Thursday, April 30, 2009

ஸ்ரீஆசார்ய ஜெயந்தி - ஸ்ரீசங்கரரின் குருவந்தனமும், ஸ்ரீசங்கரருக்கு குருவந்தனமும்.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.


நேற்று ஸ்ரீசங்கர ஜெயந்தி, சற்றே எழுதி வைத்திருந்தாலும், நேரமின்மையால் இந்த இடுகையைப் பூர்த்தி செய்து இட முடியவில்லை. அதனாலென்ன, குருவருளை எல்லா நாளும் தானே நாம் வேண்டுகிறோம். அதிலும் இன்று குருவாரம் பதிவிட்டுவிடலாம் என்று செய்கிறேன்.




இந்த விசேஷ நாளில் மாதவீய சங்கர விஜயத்தில் இருந்து ஒரு சில நிகழ்ச்சிகள் மூலமாக பகவத் பாதாளுக்கு குருவின் மேல் இருந்த பக்தியையும், அவர் மேல் அவரது பரதம சிஷ்யர்களுக்கு இருந்த பக்தியும் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஸ்ரீசங்கரர் தமது பரமகுருவைப் போற்றுதல்:


நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச வியாஸம் சுகம் கெளடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் ஸ்ரீசங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் தம் தோடகம் வார்த்திககாரம் அந்யாந் அஸ்மத்குரூந் ஸந்ததம் ஆனதோஸ்மி.


அதாவது, ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து பிதா-புத்ரர் என்ற ரீதியில் வந்த பரம்பரை, சுகாசாரியாருக்குப் பின்னர் ஸந்யாஸ பரம்பரையாக மாறியிருக்கிறது. இதனாலேயே கெளட பாதரிலிருந்து ஆரம்பிக்கும் குரு பரம்பரையை 'மாணவ ஸம்ப்ரதாயம்' என்று கூறுவர். இந்த மாணவ ஸம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யார்கெளடபாதர். இவர் ஸ்ரீசங்கரரின் பரம குரு.

ஸ்ரீசங்கரர் தமது ஆசேது-ஸ்ரீநகர திக்விஜயத்தை முடித்துக் கொண்டு கங்கைக் கரையில் ப்ரம்ஹ நிஷ்டையில் இருக்கையில், திடீரென நிஷ்டை கலைகிறது. கண் விழித்தஅவ்ர் முன் ஒரு மஹா-புருஷர் நின்றுகொண்டிருக்கக் கண்டார். பார்த்தவுடன் தெரிந்துவிட்டது அது கெளட பாதர் என்று. உடனே எழுந்து கெளடபாதர் பாதம் பணிந்ததை பின்வருமாறு சொல்லியிருக்கிறார்கள்.

பாணெள புல்ல ச்வேத பங்கேருஹ ஸ்ரீமைத்ரீ
பாத்ரீ பூதபாஸா கடேன
ஆராத் ராஜத் கைரவாநந்த ஸந்த்யாராக
ரக்தாம்போத லீலாம் ததாநம்
பாணெள சோணாம்போஜ புத்யா ஸமந்தாத்
ப்ராம்யத் ப்ருங்கீ மண்டலீ துல்ய குல்யாம்
அங்குல்ய க்ராஸங்கி ருத்ராக்ஷமாலாம்
அங்குஷ்டாக்ரேண அஸக்ருத் ப்ரமாயந்தம்


'கெளடபாதர் சிவந்த மேனி கொண்டவர். அவர் தமது இடக்கையில் கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராக்ஷத்தால் ஆன ஜப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டவிரலால் ருத்ராக்ஷத்தை உருட்டிக் கொண்டிருப்பது கருவண்டுகள் அவரது கர-கமலத்தை சூழ்ந்து கொண்டிருப்பது போல தோன்றுகிறது' என்று கூறித் துதித்து வணங்கினாராம்.


ஈச்வரனது அவதாரம் என்று போற்றப்படுமளவுக்கு தபஸ் ஸித்தி பெற்றவர் ஸ்ரீசங்கரர். அவரது குருவான கோவிந்த பகவத்பாதருக்கு குரு கெளட பாதர். இருவரும் ஞானத்தில் பரிபூரணமானவர்கள். இருப்பினும், குரு-சிஷ்ய பாவத்தில், கெளட பாதர் சங்கரரிடம், 'காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா?, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா?, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார். அதற்கு சங்கரர், மிக விநயமாக, குரு-சிஷ்ய உரையாடல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, 'வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரிய பாக்யம். உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே ஊமை பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாபி தனது பாபங்கள் கழுவப்பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். அகவே எனக்கு இன்று உங்கள் தரிசனத்தின் மூலம் நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் சிறிது காலத்தில் அடைந்திடுவேன் என்பது திண்ணம்' என்று கூறி மீண்டும் வணங்குகிறார்.

இந்த பதிலைக் கேட்ட கெளடபாதர் மிகவும் மகிழ்ந்து, 'உன்னுடைய உயர்ந்த குணமானது உனது பேச்சு மற்றும் விநயத்தின் மூலம் தெரிகிறது. உயர்ந்த பாஷ்யங்களைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்யஉபநிஷத பாஷ்யத்தை எளிமைப்படுத்தியதற்கும் உன்னை ஆசிர்வதிக்கிறேன், ஏதேனும் வரம் வேண்டுமானால் கேள் என்று கூறுகிறார். இதற்கு நமது ஸ்ரீசரணர் பின்வருமாறு பிரார்த்திக்கிறார்.

ஸ ப்ராஹபர்யாய சுகரிஷிம் ஈக்ஷ்ய பவந்தம்
அத்ராக்ஷம் அதிஷ்ய புருஷம்
வர:பர: கோ அஸ்தி ததாஅபி சிந்தன,
சித்தத்வகம் மே அஸ்து குரோ நிரந்தரம்

இதன் பொருள், 'கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதை விடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்று உண்டு, என் சித்தம் எப்போதும் பிரம்ஹத்திலேயே நிலைத்திருக்க அனுக்ரஹிக்க வேண்டும். கெளட பாதரும் 'அப்படியே ஆகட்டும்' என்று அருள்கிறார்.

********************************************************************
ஸ்ரீசங்கரரை அவரது ப்ரதம சிஷ்யர் போற்றுதல்:

ஸ்ரீசங்கரர் தமது சிஷ்யர்களில் ஸுரேஸ்வரர் என்பவரை அழைத்து தாம் அருளிய ப்ரம்ஹ சூத்ர பாஷ்யத்திற்கு ஒரு விளக்க நூல் எழுதப் பணிக்கிறார். இந்த ஸுரேஸ்வரர் முந்தைய ஆச்ரமத்தில் விசுவரூபராக இருந்தவர். உபய பாரதி என்ற பெயரில் சரஸ்வதி தேவியின் முன்னிலையில் சங்கரருடன் வாதப் போரில் தோல்வியடைந்து ஸன்யாசம் பெற்றவர். ஸ்ரீசங்கரர் தமது ஸ்ரீபாஷ்யத்திற்கு வார்த்திகம் எழுத இவரையே நியமித்ததாகச் சொல்வர். இவரே தக்ஷிணாம்நாய சிருங்ககிரி மடத்தின் முதல் ஆசார்யார்.

