Saturday, August 13, 2011

காயத்ரி மந்த்ர ஜபம் - சிறப்பும், செய்முறைகளும்




காயத்ரி ஜபத்தின் சிறப்பையும், அதனைச் செய்யும் விதிகள் சிலவும் இப்பதிவில் பார்க்கலாம். இங்கு சொல்லப்பட்ட சில செய்திகள் எனது குரு மற்றும் வடுவூர் வேதவல்லி கனபாடிகள் சொல்லியதின் சாரம்.

தினமும் காயத்ரி ஜபம் செய்வதால் என்ன பலன் என்பதற்கு வேதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதலில் காண்போம்.

முன்னொரு காலத்தில் ராக்ஷஸர்கள் கடுமையாகத் தவம் செய்த சமயத்தில் ப்ரஜாபதி ப்ரத்யக்ஷமாகி ராக்ஷஸர்களுக்கு வரமளிக்க முன்வருகிறார். அப்போது ராக்ஷஸர்கள் தங்களுக்கு சூர்யனை எதிர்க்கும் சக்தி வேண்டும் என்று வரம் கேட்கின்றனர். ப்ரஜாபதியும் அவ்வரத்தைக் கொடுத்துவிடுகிறார். இவ்வரத்தின் காரணமாக நித்ய சஞ்சாரம் செய்யும் சூர்யனது சஞ்சாரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. உதயத்தின் போதும், அஸ்தமனத்திலும் அஸுரர்கள் சூர்யனை எதிர்க்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு சூர்யனுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க தேவர்கள் ஒர் உபாயத்தைச் செய்கின்றனர், அதுவே சந்த்யா வந்தனம். இதில் செய்யப்படும் ஜபமானது சூர்யனுக்கு, ராக்ஷசர்களை எதிர்க்கும் பலத்தைக் கொடுப்பதுடன், சந்த்யாவந்தனத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அர்க்யமானது வஜ்ராயுதமாகி ராக்ஷஸர்களை அழிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சந்த்யா காலத்திலும் சூர்யனை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் இந்த ஜபத்தால் மந்தேஹாருணம் என்னும் தீவிற்கு தள்ளப்படுகிறார்கள். ராக்ஷஸர்கள் அத்தீவிலிருந்து வெளியேறி சூர்யனை எதிர்க்க இயலாவாறு மீண்டும் மீண்டும் செய்யப்படும் காயத்ரி ஜபத்தின் காரணமாக சூர்யனுடைய சஞ்சாரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாது இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சூர்யனுக்கே ரக்ஷையான காயத்ரியை அதிக அளவில் ஜபம் செய்பவர்களுக்கு எவ்வித பலன்கள் கிடைக்கும் என்பதை அளவிடவும் முடியுமோ?


காயத்ரி மந்த்ரமானது வேதங்களின் ஸாராம்சம் என்றால் மிகையாகா. காயத்ரியின் முதல் பாகமான ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் ஆனது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது. இதே போல காயத்ரியின் இரண்டாம் பாகமான வ்யாஹ்ருதிகள் மூன்றும், மூன்று வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டதாம். இதே போல, மந்த்ரத்தின் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்திலிருந்தும், 'பர்க்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜுர்வேதத்தில் இருந்தும், தியோயோந: ப்ரஜோதயாத்' என்பது ஸாம வேதத்திலிருந்தும் எடுத்து ஒரே மந்த்ரமாக அருளப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருவன் செய்யும் காயத்ரி ஜபமானது மூன்று வேதத்தையும் அத்யயனம் செய்த பலன் தருவதாக மனு கூறுகிறார்.

வேத வியாஸர் காயத்ரி ஜபத்தின் சிறப்பைச் சொல்லுகையில், இந்த ஜபத்தை பத்து முறை ஜெபிப்பதால் மூன்று நாட்கள் செய்த பாபங்கள் போவதாகவும், நூறு முறை ஜபம் செய்வதால் செய்பவனது பாப கூட்டமே விலகிவிடுவதாகவும், ஆயிரம் முறை ஜபம் செய்வதால் உபபாதகம் எனப்படும், கோவதம், காலாகாலத்தில் உபநயனம் செய்யாதது, சம்பளம் கொடுத்து வேதம் கற்றல், அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் செய்யாததால் ஏற்படும் பாபங்கள், செய்நன்றி மறத்தல் போன்ற பாபங்கள் நீங்குவதாகவும் கூறுகிறார். மேலும், கோடி ஆவர்த்தி ஜபம் செய்பவனுக்கு தேவர்- கந்தர்வர்களாகும் வாய்ப்பும் உண்டென்று கூறுகிறார்.

