நாராயணன் முதலாக குரு-பரம்பரைக்கு வந்தனம் செய்யப்படும்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பெளத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோநிதிம்

[வசிஷ்டரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், கல்மஷம்/பாபம் அற்றவரும், பராசரரின் புதல்வரும், சுகப்பிரம்ம ரிஷியின் தந்தையும், சிறந்த தபோ-வலிமை பெற்றவருமான ஸ்ரீ வ்யாஸரை வணங்குகிறேன்]

இன்று வ்யாஸ பூஜை, நாமும் வேத வ்யாஸரை துதித்து குரு மண்டலத்தில் இருக்கும் ஆசார்யார்களை நமஸ்கரிப்போம்