Sunday, May 25, 2008

அமர சிம்மனும்-ஆதிசங்கரரும்...




ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம் இருந்திருக்கிறார்கள். இலக்கியத்தில் அவர்களால் நாம் பெற்றவை மிக அறிதானவை. ஐம்பெரும் காப்பியங்கள் என்று நாம் போற்றும் சிந்தாமணி, வளையாபதி போன்றவை எல்லாம் ஜைன நூல்கள் தான். வடமொழியில் பஞ்சகாவியங்கள் என்று இருப்பதைத் தவிர, ஜைனர்களுக்கு என்று தனியாக பஞ்ச காவியங்கள் இருக்கிறதாம். அமரசிம்மன் என்று ஒரு ஜைன அரசன், ஆதி சங்கரர் காலத்தில் வசித்தவன். இவன் பல ஜைன மத நூல்களை எழுதினான் என்றும் அவற்றை எல்லாம் அவனே அழித்து விட்டான் என்று தெரிகிறது. இவனது படைப்புத்தான் அமரகோசம் என்னும் நிகண்டு @ அகராதி. ஜைன மததவர் எழுதிய இந்த அகராதியை அழியாமல் இருக்கக் காரணம் ஆதிசங்கரர் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இது சம்மந்தமான கதையினைப் பார்க்கலாம்.


ஆதிசங்கரர் காலத்தில் பாரதம் முழுவதிலும் 72 சமயங்கள் இருந்தன, அவற்றினால் சனாதன மதம் தொய்வுற்றிருந்தது, அதனை மீட்க அவர் பஞ்சாயத பூஜை முறையும் ஷண்மதங்களையும் ஸ்தாபனம் பண்ணினார் என்றெல்லாம் அறிகிறோம். இதற்காக அவர் சஞ்சாரம் செய்கையில் அமரசிம்மனையும் சந்தித்தார். பெளத்த கொள்கை என்பது பொதுவாக எல்லாமே மாயை, சூன்யம் என்பார்கள். ஜைனர்களோ இந்த மாயை @ சூன்யத்திற்குப் பின்னால் ஏதேனும் ஒன்று இருந்தும் இல்லாதிருக்கலாம் (அஸ்தி நாஸ்தி) என்பர். இப்படிக் கொள்கை உடைய அமரசிம்மனுடன் ஆச்சார்யார் வாதம் செய்து சனாதன இந்து மதத்தை நிலை நிறுத்த முடிவாகியது.




இவர்கள் வாதம் செய்ய முடிவு செய்தவுடன் அமரசிம்மன் ஒரு தடுப்பு (துணியால் ஆன திரை) இருவரையும் பிரிக்கும்படியாக செய்து ஆளுக்கு ஒரு பக்கத்தில் இருந்து வாதத்தை ஆரம்பித்தனர். அமரசிம்மன் தெளிவாக, அழகாக எல்லாவற்றையும் பற்றி பேசினான். என்னதான் சிறந்த புத்திசாலி என்றாலும், கேள்விகளுக்கு அழகாக தொடர்புடன் பதில் சொல்வது சங்கரருக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இவ்வாறாக பதிலளிக்கிறான் அரசன் என்று சிறிது யோசித்தார். ஈஸ்வர அவதாரமல்லவா உடனே காரணம் தெரிந்தது. அவர் அமரசிம்மனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் குரலில் பதிலளித்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்.






அமரசிம்மன் மிகவும் ஸ்ரத்தையுடன் பல நாட்கள் சரஸ்வதியை உபாஸித்திருக்கிறான். [ஜைன மதம் ஒரு கடவுள்/ கடவுள்கள் தத்துவத்தை எதிர்க்கிறது] இவ்வரசன் ஜைனமத்தவனாக இருந்தாலும் ஜைன மதம் பற்றி புத்தகங்கள் எழுத சரஸ்வதியின் அனுக்கிரஹம் பெற உபாசனை செய்திருக்கிறான். இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' என்பது போல ஜைன மததில் இருந்து கொண்டு, ஜைன மத நூல்கள் எழுத சரஸ்வதியை வணங்கியிருக்கிறான். இவ்வாறாக எழுதிய ஜைன க்ரந்தங்களில் நமது இந்துமதத்தையும் நிறைய கண்டனம் செய்திருக்கிறான்.
சரியோ-தவறோ ஒரு காரியத்தை முழு மூச்சாக எடுத்துச் செய்தால் அதன் பலனை இறைவன் நமக்கு தருவான் என்பதற்கு உதாரணமாக இவன் உபாசனைக்கும், சிரத்தைக்கும் உயர்வளித்து இவனுக்கு சரஸ்வதி அனுக்கிரகம் செய்திருக்கிறாள்.






