Monday, October 29, 2007

சதுர்பாஹு சமன்விதா


அனனை லலிதாவின் நாமங்களில் "சதுர்பாஹு சமன்விதா" என்பது ஒரு நாமம். இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறது சஹஸ்ரநாமம். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதுதான் சதுர்பாஹு சமன்விதா.
சரி அந்த 4 கரங்களில் இருப்பவை என்ன?. அது எதைக்குறிக்கிறது? அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.

ராக-ஸ்வருப பாஷாட்யா
குரோதாகாராங்குச உஜ்வலா
மனோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.

அதாவது பாசம், அங்குசம், கரும்புவில் மற்றும் 5 மலர்களால் ஆன பாணங்கள் இவை அன்னையின் நான்கு கைகளில் இருக்கும் ஆயுதங்கள்.

இக்ஷு கோதண்டா என்பது கரும்புவில் அது வெறும் கரும்பினால் ஆன வில் அல்ல. அது நமது மனத்தை குறிக்கிறது. அதனால்தான் மனோரூபேக்ஷு கோதண்டா. மனம் தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வளைந்து கொடுக்கிறது. மனம் தான் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதால்தான் மாயையில் வீழ்ந்துவிடும் சாத்தியங்கள் உருவாகின்றது. அறிவியல் மூளை சிந்திக்கிறது என்று சொல்கிறதே தவிர அதனை சிந்திக்கத் தூண்டும் மனம் எங்கு இருக்கிறது என்று சொல்முடியவில்லை. எனவேதான் வளந்து கொடுக்கும் மனத்தை கரும்புவில்லாக கொண்டிருக்கிறாள் அன்னை. ஏன் கரும்பு?, ஏன் மூங்கில் இல்லை?, மனம் என்றும் இனியதை நினைக்கிறது, தனக்கு பிடித்ததையே செயல்படுத்தவிழைகிறது, அதனாலேயே கரும்பு வில் / இக்ஷு கோதண்டம். நமது மனத்தை வளைத்து அதனை தன் போக்கில் விடாமல் சரியாக பயன்படுத்தவேண்டும் என்பதால் தனது கையில் ஒர் ஆயுதமாக கொண்டு இருக்கிறாள்.

எப்படி வெறும் இக்ஷு கோதண்டா இல்லையோ அதேபோல "பஞ்சபாணா" இல்லை. "பஞ்சதன்மாத்ர" நமது ஐந்து தன்மாத்திரைகளைத்தான் மலர் பாணங்களாக கொண்டிருக்கிறாள் அன்னை. அதென்ன "பஞ்ச தன்மாத்திரைகள்"?. கண், காது, மூக்கு, நாக்கு, மேனி ஆகிய ஐம்புலன்கள்தான் பஞ்சதன்மாத்திரைகள். இந்த ஐந்தின் உணர்வுகள்தான் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு ஞானேந்திரியம் தூண்டப்படுகிறது. இதில் மூளை இடும் கட்டளைகள் முலமே கர்மேந்திரங்கள் நடை பெறுகிறது. மேனி என்று சொல்வதில் கை, கால், மற்றும் விசர்ஜன உறுப்புகள் உள்ளடக்கம். அன்னை வெறுமனே நமது கண், காது போன்றவற்றை கொண்டுள்ளாள் என்ற அர்த்தமல்ல இது. இந்த உறுப்புகள் தரும் தகவல்கள் எல்லாம் அன்னையிடமிருந்து உருவாகிறது. அவை மனதால் செயல்படுத்தப்படுகிறது. அதனால்தான் மனம் வில்லாகவும் இந்த புலன்கள் அம்புகளாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் இயக்குபவளாக அன்னை இருக்கிறாள்.

சரி, மற்ற இரு-கைகளில் என்ன வைத்திருக்கிறாள்?, பாசம், அங்குசம். அருள் நிறைந்த அன்னை ஏன் இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறாள்?. யாரைக் கட்டிவைத்து அங்குசத்தால் அடிக்கப் போகிறாள்?.

பாசம் என்றால் கயறு. எமன் கையில் பாசம் இருக்கிறது என்று சொல்லாது பாசக் கயறு இருக்கிறது என்று கயற்றினை அழுத்தமாக இருதரம் உறைக்கிறோம். பாசம் என்றால் கட்டுவது, உலகியல் பந்தாத்தால் ந்ம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது?, அதற்குத்தான் அங்குசம் அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது?, எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாளாம்.

