Thursday, April 29, 2010

காமாக்ஷி, காமதாயிநீ, ஸர்வாருணா..


பண்டாஸுரன் பிறப்பினை மீண்டும் ஒருமுறை நினைவில் கொண்டுவர வேண்டும். ஈசனது நெற்றிக் கண்ணால் எறிக்கப்பட்ட மன்மதனது சாம்பலில் உருவானவன் பண்டாஸுரன். ஆயிற்று பண்டாஸுரனது வதம், தேவர்கள் எல்லோரும் பராம்பிகையை பூஜிக்கின்றனர். அப்போது தேவ-தேவர்கள் எல்லோரும் தங்களிடத்து இருக்கும் சிறந்த பொருட்களை அம்பிகையிடத்து சமர்பித்து அவளை வாழ்த்துகின்றனர். அப்போது, அங்கே அனங்கனாக இருக்கும் மன்மதனது இணையாளும் இருக்கிறாள். அவளது மனதில் தனது மணாளன் மட்டும் அனங்கனாக இருப்பதால் மற்ற தேவர்களைப் போல உருவத்துடன் வந்து வழிபட இயலவில்லையே என்ற வருத்தம் ரதிக்கு மனதில் தோன்றுகிறது. அதனை உணர்ந்த பரதேவதை அனங்கனுக்கு அவனது பழைய ரூபத்தை அளிக்கிறாள். ஹரனது நேத்ராக்னியால் பஸ்மமான காமனுக்கு சஞ்சீவினி என்ற மூலிகை போல இருந்து வாழ்வளித்தவள் என்னும் பொருளைத் தரும் நாமமே 'ஹரநேத்ராக்னி ஸம்தக்த காம ஸஞ்ஜீவநெளஷதி'. அன்னையின் இந்தப் ப்ரபாவம் லலிதோபாக்யானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சரி, இவ்வாறு சகல லோகங்களுக்கும் நன்மையை அளிக்கும் விதமாக பண்டாஸுரனை வதைத்த பின்னர் தேவர்கள் வாழ்த்தும் போது எப்படி இருந்தாளாம்?, தன் பக்தர்களுக்கு காமேச்வரரையே கொடுப்பவளாக, பரசிவத்தை அனுபவிக்கத் தருபவளாக, அதாவது பிரம்மானந்த அனுபவத்தைத் தருபவளாக கருணையுடன் இருந்தாளாம். காமேச்வரனிடத்தில் கலந்தவளாக அம்பிகையைச் சொல்வது சிறப்பு. பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கு 'தாயம்'என்று பெயர், காமேஸ்வரரையே தனது சொத்தாக, தாயமாக இருப்பதால்தான் தனது பக்தர்களுக்கு அந்த பரசிவத்தை அனுபவிக்கத் தருகிறாள். காமேச்வரனுடன் எப்போதும் பிரிவின்றி இணைந்தே இருக்கும் அவள், கருணையுடன் தனது பக்தர்களுக்கு சிவ-சாயுஜ்யத்தை அருளுவதாகச் சொல்லும் நாமமே 'காம-தாயிநீ'.

இவ்வாறு சிவத்தில் கலந்து, சிவத்திலிருந்து பிரிக்க முடியாது இருந்து, தனது பக்தர்களுக்கு சிவானுபூதியை அருளுபவள் அழகிய கண்களுடன் இருந்தாளாம். அந்த அழகிய கண்களாலேயே தன்னை வழிபடுபவர்களுக்கு அருளுபவளாம், அதனாலேயே அவள் 'காமாக்ஷி'. ஒட்டியாண பீடமாகிய காஞ்சியில் வாசம் செய்யும் தேவியைக் குறிக்கும் நாமம் இது. 'க' என்றால் சரஸ்வதியையும், 'ம' என்பது லக்ஷ்மியையும் குறிக்கும் அக்ஷரங்கள் என்பர். லக்ஷ்மி-சரஸ்வதியை கண்களாகக் கொண்டவள் என்றும் கூறலாம். லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கண்களாகக் கொண்டு தனது பக்தர்களுக்கு அருளுபவளைக் காமாக்ஷி என்று கூறலாம் என்கிறார் லக்ஷ்மீதரர். காமாக்ஷி எப்படி இருந்தாளென்றால், அவள் தன்னுடைய வஸ்த்ரம், ஆபரணம், புஷ்பம் எல்லாம் சிவந்த நிறத்துடன், உதிக்கின்ற சூரியனது நிறத்தைப் போன்று இருந்தாளாம். இவ்வாறு சிவந்த நிறத்தை உடையவள் என்பதைச் சொல்லுவதே 'ஸர்வாருணா'.

Sunday, April 25, 2010

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல்யாண வைபோகமே!


அம்பிகை அவ்வப்போது பல அவதாரங்களைச் செய்து உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் அருளுகிறாள். இவ்வாறான அவதாரங்களில் ஒன்றுதான் சூர்ய வம்சத்தில் நிகழ்ந்தது. ஆமாம், மதுரையை அரசாண்ட மலையத்வஜனுக்கும், காஞ்சன மாலைக்கும் புதல்வியாக, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில் மூன்று வயது பாலையாக பிறந்தாள் மீனாக்ஷி. மீன் போன்ற நீண்ட கண்களுடன் இருந்ததால் மீனாக்ஷி என்று பெயர் பெற்றாள்.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசாக்ஷி ஏற்று, பற்பல தேசத்து அரசர்களையும் வென்று முடிவாக அஷ்டதிக் பாலகர்களையும் போரில் சந்திக்கிறாள். எல்லாத் திசைகளையும் வென்று கடைசியாக ஈசான்ய திக்கில் ஈசனையே எதிர்க்கத் துணிவு பெற்று, போரை ஆரம்பிக்கிறாள். ஈசனை, சுந்தரேசனைக் கண்டவுடன் அன்னையின் உடலுள் ஒரு மாற்றம், அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேவிட, அவருக்கு மாலையிடத் தயாராகிறாள்.