இங்கே வாதப்போரில் திரைக்குப் பின்னே அவனருகில் ஸரஸ்வதி தேவியை கடத்தில் ஆவாஹனம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் அது ஆச்சார்யார் முன் உதவாது என்று அறிந்து அவரை எதிர்க்க சரஸ்வதியையே தஞ்சமடைந்திருக்கிறான். இவனது உபாசனைக்கு பலனளிக்க அவளும் கட்டுப்பட்டிருக்கிறாள். எனவே சரஸ்வதியின் அறிவுரைப்படியே கடத்தில் ஆவிர்பஹிக்கச் செய்துவிட்டு, சுற்றிலும் திரையெல்லாம் போட்டுக் கொண்டது. அவனுக்காக அவள் பதிலளித்திருக்கிறாள். ஆச்சார்யார் ஈஸ்வர ஸ்வரூபம், ஒரு விதத்தில் சரஸ்வதி மஹேஸ்வரனுக்கு சஹோதரி முறை. ஆகவே ஆச்சார்யார் மனதில் நடந்தது, நடப்பது ஆகியவை எளிதாக புரிந்தது.




ஆச்சார்யார் சரஸ்வதியிடம் 'உன்னை வழிபட்டுக் கொண்டே அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தை எதிர்க்கும் இவனுக்கு அனுக்கிரகம் செய்யலாமா?' என்று மனதால் கோரிக்கை எழுப்புகிறார். அதிலும் இத்துணை நேரம் எனக்கு பதிலளித்து அவனுக்கு அனுக்கிரகித்திருக்கிறாயே , இது சரியா என்று நினைக்கையில் சரஸ்வதியும் அமரசிம்மன் உபாசனைக்கு ப்ரதிபலன் தந்தாயிற்று என்று உணர்ந்து உடனே கடத்திலிருந்து விலகி எதாஸ்தானம் சேர்கிறாள். அதன் பின் அமரசிம்மனால் ஆச்சார்யாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான்.





இவ்வாறாக தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன் தான் எழுதிய க்ரந்தங்களை எல்லாம் தீக்கிரையாக்கத் துணிகிறான். தனது சித்தாந்தம் தோற்றபின் தனது சித்தாந்ததை நிலைநாட்ட எழுதிய நூல்கள் வீண் என்றே அவற்றை அழிக்கிறான். சரஸ்வதி கடாக்ஷத்தில் மிக அழகான ஜைன க்ரந்தங்கள் இவன் படைத்திருந்தானாம். எல்லாம் ஒவ்வொன்றாக தீயில் போட்டுவிடுகிறான். இதை அறிந்த ஆச்சார்யார் மிகுந்த வருத்தமடைந்து உடனடியாக அவனிடத்து வந்து அவனது செயலைத் தடுக்கிறார். அப்போது எல்லாம் போக அவன் கையில் இருந்தது கடைசியாக ஒரு நூல், அதுதான் 'அமர கோசம்'. ஆச்சார்யார் தடுத்திருக்கவில்லையெனில் இதுவும் நமக்கு கிடத்திருக்காது. இந்த நூலை அழியாமல் காத்து அதற்கு 'அமரத்துவம் அளித்துவிட்டார் ஆச்சார்யார்.



எந்த மதத்திலும் நேர்மை, சத்யம் உள்ளவர்கள் இருப்பார்கள். அமரசிம்மனும் தான் எழுதிய அகராதியில் இந்த நேர்மையினை கடைப்பிடித்திருக்கிறான். தனது கொள்கையை திணிக்காது, பிற மதங்களை சேர்ந்த வார்த்தைகளை விலக்காமல், எதிர்க்காமல். அவற்றுக்கு அந்தந்த மதத்தில் என்ன அர்த்தம், பெருமை சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கொடுத்திருக்கிறான்.



இந்த சம்பவம் எல்லா சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறது

Sunday, May 18, 2008

முருகன் தமிழ் கடவுள் மட்டுந்தானா?....



சமிபத்தில் யார் தமிழ் கடவுள் என்று மிகுந்த பரபரப்பான பதிவு ஒன்றை நம் கே.ஆர்.எஸ் எழுதினார். இந்த பதிவினை முடிக்கையில் கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் மட்டும் தமிழ் கடவுள் அல்ல, மால், ஹரி என்றெல்லாம் சொல்லும் மஹாவிஷ்ணுவும் தமிழ் கடவுளே என்பதற்கு ஏகப்பட்ட தமிழ் இலக்கிய சான்றெல்லாம் தந்து முடித்தார். சாதாரணமாகவே சில தீவிர முருகனடிமைகள், முருகனை ஏதோ வட மொழிக்கு பிடிக்காத தெய்வம் மாதிரி சித்தரித்தும், உச்சரித்தும் மகிழ்வார்கள். வடமொழி முருகனை போற்றவில்லையா?, இவர்கள் சொல்வது போல பார்பன தீவிரவாதத்தால் தான் தெய்வானை என்ற தெய்வமே உருவானதா?. வடக்கில் குமரன், கந்தன் வனங்கப்படுவதில்லையா?.தமிழகத்தில் மட்டும், அதுவும் தமிழ் மட்டுந்தான் முருகனை தெய்வமென போற்றியுள்ளதா?. இதற்க்கெல்லாம் சில குறிப்புக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்வாமி என்பதே சம்ஸ்க்ருதத்தில் சுப்ரமணியரைத்தான் குறிக்கிறது. அமரகோசம் என்று ஒரு நிகண்டு/அகராதி வடமொழியில், அதில் "சுப்ரமணியர்" என்ற பதத்திற்கு "தேவசேனாபதி; சூர; ஸ்வாமி; கஜமுகானுஜ" என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கு. மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை. ஆக "ஸ்வாமி" என்பது முருகனை மட்டுமே குறிப்பிடுகிறது.

