Saturday, December 31, 2011

ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்




கடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.


ராமானுஜரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா? என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.

“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.

பிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 19, 2011

ஆழ்வார்களைத் துயிலெழுப்பும் ஆண்டாள்...




பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் சேஷசாயி 2-3 நாட்கள் முன்னர் தொலைபேசியில் பேசினான். அப்போது, அவன் மூலம் அறிந்த சில செய்திகளே இந்த இடுகை.



திருப்பாவை முதல் பத்து பாடல்களில் ஆண்டாள், ஆழ்வார்களைத் துயில் எழுப்பியிருக்கிறாள் என்பதாக ஒரு தாத்பர்யம் இருக்கிறதாம். அதாவது திருத் தொண்டர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் துயிலெழுப்பி, அதன் பின்னர் நப்பின்னையான தாயாரை முதற்க் கொண்டு பெருமாளை சரணடைகிறாளாம் கோதை. எந்தப் பாடல்களில் எந்த ஆழ்வாரைக் குறிப்பிட்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கலாம்.



“புள்ளும் சிலம்பின காண்” என்னும் பாசுரத்தில், ‘பிள்ளையே எழுந்திராய்’ என்று கூறியிருப்பது பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். பொய்கையார் பிள்ளைப் பிராயத்திலேயே இறையனுபவம் பெற்றிருந்தவராம்.



“கீசு கீசு என்றெங்கும்” என்ற பாசுரத்தில், ‘பேய்ப் பெண்ணே’ என்று வருவது பேயாழ்வாரைக் குறிக்கிறது என்றும், “கீழ்வானம் வெள்ளென்று” என்கிற பாசுரத்தில், ‘கோதுகுலமுடைய பாவாய்’ என்பது பூத்த்தாழ்வாரைக் குறிப்பது என்றும் சொல்லுவார்களாம். பூதத்தாழ்வார், திருமல்லையில் சயனித்திருக்கும் பெருமாளைப் பாடும் போதெல்லாம் மிகுந்த குதுகலம் அடைவாராம். ஆகவே அந்தக் குறியீட்டின் மூலமாக பூத்த்தாழ்வாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதாகத் தெரிகிறது.



“தூமணி மாடத்து” என்கிற பாசுரத்தில், ‘மாமன் மகளே’ என்றது திருமழிசை ஆழ்வாரைக் குறிப்பதாம். ப்ருகு முனிவரின் புத்ரியாக அவதரித்தவள் பார்கவி என்றழைக்கப்படும் ஸ்ரீ தேவியான மஹாலக்ஷ்மி. ப்ருகு முனிவரின் புத்ரர் பார்க்கவர். இந்த பார்கவரின் புத்ரராம் திருமழிசையாழ்வார். ஆகவே ஆண்டாள் 'மாமன் மகளே' குறிப்பிடுவது திருமழிசைபிரானை என்கிறார்கள்.





“நோற்று சுவர்க்கம் புகுகின்ற” என்னும் பாசுரத்தில், ஆற்ற அனந்தனுடையார்” என்பது ஆற்றுக் கொண்ட குலசேகராழ்வாரைக் குறிப்பதாம். இவருக்கு ராமனிடத்தான ஈடுபாடு அசாத்யம். ராமாயண காவியத்தைப் கேட்கும் போது தன்னை மறந்து ராமனுக்கு உதவக் கிளம்பிடும் அளவு ஆற்றங் கொண்டவர் என்பதால் இவரைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.



“கற்றுக்கறவை” என்னும் பாசுரத்தில், ‘குற்றமொன்றில்லாத கோவலர்: என்பதாகச் சொல்லுவது பெரியாழ்வாரை. அதாவது ஆசாரம், நியம-நிஷ்டையில் வழுவாதவரான பெரியாழ்வாரே இங்கு குற்றமில்லாத கோவலர் என்று கூறுகிறார்கள்.



“களைத்திளங் கற்றெருமை” என்பதில், ‘நற்செல்வன் நங்காய்” என்பது தொண்டரடிப் பொடியாரைக் குறிப்பதாகவும், “எல்லேஇளங்கிளியே” எனும் பாசுரத்தில், ‘கிளியே’ என்பது திருமங்கையாரைக் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறதாம். திருமங்கையார் கிளியைத் தனது பாடல்களில் அடிக்கடிச் சொல்லியிருக்கிறதால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறதாம்.


“புள்ளின்வாய் கீண்டானை: என்ற பாசுரத்தில், ‘போதரிக் கண்ணினாய்’ என்றது திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறதாம். “அமலாதிபிரான்” என்று தொடங்கும் பாசுரம் முதலாக பல பாசுரங்களில் பெருமாளின் கண்ணழகை மிகவும் வர்ணித்தவராம் திருப்பாணாழ்வார். ஆகவே இந்த்ப் பாடல் அவரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள் போல.



“உங்கள் புழக்கடை” என்னும் பாசுரத்தில், ‘நங்காய்’ என்பது நம்மாழ்வாரைக் குறிப்பதாம். நம்மாழ்வாரது தாயார் பெயர் நங்காய் என்பதால் இந்தக் குறியீடு அவரையே குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.



....................................................................................2011 மார்கழிப் பதிவுகள் தொடரும்

Saturday, December 10, 2011

திருக்கார்த்திகை - தீப கைங்கர்யச் செம்மல்கள்...




திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் 2 நாட்கள் முன்னரே கார்த்திகை தீபத் திருநாள் முடிந்துவிட்டது. கார்த்திகை நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டாடப்பட்டது அது. இன்றுதான் கார்த்திகைப் பெளர்ணமி, சர்வாலய தீபம். அதாவது தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரும் பெளர்ணமியும், அந்த பெளர்ணமியன்று இருக்கும் நக்ஷத்திரங்களும் சிறப்புடன் ஆலயங்களில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம் (வைகாசி பெளர்ணமி, ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை பெளர்ணமி நாட்களே). இது போன்றே கார்த்திகையில் பெளர்ணமியன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும். ஆனால் இந்த வருஷம் கார்த்திகை நக்ஷத்திரம் பெளர்ணமிக்கு இருதினங்கள் முன்னதாக வந்திருக்கிறது. ஆகவே பெளர்ணமியை அடிப்படையாகக் கொண்ட சர்வ ஆலய தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாளில் தீபத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டாடிய சிலரை நாமும் நினைவுக் கொண்டு வந்து அவர்கள் போன்று தீபத்தை வணங்கலாம் வாருங்கள்.


கலிநாயனார் என்பவரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்தாலும், திருவெற்றியூர் கோவிலில் தீபமேற்றும் பணியைச் செய்து வந்தவர். காலக் கிரமத்தில் தனது வியாபாரம் நொடித்துப் போன போதிலும் கோவிலில்தீபமேற்றுவதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு சமயத்தில் வறுமை முற்றி தன்னால் விளக்கு ஏற்ற எண்ணைய் வாங்கவும் இயலாத நாளில் தனது ரத்தத்தையே விளக்கிற்கு எண்ணையாக்க முயல்கிறார். அந்த சமயத்தில் ஈசன் அவருக்கு தரிசனம் தந்து கலிநாயனாரைகாப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. தனது உடலை வருத்தி தீபம் ஏற்றத் துணிந்த கலிநாயனாருக்கு இறைதரிசனம் கிட்டியிருக்கிறது.


கலிநாயனார் போன்ற இன்னொருவர் கணம்புல்லர் என்பவர் இவரைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அணங்குமைபாகம் ஆக அடக்கி ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல்வருந் தவத்த
கணம் புல்லார்க்கு அருள்கள் செய்து காதமால் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பார் போலும்


கணம்புல்லர் என்பது இவரது தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயரெனத் தெரிறது. நித்தமும் காட்டிற்குச் சென்று கணம்புல்லை சேகரித்து அதை கிராமங்களில் விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிதம்பரம் ஆலயத்தில் விளக்கேற்றி வந்தவர்.சில காலமாக இவர்விற்று வந்த புல்லை யாரும் வாங்காத காரணத்தால் எண்ணெய் வாங்க இயலாது தவிக்கிறார். கோவிலில் தீபமேற்ற இயலாது வருந்தியவர், ஆத்மஹத்தி செய்து கொள்ள தீர்மானித்து தீ மூட்டி அதில் குதிக்க முயல்கிறார், அப்போது அவருக்கு இறைதரிசனம் கிட்டுகிறது என்பது சேக்கிழார் பெருமானது வாக்கு.


மூன்றாவதாக வருபவர் நமிநந்தி அடிகளார். இவர் திருவாரூரில் விளக்கேற்றும் திருப்பணி செய்தவர். இவருக்கும் ஒரு சமயத்தில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்காத நேரத்தில் சமணர்கள் இவரிடத்தில் 'உங்கள் தெய்வத்திற்கு நெய் விட்டு விளக்கேற்றத்தான் வேண்டுமோ?,தண்ணீரை விட்டு விளக்கேற்ற உங்கள் தெய்வம் அருளாதா?' என்று பரிகசித்ததாகவும், மனம் நொந்து, இறைவனைப் பணிந்த அடிகளார் குளத்து நீரை விட்டு விளக்கேற்றியபோது அவை பிரகாசமாக ஒளிர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவரது தொண்டை அப்பர் பாடுகையில்பின்வருமாறு பாடிச் சிறப்பித்திருக்கிறார்.


ஆராய்ந்தடித் தொண்டர் ஆணிப்பொன் ஆரூரகத்தடங்கி

பாரூர் பரிப்புத்தகம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி

நீராற் திருவிளக்கிட்டமை நாடறியுமன்றே


வள்ளலார் ஸ்வாமிகளும் அருட்பெருஞ்சோதியாகவே இறைவனை வழிபட்டவர் என்பது நாம் அறிந்ததே!.


தமிழகத்திலிருக்கும் பல கோவில்களின் வரலாற்றைச் சொல்லும் கல்வட்டுக்களிலும் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு என்றே நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கோவிலில் ஒரு விளக்கு எரிக்க நிவந்தம் அளிக்கையில் அதற்கு விளக்கு மட்டும் கோவிலுக்கு அளிக்கவில்லைநம் பெரியோர்கள். அந்த விளக்கெரிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வைப்புநிதியாக பசுக்கள், ஆடுகள் போன்றவற்றை அளித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆடு/பசுக்களை அளிக்கையில் அவை பல்கிப் பெருகிட கிடாய்/எருது போன்றவற்றையும் சேர்த்து அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள்தெளிவாகச் செய்தி பகர்கின்றன.


இவ்வாறு நம் முன்னோர்கள் போன்று நாமும் நம்மால் இயன்ற அளவு தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வோம், குறிப்பாக திருக்கார்த்திகை தீபத்தினை சிறப்பாகக் கொண்டாடுவோம், தீப ஒளி எங்கும் வீசட்டும், அவ்வொளி நமக்கு ஞானஒளியாக திகழட்டும்.


தீப மங்கள ஜ்யோதி நமோ நம:

வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம: