Monday, March 24, 2008

காரைக்கால் அம்மையார் ஜெயந்தி


ஒருநாள் கைலாயத்தில் அன்னையும் அப்பனும் ரிலாக்ஸா இருக்கும் போது அவரகளைக் காண பேய் உருவில் தலைகிழாக ஒருவர் நடந்து வருவதைக் காண்கிறார் பார்வதி. உடனே பார்வதி தேவி, "சுவாமி, இந்த கோலத்தில் வரும் இந்த பெண் யார்?" என்று கேட்கிறார். அதற்கு பதிலாக ஈசன், 'பார்வதி, வருபவள் உனக்கும் எனக்கும் அம்மை' என்கிறார். வந்தவர், இறைவன் தன்னை 'அம்மையே' என்று அழைத்ததைக் கேட்டவுடன் ஆனந்த கண்ணீர் பெருக இறைவனை தரிசித்தார்.


'அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று ஈசன் வலிந்து கேட்க, 'பிறவா வரம் தாரீர் பெம்மானே, மீறி பிறந்தாலும் உம்மை மறவா வரம் தாரீர்' என்று கேட்டு, இறைவனையே மெய்சிலிர்க்க வைத்த பெருமைக்குரியவர். காரைக்கால் அம்மையார் என்று நாம் அழைக்கும் புனிதவதியார். மூன்றாம்/நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், அறுபத்து மூவரில் வெகு சிலரேயான பெண் நாயன்மார்களில் ஒருவர். இவரது ஜெயந்தி தினம் இன்று.


சோழவள நாட்டில் உள்ள கடற்கரை துறைமுகமாகிய காரைக்காலில் வியாபர குடும்பத்தவரான தனதத்தன் என்பவரது செல்வத் திருமகளாய் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் புனிதவதி. சிறுவயது முதலே ஈசனிடம் மாறாத அன்பு பூண்டு வந்தவர். இவருக்கு பரமதத்தன் என்னும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த வியாபாரி ஒருவருடன் திருமணம் செய்வித்தனர் பெற்றோர். ஈசனிடம் மாறாத அன்பு கொண்டதால் இத்தம்பதிகளைத் தேடி சிவனடியார்கள் வருவர். அவர்களுக்கு புனிதவதியார் தலைவாழையில் உணவு படைத்து மகழ்வதுண்டு.
இவ்வாறாக ஒரு நாள் கணவன் பரமதத்தன் தனது வியாபார தலத்தில் தன் நண்பர் மாங்கனிகள் இரண்டினை தனது பணியாள் மூலமாக இல்லத்திற்கு அனுப்புகிறார். அதனைப் பெற்றுக் கொண்ட புனிதவதியார் இரண்டு கனிகளில் ஒன்றினை அன்று இல்லத்திற்கு உணவுக்கு வந்த சிவனடியாருக்கு அளித்து, இன்னொன்றை கண்வனுக்காக வைத்திருக்கிறார்.பரமதத்தனும் வந்து உணவருந்துகையில் அவருக்கு மீதமிருந்த மாங்கனியும் அளிக்கப்பட்டது. அந்த மாங்கனியின் சுவையில் ஆழ்ந்த பரமதத்தன் இன்னொரு மாங்கனியினையும் உண்பதற்குக் கேட்கிறார். புனிதவதியாருக்கு என்ன செய்வதென விளங்கவில்லை, உள்ளே சென்று மனதார இறைவனிடம் இறைஞ்ச, ஈசன் அவர் கையில் இன்னொரு பழத்தினை அளிக்கிறார். அந்த கனியினைக் கொண்டுவந்து கணவனுக்கு அளிக்கிறார். அதனைச் சுவைத்த பரமதத்தன், 'நான் கொடுத்து அனுப்பிய கனிகள் இரண்டும் ஒரே மாதிரியானதுதான் ஆனால் நீ அளித்த இரண்டாவது கனி தேவாமிருதம் போல் சுவையுடன் இருக்கிறதே என்ன காரணம்?' என்று கேட்க, புனிதவதியார் மறைக்காது நடந்ததைக் கூறுகிறார்.சிவனடியாருக்கு ஒரு பழத்தை தந்ததையும், இறையருளால் இன்னொரு பழம் வந்ததையும் நம்பாத பரமதத்தன், "இரண்டாவது கனி கொடுத்த அதே இறைவனிடம் மற்றொரு மாங்கனியினை வாங்கிவா பார்க்கலாம் என்க, கணவனே தன்னை நம்பவில்லையே என்று எண்ணிய புனிதவதியார், மனமுருகி வேண்ட, ஈசன் அவர் கையில் இன்னொரு மாங்கனியினை அருளச் செய்கிறார். இந்த கனியினையும் கணவனிடம் அளிக்கிறார் புனிதவதி. அதை பரமதத்தன் உண்ண முற்படுகையில் அது தானாகவே மறைந்துவிடுகிறது. அதிசயித்த பரமதத்தன், புனிதவதி தன் மனையாள் என்பதையும் மறந்து கையெடுத்து கும்பிட்டு தெய்வமாகவே தொழுதான். அவரை மனையாளாக நெருங்க மறுத்து விலகினான்.

