முந்தைய பதிவில் ஸ்ரீ மாதா என்கிற நாமம் அன்னையின் ஸ்ருஷ்டிச் செயலையும், கருணையையும் எப்படி எடுத்துக் காண்பிக்கிறதென்று பார்த்தோம். அடுத்த நாமமான ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.
ராஜராஜன் என்ற பதம் ஈஸ்வரனைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனுக்கே ஈஸ்வரி என்பது ராஜராஜேஸ்வரி என்ற நாமம். ஈஸ்வரன் பஞ்சகிருத்யங்களை சக்தியின் உதவியாலேயே செய்கிறான். அன்னைக்கே இன்னுமோரு பெயர் "பஞ்சகிருத்திய பராயணா" என்றும் உள்ளது. அது என்ன பஞ்சகிருத்தியம்?, அப்படியென்றால் என்றால் என்ன?.
பஞ்சகிருத்தியம் என்பது ஐந்து தொழில்கள். பஞ்சகிருத்திய பராயணா என்றால் ஐந்தொழிலைச் செய்பவள் என்றே அர்த்தம். இந்த ஐந்து தொழில்களையே சற்று எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்) ஆகிய முத்தொழில்கள் என்று சொல்கிறோம்.
உலகில் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்க வேண்டும், ஸ்ருஷ்டித்தவற்றை காக்க (ஸ்திதி) வேண்டும். தகுந்த காலத்தில் அவற்றை நீக்கவும் வேண்டும். சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா? இதனையே கம்பர் தனது பாயிரத்தில் "தாமுளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்" என்று கூறுகிறார்.
ஆக, இந்த மூன்று செயல்களும் நடைபெற வேண்டுமானால் இன்னும் இரு செயல்கள் வேண்டியிருக்கிறது, அதுவே திரோபாவம் (அ) திரோதானம் என்று கூறப்படும் மாயை (அ) மறைத்தல். ஐந்தாவது செயல் அனுக்ரஹம். ஆக இந்த ஐந்து தொழிகளையும் அன்னையின் சக்தியாலேயே செய்கிறானாம் ஈஸ்வரன். லலிதையின் ஆயிரம் நாமங்களில் முதல் மூன்று மட்டுமே முத்தொழிலை குறிப்பிடுவது, மற்ற எல்லா நாமங்களும் திரோதானத்தையும், அனுக்ரஹத்தையுமே சொல்லக் கூடியதாக இருக்கிறது.
இதைத்தான் " ஈசாதி தேவதாயை" என்றும் "ஈச சக்தி" என்றும் லலிதா த்ரிசதி சொல்கிறது. இதைத்தான் "நசே தேவம் தேவோ ந கலு குசல: " என்று ஆதிசங்கரர் தனது செளந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
3 comments:
மறைத்தல், அருளுதல் மற்ற இரு தொழில்கள். நல்லா இருக்கு மெளலி, ரொம்பவே புண்ணியம் செய்திருக்கீங்க, இதை இப்படி உணர்ந்து எழுதறதுக்கு!
ஸ்ரீ மஹாராக்ஞி என்றால் மஹாராணி என்ற அளவில் தான் பொருள் புரிந்து வைத்திருந்தேன் மௌலி. இன்று தான் அது காத்தல் தொழிலுக்கான திருநாமம் என்று புரிந்தது. மிக்க நன்றி.
//சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா?//
நல்ல விளக்கம். அவளைப் பற்றிக் கேட்க சுகமாக இருக்கிறது. நன்றி மௌலி.
Post a Comment