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருமணத்தில், சஹோதரனாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனது தேவியுடன் அங்கயற்கண்ணியை தாரைவார்க்க, ஸ்ரஸ்வதியுடன் ப்ரம்ஹா திருமணத்துக்குத் தலைமையேற்க, சப்தரிஷிகள் வேதமோத, இந்திரன் முதலான தேவர்கள் பூமாரிப் பொழிய, நாரதர் கானம் பாட, பூதகணங்கள் தாண்டவமாட, அப்ஸரஸ்கள் நாட்டியமாட, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கைப்பிடித்து சப்தபதியைச் செய்து மாங்கல்யம் அணிவிக்கிறார்.

இந்த சுப நிகழ்ச்சி இன்று மதுரையில் உற்சவமாக, மதுரையின் மிகப்பெரும் திருவிழாவாக, வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் நடைபெறும் திருவிழாக்களின் தலை சிறந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஹாலாஸ்ய க்ஷேத்திரமான மதுரையில் நேற்று திக்விஜயம் ஆயிற்று.திருப்பரங்குன்றத்துக் குமரனும், தாரைவார்க்க பவழக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு நேற்றே வந்தாயிற்று. இவர்கள் இருவரும் இன்னும் சிறிது நேரத்தில்
மேடையேறி மணமக்களுக்காக காத்திருப்பர். சர்வாலங்காரங்களுடன் மதுரை நகராளும் அம்பிகையும், சர்வலோக சரண்யன் ஸ்ரீ சுந்தரேசனும் மேடைக்கு வந்துவிடுவர். நானும் சென்று அந்த திவ்யமான தெய்வீகத் திருமண தரிசனத்தைக் காணச் செல்ல வேண்டும். என்னுடன் நீங்களும் வாருங்கள், உங்களுக்கும் வி.ஐ.பி ஸ்பெஷல் பாஸ் இருக்கிறது.


ஸுமீனாக்ஷி ஸுந்தரேசெள பக்தபகல்ப மஹீருஹெள
தயோனுக்ரஹோ யத்ர தத்ர ஸோகோ ந வித்யதே

[பக்தர்களின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றிடும் பிராகாசிக்கும் கற்பக விருக்ஷங்களாக இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அருள் யாருக்கு இருக்குமோ அவர்களுக்கு துன்பம்/சோகம் சிறிதுமில்லை]

ஹர ஹர சுந்தர!
மீனாக்ஷி சுந்தர!

Friday, April 23, 2010

நம்பிக்கை...


ஒரு சமயம் காசி நகரில் சூக்ஷுமமாக உலா வந்தார்களாம் அம்பிகையும், ஈசனும். பலதரப்பட்ட பக்தர்களும் கங்கையில் ஸ்நானம் செய்து, இறைவழிபாடு செய்வதைக் காண்கின்றனர். அப்போது அம்பிகை ஈசனைப் பார்த்து, "கங்கையில் நீராடினா தமது பாபங்கள் அகன்றுவிடும் என்ற நம்பிக்கையில் இவர்கள் நீராடுகிறார்கள், அப்படி எல்லோருடைய பாபங்களும் அகன்றிடுமா?" என்று கேட்கிறாள். தொடர்ந்து, "இப்படி பாபங்களைப் போக்கிக் கொள்ள முடியுமெனில், மக்கள் பலவித பாபங்களைச் செய்துவிட்டு இங்கு வந்து ஸ்நானம் செய்து தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வார்களே?, அது சரியா என்றும் கேட்கிறாள்.

மலைமகளது கேள்விகளுக்கு பதிலாக ஈசன் ஒரு திருவிளையாடலைச் செய்ய உத்தேசிக்கிறார். அதாவது பராசக்தியும், பரசிவமும் வயதான தம்பதிக் கோலம் ஏற்று மக்கள் நடுவில் செல்வது என்றும், அப்போது திடீரென அம்பிகை தனது கணவர் நீரில் மூழ்கிவிட்டதாகக் கூறி உதவி கேட்பது என்றும் முடிவாகிறது. அவ்வாறு ஈசன் நீரினுள் (நீரினுள் மட்டுமா இருக்கிறான் அவன்?), இருக்கும் சமயத்தில் காப்பாற்ற வருபவர்களது நம்பிக்கையை அம்பிகை சோதிக்கும் விதமாக கேள்வி எழுப்ப முடிவு செய்கிறாள். [அடக்கடவுளே!, அங்க அவரு நீருக்குள்ள மூச்சை அடைக்கிட்டு இருப்பாராம்,இங்க இந்தம்மா இண்டர்வியூ பண்ணுவாங்களாம்!, என்ன கொடுமைடா சாமி!]

ஆயிற்று, கங்கைக் கரையில் அம்பிகை பெருங்குரலெடுத்து உதவி கேட்கிறாள் தனது கணவனை காப்பாற்ற. பலரும் வருகின்றனர், அப்போது மூதாட்டி ரூபத்தில் இருந்த அம்பிகை, உதவ வந்தவர்களிடத்து ஒரு கோரிக்கை வைக்கிறாள். அதாவது, காப்பாற்ற முன்வந்தவர்களில் யார் பாபமே செய்யாதவர்களோ, அவர்களே தனது பதியைத் தொட்டுக் கரை சேர்க்க முடியும் என்றும், தனது பதி சகல பாபங்களையும் களைந்த புண்ணிய சீலர் என்றும் கூறுகிறாள். உதவ வந்தவர்கள் திகைத்துப் போகின்றனர். எல்லோரும் தாம் செய்த பாப கார்யங்களை நினைத்து தயங்குகின்றனர். அப்போது ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது நீரில் குதித்து முதியவர் கோலத்தில் இருக்கும் பரமசிவத்தை அணைத்துக் கரை சேர்க்கிறான்.

