Thursday, June 18, 2009

32 கேள்விகளும், எனது சுய புராணமும்.

சில நேரங்களில் நம்மை நோக்கி வரும் கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் நம்மை திகைக்க வைத்துவிடும். அதுபோன்ற ஒன்றே இந்த 32 கேள்விகள் என்று தோன்றுகிறது. அதிலும் இந்தத் தொடரில் என்னை இணைத்திட அழைத்தவர்கள் குமரன் மற்றும் கபீரன்பன். என்னையும் நினைவிலிருத்தி, இம்மாதிரியான தொடர்பில் இணையக் கேட்ட அவர்களுக்கு முதலில் நன்றி.

******************************************************************************

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

சாதாரணமாக வீட்டுப் பெரியவர்களது பெயரை குழந்தைக்குச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்ட குடும்பத்தில் என் பெயர் சற்றே மாறுபாடானது தான். அன்னையின் கருவறையில் 8 மாதங்கள் முடிந்த நேரத்தில், அப்போது மதுரைக்கு வந்த பரமாசார்யார் என் தாய் தந்தையர் நமஸ்கரிக்கையில் ஆசிர்வாதம் செய்து புத்ரன் பிறப்பான், சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம் . அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள பெயர் என்பது மட்டுமல்லாது, ஆசார்யாரே வைத்த பெயர் என்பதால் எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

சில மாதங்களுக்கு முன்னர் மிக அரிதான நட்பாக நான் நினைத்த ஒரு தொடர்பு பொய்த்துப் போன பொழுதில் மனத்தில் மிகுந்த பாரமும், வேதனையும் அடைந்தேன். யாராகிலும் நோயாலோ,மன வேதனையாலோ கஷ்டப்படுவதைப் பார்க்க நேர்ந்தால் எனக்கும் கண்கள் கலங்கிடவிடும்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

அவ்வளவாக அழகானது கிடையாது எனது கையெழுத்து, ஆனால் பிடிக்கவில்லை என்று பிரயாசை செய்து மாற்றிக் கொள்ள வேண்டிய அளவில் அசிங்கமாக இல்லாததால் அப்படியே விட்டாயிற்று.


4. பிடித்த மதிய உணவு என்ன?

சேப்பங்கிழங்கு/சிறுகிழங்கு ரோஸ்ட், மணத்தக்காளி கீரையை தேங்காய்+சீரகம் அரைத்து விட்டு மசியல், சுண்டைக்காய் வத்தல் குழம்பு, எலுமிச்சை ரசம், மோர்/தயிர் சாதத்திற்கு மாகாணிக் கிழங்கு போன்றவை முன்பு பிடித்த உணவு. கடந்த சில வருஷங்களாக உணவில் நாட்டம் இருப்பதில்லை, பசியெடுக்கும் போது வீட்டில் கொடுப்பதைச் சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு வந்துவிட்டேன்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கண்டிப்பாக. நட்பில் தராதரம் பார்ப்பதில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

நான் ஒரு தீர்த்தக்-கரைப் பாவி. ஆமாம், எனக்கு நீச்சல் தெரியாது, ஆகவே கடல்/பெரிய நதி போன்றவற்றைப் பார்க்கையில் பயம் உண்டு. ஆனாலும் புண்ய நதிகளைக் காணும் போது விடாது கரையோரத்தில் நின்றுஅவசர-அவசரமாக மூழ்கி எழத் தவறுவதில்லை.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் - அதுவே பேசும் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை சொல்லிவிடும் என்று நம்புகிறேன்.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விஷயம்: நேரிடையான சொல்/செயல்பாடுகள்.

பிடிக்காத விஷயம் : சட்டென வரும் கோபம் .

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளைபயும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தந்தை...தந்தையாக மட்டுமல்லாது குரு, ஆசான் என்று பல விதங்களில் என்னைப் புடம் போட்டவர். கற்க அவரிடம் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், சொல்லித்தர அவரில்லை என்பது அவ்வப்போது வருத்தம் தருகிறது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிகப்பு கோடுகள் போட்ட நிற சட்டையும், வெள்ளை வேஷ்டியும்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?

"பராத்பரா பரமேஸ்வரா, பார்வதி பதே, பர-பசுபதே" என்னும் பகுளி ராகத்தில் அமைந்த தீக்ஷதர் க்ருதியை எம்.எஸ் அம்மா பாடுவதைக் கேட்டுக் கொண்டே இதை இதை எழுதுகிறேன்.


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

கருநீலம் என்றும் எனது பிடித்தமான கலர்.

14. பிடித்த மணம்?

பூஜை அறையில் பூஜையை முடித்து ஆபீஸ்/வெளியில் கிளம்புகையில் பூஜையறைக்குச் சென்று வணங்கிய பின்பே கிளம்புவது வழக்கம். அவ்வாறு செல்கையில் உணரும் கலவையான மணம். அரைத்த சந்தனம், சாம்பிராணி/பத்தி மற்றும் நறுமண மலர்கள் எல்லாவற்றிலிருந்தும் வரும் மணங்களின் கலவை.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


அன்பில் திளைக்க வைக்கும் சொற்களுக்குச் சொந்தக்காரர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். பேசுவதிலேயே அஅன்பை வாரி-வழங்கிடும் பெருமாட்டி.

