Monday, March 22, 2010

கெளரீ, ஞானதா, ஞான-விக்ரஹா...



தங்கம் போன்ற நிறத்தை கெளர-வர்ணம் என்று சொல்லியிருக்கிறது. அம்பிகையின் உடலானது ஸ்வர்ணம்/தங்கம் போன்று இருப்பதால் கெளரீ என்று பெயர் வந்ததாகச் சொல்லலாம். கெளரீ என்றால் வெண்மை என்றும் ஒரு பொருள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்பிகை ஹிமவானுக்குப் புத்ரியாகப் பிறந்த காலத்தில் அவளது சரீரமானது சங்கு, மல்லிகைப்பூ, களங்கமற்ற சந்திரனது ஒளி ஆகியவைபோல வெளுப்பாக இருந்ததாம், அதனாலும் அவளுக்கு கெளரீ என்று பெயர் என்று கூறியிருக்கிறார்கள். இவை தவிர பத்து வயதேயான கன்னிகையை கெளரீ என்று கூறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. பத்ம புராணத்தில் கன்யாகுப்ஜத்தில் இருக்கும் சக்தி பீடத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை கெளரீ என்று குறிப்பிட்டிருக்கிறது.

அம்பிகையே ஞான வடிவம் என்பதை அவளது ரூபமான சரஸ்வதி, வசின் தேவதைகள் போன்ற நாமங்களின் மூலமாக அறிந்தோம். அவளே ஞானத்தை அருள்பவள் என்பதால் ஞானதா என்னும் நாமம். அவித்தை/மாயையால் சூழப்படுவதற்கும், அவற்றிலிருந்து காத்து ஞானத்தைத் தருபவள் என்பது பொருள். இவள் ஞான ரூபமாக இருப்பதால்தான் ஞான விக்ரஹா என்றும் ஒரு நாமம் இருக்கிறது. ஞானத்தையே தன் சரீரமாகக் கொண்டவள் என்பதுதான் ஞான விக்ரஹா என்பதன் பொருள். விக்ரஹம் என்றால் 'பரந்து-விரிந்த/விஸ்த்தாரமான' என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகையின் அருளால் ஞானம் பரவுகிறது என்றாலும் சரியாகவே இருக்கிறது

No comments: