Saturday, February 13, 2010

சிவானந்த லஹரி...சிவராத்ரி -3


ஜோதி வடிவான ஈசனை நிஷ்களம், சகள நிஷ்களம், சகளம் என்று மூன்று வகையாகச் சொல்கின்றனர். சிவன் என்றாலே சாதாரணமாக நமக்கு மனதில் தோன்றும் உருவம் லிங்க உருவத்தை நிஷ்களம் என்றும், முகத்துடன் கூடிய லிங்கத்தை சகள நிஷ்களம் என்றும், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி போன்ற வடிவங்களை சகளம் என்றும் கூறுகின்றனர். லிங்கங்கள் பலவகையில் காண்கிறோம். அவற்றையும் ஆறு வகையாகப் பிரித்திருக்கின்றனர் நமது ஆன்றோர். அவை, கருங்கற்களால் ஆனதை சைலஜம் என்றும், மாணிக்கம், வைடூர்யம், பவழம், மரகதம் போன்றவற்றால் ஆனவற்றை ரத்னஜம் என்றும், தங்கம், வெள்ளி, ரசம் போன்றவற்றால் ஆனதை லோஹஜம் என்றும், சந்தனம் போன்ற மரங்களில் செதுக்கப்பட்டதை தாருஜம் என்றும், மண்ணால் செய்த லிங்கத்தை ம்ருண்மய லிங்கம் என்றும் மணல், அரிசி, விபூதி, பசுஞ்சாணம், வெண்ணை, மாவு, கூர்ச்சம் வெல்லம் போன்றவற்றில் செய்ததை க்ஷணிகம் என்றும் சொல்கின்றனர்.


இந்தபு இடுகையில் பகவத்பாதர் ஸ்ரீ சங்கரர் அருளிய சிவானந்த லஹரியில் இருந்து சில ஸ்லோகங்களைப் பொருளுடன் சொல்லி சர்வேசன்,சதாசிவன், நம் சுந்தரேசனை பணிவோம்.

த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹர மாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் சல துரகஹாரம் ம்ருகதரம்
மஹாதேவம் தேவம் மயி ஸதய பாவம் பசுபதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சிவ மதி விடம்பம் ஹ்ருதி பஜே!

மூன்று வேதங்களால் அறியத் தக்கவர், மனதிற்கினியவர், முப்புரங்களை அழித்தவர், அனைத்துக்கும் முதல்வர், மூன்று கண்களை உடையவர், சடைகளைத் தாங்குவதால் கம்பீர தோற்றம் உடையவர். பாம்பை மாலையாக உடையவர், மானைக் கையில் ஏந்தியவர். தேவர்களிற் சிறந்தவர், பிரகாசமானவர், தயை உடையவர், சகல உயிர்களுக்கும் நாயகர். அறிவிற்கு இருப்பிடம், அம்பிகையுடன் கூடியிருப்பவரான சிவபெருமானை என் உள்ளத்தில் தியானம் செய்கிறேன்.

ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா: க்ஷீத்ர பலதா
நமன்யே ஸ்வப்னே வா ததனு ஸரணம் தத்க்ருதபலம்
ஹரி-ப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜா மஸீலபம்
சிரம் யாசே சம்போ சிவதவ பதாம்போஜ பஜனம்.

இவ்வுலகில் பலவகையான பலன்களைக் கொடுக்கும் தேவர்கள் ஆயிரமாயிரம் இருக்கிறார்கள். கனவிலும்கூட அவர்களை வழிபட்டு அதன் மூலம் பெறும் பயன்கள் எனக்கு வேண்டாம். சம்போ!, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அடைய முடியாத உம்முடைய திருவடித் தாமரையை தொழுவதே எனக்கு வேண்டியது.

மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச: ஸ்தோத்ர பணிதெள
கரெள சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி கதாகர்ணன விதெள்
தவ த்யானே புத்திர் நயனயுகளம் மூர்த்தி விபவே
பரக்ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத:

பரமசிவனே!, மனது உம்முடைய திருவடித் தாமரையிலும், வாக்கு உமது புகழைப் பேசுவதிலும், இரு கைகளும் உமது அர்ச்சனையிலும், காது உமது பெருமைகளை கேட்பதிலும், புத்தியானது உம்முடைய தியானத்திலும், இரு கண்களும் உமது திருமேனி அழகிலும் நிலைபெறட்டும்.

ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி-துர்ய-ஜனதா ஸாங்கத்ய ஸம்பாஷணே!
ஸாலோக்யஞ்ச சராசராத்மகதனு த்யானே பவானீபதே
ஸாயுஜ்யம் மம-ஸித்த மத்ர-பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோஸ்ம்யஹம்

ஸாரூப்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய பூஜை முறையிலும், ஸாமீப்யம் என்னும் முக்திநிலையானது 'சிவா' என்னும் உன்னுடைய நாம சங்கீர்த்தனத்தாலும், ஸாலோக்யம் என்னும் முக்திநிலை சிவனடியார்களுடன் கூடியிருத்தலாலும், ஸாயுஜ்யம் என்னும் முக்திநிலை உமது திருமேனியின் தியானத்தாலும் இப்பிறவியிலேயே கிடைத்துவிடுகிறது. இறைவா!, இதைவிட நான் அடையவேண்டியது என்ன?.


த்வத் பாதாம்புஜ மர்ச்சயாமி பரமம் த்வாம்சிந்தயாம்-யன்வஹம்
த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸாத்வாமேவ யாசே விபோ
வீக்ஷாம் மே திச சாக்ஷீஷீம் ஸகருணாம் திவ்யைச்சிரம் ப்ரார்த்திதாம்
சம்போ லொககுரோ மதீய மன்ஸஸ் ஸெளக்யோ பதேசம் குரு!!

எங்கும் நிறைந்தவரே, உமது திருவடியை பூஜிக்கிறேன். சிறந்தவரான உம்மை எப்போதும் தியானிக்கிறேன். இறைவனான உம்மை சரணடைகிறேன். இன்பம் அளிப்பவரே!, தேவலோக வாசிகள் நெடுங்காலமாக விரும்புகின்ற உமது கருணையுடன் கூடிய கண்பார்வைத் தீக்ஷையை எனக்கு தருவீர்களாக. ஜகத்- குருவே எனக்கு இன்பமளிக்கும் உபதேசத்தை செய்வீராக.


ஹர ஹர மஹாதேவ சம்போ!

Friday, February 12, 2010

ஈசரும், நந்திகேசரும், சண்டீசரும்...( சிவராத்ரி -2)
சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவகரம் என்றால் மங்களத்தைச் செய்வது. ஒருவன் தன்னிடம் இருப்பதைத்தான் பிறருக்கு அளிக்க முடியும். நாமெல்லோருக்கும் மங்களத்தை அருளுபவன் என்பதாலேயே பரப்பிரம்மம் சிவமாகிறது. சம்பு என்றும் சிவனுக்குப் பெயருண்டு. சம்பு என்றாலும் ஆனந்தம், மங்களம் என்றே பொருள். சம்பு எனப்படும் மங்களகாரகன் 'சம்கர:' எனப்படுகிறான், இதையே, "சம் கரோதி இதி சம்கர:" என்கிறார்கள் ஆன்றோர். இந்தக் கருத்தை தாயுமானவர் சொல்லும் போது பின்வருமாறு கூறுகிறார்.


"அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த மூர்த்தியாகி அருளொடு நிறைந்தது"

இவ்வாறான ஆனந்த மூர்த்தியின் அருகாமையில், அவனுடன், அவனாக இருக்கும் மூவரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவே இந்த இடுகை.


தேவி பாகவதத்தில் ஒரு வரி, 'சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்பது. அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பது இதன் அர்த்தம்.உமையொரு பாகன் என்றழைக்க்ப்படும் ஈசனும் சக்தியில்லையேல் சிவமில்லை என்பதாக நிச்சலமான பரபிரம்மம் என்று ஆதி சங்கரரால் கூறப்படும் சிவமும் சலனமடைவது சக்தியாலேயே. அதனால்தான் சிவலிங்கத்தில் ஆவுடை சக்தியாகச் சொல்லப்படுவது. ஆக லிங்க மூர்த்தியாக இருக்கையில் சிவன் அருகில், அவனில் இணைந்து இருக்கும் பராசக்தியே மூவரில் முதலிடத்தைப் பெறுகிறாள். இதே போல ஈசன் சோமாஸ்கந்த வடிவில் இருக்கும் உற்சவ விக்ரஹங்களிலும் ஈசனுக்கும், ஸ்கந்தனுக்கும் அடுத்ததாக இருப்பவள் ஆவுடைநாயகி என்றே விளிக்கப்படுகிறாள்.சிவாலயங்களுக்குச் செல்லுகையில் நாம் முதலில் தரிசிப்பது நந்தியம்பெருமானையே!. ஈசன் சன்னதியில் கொடி மரம், பலி பீடத்தை அடுத்து ஈசனை நோக்கியவாறு இருக்கும் ரிஷபத்தை நந்தி என்று கூறுகிறோம். ஸ்மார்த்தராகட்டும், சைவராகட்டும், இந்த நந்தியம்பெருமானை வழிபட்ட பின்னரே ஈசனை வழிபடுவர். இவரருகில் சென்று,


