பனிமலர்ப் பூங்கணையும் கருப்புச் சிலையு மென்பாசங்குசமும்
கையில் அனையும் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே
என்கிறார் அபிராமி பட்டர். மன்மதன் கரும்பு வில்லையும், மலர்பாணங்களையும் கொண்டே சகல ஜீவராசிகளையும் மோகத்தில் ஆழ்த்துகிறான். 'என்பக்தர்களை இப்படி மோகத்தில் ஆழ்த்தி துன்பப்படுத்தாதே' என்றே அம்பிகை மன்மதனிடத்திருந்து வில்லையும், பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டாள் என்பார்கள் பெரியோர். இதற்குள் ஒரு பெரிய யோக தத்துவம் அடங்கியிருப்பதாகவும் சொல்வர். மன்மதனைப் பற்றி ஒரு செய்தி முன்பே பார்த்தோம். மன்மதன் பராம்பிகையின் பரம பக்தன்.அம்பிகையின் தலைசிறந்த 12 பக்தர்களில் மன்மதனும் ஒருவன். இவன் அம்பிகையை வணங்கிய முறை 'காதி'வித்தை என்று ஸ்ரீவித்யையில் ஒரு முறை. இந்த காதி-வித்யைக்கு அனங்கனே அதிபதி. சரி அனங்கனிடத்திருந்து பெற்ற பஞ்சபாணங்கள்களில் இருக்கும் மலர்கள் என்ன என்று பார்த்துவிடுவோம். அவை, தாமரை, அசோகம், சூதம் என்னும் மாம்பூ, முல்லை மற்றும் நீலோத்பலம்.
சாதாரணமாக என்னைப் போன்றவர்களிடத்து, கோபம், லோபம் போன்ற கெட்ட எண்ணங்கள் மதம் கொண்ட யானையைப் போன்று வெறித்து அலைக்கழிப்பது தெரிகிறது. அதை அடக்கி நல்வழிப்படுத்த அம்பிகை வைத்திருப்பதுதான் அங்குசமும், அடக்கியபின் கட்ட ஒரு பாசக் கயிறும்.
இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞான ரூபிணிம்
க்ரியாசக்தி மயே பாண தனுஷீ தத்த உஜ்வலம்
என்பது ஞானார்ணவத்தில் சொல்லப்படுவது. இங்கே பாசம் என்பது இச்சாசக்தி, அங்குசம் என்பது ஞானசக்தி, பாணம், தனுஸ் ஆகிய இரண்டும் க்ரியாசக்தி. அம்பிகையின் பாசம் என்னும் சக்திதான் நம்மை மாயையில் ஆழ்த்துகிறது. இந்த பாசத்தை நீக்க வேண்டுமானால் அதற்கு ஒரு ஆயுதம் வேண்டும். இந்த மாயை என்னும் பாசக் கட்டை அகற்ற, அதைவிட பலமான கட்டு ஒன்றைப் போடவேண்டும். அம்பிகையின் தயவு இருந்தால் மாயையை விட பலமான பக்தி என்னும் கட்டை போட்டு பாசம் என்னும் மாயையை நீக்கலாம். அம்பிகையின் ஆயுதமான பாசக் கயிற்றுக்கு அதிஷ்ட்டான தேவதையாகச் சொல்வது அச்வாரூடா. இந்த அச்வாரூடாவே அம்பிகையின் குதிரைப்படைத் தலைவி. அம்பிகையின் இந்த அச்வாரூடா என்னும் ரூபத்தில் அவள் குதிரையில் அமர்ந்ததாகவே சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவள் அமர்ந்திருக்கும் குதிரைக்கு 'அபராஜிதா'என்று பெயர். மன அடக்கம், இந்திரிய அடக்கம் போன்றவை வாய்க்க அச்வாரூடா அருள் தேவை என்பது சாக்த மொழி.
அம்பிகையின் இன்னொரு கையில் இருப்பது அங்குசம். இந்த ஆயுதத்திற்கு அதிஷ்ட்டான தேவதை சம்பத்கரி, இவள் அம்பிகையின் யானைப்படை தலைவி. இவள் யானை மீது அமர்ந்திருப்பவள், இவள் அமர்ந்திருக்கும் யானையின் பெயர் ;கோலாகலம்'. 'நான்' என்னும் அஹங்காரம் நீங்க இவளது அருள் வேண்டும். மனித வாழ்க்கை பல சிக்கலான பிரச்சனைகளுடன் கூடியது, இரட்டை இயல்பு கொண்டது. இவ்விரண்டில், ஒன்று, உடம்பை வளர்க்க-சுக சாதனங்களைத் தேடுவது, இன்னொன்று பரபிரம்மத்தை, ஈஸ்வரனை அடையும் முயற்சி. இவற்றில் ஒரு முயற்சி அதிகமானால் இன்னொன்று தடைபடும். சம்சாரத்தில் ஈடுபடுவனுக்கு ஆத்ம வளர்ச்சிக்கு நேரம் கிடைப்பதில்லை. அதேபோல ஆத்ம வளர்ச்சியில் ஈடுபடுபவனுக்கு உலகாயமான வஸ்துக்களில் மனது செல்வதில்லை.ஆக இதற்கு என்னதான் வழி என்று பார்த்தோமானால், பராசக்தியின் பாதங்களே சிறந்த வழி என்று தோன்றுகிறது.
அந்தந்த காலங்களில் அந்தத வேகங்கள், இயற்கையின் உத்தல்கள் ஏற்பட்டாலும், மனத்தை அச்வாரூடாவின் த்யானத்தால் அடக்கி, கலங்காத மனத்துடன் பராம்பிகையைப் பிரார்த்திக் கொண்டே இருப்போமானால், பிஞ்சு காயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து விடுபடுவது போல சம்சாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று கூறுவார்கள். மனம் என்பது எண்ணங்களே என்பார் எனது தந்தை. ஒருவனது வாழ்வில் 4 விஷயங்களை முக்கியமானதாகச் சொல்லலாம், அவை ஊக்கம், கற்பனை, அறிவு, அன்பு. ஒருவனுக்கு தான் செய்யும் கற்பனையாலும், சிந்தனையாலுமே 'நான்','எனது' என்னும் பற்று ஏற்படுகிறது என்பார் என் தந்தை. அம்பிகையை அடைவதற்கு முன்னர் குதிரையைப் பழக்குவது போல மனதை பழக்கவேண்டும், அஹங்காரம் என்னும் யானையை ஒடுக்கவேண்டும் என்பார். இதனை எல்லாம் எவ்வளவு சாதிக்கிறானோ அவ்வளவு தூரம் அம்பிகையை நெருங்க முடியும் என்பார். ஆக உலகத்தில் சம்சார பந்த பாசங்களில் இருந்து கொண்டே, தர்ம மார்க்கத்தில் குடும்பத்தை நடத்தியவாறு அம்பிகையின் மீது ஈடுபாட்டைப் பெற்று, 'நான்' என்னும் மமதையை ஒழித்துவிட்டால் அவளை அடைந்திடலாம்.
சரி இவ்வளவு சொல்லிவிட்டு மற்ற இரு அஸ்திரங்களின் அதிதேவதையின் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி?. கரும்பு விலலுக்கு சியாமளா என்கிற ராஜ மாதங்கி என்பவள் அதிதேவதை. மனம் என்னும் வில்லைக் கொண்டு புத்தியை கட்டுப்படுத்துகிறது. இந்த ராஜமாதங்கியின் அருளிருந்தால் மனமும், புத்தியும் அம்பிகையிடம் லயிக்கும் என்பார்கள். இவளுடைய இடம் பராம்பிகையின் வலது புறம். பராம்பிகையின் முத்திரை மோதிரத்தை தரித்தவள், ஆகையால் இவள் மந்திரிணி எனப்படுவாள். மதுரை மீனாக்ஷியை மந்திரிணியாக ரூபமாகச் சொல்வார் ஆதிசங்கரர் முதலான பெரியோர்கள். புஷ்பபாணங்களுக்கு அதிதேவதை வாராஹி. அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதி இந்த வாராஹி, ஆகையால் இவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்ற பெயர் உண்டு. பிறரை தண்டித்து அடக்கும் செயலைச் செய்வதால் இவளை தண்டினி என்பர். திருவானைக்காவல் அகிலாண்ட நாயகியை தண்டினி/வாராஹி ஸ்வரூபம் என்பர் பெரியோர். இவள் உக்ரமானவள், ஆனால் அம்பிகையின் பக்தர்களுக்கு சகல அரிஷ்ட தோஷங்களையும் நீக்கி சாதகனுக்கு அருள்பவள். ''வாராஹி வீர்யநந்தனா' என்பதன் காரணமாக "வாராஹிக்காரனுடன் வாதாடாதே" என்பதன் மூலமாக இவளைச் சிறப்பாகச் சொல்வது வழக்கு.
ராஜ மாதங்கி மற்றும் வாராஹி பற்றி நிறையப் பேசலாம். சாக்தத்தில் இவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. பின்னர் இந்த இருவரையும் பற்றி தனி இடுகைகள் எழுத எண்ணம் இருக்கிறது. அடுத்த நாமாவை நாளை பார்க்கலாமா?
2 comments:
"மனம் என்பது எண்ணங்களே என்பார் எனது தந்தை"
ரொம்ப சரி. அப்பா!! வெறும் எண்ணமா!! எண்ணங்களின் வலை:(((
மனோ ரூபேஷு கோதண்டா- கரும்பு வில் மனஸ் தத்வம் என்கிறார் பெரியவா. ஏன் கரும்பு அதுக்குனு தெரியல்லையே!
பஞ்ச தன்மாத்ர சாயகா -சரி நீங்க சொல்லற பஞ்ச இந்த்ரியங்களை அடக்க 5 பாணம். அதுல பூ பாணம் ஸ்பெஷலானு புரியல்லையேப்பா.
இந்த WEAPONS METALS ல இல்லம கரும்பும், பூவாவும் இருக்க ஏதாவது INNER SIGNIFICANCE இருக்கணும்!!
மந்த்ரிணி தேவி கையில் இருக்கும் வில் தனுர்வேதா குடுத்த சித்ரஜீவம்னு
ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளோட லலிதோபாக்யானத்துல படிச்சிருக்கேன்.
ரொம்ப அருமையா இருக்கும்மா படிக்க. THANKS !!BLESS U
Post a Comment