காயத்ரி மந்த்ரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் இம்மந்த்ர ஜபத்தின் பலனைக் கூறுகையில், ஸப்தவ்யாஹ்ருதிகளுடன் கூடிய ப்ரணவ ஸஹித காயத்ரியை உச்சாரணம் செய்பவனுக்கு ஒரு போதும் பயம் என்பதே இருக்காது என்கிறார். மேலும் சொல்கையில், இந்த மந்த்ரத்துக்கு ஸமமானது நான்கு வேதங்களிலும் ஏதும் இல்லை என்றே கூறுகிறார். ஒருவன் வேத அத்யயனம் செய்ய முடியாவிடினும், தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய இயலாவிடினும், காயத்ரி ஜபத்தை விடாது செய்வானாகில், அவனுக்கு
எவ்வித இடையூறும் இல்லாது நிர்பயமாக வாழ்வான் என்கிறார். எத்தனை முறை ஜபம் செய்ய வேண்டும் என்பதையும் விச்வாமித்ரர் சொல்லியிருக்கிறார். அதாவது, உயர்ந்த பக்ஷமாக ஆயிரத்து எட்டு முறையும், மத்யமமாக நூற்றெட்டு முறையும், அதம பக்ஷமாக பத்து முறையும்செய்ய வேண்டும் என்கிறார். இதையே பரத்வாஜர் சொல்லுகையில் அதமமாக இருபத்து எட்டு முறை ஜபம் செய்ய வேண்டும் என்கிறார். இந்த அதம பக்ஷம் என்பது ஆசொளச காலம் மட்டுமே!. மற்ற நேரங்களில் மத்யமமாகவாவது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.


காயத்ரி மந்த்ரம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அவை, ஏகப்ரணவ ஸஹித காயத்ரி, ப்ரணவ ஸம்புடித காயத்ரி, ஷடோங்கார காயத்ரி என்பதாம். இவற்றில் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன் ஆகியோருக்கு ஏகப்ரணவ காயத்ரியும், ஸம்புட காயத்ரி வானப்ரஸ்தர்களுக்கும், யதி ஸ்ரேஷ்டர்களுக்கு ஷடோங்கார காயத்ரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இம்மூன்றுக்குமான வித்யாசங்கள் இங்கே தேவையில்லை, அவை குருமூலமாக அறியவேண்டியது. ஜபம் செய்யும் வேளைக்கு ஏற்றவாறு காயத்ரி தேவி பெயராலும், உருவத்தாலும் வேறுபடுவதாகச் சொல்லியிருக்கிறார் யஜ்ஞவல்க்யர். ப்ராத காலத்தில் காயத்ரியாகவும், மாத்யான காலத்தில் ஸாவித்ரியாகவும், ஸாயங்காலத்தில் சரஸ்வதியாகவும் த்யானிக்க வேண்டும். இந்த மூன்று ரூபங்களும் ப்ரம்ஹ, ருத்ர, விஷ்ணு ரூபமானதாகச் சொல்லி அவ்வாறே த்யானிக்க வேண்டும் என்கிறார்.

மேலும் யஜ்ஞவல்க்யர் இது பற்றிச் சொல்லுகையில், கிருஹத்தில் ஜபம் செய்கையில் என்ன பலனோ அதை விட இருமடங்கான பலன் நதி போன்ற தீர்த்தகரையில் செய்கையில் கிடைப்பதாகவும், மாட்டுக் கொட்டிலில் செய்கையில் பத்து மடங்காகவும், அக்னி சாலையில் செய்கையில் நூறு மடங்காகவும், ஆலயங்களில், ஸ்ரீ விஷ்ணு ஸந்நிதியில் கோடிக்கணக்கான மடங்கும் அதிகரிக்கும் என்கிறார். ஜபம் செய்யும் முறை பற்றி வியாசர் குறிப்பிடுகையில், மந்த்ரத்தை பாதம், பாதமாக பிரித்து ஜபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது ஜபம் செய்கிறவனுக்கு ரெளரவம் அன்னும் கொடிய நரகத்தை அடைய வேண்டியதிருக்கும் என்கிறார். மூன்று பாதங்களாகப் பிரித்து ஜபம் செய்பவனுக்கு ப்ரம்ம ஹத்தி முதலான அனைத்துப் பாப கூட்டங்களும் நீங்குவதாகச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு பாதங்கள் பிரிப்பதைக் கொண்டு, இந்த மந்திரம் அஷ்டாக்ஷர காயத்ரி, சதுர்விம்சத்யாக்ஷர காயத்ரி என்று இருவகை சொல்லப்படுகிறது, இவையும் குருவின் மூலமாக அறியவேண்டியதே!.

காயத்ரி மட்டுமல்லாது, மற்ற எந்த மந்த்ரமானாலும் ஜபம் செய்யும் விதம் பற்றிச் சொல்லுகையில், மூன்றுவிதமாகச் சொல்லுகிறார்கள். வாசிகம், உபாம்சு, மானஸம் என்பவை அந்த மூன்று விதங்கள். இவற்றில் வாசிகம் என்பது மந்த்ரத்தை வாய்விட்டு, பிறருக்குக் கேட்குமளவில் சொல்வது, சப்தமில்லாது, உதடுகளை அசைத்தவாறு சொல்வது உபாம்சு, உரக்கச் சொல்லாமல், உதடுகளும் அசையாது, மனதளவில் மந்த்ரத்தைச் சொல்லுவது மானஸம். இவற்றில் மானஸம் உத்தமம், உபாம்சு மத்யமம், வாசிகம் அதமம்.

வியாஸர் ஜப அனுஷ்ட்டானத்தினை விவரிக்கையில் காலையில் ஜபம் செய்கையில் இரு கைகளையும் மூக்கிற்கு நேராகவும், மாத்யான காலத்தில் ஹ்ருதயத்திற்கு நேராகவும், ஸாயங்காலத்தில் தொப்புளுக்கு நேராகவும் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டு சோம்பலின்றி ஜபம் செய்ய வேண்டும் என்கிறார்.ஆசாரம், மெளனம், நிலையான மனநிலை ஆகியவற்றுடன் மந்த்ரார்த்ததை நினைத்தவாறு ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்கையில் கனைத்தல், கொட்டாவி விடுதல், தூக்கம், சோம்பல், பசி, ஆகியவை கூடாது.



ஜபத்தின் மத்தியில் ஆசார்யரோ, அல்லது வேறு பாகவதோத்தமர்களோ வந்தால் ஜபத்தை நிறுத்தி அவர்களுக்கு பதிலளித்தல் அவசியம், அவர்களை வழியனுப்பிய பின்னர் ஜபத்தைத் தொடர வேண்டும்.

மேற்கூறியவை தவிர சில-பல நியமங்கள் குரு முகமாகச் சொல்லப்பட்டிருக்கலாம், அவற்றை முதலாகவும், மேலே சொன்னவற்றையும் கவனத்துடன் மேற்கொண்டு காயத்ரி ஜபத்தைச் செய்வோம்.

அனுதினமும் சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் செய்பவர்களுக்கும், குறிப்பாக திவாண்ணா மற்றும் அவருடன் இணைந்து ஒவ்வொரு வருஷமும் லக்ஷ ஆவர்த்திக்கும் மேலாக காயத்ரி ஜபம் செய்யும் பெரியோர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Friday, August 5, 2011

ரஹோயாக-க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா, ஸாக்ஷிவர்ஜிதா


நவாவரண பூஜை மற்றும் இவற்றையொட்டிய மந்திர ஜபங்கள் போன்றவை மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவன. இந்த மார்க்கமானது மிக ரஹஸ்யமாகச் செய்யப்படுவது. இந்த மார்க்கத்திலேயே பல விதங்கள் இருக்கிறது., இவை அவரவர் குலாசாரம், உபதேசிக்கும் குருவின் மார்க்கம் போன்றவற்றையொட்டி வருவது. உதாரணமாக காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி சன்னதியில் செய்கிற பூஜைமுறைகளும், மற்ற கோவில் மற்றும் இல்லங்களில் செய்கிற ஸ்ரீசக்ர பூஜை முறைகளுக்கும் வேறுபாடு உண்டு. இதே போன்று, ஸன்யாசிகள் மற்றும் க்ருஹஸ்தர்களது ஸ்ரீ சக்ர பூஜை முறைகளில் வேறுபாடு உண்டு. இந்த பூஜை முறைகளை என் போன்ற சாதாரணர்கள் பார்க்கும் போது எவ்வித வித்யாசங்களும் தெரியாது. இவ்வாறு வித்யாசங்களை அறிய முடியாத வகையில் அம்பிகையை ரஹஸ்யமாக ஆராதிப்பதால் ரஹோயாகக்ரமாராத்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தை, ரஹோயாக + க்ரமாராத்யா என்று பிரிக்க வேண்டும். ரஹோயாகம் என்றால் ரஹஸ்யமாகச் செய்யப்படும் யாகம் என்றும் க்ரமாராத்யா என்றால் குறிப்பிட்ட க்ரமத்தைக் கொண்டு ஆராதிப்பவள் என்றும் பொருள். ரஹஸ்யமான யாகக் க்ரமத்தால் வழிபடப்படுபவள் என்பது பொருள்.

