Thursday, June 26, 2008

ஸ்ரீ மாத்வர்கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.

இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.


இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.


மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.

Friday, June 20, 2008

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 3


இந்த மூன்றாம்/இறுதிப் பதிவில் மந்த்ர ரூபமாக, 51 மாத்ருகா அக்ஷரங்களாக இருக்கும் அன்னை நமது உடலில் எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் என்றும் இன்றைய இந்தியாவில் எங்கு இந்த 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன என்றும் பார்க்கலாம்.
சம்ஸ்கிருதத்தில் மாத்ருகா அக்ஷரங்கள் 51. உலகில் இருக்கும் சகல மந்த்ரங்களுக்கும், வேத-வேதாந்த சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றவை இந்த 51 அக்ஷரங்கள். அதனால்தான் இவற்றிற்கு மாத்ருகா அக்ஷரங்கள் என்று பெயரே. இவை எந்த அக்ஷரங்கள் என்பதெல்லாம் சம்ஸ்கிருதம் படித்தால் தெரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்ன 51 பீடங்கள் இந்த 51 அக்ஷரங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றியது என்றும், இதனாலேயே ஆதி பீஜாக்ஷர பீடங்கள் என்றும் வழங்கப்படுவதும் உண்டு.

அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு. இந்த 51 அக்ஷரங்களும் நம் உடலில் ஆறாதாரங்களில் (ஆறு ஆதாரங்கள்) இருக்கின்றன. இவை முறையே, மூலாதாரத்தில் 4, சுவாதிஷ்டானத்தில் 6, மணிபூரகத்தில் 10, அநாகதத்தில் 12, விசுக்தியில் 16, ஆக்ஞையில் 2, நெற்றிக் கண் பகுதியில் சூக்ஷ்மமாக 1, ஆக மொத்தம் 51 பீடங்கள்.

ஆதிசங்கரர் மந்த்ர சாஸ்திரங்களில் உள்ள விஷயங்களை தனது 'பிரபஞ்ச சாரம்' என்னும் நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த நூலின் காப்பு செய்யுளில் பின்வருமாறு கூறியுள்ளார். "அகர முதலான உயிரெழுத்துக்களும், 'க' வர்க்கம், 'ச' வர்க்கம், 'ட' வர்க்கம், 'த' வர்க்கம்,'ப' வர்க்கம்,'ய' வர்க்கம் ஆகிய ஏழு எழுத்து வர்க்கங்களையும் தனது கை, வாய், பாதம், இடை, இதயம் ஆகிய அவயவங்களாக கொண்டு உலகனைத்துக்கும் ஈஸ்வரியாக உள்ள அம்பிகை நமக்கு மனத்தூய்மை அளிக்கட்டும்" என்கிறார். மஹாகவி காளிதாசனும் அம்பிகையை கூறும் போது 'அக்ஷர சுந்தரி' என்றே வர்ணித்திருக்கிறாராம். அருணகிரிநாதர் இந்த 51 அக்ஷர மகிமை உணர்ந்தே கந்தரனுபூதியை 51 பாடல்களாக எழுதியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜப-தபங்கள், வழிபாடுகள் ஆரம்பிக்கும்முன் சில நியாஸங்கள் உண்டு. அதில் முக்கியமானது மாத்ருகா நியாஸம், இது ஜபம் எடுத்துக் கொள்ளும் சமயம் குருவானவர் த்ரிபுர-ஸித்தாந்த தத்துவங்களை சுருக்கமாமச் சொல்லி, பின்னர் மாத்ருகா நியாஸம் செய்வித்தபின் மந்த்ரம் உபதேசிக்கப்படும்.

மாத்ருகா நியாஸம் என்பது 51 அக்ஷரங்களையும் தனது உடலின் பல பாகங்களிலும் ஆவிர்பவித்துக் கொள்வது. இதன் காரணமாக அட்சர ரூபமாக
உள்ள அம்பிகையின் வடிவமாகவே வழிபடுபவரும் ஆகிவிடுகிறார். மாத்ருகா நியாஸம் இரு விதமாக செய்ய சொல்கிறது. பஹிர்-மாத்ருகா, அதாவது வெளியில் நம் அங்கங்களைத் தொட்டும், அந்தர் மாத்ருகா என்பதில் உடலுக்குள் இருக்கும் ஆதார சக்ரங்களை மனதால் நினைத்து அதன் இதழ்களிலும் நியாஸம் செய்வது.