இவர் தமது பூர்வாச்ரமத்தில் பூர்வ மீமாம்ஸையை மட்டுமே முழுவதுமாக ஆச்ரயித்தவர், இதன் காரணமாகவே ஸ்ரீசங்கரர் இவரிடத்தில் கர்ம காண்டத்திலிருந்து அத்வைத சாதனைக்குத் தேவையான வாதங்களை, வேத்ப் பிரமாணங்களை தொகுத்து எழுதப்பணிக்கிறார். 'நைஷ்கர்ம ஸித்தி' என்னும் பெயரில் இந்த நூலை எழுதுகிறார் ஸ்ரீஸுரேஸ்வரர். நூல் எழுதி முடிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீசங்கரரிடம் அனுக்ரஹம் பெற நூலை அவரிடம் சமர்பிக்கிறார். படித்த பகவத் பாதர், தமது பாஷ்யங்களையும், பிரகரண கிரந்தங்களையும் நன்றாக உபயோகம் செய்து ஆத்மஞானத்தை, மோக்ஷத்தை அடைவதற்கு 'எது சரியான வழி' என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்து முடிவாக 'ஞானமே வழி' என்பதாக முடித்திருப்பதைப் பார்த்து சந்தோஷித்தாராம்.

இந்த நூலில் பகவத்பாதரை ஸ்ரீஸூரேஸ்வரர் பின்வருமாறு வந்தனம் செய்கிறார்.

ஸ்ரீமத் சங்கரபாதபத்ம யுகளம் ஸம்ஸேவ்ய லப்த்வா உசிவாந்
ஞானம் பாரஹம்ஸ்யம் ஏதத் அமலம் ஸ்வாந்த அந்தகாராபனுத்
மா பூத் அத்ர விரோதினீ மதி: அத: ஸ்த்பி: பரீக்ஷ்யம் புதை:
ஸர்வத்ர ஏவ விசுத்தயே மதம் இதம் ஸந்த: பரம் காரணம்.

"ஸ்ரீமத் சங்கர பகவத் பாதரின் பாதயுகளத்தை நன்கு சேவித்து இந்த நிர்மலமான அத்வைத ஞானத்தை அடைந்தேன். இது பரமஹம்ஸ ஸந்யாசிகளாலேயே அடையத்தக்கது. உள்ளத்தில் இருக்கும் அக்ஞானம் என்னும் காரிருளைப்போக்க வல்லது. முமுக்ஷுக்களாகவும், பரிசுத்தமான மதியை உடையவர்களாகவும் இருக்கும் பண்டிதர்கள் இந்த நூலைப் படித்து இதன் குணதோஷங்களைச் சொல்லட்டும். இது க்யாதியை அடைவதற்காக எழுதப்பட்டதல்ல. யாருக்கும் இதனால் என்னிடம் விரோத-பாவம் ஏற்பட வேண்டாம்" என்று கூறுகிறார்.

இரண்டாவது ஸ்லோகத்தில் பின்வருமாறு குருவந்தனம் செய்கிறார்.

விஷ்ணோ: பாதாநுகாம் யாம் நிகிலபவநுதம்
சங்கரோ அவாப யோகாத்
ஸர்வக்ஞம் ப்ரஹ்மஸம்ஸ்தம் முனிகண ஸஹிதம்
ஸம்யக் அப்யர்ச்ய பக்தயா
வித்யாம் கங்காம் இவ அஹம் ப்ரவரகுண நிதே:
ப்ராப்ய வேதாந்த தீப்தாம்
காருண்யாத்தாம் அவோசம் ஜனிம்ருதி
நிவஹ த்வஸ்தயே துக்கிதேப்ய:

வியாசராக வந்த மஹாவிஷ்ணுவிடமிருந்து பெருகிய அத்வைத ஞானமாகிய கங்கையை எம் குருநாதரான ஸ்ரீசங்கரர் தமது யோக பலத்தால் தன்னிடம் பெற்று வைத்துக் கொண்டார். அவர் ப்ரஹ்ம நிஷ்டர். சர்வஞர். சிஷ்யர்களும், முனிகணர்களும்எப்போதும் அவரைச் சூழ்ந்து இருப்பர். நான் பகீரதனைப் போல இருந்து, அவரை பரம-பக்தியுடன் பூஜித்து ஞான கங்கையை அடைந்தேன். அந்த ஞான-கங்கையின் ப்ரவாஹத்தை இந்த கிரந்தத்தின் மூலமாக ஸம்ஸாரமாகிய இருட்டில் உழலும் ஜீவர்களை முமுக்ஷுக்களாக ஆக்கி கடைத்தேற்றட்டும்' என்று பிரார்த்திக்கிறார்.

இவ்வாறாக நாமும் ஸ்ரீ பகவத்பாதரை போற்றி வணங்கிடுவோம், அவரருளால் அஞ்யானத்திலிருந்து விடுபட வேண்டுவோம்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

Tuesday, April 14, 2009

விரோதி வருஷத் தமிழ் புத்தாண்டு...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


சூரியன் மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு பிரவேச செய்யும் தினமே புதுவருஷம் பிறப்பதாக சூர்யமான வருஷப் பிறப்பு என்று கூறியிருக்கின்றனர் பெரியோர். இவ்வாறான நாளில் சிறியவர்கள் மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பெரியவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுதலும், பெரியவர்கள் பித்ரு பூஜை, தேவ பூஜை ஆகியவை செய்தலும், புதுவருஷத்துப் பஞ்சாங்கத்தை பூஜித்தல், கோவில்களுக்குச் செல்லுதல், பஞ்சாங்க ச்ரவணம் செய்தல் போன்றவை செய்ய வேண்டும் என்பது ஆன்றோர் சொல்லியிருப்பது.

பஞ்சாங்கம் என்பது என்ன என்பதே இன்று பலருக்குத் தெரிவதில்லை. ஐந்து பாகங்களைக் கொண்டதால் இது பஞ்ச அங்கம் - பஞ்சாங்கம்.ஐம்புலன்களில் பிரதானமான கண்கள் போன்றது ஜோதிஷம் என்பர். ஜோதிஷம், ஜாதகம் போன்றவற்றிற்கு பஞ்சாங்கம் இன்றியமையாதது. திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்றவை பஞ்ச அங்கங்கள். ஒவ்வொரு நாளும் இந்த ஐந்தும் வேறுபடுகிறது. இந்த ஐந்தும் ஒரு குறிப்பிட்ட முறையில் சுழன்று வருகிறது. இவற்றின் தன்மையைப் பொருத்து நாளின் தன்மை, நமது செயல்களில் அதன் ஆதிக்கம் நடக்கிறது. இவ்வைந்தும் எப்படி சுழல்கிறது என்பதை பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.

வருஷம் என்பதே காலதேவதை என்று கூறுவார்கள். இவ்வாறான வருஷ தேவதைக்கு 12 மாதங்களே முகம்-கை-கால் போன்ற அவயவங்களாம். லோகத்தைக் காப்பாற்றும் ஈச்வரன் தனது பிரதிநிதிகளாக நவகிரஹங்களை நியமித்திருக்கிறார். இந்த கிரஹங்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி, அந்த அமைப்பின் மூலமாக நமது செயல்களுக்கு ஏற்ப நன்மை-தீமைகளை வழங்கி வருகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருஷம். இதனாலேயே ஒவ்வொரு தமிழ் வருஷமும் நவகிரஹங்களில் ஒவ்வொருவர் அரசராகவும், மந்திரி, ஸேனாதிபதி போன்ற பதவிகளில் வருகின்றனர். ஒரு வருஷத்திற்கு இவர்களில் யார் எந்த பதவியில் (ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, தான்யாதிபதி..) வருகிறார் என்பதைப் பொருத்து அவ்வருடத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருஷம் பிறக்கும் போது அந்த வருஷத்தின் மீது நவகிரஹங்களின் ஆதிக்கம் எப்படி இருக்கும்?. அந்த வருஷத்தில் மழை இருக்குமா?, இயற்கைச் சீற்றங்கள் இருக்குமா?, தேசத்தில் யுத்தம் உண்டா?, விவசாயத்தில் எந்த தான்யங்கள் விதைக்கலாம்?, எது அதிக விளைச்சல் தரும்?, அரசர், பெண்களுக்கு நன்மை தரும் வருஷமா?, போன்ற அடிப்படையான விஷயங்களை பஞ்சாங்கத்தின் மூலம் அறிய முடிகிறது. இன்றும் பஞ்சாங்கங்களில் விதை விதைக்கச் சிறந்த நாள் என்றும், சிகிச்சைக்குச் சிறந்த நாட்கள் என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதை கண்டு உணரலாம்.