"நந்திகேச்வர மஹா ப்ராக்ஞ சிவத்யான பராயண
உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹஸி"


என்று பிரார்த்திப்பது வழக்கம். இதன் பொருளாவது, "மூச்சுக் காற்றால் சிவ கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள மஹா பக்த நந்தியம்பெருமானே!, உமா சங்கரனை சேவிக்க என்னை அனுமதிப்பாயாக" என்பதுதான்.சிவன் யோகத்தில் எப்போதும் இருப்பதால் அவருக்கு ஸதாகாலமும் தனது மூச்சுக்காற்றால் விசிறிக் கொண்டு வழிபடுகிறாராம் நந்தியம்பெருமான். சைவம், மற்றும் லிங்கத்தை ப்ராதான்யமாக வைத்துச் செய்யும் பஞ்சாயதன பூஜைகளில் நந்தியைப் பூஜித்த பிறகே ஈசனுக்கு வழிபாடு. ஆக ஈசனின் முதல் பக்தன் என்றால் அது நந்தியே!. அடியவரை வழிபட்டு பின்னர் அண்ணலை வழிபடுதல் என்பதே முறை என்று ஆன்றோர் காட்டிய வழி. சைவாகமத்தை நமக்கருளிய நந்தியம்பெருமானை வணங்கியபின், அதாவது சைவாகமத்தின் முதல் குருவான நந்தியை வணங்கியபின் அவரனுமதியுடன் ஈசனை வணங்குதல் சரிதானே!.

ஆயிற்று, நந்தியின் அனுமதியுடன் ஈசனை வழிபட்டாயிற்று. அடுத்து பிராகார வலத்தில் நாம் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்கையை தரிசித்த பின், ஈசனது இடது புறத்தில், ஈசனை நோக்கியவாறு இருப்பவர் சண்டிகேஸ்வரர். இவரே மூன்றாவது முக்கிய நபர். இந்த சன்னதியிலேயே பலரும் கைகளைத் தட்டுவது, விரல்களைச் சுண்டுவது.

நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரித மானஸ
சம்போ ஸேவா தேஹி சண்டிகேச நமோஸ்துதே!

என்று சண்டிகேஸ்வரனை வணங்குகிறோம். 'நீலகண்டனின் பாதாரவிந்தத்தில் ஊன்றிய மனமுள்ள சண்டிகேசா!, சிவதரிசனத்தின் பலனை எனக்குத் தாருங்கள்' என்று பொருள். எப்போதும் சமாதி நிலையில் இருப்பவராம் இந்த சண்டிகேஸ்வரர். நாமும் குண்டலினியைத் தூண்டி, த்யான, தாரண முறைகளின் வழியாக ஸமாதியில் மனமிழந்து நிற்கவேண்டும் என்பதே இதன் சிறப்பு. இந்த நந்தி மற்றும் சண்டிகேஸ்வர தரிசனத்தை பின்வருமாறு தத்துவார்த்தமாகச் சொல்வர் பெரியோர்.

ரிஷபமாக இருக்கும் ஜீவன் தன்னுடைய ப்ராணாயாமத்தால் தன்னுள் புதைந்து கிடக்கும் கனலை (சிவனுக்கு அக்னி என்றும் பெயருண்டு) விசிறி அதன் மூலமாக குண்டலினியை தூண்டி த்யான, தாரண வழிகளில் பிரயாணம் செய்து முடிவாக ஸமாதி நிலைகயில் சண்டிகேஸ்வரரைப் போல தன் மனமிழந்து சமாதி நிலை அடைய வேண்டும் என்பதே இந்த மூன்று தரிசனங்களின் பொருள்.

அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும் போது இந்த மூவரையும் முறையே தரிசித்து வணங்குவோம்.

சிவசிவ வென்கிலர் தீவினையாளர்
சிவசிவ வென்றிட தீவினை மாளும்
சிவசிவ வென்றிட தேவருமாவார்
சிவசிஅ வென்றிட சிவகதிதானே!