மரியாதைக்குரிய திரு திராச அவர்கள். இவர் பதிவுகள் போட்டு ரொம்ப நாட்களாயிற்று. இதனை வைத்தாவது ஆரம்பிக்கிறாரா என்று பார்க்கலாம்.

திவாண்ணா என்று நான் அழைக்கும், பெருமதிப்பிற்கும், அன்புக்கும் உரிய மருத்துவர் தி.வாசுதேவன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இத்தொடருக்கான அழைப்பை எனக்கு குமரன் மற்றும் கபீரன்பன் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய வரிசையிலேயே இந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிவிடுகிறேன்.

கடந்த 2.5 வருடங்களாக குமரன் எழுதும் எல்லா இடுகைகளையும் படித்து வருகிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் கஷ்டமே!. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. நான் மிக ரசித்தது என்றால் அவர் கூடலில் எழுதிய "புல்லாகிப் பூண்டாகி" கதையும், கோதைத் தமிழ் வலைப்பூவும்.

கபீரன்பன் அவர்களும் என்னை இந்த தொடருக்கு அழைத்ததால் அவரது இடுகைகளையும் சொல்லிவிடுகிறேன். கபீரன்பன் அவர்கள் எழுதிய எழுதிவரும் கபீர்தாஸ் தோஹா தொடர்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் ஒன்று. ஒவ்வொரு இடுகையிலும் எடுத்துக் கொள்ளும் தோஹாவுக்குத் தொடர்பான உதாரணங்கள் மற்றும் மற்ற விளக்கங்கள் எப்போதும் வியக்கச் செய்வன.

17. பிடித்த விளையாட்டு:

பெரிதாக ஏதுமில்லை

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், கண் விழித்திருக்கும் முழுநேரமும் கண்ணாடியுடனேயே!. சமீபத்தில் கண் மருத்துவர் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாமே என்ற போதும் எனக்கு எனது கவசங்களான கண்ணாடியை இழக்க மனமில்லாததால் வேண்டாமென்று மறுக்குமளவுக்கு இது என் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

லாரல் அண்ட் ஹார்டி,சார்லி சாப்ளீன் படங்கள், சந்திர பாபு நடித்த படங்கள் மற்றும் கார்டூன்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

அயன் - 5-6 வருடங்கள் கழித்து தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் இதுதான்.

21. பிடித்த பருவகாலம் எது?

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

செளந்தர்ய லஹரி முடிந்த பின்னர், சிவானந்த லஹரீ ஸ்லோகங்களுக்கும் பொருள் எழுதவேண்டும் என்று தோன்றியது. அதற்காக மீண்டும் மீண்டும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். சமீபத்தில் திரு சுந்தரண்ணா அளித்த தேசிகர் அருளிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவ்வப்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மிக அரிதாகவே, மாதக்கணக்கில் அது அப்படியே இருக்கும். அவ்வாறு மாற்றினாலும் மாதங்கியே மீண்டும் வேறு ஒரு உடையில் வருவாள் :)

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : என் அலுவலகத்தில் எனது அறைக்குப் பின்னால் உட்கார்ந்து கத்தும் குருவி மற்றும் அணில்களின் சப்தம். இவற்றை ஈர்ப்பதற்காக வீட்டிலிருந்து அரிசி, மற்றும் பழங்கள் கொண்டுவந்து ஜன்னல் சுவற்றில் வைத்து வருகிறேன்.

பிடிக்காதது : டிராபிக் ஜாமில் கேட்கும் பல ஹாரன்களது சேர்ந்த சப்தம்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா - அமெரிக்காவின் மற்ற இடங்கள் இதை விடக் குறைந்த தொலைவு என்றே நினைக்கிறேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படி ஏதும் இருக்கறதாகத் தெரியல்லையே?. சுலபமாக ஏமாறுவது ஒரு திறமையாக இருப்பின் அது இருக்கிறது அளவுக்கதிகமாகவே!.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிறரது மனதை வருத்துவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அவ்வப்போது புகையிலை/ஜர்தா பீடா போட்டச் சொல்லும் எண்ணம்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலாத் தலம் என்று இல்லாவிடினும் எனது பூர்வீகர்கள் வசித்த சின்னமன்னூர் (கம்பம்- தேனி அருகில்).ஆஸ்டிரேலியா நான் போகாத ஒரு கண்டம், அதனால் மட்டுமல்லாது கங்காரு மீது ஒரு காதல், ஆகவே அங்கு செல்ல விருப்பம் இருந்தது சில-பல வருஷங்கள் முன்பு. பசுமையான வயல்வெளிகளுக்கு இடையில் இருக்கும் புராதனக் கோவில்கள், அதிலும் விழா இல்லாத காலங்களில்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

வேதம் பயின்று (குறிப்பாக சுக்ல யஜுர்வேதம்), அதன் வழி வாழ ஆசை

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

Monday, June 15, 2009

துஃக்க ஹந்த்ரி, துஷ்டதூரா, ஸர்வ மங்களா..