ஜோதிஷ சாஸ்திரத்தில் ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒரு ஸ்லோகமும் அதில் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று பிறக்கும் 'விரோதி' வருஷத்தில், உலக மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோத மனப்பான்மை கொண்டவராகவும், பூமியானது சம்பத்துக்கள் நிறைந்ததாகவும், நீர் நிலைகள் நிறைந்தும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழிலும் வெண்பாவடிவில் இந்த ஸ்லோகங்கள் உள்ளது. அதில் இவ்வருடத்து வெண்பாவைப் பார்க்கலாம்.

நீடு விரோதி நிலத்தின் மழை மிகுதி
மேடு காடெல்லாம் விளைவுண்டாம் நீடும்
அரசர் போராலே யழிவு முலகம்
திரமிகு நோய் சேருமெனச் செப்பு.


இந்த புதுவருஷம் பெயருக்கு ஏற்றார் போல விரோதத்தை அதிகமாக்கும் என்று இருக்கிறதே என்று பயம் கொள்ள வேண்டாம். விரோதம் எப்போது வரும்?, ஒருவருக்கு அநியாயம், அதர்மம் நடக்கும் போது விரோதம் உருவாகும். நாம் எல்லோருக்கும் நன்மை செய்ய உறுதி செய்து கொள்வதன் மூலமாக விரோதத்தை தவிர்ப்போம். எங்கு விரோதம் வளரும் என்று தோன்றுகிறதோ அந்த நிகழ்வுகளை விலக்குவோம். விரோதம் தவிர்க்க வேண்டும் என்னும் விசேஷ பலனைப் பெற இறைவனை, பராம்பிகையை இறைஞ்சுவோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, April 8, 2009

மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம் (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 6)

இன்று மிகச் சிறப்பான நாள், பங்குனி உத்திரம், மதுரைவாழ் மீனாக்ஷியின் கோவில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகத் திருநாள். நித்யம் வணங்கும் தெய்வமேயானாலும், சிறப்பான நாளில், சிறப்பாக வணங்கி அருள் பெரும் நன்னாள். அன்னையின் பாதகமலங்களில் சிரத்தை வைத்து ஸேவித்து நற்கதி வேண்டுவோம். கிழே உள்ள ஸ்லோகம் "மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்" என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லி, மதுரையம்பதிவாழ் மீனாக்ஷி சகல ஜனங்களுக்கும் நன்மையருள வேண்டிடுவோம்.



கெளரீம் காஞ்சன பத்மினீ தடக்ருஹாம் ஸ்ரீ ஸுந்தரேஸ ப்ரியாம்

நீபாரண்ய ஸுவர்ண கர்துக பரிக்ரீடா விலோலமுமாம்

ஸ்ரீமத்பாண்ட்ய குலாசலாக்ர விலஸத் ரத்னப்ரதிபாயிதாம்

மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


பொற்றாமரைக் குளத்தின் கரையில் கோவில் கொண்டிருபவளாயும், ஸ்ரீ சுந்தரேஸ்வரருடைய பத்னியாகவும், கதம்பவனத்தில் தங்கப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடுபவளும், அதிபிரகாசமுள்ள பாண்டியவம்சம் என்னும் மலையின் சிகரத்தில் விளங்கும் ரத்ன தீபமாயுள்ளவளும், பாண்டிய ராஜனது புத்ரியாகவும், மதுரைக்கு நாயகியாகவும், கையில் கிளி ஏந்தினவளாகவும் உள்ள கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.





கெளரீம் வேத கதம்ப கானன சுகீம் சரஸ்த்ராடவீ கேகினீம்
வேதாந்தாகில தர்மஹேம நளினீ ஹம்ஸிம் சிவாம் சாம்பவிம்
ஓங்காராம்புஜ நீலமத்த மதுபாம் மந்த்ராம்ர சாகாபிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும், உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.



கெளரீம் நூபுர சோபிதாங்க்ரி கமலாம் தூணீல ஸஜ்ஜங்கிகாம்
ரத்னாதர்ச ஸமான ஜானுயுகளாம் ரம்யா நிபோருத்வயாம்
காஞ்சீபத்த மனோஜ்ஞபீன ஜகனாமாவர்த்த நாபிஹ்ரதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


நூபுரத்தால் அழகுசேர்க்கும் பத்மம் போன்ற கணுக்காலுடையவளாய், அலங்காரமான துணி போல பிரகாசிக்கிற கைகள் உடையவளாய், ரத்னக் கண்ணாடிகளுக்கு சமமான இரண்டு முழங்கால்களுடையவளாய், வாழைமரம் போல விளங்கும் துடைகளுடன், ஒட்டியாணம் பூட்டப்பட்ட மனோஹரமான பருத்த ஜகனத்துடன் கூடியவளாய், சுழிபோலுள்ள தொப்புள் குழியுடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.







கெளரீம் வ்யோம ஸமான மத்யமயுதாமுத்துங்க வக்ஷோருஹாம்
வீணா மஞ்ஜுன நாளிகான்விதகராம் சங்கோல்லஸத் சுந்தராம்
லாக்ஷா கர்தம சோபிபாதயுகளாம் ஸிந்தூர ஸீமந்தினீம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


வெட்டவெளி போன்ற சமமான இடுப்பும், உயர்ந்த ஸ்தனங்களூம், வீணையின் அழகான நாளிகைஇல் வைக்கப்பட்ட கைகளும், சங்கம் போன்ற அழகிய கழுத்தும், அரக்கு குழம்பினால் ஒளிரும் இரு பாதங்களும், குங்குமத்துடன் கூடிய வகிட்டினையும் உடைய மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.



கெளரீம் மஞ்ஜுள மீன நேத்ர யுகளாம் கோதண்ட ஸுப்ருலதாம்
பிம்போஷ்கம் ஜிதகுந்த தந்த ருசிராம் சாம்பேய நாஸோஜ்வலாம்
அர்த்தேந்து ப்ரதிபிம்ப பால ருசிராமாதர்ச கண்ட ஸ்தலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!



மீன்களைப் போன்ற கண்களுடையவளும், வில் போன்ற அழகான வளைந்த புருவங்களை உடையவளும், கோவஒப் பழம் போன்ற உதடுகளைக் கொண்டவளும், வெண்மல்லிகைப் பூவைப் நிகர்த்த பற்களையுடையவளும், சம்பக புஷ்பம் போன்ற மூக்கினால் ப்ரகாசிப்பவளும், பாதி சந்திரன் போன்ற நெற்றியுடன் ஒளிர்கிறவளும், முகக்கண்ணாடி போல் இருக்கும் கன்னப் பிரதேசத்தை உடையவளாகவுமான மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.




