Friday, July 30, 2010

சிரஸ்த்திதா, ஹ்ருதயஸ்த்தா, ரவிப்ரக்யா


பரப்ரம்ஹத்தை சிவசக்தி ஐக்ய ஸ்வரூபமாகச் சொல்வது வழக்கம். அதாவது அம்பிகை வேறு, பரமசிவன் வேறு அல்ல, இருவரும் ஒன்றே என்றே சொல்லுகிறது சாக்தம். இந்தப் பொருளைச் சொல்வதே "காமகோடிகா", அதாவது பரசிவனுடன் இணைந்தவள் என்பது பொருள். இவளைச் சூழ்ந்திருக்கும் பல கோடிக்கணக்கிலான லக்ஷ்மிதேவிகளால் சேவிக்கப்படுகிறாள் என்று சொல்லுவது "கடாக்ஷ கிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா" என்னும் அடுத்த நாமம்.

(கிம் கரோதி) என்ன செய்ய வேண்டும் என்று எஜமானனுடைய கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸேவகனுக்கு கிங்கரன் என்று பெயர். அம்பிகையின் கடாக்ஷத்தால் அனுக்ரஹம் பெற்ற பக்தனை, கோடிக்கணக்கான ஸ்ரீதேவிகள் ஸேவிக்கக் காத்திருக்கிறார்கள் என்றும் பொருள் சொல்லுவதுண்டு. இந்த கோடிக்கணக்கான தேவிகள் அம்பிகையை வணங்கி, அவளது அருளாணைக்குக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படி சேவிக்கப்படும் அம்பிகை எங்கு, எப்படி இருக்கிறாளாம்?, அம்பிகையைச் சிரஸில் இருப்பவளாக "சிரஸ்த்திதா" என்று சொல்லுகிறார்கள் வாக்தேவிகள். தந்திர மார்க்கத்தில் குருவை சிரஸில் வைத்து த்யானிப்பது வழக்கம். சிரஸ்த்திதா என்பதன் மூலமாக அங்கே அவளே குருவாக இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அங்கு அவள் சந்திரனைப் போன்ற காந்தி/ஒளியுடன் இருக்கிறாளாம், இப்படிச் சொல்லுவது "சந்த்ர நிபா" என்னும் நாமம். அதாவது சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை வர்ஷிக்கும் சந்திரனது காந்தியாக அம்பிகையைச் சொல்லப்படுகிறது.

'ப்ரோவோர் மத்யே சஹஸ்ராக்ஷி' என்று சொல்வதை, அதாவது புருவ மத்தியில் சஹஸ்ர கலைகளுடன் இருப்பவள் என்னும் வாக்யத்தை நினைவுபடுத்தும் விதமாக நெற்றியில் இருப்பவள் என்னும் பொருளில் "பாலஸ்த்தா" என்கிறார்கள் அடுத்த நாமத்தில். இந்த இடத்தில் அம்பிகை எப்படி இருக்கிறாளென்பதாக அடுத்த நாமத்தில், "இந்த்ர-தனுஷ் ப்ரபா" என்கிறார்கள். அதாவது இந்திரனது தனுஷ் போன்று வளைந்த ப்ரபைகளுடன் இருக்கிறாளாம். அதாவது அவள் அர்த்த சந்திர ரூபத்தில் இருக்கிறாள் என்கிறார்கள்.

இறைவனை நாம் மனத்திலிருத்தி தியானம் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அவ்வாறு த்யானம் செய்யப்படுபவள் என்பதே "ஹ்ருதயஸ்த்தா". உபநிஷதங்களை, ப்ரமேஸ்வர ஹ்ருதயம் என்பார்கள். அந்த பரமேஸ்வரனுடன் இரண்டறக் கலந்தவளாயிற்றே அம்பிகை, ஆகவே உபநிஷதங்களில் அந்தர்யாமியாக இருப்பவளை, ஹ்ருதயத்திலிருப்பவள் என்னும் நாமம் சொல்வதாகவும் கொள்ளலாம். ஹ்ருதயத்தில் ஸுர்யமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அம்பிகை இருப்பதை "ரவிப்ரக்யா" என்று கூறுகிறார்கள் அடுத்த நாமத்திலேயே!. இதன் பொருள், ஸுர்யனது ஒளி பொருந்தியவள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