மாத்ருகா நியாஸத்தின் தியான ஸ்லோகம் அன்னையை பின்வருமாறு வர்ணிக்கிறது. ஐம்பது அக்ஷரங்களையும் முகமாகவும், கைகால்களாகவும், வயிறு, மார்பு போன்ற பாகங்களாகவும் கொண்டு விளங்குபவளும், சந்திரன் போலும் மல்லிகை போலும் வெண்மை நிறம் கொண்டவளும், அக்ஷ-மாலை, அமிருத-கலசம், புஸ்தகம், வரமுத்திரை ஆகியவற்றை கரங்களில் கொண்டவளும், முக்கண்ணுடையவளும், நிர்மல வடிவும், தாமரையில் வீற்றிருப்பவளுமான பாரதீ தேவியை நமஸ்கரிக்கிறேன்.

இவ்வாறாக சக்தி பீடங்கள் என்பவை இன்றைய பாரதம்-நேபாளம் முழுவதிலும் மட்டுமல்ல, நமது உடலிலும் அன்னை வசிக்கிறாள். அவளை நம்முள்ளேயே காண முற்படவேண்டும். சக்தி பீட கோவில்களிலாகட்டும் அல்லது நமக்குள்ளே இருக்கும் தேவியாகட்டும், அவளருளன்றி உணர முடியாது. அவளை உணரவும் அவளையே இறைஞ்சுவோம்.

பின்குறிப்பு-1: இந்த சிறு தொடரை ஆரம்பித்தவுடன் , சில நண்பர்கள் ஒவ்வொரு சக்தி பீடங்கள் பற்றியும் எழுதுவேன் என்று நினத்தனர். நான் இந்த மூன்று இடுகைகளைத் தொடராக எழுத எனக்கு நேர்ந்த ஒரு அனுபவமே காரணம். எனது அனுபவத்தை பற்றி விஸ்தரிக்க வேண்டாமென நினைக்கிறேன். மாத்ருகா தேவி தான் எனக்கு இந்த பதிவினை எழுத ஊக்கம் அளித்தவள். எழுத நினைத்தவுடனேயே இப்படித்தான் ஆரம்பிப்பது, இப்படித்தான் முடிப்பதென்று முடிவாகிவிட்டது. இந்த மூன்று பதிவுகளில் மிக குறைந்த நேரத்தில் எழுதியதும், மனத்தில் ஒருவிதமான முழுமையும், த்ருப்தியும் தந்தது இந்த கடைசி இடுகையே. வாக்தேவியை மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன்.
------------------------------------------------------------------------------------
பல புத்தகங்கள் இந்த பீடங்கள் பற்றி பலவாறு கூறியிருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் சில பீடங்களுக்கான இடங்களை மாற்றியும் சொல்லி இருக்கிறது. சோம வேத சர்மா என்னும் சிரோன்மணி இந்த பீடங்களுக்கு எல்லாம் விஜயம் செய்து எழுதி, அது விகடன் பிரசுரத்தில் தனிப் புத்தகமாகவும் வந்திருக்கிறது. மேற்கொண்டு பீடங்கள் பற்றியும், அவை இருக்கும் க்ஷேத்திரங்கள் பற்றியும் அறிய விரும்புபவர்கள் அந்த புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன். இருப்பினும் இது பற்றி பீட நிர்ண்யம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதனை ஆதாரமாக கொண்டு கிழே இடங்களை பட்டியல் இட்டிருக்கிறேன் இவற்றுக்கும் சோம-வேத-சர்மா அவர்கள் புத்தகத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 9 இடங்களை சக்தி பீடங்களாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த பீடங்கள் எல்லாம் நாம் அறிந்த மிகப் பழக்கமான தலங்கள் தான். அவை, காஞ்சி காமாஷி, மதுரை மீனாஷி, திருவாரூர் கமலாம்பிகா, கூத்தனூர் சரஸ்வதி, திருக்கடவூர் அபிராமி, கன்யாக்குமாரி குமரி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, சங்கரன் கோவில் கோமதி, குற்றாலம் பராசக்தி.

