Monday, November 21, 2011

அவ்யாஜ பக்தி.....

இன்றைக்கு நமக்கெல்லாம் பக்தி என்பது என்பது கோவில்களுக்குச் செல்வது, பகவானுக்கு மலர் மாலைகள், வஸ்த்ரங்கள் சாற்றுவது, அபிஷேகத்திற்குக் கொடுப்பது அல்லது வைதீகர்களை அழைத்து ருத்ர பாராயணம் செய்வது, ஹோமாதிகள் செய்வது என்று இருக்கிறது. வீட்டில் ஹோமம் செய்து சில-பல வருஷங்கள் ஆயிற்று, ஏதும் செய்யவில்லை, ஆகவே வைதீகரைக் கூப்பிட்டு ஒரு கணபதியும், சுதர்சனமும் பண்ணச் சொன்னேன் என்று கூறுபவர்களைப் பார்க்கிறோம். நல்லதுதான், வேதம், மற்றும் ப்ரயோகம் தெரிந்த வைதீகர்களை அழைத்து அவர்களால் சில ஜப,ஹோமங்கள் செய்வது நன்றே.இவற்றை நாம் அனைவரும் செய்கிறோம், இவையெல்லாம் நன்மையே. ஆனால் இவற்றைச் செய்யும் போது நமது சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதே இந்த இடுகையின் சாரம்.பக்தர்களுக்கு இறைவனிடத்தில் ப்ரீதி என்பதே ஆத்மானுபவத்தின் முதல்படி என்கிறார்கள் பெரியோர். இதைச் சொல்லுகையில், கோபிகைகளின் பக்தி பற்றிய ஒரு ஸ்லோகம் சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. அந்த ஸ்லோகம்,


விரேது காமாசில கோபபாலா

முராரி பாதார்பித சித்த வ்ருத்தி:

தத்யாதிகம் மோக வசாதவோசது

கோவிந்த தாமோதர மாதவேதி.


கோபிகைகள் தங்கள் தலையில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றினைச் சுமந்து கொண்டு சென்று வியாபாரம் செய்வார்களாம். அப்போது அவர்கள் தங்களிடத்து இருக்கும் பொருட்களின் பெயர்களைக் கூவி விற்பதை விட்டுவிட்டு, "கோவிந்த, தாமோதர, மாதவ" என்று கூறிக்கொண்டு சென்றார்களாம். அதாவது தாம் செய்ய வேண்டிய வியாபாரத்தில் அவர்களது நாட்டம் இல்லை என்று பொருளல்ல. ஆனால் அவர்களையும் மீறி அவர்களிடத்தான க்ருஷ்ணனிடத்தான ப்ரேமை, பக்தி அவர்களை வியாபாரம் செய்யும் பொருட்களை விடுத்து கடவுள் பெயரைச் சொல்லுவதில் செலுத்தியிருக்கிறது. அன்றாட கார்யங்கள் அனைத்திலும் பரம்பொருளது நினைவும், செயலும் இருப்பது என்பது இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இவ்வகையான நிலையை எய்தவே கர்மானுஷ்டானங்கள், ஜப-ஹோமங்கள், பூஜைகள் எல்லாம் என்பதை நாமெல்லாம் உணரவேண்டும்.


"பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான். நமது பக்தி, வழிபாடு போன்றவை இவ்வாறாக இருக்கிறதா என்பதை நாம் அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். டாம்பீகமான பூஜைகளும், ஹோமங்களும் நமக்காக என்று இல்லாது லோகஷேமார்த்தமாக, ஈஸ்வரார்த்தமாக இருக்குமானால் அவற்றை பகவான் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் நன்மை செய்வான், ஆத்மானுபவமும் கிட்டும்.ஆதி சங்கரரது பால்யத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் தந்தை பூஜித்து வந்த பகவதி அம்மனுக்கு ஆசார்யார் ஒருமுறை பால் சமர்ப்பித்துப் ப்ரார்த்தனை செய்கிறார். அப்போது அம்பிகை அந்தப் பாலை ஸ்வீகரிக்கவில்லை. இதனால் ஆசார்யாளது மனது க்லேசம் அடைகிறது, அழவும் தொடங்கிவிடுகிறார். இது கண்ட பகவதி அவளுக்கேயான மாத்ரு வாத்ஸல்யத்துடன் பாலை ஸ்வீகரித்துக் கொள்ளுகிறாள். அம்பிகைக்குத் தான் செய்த நிவேதனத்தை அவள் ஏற்க வேண்டும் என்பது மட்டுமே அந்த சங்கரக் குழந்தையின் எதிர்பார்ப்பு. இந்த சந்தவேசத்தில் அவருடைய பக்தி மற்றும் சிரத்தை மட்டுமே இருக்கிறது. மேற் சொன்ன இரண்டு உதாரணங்கள் பிரதிபலனற்ற [அவ்யாஜ] பக்திக்கு உதாரணம்.

எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து,எத்தனையோ கர்மாக்களைச் செய்து,அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்வதும்,ஸத் வாஸனைகளைப் பெருக்கிக்கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும், துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் 'வெறும்' சடங்கு என்று சொல்கிற கர்மாகள், பூஜை எல்லாம் நமக்குரொம்பவும் அவசியமானவையே" என்கிறார் பரமாசார்யார்.

ஆகவே நான் இந்த பூஜை செய்கிறேன், இந்த ஜபம் செய்கிறேன், இத்தனை கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். இவ்வளவு கோவில்களுக்குச் செய்திருக்கிறேன் என்று எண்ணவும் செய்யாது அனுஷ்டானங்களை, பக்தியைச் செய்யத் தலைப்படுவோம்.

Monday, November 14, 2011

ஆகார நியமம் - பகுதி -2


காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் உற்சவத்தின் பகுதி
 அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
 யாலரசு நறுவிலிபுங் காயி லாரை
புத்திகொல்லி குறிஞ்சிதான்றி குசும்பை வேளை
 புனமுருங்கை முருங்கைசுக முளரி யுள்ளி
சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில்
 சீங்காடன் றேறலூவை பனைம யூரன்
சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான்
 சுரைபீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே.


அத்திவகைகள் , பேரார்க்கு (?), இறலி, வெள்ளைக்கத்தாரி, ஆல், அரசு, நறுவிலி, புங்கு, ஆயில், ஆரை, பூண்டு, குறிஞ்சி, தான்றி, குசும்பை, வேளை, முருங்கை,தாமரைக்கிழங்கு, உள்ளி, சிறிய அவரை, தும்மட்டி, பண்ணைக்கீரை, தொய்யிற்கீரை, சீங்காடன், தேறற்காய், ஊவைக்காய், பனை, நாயுருவி, கடம்பு, நாய்க்குடை, சுரைக்காய், பீர்க்கு, சணற்கீரை, மற்றும் அசுத்தமான நிலத்தில் பயிராகும் வகைகளை உணவில் தவிர்க்க வேண்டும் என்கிறார் தேசிகர்.

சாதாரணமாக கத்தரியில் முழுவதும் பச்சை நிறத்தாலானதும், வெளீர் நிறத்தாலானதும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், ஊதா நிறத்திலான கத்தரி முழுவதுமாக விலக்கப்பட வேண்டும் என்பார்கள்.

 ***

சிறுகீரை செவ்வகத்தி முருக்கி ரண்டுஞ்
 சிறுபசளை பெரும்பசளை யம்ம ணந்தாள்
பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று
 பாய்ந்தெடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறுங்
குறித்தாலுந் தின்னவெணாக் கைப்பு வர்ப்புங்
 கூர்க்குமவை யழமுமவை கொடும்பு ளிப்புங்
கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
 கார்மேனி யருளாளர் கடகத் தாரே.

சிறுகீரை, முருக்கை, சிவந்த அகத்தி, பசளை வகைகள், பிறர் தோட்டத்திலிருந்து அனுமதியின்றிப் பறித்தவை, பலருக்காகவும் சமைத்த உணவை எல்லோருக்கும் பரிமாறும் முன்னர் தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளுதல், உண்ண முடியாத அளவுக்கு கசப்பாகவும், மிகுந்த காரமானவையும், கொண்ட பண்டங்கள் உண்ணத் தக்கதன்று.

 ***

மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
 வருவிருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாங்
காலமிது வன்றென்று கழித்த வெல்லாங்
 கடையின்வருங் கறி முதல கழுவா வெல்லா
நூலிசையா வழிகளினால் வந்த வெல்லா
 நுகராத துடன்பாகஞ் செய்த வெல்லாஞ்
சீலமில்லாச் சிறியோராக் கினவு நல்லோர்
 செலமலங்கள் பட்டனவுந் தின்னார் தாமே.

பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதது, அதிதிகளுக்கு அளிக்காது தவிர்த்த உணவு, குறிப்பிட்ட காலங்களில் உண்ணக் கூடாது என்று கூறப்பட்டவை [சாதூர்மாஸ்ய காலங்களில் விலக்கப்பட்டது என்று தோன்றுகிறது], கடையில் வாங்கிய காய் வகைகளை கழுவாமல் செய்த உணவுப் பொருட்களும், சாஸ்திரங்களில் சொல்லப்படாத விதத்தில் சம்பாதித்த உணவுப் பொருட்களும், ஆசாரமற்ற, ஜலமலங்களுடன் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது.