கெளரீம் குங்கும பங்க லேபிதலஸத் வக்ஷோஜ கும்போஜ்வலாம்
கஸ்தூரீ திலகாலிகாம் மலயஜாலேபோல்லஸத் கந்தராம்
ராகா சந்த்ர ஸமான சாரு வதனாம் லோலம்ப நீலாலகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


குங்கும குழம்பு பூசினாற்போன்று ஒளிரும் ஸ்தன கும்பங்களுடன் பிரகாசிப்பவளும், கஸ்தூரி திலகத்தோடு கூடிய நெற்றியுடையவளும், சந்தனம் பூசிய சோபையுடன் இருக்கும் கழுத்துடையவளும், வண்டு போன்ற கருத்துச் சுருண்ட முடியை உடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.




கெளரீம் காஞ்சன கங்கணாங்கத தராம் நாஸா லஸன் மெளக்திகாம்
மஞ்ஜீராங்குளி முத்ரிகாங்கரி கடக க்ரைவேயகாலங் க்ருதாம்
முக்தாஹார கிரீட ரத்ன விலஸத் தாடங்க காந்த்யா யுதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


ஸுவர்ணத்தாலான கங்கணம், தோள்வளை இவற்றை தரித்தவளும், மூக்கில் நல்முத்தை அணிந்தவளும், பாதஸரம், விரல்களில் மோதிரங்கள், கால்களில் தண்டைகள், கழுத்தில் அட்டிகை போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டவளும், முக்தாஹாரமும், ஒளிரும் ரத்னங்கள் உள்ள கிரீடமும், பிரகாசிக்கும் தாடங்கங்களும் கூடிய மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.




கெளரீம் சம்பக மல்லிகாஸுகுஸுயை: புந்நாக ஸெளகந்திகைர்
த்ரோணேந்தீவர குந்த ஜாதி வகுளைராபத்த சூளியுதாம்
மந்தாராருண பத்ம கேதகதள ச்ரேணீ லஸத்வேணிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


சம்பகம், மல்லிகை, புன்னாகம், செங்கழுநீர், தும்பை, கருநெய்தல், குந்தம், ஜாதீ, வகுளம் ஆகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேசத்தை உடையவளும், மந்தாரை, செந்தாமரை, தாழம்பூ இதழ் இவைகளால் வரிசையாக பின்னப்பட்ட பின்னலுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.


கெளரீம் தாடிம புஷ்பவர்ண விலஸத் திவ்யாம்பராலங்க்ருதாம்
சந்த்ராம்சூபம சாரு சாமரகர ஸ்ரீ பாரதீ ஸேவிதாம்
நாநாரத்ன ஸுவர்ண தண்ட விலஸன் முக்தாதபத்ரோஜ்வலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


மாதுளைப் புஷ்பம் போன்ற வர்ணமுடைய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளும், சந்திர கிரணம் போன்ற அழகான் சாமரங்களைக் கையில் ஏந்தி லக்ஷ்மியாலும், சரஸ்வதியாலும் ஸேவிக்கப்படுபவளும், பலவிதமான ரத்னங்களுடன் கூடிய தண்டத்துடன் கூடிய முத்துக் குடையுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியான, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.



வாசா வா மநஸாபி வா கிரிஸுதே காயேன வா ஸந்ததம்
மீனாக்ஷீதி கதாசிதம்ப குருதே த்வந்நாம ஸங்கீர்த்தனம்
லக்ஷ்மீஸ்தஸ்ய க்ருஹே வஸத்யனுதினம் வாணி ச வக்த்ராபுஜே
தர்மாத்யர்த்த சதுஷ்டயம் கரதலப்ராப்தம் பவேந்நிச்சய:

அம்பிகே!, மலையவான் மகளே, வாக்கினாலோ, மனசினாலோ, சாரீரத்தினாலோ எப்போதாவது இடைவிடாமல் ஒருவன் மீனாக்ஷி என்று உனது நாமத்தைச் சொல்வானேயானால், அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் தினந்தோறும் வசித்து வருவாள். அதேபோல், அவனுடைய முகபத்மத்தில் சரஸ்வதியும் விளங்குவாள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய புருஷார்த்தங்களும் அவன் கைகளில் கிடைத்ததாகும், இது நிச்சயம்.

சர்வே ஜனா சுகினோ பவந்து!.. சர்வ மங்களானி பவந்து.


இதி சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் சம்பூர்ணம்

Tuesday, April 7, 2009

சாக்தத்திலும், புராணத்திலும், மீனாக்ஷி (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 5)


வேத வியாசர் வேதங்களை முறைப்படுத்தியவர், 18 புராணங்களையும் எழுதி நமக்கருளியவர் என்று நாமறிவோம், ஆனால் இவர் மதுரை பற்றியும், மீனாக்ஷி பற்றியும் எழுதியிருக்கார் என்று தெரியுமா?. இவர் செய்த ஸ்கந்த புராணத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்று ஒரு பகுதி, அதில் அன்னை மீனாக்ஷியை பின்வருமாறு போற்றுகிறார்.

வந்தே ஹாலாஸ்ய நகரீம் வந்தே ஹேமாப்ஜினீமயீ
வந்தே ஸுமின நடனாம் வந்தே சுந்தர நாயிகாம்.


மந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படியாகப் பார்த்தால் அன்னை மீனாம்பிகையே மந்திரிணி, சியாமளா, மாதங்கி என்றெல்லாம் கூறப்படுபவள், அதனால்தான் மதுரை மந்திரிணி பீடம், மாதங்கி பீடம் என்றெல்லாம் கூறப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தியின் கைகளில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களும் ஒரு சக்தி ஸ்வரூபம் என்கிறது சாக்த சித்தாந்தம். இவ்வாறாக ஒவ்வொரு ஆயுதத்திற்கான சக்திகளைச் சொல்கையில் அன்னை பராசக்தியின் கையில் இருக்கும் கரும்பு வில்லே "சியாமளா" என்று கூறுகிறது சக்தி மஹிம்ன ஸ்துதி. ருத்ர யாமளத்தில் இவளைப் பற்றி 16 நாமங்கள் சொல்லப்படுகிறது. இந்த நாமங்களைப் பார்த்தாலே அவை மீனாக்ஷிக்கும் இருப்பது புலனாகிறது. அவையாவன:
சங்கீத-யோகினி, வீணாவதி, சியாமா, வைணிகீ,
சியாமளா, முத்ரிணி, மந்திர-நாயிகா, பிரியகப்ரியா,
மந்திரிணி , நீபப்ரியா, சசிவேசானி, கதம்பேசீ,
ப்ரதானேசீ, கதம்பவன-வாஸினி, சுகப்பிரியா, ஸ்தாமதா



இந்த நாமங்களை முத்துஸ்வாமி தீக்ஷதர் தமது க்ருதிகளில் மிக அருமையாகக் கையாண்டிருக்கிறார். இவர் முக்தியடையும் நேரத்தில் பாடிய பாடல் "மீனாக்ஷி மேமுதம்" என்னும் கமகக்ரியா என்னும் ராகத்தில் உள்ள பாடல் இன்றும் இவரது ஆராதனையில் பாடப்படுகிறது. இதே போல "மாமவ
மீனாக்ஷி" என்னும் வராளி ராகத்தில் அமைந்த க்ருதி, மற்றும் "மாதங்கீ" என்று ஆரம்பிக்கும் ராம-மனோகரியில் அமைந்த க்ருதிகள் மதுரையில் தரிசனம் செய்கையில் திக்ஷிதர் செய்ததாகச் சொல்வர்.