இவ்வாறான காலத்தில் வாணிபத்தின் பொருட்டு கடல் பிரயாணம் செய்த பரமதத்தன் பாண்டிய நாட்டில் வேறு ஒரு வணிகரின் மகளை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆனான். அக்குழந்தைக்கு தனது முதல் மனைவி பெயரான புனிதவதி என்றே பெயரிட்டு வளர்த்து வருகிறான். இதனை அறிந்த புனிதவதியார் கணவனை பார்க்க பாண்டிய நாடு வந்தார். பரமதத்தன் தன் இரண்டாம் மனைவி, மகளுடன் புனிதவதியாரைக் கண்டு காலில் விழுந்து வணங்குகிறான். கணவனுக்குரிய தனது உடல் இப்போது அவனுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்த புனிதவதியார் இறைவனை வணங்கி பேய் வடிவம் பெறுகிறார். அந்த வடிவத்துடன் தலைகிழாக கையிலைக்கு நடந்து சென்று பரமசிவன் பார்வதி தரிசனம் பெறுகிறார். இறுதியில் தொண்டை நாட்டில், திருவாலங்காட்டில் முக்தி பெற்றார் என்கிறது திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் இவரைப்பற்றிச் சொல்லும் போது பின்வறுமாறு சொல்கிறார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்

அன்னை காரைக்காலில் பிறந்தமையால் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படுகிறார். இவர் நால்வருக்கும் மூத்தவர். இவர் திருவாலங்காட்டு ஈசன் மேல் இருபது திருப்பதிகங்கள் பாடியுள்ளார். அவை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிங்கள் என்றழைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அற்புத திருவந்தாதியும், இரட்டை மணிமாலை போன்றதும் இவர் எழுதியதே.

கீழே இருப்பது காரைகாலம்மை அருளிய திருவந்தாதியிலிருந்து சில பாடல்களும் அவற்றிற்கு எனக்குத் தெரிந்த பொருளும். இந்த பதிவினை படிப்பவர்கள் நான் கூறியுள்ள பொருளில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுகிறேன்.

பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.


பொருள் : பிரானே! என்று தன்னை எல்லாநாட்களிலும் எப்போதும் தொழுபவரது இடர்களை பார்த்துக் கொண்டிராது களைபவன். வண்டுகள் சூழும் கொன்றை மலர்களை, செம்பொன் போன்ற செஞ்சடையில் அணிந்த அந்தணன்.

இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே.


பொருள் : தலையில் உள்ள ஜடாமுடியில் கங்கை என்பவளை கொண்டு, கனிவாக மலைமகளையும் அருகிலிருத்தி, முப்புரங்களையும் ஒரே கணையால் எரித்த சங்கரனே.

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.

பொருள் : நீண்ட சடையுடைய சங்கரனை, அந்த சடையில் சீற்றமுள்ள நாகத்தைச் சூடியுள்ள புண்ணியனை நம்மை எப்போதும் காக்கும் ஈசனை எப்போது மனதில் நினை.