கேரளத்தில் 3 இடங்கள்: சோட்டாணிக்கரை-பகவதி, ஒலவக்கோடு-ஹேமாம்பிகா. கராங்கனூர்-பகவதி.
கர்னாடகத்தில் 2 இடங்கள்: மைசூர் சாமுண்டி, கொல்லூர் மூகாம்பிகா.
ஆந்திரத்தில் 2 : ஸ்ரீ சைலம் ப்ரமராம்பிகா, காளஹஸ்தி ஞானப் பூங்கோதை
ஒரிசாவில் 2 : ஜாஜ்பூர்-ஸ்தம்பேஸ்வரி, புவனேஸ்வர்-கீர்த்திமதி
மஹாராஷ்டிரத்தில் 5: கோலாப்பூர்-மஹாலக்ஷ்மி, மஹுர்-ரேணுகாதேவி, துளஜாபூர்-பவானி, பஞ்சவடி-ப்ரமரீதேவி, சப்தஸ்ருங்கா-ஜகதாம்பா
குஜராத்தில் 5 இடங்களாவன: அரசூர்/அபூ-அம்பாஜி, துவாரகா-பத்ரகாளி, கனவால்-பாலா, பாவகட்-காளி, சோமநாத்-சந்திரபாகா
மத்ய பிரதேசத்தில் 1 : உஜ்ஜைனி-மங்கள சண்டிகை
அஸாமில் 1 : காமாக்யா-திரிபுர பைரவி

பீகாரில் 3 : தேவகர்-துர்கா, பாடான் - வஜ்ரேஸ்வரி, ஸஹர்ஷா-உக்ரகதாரா

மேற்கு வங்கத்தில் 2 : கல்கத்தா-காளி, மூர்ஷிதாபாத்-காளிகாம்பா
நேபாளத்தில் 2 : குஹ்யேஸ்வரி, ஜனகபூரி-உமா

உத்திரப் பிரதேசத்தில் 9 இடங்கள் இருக்கின்றன, அவை; காசி-விசாலாக்ஷி, ப்ரயாகை-லலிதா, மீர்ஜாபூர் (விந்த்யாசலம்)-விந்த்யாவாசினி/கெளசிகி,
பிருந்தாவனம்-காத்யாயனி, மதுரா-மாதவி, அயோத்யை-அன்னபூரணா, ஹரித்வார்-கங்கை, கேதார்நாத்-மார்க்கதாயினி, பத்ரிநாத்-ஊர்வசி

பஞ்சாப்-ஹரியானாவில் 2 இடங்கள்: குருஷேத்திரம்-விமலா, காங்ரா-வஜ்ரேஸ்வரி

ராஜஸ்தானத்தில் 2 இடங்கள்: புஷ்கரா-காயத்ரி, அம்பர்-விச்வகாமா

காஷ்மீரில் 3 இடங்களாவன: சார்தி-சாரதா, துலாமுலா-க்ஷீரபவானி, வைஷ்ணவி-வைஷ்ணவிதேவி
------------------------------------------------------------------------------------

Wednesday, June 18, 2008

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்....சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

Sunday, June 8, 2008

ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...
கல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.

சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

Monday, June 2, 2008

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 2இந்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான், கதையின் ஒரு பகுதி எல்லோருக்கும் தெரிந்தாலும், அரிதான சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக சொல்ல முயல்கிறேன்.