ஷண்முகனது அவதாரம் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுப்ரமண்ய அவதாரம் என்று சொல்லும் போது, சாந்தோக்ய உபநிஷத் ப்ரம்மாவின் மானச புத்திரான ஸனத்குமாரர் தான் ஸ்கந்தனாக/கந்தனாக அவதரித்தார் என்று சொல்லுகிறது. முருகனின் 'ஞானபண்டிதன்' என்னும் பெயரும் இதை உறுதி செய்வதுபோல் இருக்கிறது. இருள் கடந்த ஓளி ஞானாக்னி என்றெல்லாம் சாந்தோக்யம் கூறுவதாக தெரிகிறது. சுப்ரமண்யர் பற்றி வேதத்தில் இல்லை என்று சொல்லி வருபவர்களுக்காக பரமாச்சார்யார் சில வேத விற்பனர்களை ஆராய வைத்து சொல்லியிருக்கிறார். சிவ புராணத்தில் த்ரிபுர ரஹஸ்யத்தில் ஸனத் குமாரர் சிவ குமரனாக பிறப்பது பற்றிய முழுத்தகவலும் (சரவணப் பொய்கை, கார்த்திகை பெண்கள், ஷண்முக ரூபம் எல்லாம்) இருக்கிறது. இதில் அன்னை பராசக்தியே சரவணப் பொய்கையாக வந்து ஆறு குழந்தைகளைத் தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் ஒருவிதத்தில் சரிதானே!, வாயுவாலும் அக்னியாலும், கங்கையாலும் தாங்கமுடியாத ஈசனின் தேஜஸை அம்பிகையால் மட்டுந்தானே தாங்க இயலும். கங்கையால் தாங்கப்பட்டதால் தான் அவன் காங்கேயன். அக்னிச் சுடரில் பிறந்தவர், என்பதையே 'அக்னி பூ' என்று சொல்கிறது அமர கோசம். அதுவும் எப்படி "ஸேநானி; அக்னி: பூ குஹ:" என்று சொல்கிறது. இன்றும் நாம் முருகனை தேவசேனாபதி என்றும் குகன் என்றும் சொல்கிறோம். அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.


ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் மஹேஸ்வரனை பற்றிச் சொல்லும் போது, "குமாரனை வணங்குகிற பிதா" என்பதாக சொல்லியிருப்பதாக தெரிகிறது, இன்று நாம் சொல்லும் தகப்பன் சாமி எனப்படும் ஸ்வாமிநாதன் தானே இது?. போதாயன மஹரிஷி (இவர் வேதகாலத்து ரிஷி, கர்மாக்களை பிரித்து, அதற்கு மந்த்ர-தந்த்ரங்களை வகுத்தவர்களில் ஒருவர்) தான் எழுதிய தர்ம சூத்ரத்தில் தேவ தர்பணங்களில் ஸ்கந்தனும் அவனது பரிவாரங்களும் இடம் பெறுவதாக தெரிகிறது. பாணினியின் வியாகரணத்திலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றி விஸ்தாரமாக கூறப்பட்டிருக்கிறதாம்.


கந்தனுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் இருப்பது நமக்கு தெரியும், அதன் காரணமும் அறிவோம். கார்த்திகேயன் என்னும் பெயர் வடதேசத்தில் பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது. நாம் இங்கு பார்வதி-பரமேஸ்வர குமாரர் என்றால் கணேசனையும் சொல்வோம், முருகனனையும் சொல்வோம். ஆனால் வட தேசத்தில் கார்த்திகேயன் மட்டுமே குமாரனாக கருதப்படுகிறார். வால்மிகி ராமாயணத்தில் வசிஷ்டர் ராம-லக்ஷ்மணர்களுக்கு ஸ்கந்தனது கதையை விரிவாகக் கூறி வேறெங்கும் இல்லாத சிறப்பாக இந்த இடத்தில் ஸ்கந்தனது கதையை கேட்பதால் எற்படும் நன்மைகளுக்கு மட்டும் பலஸ்ருதி சொல்லி அதில், பின்வருமாறு சொல்கிறார், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்ர, பெளத்ராதிகள், எல்லாம் கிடைத்து முடிவில் ஸ்கந்த லோகத்தில் அவருடன் நித்ய வாசமும் செய்யலாம்". இதன் தாக்கத்தாலேயே காளிதாசனும் குமார ஸம்பவம் என்று பெயர் வைத்தார் போல. வட இந்தியாவில் கார்த்திகேயன் பிரம்மச்சாரி. ஆதி சங்கரர் காலத்தில் மீமாம்ஸ கொள்கையில் தீவிரமாக காசியில் வாழ்ந்த குமரில பட்டர் கந்தனின் மறு அவதாரமாகவே போற்றப்படுகிறார். பழங்கால வட இந்தியாவின் கோடிகளில் வாழ்ந்த அரசர்களின் பெயர் "குமார குப்தன்" என்றெல்லாம இருந்திருக்கிறது. குமரனை வெற்றியின் அடையாளமாக வணங்கி அவனது பெயரை தமது சிறப்புப் பெயர்களாக கொண்டுள்ளனர் என்றும், பழங்காலத்தில் ஷண்முகன் மயில் வாகனத்தில் இருப்பது போன்ற நாணயங்கள் (குஷாணர் காலத்தில்) கிடைத்திருப்பதும் தெரிகிறது.