கிழக் கோலம் கொண்ட மங்கையர்கரசிக்கு ஆச்சர்யத்துடன், கங்கையிலிருந்து ஈசனைக் கரை சேர்த்தவனிடத்தில் "பாபங்கள் ஏதும் செய்யாத ஒருவரே எம்-பதியைத் தொட்டுக் கரைசேர்க்க வேண்டும் என்றேன், பலரும் தயங்கிய நேரத்தில், நீ காப்பாற்றினாய், நீ பாபமே செய்யாதவனா?" என்று கேட்கிறாள். அப்போது, காப்பாற்றிய அந்த பக்தன், 'ஆம், நான் பாபம் ஏதுமில்லாத நிலையிலேயே உங்கள் கணவரைக் காப்பாற்றினேன், ஏப்படியென்றால் கங்கையில் மூழ்கியவுடன் எனது பாபமூட்டைகள் எல்லாம் கழிந்துவிட்டது, பிறகே நான் உங்களது கணவரைப் பிடித்துக் கரை சேர்த்தேன்' என்கிறான்.

அந்த பக்தனுக்கு கங்கை நதியின் மீதும், கங்கையில் நீராடினால் பாபங்கள் விலகும் என்று சொன்ன பெரியோர்கள் மீதும் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மெச்சி அவனுக்குக் காக்ஷி கொடுத்துவிட்டுச் சென்றனர்.

நம: பார்வதி பதே!
ஹர-ஹர மஹா தேவா!

நம்பிக்கைக் குழுவின் ஆண்டுவிழாச் சிறப்பாக இங்கு இதைப் பதிவு செய்வது மட்டுமே நான், இதைச் செய்தவரைத் தெரியவில்லை.

Saturday, April 17, 2010

தர்ம சாஸ்திரம்...

கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:

கர்ம, பக்தி, ஞான மார்கங்களில் எல்லாவற்றிலும் சாதனை என்று வந்துவிட்டாலே அஹிம்ஸை, அன்பு, பக்தி போன்றவற்றை மிக முக்கியமாக வலியுறுத்திப் பெரியவர்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆன்மீகப் பெரியவர்கள் பல நேரங்களில் தர்மம் பண்ணு, தர்மம் தலை காக்கும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் தர்மம் பண்ணுவது என்றால் என்ன?, எது தர்மம் என்பது பல நேரங்களில் தெரிவதில்லை. பொருள் வேண்டுபவர்களுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு (அதுவும் 80G வரி விலக்கு இருந்தால் மட்டுமே.. :-)) தருவது தர்மம் என்ற அளவில் ஆகிவிட்டது நமது வாழ்கை. ஆனால் தர்மம் என்பது வேறு தானம் என்பது வேறு என்பதை நாம் எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று பார்க்கலாமா?. இதை தெளிவிக்கவே தர்ம சாஸ்த்திரம் என்று தனியாக ஒன்றை, வேத-புராண-இதிகாசங்களின் சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார்கள் நமது மூதாதையர்கள்.

அஹிம்ஸா சத்யம் அஸ்தேயம் செளசம்
இந்திரிய நிக்ரஹ ஏதம் சாமாதிகம் தர்மம்
சாதுர்வர்ணே பிரதிர் மனு.

என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. அதாவது அஹிம்ஸை, சத்யம், அஸ்தேயம், செளசம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய ஐந்து விஷயங்களையும் நியமனமாகக் கொண்ட வாழ்கையை நடத்துதலே தர்ம வாழ்க்கை. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் தர்மம், ஆக தர்மம் என்னும் இந்த ஐந்துடன் தானத்தையும் சேர்த்த வாழ்கை ஆன்மீகத்தில் நம்மை உயர்த்தும் என்று கூறலாம் தானே?.இதில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கலாமா?

அஹிம்ஸை என்றால் நாம உடனே நினைக்கறது உயிர்களை துன்புறுத்தாமை, உணவுக்காக கொல்லாமை போன்றவற்றை மட்டுமே. ஆனால் பிறருக்கு எந்த விதத்திலும் மன வருத்தத்தை ஏற்படுத்தாது இருப்பதும் அஹிம்ஸைதான். இந்த மாதிரி வாழ்வது சிரமம் தான், ஆனால் பழகப் பழக இதை அனுபவத்தில் கொண்டுவர முடியும். நாம் வருந்த நேரிட்டால் உடனே அதற்கு எதிர் வினையாக நாம் செய்யும் செயலே பல நேரங்களில் எதிரில் இருப்பவருக்கு ஹிம்ஸையாகிறது. ஆகவே பிரச்சனை/மனவருத்தம் ஏற்படும்/ஏற்படுத்தும் என்று தோன்றுகிற/உணர்கிற நேரத்தில் அமைதியாக இருப்பது அல்லது அவ்விடத்திலிருந்து விலகி இருப்பதும் அஹிம்ஸை தான்.

அடுத்து வருவது சத்யம்.இது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. ஆனால் விளையாட்டுக்குச் சொல்வதாகவும், இந்த விளையாட்டு, 100 பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துவது என்பதெல்லாம் மஹா பாபங்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும். எந்தக் காரணத்திலும் அசத்யமான வார்த்தைகளைப் பேச மாட்டோம் என்று இருக்க வேண்டும். ஒருவர் எதிரில் இருந்தால் ஒன்று சொல்வது, இல்லையென்றால் இன்னொன்று என்பதானவைகள் அசத்யத்தில் சேர்ந்து, நமக்கு பாபத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் பெரியோர்.

அஸ்தேயம் என்றால் பிறன் பொருளுக்கு ஆசை கொள்ளாது இருத்தல். நம்மிடம் இல்லாத பொருளை அடுத்தவனிடத்தில் அபகரிக்க எண்ணவும் கூடாது என்கிறார்கள். அதாவது அடுத்தவன் சொத்துக்கு ஆசைப் படாமல் இருக்க வேண்டும். இந்த அஸ்தேயம் இல்லையென்றால் சத்யமும் அஹிம்ஸையும் நம்மால் செயல்படுத்த இயலாது. நியாயமான வழியில் கிடைப்பதை இறையின் பிரசாதமாக ஏற்று, அநியாயமாக பிறருடைய பொருளுக்கு ஆசை கொள்ளாது இருப்பது இந்த மூன்றாவது தர்மம்.

செளசம் என்றால் பவித்ரம்/பரிசுத்தம் என்று பொருள். உடல் பரிசுத்தம் என்பது முக்கியம்தான், அதைவிட மேலாக, மனதளவில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இங்கு சொல்லப்படும் செளசம். செளசம் இருவகைப்படும், பாஹ்ய செளசம், இதுதான் நமது உடல் தூய்மை, இன்னொன்று ஆப்யந்த்ர செளசம் என்பதான மனதளவில் தூய்மை. அதாவது குழந்தை போன்ற, கல்மிஷமில்லாத மனதுடன் இருத்தல். மனதில் கல்மிஷம் இருக்கும் வரையில் மேலே சொன்ன மற்ற மூன்று விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை தின்றுவிடக்கூடும் என்கிறார்கள்.

கடைசியாக வருவது இந்திரிய நிக்ரஹம். நமது பஞ்ச இந்திரியங்களது செயல்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். காஞ்னம்-காமினி-கீர்த்தி ஆகியவை பற்றி பெரியவர்கள் சொல்லியதை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்த இந்திர்ய நிக்ரஹம் என்பது காதால் நல்லவற்றைக் கேட்பதும், உணவுக் கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் பேணுதல், கண்களால் எதை எல்லாம் காணக் கூடாது என்று பலவிதங்களிலும் நம்மைப் புடம் போடச் செய்வது. இதுவும் ஒரு முக்கியமான தர்மம்.

சரி, இதெல்லாம் யாருக்குச் சொல்லப்படுகிறது?, மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் உண்டானவை என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. தர்ம வழியில் செல்ல வேண்டும், இறையருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் எல்லோருக்கும் இவை ஐந்தும் முக்கியம். இப்படி வாழ்பவனே தார்மீக வாழ்கை வாழ்பவன், தார்மீகன். இப்படி வாழத் தலைபடுவோமானால் இறையனுபவம் பெறுதல் சுலபம். ஆகவே நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் இந்த ஐந்து விஷயங்களையும் நினைவில் கொள்ள முயலுவோம்.

Friday, April 16, 2010

வாமநயனா, புண்யா புண்ய பலப்ரதா, குஹ்யரூபிணீ, சுபகரீ


(623) கேவலா, (624) குஹ்யா, (706) குஹாம்பா, (606) குஹஜன்பூ:, (707) குஹ்யரூபிணீ

"குஹ்யா" என்றால் அதி ரஹஸ்யமாக இருப்பவள் என்று பொருள் சொல்லலாம். எங்கு ரஹஸ்யமாக இருக்கிறாள்?, நமது ஹ்ருதயத்தில், காமராஜ பீஜத்தில் ரஹஸ்யமாக இருக்கிறாள், பூரணமாக, ஏகாந்தமாக இருக்கிறாள். இதனால் அவளை "கேவலா" என்று சொல்லியிருக்கிறார்கள். கேவலா என்றால் பூரணமாக, ஞானவிசேஷ ரூபமாக இருப்பது என்று சொல்கிறார்கள். குஹ்யா என்றால் ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கியம் என்றும், அந்த ஐக்கியத்திற்கான உபாஸனா மார்க்கத்தின் மூலமாக அடையக்கூடியவள் எனலாம்.

தாராசுரனால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவனிடமிருந்து விடுதலை பெற அம்பாளைப் பிரார்த்திக்கின்றனர். அந்தப் பிரார்த்தனையின் பலனாக பிறந்த காங்கேயன் பற்றி புராணங்களில் பார்த்திருக்கிறோம். இந்த சுப்ரமணியரது தாய் என்பதான நாமமே "குஹாம்பா" என்பது. இதையே குஹையில் இருக்கும் அம்பிகை என்றும் கூறலாம், அதாவது ஹ்ருதயம் என்னும் குஹையில் இருப்பவள். ஹ்ருதய குஹையில் இருப்பவள் என்பது ச்ருதி வாக்யம் என்றும் தெரிகிறது. இது போன்ற இன்னொரு நாமம் குஹஜன்மபூ:. இதன் பொருளும் ஸ்கந்தனுக்குத் தாயாக இருப்பவள் என்பதே. குஹூ என்றால் சூழ்வது என்று பொருள். அஞ்ஞானத்தில் ஆழ்ந்த ஜீவன்களைக் குஹர்கள் என்று பெயர். இந்த ஜீவன்கள் எல்லாம் அம்பிகையிடத்திருந்தே உற்பத்தி ஆவதாகவும் அதனால் அவளுக்கு "குஹஜன்மபூ;" என்று யாக்ஞ்யவல்கியர் சொல்லியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பரம ரஹஸ்யமான ரூபத்தை உடையவள் என்னும் பொருள் தரும் நாமம் "குஹ்யரூபிணீ" என்பது. அதாவது ஞானரூபிணி என்பது பொருள். குஹ்யோபநிஷத் என்று ஒரு உபநிஷத், அது அம்பிகையின் ரூபம் என்று கூர்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக குஹ்யோபநிஷதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம் என்று கூறியிருக்கிறார்கள் பெரியோர்.

(332) வாமநயனா, (288) புண்யா புண்ய பலப்ரதா, (682) சுபகரீ

அம்பிகையின் கண்கள் மிக அழகானவை என்னும் பொருளில் ஒரு நாமமே வாமநயனா. இதையே இனிமையான/அழகான அறியும் விதத்துடனானவள் என்றும் கூறலாம். வாமாசாரம் என்ற முறையில் வழிபடுபவர்களையும்
அழைத்து/அணைத்துச் செல்லும் மாதா என்றும் சொல்லலாம்.

கர்மாவுக்கு கிடைக்கும் பலனை வாமம் என்று கூறுவார்கள். கர்மாவின் பலன்களை அடையும்படி செய்வதால் அவளை வாமநயனா என்றும் சொல்லலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இதன் தொடர்ச்சியான இன்னொரு நாமம்,
'புண்யா புண்ய பலப்ரதா' என்பது. புண்யா புண்ய பலப்ரதா என்றால் புண்யம், அபுண்யம்/பாபம் ஆகியவற்றுக்குப் பலனைக் கொடுப்பவள் என்று அர்த்தம். ஸ்வதர்மத்தின்படி நடக்கிறவனுக்கு விசேஷமான பலன்களை உறுதி செய்தும்,
ஸ்வதர்மத்தில் செய்யக்கூடாதவைகள் என்று சொல்லியிருப்பதைச் மீறி நடப்பதால் ஏற்படும் பாபங்களையும் அம்பாளே கொடுப்பதாகவும் பொருள் சொல்லக்கூடிய நாமமே இது என்கிறார் பாஸ்கரர்.

