Monday, November 30, 2009

திருக்கார்த்திகைத் திருநாள்.....

தீபத்திற்கான திருவிழாக்களில் தீபாவளி ஒன்று, மற்றொன்று கார்த்திகை. தமிழகத்தில் தீபத்திருவிழாவாக நாம் கொண்டாடுவது கார்த்திகையே. இந்தப் பண்டிகையின் சிறப்பினையும், இறைவனை தீப-ஜோதியாக பெரியவர்கள் வழிபாடு செய்திட்ட சில நிகழ்வுகளையும் பற்றி இவ்விடுகையில் பார்க்கலாம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.

எல்லா ஒளியும் இறைவனிடமிருந்தே தோன்றுகிறது என்பதை நிதர்சனமாக காட்டும் விழா கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை முப்பது நாட்களும் விளக்குகள் ஏற்றி வீட்டின் நிலை/தலை வாசல் அருகே வைப்பது வழக்கம். கார்த்திகை மாதப் பெளர்ணமியன்று கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது என்பது வழக்கம். விளக்கு ஏற்றும் போதும், சொக்கப்பனை கொளுத்தும் போதும் சொல்லப்படும் மந்திரம், உலகில் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும், மங்களம் எங்கும் பரவ வேண்டும் என்பதாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்த சொக்கப்பனையில் எல்லோரும் சிறிதளவு குங்கிலியத்தை சேர்ப்பதன் மூலம் தமது பாபங்களை நீக்கிக் கொள்ளலாம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

சிவாலயங்களில் கர்பக்கிரஹத்தின் பின்புறம் லிங்கோற்பவ மூர்த்தியைக் காணலாம். சிவபெருமான் ஜோதிமயமாக நின்றபோது அடியை மஹாவிஷ்ணுவும், முடியை பிரம்மனும் தேடித் தோல்வியுற்றதைக் குறிப்பதே இந்த மூர்த்தி குறிக்கிறது. இதனையே திருநாவுக்கரசர் பின்வருமாறு கூறியுள்ளார்.


நாடி நாராயணன் நான்முகன் என்றிவர்
தேடித் திரிந்தும் காணவல்லதோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடிய பாதம் என் நெஞ்சுள் இருக்கவே

ஜோதி ஸ்வரூபனின் திருவடியைத் தேடி மஹாவிஷ்ணு கீழ் நோக்கிச் சென்றார், பிரம்மன் மேல் நோக்கிச் சென்றார். சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்றதை நினைவூட்டுவதே கார்த்திகைப் பெருவிழா.


திருவண்ணாமலை மற்றும் பல சிவஸ்தலங்களில் கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணியன்று அந்தி சாயும் நேரத்தில் ஒரு பெரிய அகல்-விளக்கினை ஏற்றி சிவபெருமானை அதில் ஆவாஹனம் செய்து அந்த தீபத்தை சுவாமி சன்னதியில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் சொக்கப்பனையில் இருக்கும் பனைமரத்தின் அடித்துண்டில் அந்த தீபத்தை வைக்கின்றனர். இறைவன் ஜோதி ஸ்வரூபன் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த சொக்கப்பனை ஆந்திரத்தில் "ஜ்வாலா தோரண விழா" என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த பிரதேசத்தில் கூறப்படும் புராணம் வேறு மாதிரியானது.

தமிழகத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மலையே சிவஸ்வரூபம். திருவண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி என்பர். ஜோதி-ஸ்வரூபனின் அடி-முடி தேடிய சம்பவம் நடந்தது இங்கே என்று சொல்லப்படுகிறது. மலைமீது தீபத்திருநாளான இன்று ஒரு பெரிய செப்பு அண்டாவில், 24 முழம் உள்ள துணியில் கற்பூரத்தூளைக் கொண்டு திரியாக்கி நெய்யிட்டு தீபமேற்றுகிறார்கள். இக்கோவிலில் தீப தரிசன மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. கார்த்திகையன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி, இந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது.