இதனை எழுத உட்கார்கையில் என்ன நாமங்கள் மனதி தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதுகிறேன். சஹஸ்ர நாமத்தில் வரும் அதே-தொடரில் இது இருக்காது என்பதை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

அன்னையின் ஆயிரம் நாமங்களில் இன்று ஏழு நாமங்களைப் பார்க்கலாமா?"துஃக்க ஹந்த்ரி" என்றால் துயரத்தைப் போக்குபவள். அன்னையிடம் தமது துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதுதான் எப்போதும் வழக்கம். ஜகன்மாதாவான பராசக்தியிடம் பகிர்ந்தால் அவள் நமது துக்கத்தை போக்கிடுவாள் என்கிறார்கள் வாக்தேவதைகள். இந்த நாமத்தை அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்' என்று கூறுகிறார்.


அடுத்தது "துஷ்ட தூரா", அப்படியென்றால் கெட்டவர்களிடத்து எட்டாதவள். அதாவது தீய செயல்களைச் செய்பவர்களிடத்து இருந்து விலகியிருப்பவள் என்று பொருள். பண்டாசுர வதத்தின் போது அன்னை அவனுக்கு அருகில், தொலைவில் என்று இங்கும் அங்குமாக அவனை அலைக்கழித்து அவனது கண்களுக்கு அகப்படாது இருந்து அவனை அழித்ததால் இந்த பெயர் என்றும் கூறலாம் தானே?


கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, "ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். "ஸமான அதிக வர்ஜிதா"' என்றால் ஈடு-இணையில்லாதவள், தனக்கு சமமானவர்களும், தன்னை விஞ்சியவர்களும் இல்லாத தனிப் பெருமை பெற்றவள் என்று பொருள். இந்த நாமம் லலிதா த்ரிசதியிலும் சொல்லப்படும் ஒரு நாமம்.
கும்பகோணத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் பெயரே சர்வ மங்களா என்பதுதான். எந்த மங்கல நிகழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கும் மஞ்சள், குங்குமம், மங்கல வாத்யம், புஷ்பம், போன்ற எல்லாவற்றிலுமும் இருப்பவள் அம்பிகை. நமது அன்றாட வாழ்வில் நிகழும் திருவிழாக்கள், பண்டிகைகள் திருமணம், வளைகாப்பு போன்ற எல்லா மங்கல நிகழ்ச்சிகளுக்கும் காரணம் அன்னையே என்னும் விதத்திலும் அவளை "சர்வ மங்களா" என்று கூறலாம் தானே?. இந்த நாமத்தையே அபிராமி பட்டர், 'மங்கலை, பூர்ணாசல மங்கலை' என்று சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.


ராஜ்ய லக்ஷ்மி, தன லக்ஷ்மி, ஜெய லக்ஷ்மி எல்லாம் தம்முடன் இருந்து அருள வேண்டும் என்று அரசர்கள் அன்னையைத் துதிப்பார்களாம். அதற்காக அந்த அரசர்களாலும், பேரரசர்களாலும் போற்றப்படுபவள்/அர்ச்சிக்கப்படுபவள் என்பதே "ராஜராஜ அர்ச்சிதா". நமக்குத் தெரிந்து வீர சிவாஜி, ராஜ ராஜன், மைசூர் அரசர்கள் அன்னையை பலவாறு துதித்தவர்கள். கவிராஜரகளான காளிதாசன், கம்பன், பாரதியார் போன்றோர்களும் அம்பிகையை போற்றி வணங்கியவர்கள். ஆகவே அன்னையை ராஜராஜ அர்ச்சிதா என்பது பல விதங்களிலும் சரியாகிறது.


ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு தேவதை ப்ரத்யக்ஷமாக இருப்பது நாம் அறிந்ததே!. மதுரையென்றால் மீனாக்ஷி, ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரங்க நாதன், திருவானைக்கா என்றால் ஜம்புகேஸ்வரன், திருமலையில் வேங்கடேஸ்வரன், குன்றங்களில் குமரன் என்பதாக அந்தந்த க்ஷேத்ரங்களுக்கு என்று குறிப்பிட்ட தெய்வங்கள் மக்களைக் காப்பதாக அர்த்தம். இவ்வாறான க்ஷேத்ரங்களையும், அந்த க்ஷேத்ரங்களில் அருளும் இறைவனை/இறைவியையும் காப்பவள் என்ற பொருளே "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலிநீ" என்பது. சாதாரணமாக வருஷோர்சவ கொடியேற்றத்திற்கு முன்பாக அந்த ஊர் காவல் தெய்வங்களுக்கு விழா எடுப்பது ஒரு மரபு. அவ்வாறான காவல் தெய்வமாக பல ஊர்களிலும் சக்தி வீற்றிருந்து முதல் விழாவை ஏற்கிறாள். இது தவிர இன்னொரு முறையிலும் இந்த நாமத்தை அணுகலாம். நமது உடலே இறை வசிக்கும் க்ஷேத்ரம், அதில் இருக்கும் ஆன்மாவே க்ஷேத்ரக்ஞன், ஆக நமது உடல் மற்றும் ஆன்மாவைக் காப்பவள் என்றும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