மூலாதாரத்தில் அக்னியும், ஹ்ருதயத்தில் ஸுர்யனும், ப்ரம்ஹரந்திரம் என்னும் நெற்றியில் சந்திரனும் இருப்பதாக தந்திர சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த மூன்றையும் ஸ்ரீவித்யையின் மூன்று கண்டங்களாகச் சொல்லி, அவற்றின் நடுவில் தீபமாக ஜ்வலிப்பவள் என்று சொல்வதே "த்ரிகோணாந்தர தீபிகா" என்னும் நாமம். இதையே இன்னொரு விதத்தில், மூலாதாரத்தில் இருக்கும் அக்னியின் சக்ரமான த்ரிகோணத்தின் நடுவில் இருப்பவள் என்றும் சொல்லுகிறார்கள்.

சிரஸ், நெற்றி, குண்டலினீ என்று யோக முத்ரைகளை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும் நாமங்களில் சிலவற்றை இன்று பார்க்கலாம். அம்பிகையை தந்திர சாஸ்திர விதிகளின் மூலமாக வழிபடுவது சாக்தர்கள் வழக்கம். இன்று கூறப்படும் நாமங்கள், அவற்றின் பொருள் எல்லாம் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். தகுந்த குருவிடத்து கற்கவேண்டியவை இவை. இவை தந்திர ராஜம் என்னும் நூலில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு.

Tuesday, July 27, 2010

பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீ



ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகிய ஐவரை பஞ்ச ப்ரம்ஹா என்பார்கள். இந்த ஐவரும் தங்களுடைய சக்திகளுடன் இல்லாவிடில், செய்வதற்கு ஏதுமின்றி பிரேதம் போன்றிருப்பதாக லலிதோபாக்யானம் கூறுகிறது. இந்த ஐவரில், முதல் நால்வர் கால்களாகவும், ஸதாசிவன் பலகையாகவும் கொண்ட மஞ்சத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாளாம். இப்படி, சக்திகள் இல்லாத பஞ்சப்ரம்ஹாக்களினாலான மஞ்சத்தில் வீற்றிருக்கும் அவளை, "பஞ்சப்ரேதாஸனாஸீனா" என்கிறார்கள் வாக்தேவதைகள். பஞ்சப்ரம்ஹங்களினாலான மஞ்சம் என்பதால் பஞ்சப்ரம்ஹாசனம் என்றும் அதில் அமர்ந்திருக்கும் அம்பிகையை "பஞ்ச ப்ரம்ஹாஸந ஸ்திதா" என்றும் கூறுகிறார்கள். மஞ்சத்தின் பலகையாகச் சொல்லப்படும் ஸதாசிவன், தத்வங்களுக்கு எல்லாம் மஹத்தான தத்துவமாக இருக்கிறானாம்.

இந்த பஞ்ச ப்ரம்ஹாக்களை பஞ்ச ப்ரம்ஹங்கள் என்றும் கூறுவதுண்டு. பரப்ரம்ஹத்தின் மாயா வினோதத்தால் பரப்ரம்ஹத்தின் ஐந்து தோற்றங்கள் போல இவர்கள் தோன்றுவதால் இவர்களை இப்படிக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தைக் கூறுவதே "பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ" என்னும் நாமம். இந்த நாமத்திற்கு பெரியோர்கள் பல விதத்தில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் பார்த்திடலாமா?