மந்திர உபதேசம் இல்லாதவர்கள் ஸஹஸ்ர நாமத்தை, த்ரிசதியை பாராயணம் செய்ய/அர்ச்சனை செய்யக் கூடாது என்பது ஒரு விதி. இவ்வாறான நியம, நிர்பந்தங்கள் இல்லாது அம்பிகையை ஆராதித்தாலும் எந்த கெடுதலும் செய்யாது, சுபத்தை அருளுபவள்
என்று கூறும் நாமம் சுபகரீ. அதாவது பக்தர்களுக்கு சுபத்தையே அருளுபவள். ஸ்ரீமாதா என்று சொல்லிவிட்டாலே போதுமே?, எந்தத் தாய் தன் குழந்தைகளுக்கு அசுபமான செயலைச் செய்வாள்?, அது போல ஜகத்-ஜனனி தனது
பக்தர்களுக்கு எப்போதும் சுபத்தையே அருளுபவள் என்பதை தெளிவாக்கும் நாமம் இது.

Monday, April 12, 2010

ஸமயந்தஸ்தா, ஸமயாசார தத்பரா, ஸதாசார ப்ரவர்த்திகா

தானும், பரப்பிரம்மமும் ஒன்று என்பதான ஞானம் இல்லாதவர்களை பசுக்கள் என்று ச்ருதியில் சொல்லியிருக்கிறதாம். பாசம் என்பது நாம் அறிந்ததே, இதுவும் மாயை என்றே சொல்லியிருக்கிறார்கள். பஞ்சபூதங்களால் ஆன தேகத்தை 'தான்' என்று நினைத்து அதற்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட ஜீவனாகிய பசுவுக்கு அபேத/வேற்றுமையில்லாத/ ப்ரம்ஹ ஞானத்தை ஈந்து, பாசத்திலிருந்து/மாயையில் இருந்து விடுவிப்பவளுக்கு 'பசுபாச விமோசினீ ' என்று சொல்கிறார்கள்.

பசுக்களாகிய ஜீவன்களுக்கெல்லாம் பரமனே பதி என்னும் பொருளில் பசுபதி என்றும் சொல்லி இருக்கிறார்கள்.அதன்படி பிரம்மவித்யையில் லயிக்கும் சமயத்தில் அபேத ஞானம் ஏற்பட்டு பாசமானது விலகி ஜீவனானவன் பதியாகவே ஆகிடுவான் என்கிறார்கள். இவ்வாறான நிலை வருவதற்கு அருளுபவளை பசுபாச விமோசினீ என்பதும் தவறில்லையே?.

ஸமயாந்தஸ்தா

அந்தர்முகமாக ஸ்ரீசக்ரத்தை பாவனை செய்து, அதற்குப் பூஜை மற்றும் உபாஸனைகளைச் செய்யும் முறையை 'ஸமய' என்று கூறுவார்கள். [பகிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றை வைத்துச் செய்வது 'குலம்'] ஸமய வழியில், மானசீகமாகச் செய்ய்படும் முறையே ஸகல யோகிகளாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முன்னர் பார்த்த ஒரு நாமத்தில் சொன்னபடியாக வஸிஷ்ட, சுக, சனக, ஸனந்தன, ஸனத்குமாரர்களால் செய்யப்பட்ட சுபாகம பஞ்சகம் இந்த வழியிலானதே. இவ்வாறு ஸமய மார்க்கத்தில் வழிபடப்படுபவள் என்பதே ஸமயாந்தஸ்தா என்னும் நாமம். இதன் தொடர்புடைய இன்னொரு நாமம் 'ஸமயாசார தத்பரா' என்பது. அதாவது மேற்கூறிய ஸமயமார்க்கமாக உபாசனை செய்வதால் மகிழ்பவள் என்று பொருள். இந்த ஸமய மார்க்கத்தில் உபாஸனை செய்வதைப் பற்றி ருத்ர யாமளம் என்னும் நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள் பெரியோர்.

இந்த நாமாவுக்கு இன்னொரு பொருளும் சொல்லப்படுகிறது. அதாவது, சிவம்,சக்தி ஆகிய இருவரும் ஸமானமாக இருப்பதால் சிவனுக்கு 'ஸமய:' என்றும் சக்திக்கு 'ஸமயா' என்றும் பெயர். இவர்களது ஸாம்யத்தை ஐந்துவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். சக்ரம் முதலியவற்றில் ஸமமாக இருப்பது அதிஷ்டான ஸாம்யம், ஸ்ருஷ்டி முதலிய க்ரியைகளில் இருக்கும் ஸமமாக இருப்பது அனுஷ்டான ஸாம்யம், நிருத்யம் போன்றவற்றில் இருக்கும் ஸாம்யம் அவஸ்தானம் என்றும், சிவ, சிவா, பைரவ-பைரவி போன்றவற்றால் நாம ஸாம்யம், கடைசியாக நிறம், தரித்திருக்கும் ஆயுதங்கள் இவற்றால் ரூப சாம்யம் ஆகியவை.

ஸம்ஹ்ருதாசேஷ பாகண்டா

வேதம், வேதாங்கங்கள், மீமாம்ஸை, நியாயம், தர்ம சாஸ்திரம், புராணம் ஆகியவை எல்லாம் தர்மத்திற்கு இருப்பிடம் என்பர். இவற்றில் சொல்லியிருப்பதற்கு வெளியில் இருப்பதை புத்தியின் கற்பனையால் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார் லக்ஷ்மீதரர். இவ்வாறு மேலே சொன்ன வேத-வேதாந்த-தர்ம சாஸ்திர விரோதமான கற்பனையில் இருப்பவர்களை பா-கண்டன், பா என்றால் வேதம், அதை கண்டிப்பவன் என்று கூறி, அவ்வாறானவர்களை ஸம்ஹாரம் செய்பவள் என்று அம்பிகையைக் கூறுவதே இந்த நாமம். பாகண்டா என்பதும் பாஷண்டா என்பதும் ஒரே பொருளைத் தருவது, இன்றும் சில இல்லங்களில் அனாசாரமான செயல்களைச் செய்யும் குழந்தைகளை பாஷாண்டம் என்று திட்டுவதுண்டு..:-).

