மனிதர்களாகிய நமக்கு கண்களைக் கொட்டுதல், அதாவது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை கண்களை மூடித் திறப்பது இயல்பு. ஆனால் தேவர்களுக்கு இது போன்ற இயல்பு கிடையாதாம். இந்த மாதிரி இயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாதவள் அம்பிகை. அவள் எப்போதோ ஒரு முறை கண்களை மூடித் திறக்கும் நேரத்திலேயே ப்ரளயமும், மீண்டும் உலகங்களின் ஆக்கமும் நடத்தி அருள்கிறாள் என்பதாகப் பொருள் தருவதே "உந்மேஷ நிமிஷோத்பந்த விபந்த புவனாவளி". உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமேஷம் என்றால் கண்களை மூடுதல், புவனாவளி என்பது வரிசையான பல உலகங்கள். அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து-மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது.இந்த நாமாவளியைத்தான் பூத்தவளே புவனம் பதினான்கையும் என்று அபிராமி அந்தாதியில் பட்டர் கூறுகிறார் போல. இதை ஆதி சங்கரரும் செளந்தர்ய லஹரியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். இதே போன்ற இன்னொரு நாமம் "ஆ ப்ரம்ஹ கீட ஜநநீ" - பிரம்மன் முதலாக பல நுண்ணுயிர்களை பெற்றவள் என்பது பொருள். ஜநநீ என்றால் பெற்றவள் என்று சொல்லலாம். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைப்பவன் பிரம்மா. அந்த பிரம்மாவையும்,கீடம் என்று சொல்லப்படும் நுண்ணுயிர்களையும் படைப்பவள். உலகனைத்தையும் படைக்கும் பிரம்மாவிலிருந்து நுண்ணுயிர்கள் வரையில் எல்லாவற்றையும் படைப்பவள் அன்னை என்று கூறலாம்.
அன்னையின் கண்களைக் குறிப்பிடும் ஒரு நாமம் "மஹாகாமேச நயன குமுத ஆஹ்லாத கெளமுதீ". மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை. கார்த்திகை மாதத்து முழுநிலவுக்குப் பெயர் கெளமுதீ. நிலவு எப்போதுமே குளிர்ச்சி தருவதுதான், இதில் கார்காலமான கார்த்திகையில் அதன் குளிர்ச்சி, முழுமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதை அன்னையின் கண்களுக்கு உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள் வசினி தேவதைகள்.
"தாப த்ரய அக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா" - தாப த்ரயம் என்பது மூன்று விதமான இடர்களைக் குறிக்கும். முன்வினையால் விளையும் துன்பமாகிய 'ஆதியாத்மிகம்', இப்பிறப்பில் பிற உயிர்களால் விளையும் துன்பமாகிய 'ஆதிபெளதிகம்' மற்றும் 'ஆதிதெய்விகம்' எனப்படும் இயற்கைச் சீற்றங்கள் போன்றவை நம்மை வருந்தச் செய்பவை. இந்த மூன்றிலிருந்தும் காக்கும் குளிர் நிலவாம் அம்பிகை. இதத்தான் அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் என்பார். இதே போல 'பிணிக்கு மருந்தே' என்றும் 'அபிராமி என்னும் அருமருந்தே' என்றும் அபிராமி பட்டர் கூறுவதற்கு ஏற்ற நாமம் "ஸர்வ வியாதி ப்ரசமநீ" என்பது. எல்லா வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்தானவளாம் அம்பிகை.
4 comments:
அருமை அண்ணா! ஷ்ரீ ருத்ரத்திலும் கேள்வி பதில் போல் ஒரு இடம் வரும். சிவனுடைய விஷத்தின் கடுமையை தணிக்கவல்ல மருந்து எது?? அம்பிகையே அந்த அருமருந்து! என்று முடியும். (சிவா ருத்ரஸ்ய பேஷஜி!). அதை நினைவு படுத்திவிட்டது இந்தப் பதிவு.
வாங்க தக்குடு.சிவா என்பது அம்பிகைக்கும் உண்டான நாமம்தானே?.
//சிவா என்பது அம்பிகைக்கும் உண்டான நாமம்தானே// அதேதான், சிவா=அம்பிகையே அருமருந்து. சிவா=ஆ சப்தம் வந்ததால் அது ஸ்த்ரீலிங்கம் ஆகி அது அம்பிகையையே குறிக்கும்
//அதேதான், சிவா=அம்பிகையே அருமருந்து. சிவா=ஆ சப்தம் வந்ததால் அது ஸ்த்ரீலிங்கம் ஆகி அது அம்பிகையையே குறிக்கும்// ஏதோ பெரிய விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க தக்குடு...புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...சாட்ல பேசி கேட்டுக்கறேன்.:)
Post a Comment