பரசிவனுடைய பஞ்ச முகங்களாகிய ஈசானன், தத்புருஷன், வாம தேவ, அகோர, ஸத்யோஜாதன் ஆகிய ஐவரையும் பஞ்சப்ரம்ஹாக்கள் என்று கூறி, அவர்களது தோற்றத்தில் இருப்பதும் அம்பிகையே என்பர். இதே போல ஸ்பர்சம், சப்தம், ரூபம், ரஸம், கந்தம் ஆகியவற்றை ப்ரம்ஹ ஸ்வரூபமாகச் சொல்வதுண்டு. இவற்றிலிருந்தே பஞ்சபூதங்களான ப்ருத்வீ, அப்பு, வாயு, தேஜஸ் போன்றவைகள் தோன்றுவதாகவும், இந்த ரூபங்கள் எல்லாம் அம்பிகையின் ரூபங்களே என்று கூறுகிறார்கள்.

இப்படி பஞ்சப்ரம்ஹாஸனத்தில் இருப்பவளான அம்பிகையை இன்னொரு இடத்தில் கணக்கற்ற தளங்களை உடைய பத்மத்தின் மேல் எழுந்தருளியவளாகச் சொல்வதுதான் "ஸஹஸ்ராராம்புஜாரூடா" என்னும் நாமம். எண்ணிக்கையில் அடங்காத அளவு இதழ்களை/தளங்களை உடைய தாமரை என்பது சஹஸ்ராரத்தைக் குறிப்பது. அங்கு இருக்கிறாள் என்று கூறி, அந்த பத்மத்தின் நடுவில் இருக்கும் சந்த்ர மண்டலத்தில் இருந்து அம்ருதத்தை சகல நாடிகளிலும் பெருகச் செய்கிறாளாம், இதைக் குறிப்பதே "ஸுதா தாராபி வர்ஷிணீ". இந்த நாமத்தை "ஸுதா தாராபிவர்ஷிணீ என்றும் கூறலாம் என்கிறார்கள் பெரியோர்.

Friday, July 23, 2010

ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா


அம்பிகையின் வாசஸ்தலத்தை ஸுமேரு அதாவது என்பது மேருமலை என்பர். அந்த மேரு பர்வதத்தின் நடுவில்/உச்சியில் மங்களமாக இருப்பவள் என்பதே "ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா". இந்த மேரு மலை எங்கே, எப்படி இருக்கிறது, யாரெல்லாம் இம்மலையில் இருக்கிறார்கள் என்பதை, துர்வாசர் தனது லலிதா ஸ்தவ ரத்னம் என்ற க்ரந்தத்தில் சொல்லியிருக்கிறார், அதைக் கொஞ்சம் பார்க்கலாம். மேரு மலையானது கைலாஸத்திற்கும் அப்பால் இருப்பதாகவும், இது முழுவதும் ஸ்வர்ண மயமானது என்று கூறுகிறார். இம்மலைக்கு நான்கு உச்சிகள் இருப்பதாகபும் இதன் மூன்று உச்சிகளில் ப்ரம்ஹ, விஷ்ணு ருத்ரர்கள் வாசம் செய்வதாகவும், நான்காவது உச்சியில் நானூறு யோஜனை உயரத்தில் இருக்கும் நகரத்தில் அம்பிகை இருப்பதாகச் சொல்கிறார்.

அம்பிகை வசிக்கும் நகரத்தின் பெயரே ஸ்ரீமன் நகரம், இதைச் சொல்லும்போது 'ஸ்ரீமன் நகர நாயிகா' என்கிறார்கள் வாக் தேவதைகள், அதாவது லக்ஷ்மீகரமான நகரத்தின் நாயகி என்று பொருள் சொல்லலாம். ஸ்ரீவித்யா நகரம் என்பதையே இப்படிச் சொல்லுவதாகச் சொல்கிறார்கள் பெரியோர். இந்த நகரமானது இரண்டு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1. லலிதா ஸ்தா ரத்னில் சொன்னது போல, ஸுமேரு மலையில்; 2. எல்லா பிரம்மாண்டங்களுக்கும் வெளியில், ஸுதா சமுத்ரத்தின் மத்தியில் இருக்கும் மணித்விபத்தில் இருப்பதாக ருத்ரயாமளம் எனும் நூலில் சொல்லபடுகிறது. ஸ்ரீமன் நகரம் என்பதே ஸ்ரீசக்ரந்தான் என்பது தீக்ஷதரது உரையில் சொல்லப்பட்டிருக்கீறது.

ஸ்ரீமன் நகரத்தில் இருக்கும் நாயகி, ஸ்ரீசக்ர நாயகியின் இல்லத்திற்கு சிந்தாமணி-க்ருஹம் என்று பெயர். மஹா-பாரதத்தில் சிந்தாமணியின் சிறப்பினை நாம் அறிவோம். சிந்தாமணி ரத்னத்திற்கு ஆகர்ஷண சக்தியும், கேட்டதைக் கொடுக்கும் சக்தியும் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. அது போன்ற சிந்தாமணி ரத்னங்களால் நிர்மாணிக்கப்பட்ட இல்லமாம் அது. ஆகவே அவள் "சிந்தாமணி க்ருஹஸ்த்தா". அதாவது சிந்தாமணிகளால் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் வசிப்பவள் என்று பொருள். மந்திரார்த்தமாகப் பொருள் சொல்லுகையில், அம்பிகையின் மந்திரங்களே சிந்தாமணிகள் என்றும் அவற்றில் வாசம் செய்பவள் என்றும் பொருள் கூறுவார்கள் சாக்த நெறியாளர்கள்.


சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கும், பெரிய தாமரைப் புஷ்பங்கள் நிறைந்த காட்டில் அம்பிகை இருக்கிறாள் என்கிறார்கள் "மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா" என்னும் அடுத்த நாமத்தில். க்ருஹத்தில் ஏது குளம், தாமரைக் காடு?. சாதகம் செய்பவர்களது ஸஹஸ்ராரம் என்னும் இடமான புருவ மத்தியில் இருக்கிறாள் என்பதே பொருள். சாதனையாளர்களது சஹஸ்ராரத்தில் என்பதையே தாமரைகள் நிறைந்த காடு என்கிறார்கள். ருத்ரயாமளத்தில் இந்த பத்மாடவீ யானது, ஸுதா சமுத்ரத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.இதனை அடுத்த நாமத்தின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

யோக சாஸ்திரத்தில் ஸஹஸ்ராரத்தை அடையும் குண்டலினீயானது அம்ருத தாரையில் நனையும் என்றும், அதுவே சிவ-சக்தி ஐக்ய பாவத்தை உணர்த்துவது என்று கூறுவார்கள். ஸஹஸ்ராரம் என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட பத்மம், அங்கு சந்த்ர கலை அம்ருதமாக வர்ஷிக்கும் இடத்தில் அம்பிகை இருக்கிறாள் என்பதை, "ஸுதா ஸாகர மத்யஸ்தா" என்கிறார்கள். இந்த சஹஸ்ரதள பத்மத்தில் வசிப்பவள் என்பதை "ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா" என்னும் நாமமும் சொல்லுகிறது.

"யோவைதாம் ப்ரும்ஹணோ வேத அம்ருதேனோவ்ருதாம் புரிம்" என்று ச்ருதி வாக்கியமும், "பிந்துஸ்தானம் ஸுதாஸிந்து:" என்று ருத்ரயாமளமும் கூறுவது இந்த ஸுதா ஸாகரத்தையே. இதையே செளந்தர்ய லஹரியில், "ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபிவாடீ பரிவ்ருதே" என்னும் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசார்யாள்.

Tuesday, July 20, 2010

பக்த ஸெளபாக்ய தாயினீ , பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவச்யா


மனிதர்கள் அம்பிகையை பக்தியுடன் வழிபட்டால், அவளுக்கு வழிபடுபவர்களிடத்து ப்ரியம் ஏற்படுமாம், இதைச் சொல்வதே "பக்திப்ரியா" என்னும் நாமம். பக்தி என்பது முக்கியம், இதை இருவகையாகச் சொல்கிறார்கள். ஒன்று ஸாமான்ய பக்தி, அதாவது கெளண பக்தி என்பர், இன்னொன்று சித்தத்தில் என்றும் இறையைப் பற்றி இருப்பது. அதாவது அழிஞ்சில் மரத்து விதை எப்படி மரத்துடனேயே ஒட்டிக்கொள்ளுமோ அது போலவும், பதிவிரதைகள் தனது பதியுடன் இருப்பதையும், நதியானது ஸமுத்ரத்தையும் அடைவதையும் போல மனமானது பரமாத்மாவுடன் இணைவதையே பக்தி என்று பகவத் பாத சங்கரர் சிவானந்த லஹரியில் கூறியிருக்கிறார். இவ்வகையான பக்தியையே பக்தி ஸுத்ரமும் சொல்லியிருக்கீறது. ஸாமான்ய பக்தி என்பது ஸேவாரூபமானது. இதுவே ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம் போன்ற எட்டு விதமாக பாகவதத்தில் சொல்லப்படுவது.

இப்படி பக்தியுடன் உபாசித்தால் என்ன ஆகிறதாம்?, அம்பிகையே ப்ரத்யக்ஷம் ஆகிவிடுகிறாளாம். அதாவது பக்தி மார்க்கத்தால் அடையத்தக்கவள் என்பதே பொருள். ச்ருதியில் கூட, பரமாத்மாவை நேரடியாகப் பார்க்க இயலாவிடினும், பக்தி மூலமாக பரமாத்மாவின் ஸ்வரூபத்தை பார்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறதாகச் சொல்லுவார் எனது குரு. பக்தி மார்க்கத்தில் போனால் அவ்வழியில் அடையக்கூடிய அம்பிகையை 'பக்தி கம்யா' என்கிறார்கள்.

பக்தி என்பதற்கு 'லக்ஷணம்' என்று ஒரு பொருள் சொல்கிறார்கள். இதைக் கொண்டால், நேரடியாகப் பார்க்க முடியாவிடினும், அவளது ஸ்வரூபத்தை லக்ஷணங்களின் மூலமாக உணரலாம் என்கிறார்கள். லலிதா த்ரிசதியில் 'லக்ஷண கம்யா' என்று ஒரு நாமம், பரப்ரம்ஹமான அம்பிகையின் உண்மையான ரூபத்தைச் சொல்ல இயலாவிடினும், அதன் லக்ஷணங்களைச் சொல்வதாக இங்கு பொருள்.

கம்யா என்கிற பதத்திற்கு ப்ரத்யக்ஷமாதல், அடையப்படுகிறவள், அறியப்படுகிறவள் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. பக்தியால் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகையை, பக்தியால் அடையப்படுபவளை பக்திகம்யா என்று கூறுவது சரிதானே?. இப்படி, பக்தியின் மூலம் ப்ரத்யக்ஷமாகும் அம்பிகை , பக்திக்குக் கட்டுப்பட்ட்வள், அல்லது பக்திக்கு வசமாகுபவள் என்பதைச் சொல்லுவதுதான் "பக்திவச்யா" என்னும் நாமம். பக்தி செய்வது என்பதற்கு நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் கண்ணப்ப நாயனார். ஆசாரக் குறைவுகள் இருந்தாலும், கண்ணப்பர் தனது பக்தியில் நிறைவாக இருந்தமையால் அவருக்கு ஈசனது அனுக்ரஹம் கிடைத்தது. பக்தி என்றால் அது கண்ணப்பரது பக்தி போல இருப்பின், அம்பிகை நம்மிடத்தும் வசமாகிடுவாள் என்பதே இந்த நாமம் சொல்வது.

இப்படி நம்மிடத்து வசமாகும் அம்பிகை மங்கள ரூபமானவள் என்பதே 'பத்ர மூர்த்தி' என்னும் நாமம் சொல்லுவது. இவள், தனது பக்தர்களுக்கு மங்களத்தை அருள்வதால் 'பத்ரப்ரியா'. அதாவது மங்களங்களில் ப்ரியமுள்ளவளாக இருப்பதால், தன்னைத் துதிக்கும் ஜனங்களுக்கு மங்களங்களை அருள்கிறாள். இப்படி தனது பக்தர்களுக்கு சகல விதமான ஸெளபாக்யங்களும் அருளுகிறாள் என்பதாலேயே, அவள் "பக்த ஸெள்பாக்ய தாயினீ".