ஸதாசார ப்ரவர்த்திகா

மேலே சொல்லியபடி அம்பிகை பாகண்டிகளை ஸம்ஹாரம் செய்து, எல்லோரும் ஸதாசாரத்தை அனுசரிக்கச் செய்கிறாள் என்பதால் அவளுக்கு ஸதாஸாரத்தின் படியாக தனது பக்தர்களை வாழச் செய்பவள் என்பதான இந்த நாமம். ஸதாசாரம் என்றால் என்ன என்றும் பார்த்துவிடலாம். ஸதாசாரம் என்றால் உத்தமமான ஆசாரம், ஸத்துள்ள ஆசாரம், பிரம்மத்தை அடையக்கூடிய ஆசாரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

[இந்த இடுகையில் 5 நாமங்கள் வந்திருக்கின்றது]


ப்ராம்ஹி, ப்ராம்ஹணீ, ப்ரம்ஹாநந்தா, பாஷாரூபா


அஷ்டமூர்த்தி, வாகதீஸ்வரி, ப்ராம்ஹி, ப்ராம்ஹணீ, ப்ரம்ஹாநந்தா, பாஷாரூபா
சிவபெருமானுக்கு, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹான் என்று எட்டு நாமங்கள் உண்டு. இந்த எட்டு நாமங்களில் சொல்லப்படும் ஈசனுடைய பத்னியாக அம்பிகையையும் சொல்வது வழக்கம். அதாவது, பவாய தேவாய நம: என்று ஈசனை வணங்கினால், அம்பிகைக்கு பவஸ்ய தேவஸ்ய பத்னியை நம: என்பதாகச் சொல்லப்படும். ஆக ஈஸ்வரனுக்கு மட்டும் 'அஷ்ட மூர்த்தி' என்று பெயர் இல்லை, அம்பிகைக்கும் அந்த நாமம் இருக்கிறது. அஷ்ட லக்ஷ்மிகள், அஷ்ட மாதாக்கள், அஷ்ட வாக்தேவிகள் ஆகியோரெல்லாம் அம்பிகையின் ரூபங்கள் என்பதாலும் அவளை 'அஷ்ட மூர்த்தி' என்று கூறுகிறார்கள் வசின் தேவதைகள். இதே போல 8 ரூபங்களில் இருக்கும் வாக்தேவிகள் அம்பிகையின் ஸ்வரூபமே என்பதை 'வாகதீஸ்வரி' என்னும் நாமாவின் மூலமாகவும் தெளியலாம். வாகதீஸ்வரி என்றால் சொல்லாற்றலில் தலைசிறந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் தொடர்புடைய இன்னொரு நாமா 'ப்ராம்ஹீ'. ப்ரம்ஹபத்னியான ஸரஸ்வதீ ரூபமாக இருப்பவள். இந்த நாமத்தையே, ப்ரம்ம வித்தையில் இருந்து வேறுபட்ட ரூபம் இல்லாதவள், அவளே ப்ரம்மவித்தையாக, ப்ராம்ஹியாக இருக்கிறாள் என்றும் கூறுவார் எனது குரு.

'பராம்ஹணீ''' என்று ஒரு நாமம், இங்கே பரமசிவனது பத்னீ என்று இந்த நாமத்துக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சகல உலகங்களிலும் உத்தம ப்ராம்ஹணனாக சிவத்தைச் சொல்லி அவனுடைய பத்னியை ப்ராம்ஹணீ என்று கூறுகிறார்கள். சாந்தோக்ய உபநிஷதத்திலும், ஆதித்ய, கூர்ம, வாஸிஷ்ட்ட, லிங்க புராணங்களிலும் பரமசிவனே உத்தம ப்ராம்ஹணனாக, அதாவது ப்ரம்ஹத்தை அறிந்தவனாக, பிரம்மமே இருப்பதாகச் சொல்லியிருப்பதாகவும், அதனால் அவனது பத்னிக்கு ப்ராம்ஹணீ என்ற நாமம் என்பதாகக் கூறியிருக்கிறார் பாஸ்கர ராயர்.

'ப்ரம்ஹாநந்தா' என்னும் நாமத்தில் ஸகுணமாக இருக்கும்போது அம்பிகை பிரம்மத்தையே ஆனந்தமாகக் கொண்டிருப்பவள் என்பதான நாமம்.இவளையே பாவம், அபாவம் இல்லாதவளாக 'பாவா-அபாவ விவர்ஜிதா' என்றும் கூறுகிறார்கள். அதாவது,உற்பத்தி, விநாசம் ஆகிய இரண்டும் இல்லாதவளாம் அம்பிக்கை.

இன்னொரு நாமம் 'பாஷாரூபா'. அதாவது பாஷைகள்/மொழிகள் எல்லாம் அம்பிகையின் ரூபமாகச் சொல்லபடுகிறது. பலவகை மொழிகளிலும் வர்ணனை, ஸ்தோத்ரம் செய்யப்படுபவள் என்றும் சொல்லலாம். இதனால்தானோ என்னமோ, மொழிகளை எல்லாம் பெண்பாலில், தமிழன்னை என்பது போல சொல்லப்படுகிறது வழக்கமாகியிருக்கிறது.