ஆதிசங்கரரது சுப்ரமண்ய புஜங்கமும், அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் கெளமாரமும் ஆதிசங்கரரின் முருக வழிபாட்டிற்கு கட்டியம் கூறுகிறது. அதிலும் அவர் புஜங்கத்தில் 'ந ஜானே ந ஜானே' என்பதாக இன்னொரு தெய்வம் இல்லை, இல்லை என்று இருதரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

________________________________________________________
இன்று (19-05-2008) வைகாசி விசாகம். இவ்வாறாக வேத காலத்திலிருந்தே வணங்கப்பட்ட கந்தக்கடவுள் ஈசனின் தேஜஸிலிருந்து உருவான தினமே வைகாசி விசாகம். 400-450 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய நாட்டில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக்கும் சிவகாமசுந்தரி என்பவருக்கும் ஒரு ஆண் மகவு பிறந்தது. ஐந்து வயதாகியும் அந்த குழந்தைக்கு பேச்சு வராதது கண்டு பெற்றவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். யாரோ ஒரு யதி அவர்களிடம் திருச்செந்தூர் சென்று ஒரு மண்டல காலம் ஸமுத்ரத்தில் நீராடி செந்திலாதிபனை வணங்கி விரதமிருக்கச் சொன்னார்கள். அவ்வாறு இருந்தும் குழந்தைக்கு பேச வராதது கண்டு வருந்தி, மறுநாள் உஷத் காலத்தில் மகனுடன் கடலில் இறங்கி உயிர்விட முடிவு செய்துவிடுகின்றனர். அன்றிரவு அர்ச்சகர் வடிவில் வந்த குமரன் குழந்தையை தட்டி எழுப்பி அவரது நாவில் ஷடாக்ஷர மந்த்ரத்தை எழுதி, குழந்தாய் சீக்கிரமாக விஸ்வரூப தரிசனம் காண வருமாறு பணித்துவிட்டு செல்கிறார். குழந்தையும் உடனே பெற்றோரை 'அம்மா-அப்பா' என்று அழைத்து எழுப்புகிறது. அவர்களுக்கு தங்கள் அன்பு மகன் பேசுவது கண்டு மிகுந்த வியப்பும், மகிழ்ச்சியும். நடந்ததை குழந்தை தெளிவாகச் சொன்னது. மூவரும் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் கண்டு விரதம் முடித்து ஊர் திரும்பினர். இந்த குழந்தைதான் பின்னாளில்,

...ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே ......

...சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே ......

என்றெல்லாம் பாடிய குமர குருபரர். இவரது இன்னொரு படைப்பு மீனாக்ஷி பிள்ளைத்தமிழ்.
__________________________________________________________
த்(3)ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதெள் ஸ்கந்த கீர்த்தி:
முகே(2) மே பவித்ரம் ஸதா தச் சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்(4)ருத்யம்
கு(3)ஹே ஸந்து லீநா: மமாஸேஷ பா(4)வா:


என்னுடைய கண்கள் ஸ்கந்த மூர்த்தியே உங்களையே பார்க்கட்டும், .என் காதுகள் உங்கள் புகழையே கேட்கட்டும். என் நாக்குகள் எப்போதும் உங்கள் புனிதப் புகழ் பாடட்டும். என் கைகள் தங்களுக்கான நற்காரியங்களை செய்யட்டும்! என்னுடல் தங்களுக்கான சேவையில் ஈடுபடட்டும். இது போல என் எண்ணங்களும் எப்போதும் தங்களிடமே உரைந்து போகட்டும்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!


சக்திவேல் முருகனுக்கு அரோகரா!!!

Saturday, May 17, 2008

கடன், கடனாளி, கடனை அடைப்பவர்.....

ருணம் என்றால் கடன். எப்போதும் கடனே இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் கூட தனது வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள அரசிடமோ இல்லை வங்கிகளிலோ, கடன் வாங்குவது என்பது சகஜமாக இருக்கிறது. பணம் இருந்தாலும், அதை கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வது ஆபத்து, என்பதாலும் மக்கள் இந்த கடனட்டை போன்றவற்றை கொண்டு செலவு செய்கிறோம். அதற்கு திரும்ப கட்டும் வரையில் அதுவும் கடன் தானே?. வாங்கிய கடனைக் கட்ட இயலவில்லையெனும் போது இந்த கடன்களால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு? . சமீபத்தில் கூட அரசு வாராக் கடன் பற்றிய தகவல் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்ததை அறிவோம். இதற்கு என்ன என்கிறீர்களா?. இது மாதிரியாக கடன் வாங்கியவர்களது நிலை எப்படியிருக்கும் என்பதை 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' அப்படின்னு பெரிவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆக இந்த கடனானது மனதை வாட்டும், செயலை முடக்கும் என்பதை முன்னோர் அறிந்துள்ளனர்.