Monday, July 12, 2010

ஸுகாராத்யா,சிவாராத்யா, சுபகரி, சிவதூதீ, சிவமூர்த்தி



ஸுகாராத்யா என்றால் சுகமாக வழிபடத்தக்கவள் என்று பொருள். உபவாசம், ஆவரண பூஜை, ஜபம், நியாஸங்கள், தர்ப்பணம் மற்றும் பல புரச்சரணங்கள் ஏதுமில்லாமல் வழிபட்டாலும் அருளுபவள். உலகிற்கே மாதாவான அவளை, குழந்தைகள் எப்படி அழைத்தாலும் வந்தருள்வாள். பொங்கலிட்டுக் கூழ் வார்த்தாலும் சரி, சஹஸ்ர-சண்டி மஹாயாகம் செய்தாலும் சரி அவள் இரண்டுக்கும் இரங்குவாள். ஸுகமாக சகல ஆபரணங்களையும் அணிந்து அலங்கரித்துக் கொண்டு பூஜிக்கலாம். இவ்வாறு சுலபமாக தன்னை ஆராதிக்கும் வழிகளை தனது பிதாவான ஹிமவானுக்கு அம்பிகையே அருளியதாகச் சொல்லுகிறது கூர்மம்.

நியம நிர்பந்தகள் இல்லாத பிறவியாக இருப்பினும் அம்பிகை அவர்களது ஆராதனையில் மகிழ்ந்து எல்லா சுபங்களையும்/மங்களங்களையும் அருளுவதால் அவளை "சுபகரி" என்று அடுத்த நாமத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் வாக்தேவதைகள்.

சாமீப்யம், சாரூப்யம், மோக்ஷம் என்றெல்லாம் சொல்லப்படுபவையாகவும் அம்பிகையே இருக்கிறாள், மேலே கூறிய ஸுகாராத்யா என்றபடியாக எளிதில் வழிபடக்கூடியவளாகவும் இருக்கிறாள். மோக்ஷம் போன்றவற்றை சோபனம் என்கிறார்கள் பெரியோர். ஸுலபமாக பூஜிக்கத்தக்கவள், சோபனம் போன்றவற்றை அடையச் செய்பவள் என்பதே "சோபனா ஸுலபா கதி:" கதி என்றால் சென்றைடையக்கூடிய இடம் என்று பொருள். இந்த நாமத்தை மூன்று பதங்களாகப் பிரித்தால், சோபனாயை, ஸுலபாயை கதி என்று வரும். இந்த நாமத்தைச் சொல்லி அர்சிக்கையில் சோபனாயை-ஸுலபாயை கத்யை நம: என்று கூற வேண்டும்.


பிறருக்கு ஒரு செய்தியை கொண்டு சென்று சொல்பவனை தூதன் என்கிறோம். சிவனையே தூதுவனாக அனுப்பியவள் பராம்பிகை. அதனாலேயே அவளுக்கு "சிவதூதீ" என்று பெயர். சும்ப-நிசும்பர்களுடன் போரிடும் முன்பாக சிவனை தூதுவனாக அனுப்பியதாக தேவி பாகவதம் கூறுகிறது. அந்த நிகழ்வை குறிப்பிடுவதுதான் இந்த நாமம். பத்ம புராணத்திலும் இந்த நாமாவை அம்பாளுக்குச் சொல்லியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.


சிவனால் ஆராதிக்கப்படுபவள் "சிவாராத்யா". அன்னையின் முதல் 12 பக்தர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பரமசிவனே முதலாவதாகச் சொல்லப்படும். காஞ்சி க்ஷேத்திரத்தில் பரமசிவனே காமாக்ஷியை முதலில் பிரதிஷ்ட்டை செய்து, பிற்காலத்தில் துர்வாசராக வந்து அந்த க்ஷேத்திரத்திற்கான பூஜா கல்பத்தையும் அளித்ததாகச் சொல்வர். பரமசிவன் அம்பிகையை ஆராதித்தே அர்த்தநாரீச்வரனாக ஆகியதாக பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.