[இந்த இடுகையில் 6 நாமங்கள் வந்திருக்கின்றது]

Saturday, April 10, 2010

பஞ்ச ப்ராணன்களான, ப்ராணா, அபானா, வ்யானா, உதானா, சமானா ஆகியவற்றுக்கு ஈச்வரியாக இருப்பதால் அம்பிகையை ப்ராணேச்வரீ என்கிறார்கள். வேதத்தை, ப்ராண: என்று கூறுவதுண்டு, அப்படிப் பார்த்தால் வேதத்திற்கெல்லாம் தலைவியாக/ஈச்வரியாக இருப்பவள் எனலாம். ப்ராண என்பது இந்திரியங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இதன்படி இந்திரியங்களுக்கு ஈச்வரி. அம்பிகை எல்லா பிரபஞ்சங்களுக்கும் அதிஷ்ட்டானமாக/அடிப்படையாக இருக்கிறாள் என்பதை 'ப்ரதிஷ்டா' என்று கூறினர் வசின் தேவதைகள். இவளே சகல உலகத்தையும் உயிருடன் இருக்கச் செய்வதால் அவளை 'ப்ராணதாத்ரி' என்கிறார்கள். மேலே சொன்னது போல சகல இந்திரியங்களையும் தருபவள் என்றும் கூறிடலாம்.

இவளது ரூபத்தைச் சொல்லுகையில், எல்லோருடைய அனுபவத்தாலும் தெரியப்படுபவள் என்பதாக,'ப்ரகடாக்ருதி' என்கிறார்ள். ப்ரகடம் என்றால் வெளிப்படையாகத் தெரிவது என்று பொருள். ஸ்ரீசக்ரத்தின் முதலாவரண யோகினி தேவதைகளின் ரூபமாக இருப்பவள் என்றும் கூறலாம்.


ஸத், சித், ஆனாந்தம் என்ற லக்ஷணங்களுடன் கூடிய ப்ரம்மத்தின் சித் என்னும் பாகத்தை தன் ஸ்வரூபமக உடையவள், அதனால்தான் அவள் 'சித்ரூபிணீ'. பத்ம புராணத்தில் அம்பிகையின் மூர்த்தங்களைச் சொல்லுகையில் சகல ஜீவன்களுடைய சித்தங்களில் இருப்பது 'சித்கலா' என்ற சக்தி என்பதாகச் சொல்லியிருக்கிறது. சித் என்றால் ஞானம் என்று ஒரு பொருள், கலை என்றால் பாகம் எனலாம். ஆக சகல ஜீவன்களின் சித்தத்திலும் இருப்பவள் என்று பொருள் சொல்லி, ஜீவன்களின் ஆனந்தம் என்பது ப்ரம்மானந்தத்தின் ஒர் அம்சமே என்று கூறும்படியாக, அடுத்து வருவது 'ஆனந்தகலிகா'. ஆனந்தகலிகா = ஆனந்தத்தின் அம்சமானவள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனந்தகலிகா என்பதையே, ஸச்சிதானந்தமான பரபிரம்மத்தின் ஆனந்த ரூபம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அத்வைதத்தில் பாம்பு-கயறு உதாரணம் சொல்லி மாயையை விளக்குவார்கள். அதாவது இருட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் கயற்றைப் பார்த்து பாம்பு என்று கலக்கமுறுவதாகவும், அருகே சென்றால் அது கயறு என்று தெரியும் இது மாயையால் விளைவது என்று சொல்லப்படும், இதனாலேயே அவள் 'மஹாமாயா' எனப்படுகிறாள். இந்த மாதிரி கலக்கங்கள் இல்லாதவளாம் அம்பிகை, அகவே அவள் 'நிராபாதா'. அதாவது கலக்கமில்லா புத்தியுடையவள். நிராபாதாவிற்கு அடுத்து வருவது நிர்பேதா, அதாவது பேதங்கள் ஏதுமில்லாதவள். சக்தி பெரிதா?, சிவம் பெரிதா? என்பதெல்லாம் உண்மையை நெருங்காதவர்களது கூற்று என்றும் யோகிகளுக்கு இந்த பேதங்கள் இல்லாததை உணர்வர் என்பது கூர்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Tuesday, April 6, 2010

யோகினி, யோகதா, யோக்யா, யோகாநந்தா..

யோகத்தின் ஸ்வரூபமாக இருப்பவள் யோகினி. யோகத்தைக் கொடுப்பவள் யோகதா. யோகத்தால் அறியப்படுபவள் யோக்யா என்பதே இந்த மூன்று நாமங்களின் பொருள். யோகம் என்பதே ஐக்ய பாவனைதான், அந்த பாவனையாக அம்பிகை இருந்து, தனது பக்தர்களுக்கு யோகத்தை அளித்து, அவர்களுக்கு தனது ஸ்வரூபத்தை உணர்த்துபவள்.

மந்திர சாஸ்திரத்தில் டாகினீ முதலான பல யோகினிகளைச் சொல்வார்கள். அந்த யோகினிகள் அனைவரது ரூபமாகவும் அம்பாளே இருப்பதால் அவளை யோகினி/மஹாயோகினி என்று சொல்வது வழக்கம். தனது பக்தர்களுக்கு லெளகீக வாழ்கைக்குத் தேவையான செல்வம் போன்றவற்றையும், ஆன்மீக வாழ்வுக்கு அதாரமான பக்தி, கர்மா, ஞான சாதனங்களையும் அருளுவதால் அவள் யோகதா என்றும் கூறலாம். தக்ஷிணாமூர்த்தியே தனது யோகத்தின் மூலமாக அம்பிகையைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது, அவ்வாறாக யோகத்தின் மூலமாக இருப்பவள் யோக்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். யோகிகளுக்கு யோக பலனான பேரானந்தம் பராம்பிகையின் திருவருளே, ஆகவேதான் அவள் யோகாநந்தா எனப்படுகிறாள்.

மாயை என்பது பரப்பிரம்மத்தின் இயக்க சக்தியே என்று முன்னர் பார்த்தோம். இந்த சக்தியில் இருந்தே ஸத்வ-ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் உருவாகிறது. இந்த குணங்கள் ஒன்றை ஒன்று அடக்கி ஆளும் ஸ்வபாவமுடையவை. ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இரண்டும் அடங்கி சத்வமே மேலிட்டு இருக்கும் சக்தியை யோகதா என்றும், ரஜஸ் அதிகமாகவும் தமஸ் மற்றும் ஸத்வ குணங்கள் குறைவாக/அடங்கியும் இருக்கும் சக்தியை யோகினியாகவும், ஸத்வ மற்றும் ரஜஸ் குணங்கள் குறைவாகவும் தமஸ் அதிகம் கொண்ட சக்தி ஸ்வரூபத்தை யோக்யா என்றும் பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.