***
தேவர்களுக் கிவையென்று வைத்த வெல்லாஞ்
 சிவன்முதலாத் தேவர்களுக் கிட்ட வெல்லா
மாவிமுத லானவற்றுக் காகா வெல்லா
 மதுவிதுவென் றறியவரி தான வெல்லா
நாவிலிடு வதற்கரிதா யிருப்ப வெல்லா
 நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லா
மோவியநா ளோவாத பூவுங் காயு
 முத்தமர்க ளட்டுப்பு முகவார் தாமே.

தேவர்களுக்கு என்று செய்தவை, சிவன் முதலானவர்களுக்கு நிவேதனம் செய்தவை [ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பரதாயத்தில் சிவப் பிரசாதம் விலக்கப்பட வேண்டியது என்பது இங்கே சுட்டப்படுகிறது], ப்ராணன் மற்றும் மற்ற இந்திரியங்களுக்கு கெடுதியானவையும், எதனால் சமைக்கப்பட்டது என்று அறிய முடியாத பொருட்களும், நாவு தாங்க முடியாத உஷ்ணம், காரம் போன்றவையும், மனது ஏற்காத உணவினையும், தூய வெண்மையின்றி அழுக்கு நிறத்தாலான உப்பும் விலக்கத்தக்கது.


இந்தப் பாடலில் சிவப் பிரசாதம் உண்ணத்தக்கதல்ல என்று இருப்பதை ஏதோ பெரிய தவறாகக் கொள்ளத் தேவையில்லை. ஸ்ரீ வைஷ்ணவத்தில் வந்த வேதாந்த தேசிகர் தமது வழக்கத்தை சேர்த்திருக்கிறார் என்பதைத் தவிர இதை ஏதும் பெரிதாகக் கொள்ளத் தேவையில்லை. வீர சைவ மரபினருக்கும் இது போல பழக்கங்கள் இருப்பதால் இவற்றை அக்காலத்து வழக்கமாகவும், அந்ததந்த சமயத்து வழிமுறைகள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

***

கிளிஞ்சின்முதல் சுட்டசுண் ணாம்பு தானுங்
 கிளர்புனலி லெழுங்குமிழி நுரைக டாமும்
விளைந்ததனின் முதன்மாலுக் கீயா வெல்லாம்
 விளைந்தநில மறுகாம்பென் றெழுந்த வெல்லாங்
களைந்தமனத் தார்மற்றுங் கழித்த வெல்லாங்
 கடியமுதி மியமத்தார் கழித்த வெல்லாந்
தெளிந்தபுனற் றிருவேங்க டத்து மாறன்
 றிருவாணை க்டவாதார் தின்னார் தாமே.

கிளிஞ்சலைச் சுட்டு எடுத்த சுண்ணாம்பு, நுரை, குமிழிகளுடனான நீர், நிலத்தில் விளைந்தவற்றில் இறைவனுக்குச் சமர்ப்பிக்காதவை, பலன் கொடுத்த பின்னர் அதே காம்பு/கொழுவில் இருந்து வளர்ந்தவை [அரைக்கீரை - போன்றவை], பெரியோர்களும், ஆகார நியமத்தைக் கடைப்பிடிக்கும் மற்றோரும் கழித்தவை ஆகியவற்றை நாமும் நமது உணவிலிருந்து நீக்கிட/விலக்கிட வேண்டும் என்கிறார்.

             ..........................................தேசிகர் தொடர்வார்

Saturday, November 12, 2011

ஆகார நியமம் - பகுதி -1

சில மாதங்கள் முன்னர் குழுவில் உணவருந்துதல் பற்றிய கேள்வி வந்தது. அன்றிலிருந்து இந்த இடுகையை இட நினைத்தாலும், நேரமின்மையால் தள்ளிக் கொண்டே வந்தேன். இன்று இதைப் பற்றி நண்பர் ஒருவர் நேரில் பார்க்கும் போது கேள்வி எழுப்பினார். அதன் விளைவே இந்த இடுகை. "ப்ராணே சரீரம் ப்ரதிஷ்டிதம். சரீரே ப்ராண: ப்ரதிஷ்டித:" என்கிறது தைத்ரீயம். நாம் உண்ணும் உணவுக்கும் ப்ராணனுக்கும் தொடர்பு இருக்கிறது. உண்ணும் முறை பற்றிச் சொல்லுகையில் தர்ம சாஸ்த்ரத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்கள்.