இதேபோல, அகஸ்தியர் மீனாக்ஷியைப் பணிந்து "யோக மீனாக்ஷி ஸ்தோத்ரம்" என்ற பெயரில் ஸ்லோகம் ஒன்று செய்திருக்கிறார். மிக அபூர்வமான மந்திரப் பிரயோகங்கள் நிறைந்த 16 ஸ்லோங்கள் கொண்டது இது. அந்த ஸ்லோகத்திலும் இந்த நாமங்கள் பற்றிய குறிப்புக்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. பின்னர் ஒருமுறை இந்த ஸ்தோத்ரத்தை தனி இடுகையாக எழுதுகிறேன்.

ஆதிசங்கரர் மீனாட்சி தேவியை துதித்து மீனாட்சி பஞ்சரத்தினமும், மீனாட்சி அஷ்டகமும் அருளியிருக்கிறார்கள். பல சங்கர மடங்களாலும், ஆதினங்களாலும் சிறப்பிக்கப்பட்ட தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் தனது கண்பார்வை பாதிக்கப்பட்ட சமயத்தில், அன்னை மீனாட்சியின் மேல் 15 ஸ்லோகங்கள் செய்து தனது கண்பார்வை பெற்றதாக வரலாறு. இன்றும் அந்த ஸ்லோகங்கள் பலரது கண் பார்வைக் கோளாறுகளுக்கு பிரார்த்தனை மந்திரமாக இருக்கிறது.

கடந்த 100-150 வருடங்களுக்கு முன்னர் சிருங்கேரி ஆசார்ய பரம்பரை குரு ஒருவர் க்ஷேத்திராடனம் வருகையில் மதுரையில் முகாமிடுகிறார். அப்போது அவர் மீனாக்ஷி தரிசனம் செய்து, கர்பகிரஹத்தி தமது கைகளால் பூஜிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். தரிசனம் செய்வது சரியென்றும் ஆனால் யதிகள் கர்பகிரகத்துள் சென்று பூஜை செய்வது மதுரைக் கோவிலில் வழக்கமன்று என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். அப்போது அந்த ஆசார்யார் தமது தபோ பலத்தால் அன்னையை ஓர் கலசத்தில் ஆவிர்பகிக்கச் செய்து பூஜா முறைகளை வழுவறச் செய்கிறார். இதன் காரணமாக கோவில் சோபையிழந்து, துர்-சகுனங்கள் ஏற்படுகிறது. பட்டர்கள் கனவில் வந்த மீனாக்ஷியம்மன் ஸ்ரீ ஸ்வாமிகளை கர்பகிரஹத்தில் அனுமதிக்காததால் தாமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டதாகவும், ஸ்ரீ ஸ்வாமிகளிடத்து மன்னிப்புக்கோரிட வேண்டும் என்று கூறுகிறாள். அதன்படியே பட்டர்கள் செய்ய, ஸ்ரீ ஸ்வாமிகள் கோவிலுக்கு வந்து தமது கலசத்தில் ஆவிர்பகித்திருந்த அன்னையை கர்பகிரகத்தில் உள்ள சிலா ரூபத்திற்கு எழுந்தருளச் செய்கிறார். இதன் பிறகே இக்கோவிலில் ஸ்ரீ ஆசார்யர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகச் செவிவழிச் செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்.

குழந்தையானந்த ஸ்வாமிகள் ஒரு அவதூதர். இவர் சிறுவயதில் தாய்-தந்தையரை இழந்து அம்மன் சன்னதியில் வளர்ந்ததாகவும், அம்மனே அவரை வளர்த்ததாகவும் சொல்வார்கள். சிறுவயதில் இவர் கோவிலிலேயே தங்கியிருப்பாராம். கோவில் பிரசாதங்களை உண்டு வளர்ந்தார் என்றும், கோவிலைப் பூட்டும் போதும் இவர் அம்மன் சன்னதி அருகில் பூக்கட்டும் மண்டபத்திலேயே (மடப்பள்ளி அருகில்) இருப்பாராம். இவரது ஜீவ சமாதி இன்றும் காளவாசல் அருகில் இருக்கிறது. இவரது ஜீவ சமாதியின் மேல் மேரு பிரதிஷ்ட்டை ஆகியிருக்கிறது. இங்கு நடக்கும் ஆவரண பூஜைகள் மிக அருமை, மிகுந்த சான்னித்யம் உள்ள இடம்.

தாய்-தந்தை இழந்த ராகவேந்திர ஸ்வாமிகள் தனது இளமைக்காலத்தில் தனது சகோதரியுடன் மதுரையில் வசித்துள்ளார். அப்போது அவர் தமது சகோதரியுடன் காலை-மாலை இருவேளைகளும் அன்னையை தரிசிக்க வருவாராம். இவர் வசித்த அந்த வீடு இன்றும் தளவாய் அக்ரகாரத்தில் இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரர் பூஜித்த சாளக்கிராமங்களும், அவர் பயன்படுத்திய பூஜா பாத்திரங்களும் இன்றும் இவ்வில்லத்தில் காணலாம்.

ரமணர் தமது இளமைக் காலத்தில் மதுரையில் இருந்திருக்கிறார், அப்போது அன்னை மீனாக்ஷியை தரிசித்துள்ளார். இன்றும் தெற்கு கோபுரவாசலில் இருந்து நேராகச் செல்லும் தெருவில் அவர் வசித்த இல்லம் ரமண மந்திரமாக இருக்கிறது. அங்கே தியானம் போன்றவை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரமணர் திருவண்ணாமலை செல்லுவதற்கான உத்தரவு மதுரையில், இந்த இல்லத்தில் இருக்கும் போதே கிடைத்ததாகச் சொல்வர்.

காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி என்று சொல்வது போல, மதுரை வீதிகளில் நடந்தாலேயே முக்தி என்பர். மதுரையின் அமைப்பே பாலா திரிபுரசுந்தரியின் சக்ர ரூபம் என்பதாகச் சொல்வர். அப்படியுள்ள சக்ர ரூப நகரின் மத்தியில் வாசம் செய்து நம்மையெல்லாம் கடாஷிக்கும் அன்னை சுமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பாதம் பணிவோம்.

Monday, April 6, 2009

புதுமண்டபம்-ஆனந்த சாகர ஸ்தவம் (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 4)

மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் நிறைய திருப்பணிகளும், ஆபரணங்களும் அன்னைக்குச் சமர்பித்திருக்கிறார். அப்போது கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையும் தமது துணைவியார் சிலைகளையும் வடிக்க நிவந்தமளித்து அவற்றையும் கோவில்களில் நிறுவது வழக்கம். [நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பறங்குன்றம் போன்ற மேலும் சில திருத்தலங்களிலும் காணலாம்.] அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை புதுமண்டபத்தில் காணலாம்].

அரச உத்தரவுக் கேற்ப, தலைமை சிற்பி தானே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் இடது முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. அரசரது கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். அப்போது அங்கே மேற்பார்வையிட வந்த அரசனது பிரதம மந்திரி நீலகண்ட தீக்ஷதர் [இவரே அப்பய்ய தீக்ஷதரது தம்பி மகன், மேலதிக தகவல்கள் இங்கே!], சிற்பியின் கவலையை அறிந்து கொண்டு சற்று உள்ளார்ந்து இருந்துவிட்டு, பின்னர் அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார்.