சிவனுக்கும் அம்பிகைக்குமான பேதத்தை போக்கும் நாமா "சிவமூர்த்தி". அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். இதையே சிவம் என்றால் மங்களம் என்னும் பொருளால், இன்னொரு விதத்தில் மங்களமான மூர்த்த்ம் அவள் என்றும் கூறலாம். சிவ என்றால் மோக்ஷம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் மோக்ஷத்தையே ரூபமாகக் கொண்டவள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

Thursday, July 8, 2010

நடேச்வரீ, நந்திவித்யா, முக்திரூபிணீ




ஈசனின் நடராஜ ஸ்வரூபத்தை நாம் நன்கறிவோம். அந்த நடராஜரின் அருகில் இருக்கும் அம்பிகையை சிவகாமி என்பதையும் அறிவோம், அவள் கையில் ஒரு மலரை வைத்தபடி ஈசனது நடனத்தில் ஆழ்ந்திருப்பாள். இந்த சிவகாமியை நினைவுபடுத்தும் ஒரு நாமமே "நடேச்வரீ", அதாவது நடேச்வரரின் பத்னீ. மதுரை போன்ற சில இடங்களில் அம்பிகையும், ஈசனுடன் நடனமாடும் சிலா ரூபங்களைக் காண்கிறோம். ஆக ஈசனுடன் நடமாடுவதாலும் அவள் நடேச்வரீ. இவளது உபாசகர்களில் சிறப்பான பன்னிருவரில் நந்திகேச்வரும் ஒருவர். நந்திகேச்வரரால் உபாசிக்கப்பட்ட முறைக்கு நந்தி வித்யை என்று பெயர். அப்படியான நந்திவித்யை மூலம் அடையப்படுபவள் "நந்தி வித்யா" என்று கூறுகிறார்கள் வாக்தேவதைகள்.

தன்னை உபாசிப்பவர்களுக்கு முக்தியைத் தருவதால் அவளை "முக்திதா" என்கிறார்கள்.கூர்ம புராணத்தில் "தஸ்மாத் விமுக்திமன்விச்சன் பார்வதீம் பரமேச்வரீம், ஆச்ரயேத் ஸர்வபூதானாம் ஆத்மபூதாம் சிவாத்மிகாம்" என்று கூறியிருக்கிறது. அதாவது சிவாத்மிகையான பார்வதீ முக்தியைத் தருகிறாள் என்பதான பொருள். அவித்யையிலிருந்து விடுபட்டு ஆத்மஸ்வரூபத்தில் அம்பாளிருப்பதைச் சொல்வதே "முக்திரூபிணீ" என்கிறார்கள். அதாவது முக்தி என்பதே அம்பிகையின் ரூபம் என்பது பொருள். இவள் ரம்பை முதலான அப்ஸர ஸ்த்ரீகளால் வணங்கப்பட்டவள் என்பதைக் குறிக்கும் நாமாவே "ரம்பாதி வந்திதா".

ஸம்ஸாரத்தில் உழலும் என்னை அம்பிகை கைவிட்டுவிடுவாளோ?, என்று பல நேரங்களில் பயம் வருகிறது. இப்படியான நேரங்களில் நான் மனதில் நினைத்துக் கொள்ளும் நாமம், "பவதாவ ஸுதாவ்ருஷ்டி:" என்பது. அதாவது ஸம்ஸாரமாகிற காட்டுத்தீக்கு அம்ருதவர்ஷமாக இருப்பவள் என்பது பொருள். அதாவது காட்டுத்தீ எப்படி பரவினாலும், அவற்றை மழை எப்படி அணைக்கிறதோ, அது போல ஸம்ஸாரமான காட்டுத்தீயை அணைப்பதற்கான அம்ருத மழை போன்றவளாக அம்பிகை இருக்கிறாளாம். இந்த நாமத்தை மூன்று பதங்ககளாக, அதாவது, பவதா, வஸுதா, வ்ருஷ்டி: என்று பிரித்துச் சொல்வதும் உண்டு. பவ என்றால் சிவன், வஸு என்பது ரத்னம், ஐச்வர்யம். தனது பக்தர்களுக்கு சிவ சாயுஜ்யத்தையும், ஐஸ்வர்யத்தையும் வர்ஷிப்பவள் என்பதாகவும் பொருள் சொல்வார்கள் பெரியோர்.