மேலே சொன்னதில் ஊர் காவல் தெய்வங்களாக இருக்கும் அன்னையைச் சொன்னோம், ஆனால் காவல் தெய்வங்களாக பெண் தெய்வங்கள் மட்டுமா இருக்கின்றன என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே வருகிறது. பல ஊர்களிலும் சாஸ்தா, ஐயனார், கருப்பண்ண ஸ்வாமி, சங்கிலிக் கருப்பு, முனீஸ்வரர் போன்றவர்கள் காவல் தெய்வங்களாக இருப்பதைக் காணலாம். இவர்களும் அன்னையை வணங்குபவர்கள் தான் என்பதையே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா" என்ற நாமம் கூறுகிறது. சிவன் கோவில்களில் இருக்கும் "பைரவரை க்ஷேத்ர பாலர்" என்றும்கூறுவர். பல கோவில்களில் இன்றும் அர்த்த ஜாம பூஜை முடிந்து கர்பகிரஹத்தைப் பூட்டி அதன் சாவியை க்ஷேத்ர பாலர் சன்னதிகளில் வைத்து விடுகிறார்கள். க்ஷேத்ரபாலரே கோவிலுக்கு காவல் புரிபவர் என்பதாகச் சொல்லப்படுவதால் இந்தச் செயல். சாக்த வழிபாட்டில் ஈடுபடும்மெய்யன்பர்களுக்கு க்ஷேத்ரபாலரே மெய்காவல் புரிவார் என்று சொல்வது வழக்கம். காளிகா புராணத்தில் அன்னை காளியை சாந்தப்படுத்த ஈசனே சிறு குழந்தையாக வந்து அவளது ஸ்தனங்களில் பானம் பண்ணியதால் க்ஷேத்ரபாலர் என்றானதாகச் சொல்லப்படுகிறது. இதை வைத்தே, அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்' என்று கூறுகிறார் பட்டர்.


மங்களாம்பிகை எல்லோருக்கும் மங்களம் அருளட்டும்.

அன்னையின் நாமங்கங்கள் தொடரும்...

Wednesday, June 10, 2009

பகவத் கீதையும் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தமும்....

யத் கரோஷி யதச்னாஸி யஜ்ஜுஹோ-ஷிததாஸியத்யத்
தபஸ்யஸி கெளந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்என்று கீதையில் பார்த்தனிடம் சொல்கிறான் க்ருஷ்ண பரமாத்மா. இதன் கருத்து என்ன என்று பார்க்கலாம். 'எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ, எதைத் தவம் செய்கிறாயோ அதை எனக்கே அர்ப்பணம் செய்' என்று பொருள். இதற்கடுத்த வரிகளின் பொருளைப் பார்த்தால்,'இவ்வாறு செய்வதால் நல்ல மற்றும் தீய பலன்களைத் தருகின்ற கர்ம பந்தங்களில் இருந்து நீ விடுபடுகிறாய் என்றும், இவ்வாறு செய்வதன் பலனாக முக்தியடைந்து என்னை வந்து சேர்வாய் என்ற் கூறுகிறார். இன்றைய கால கட்டத்தில்இதெல்லாம் சாத்யமா?, எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளிடம் மனுக் கொடுக்கும் ஹோமங்களும், பாராயணங்களும், வேண்டுதல்களும் எல்லாத் திசையிலும் கேட்கிற காலத்தில் அல்லவா இருக்கிறோம்?. அத்யந்த பக்தி என்பதும் அறிதாக அல்லவா இருக்கிறது என்றெல்லாம்நினைத்ததால் தானோ என்னமோ ஆதிசங்கரர் நமக்கு சில வழிகளின் மூலமாக நமது செயல்களில் எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க சொல்லியுள்ளார். அவற்றைப் பார்க்கலாமா?.