அரசர் சிலைகளைப் பார்வையிட வருகையில் அரசியின் சிலை பற்றி நீலகண்ட தீக்ஷதர் சொன்ன கருத்து அரசரிடம் சொல்லப்படுகிறது. பிரதம மந்திரிக்கு அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு அழைத்துவர உத்தரவிடுகிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, பூஜையில் இறைவனுக்கு காண்பிக்கப்பட்ட கர்பூர ஹாரத்தியின் உதவியால் தன் கண்களை தாமே அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களிடம், அரசர் தர இருந்த தண்டனையை தாமே விதித்துக் கொண்டுவிட்டது பற்றி அரசருக்குத் தெரிவித்துவிடச் சொல்லுகிறார்.


தர்பாருக்குத் திரும்பிய சேவகர்கள் நீலகண்டரது செயலையும், செய்தியையும் அரசரிடம் கூறுகின்றனர். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசர், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறார். தனது தவறை நினைத்து வருந்திய அரசர், நீலகண்டரைத் கண்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, அவரது கண் பார்வை திரும்ப என்ன செய்வதென்று வினவுகிறார். அப்போது தீஷதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் நூலானது 108 ஸ்லோகங்களைக் கொண்டது. முழுவதும் அன்னை மீனாக்ஷியின் பாதாரவிந்தங்களைப் பணிவதாக அமைந்த ஸ்லோகங்கள் என்றாலும் இவை சிறந்த அத்வைதக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, ஜீவன் முக்தி நிலையை நெருங்கும் ஓர் ஆத்மாவின் வேண்டுதலாகவே தோன்றுகிறது. இதிலிருந்து சில அபூர்வமான ஸ்லோகங்களைப் பார்க்கலாமா?



த்வய்யார்பிதம் ப்ரதமமப்பய யஜ்வநைவ
ஸ்வாத்மார்ப்பணம் விதததா ஸ்வகுலம் ஸமஸ்தம்
காத்வம் மஹேசி குலதாஸ முபேக்ஷிதும் மாம்
கோ வாநுபாஸி துமஹம் குலதேவதாம் த்வாம்.

அம்மா, மீனாக்ஷி!, முதலில் தன்னை அர்பணம் செய்து கொண்ட எனது பெரியப்பாவால் [அப்பய்ய தீக்ஷதர்] என் வம்சம் முழுவதும் உன்னிடத்தில் அர்பணம் செய்யப்பட்டிருக்கிறது. உனது பரம்பரை அடிமையான என்னை நீ எப்படி ஒதுக்க/தள்ள முடியும்?. பரம்பரை தெய்வமான இன்னை உபாசிக்காமல் இருக்க நான் யார்?

அங்கீகுரு த்வம் அவதீரய வா வயம் து
தாஸாஸ்தவேதி வசஸைவ ஜயேம லோகான்
ஏதாவதைவ ஸுகரோ நநு விச்வமாத:
உத்தண்ட தண்டதர கிங்கர மெளளிபங்க:

நீ ஏற்றுக் கொண்டாலும் சரி, அல்லது கைவிட்டாலும் சரி, நாங்கள் உன் ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டே உலகங்களை ஜெயித்துவிடுவோம். யம கிங்கரர்கள் எங்களிடம் நெருங்கி மிரட்ட இயலாது.

ஸ்வயாத் கோமலம் யதி மநோ மம விச்வமாத:
தத்பாதயோ: ம்ருதுளயோ: தவ பாதுகாஸ்து
ஸ்யாத் கர்கசம் யதி கரக்ரஹணே புராரே:
அச்மாஹி ரோபண விதெள பவதூபயோக:

என் மனதை உன் பாதாரவிந்தங்களில் சமர்பிக்கிறேன். அது மிருதுவானால் உனது பாதுகையாகக் கொள். அவ்வாறின்றி கடினமாக இருக்குமானால் உனது விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள். எப்படியாகிலும் உன் சரண ஸ்பரிசம் அதற்கு/மனதுக்கு வேண்டும்

த்வத் ஸந்நிதான ரஹிதோ மம மாஸ்து தேச:
த்வத் தத்வ போத ரஹிதா மம மாஸ்து வித்யா
த்வத் பாதபக்தி ரஹிதோ மம மாஸ்து வம்ச:
த்வச் சிந்தயா விரஹிதம் மம மாஸ்து சாயு:

உன் கோவில் இல்லாத ஊரில் நான் குடியிருக்க வேண்டாம். உன்னைப் பற்றி உபதேசிக்காத வித்யை எனக்கு வேண்டாம். உன் சரணங்களில் பக்தி இல்லாத வம்சம் எனக்கு வேண்டாம். உன் நினைவில்லாத வாழ்நாளை நான் விரும்பவில்லை.

இவ்வாறான சிறப்புக்களை உள்ளடக்கிய புதுமண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் இவ்விடுகையில் தொடுத்துள்ளேன். எல்லா படங்களும் கூகிளார் உபயம். இவற்றை வலையேற்றியவர்களுக்கு நன்றி.

Friday, April 3, 2009

லலிதா சஹஸ்ரநாமம்-செளந்தர்ய லஹரியில் மீனாக்ஷி - (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 3)

ராஜராஜேஸ்வரம், ஜம்புகேஸ்வரம், நாகேஸ்வரம், ராமேஸ்வரம் என்பதாக எல்லா கோவில்களிலும் ஈசனது பெயரால் குறிக்கப்படுவதே வழக்கம். மதுரைக் கோவில் மட்டுமே 'மீனாக்ஷி கோவில்' என்று அழைக்கப்படுகிறது. என்னதான் சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தாலும், சமயக் குரவர்கள் பாடல்கள் பாடியிருந்தாலும் கோவில் அன்னையின் பெயரால் மீனாக்ஷி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே அம்மை-அப்பர் இருவரும் வருடத்தில் 6 மாதங்கள் அரசாக்ஷி புரிவதாகச் சொல்வர். அன்னைக்கு சித்திரைத் திருவிழாவில் அரச பட்டாபிஷேகமும், சுந்தரேஸ்வரருக்கு ஆவணி மூல உத்ஸவத்திலும் நடக்கிறது.

புராணங்களில் மதுரைக்கான மற்ற பெயர்கள் ஸ்ரீ ஹாலாஸ்ய க்ஷேத்திரம், கடம்பவன க்ஷேத்திரம், த்வாதாசந்த க்ஷேத்திரம் போன்றவை.


அம்பிகைக்கான ஸ்லோகங்கள் என்று சொன்னால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது லலிதா சஹஸ்ரநாமமும், செளந்தர்ய லஹரியும் தான். இதே போல் அம்பிகைக்கான ரூபங்கள் பல இருந்தாலும், இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தியாக 'மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி' என்ற மூன்று ரூபங்களைச் சொல்வது வழக்கம். இதில் 'மீனாக்ஷி' என்னும் பெயர் ஸஹஸ்ரநாமத்தில் நேரடியாக ஏதும் வரவில்லை, சரி செளந்தர்ய லஹரியில் பார்த்தால் அங்கும் இல்லை. ஏன் இப்படி? என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?


நன்றாக கவனித்துப் பார்த்தால், செளந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ர நாமம் ஆகிய இரண்டிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடுகையில் அதைக் காண்போம்.

சஹஸ்ரநாமத்தில், "வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாபலோசனா" என்று ஒரு நாமம். வக்த்ர லக்ஷ்மி என்பது அன்னையின் முக லாவண்யத்தைக் குறிப்பது. பரீவாஹம் என்பது ப்ரவாஹம் என்பதான பொருள் தரும் வார்த்தை. அதாவது முக லாவண்யம் பிரவாஹமாக பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இந்த பிரவாஹத்தில் மீன்கள் வேண்டுமே?. நீண்ட கண்களான அம்பிகையின் நேத்ரங்களே மீன லோசனம் (லோசனம் என்றால் கண்கள்). மீனாப' என்பது இங்கே மீன் போன்ற என்று பொருள் தரும். எனவே மீனாக்ஷி என்ற பெயர் நேரடியாக வரவில்லை என்றாலும் "மீனாப லோசனா" என்று சொல்லி மீனாக்ஷி ரூபத்தை லலிதா சஹஸ்ர நாமம் சொல்கிறது.