Wednesday, March 19, 2008

குருவிடம் சில கேள்விகள் - 2கேள்வி : குருவை அடைவதிலும், ஆன்மீக வாழ்வை நடத்துவதிலும் விருப்பமுள்ளவன் குருவை அடைவதற்கு முன்பு ஆன்மீக சாதனை செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?.


பதில் : மனதால் இறைவனை பூஜிக்கலாம், ஏதேனும் மந்திரங்கள்/திருமுறைகள் தெரிந்தால் அதனை ஜபிக்கலாம். மனதால் ஈஸ்வரனை பூஜிக்க நியமங்களில்லை, எனவே சிவ மானஸ பூஜை போன்றவற்றை செய்யலாம். செய்யும் எல்லா செயல்களின் பலன்களையும் இறைவனுக்கு அர்பணித்து இறைபக்தியை வளர்ப்பது நல்லது. விவேகம் மூலமாக தீவிரமான வைராக்கியத்தை பெற வேண்டும். சிரத்தையுடன் இறைவனைப் பிரார்த்தித்தால் ஸத்குருவை அடையும்படி செய்வான்.


கேள்வி : லெளகீக வாழ்வில் ஈடுபட்டுள்ளவனுக்கு குருவின் உபதேசம் தேவையா?


பதில் : வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் எவ்வளவு தேவையோ அது போல லெளகீகத்தில் இருப்பவர்களுக்கு குரு அவசியம். லெளகீக வாழ்வில் இருப்பவன் அவன் எதிர்பார்க்கும் அளவிற்கு இன்பம் பெருகிறானா?, இல்லையே!. அவன் எதிர்பார்க்கும் அளவிலும் அதற்கு மேலுமாக ஒருவன் இன்பம், அமைதி போன்றவறை அடைய ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா?. தத்துவத்தை அறிந்தவரின் ஆசி மிக பலமுள்ளது. ஆகையால் எப்படி வாழ்ந்தாலும் ஒரு மஹானின் அருளும் உபதேசமும் பெறுவது நல்லது.


கேள்வி : தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் குருவிடம் சொல்வதில் மக்களுக்கு தயக்கம் இருக்கிறது. இதனால், சீடன் தன் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் குருவிடம் கூறுவதில்லை. இது சரியா?, இவ்வாறு இருப்பதால் எவ்விதமான பலன் அடைவான்.


பதில்: ஒரு வைத்தியனிடம் செல்லும்போது தனக்கு வந்திருக்கும் வியாதியினை மறைத்தல் முட்டாள் தனம் அல்லவா?. அது போலவே சீடன் குருவிடன் செல்லும் சமயத்தில் தனது கஷ்டங்களை மனம் விட்டு கூறுதல் வேண்டும். சரணாகதி பண்ணும் சீடன் தனது சுக-துக்கங்களை குருவிடம் சமர்பித்தல் என்பதே இது. சரி, சீடன் அவ்வாறு செய்யவில்லை என்றாலும், குரு தனது தபோ பலத்தாலும், மெய்யுணர்வாலும் சீடனுக்கு உபதேசிக்கும் எதுவும் அவனது கஷ்டங்களில் இருந்து சமனப்படுத்திடும். உத்தம சீடன் குருவின் ஆக்ஞையின்படி நடப்பானே தவிர, அக்ஞையினை ஆராயவோ, அல்லது தன்னால் இயலுமா என்றெல்லாம் சிந்திக்காது செயலில் இறங்கிடுவான். இதற்கு ஹஸ்தாமலகர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறாக குருவின் சொல்படி நடக்கிறான் என்பதால் அவனுக்கு சொந்த புத்தி இல்லை என்று அர்த்தமல்ல, தன்னைக் காட்டிலும் உத்தம சக்தியுடைய குருவிடம், சரணாகதி பண்ணியதாகத்தான் பொருள்.கேள்வி : குருவின் அருளிருந்த்தால் மஹாபாவியும் முன்னேற முடியுமா?.


பதில் : இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் கிடைத்தால் எப்படிப்பட்டவனும் முன்னேறலாம். ஆனால் குருவின் அருளால் மட்டுமே முன்னேறலாம் என்று இல்லாமல் தனது முயற்சியும் இருக்க வேண்டும்.