ரமணீ, ராகேந்து வதநா...


மஹாதேவி

மஹதீ என்றால் மிகப் பெரிய, அளவிட முடியாத சரீரம் என்று பொருள். இதனால் தான் அடிமுடி காண முடியாத இறைவனை மஹாதேவன் என்றும் அவளுடைய பத்னி மஹாதேவி என்றும் கூறப்படுகின்றனர். தேவிபுராணம் அளவிட முடியாத பெரிய சரீரத்தை உடையவள் என்று கூறியிருக்கிறது. கண்டகி நதிக்கு அருகில் இருக்கும் சக்ர தீர்த்தத்தில் வசிக்கும் தேவிக்கு மஹாதேவி என்று பெயர் என்பதாக சக்தி பீட நிர்ணயத்தில் கூறப்படுகிறது.

மஹா லக்ஷ்மி

முந்தைய நாமத்தில் கூறப்பட்டது போல அளவிட முடியாத லக்ஷ்மிகரத்தை உடையவள் மஹா-லக்ஷ்மி. இவளே விஷ்ணு பத்னி ரூபத்தில் இருப்பவள். கரவீர க்ஷேத்திரம் என்று புராணகாலத்தில் சொல்லப்பட்ட கோலாபுரத்தில் இருப்ப்வள் இவளே என்று பாத்ம புராணம் சொல்லியிருக்கிறது. பாத்ம புராணத்தில் இவளைச் சொல்லும் போது மஹாலன் என்னும் அரக்கனை அழித்ததால் மஹா லக்ஷ்மி என்று பெயர் பெற்றாள் என்று இருக்கிறது. இது தவிர, சிவ புராணம், மார்க்கண்டேய புராணம், மைலாரா-தந்திரம் ஆகியவற்றிலும் அம்பிகையின் ரூபமே மஹா-லக்ஷ்மி என்று கூறப்பட்டிருக்கிறது.

ரமா என்னும் நாமமும் லக்ஷ்மி ஸ்வரூபமாக லலிதையைக் கூறும் பொருளில் வருவதுதான். தேவி பாகவதத்திலும் புவனேஸ்வரி ப்ரபாவத்தின் போது, மஹா-லக்ஷ்மி, மஹா-சரஸ்வதி மற்றும் கெளரி ஆகியோர் அம்பிகையின் ஸ்வரூபமாக அவளிலிருந்து பிரிந்தவர்கள் என்றே சொல்லியிருக்கிறது. கன்யா பூஜையில் 13 வயது பெண்குழந்தையை மஹா-லக்ஷ்மியாக வரித்துச் செய்வது வழக்கம்.

இவள் எப்படி இருக்கிறாளாம்?, ரமணீயமாக இருக்கிறாளாம், ஆகவே ரமணீ என்று ஒரு நாமா. அதாவது பக்தர்களிடத்தில் இனிமையாக விளையாடுபவள்/பழகுபவள் என்பது பொருள். எவ்வளவு அயர்ச்சி, குழப்பம் இருந்தாலும், பூர்ண சந்திரனைப் பார்க்கையில் நமக்குள் ஒரு இனம் புரியாத சாந்தம்/அமைதி கிட்டுகிறது. அது போல பக்தர்களுக்கு மகிழ்வை/சாந்தத்தை தரும் வதனத்தை உடைய அம்பிகைக்கு ராகேந்து வதநா என்று பெயர். அதாவது, பூர்ண சந்திரன் போன்ற வதனத்தை உடையவள். அம்பிகையின் வதனத்தை அர்த்த சந்திரன், பூர்ண சந்திரன் என்று பலவிதமான நாமங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

[நம்பிக்கை குழுமத்திற்காக எழுதப்பட்டது, படம் உதவி, "அடியேன் முத்துசாமி"]

Thursday, April 1, 2010

சிவதூதீ, சிவாராத்யா, சிவமூர்த்திசிவதூதீ

பிறருக்கு ஒரு செய்தியை கொண்டு சென்று சொல்பவனை தூதன் என்கிறோம். சிவனையே தூதுவனாக அனுப்பியவள் பராம்பிகை. அதனாலேயே அவளுக்கு சிவதூதி என்று பெயர். சும்ப-நிசும்பர்களுடன் போரிடும் முன்பாக சிவனை தூதுவனாக அனுப்பியதாக தேவி பாகவதம் கூறுகிறது. அந்த நிகழ்வை குறிப்பிடுவதுதான் இந்த நாமா. பத்ம புராணத்திலும் இந்த நாமாவை அம்பாளுக்குச் சொல்லியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

சிவாராத்யா

சிவனால் ஆராதிக்கப்படுபவள் சிவாராத்யா. அன்னையின் முதல் 12 பக்தர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பரமசிவனே முதலாவதாகச் சொல்லப்படும். காஞ்சி க்ஷேத்திரத்தில் பரமசிவனே காமாக்ஷியை முதலில் பிரதிஷ்ட்டை செய்து, பிற்காலத்தில் துர்வாசராக வந்து அந்த க்ஷேத்திரத்திற்கான பூஜா கல்பத்தையும் அளித்ததாகச் சொல்வர். பரமசிவன் அம்பிகையை ஆராதித்தே அர்த்தநாரீச்வரனாக ஆகியதாக பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.

சிவமூர்த்தி

சிவனுக்கும் அம்பிகைக்குமான பேதத்தை போக்கும் நாமா இது. அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். இதையே சிவம் என்றால் மங்களம் என்னும் பொருளால், இன்னொரு விதத்தில் மங்களமான மூர்த்த்ம் அவள் என்றும் கூறலாம். சிவ என்றால் மோக்ஷம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் மோக்ஷத்தையே ரூபமாகக் கொண்டவள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.