சிருஷ்டித் தொழிலைச் செய்ய தனக்கு அடுத்தபடியாக பிரும்மா பத்து பிரஜாபதிகளை உருவாக்கினார். இவர்கள் ப்ரும்மாவின் மானச புத்திரர்கள் என்பர். இந்த பிரஜாபதிகளே உலகில் உள்ள புல்-பூண்டு, மக்கள், பிராணி, பக்ஷிகளை உண்டாக்குபவர்கள். இந்த 10 பேரில் ஒருவர்தான் தக்ஷ பிரஜாபதி என்று அழைக்கப்படும் தக்ஷன். தாரணி என்னும் பெண்ணை மணந்த தக்ஷன் உலகில் படைப்புக்காக பல குமாரர்களைப் பெற்றார். ஆனால் நாரதர் இந்த குமாரர்களுக்கு உபதேசம் செய்து, உலக வாழ்வில் விருப்பமில்லாத தவசிகளாக மாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த தக்ஷன் நாரதரை, நிலையற்றுத் திரிந்து கொண்டேயிருக்கவும், கலகப்ரியனாகவும் இருக்க சபித்து விடுகிறார். இதற்கிடையில் தக்ஷனின் இன்னொரு மனைவியான அசக்னி பல பெண்களை பெறுகிறாள். இவர்கள் கன்னிகைகளாகும் சமயத்தில் சந்திரனுக்கு 27 பெண்களையும் (நக்ஷ்த்திரங்கள்), காச்யபர், ஆங்கீரஸர், கிரிசுவா போன்றவர்களுக்கும் மணம் செய்விக்கிறார்.


அப்போது பிரும்மா தக்ஷனை நீண்ட தவம் செய்யப் பணித்து, தவத்தின் பயனாக லோகமாதா அன்னை பராசக்தியே மகளாக, தாக்ஷாயினியாகப் பிறக்கிறார். காலக்கிரமத்தில் கன்னிப் பருவம் அடைந்த தாக்ஷாயினி மனதில் ஈஸ்வரனையே பதியாக வரித்து, அனுதினமும் பூஜித்து, அவரை அடைய பல விரதங்கள் இருந்தாள். அப்போது ஈசன் நீண்டகாலமாக யோக நித்திரையில் இருப்பதால் சிருஷ்டி பாதிப்படைக்கிறது. ப்ரம்மாவும், விஷ்ணுவும் ஈசனை யோகத்திலிருந்து மீளப் ப்ரார்த்திக்க, ஈசனும் கண்விழித்து தாக்ஷாயினியை ஏற்க முடிவு செய்கிறார்.

ஒரு நன்னாளில், சுபயோக, சுபஹோரையில் ப்ரம்மா, விஷ்ணு, மற்றூம் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் தக்ஷனின் கடைக்குட்டியான தாக்ஷாயினிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. பெண்ணை மணமுடித்துக் கொடுத்த தக்ஷன் சில காலம் சென்று, தனது மகளை காணும் ஆவலில் கைலாயம் செல்கிறார். அவர் கையிலை அடையும் முன்பே வாயிலில் இருந்த சிவகணங்கள் அவரை போகவிடாது தடுத்து பலவாறு கேலி செய்தனர். இதனால் மிகுந்த அவமானம் அடைந்த தக்ஷன் மனம் நொந்து, மகளை பார்க்காமலேயே திரும்பிவிடுகிறான். இதன் காரணமாக கையிலை வாசனை மட்டம் தட்ட எண்ணி, வேண்டுமென்றே ஒரு பெரிய வேள்வியை செய்யத் துவங்கி நாராயணனை வேள்விக்கு அதிபதியாக்கி, சிவனை அவமதிக்க முற்படுகிறார். தனது பிறந்த வீடு என்கிற பாசத்தால் ஈசனது சொல்லைக் கேளாமல் பிறந்தகம் சென்று, அங்கு தன் கணவருக்கும் தனக்கும் நேர்ந்த தூஷணையால் மிகுந்த கோபமடைந்து தக்ஷனால் தனக்கு ஏற்பட்ட உடலை துறக்க முடிவு செய்கிறாள்.