ஹர ஹர மஹாதேவ சம்போ!

Thursday, February 11, 2010

ஈசன் - எந்தையும், தாயும் அவனே! - சிவராத்ரி -1

-

அது ஒர் மழைக்காலம். காவிரிக் கரையில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டிலிருந்து 'அம்மா' என்று வலி பொறுக்க முடியாது கதறும் பெண்ணின் குரல் கேட்கிறது. அது பூரண கர்பிணியான பெண்ணின் குரல், பிரசவ வலியில் தவித்துக் கதறுகிறாள் அவள். இந்த நிமிடமோ, அடுத்த நிமிடமோ குழந்தை பிறந்துவிடும் என்பது போன்ற நிலை. அவளது சிறிய இடையிலிருந்து பரவிய வலி தேகமெங்கும் பரவி கூவியவள் கதறவே ஆரம்பித்துவிட்ட தருணம். ஆனால் அவள் கூப்பிட்ட அவளது தாயோ அங்கு இல்லை. பெண்ணின் பிரசவ நாளை தவறாகக் கணக்கிட்டு, அதற்கு இன்னும் 2-3 நாட்கள் இருப்பதாகக் கணக்கு வைத்துக் கொண்டு காவிரியின் மறுகரையில் வேறு வேலையாகச் சென்றிருக்கிறாள் பிரசவ வலி கண்டவளின் தாய்.

மறுகரையிலிருந்து திரும்புகையில் காவிரி கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றைக் கடக்க இயலவில்லை, திகைத்தாள். மறுகரையில் தாயாகப் போகும் தனது மகளது நிலையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. ஐயோ!, பிரசவகாலத்தில் தனியாக விட்டுவிட்டு வந்தது பிழையல்லவா?, அவளைக் காப்பvar யாருமில்லையே, என்று நினைத்து 'இறைவா ஈஸ்வரா, கருணைக் கடலே என் மகளைக் காப்பாற்று' என்று நெஞ்சுருக வேண்டினாள்.

அதே சமயம் மறுகரையில், வீட்டில் மகள் பிரசவ வலியின் இறுதியில் 'அம்மா!, அம்மா! நீ எங்கே போய்விட்டாய்' என்று கதறுகிறாள்.

'இதோ வந்துவிட்டேன் கண்ணம்மா!, பயப்படாதே! என்று தைரியம் கூறி பிரசவ அறைக்குள் நுழைகிறாள் தாய். சில நிமிஷங்களில் சுகப்பிரசவம் ஆகிறது. மகவைப் பெற்றவள் வலி நீங்கி ஆறுதல் அடைகிறாள். வந்த அன்னையிம் தன்மையை அறியாது, ' அம்மா நீ எங்கேயோ போய்விட்டாயே என்று பயந்துவிட்டேன், நல்ல வேளையாக, சமயத்தில் வந்தாய்' என்று கூறுகிறாள்.

இரண்டு நாட்கள் கழித்து காவிரியில் வெள்ளம் குறைந்த பின்னர் பெற்ற தாய் அவசர அவசரமாக ஓடி வருகிறாள். பிரசவ நேரத்தில் தாயாக வந்தவள் அப்போது அந்த இடத்திலிருந்து நழுவிவிடுகிறாள்.

எல்லாவற்றையும் தனது மகளிடமிருந்து அறிந்தபின் ஒருவாறு யூகித்து வந்தது உமையொரு பாகனே என்று முடிவுக்கு வந்து ஈசனைப் நினைந்து நன்றி கூறுகிறாள். அப்போது அப்பெண்களுக்கு சிவன் உமையுடன் ரிஷபவாகனனாக காக்ஷி அளிக்கிறான் தாயும் ஆன நமது ஈசன், ஆனந்த சபேசன், வெள்ளியம்பலத்தீசன், ஜகதீசன்.

தென் தமிழகத்துக் குடும்பங்கள் பலவற்றிலும் பெண்கள் பிரசவ காலத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களது குடும்பத்தினர் தாயுமானவருக்கு பசும்பாலும் பழத்தாறும் நேர்ந்து கொண்டுவருகின்றனர்.

தெளிவறியாதார் சிவனை யறியார்
தெளிவறியாதார் சீவனுமாகார்
தெளிவறியார் சிவமாக மாட்டார்
தெளிவறியாதவர் தீரார் பிறப்பே.

ஹர ஹர மஹாதேவ சம்போ!