த்வெளபாகம் பூரயேதன்னம்
தோயெனைகம் ப்ரபூரயேத்
மாருதஸ்ய ப்ரசாரார்த்தம்
சதுர்த்தம் அவசேஷயேத்

அதாவது உணவு உண்ணும் போது அரை வயிற்றுக்கு உண்ணும், கால் வயிற்றுக்கு நீரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.மிச்சமிருக்கும் கால்வயிறு வாயுவிற்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு உண்பதையே ப்ராணாக்னி ஹோத்ரம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எவ்வாறான உணவினை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும், எது உணவாக எடுத்துக் கொள்ளத் தக்கது, எதை உணவாகக் கொள்ளக் கூடாது என்பதை ஆயுர் வேதம் நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறது. இதே போல எதை எப்படி உண்ண வேண்டும என்ற முறையையும் ல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். எந்த உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அவ்வாறாக முறையாகச் செய்த அன்னத்தையும், அன்ன சுத்தி, பரிசேஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து உண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

உணவு சமைப்பவரது மனநிலைக்கு ஏற்ப சமைக்கப்பட்ட உணவின் தன்மை மாறும் என்று கூறியிருக்கிறார்கள். சமைப்பவர் எப்படி இருக்கவேண்டும், என்றும் நியமங்கள் வரையறுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நமது இல்லங்களில் செயற்படுத்திடுவோமானால் நமது சிந்தனையும், இறையனுபவமும் இன்னும் எளிதாகும் என்பதனாலேயே இவ்வளவு சிரத்தையாக எல்லாவற்றையும் நமக்குத் தந்திருக்கின்றனர் பெரியோர்.


முன்னொரு காலத்தில் அஜகரன் என்பவன் சாத்வீகமான உணவுவகைகளை மட்டுமே உண்டு அதன் மூலமாக தனது சரீரத்தை ரக்ஷித்து பின்னாளில் இறையருள் பெற்றான் என்கிறது கதை. அஜகரன் என்றால் மலைப் பாம்பு என்று பொருள். மலைப்பாம்பானது உணவினைத் தேடிச்செல்லாது, அதனருகில் வருவனவற்றை மட்டுமே உண்டு வாழுமாம். அதுபோல விவேகமுள்ளவர்கள் தங்களது உணவில் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் பெரியோர்.சரி இதெல்லாம் ஸம்ஸ்கிருதத்தில் யாரோ யாருக்கோ எழுதியது, நமக்கேன் என்று விட வேண்டியதில்லை. வேதாந்த தேசிகர் எல்லோருக்கும் எளிதாக தெள்ளு தமிழில் ஆகார நியமம் என்று 20 பாடல்களாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களில் முதல் 9 பாடல்கள் உணவில் விலக்க வேண்டியதும், சேர்த்துக் கொள்ளத்தக்கதும் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். இப்பாடல்களை பலருக்கும் உபயோகமாகும் என்ற எண்ணத்தில் இங்கு 3-4 இடுகைகளாக இடுகிறேன். பாடல்களது பொருள் விளங்கினாலும், சரியாகப் பதம் பிரிக்கத்  தெரியாத காரணத்தால் அப்படியே தட்டச்சியிருக்கிறேன். தேசிகப் பிரபந்தம் என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். 

வாயிலல்லா வாயினால் வந்த சோறும்
 வரகுமுத லாகாதென் றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதாம் பட்ட சோறும்
 வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்
தீயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
 சீரையுரை தும்மலிவை பட்ட சோறு
நாய்முதலா நவைபார்க்குந் தீண்டுஞ் சோறு
 நாடூய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே.

நேர்வழியில்லல்லாது புழக்கடை முதலான வழிகளால் கொண்டுவந்த உணவும், வரகு முதலான தான்யங்களால் ஆக்கியது, வாயில் போட்டுக் கொண்டது போக மீந்து கையில் இருப்பது, கொடியவர்கள் கண்களில் பட்டது, தீய்ந்து போனது, வஸ்த்ரம், எச்சில், தும்மல் போன்றவை பட்டது, நாய் முதலியவற்றால் பார்க்கப்பட்டது அல்லது அவை முகர்ந்தது, தொட்டது மற்றும் ஏகாதசி போன்ற வ்ரத தினத்தில் சமைத்த உணவுகளை உண்ணக்கூடாது என்கிறது இப்பாடல்.


மனிசர்பசு முதலனோர் மோந்த் சோறு
 மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
மினிமையுட னாதரமில் லாதார் சோறு
 மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
முனிவரெனுந் துவறவறத்தோ ரீந்த சோறு
 முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
 வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.
மனிதர், பசு ஆகியோர் முகர்ந்தது, தொடத் தகாதவர் (ரோகிகள், அசுத்தமானவர்கள்) ஸ்பரிசித்தவை, ஆதுரத்துடன் இனிமையாகப் பேசாதவர்கள் அளித்தது, புழுக்கள், மயிர், நகம் போன்றவை இருப்பது ஆகிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. ஸந்யாஸி அளித்தது, ஸந்யாஸியின் பாத்திரத்தில் இட்டது போன்றவற்றை உண்ணக் கூடாது. இதில் ஸந்யாஸி அளித்த உணவு என்பது தற்கால மடங்களில் உணவளிப்பதல்ல. மற்றும் ஸந்யாஸிகள் தரும் பிரசாதமான பழங்கள் போன்றவை அல்ல. மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவை வாயினால் தீண்டிய உணவுகளையும் உண்ணக் கூடாது.


        .............................................தேசிகர் தொடர்வார்

Thursday, November 10, 2011

அன்னாபிஷேகம்

பல விசேஷ தினங்களிலும் ஈசனுக்கு பலவித அபிஷேகங்கள் நடந்தாலும், அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி-பெளர்ணமியில் மட்டுமே செய்யப்படுகிறது. நானறிந்தவரையில் தமிழகத்திலுள்ள எல்லாக் கோவில்களிலும் இன்று மட்டுமே அன்னாபிஷேகம்.

அபிஷேகப்ரியனான ஈசனுக்கு எழுபது விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யச் சொல்லப்பட்டிருக்கிறது, அதில் அறுவடையாகி வரும் நெல்லை அரிசியாக்கி, அதனைச் சமைத்து சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் ஒன்று. இதனால் உணவுத் தட்டுப்பாடு இல்லாது இருக்கும் என்று கூறுகிறார்கள். வெகுசில இல்லங்களில் கூட, தங்களது இல்லத்தில் வழிபடப்படும் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.


அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலம் அன்று கோடிலிங்கதரிசனம் செய்த பலன் என்று கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். அதாவது அன்னாபிஷேகத்தின் போது அதற்கு உபயோகமாகும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கமாகிறதாம், ஆகவே அபிஷேகத்தின் போது பார்க்கும் அன்னங்கள் எல்லாம் சேர்ந்து கோடி லிங்கங்களை தரிசித்ததாகிறதாம்.


மதுரையில் அன்னாபிஷேகம் செய்து முழுப் புடலங்காயை வேகவைத்து அதனையே மாலையாக அணிவித்திருப்பார்கள். புரட்டாசி கடைசியில் நவராத்ரி வந்து, ஐப்பசியில் ஒரே பெளர்ணமி வருமாயின் மதுரையில் அம்பிகைக்கு சாந்தாபிஷேகமும், சுந்தரேசனுக்கு அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறேன். இல்லங்களிலிருந்து அன்னாபிஷேகத்திற்கு அரிசியும், சாந்தாபிஷேகத்திற்கு இளநீர், அரைத்த மஞ்சள் போன்றவை கொடுப்பது மதுரைக்காரர்களுக்கு வழக்கம். சாந்தாபிஷேகம் என்பது நவராத்ரியில் அசுரர்களை வதை செய்து கோபத்தில் இருக்கும் அம்பிகையைக் குளிர்விப்பதற்காக என்று கூறுவார்கள்.

சாதாரணமாக சாயரக்ஷை பூஜையின் முடிவில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமானாலும், தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரத்து ஈசன் போன்றவர்களுக்கு உச்சிகால பூஜை ஆனவுடனேயே அன்னாபிஷேகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. 

அன்னாபிஷேகத்தின் முடிவில் ஈஸ்வரனது மேல் சாற்றியிருக்கும் அன்னதை ஆறு, குளம், கடல்களில் கறைத்தும், கருவறைப் படிகள் மற்றும் இறைவன் முன்னால் படைக்கப்பட்ட அன்னம் மற்றும் காய்கள்,பக்ஷணங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் அளிக்கிறார்கள்.  இந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிப்பதன் மூலம் குழந்தை பாக்யம் கிட்டும் என்பது நம்பிக்கை.

"சோறு கண்ட இடம் ஸ்வர்கம்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம், அது சோற்றால் அபிஷேகம் செய்த சிவனை தரிசிப்பதால் ஸ்வர்கம் என்பதே என்கிறார்கள்.

 ஐப்பசி பெளர்ணமியாகிய இன்றைய நன்னாளில் நாமும் அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தை தரிசிப்போம், இறையருளைப் பெறுவோம்.