கடன் என்றால் அது எந்தவிதமான கடனாகவும் இருக்கலாமே!, நன்றிக் கடன், பணம்/பொருள் தொடர்புடைய கடன், தேவ கடன், ரிஷிகளுக்கான கடன், நீத்தார் கடன் என்று எத்தனை எத்தனை விதங்கள். மனிதனாய் பிறந்த ஓவ்வொருவரும் இதில் சிலவற்றை ஏற்றே ஆக வேண்டியிருக்கிறதே?. இதற்கு ப்ரதிபலனாக நாம் என்ன செய்கிறோம்?. நன்றி கூறுகிறோம், சில சமயம் செயலில் நன்றியை காட்டுகிறோம். சில நேரங்களில் நமது மமதை/ அஹங்காரம் போன்றவற்றால் இந்த நன்றி கூட சொல்வதில்லை. இவ்வாறான கடன்களிலிருந்து நம்மைக் காக்க என்று சான்றோர்கள் சில ஸ்லோகங்களை/மந்த்ரங்களை/செயல்களை பண்ணி, பரிஷித்து, பலன்களை உணர்ந்து அதன்பின் அவற்றை நாமும் செய்ய பணித்துள்ளனர். இவ்வாறாக பெரியவர்களால் சொல்லப்பட்டு, பரிக்ஷித்துணர்ந்து நமக்களிக்க்ப்பட்ட ஒன்றை இன்று பார்க்கலாம். இது நமது வாழ்வில் நாம் எதிர் நோக்கும் மேலே சொன்னபடியான "எல்லாவிதமான கடன்களிலிருந்தும்" நம்மைக் காக்க நரஸிம்ம மூர்த்தியின் மீது சொல்லப்பட்டது தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்ரம்.





சின்னஞ்சிறு குழந்தையான ப்ரஹலாதரை அனுக்ரஹிப்பதற்காக ஸிம்ம முகமும், கழுத்துக்கு கீழே மனித உடலுமாக ஸ்ரீநரஸிம்ம மூர்த்தி வைகாச
சுக்ல சதுர்தசியில் ப்ரதோஷ காலத்தில் ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் தூணிலிருந்து அவதரித்து ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்தார். உக்ர நரஸிம்மரான இவரை அனைவரும் ஸ்தோத்ரம் செய்தும் சாந்தப்படுத்த இயலாத காலத்தில் மஹேஸ்வரன் தனது அம்சமான சரப ரூபத்தில் வந்து சாந்தப்படுத்தினார். இதன் பின் உலகிற்கு அனுக்ரஹிக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மராக காட்சி தந்தார். யோகநரஸிம்மர், வீர நரஸிம்மர் என்று பல வடிவங்களில் காக்ஷியளிக்கும் இவரை பூஜித்தால் வீரம், செல்வம், போகம், கல்வி, துணிவு, புகழ் போன்ற எல்லாவற்றையும் அடையலாம்.

________________________________________________________________
நாளை 18-05-08 நரஸிம்ம ஜெயந்தி, தூணிலிருந்து வெளிப்பட்ட நாள். உபவாசமிருந்து அந்தி-சந்தி வேளையில் நரஸிம்மரை உபாசனை செய்வோம். ப்ரஹலாத சரிதம் (பாகவதம்), நரஸிம்ம சஹஸ்ரநாமம் போன்றவை பாராயணத்திற்கு சிறந்தது. ப்ரஹலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரத்தை
பாராயணம் பண்ணுவது மிக விசேஷம். இவரை மனதில் இருக்கும் சத்ருக்களான காமம், க்ரோதம் போன்றவையும், வெளியில் இருக்கும் விரோதிகளும் விரோதத்தை மறந்து நம்மிடம் அன்பு பாராட்ட துவங்குவார்கள். செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் சிறப்பு போன்றவை நரஸிம்ம உபாசனையால் கிடைக்குமென நாரத புராணம் சொல்கிறது. ஆதிசங்கரர் நரசிம்ம உபாசனை பண்ணியவர். அவரது சிஷ்யர் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் நரசிம்ம உபாசனை இன்றும் உண்டு. அஹோபிலத்தில் உள்ள ஜீயர் மடமானது நரசிம்மரையே மூல மூர்த்தியாக கொண்டது.
_________________________________________________________________

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.


வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:

Friday, May 16, 2008

குருவின் உபதேசச் சிறப்பு....

குருகுலம் முடிந்து செல்லும் சிஷ்யனுக்கு, குரு உபதேசம் செய்கையில் "காஞ்சனா, காமினி, கீர்த்தி" ஆகிய மூன்றிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவற்றில் கவனமாக இல்லாவிடில், இந்த மூன்றும் சிஷ்யனை கீழ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார். சீடனும் குருவை வணங்கி 'தான் இந்த மூன்றிலும் எச்சரிக்கையாக இருந்து தானம், தவம் போன்றவை செய்து உயர்வடைவதாக' வாக்களித்து பின் விடைபெறுகிறான்.

