Sunday, March 7, 2010

ஸ்ரீமாதா - 2


ஸ்ரீமாதா என்கிற நாமம் அன்னையின் ஸ்ருஷ்டிச் செயலையும், கருணையையும் எப்படி எடுத்துக் காண்பிக்கிறதென்று முன்பு இந்த இடுகையில் சிறிது பார்த்தோம். தற்போது நம்பிக்கைக் குழுமத்தில் இதனை எழுத எண்ணிய போது சில விஷயங்கள் இன்னும் கோர்வையாகத் தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை.

பக்திமார்க்கத்தில் இறையை வழிபட பல விதங்களைச் சொல்லியிருக்கிறார்கள் நம் பெரியோர் அவை, 'சத்புத்ர மார்க்கம்' என்று இறையை தாயாக வழிபடுதலையும், 'சகா மார்க்கம்' என்று இறைக்கு தோழனாக வழிபடுதலையும், தாஸ மார்க்கம்' என்று இறைக்கு அடிமையாக வழிபடுதலையும், இறையையே குருவாகக் கொள்ளுதலை 'சன்மார்க்கம்' என்றும், இறை சக்தியை கணவன் அல்லது தோழனாக வழிபடுதலை 'நாயகி மார்க்கம்' என்பவை. ஆதி சங்கரர் ஆறுவகை சமயங்களை தொகுத்து அளித்தாலும், அவருக்கு உபாசனா மூர்த்தியாகக் கொண்டது சக்தியையே. அதிலும் அவர் மற்ற மார்க்கங்களை எடுத்துக் கொள்ளாது, சக்தியின் சத்புத்ரனாகவே தன்னை பாவித்துச் செய்த பல ஸ்லோகங்களே அதிகம்.

தாயின் வயிற்றிலிருந்துதான் நாம் எல்லோரும் வந்திருக்கிறோம். தாயை தெய்வமாக நினைப்பது நமக்கு எளிதான ஒன்று, நாம் எல்லோரும் அப்படியே நினைத்து பெற்றவளை வணங்குகிறோம். இதையே திருப்பி தெய்வத்தை தாயாக வழிபடுதல் என்பதே அம்பிகையின் தியானம். நாம் என்ன தவறுகள் செய்தாலும் தாய் ஒருத்திதான் அவற்றை எல்லாம் மன்னித்து நம்மை பேணுகிறாள். தந்தை, குரு போன்றவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளித்தே நம்மைத் திருத்துவார்கள். நாம் பல தவறுகள் செய்தாலும் அதற்கான தண்டனை என்று ஏதுமில்லாது, நம்மிடம் கருணை காட்டுகின்ற அம்பிகையைத் தாயாக தியானிப்பது சரிதானே?. இதனால்தான் வசினி தேவதைகள் அன்னையை 'ஸ்ரீமாதா' என்று தியானித்து சஹஸ்ரநாமத்தை தொடங்குகிறார்கள் போலும்.

சிறுவயதில் நான் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய போது, என் தாயிடம், 'அப்பாவிடம் சிபாரிசு செய்து இந்த முறை பிராகரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்கிக் கொடுத்துடும்மா, அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிவிடுவேன் என்று அவரிடம் சொல்லு' என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். இன்று அதை நினைத்துப் பார்க்கையில், பலபட்டை சொக்கநாதர் என்னும் புலவர் எனக்கு நினைவுக்கு வருகிறார். என்னைப் போன்றே அவரும் அன்னை, ஜகன்மாதாவின் மூலமே தனது கோரிக்கைகளை இறைவனிடம் தெரிவிக்கிறார். அந்தப்பாட்டு,

ஆய் முத்துப் பந்தரில்
மெல்லணைமீது உன் அருகிருந்து
'நீ முத்தம் தா' என்றூ அவர் கொஞும்
வேளையில் நித்தம் நித்தம்
வேய் முத்தரோடு என் குறைகள்
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால்
வாய் முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அம்மையே!

இந்தப் புலவருக்கு அன்னை சிபாரிசு செய்யாது இருந்திருப்பாளா?. தாயிடம் மட்டுமே நாம் இவ்வளவு உரிமையுடன் பழக முடியுமன்றோ?.

ஆதிசங்கரர் சிவ-சங்கராஷ்டகம் என்று ஒரு ஸ்துதி செய்திருக்கிறார். அந்த அருமையான ஸ்லோகத்தில்,'யம கிங்கரர்கள் என்னைப் பயமுறுத்தி இழுத்துச் செல்லும் சமயத்தில், கருணையோடு கூடிய எனது தாய் உமையோடு நீ என் இதயத்தில் வந்தமர்ந்து, யம வாதனையை நிவாரணம் செய் என்று துதித்திருக்கிறார். இதில் அம்பிகையை சொல்லும் போது குறிப்பாக "கருணையோடு கூடிய எனது தாய் உமை" என்பது எத்துணை அருமையாக நமக்கு அவளது கருணையைத் தெளிவுபடுத்துகிறது?.