கர்மாக்களைச் செய்ய ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் இரு முக்கியமான செயல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆரம்பத்தில் வருவது சங்கல்பம். சாதாரண நித்ய கர்மாவில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் சங்கல்ப மந்த்ரம் என்று ஒன்று சொல்லியே ஆரம்பிக்கிறோம். இதில் முக்யமாகப் பார்க்க வேண்டியது "ஸ்ரீ பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம்"என்பது. இதன் தாத்பர்யம் என்னவென்றால், நாம் செய்யத் துவங்கும் அந்தக் கர்மாக்கள் எல்லாம் பரமேஸ்வரனுக்காகவே என்று அர்பணித்தல். இது எப்போது ஆரம்பித்தது என்று பார்க்கலாம்.ஆதி சங்கரர் பரமேஸ்வரரின் மறு அவதாரம் என்றும், அவரது சிஷ்யர் குமரில பட்டர் சுப்ரமண்யஸ்வாமியின் ஸ்வரூபம் என்பதையும் பாகுபாடின்றி எல்லா சங்கர விஜயங்களும் கொண்டாடுகின்றன. ஆதிசங்கரர் ஞான மார்க்கத்தில் அதுவும் குறிப்பாக அத்வைதத்தை பரப்பியவர். கர்மா மட்டுமே ஒருவனுக்கு ஞானத்தை அளித்திடாது என்று சொல்பவர். சரி, அதற்காக கர்மாக்களை பண்ண வேண்டாம் என்றா சொன்னார்?. இல்லை பண்ணும் கர்மாக்கள் எல்லாம் இறை சித்தத்தில் செய்யப்படுவது, அந்த கர்மபலன்கள் எல்லாம் இறைவனைச் சார்ந்தது என்பதை மனத்தில் இருத்திக் கர்மாக்களைச் செய்யச் சொன்னார்.


குமரில பட்டரோ கர்ம யோகத்தைச் சார்ந்தவர், இன்னும் சொல்லப் போனால் கர்ம யோகத்தைப் ப்ரசாரம் செய்து வந்தவர். தமது வாதத் திறமையால் பெளத்த மதத்தவரை வாதம் செய்து கர்ம யோகத்தை நிலை நிறுத்த எண்ணி அதற்கு முன்பு பெளத்தம் பற்றிய முழுமையான அறிவு பெறுவதற்காக தம்மை பெளத்தர் என்று கூறிக் கொண்டு பெளத்த மடாலயத்தில் சேர்ந்து பாடங்களைப் படித்தார் என்று நாம் அறிவோம். பிற்காலத்தில், தாம் பொய்யுரைத்து பெளத்தம் கற்றது தவறு, அது குருத் த்ரோகம் என்று உணர்ந்து சாஸ்திரங்களில் இதற்குத் தண்டனையாகக் கூறியிருக்கும் தூஷாக்னியில் வெந்து போக முடிவெடுக்கிறார். அப்போது அங்கு வந்து ஞானோபதேசம் செய்த சங்கரரை வணங்கி கர்மாக்களை இறைவனுக்கு அற்பணிப்பதே சிறப்பு என்று உணர்ந்ததாகவும், பகவத் பாதர் மேற்கோள் காட்டிய ஸ்ருதி வாக்கியங்களை தாம் புரிந்து கொண்டதாகவும் கூறி இனி தனது சிஷ்யர்களுக்கு சங்கரரே குருவாக இருக்க வேண்டும் என்று வேண்டி தன் சரீரத்தைப் பரித்யாகம் செய்கிறார். அப்போதிலிருந்துதான் நமது ஆசார்யார் சங்கல்பத்தின் இறுதியில் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் என்று செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்கின்றனர்.இவ்வாறு ஆரம்பத்தில் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் என்று தொடங்குவதுடன், கர்மாவின் முடிவிலும் அக்கர்மாவின் பலன்களை நாராயணனுக்கு ஸமர்பணம் செய்துவிடுகிறோம். சந்தியாவந்தனம் முதலான எல்லா கர்ம கார்யங்களின் முடிவாக,காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா

புத்த்யாத்மனாத்வா ப்ருக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

ஸ்ரீமந்நாராயணாயேதி ஸமர்ப்பயாமிஎன்று கூறி அர்க்யம் அளித்து முடிக்கிறோம். இதன் பொருளாவது,"நான் என் சரீரத்தாலோ, வாக்கினாலோ, மனத்தினாலோ, கர்ம-இந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ, இயற்கையின் இயக்கங்களாலோ எதையெல்லாம் செய்கிறேனோ அவையெல்லாம் உயர்ந்த புருஷனாகிய ஸ்ரீநாராயணனுக்கே ஸமர்பிக்கிறேன்" என்பது.ஸமர்ப்பணம் என்னும் பதத்திற்கு கொடுத்தல், காணிக்கை என்று பொருள். கர்மாவின் ஆரம்பத்தில் ஈஸ்வரப் ப்ரீத்யர்த்தமும், முடிவில் பலன்களை நராயணனுக்கும் ஸமர்ப்பணம் செய்வதன் மூலமாக, எனக்கென்று ஏதும் செய்யவில்லை, செய்யும் கார்யங்களின் பலனும் இறைவனுக்கே என்று கர்மாவிலிருந்து நம்மை நாம் விலக்கிய நிலைக்குச் செல்கிறோம்.ஆகவே நல்ல கர்மாக்களை வழுவின்றி, வேதவிதிகளை மீறாது செய்வோம், பலா-பலன்களை ஈஸ்வரார்ப்பணம் செய்திடுவோம்.ஜெய ஜெய சங்கர!