தக்ஷனால் யாகத்திற்காக ஏற்பட்ட அக்னியில் திடீரெனப் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். உடலில் இருந்து உயிர் போனாலும் அக்னி அந்த புனித உடலைத் தீண்டவேயில்லை. இதனாலேயே தாக்ஷாயினி சதிதேவி என்ற பெயர் பெறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளை நாரதர் கையிலையில் இருக்கும் ஈஸ்வரனுக்கு சொல்ல, மிகுந்த ரெளத்திரத்துடன் யாகசாலையினை அடைந்த ஈசன் தனது சடையினை வேகமாக தரையில் ஓங்கி அடிக்கிறார். அந்த சடையிலிருந்து வீரபத்ரர் மிக உக்ரத்துடன் தோன்றுகிறார். ஈஸ்வரனது கட்டளைப்படி, தக்ஷனது யாக சாலையினை சின்னாபின்னப்படுத்தி, தக்ஷன் தலையைக் கொய்து வேள்வித் தீயில் எறிந்துவிடுகிறான். அப்போது உயிரற்ற பகவதியின் உடலைக் கண்ட மஹாதேவன் கடும் கோபத்துடன் தாக்ஷயினியின் உடலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு கூத்தாட ஆரம்பித்துவிட்டார். அது சாதாரணக் கூத்தல்ல, ஊழிப் பெரும் கூத்து, அண்டசராசரங்களும் ஆட ஆரம்பித்தது. சூரிய-சந்திரரும், மற்ற தேவர்களும் நிலைதடுமாறினர். ஈரேழு பதினாலு லோகங்களும் ஆடியது. நவக்கிரகங்களும், அஷ்ட திக்பாலகர்களும் அவர்களது திசை மாறினர்.

நிலையின் விபரீதம் உணர்ந்த மஹாவிஷ்ணு ஈசனது உக்ரதாண்டவத்தை நிறுத்த ஒரே வழி சதிதேவியின் உடலை அவரிடமிருந்து பிரிப்பதுதான் என்று முடிவு செய்து தனது சுதர்சன சக்ரத்தை ஏவுகிறார். ஈசனைத் தொடர்ந்த சக்ராயுதம் சதிதேவியின் புனித உடற்பாகங்களை துண்டு-துண்டுகளாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றது. இவ்வாறு வெட்டப்பட்ட அங்கங்களின் துண்டங்கள் நமது புனித பாரத தேசம் மட்டுமல்லாது பூவுலகம் முழுவதும் வீழ்ந்தன. அந்த இடங்களே நாளடைவில் அம்பாளின் சக்தி பீடங்களாகின. இவ்வாறு சதிதேவியின் இதயத்துக்கு மேலுள்ள அங்கங்கள் விழுந்த இடங்கள் வைதீக மார்க்க சக்தி தரும் திருத்தலங்களாகவும், இதயத்துக்கு கீழ்ப்பட்ட அங்கங்கள் வீழ்ந்த இடம் வாம-மார்க்க சக்தி ஷேத்திரங்கங்களாகவும் ஆனதாக புராணங்கள் சொல்கின்றன. மத்ஸய புராணமும், மகாபாரதமும் இத்தகைய இடங்கள் நூற்றியெட்டு என்று அட்டவணை அளித்தாலும், மற்ற புராணங்கள் 51 இடங்களையே சொல்கிறது. ஐப்பத்தொரு பீஜாக்ஷரங்கள் தோன்றிய இடங்களில் அங்கங்கள் விழுந்ததாகவும், அணிகலன்கள், ஆடைகள் விழுந்த இடங்களையெல்லாமும் சேர்த்து 108 என்பதாகவும் கூறப்படுகிறது.

யோகினி ஹ்ருத்ய தந்த்ரம் தாக்ஷாயினி தந்த்ரம், தந்த்ர சூடாமணி முதலிய நூல்களில் சக்தி பீடங்கள் பற்றி கூறப்பட்டிருந்தாலும், இவற்றுள் வேறுபாடுகள் இருக்கின்றது. இவ்வாறாக பல்வேறு நூல்களும் பல இடங்களைச் சொன்னாலும், ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் அகஸ்தியருக்கு சொல்லப்பட்ட நியாஸ விதியில் இருப்பதே சிறந்த ப்ரமாணம் என்பார்கள்.