அண்ணாமலையானுக்கு அரோஹரா..
******************************************************************************
தீபத்தில் இறைவன்

ஜோதிர் மயமான இறைவன் அண்டத்தில் மட்டுமில்லாது பிண்டத்திலும் சுடரொளியாகப் பிரகாசிக்கிறார் என்கிறது வேத வாக்கியம். "தஸ்ய மத்யே வஹ்னிசிகா அநியோர்த்வா" என்பதாக கட்டைவிரல் அளவில் தீப ஜோதியாக பிரம்மம் இதயத்தில் விளங்குகிறது என்பது பொருள். சாக்தத்திலும் தீபத்தில் அன்னையை ஆவாஹித்து வழிபடுவது சிலரது மரபு. இவ்வாறு அம்பிகையை தீபத்தில் பூஜிக்கும் போது சாக்ஷி தீபம் என்று அருகில் இன்னொரு தீபமும் இருக்க வேண்டும் என்பர்.


விளக் கொளியாகிய மின் கொடியாளை
விளக் கொளியாக விளங்கிடு நீயே!
விளங்கிடு மெய் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளக்கினர் தானே

என்று திருமந்திரத்தில் ஞான விளக்கினைப்பற்றி திருமூலரும்,

"அருள் விளக்கே அருட்சுடரே அருட்ஜோதி சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே"

என்று ராமலிங்க ஸ்வாமிகளும் தமது 'அருட் பெருஞ்ஜோதியில் கூறியிருக்கிறார். இவர் வடலூரில் ஒளி விளக்கிற்கே ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தவர். இன்றும் தை-பூசத்தன்று ஜோதி தரிசனம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய தீபமும், அன்னதானத்திற்க்காக ஏற்றிய அடுப்பும் அணையாது காப்பாற்றப்படுகிறது.


திருநாவுக்கரசர் பஞ்சாக்ஷர மந்திரமே ஒளி மயமானது என்பதை பின்வரும் பாடலில் கூறியிருக்கிறார்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயமே

சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மஹாவிஷ்ணுவும் ஜோதி ஸ்வரூபனாக இருந்திருக்கிறார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனை உணர்த்தும் கோவில் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. பெருமாள் திருநாமமே தீபப்பிரகாசர் என்பது. தீந்தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்று கூறப்படுகிறார். இந்த தலத்திற்கு திருத்தண்கா, தூப்புல் என்று பெயர். பிரம்மா யாகம் செய்கையில் அவர் மனையாள் சரஸ்வதியே அதைத் தடுக்க முயல்கிறாள். அப்போது பெருமாள் ஜோதியாக விளங்கியதாக இத்தலபுராணம் சொல்கிறது. இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார்,
மின்னுருவாய் முன்னுருவில் வேத
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்

என்று கூறியதாக நண்பன் சேஷசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன். நண்பன் இந்த பாசுரம் தவிர பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் பாசுரங்களையும் சுட்டிக் காட்டினான். அவை கீழே!

வையகம் தகழியாக வார் கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காகச் செய்ய
சுடரொளியின் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை இடரொளி நீங்கவே

அன்பே தகழியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

இவ்வாறாக எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் தீபத்தை வணங்குவோம். மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Friday, November 13, 2009

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1

*******************************************************************************
முன்பு ஆசார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை இது. ஸ்ரீதர ஐயாவாளின் ஜெயந்தியை முன்னிட்டு மீள் பதிவிடுகிறேன் இதன் தொடர்ச்சி இங்கே.
**************************************************************** **************
முன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.

இந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.

இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.


இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.


அடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2


***************************************************************************
முன்பு ஆசார்ய ஹருதயத்தில் இட்ட இடுகை, ஸ்ரீதர ஐயாவாளின் ஜெயந்தியை முன்னிட்டு மீள் பதிகிறேன்.
***************************************************************************

ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.


அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா
என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.
இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.


ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்

ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே


[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.