யோக மார்க்கத்தில் குண்டலி சக்தியை சஹஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று அங்கே பரமசிவத்துடன் சேர்த்து உபாசனை செய்வது என்பது ஏகாந்தமாக , ரஹஸ்யமாகச் செய்யப்படும் ஆராதனை. இதையே செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், 'ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே' என்று கூறுகிறார்.

ரஹஸ்யமான முறையில் ஜப, யோக முறைகள் செய்தாலும், அவற்றின் புரச்சரணமாக தர்பணம் செய்யவேண்டும். இந்த தர்பணமும் ஆராதனையே!. தர்பணம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. த்ருப்தி தரும் கர்மாவே தர்பணம். அம்பிகைக்குத் த்ருப்தி தரும் ரஹஸ்ய தர்பணத்தால் வழிபட்டு அவளை த்ருப்தி செய்தல் என்பதே ரஹஸ்தர்பண தர்பிதா. மந்த்ரத்தின் பொருளை அறிந்து சாதகம் செய்வதே அம்பிகையை த்ருப்தி செய்யும். இவ்வாறு பொருளை அறிந்து செய்யும் பிரயோகத்தையும் ரஹஸ்தர்பணம் என்கிறார்கள் பெரியோர். சில நேரங்களில் குலாசார முறையில் முதலில் மந்த்ர ஜபம் போன்றவை முதலில் நடந்தாலும், பின்னர் ரஹஸ்யமாக மந்த்த்ரங்களின் பொருள் கூறப்படுகிறது. இவ்வாறு பொருள் அறிந்த பின்னர் செய்யப்படுவது அம்பிகைக்கு மிகுந்த த்ருப்தியைத் தருவது, இதுவே 'ரஹஸ்தர்பண தர்பிதா'. மேற்கூறியவாறு, ரஹோகக் க்ரமத்திலும், ரஹஸ்யதர்பணங்களிலும் வழிபாடு செய்ப்யும் போது அம்பிகை உடனே அனுக்ரஹம் செய்கிறாளாம், ஆகவே அவளை 'ஸத்ய: ப்ரஸதினி' என்கிறார்கள்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஆரம்பமே 'விச்வம் விஷ்ணும் வஷட்காரோ' என்று ஆரம்பிக்கிறது. ஸகல உலகங்களிலும் நடக்கும் செயல்களுக்கும் அம்பிகை சாக்ஷியாக இருக்கிறாள் என்பதால் அவளை 'விச்வஸாக்ஷிணீ' என்கிறார்கள் வாக்தேவதைகள். விச்வம் என்ற பதத்திற்கு ஜகத், ஸகலம்/எல்லாமும் என்று பொருள் சொல்லலாம். இப்படி எல்லாச் செயல்களுக்கும் சாக்ஷியாக இருப்பவளுக்கு எந்த சாக்ஷியும் கிடையாது. அவரவர் அனுபவத்தால் மட்டுமே அறியப்படுபவள் இவள். ஆகவே இவளை 'ஸாக்ஷிவர்ஜிதா', அதாவது தனக்கு சாக்ஷி ஏதும் இல்லாதவள் என்ற பதத்தில் கூறப்படுகிறாள்.

Monday, August 1, 2011

ஸ்ரீவத்ஸம் -1 [ப்ருகு / பார்கவர்]


கோத்ரம் ப்ரவரம் ஓர் அறிமுகம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக இந்த இடுகையில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தின் மூல ரிஷிகள் பற்றி ஒவ்வொருவராகப் பார்க்கலாம். முதலில் பார்கவர் எனப்படும் ப்ருகு.

'மஹரிஷீணாம் ப்ருகுரஹம்' [மஹரிஷிகளில் நான் ப்ருகுவாக இருக்கிறேன்] என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணரால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட ப்ருகு [பார்கவர்] மஹரிஷிகள் ஸ்ரீவத்ஸ கோத்ரத்து ரிஷிகளில் முதலானவர்.இவரது பிறப்பு பற்றி வேதத்தில் இருவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. அவை:

1. இவர் பிரபஞ்ச ஸ்ருஷ்டியின் போது பிரம்மாவின் தோலில் இருந்து வந்தவர்
2. ஹோமத்தில் அக்னி ஜ்வாலையில் இருந்து தோன்றியவர். [ஹோமத்தின் போது ஜ்வாலை தணிந்த பின்னர் இருக்கும் நெருப்புத் தணல் அங்கீரஸ மஹரிஷி; தணல் சாந்தமான போது அத்ரி மஹரிஷி]

அக்னியிலிருந்து பிறந்ததால் இவர் அக்னிக்குச் சகோதரன் என்றும் கூறப்பட்டிருக்கிறார். வேத காலத்தில் அக்னி நீரினுள் ஒளிந்திருந்த்தாகவும், மஹரிஷி ப்ருகு அக்னியை நீரின் வெளியே கொண்டுவந்ததாகவும் சொல்லியிருக்கிதாகத் தெரிகிறது.