செளந்தர்ய லஹரியில் 4-5 ஸ்லோகங்களில் அன்னையின் கண்களை வர்ணித்தாலும், 56ஆம் ஸ்லோகத்தில் (இங்கே) அம்பிகை மீனாக்ஷியைப் பற்றி மறைபொருளாகச் சொல்லியிருக்கிறார் பகவத் பாதர். அதாவது, அம்பிகே! அபர்ணா!, காதுகள் வரையில் நீண்டிருக்கும் உனது கண்கள், உன் காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன்கண்களுக்கு வந்து விடுகிறது, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள் என்று சொல்லி அன்னையின் கண்களை மீனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மீன்கள் தனது முட்டைகளை கண்களால் பார்த்தபடியே பொரிக்கச் செய்துவிடுவது போல மீனாக்ஷியின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

காளிதாசன் பண்ணிய சியாமளா தண்டகத்தில் வரும் சியாமளா இந்த மீனாக்ஷி தான். இவளே "மந்திரிணீ, மாதங்கி" என்றெல்லாம் மந்திர சாஸ்த்ரத்தில் போற்றப்படுகிறாள். இவளே ஸங்கீதத்திற்கு அதிதேவதையாகச் சொல்லப்பட்டிருக்கிறாள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை அளிப்பவளாம் அன்னை மீனாக்ஷி. சியாமளா தண்டகத்தில்,


மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி

என்று மரகத நிறத்தில் இருக்கும் மீனாக்ஷி, கதம்ப வனத்தில் வசிப்பவளே!, கல்யாணி என்றெல்லாம் போற்றியிருக்கிறார் மகாகவி காளிதாசன்.

மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில், ஏன் காமகோட்டம் என்று கூறப்படும் காமாக்ஷிக்கோ, இல்லை சாரதைக்கோ கூட இல்லாத ஒரு சிறப்பு இந்த 8 வித ஆராதனைகள். அவையாவன:

திருவனந்தல் - பள்ளியறையில் - மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் - பாலா
6-8 நாழிகை வரையில் - புவனேஸ்வரி
12 - 15 நாழிகை வரையில் - கெளரி
மத்யானத்தில் - சியாமளா
சாயரக்ஷையில் - மாதங்கி
அர்த்த ஜாமத்தில் - பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் - ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று அலங்காரங்கள்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது. மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காக்ஷி. பள்ளியறை பூஜை சிவ-சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

Thursday, April 2, 2009

மீனாக்ஷி கோவில்.. (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு-2)

நேற்றைய இந்த பதிவின் தொடர்ச்சியே இது. இப்பதிவில் உள்ள படங்கள் எல்லாம் கூகிளார் உபயம். எடுத்து வலையேற்றிய அந்த நல்லுள்ளங்களுக்கு முதலில் நன்றி.

தமிழகத்துக் கோவில்களிலேயே கோபுரத்தில் அதிக அளவு பொம்மைகள் இருப்பது மதுரைக் கோவிலில்தான் என்பர். மதுரைக் கோவிலில் தெற்கு கோபுரம் தான் உயரம் அதிகம், 192 அடி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. கோபுரத்தில் இருக்கும் பொம்மைகளில் சில கீழே!

மதுரைக் கோவிலுக்கு அதிக அளவு செய்தவர்கள்/ உபயதாரர்கள் என்றால் அது நகரத்தாரே. பல்வேறு காலங்களிலும் பலர் புதுப்பித்தல், மற்றும் பல உபயங்களைச் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து வருவது டி.வி.எஸ் குடும்பத்தார். பலவிதத்தில் கும்பாபிஷேகம் உட்பட பல உற்சவங்களிலும் இவர்களது பங்களிப்பு உள்ளது. நானறிந்த வகையில் கடந்த 3 கும்பாபிஷேகத்திலும் இவர்கள் பெருமளவு பங்களித்துள்ளனர். தனி நபர்கள் என்று பார்த்தால் தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவர் கரு. முத்துகண்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மதுரை சார்ந்த பெரியவர்கள் முதலில் மனதில் தோன்றுவர். 1962ஆம் வருட கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்தியவர் பி.டி.ராஜன் அவர்கள். அவர் திராவிட பாராம்பர்யத்தில் இருந்தாலும், அன்னையின் பிரதம பக்தர் என்றால் மிகையல்ல. மதுரைக் கோவிலின் பாராம்பர்யத்தை, அதன் தனிச் சிறப்பை பலவகைகளில் காத்து நமக்கு அளித்திருக்கிறார் என்று என் தந்தை கூறக் கேட்டிருக்கிறேன்.

மதுரைகோவிலில் அம்மன் சன்னதி முன்பு மேலே விதானத்தில் வரையப் பட்டிருக்கும் பலவண்ணப் படங்களில் சில கீழே!


இக்கோவிலில் பல மண்டபங்கள் பிராகாரங்களில், அதில் முதன்மையானது ஆயிரங்கால் மண்டபம், இதில் சப்தஸ்வர ஓசை தரும் ஏழு தூண்கள் உள்ளன. இதே விதமான தூண்கள் வடக்கு கோபுர வாயிலில் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் தூண்கள்பலவித வேலைப்பாடுகளுடன் பிரமிக்க வைப்பவை. இது தவிர, கிளிக்கட்டு மண்டபம், அஷ்டசித்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், ஞானசம்பந்தர் மண்டபம், திருமலை நாயக்க மண்டபம், திருப்புகழ் மண்டபம், கல்யாண மண்டபம், வசந்தராய மண்டபம் போன்றவை உள்ளது.

மேலே இருப்பது ஆயிரங்கால் மண்டபம், கீழே இருப்பது ஊஞ்சல் மண்டபம். ப்ரதி வெள்ளி மாலையில் அன்னை இங்கே ஊஞ்சலாடுவாள்.

நகரா மண்டபம் என்பது கோவிலுக்கு வெளியே வாயிலருகில் இருப்பது, நாயக்கர் காலத்தில் இங்கிருந்து நகரா, மற்றும் ஷனாய் வாத்தியம் இசைத்தகாரணத்தால் இந்தப் பெயர். கம்பத்தடி மண்டபம் என்பது சுவாமி சன்னதிக்கு எதிரில் துவஜஸ்தம்பம் இருக்கும் மண்டபம். இதில்தான் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி கல்யாணச் சிற்பம் உள்ளது. மதுரைக்காரர்கள் அடிக்கும் கல்யாணப் பத்திரிகையில் இந்தப் படத்திற்கு ஓரிடம் (முன் பக்கத்திலோ, பின் பக்கத்திலோ) கண்டிப்பாக இருக்கும். இதே மண்டபத்தில் புலிக்காலுடைய கணபதி சிலை உள்ளது.



இந்த கம்பத்தடி மண்டபத்திற்கு எதிரில்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த நடனப் போட்டிச் சிற்பம் உள்ளது. இறைவன் நடனமாடும் போது கீழே விழுந்த தனது காதணியை தனது காலால் எடுத்து அண்வதாகவும், இறைவி இந்த செயலை செய்ய நாணப்பட்டு தலை தாழ்த்தியவாறும் இருப்பதாக சிலைகள் உள்ளன. இதனருகில் அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர் சிலைகளும் உள்ளன. ஸ்வாமி சன்னதி நுழைவாயிலில் காய்த்ரி தேவிக்கு மிக அருமையான சிற்பம் உள்ளது.