கேள்வி : ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் பகவானின் அருளைப் பெருகிறான் என்றால் அருளூம் புண்ணியத்தால் வாங்கப்படும் பொருள் போல ஆகிவிடுகிறதே?.


பதில் : ஒரு தீபத்தின் ஒளி சுற்றியுள்ள இடங்களில் விழுகிறது. ஒருவன் அந்த ஒளியினை பயன்படுத்தி புத்தகங்களைப் படித்துக் கொள்ளலாம். மற்றொருவன் அதில் கவனம் செலுத்தாமல் தூங்கி காலம் கழிக்கலாம். அந்த தீபத்தைப் போலவே குரு எப்போதும், எல்லோருக்கும் அருள்புரிந்து வருகிறார். அவனவன் மனநிலையைப் பொறுத்துப் பயனடைவான். குளத்திற்கு பெரிய குடம் கொண்டு சென்றால் அது முழுவதுமாக நிறைய நீர் எடுத்து வர இயலும், ஆனால் கொண்டு சென்றது சிறிய பாத்திரமாக இருந்தால் நீரும் குறைவாகவே எடுத்து வர இயலுமல்லவா?. முற்பிறவியில் நல்லது செய்திருந்தால் மஹான்/குருவின் ஸஹவாசம் கிடைக்கும். ஆனால் கிடைத்ததை உபயோகப்படுத்திக் கொள்ள தெரியவேண்டும். இன்னொருவனுக்கு குருவின் தொடர்ச்சியான ஸஹவாசம் கிடைக்கவில்லை என்றாலும், சிறிதே காலம் ஏற்பட்ட தொடர்பினைப் பயன்படுத்தி, விசேஷ அனுக்கிரஹத்தை பெற்று இருக்கலாம்.


கேள்வி : குருவின் சன்னிதியில் சீடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

பதில் : குருவிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்யவும் அவரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மனதில் ஏதெனும் சந்தேகம் எற்பட்டிருந்தால் குரு வேறு காரியங்களில் ஈடுபடாதிருக்கும் நேரத்தில் அவரிடம் கேட்கலாம். குருவிடம் பாடம் கற்றுக் கொள்வது நமது பாக்கியம் என்று கருதி, பாடத்தில் சிரத்தை வைத்துக் கேட்க வேண்டும். அவர் தரும் உபதேசங்களை மறக்காமல் மனதிருந்த்தி வாழ்க்கையினை அந்த உபதேசத்தின்படி நடக்க வேண்டும்.


Thursday, March 6, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 3

சிவராத்ரி கடைசி கால / ஜாம பூஜை என்பது பொதுவாக சிவ-சக்தி ஐக்கிய வழிபாடாக கொள்வது வழக்கம். சிவம் என்றாலே ஆனந்தம் என்பது பொருள். அன்னையும் சேர்ந்த ஐக்கிய ஆனந்த ஸ்வரூபத்தை எப்படி நமது முன்னோர் வழிபட்டனர் என்பதே இந்த பதிவு. சிவ-சக்தி இணைந்த அந்த ஆனந்தத்தை அதிவீரராம பாண்டியர் எப்படி சொல்கிறார் என்றால்,'ஆரா அமுதம் உண்டவர் போல் அனந்தானந்தத் தகம்நெகிழ, ஆரா இன்பம் அறிவித்தாய்; அறியேன் இதற்கோர் வரலாறே' என்கிறார். சிவ-சக்தி ஐக்கியத்தைப் பற்றி கரிவலநல்லூர் அந்தாதியில் பாடும் போது பின்வருமாறு சொல்கிறார்.

உரகா பரணத் திருமார்பும்
உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும், புரிசடையும்,
செய்ய வாயும், கறைமிடறும்
வரதா பயமும், மழுமானும்,
வயங்கு கரமும், மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக்
காட்சி கொடுத்து நின்றானே.