ஹர ஹர சங்கர!
நேற்று திரு தி.ரா.ச என்று நாம் அன்புடன் அழைக்கும் T.R. Chandra sekaran அவர்களுடைய பிறந்த நாள், ஆனால் எனக்கு இன்றுதான் தெரியும். அவர் நல்ல ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து நம்மை எல்லாம் வழிகாட்ட பராம்பிகையை வேண்டி, இந்தப் பதிவை அவருக்குப் பிறந்த நாள் பரிசாக்குகிறேன்.

Saturday, June 6, 2009

பரமாசார்யார் ஜெயந்தி

நமது பஞ்சாங்க முறையில் சாந்திரமானம், செளரமானம் என்று இருவிதங்கள் இருப்பதும், அவற்றின்படி வருஷத்திய விழாக்கள் சற்றே முன்-பின்னாக கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். நாடெல்லாம் ஒற்றுமையில் உய்யவே பிறப்பெடுத்த, நாம் கண்முன் கண்ட அத்வைத ரத்னம் ஸ்ரீ பரமாசார்யாரின் திரு-அவதாரம் நிகழ்ந்தது சாந்திர-செளரம் ஆகிய இருவிதத்திலும் வைகாசம்/வைகாசி என்று கூறப்படும் மாதவ மாதம். அவர் அவதரித்த 1894ம் வருஷம் மே 20 அன்று சாந்திரமானத்திலும் அமாவாசை கழிந்து வைகாசம் ஆரம்பித்துவிடுகிறது. நமது செளரமான பஞ்சாங்கத்தின்படி சித்திரை முடிந்து வைகாசி. அவர் அவதரித்த தினம் ஞாயிறு, அனுஷ நக்ஷத்திரம், வருஷத்தின் பெயரோ, 'ஜெய' வருஷம். நாளை வைகாசி அனுஷம், ஆசார்யாளின் அவதார தினம். மஹா பெரியவாளது ஜனன காலம் பலவிதங்களில் சிறப்புற்றது என்று என் தந்தை கூறக் கேட்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைக் காணலாமா?.

பருவங்களில் சிறந்தாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ க்ருஷ்ணனால் சொல்லப்பட்ட ரிது. இந்த வஸந்த ரிதுவில் வரும் இரு மாதங்களில் சித்திரைக்கு 'மது' என்றும் வைகாசிக்கு 'மாதவ மாதம்' என்றே பெயர். இந்த வைகாசியில் தான் சுப்ரமண்யனது அவதாரமாகக் கருதப்படும் திருஞான சம்பந்தரது குருபூஜை, மற்றும் வைகாச பெளர்ணமியில் (குரு பூர்ணிமா) என்று புத்தரின் மஹாநிர்வாணம் போன்றவையும் நிகழ்ந்திருக்கிறது.

நமது ஆசார்யார் எப்படி அஞ்ஞானத்தை நீக்கும் பகலவனாகத் திழ்ந்தார் என்பது நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். நமது ஆசார்யாளது அவதார தினம் ஞாயிறு என்பதில் எத்தனை சூக்ஷ்மம் நிறைந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை என்பது ஆதித்யனின் ஆதிக்கம் பெற்ற நாள் என்பர்.க்ருஷ்ண யஜுர் வேதத்தில், 'அநூராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா' என்று ஒரு வாக்கியம். அதாவது அநூராதா நக்ஷத்திரத்தின் தேவதை மித்ரன் என்று பொருள். மித்ரன் என்னும் நாமம் சூர்யனுக்கு/ஆதித்யனுக்குத்தான். கல்யாணப் பத்ரிகைகளில் 'இஷ்ட-மித்ர பந்துக்களுடன்'என்னும் வாக்யத்தைப் பார்த்திருக்கலாம். 'மித்ரன்' என்றால் நண்பன் என்று பொருள். உலக இயக்கத்துக்குக் காரணமானவன் சூர்யன். அவனை நாம் மித்ரனாகக் கொள்ளத்தானே வேண்டும்?. ஞானத்திற்கும் உதாரணமாகச் சொல்வது சூர்யனைத்தான். நவக்ரஹங்களில் சூர்யனைக் கொண்டே மற்ற கிரஹங்களின் ஆதிக்கமும். இவ்வாறான ஞாயிற்றுக் கிழமை ஆதவனின் ஆதிக்கம் பெற்ற நாளில் நமக்கு ஞான-சூர்யனாக அவதரித்தார்.

அநூராதா நக்ஷத்திரத்தின் அதி-தேவதை சூர்யன் என்று பார்த்தோம். அடுத்ததாக அநூராதா நக்ஷத்திரத்தின் சிறப்பைப் பார்க்கலாம். எந்த விசேஷத்திலும் ஹோமத்தின் தொடக்கத்தில் நாம் 'அனுஜ்ஞை' என்று ஒன்று செய்கிறோம். அதாவது ஆரம்பிக்கும் செயல் நல்லபடியாக நடந்து முடிய தெய்வம் மற்றும் வேதவித்துக்களின் அனுமதியைக் கேட்க்கும் விதமான மந்திரம். மணையில் உட்கார்ந்தவுடன் நாம் எல்லோரையும் சொல்லச் சொல்லும் மந்திரம் தான் இது. ஆனால் பொருள் தெரியாததால் திருப்பிச் சொல்வதுடன் முடிந்துவிடுகிறது. அந்த மந்திரத்தில் அநூராதா நக்ஷத்திரத்தின் சிறப்புச் சொல்லப்பட்டிருக்கிறது.


ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸ்த்ய
மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து
அநூராதான் ஹவிஷா வர்த்யந்த:
சதம் ஜீவ சரத: ஸவீரா:


அதாவது, மித்ர தேவனை ஹோமத்தாலும், நமஸ்காரத்தாலும் உபசரித்து நிறைவு காண்போமாக!. மித்ரனே எமக்குக் கொடையருள்வாயாக!, அநூராதா நக்ஷத்திரங்களை அவியளித்துப் போற்றி வளர்த்தவாறு நாங்கள் பராக்ரமசாலிகளோடு நூற்றாண்டுகள் வாழ்வோமாக! என்று பொருள். இங்கு பராக்ரமம் என்பது உடல் வலிமை மற்றுமன்றி புலன்களை வெல்லுதலும் வீரமாகக் கொள்ள வேண்டும். அநூராதா நக்ஷத்திரங்கள் என்று கூறியுள்ளதன் காரணம் இந்த நக்ஷத்திரத்திற்குத் தொடர்புடைய விசாகத்தைச் சேர்த்தே. விசாகத்துக்கு 'ராதா'என்று ஒரு பெயர் உண்டு. அடுத்தநக்ஷத்திரமான அனுஷம் 'அநூராதா'. ராத்/ராதா என்றால் மகிழ்ச்சி, ஆராதனை, செழிப்பு போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறாக சிறப்பான நக்ஷத்திரத்தில் உதித்து, நமக்கெல்லாம் ஆன்ம செழிப்பினையும், ஆராதனைக்கு வழிகாட்டியாகவும் உள்ள பரமாசார்யார் கருவிலேயே திருவுடையார் என்றால் மிகையல்லதானே?.மேலே கூறிய வேத வாக்யத்தின் படி நூறு வருஷங்கள் வாழ்ந்து நம்மை வழிப்படுத்தினவர். ஆஹா! அவரது வாழ்வும் வேதமும் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்க்கப்-பார்க்க பரவசமன்றோ?.

சாதாரணமாக ஜீவன் முக்தர்களது ஜெயந்தி என்பது அவர்களது பிறந்த திதியை வைத்தே சொல்லப்படுவது. அது மட்டுமல்லாது சாந்திரமானப்படி/செளரமானப்படி என்பதில்லாமல் ஒரு தினத்தில் பரமாசார்யரது ஜெயந்தி கொண்டாடுவதென்றால் அது பிறந்த திதியை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். வைகாச சுக்ல பஞ்சமி (ஆதிசங்கரர்), ராம நவமி, விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி,என்பது போல பரமாசார்யரது ஜன்ம தினம் கொண்டாட வேண்டுமானால் அந்த புண்ய தினம், வைகாச மாத பெளர்ணமைக்கு அடுத்த தேய்பிறைப் பிரதமை.

ப்ரதமையில் சுபகார்யம் செய்யக்கூடாது என்ற பொதுக் கருத்து உண்டு. ஆனால் க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திருவிழாக்கள் ஆரம்பிக்க, கோவில்களில் கொடியேற்றம் போன்றவற்றுக்கு விசேஷமாக ஜ்யோதிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. பாக யஜ்ஞயங்களில் வரும் ஸ்தாலீபாகம், மற்றும் இஷ்டி போன்றவை ப்ரதமையில் செய்யவேண்டியதே!. வைதீகம் தழைக்கவந்த மஹானை ப்ரதமையில் வணங்கிடுதலும் சரிதான் என்றே தோன்றுகிறது. இதுமட்டுமன்றி, பரமாசார்யாரின் இஷ்ட தெய்வம் காமாக்ஷி காஞ்சியில் ஆவிர்பஹித்ததும் ஒரு தேய்பிறை பிரதமையில் தான் என்று தெரிகிறது.