ஆக இந்தப் பதிவில் அன்னையின் 5 நாமங்களைப் பார்த்துவிட்டோம். அன்னை ஏன் அபய-வர முத்திரைகளை காட்டவில்லை என்பதை ஆதிசங்கரர் செளந்தர்யலஹரி 4ஆவது ஸ்லோகத்திலேயே சொல்லிவிட்டார்.

8 comments:

கீதா சாம்பசிவம் said...

ஐந்து நாமங்களுக்கும் விஸ்தாரமான பதில், நல்ல அருமையான விளக்கம். மனத்தை அடக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும், ஆனால் முடியுதா? :((((

கீதா சாம்பசிவம் said...

"சரி, குரோதம் எப்படி வந்தது?, எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும்."

மனதை அடக்கலைனால் குரோதம் உருவாகும்னு விளக்கி இருக்கலாமோ?

ஜீவா (Jeeva Venkataraman) said...

நன்று, நன்றி சார்!
மனம் என்னும் வில்லில், அவையங்கள் அம்புகள் - நல்ல ஒப்புமை! எண்ணம் மனதிலிருந்து வெளியே செல்லவது அவையங்கள் வழியாக. நாண் பூட்டிய வில்லில் அம்புகள் பறக்கும். கட்டுப்பாடில்லாவிட்டால், அவையங்கள் வழியாக மனமும் ஆர்ப்பரிக்கும்.

கரும்பு வில்லும் மன்மதனின் ஆயுதம் அல்லவா - மனம் மோகத்தில் மயங்கிடாமல் இருக்க அன்னை அதை தன் வசம் எடுத்து வைத்து விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாமா?

க்ரோதத்தினால் பந்தத்தினை அறுப்பது என்பது பற்றி கொஞ்சம் எடுத்துக்காட்டுடன் விளக்கம் கொடுத்தால் நலம்!

மதுரையம்பதி said...

நன்றி கீதா மேடம், மனதை அடக்கல்லைன்னா குரோதம் உருவாகுங்கறது சரிதான்.

மதுரையம்பதி said...

வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ஜீவா சார்.

க்ரோதத்தினால் பந்தத்தினை அறுப்பது என்பது பற்றி மீண்டும் எழுதுகிறேன், அதற்கு இன்னுமொரு இடம் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

மௌலி. மிக அருமையாக மனோரூபேக்ஷு கோதண்டா என்ற திருநாமத்திற்கும் பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்ற திருநாமத்திற்கும் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். லலிதா சஹஸ்ரநாமம் கேட்கும் போதெல்லாம் இந்த இரு நாமங்களும் அடுத்தடுத்து வந்து நீங்கள் சொல்லும் பொருளைத் தரும். பொருத்தத்தை எண்ணி மகிழ்வேன்.

ராக ஸ்வரூப பாஷாட்யா, க்ரோத ஆகார அங்குச உஜ்வலா என்ற திருநாமங்களை அவ்வளவாகக் கவனித்ததில்லை. அவற்றையும் சேர்த்து தியானித்தால் அம்மையின் திருவுருவத்தை முழுவதுமாகத் தியானிக்க முடியும் போலிருக்கிறது.

ஆசை என்னும் பாசவலை - பொருத்தமாக இருக்கிறது. அதனை அறுக்கும் குரோதம் என்னும் அங்குசம் - இதுவும் பொருத்தமாக இருக்கிறது. ஆசையால் எழும் பந்த பாசங்களை வெறுப்பு துண்டித்துவிடுவது உண்மை தான். நமதளவில் இது பெரும் உண்மை.

மதுரையம்பதி said...

// லலிதா சஹஸ்ரநாமம் கேட்கும் போதெல்லாம் இந்த இரு நாமங்களும் அடுத்தடுத்து வந்து நீங்கள் சொல்லும் பொருளைத் தரும். பொருத்தத்தை எண்ணி மகிழ்வேன். //

இந்த பதிவின் கார்யம் நிறைவேறுகிறதென்றே பெருமை கொள்கிறேன் குமரன்.

கவிநயா said...

ஆஹா, மௌலி.என்ன அருமையான விளக்கம்! அன்னையின் நாமங்களின் பொருளை ஒற்றை வரியாகவே படித்திருக்கிறேன். நீங்கள் இவ்வளவு விரிவாகச் சொல்கையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. இதே போல எல்லா நாமங்களுக்கும் நீங்கள் விளக்கம் சொல்லி அடியேன் கேட்டுக் கொள்ள அன்னை அருளட்டும்.