ஸ்ரீவைஷ்ணவம் எப்போதும் பிராட்டி-பெருமாள் இணைத்தே பேசுவதைக் கண்டிருக்கலாம். அதுபோலவே சைவத்தில் உமா-மகேஸ்வரத் திருக்கோலம் முக்திக்கு முக்கியம் என்பார்கள். ஆன்மாக்களை அறியாமையிலிருந்து நீக்கி முக்தியின் பக்கம் இழுப்பதும் சக்தியோடு கூடிய சிவமே. இந்தக் கருத்தினை,

அருளது சக்தியாகும் அரன்றனக்கு;
அருளையன்றி தெருள் சிவமில்லை;
அந்தச்சிவமின்றிச் சத்தியில்லை.

என்று கூறியிருக்கிறார்கள். இதனை ஆதிசங்கரர் சிவானந்த லஹரியினைப் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.

கலாப்யாம் சூடாலங்க்ருத சசிகலாப்யாம் நிஜதப:
பலாப்யாம் பக்தேக்ஷு ப்ரகடித பலாப்யாம் பவது மே
சிவாப்யாம் அஸ்தோக த்ரிபுவன சிவாப்யாம் ஹ்ருதிபுனர்
பவாப்யாம் ஆனந்த ஸ்புர தனுபவாப்யாம் நதிரியம்.

சொல்லும் பொருளும் போல, பிரிக்க முடியாத இணைந்த கோலத்தில் விளங்கும் மாதொரு பாகன் என்ற அர்த்தநாரிஸ்வர வடிவத்தினை வணங்குகிறார். இந்த ஸ்லோகத்தில் கலாப்யாம், பலாப்யாம், சிவாப்யாம், பவாப்யாம் என்ற சொற்கள் ஒவ்வொன்றும் இரண்டு முறை எடுத்தாளப்பட்டிருக்கிறது. அந்த சொற்கள் ஈசன் - இறைவி ஆகிய இருவருக்கும் பொருத்தமான பொருளினையே தருகிறது.

இருவரும் கலைகளின் வடிவானவர்கள் என்பதை கலாப்யாம் என்கிறார். 'சதுசஷ்டி கலாமயி' என்று அன்னையின் சஹஸ்ர நாமமும், ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவன் என்று தேவாரம் சொல்வதும் இதைத்தான். அம்மை-அப்பன் இருவரும் பிறைச் சந்திரனை சூடியவர்கள், இதனையே சசிகலாப்யாம் என்கிறார். இதுவே 'சாருசந்திர கலாதரா' என்று அன்னைக்கான நாமம். அப்பனை பிறைசூடிப் பெருமானே என்றும், தூவெண் மதிசூடி என்றெல்லாம் கூறுகின்றது தேவாரம். பலாப்யாம் என்பதை நிஜதப: பலாப்யாம் என்பதாக படிக்க வேண்டும். அதாவது அம்மை அப்பன் இருவருமே தவத்தின் பலனானவர்கள் என்பதாக அர்த்தம். இதே போல ஆனந்த தனுபவாப்யாம் என்பது அன்னை-ஈசன் ஆகிய இருவரும் ஆத்மானுபவத்தில் களித்திருப்பவர்கள் என்பதாக பொருள் தருகிறது.

இவ்வாறான ஈசனை, சர்வேசனை, உமா மகேசனை உளமாற வணங்கி அவனருளை நாடுவோம். எல்லோருக்கும் ஈசன் அருள் கிட்டட்டும்.

Wednesday, March 5, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 2


குருத்ரோகி என்ற வேடன் தனக்கு கடனாக பணம் கொடுத்தவர்களை ஏமாற்றினான். அவனிடம் ஏமாந்தவர்கள் ஒரு நாள் அவனை பகலெல்லம் சிவன் கோவிலில் அடைத்து வைத்தனர். இரவில் அவன் விடுவிக்கப்பட்டான். விடுபட்ட பின்பு, இரவில் அவன் வேட்டையாட செல்கிறான். அப்போது ஒரு நதியினைக் கடந்து அக்கரையினை அடைந்தான். நான்கு திக்கிலும் சப்தம் கேட்கவே, பயந்து ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அங்கு வந்த மான்களை அடிக்கத் தொடங்கினான். அப்போது மான்கள், 'தாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமது என்றும், சென்றுவிட்டு காலையில் வருவதாகவும், அவ்வாறு வராவிடில் மஹா பாபங்களைச் செய்தவர்கள் செல்லும் நரகத்திற்கு செல்லதாகவும்' கூறிச் சத்யம் செய்துவிட்டு சென்றன. இரவு முழுவது மரத்தில் உறங்காது இருக்க அம்மரத்தின் தழைகளை உருவி உதிர்த்தபடியே கண்விழித்திருந்து, பின்னர் காலையில் கிழே இறங்கினான்.