அந்த சிஷயன் கங்கை கரையில் உள்ள ஒரு ஊரில் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். ஒருநாள் கங்கையின் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு வருகையில் ஒரு புதையலைக் கண்டெடுத்தான். இது காஞ்சனம், நம் குரு சொல்லியபடி இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆகையால் அந்த புதையலை வைத்து கோவில் எழுப்ப முடிவுசெய்து கோவில் கட்டும் வேலையாட்களிடம் அந்த செல்வத்தை கொடுக்கிறான். அவர்கள் இவனைக் கட்டிப் போட்டுவிட்டு செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார்கள். அவ்வாறாக கட்டப்பட்ட நிலையில் தனது குரு கூறியதை நினைவிருத்தி, இனி இந்த செல்வத்தை கையாலும் தொடுவதில்லை என்று ப்ரதிஞ்ஞை செய்து கொண்ட சமயத்தில் சில வழிப்போக்கர்களால் விடுதலை செய்யப்படுகிறான்.

இவ்வாறாக அவன் தவத்தை தொடருகையில் அவனது ஆஸ்ரமத்திற்கு அழகிய பெண் ஒருவள் வந்து, தான் கணவனால் கைவிடப்பட்டவள் என்று கூறி, தனக்கு ஆஸ்ரமத்தில் தங்க இடம் தர வேண்டுகிறாள். சிஷ்யனுக்கு மீண்டும் ஆச்சார்யரது உபதேசம் (காமினியிடம் கவனமாக இரு) மனதில் தோன்றுகிறது. ஆகையால் அந்த பெண்ணை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் அப்பெண் தனதுநிராதரவான நிலையினை கூறி அழுத காரணத்தால் தனி பர்ணசாலை அமைத்து தங்கிக் கொள்ள உதவுகிறார். நாளடைவில் சிஷ்யர் சம்சாரி ஆகிவிடுக்கிறார். திடிரென ஒருநாள் ஆச்சார்யரது நினைவு வருகிறது. அப்போது தான் திருமணம் என்ற பந்தத்தில் வீழ்ந்ததாக உணர்ந்து தனது ஆச்சார்யாரின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாது விட்டதற்காக வருந்தி, சன்யாசம் ஏற்று மீண்டும் தவம் செய்ய காட்டிற்கு செல்கிறார்.

இந்த முறை கடுமையான தவத்தாலும், மந்த்ர, தந்த்ர, யோக ப்ரயோகங்களாலும் பல ஸித்திகளை அடைக்கிறார் நம்ம சன்யாசி. ஒருநாள் ஒர்ஏழை, சன்யாசியிடம் வந்து, தான் பசியாலும், நோயாலும் மிகவும் வருந்துவதாகக் கூற, அதற்காக வருந்திய சன்யாசி தனது தாடியிலிருந்து ஒரு மயிர் இழையினை எடுத்து அந்த ஏழைக்கு அளித்து, அந்த இழை அவனுக்கு வேண்டிய பணத்தை தரும் என்று கூறி அனுப்புகிறார். ஏழையும் நம்பிக்கையுடன் சென்று அதை தனது பெட்டியில் வைத்து மூடுகிறான். மறுநாள் அந்த பெட்டி முழுவதும் தங்க நாணயங்கள் ஜ்வலித்ததாம். இதன் காரணமாக சன்யாசியின் புகழ் பரவுகிறது. ஆனால் சன்யாசியோ 'நான் எந்த ப்ரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. எனது வைராக்யத்தை கலைக்காமல் நான் தவத்தை தொடருவேன்' என்று இருந்தார். ஒருநாள் காலை ஆஸ்ரமத்தின் முன்னே மிகப் பெரிய கூட்டம். நமது சன்யாசி என்ன-ஏது என்று விசாரிக்கும் முன்னரே கூட்டத்திலிருந்த மக்கள் அவரது தாடி முடியுனை பிடித்து இழுத்து எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மக்கள் கூட்டமாக இழுக்க ஆரம்பித்ததில் சன்யாசி நினைவிழந்து, ரத்தம் சொரிய கிழே விழுந்துவிடுகிறார்.


சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் தனது குருநாதரை நினைத்தார். தனது குருநாதர் கூறியது மூன்றும் (காஞ்சனம், காமினி, கீர்த்தி) எவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்துள்ளது என்று உணர்கிறார். அது மட்டுமல்லாது, குருவின் உபதேசம் எவ்வளவு ப்ரத்யக்ஷமானது என்றும் உணர்ந்து, அன்றிலிருந்து மெளனத்தையே கேடயமாக்கி தனது தவத்தை தொடர்ந்தார்.

Thursday, May 8, 2008

சங்கரரும், ராமானுஜரும்.....



ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நஸ்கரிக்கிறேன். ஸுமார் 2000 வருடங்களுக்கும் முன்பாக (சுமாராக கி.மு 509) கேரளத்தில் காலடி என்னும் ஊரில், சிவகுரு-ஆர்யாம்பா தம்பதிக்கு நந்தன வருஷம் வைகாச சுக்ல பஞ்சமியில், புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ சங்கரர். 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமாரி வரையில் அத்வைத சித்தாந்தத்தை பரப்பினார். அத்வைத தத்வத்தை தமிழகத்து அந்தணர்கள் ஒப்புக் கொள்ள மறுத்த சமயத்தில் திருவிடைமருதூர் மகா லிங்கமே அசரீரியாக 'ஸத்யம் அத்வைதம்' என்றதாக தெரிகிறது. இவரது ப்ரம்ம சூத்திர பாஷ்யத்தை வியாசரே நேரில் வந்து அனுக்ரஹித்ததாக சொல்லப்படுகிறது.