ப்ருகுவிற்கு பல மனைவிகள், அவற்றில் ஒருவரான க்யாதி என்னும் ரிஷி பத்னிக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் மஹாலக்ஷ்மிக்கு 'பார்கவி' அதாவது பார்கவரின் புத்ரி என்ற பெயர் என்று சொல்லுகிறார்கள். ஸ்ரீய: பதி என்று மஹாவிஷ்ணுவைக் குறிப்பிடுவது இந்த பார்கவியானவள் மார்பினில் இருப்பதாலேயே. ப்ருகுவின் மகளாகப் பிறந்து பரந்தாமனை மணாளனாக அடைந்த்த காரணத்தால் அந்த லோக நாயகனுக்கே மாமனாராகிறார் ப்ருகு.

மஹரிஷி ப்ருகுவின் இன்னொரு மனையாள் பெயர் 'புலோமா' என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சமயம் இவளை கவர்வதற்க்காக ஒரு ராக்ஷஸன் முயல்கிறான். இதனை அறிந்த மஹரிஷி அக்னியை தனது மனயாளான புலோமாவுக்குக் காவல் வைத்துவிட்டு நதிக்கரையோரம் அனுஷ்டானத்திற்குச் செல்லுகிறார். அச்சமயத்தில் ராக்ஷஸன் புலோமையை கவர, அக்னி தடுக்கிறான். அந்த ராக்ஷஸனோ, தானே புலோமையின் கணவனாக இருந்திருக்க வேண்டும் என்றும், சிறுவயதில் புலோமையின் பெற்றோர் ராக்ஷஸனை காட்டியே வளர்த்தனர் என்றும், தனது மனையாளாக வேண்டிய புலோமையை ப்ருகு கவர்ந்திருக்கிறார் என்று கூறி அக்னியிடத்திருந்து புலோத்தமையை கவர்ந்து செல்கிறான். இவ்வாறு கவர்ந்து செல்கையில் பத்து மாத கர்பிணியான புலோத்தமை பரசவமாகி பிரசவத்தில் தேஜஸ் மிகுந்த குழந்தை பிறக்கிறது. அந்த குழ்ந்தையின் தேஜஸே அந்த அசுரனை எரித்து விடுகிறது. அனுஷ்ட்டானம் முடிந்து வந்த மஹரிஷி நடந்ததை அறிந்து அக்னியின் மேல் கோபம் கொள்ளூகிறார். தான் இட்ட பணியைச் சரிவரச் செய்யாத காரணத்தால் அக்னியை ஸர்வ பக்ஷகனாகச் சபித்துவிட்டார். இந்த சாபத்தின் காரணமாகவே அக்னி எல்லாவற்றையும் எரிக்க முற்படுகிறதாகச் சொல்லுகிறார்கள்.


ப்ருகு என்பதற்கும் காயத்ரி மந்த்ரத்தில் வரும் "பர்க:" என்பதற்கும் ஒப்புமை உண்டு. சூர்யன் தனது தேஜஸால் ப்ரகாசத்தை தருபவன், ப்ருகு ப்ரம்ம தேஜஸால் ப்ரகாசிப்பவர். இவரால் பல நூல்கள் எழுதப்பட்டிருப்பதாகவும், ஆயுர் வேதத்திலும் இவர் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. பொருட்களை நீரால் சுத்தி செய்கிறோம். அந்த நீரைச் சுத்தி செய்வது மந்திரத்தால் சுத்தி செய்கிறோம். இவ்வாறு நீரை சுத்தி செய்யும் மந்த்ர த்ருஷ்ட்டாக்களில் ப்ருகுவும் ஒருவர். ஸ்ரீவத்ஸத்தைப் போலவே, இன்னும் 6 கோத்ரக்காரர்களுக்கு இவர் ரிஷி, ஆக இந்த 7 கோத்ரக்காரர்களுக்குமாக 'பார்க்கவகணத்தினர்' என்று ஒரு பெயர் உண்டு. அடுத்த பதிவில் நாம் ச்யவனரைப் பார்க்கலாம்.