சத்யம் தவராத மான்களும் காலையில் அங்கு வந்தன, அதைக் கண்ட வேடனுக்கு நற்புத்தி உண்டாயிற்று. 'மான்கள் கூட சத்யத்தை கடைபிடிக்கிறதே?, நாம் ஏன் நல்லவனாக வாழக்க்கூடாது" என்று எண்ணி, 'இனி பிராணிகளைக் கொல்வதில்லை' என்று சத்யம் செய்தான். அப்போது அவன் முன் ஒரு சிவகணம் தோன்றி அவனிடம், 'நீ நேற்று சிவராத்ரி என்று உணராமலேயே 'சிவ சிவ' என்று விளையாட்டாக கூறியவாறு இரவு முழுவதும் வில்வ மரத்தின் மேல் விழித்திருந்து, அதன் தழைகளை கிழே இருந்த சிவலிங்கத்தில் போட்ட காரணத்தால் நீ சிவ சாயுஜ்ய பதவி அடைந்தாய்' என்று கூறி அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றதாம். அவனுடன் இருந்த மான்கள் மிருக சீர்ஷம் என்னும் நக்ஷத்ரமாயிற்று. அறியாமல் செய்த சிவராத்ரிக்கு பலன் இதுவானால், அறிந்து விதிப்படி, இயன்றவரை, பக்தி, பணிவுடன் இந்த விரதத்தை செய்வோர் பெறும் பலனைப் பற்றி எப்படிக் கூறுவது?.

சிவராத்ரியன்று சிவ பஞ்சாக்ஷர மஹா மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்றுக் கொள்ள மிகச்சிறந்த நாளாகும். கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பஞ்சாஷர உபதேசம் பெற்றுக் கொண்டு அதை அனுதினமும் ஜபித்துவர பரமசிவன் அனுக்கிரஹத்தால் நல்ல தெளிவான ஞானம், அறிவு, ஆகியவை உண்டாகும். ஏதாகிலும் சிவாபசாரம் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த்தாலோ அல்லது சிவன் சொத்து நம் குடும்பத்தை சார்ந்திருந்ததால் உண்டாகும் மனக் குழப்பம், புத்தி மந்தம், தடுமாற்றம் போன்றவை விலகிவிடும் என்று சிவ புராணம் கூறுகிறது. நமது பதிவுலக நண்பர்களுக்கு எளிதான பூஜை கிழே!.
சிவ மானச பூஜை என்னும் ஸ்லோகத்தை ஆதி சங்கர பகவத்பாதர் அருளியிருக்கிறார். லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, செல்ல முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க மிகச் சிறந்த ஸ்லோகம் இது.

ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய

மாயாபுரி என்னும் இந்த உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும் நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து, ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

ரத்தை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் சதிவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் சதூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்


கருணைக்கடலே! பசுபதே! நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும், ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும் என் மனத்தாலே ஸங்கல்பித்து அளிக்கிறேன். அன்புடன் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

ப்ரபுவே! உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம், மற்றும் பல காய்கறிகளும், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனத்தால் ஸமர்பிக்கிறேன், அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் சந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதா சைதத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும், வீணை, பேரி, மிருதங்கம்,எக்காளம்முதலிய வாத்ய கோஷங்களுடனும், பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் மனதில் அளிக்கிறேன். ப்ரபோ! என் பூஜைகளைப் பெற்றுக் கொள்வீராக.


ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ தவாராதநம்

தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. உறங்குவதே சமாதி நிலை. காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம், பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்-ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்-வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ

மங்கள ஸ்வரூபராண கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், வாக்காலும், உடலாலும், காதுகளாலும், கண்களாலும், மனத்தாலும், விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக என்ற் தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Tuesday, March 4, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு -1இந்துமத பண்டிகைகளில் நவராத்திரியும், சிவராத்திரியுமே 'ராத்ரி' என்னும் பெயரோடு அழைக்கப்படுகிறது.இதற்குக் காரணம் இந்த இரண்டு பண்டிகைகளும் இரவு நேரத்தில் செய்யப்படும் பூஜையினை கொண்டது என்பதைக் குறிக்கிறது. சிவராத்திரி என்பது, நித்ய சிவராத்ரி, பக்ஷ சிவராத்ரி, மாஸ சிவராத்ரி, யோக சிவராத்ரி, மஹா சிவராத்ரி என்பதாக ஐந்து வகைப்படும். இந்த தினங்களில் பகலில் உபவாசமிருந்து, மாலையில் ஆரம்பித்து இரவு நான்கு ஜாமங்களிலும் பரமேஸ்வரனுக்கு 'ஸ்ரீருத்ர' மஹா மந்த்திரத்தால் பதினோரு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பில்வத்தால் அர்ச்சனை செய்தல் வேண்டும். இவ்வாறு சிவனை ஆராதிப்பவருக்கு அவனருளால் இவ்வுலகில் தேவையானவை எல்லாம் கிட்டுவதுடனன்றி இறந்த பின் கைலாச பதவியும் கிட்டும் என்கிறது லிங்க புராணம்.


மஹா சிவராத்ரி தினமானது சிவபஞ்சாஷர ஜபம் செய்து சித்தி செய்து கொள்ள மிகச் சிறந்த நாளாகும். அறிந்தோ, அறியாமலோ உபவாசம் செய்து, இரவு கண் விழித்து ஜபம், அர்ச்சனை போன்றவற்றை செய்து சிவ புராணம் படித்து/கேட்டு இறையருளை அடையலாம். சிவராத்ரி விரதத்தை யாதொரு பலனை விரும்பாதவரும், ஸ்ரீ வைஷ்ணவரும் கூட அனுஷ்டிக்க வேண்டும் என்று கருட புராணத்தில் மஹாவிஷ்ணு கூறியிருக்கிறார். புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் சிவராத்ரி தினத்திலேயே நடந்ததாக தெரிகிறது.


ஆலஹால விஷமருந்திய சிவபெருமான் மயங்கிய நேரம் சிவராத்ரி நாள். ப்ரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிச் சென்ற போது சிவன் ஜோதி ஸ்வருபனாய் நின்ற சிவனை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி. சிவராத்ரி விரதமிருந்துதான் ப்ரம்மா சரஸ்வதியையும், மஹாவிஷ்ணு லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும் அடைந்தனராம். தேவி விளையாட்டாய் ஈசன் கண்களை மூட, அதன் காரணமாக உலகங்கள் இருண்டு போன போது, ஒளி வேண்டி தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி காலமே. ஒரு மனுவின் காலம் முடிந்து அண்டங்கள் எல்லாம் இருண்ட சமயம் பதினோரு ருத்ரர்களும் அந்த இருள் நீங்க பரமேஸ்வரனை திருவிடை மருதூரில் பூஜித்த காலம் சிவராத்ரி.

இவ்வாறாக சிவராத்ரிக்கு ஏகப்பட்ட மஹிமைகள் உண்டு. ஈசனை வழிபட ருத்ரமும், சமகமும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. அவரவர் தமக்கு தெரிந்த, சிவ பரமான மந்திரங்கள், தேவாரம், திருவாசகம், போன்றவற்றைச் சொல்லலாம், அல்லது 'நம: சிவாய' என்று பக்தியுடன் ஜபித்தாலே போறும்.


சிவராத்ரி மஹிமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையும், பூசலார் மனதாலேயே கோவில் கட்டியது போல ஆதிசங்கரர் மனதாலேயே ஈசனுக்கு பூஜை செய்த (சிவ மானஸ ஸ்துதி) ஸ்லோகமும், நாளைய பதிவில்.