தமிழகத்தில் வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக இங்குதான் வருடத்தின் 12 மாதங்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.ஆடி மாதம் மினாட்சி வயதுக்கு வந்த விழா, ஆவணிமாதம் ஆவணி மூல உத்சவம், (இந்த விழாவில்தான் இறைவன் புட்டுக்கு மண்சுமந்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்) புரட்டாசி நவராத்ரி என்று நீளும். இதனையே தனியாகப் பதிவிடலாம். இந்தகோவில்லின் இன்னுமொரு சிறப்பென்னவென்றால், ஸ்ரீவைஷ்ணவர்களும் இங்கு அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்துவிட்டுச் செல்வதுதான். மீனாக்ஷி அழகரது சகோதரி என்பதால் அவளை மட்டும் தரிசித்துச் செல்வார்கள்.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் கலெக்டராக இருந்தவர் எல்லீஸ் என்பவர். அவர் ஒரு நாள் இரவு உறக்கத்தில் இருந்த போது யாரோ ஒரு சிறுமி வந்து அவரை எழுப்பி அவரது மாளிகையை விட்டு வெளியே இழுத்து வந்திருக்கிறாள். அவ்வாறு வந்தபின் பார்த்தால் மாளிகையில் தீ பற்றீ எறிந்தது தெரிந்ததாம். அந்த நேரத்தில் அச்சிறுமி மாயமாக மறைந்துவிட்டாளாம். தன்னைக் காப்பாற்றியது மீனாக்ஷிதான் என்றுணர்ந்த எல்லீஸ் அவர்கள், கோவிலுக்கு பலவிதமான நகைகள், மற்றும் தங்கத்தில் குதிரைச் சேணம் போன்றவை தந்திருக்கிறார். அவை இன்னுமும் கோவிலில் இருக்கிறது. அம்மன் குதிரை வாகனத்தில் பவனி வரும்போது இந்த தங்கத்தாலான சேணம் பூட்டப்பட்டிருப்பதை நான் தரிசித்திருக்கிறேன். இந்த கலெக்டர் பெயரிலேயே அமைந்தது தான் தற்போதுள்ள எல்லீஸ் நகர்.

சம்பந்தரால் திருநீற்றுப் பதிகம் பாடப்பட்டது இந்த தலத்திலேயே!. இன்றும் இக்கோவிலுக்குச் செல்கையில் மடப்பள்ளி சாம்பலை நெற்றியில் தரித்துச் செல்வது வழக்கம். முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி வரும் வழியில் ஓர் இடத்தில் இந்த சாம்பல் மக்களுக்காக இடப்பட்டு இருக்கும். பிறந்த குழந்தைகளை முதலில் அன்னையின் சன்னதியில் விட்டு எடுப்பதும், அக்குழந்தைக்கு மடப்பள்ளி சாம்பலை நெற்றியில் தரிக்கச் செய்து வயிற்று உபாதை போன்றவற்றிலிருந்து குழந்தையைக் காக்க வேண்டுவது வழக்கம். வடக்கு கோபுரத்து மொட்டை கோபுரத்தானுக்கு அர்ச்சனை செய்து குழந்தைகளைக் காத்து-கருப்பு அண்டாது காக்க வேண்டுவர்.

இங்குள்ள முக்குறுணி வினாயகர் திருமலை நாயக்கர் காலத்தில் பிரதிஷ்ட்டை ஆகியது என்பர். நாயக்கர் அன்னைக்கு தெப்போத்ஸ்வம் செய்து வைப்பதற்காக தற்போதைய தெப்பக்குளத்தைத் தோண்டிய போது வினாயகரை நினைவுபடுத்தும் பெரிய கல் ஒன்று பூமிக்கு அடியிலிருந்து கிடைத்ததாகவும், அதில் சிலை வடித்து பிரதிஷ்ட்டை செய்தவரே தற்போது இருக்கும் முக்குறுணி வினாயகர். ஒரு குறுணி என்பது 32 படிகள். வினாயகர் சதுர்த்தி தினத்தில் மூன்று குறுணி அரிசி மாவில் கொழுக்கட்டை செய்து இவருக்கு அளித்து வேண்டுவர். ஆகவே இவருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

என்று கூறி திரு ஆலவாய் ஈசனை வணங்கி நாளைய பதிவில் சந்திப்போம்.

கோவிலைப் பற்றிய செய்திகளை இன்னும் தொடரலாம் என்றாலும், நாளை முடிந்தால் அன்னையின் சிறப்பினைச் சொல்லும் ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களைப் பார்க்கலாம்.

Wednesday, April 1, 2009

மதுரையிலேயே பெரிய வீடு... (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு -1)


திடீரென இன்று காலையில் குமரனிடமிருந்து ஒரு மின்னஞ்சல், மதுரையம்பதியில் கும்பாபிஷேகச் சிறப்புப் இடுகைகள் வரவேண்டும் என்று. அவர் கேட்டது தினம் ஒரு இடுகையாக ஏப்ரல் 8ஆம் தேதி வரையில். தினம் ஒரு பதிவு எழுத முடியுமெனத் தோன்றவில்லை. ஆனாலும், மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை மதுரையம்பதியில் கொண்டாடாது வேறு எங்கே கொண்டாடுவது?. ஆகவே, முடிந்த அளவு எழுதுவதாகச் சொல்லியிருக்கிறேன்.

இன்று கோவில் பற்றிய சிறு-சிறு செய்தகளைப் பார்க்கலாமா?. [இவை முன்பே எழுதியதுதான், சற்று மாற்றங்களுடன் இங்கே அளித்திருக்கிறேன்]


மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள். ஒன்று மீனாக்ஷி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகெங்கும் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சாக்தர்களுக்கு மீனாக்ஷி கோவில் முக்கிய இடம் வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.

இங்குள்ள மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது, இந்த அன்னை மீனாக்ஷியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாக்ஷி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்து குஞ்சு பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.

சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாக்ஷி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம். இங்கே தல விருக்ஷமே கடம்ப மரந்தான். பல காலங்களுக்கு முந்தைய கடம்ப மரம் ஒன்று இன்றும் துர்கை சன்னதிக்கு முன்னால் தனி பீடத்தில் இருக்கிறது. மரம் பட்டுப் போயிருந்தாலும், காலத்தால் மிகப் பழையது என்பதால் விசேஷமாக, வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தீர்த்தம் பொற்றாமரை குளம், வைகை, மற்றும் கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களால் வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதினத்தின் வழிபாட்டில் உள்ளது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.

மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது. முன்னொரு காலத்தில் இங்குள்ள நடராஜ விக்ரகமும் இடது காலைத் தூக்கி ஆடுவதாகத்தான் இருந்ததாம். ஓர் பாண்டிய மன்னன் ஈசனைத் தொழுகையில், இப்படி இடது பதத்தை தூக்கியபடியே இருக்கும் ஈசனுக்கு கால் வலிக்குமே என்று வருந்தி, ஈசனைக் கால் மாற்றி ஆடிட வேண்டினானாம். அவ்வரசனது வேண்டுகோளை ஏற்ற சுந்தரேஸ்வரர், தமது காலை மாற்றி ஆடிக் காண்பித்தாராம். இது மதுரைக்கே ஆன சிறப்பு தரிசனம், சிதம்பரம் உட்பட வேறெங்கும் காணக் கிடைக்காது.