'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊணினை உருக்கி உள்ளொளி பெருக்கி' என்றும்

'தாயாய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் போக மாட்டேனா' என்றும் மாணிக்கவாசகர் சொல்வதிலிருந்தும் நமக்கு தாய் என்பவளது கருணை, அருள் புலனாகிறது.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே அம்பிகையின் உருவம்தான். அவளுக்கு உருவமே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் சாமனியனான நிலையில் நமக்கு உருவமே இல்லாத தெய்வம் என்பதை ஏற்க முடிவதில்லை. அவளிடமிருந்தே இந்த உலகம், மற்றும் நாம் வந்ததால் அவள் நமது அம்மா. நாம் அவளது குழந்தைகள். அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தால் போதுமா?, அவளை பார்க்க வேண்டும், அவளுடன் பேசி, கொஞ்சி, விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசை படுகிறோம் அல்லவா?. இவ்வாறான ஆசைகளை பூர்த்தி செய்வதற்காகவே அவள் பல ரூபங்களில் காக்ஷி தந்திருக்கிறாள். அந்த ரூபங்கள் எல்லாம் ஆயிரம் நாமங்களில் ஒவ்வொன்றாக இருந்தாலும், 'ஸ்ரீமாதா' என்று விளிக்கும் இந்த மஹா மந்திரத்தினை மீண்டும் மீண்டும் சொல்வதாலேயே நமக்கு அவளது கருணா கடாக்ஷம் கிடைக்கும் என்றால் அது மிகையாகா.

11 comments:

கபீரன்பன் said...

// முத்தரோடு என் குறைகள்
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால்
வாய் முத்தம் சிந்தி விடுமோ? //

ரெகமெண்டேஷன் இல்லாமல் எதுவும் நடக்காது போலும் :))

அழகான கருத்து நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...

அதனால் தான் அவனை வழிபடும்போது கூட தாயும் ஆனவனாக, தாயிற் சிறந்த தயாவான சத்துவனே என்று தாய்மையோடு சேர்த்துத் தான் வழிபடவேண்டியிருக்கிறது!

பாவனை அதனைக் கூடிற் பரமனைக் கூடலாமே!

தி. ரா. ச.(T.R.C.) said...

தில் அம்பிகையை சொல்லும் போது குறிப்பாக "கருணையோடு கூடிய எனது தாய் உமை" என்பது எத்துணை அருமையாக நமக்கு அவளது கருணையைத் தெளிவுபடுத்துகிறது?.

உண்மையான வார்த்தைகள். அம்மாகிட்டே நமக்கு என்ன வேணும்னு கேக்கவே வேண்டாம். அவளாகவே நம் தேவையை அறிந்து கொடுப்பாள். அதன்னால்தான் பால் நினந்து ஊட்டும் தாயினும் என்றார் மணிவாசகப் பெருமான்

தக்குடுபாண்டி said...

//வாய் முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அம்மையே!// அடடா! அடடா! அருமையான வரிகள்....:)

Jayashree said...

நன்னா எழுதியிருக்கேள். ஸ்ரீ மாதாங்கறது , ஸ்ரீ ஒரு அடை மொழியோ, மரியாதைக்காக உபயோகிக்கற term ஆய்ங்க உபயோகப் படுத்தப்படலைன்னு தோனறது.. ஸ்ரீ ங்கறதுக்கு பரவி, PERMEATE / SPREAD நும் அர்தம் உண்டுன்னு நினைக்கிறேன்.ஒரு discourse ல ஒருத்தர் ஸ்ரீ ங்கறதுக்கு விஷம் னு அர்த்தம் இருக்கறதா சொன்ன ஞ்யாபகம்.விஷத்தின் குணம் பரவி ஊடுருவி போறது.அந்த தன்மையை இந்த term சொல்லறது போல இருக்கு. ஸ்ரீ மாதாங்கறது அன்னை என்ற physical form இல்லை.தமிழ்ல எப்படி சொல்லறதுன்னு தெரியல்லை.அது தாய்மையோட universal consciousness.அது மாதா, ப்ரசவித்ரி, அம்பிகா, ஜனனி,விதாத்ரிங்கற தாய்மையின் 5 aspects ஐயும் ஒட்டுமொத்தம்மா ஒரே வார்த்தைல சொல்லிடறது..
just a piece of thought!!:))

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மேடம்....நீங்க சொல்லியிருப்பது போல அது கண்டிப்பாக அடைமொழி மட்டும் அல்ல. சகல லோக-ஜனனி, எல்லா உலகங்களும் ஜனிக்க காரணமானவள். அந்த உலகங்களில் இருக்கும் சகல-ஜீவன்களுக்கும் தாயானவள் என்பதே நானும் சொல்ல வந்தது...நான் சொல்லியிருக்கும் உதாரணங்கள் அந்தப் பொருளை கொடுக்கவில்லை போலும். தங்களது கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி மேடம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது

மதுரையம்பதி said...

வாங்க கபீரன்பன் சார். உங்க வீட்டுப்பக்கம் வந்து பல நாட்களாகிறது...வரும் 2 நாட்களில் விடுபட்டதை எல்லாம் படிக்கவேண்டும்.

மதுரையம்பதி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

மதுரையம்பதி said...

திராச ஐயா, இருமுறை வந்து ஸ்ரீமாதாவை வணங்கினீர்கள் போல, நல்லது. உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா.

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு, உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிடப் போறேன்?. :). நெல்வேலி வடிவுடையாளை நீங்க இன்னும் நிறையச் சொல்லணும்.