_____________________________________________________________
கி.பி 1017ம் ஆண்டு வைகாச சுக்ல பக்ஷ பஞ்சமியில் குருவாரம், திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும்-காந்திமதி
அம்மாளுக்கும் புத்திரராக அவதரித்தவர் ராமானுஜர். இவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. பல முயற்சிகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த திருமந்திர உபதேசத்த மற்றவர்களுக்கு தெரிவித்தால் நரகம் என்றல்லாம் மிரட்டிய போதும் தான் நரகம் சென்றாலும் கேட்ட அனைவரும் நன்மை அடையட்டுமென்று திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது ஏறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உபதேசித்தவர். இவரே பின்னாளில் மணவாள மாமுனிகளாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

_____________________________________________________________

முதலில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.

இருவரும் வைகாச சுக்ல பஞ்சமியில் பிறந்தவர்கள். அடுத்தடுத்த நக்ஷ்த்திரங்கள், ராமானுஜர் - திருவாதிரை, சங்கரர் - புனர்வசு.

இருவரும் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் பண்ணினவர்கள். இருவரும் மூல-குருவாக வியாசரையே வைத்துக் கொண்டுள்ளனர், இன்றைய மடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் உள்பட.

ராமனுஜரும் முதலில் படித்தது அத்வைதமே. யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் பயின்றாராம். பிற்காலத்தில் அவரே பின்னர் ராமானுஜருக்கு சிஷ்யரானதாக சொல்வர். (இந்த யாதவப் பிரகாசரை பற்றி அத்வைத ஆச்சார்ய பரம்பரையில் எங்கும் ஏதும் குறிப்பு கிடையாது)

சங்கரர் வைதிக மதத்தை நிலை நாட்டினார் என்று சொல்லப்படுவது போல, இராமானுஜரும் தனது பாஷ்யங்களில் இவற்றைப் விஸ்தாரமாக சொல்லி வைத்து, மக்களுக்கு உபதேசிக்கும் பொழுது சற்று இளக்கித் தந்ததாக சொல்லத் தெரிகிறது.

ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆதிசேஷனின் அவதாரம் என்கிறார்கள். ஆதி சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதர் பதஞ்சலியின் அவதாரம். பதஞ்சலியோ ஆதி சேஷனின் அவதாரம். (நாராயணன் பைநாகப்பாயில் படுத்துக் கொண்டு நடராஜ ரூபத்தில் லயித்த சமயத்தில் ஆதிசேஷணுக்கு கனம் அதிகமானதாம். பெருமாளிடம் காரணம் கேட்க, அவரும் நடராஜ ரூபத்தைச் சொன்னதால், ஆசைப்பட்டு ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது புராணம்). ஆகக் கூடி பார்த்தால் ஒருவரே ஆதிசங்கரருக்கு குருவாகி, பின்னர் சுமார் 1000 வருடங்கள் கழித்து ராமானுஜராக அவதரித்தார் போல.

_____________________________________________________________

அங்க-இங்க, தேடிப் பிடித்து 5 ஒற்றுமை வந்திடுச்சு....இப்போ 5 வித்தியாசங்களை பார்க்கலாமா!

சங்கரர் அவதாரத்திற்கு பின் ஏறக்குறைய சுமார் 1000 வருடங்களுக்கு பின்னர் அவதரித்தவர் ராமானுஜர், இவருக்கும் பின் வந்தவர் மத்வர்.

சங்கரர் 72 மதங்களை இணைத்து ப்ராதான்யமாக 6 மதங்களை ஸ்தாபித்து, பஞ்சாயதன முறையும் ஏற்படுத்தினார். இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவத்தை மட்டுமே வைத்து வசிஷ்டாத்வைதத்தை நிறுவிச் சென்றார்.

சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார், ஆனால் ராமானுஜர் எந்த மடங்களையும் ஸ்தாபிக்கவில்லை. 72 ஸிம்மாசனாதிபதிகள் என்பது சங்கரர் ஸ்தாபித்தது போல ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது அல்ல. இந்த ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே வருபவர்கள். க்ருஹஸ்த மார்க்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்கச் செய்த ஏற்பாடு. ஆனால் சங்கர மடத்தை அலங்கரிப்பவர்கள் ப்ரம்மச்சார்யத்திலிருந்து நேரடியாக ஸந்நியாசத்திற்கு வருபவர்கள்.

சங்கராச்சார்ய பரம்பரையில் ஸந்நியாஸிகள் 'தசநாமிகள்' என்னும் 10 விதமான வகைகளில் ஒன்றைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஏன் மாத்வாச்சார்யார் கூட இந்த 10 வகையில் ஒன்றான 'தீர்த்தர்'' என்ற பிரிவில் துரீயாச்சரமத்திற்கு வந்தார். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள 72 ஸிம்மாசனாதிபதிகளாகட்டும், அல்லது 12 ஆச்சார்யர்களாகட்டும் இந்த தசநாமிகளிலிருந்து துரீய நாமத்தை கொள்வதில்லை.

ஆதிசங்கரர் துரீயஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு பூணூல், சிகை கிடையாது என்று வைத்துள்ளார். ஆனால் 72 ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்தத்திலிருந்து வந்ததால் அவர்களுக்கு இந்த இரண்டும் உண்டு. அத்வைத ஆச்சார்யர்களுக்கு ஏகதண்டம், ஸ்ரீ வைஷ்ணவத்தில் த்ரிதண்டம்.

இவ்வாறாக பலவிதமான வேறுபட்ட வழிகளிலும் முயன்று நம்மைக் கடைத்தேறச் செய்யும் இந்த இரு ஆச்சார்யார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

_____________________________________________________________
அதெப்படி? இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?.

ஸர்வ-வேதாந்த ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் கோவிந்தம்
பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம்

ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி - ஸ்த்குருவான கோவிந்தனை நான் நமஸ்காரம் செய்கிறேன். அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம்.

பிகு: சில செய்திகளுக்கு மூலம் தெய்வத்தின் குரல்!!!

Saturday, May 3, 2008

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 1



அன்னை பராசக்திக்கு இந்த புண்ணிய பூமியில் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. இவைகளில் பல தேவி பீடங்கள் என்று மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றை பற்றி ஒரு தொடராக 2-3 பதிவுகள் எழுத எண்ணம்.

யாதேவி சர்வ பூதேக்ஷு சக்தி ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறைகிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.

த்ரிகோணம் என்பது எல்லா சக்ரங்களிலும் காணப்படுவது, தேவி வழிபாட்டில் இந்த முக்கோணம் மிக முக்கியமானது. பிந்து என்று சொல்லப்படும் ஸ்ரீசக்ர மத்ய கோட்டம் த்ரிகோணத்தால் பிரித்துக் காட்டப்படுகிறது. [இதனாலேயே தேவிக்கு "த்ரிகோண மத்ய நிலையா" என்ற பெயரும் உண்டு.] பாரத தேசமே வடக்கே அகன்றும் தெற்கே குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கிறது. இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாகுமரி ஆகிய மூன்று ஊர்களையும் நேர்கோட்டால் இணைத்தால் அழகான முக்கோணம் உருவாகிறது. ஆக நமது இந்த புண்ணிய பூமியே பிந்து ஸ்வரூபமாகிறது. சக்தி பீடங்கள் என்று ஆரம்பித்து ஏதோ பூ ப்ரதக்ஷிணத்துக்கு வழி சொல்ற மாதிரி போகிறது. எனினும் இந்த தேசமே தேவி மயம் என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து. இதுபோலவே தேகமே ஸ்ரீ சக்ரம் என்று பாவனோபனிஷத் விளக்குவதாக கேள்விப்பட்டிருக்கேன். அது ஞான மார்க்கத்தில் அந்தர்முக வழிபாட்டில் பேசப்படும் விஷயம் என்றே தெரிகிறது. நாம் இங்கு பார்க்க இருப்பது தேசமே தேவி ஸ்வரூபம் என்பது எப்படின்னுதான்.

சக்தி பீடங்கள் பல இருக்கிறது. சில புத்தகங்களில் 64 சக்தி பீடங்கள் என்றும், சிலவற்றில் 108 என்றும், சிலவற்றில் 51 மாத்ருகா அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 சக்தி பீடங்கள் என்றும் பலவாறு கூறப்பட்டுள்ளது. இதில் 51 மாத்ருகா பீடங்களே மிக முக்கியமாக கொள்ளப்படுவது. இமயம் முதல் குமரி வரையில், காமரூபம் முதல் கூர்ஜரம் வரை இந்த சக்தி பீடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் பரவியிருக்கிறது. மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீ காமாக்ஷி விலாசம் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதில், பூமியானது ஐந்து கோடி யோஜனை (1 யோஜனை எத்தனை கிலோ மீட்டர் (அ) மைல் என்று யாருக்கேனும் தெரியுமா?) விசாலமுடையது என்றும் இதில் 6400 தேவி சம்ப்ந்தமான பீடங்கள் இருக்கின்றது, அதில் 64 சிறந்தவை, அந்த 64ல் 51 மிகச் சிறந்ததாகவும், இந்த 51ல் 18 உன்னதமானது என்றும் இந்த 18லும் 3 மிக உயர்ந்ததென சொல்லப்பட்டிருக்கிறது என்பர்.

மேலே சொன்ன மிக உன்னதமான மூன்று பீடங்களாவன, காமராஜ பீடம், ஜலாந்த்ர பீடம், ஒட்டியாண பீடம். இவை அமைந்துள்ள இடங்கள் முறையே காஞ்சி, ஜ்வாலாமுகி மற்றும் பூரி ஜகன்னாத் ஆகியன. காமராஜ பீடத்தில் ஹயக்ரீவர் ஸ்ரீசக்ரத்தை பூஜித்து அருள் பெற்றதாகவும், ப்ருகு முனிவர் ஜலாந்திர பீடத்திலும், வேத வியாசர் ஒட்டியாண பீடத்திலும் பூஜித்து அன்னையின் அருள் பெற்றதாகவும் தெரிகிறது.

சக்தி பீடங்கள் தோன்றிய வரலாற்றினை அடுத்த பகுதியில் காணலாம்.