இவ்வாறான விசேஷ பலன்களைக் கொண்ட தினத்தில் மீண்டும் சங்கர விஜயம் இந்த பூலோகத்தில் ஆரம்பித்தது. நம் கண்முன்னே வாழ்ந்து காட்டிய ஞான சீலர், கர்மா, பக்தி, ஞானம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் இல்லாது மூன்றையும் கைக் கொண்டு நம்மை உய்விக்க வந்த உத்தமர். இன்றைய தினம் (07/06/09) அவரது ஜயந்தியாக உலகம் முழுவதிலுமுள்ள அவரது சிஷ்யர்களால் கொண்டாடப்படுகிறது. பரமாசார்யாருக்கு நாம் செய்யும் பூஜை என்பதில் முதலாவதானது அவர் சொற்படி வாழ்தலே!. நாமும் அவரை படங்களிலும், சிலா ரூபத்திலும் மட்டும் வணங்குவதுடன் நில்லாது அவரது சொற்களின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, வைராக்யம், தவம் போன்றவை சித்திக்க வேண்டுவோமாக!.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

[பரமாசார்யார் தேகவிதேகம் அடைந்த நாளில் எனது தந்தை கூறியதை அடிப்படையாகக் கொண்டு எழுதியது இக்கட்டுரை]

Friday, June 5, 2009

வைகாசி விசாகம்.வைகாசி மாதத்தை சிறப்பானதாக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது விசாகன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் அவதாரம். இன்று விசாக திருநக்ஷத்திரம். இன்னொன்று பரமாசார்யார் என்று நாம் வணங்கும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகளது அவதரித்த மாதம் . முருகனுக்கு உகந்ததாகச் சொல்வது விசாகம் மற்றும் கார்த்திகை. விசாக நக்ஷத்திரத்தன்று ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் பிறந்தவன். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன். அருணகிரியார் திருச்செந்தூர் முருகனைப் பாடும் போது,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம! எம்பெருமானே
நமோநம! உன்புகழேபாடி, நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து உய்ந்திட
வீணாள்படாது அருள்புரிவாயே!
இன்சொல் விசாகா கிருபாகர செந்திலில்
வாழ்வாகிய அடியேன் தனை ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்பதாகக் கூறுகிறார். முருகனுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் பலவிதங்களில் தொடர்புண்டு. ஷஷ்டி, ஷண்முகன், கார்த்திகைப் பெண்கள், மந்திரத்தில் 6 அக்ஷரங்கள் என்பதாக பலவும் நமக்குத் தெரிந்ததே!.. இந்த தொடர்பில் உருவான ஒரு ஸ்லோகத்தை இன்று சொல்லி ஷண்முகனைப் இகபரமருள வேண்டுவோம். இந்த ஸ்லோகத்தின் பெயரே ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் என்பதாகும்.ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரெளஞ்ச சைல விமர்தனம்
தேவஸேனாபதில் தேவம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

ஆறு முகங்களுடன் கூடியவரும், பார்வதியின் புதல்வரும், மலையாக உருவெடுத்த க்ரெளஞ்சன் என்னும் அசுரனை வதம் செய்தவரும், தேவசேனையின் கணவரும், தேவர்களுக்கெல்லாம்தேவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
சக்திபாணிஞ்ச தேவேசம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

தாரகாஸுரன வதம் செய்தவரும், மயில் மீது அமர்ந்திருப்பவரும், ஞானவேலைக் கையில் தரித்திருப்பவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.


விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வர தநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

சகல உலகிற்கும் ஈஸ்வரரான சிவனின் அன்பிற்குரிவரும், தேவரும், வள்ளி-தேவசேனையிடத்து ஆசை கொண்டவரும், மனதைக் கவர்கின்றவரும், பரமேஸ்வரனின் குமாரருமாகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.குமாரம் முநிசார்தூல மாநஸ ஆனந்த கோசரம்
வள்ளீ காந்தம் ஜகத் யோநிம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

குமாரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்தவடிவமாய்த் தோன்றுகின்றவரும், வள்ளிமணாளரும், உலகங்கள் தோன்றக் காரணமானவரும், ஈசனது புத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.


ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தார மீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

யுகங்களின் முடிவில் உலகனைத்தையும் ஒடுக்குபவரும், உலகனைத்தையும் காத்து அருள்பவரும், முதலில் உலகத்தைப் படைத்தவரும், அனைவருக்கும் தலைவரும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், ஆனந்தத்தால்மதம் கொண்டவரும், பரமேஸ்வரரின் குமாரராகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கின்றேன்.


விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும், க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.


ஸ்கந்த ஷ்ட்க மிதம் ஸ்தோத்ரம் ய:படேத் ச்ருணூயாந் நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்.

ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகங்களான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ, அவர்கள் ஸ்ரீஷண்முகனின் அருளால் விரும்பும் பொருளை உடனே அடைவார். ஸுகமான இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் ஸ்ரீஸ்கந்த லோகத்தில் முருகனுடன்சேர்ந்து வாசம் செய்வார்கள்.

மயில் விருத்தம், வேல் விருத்தம் ஆகியவற்ற்றை பற்றி படித்திருக்கலாம். இது போல ஆதிசங்கரரும் சுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் கையில் இருக்கும் சக்தி வேலாயுதத்தைத் துதித்திருக்கிறார். அதைப் பார்க்கலாமா?.சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதஸ்வ

சக்தி வேலே!, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னைப் பஜிக்கிறேன். ஸ்ரீ குஹனின் கையில் அலங்காரமான சக்தியே !, தங்களுக்குப் பல நமஸ்காரங்களைச் செய்கிறேன். என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்.

ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!

சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்!