Monday, July 5, 2010

சிந்தனை செய் மனமே....ச்ரத்தை

காதில் கேள்விப்படும் கோவில்களுக்கெல்லாம் செல்கிறேன். தினமும் இத்தனை முறை மந்திர ஜபம் செய்கிறேன்,வருஷத்தில் ஒரு முறை பெரிய ரித்விக்குகளைக் கூப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லிய விதவிதமான ஹோமங்களைச் செய்யவிக்கிறேன். தினமும் 2 மணிநேரம் பூஜை செய்கிறேன், ஆனாலும் இறைவன் எனது இன்னல்களைப் போக்கவில்லை, எனக்கு தரிசனம் தரவில்லை. இவ்வாறான சிந்தனை இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கிறது.

பல நேரங்களில் நமது வழிபாடுகள், உடல் வலிமைக்காகவும், செல்வச் செழிப்புக்காகவும் என்றே இருந்தாலும், சில நேரங்களில் பிறரை வருத்தவும் கூட இறையருளை நாடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இறையனுபூதியை விடுத்து வேறு சில காம்யார்த்தமான பலன்களை நோக்கிச் செய்யும் கர்மாக்களை தவறு என்கிறார்கள். கர்மாக்களைச் செய்ய மட்டுமே நமக்கு அதிகாரம், அதன் பலா-பலன்களை இறையிடத்தில் விட்டுவிடவேண்டும். நமக்கு எதைக் கொடுப்பது, எப்படிக் கொடுப்பது, எப்போது கொடுப்பது என்பதை அவனறிவான் என்கிற எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் நமக்குச் சொல்லியிருப்பதைச் செய்கிறோம் என்பதிருக்கட்டும், அவ்வாறு செய்வது எதற்காக?, எப்படிச் செய்வது? என்பதில் கவனம் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இவ்வளவு செய்தும் இறையருளைப் பெறுவதில்லை என்றால் மிகையல்ல. அவரவர் செய்த கர்மாக்களுக்கு ஏற்ற பலன் இல்லை என்றால் சாஸ்திரத்தில் சொல்லப்படுவது பொய்யாகாது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக நமது பெரியவர்கள், செயல்படுத்தி, பலன்களை அனுபவித்து அதனையே தர்ம-சாஸ்திரமாக நமக்கு அளித்திருக்கிறார்கள். ஆகவே தர்ம சாஸ்திரம் பொய்க்காது. இங்குதான் கீதையில் பகவான் சொல்லியதை நினைவில் கொண்டு வரவேண்டும்.

அச்ரத்தையா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம்ச யத்
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ

இதன் பொருள், சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா, பலன் தராது என்பதுதான். ஆக சாஸ்திரம் என்றும் பொய்க்காது, நாம் செய்யும் கர்மாக்களை ச்ரத்தையில்லாது, மற்றவர்களது பாராட்டுக்காகவும், சமூகத்தில் நமது பெருமையை பறைச்சாற்றுவதற்காகவும் மட்டுமே பூஜை-புனஸ்காரங்களை, நாம பாராயணத்தை, கர்மாக்களைச் செய்வது என்று இருப்பதால்தான் பலன் ஏதும் கிடைப்பதில்லை. இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். தக்ஷ-பிரஜாபதி மிகப் பெரிய யாகத்தைத்தான் செய்தான், ஆனால் அவனது அச்ரத்தை, அஹங்காரம் போன்றவை அவன் செய்த யாகத்தை முற்றிலும் தகர்த்ததை நாம் அறிவோம்.

பகவத்பாத சங்கரர், சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யாவதாரணா, ஸா ஸ்ரத்தா கதிதா ஸத்பிஹி: என்று கூறுகிறார். அதாவது, சாஸ்திரத்திலும், குருவின் வாக்யத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சிரத்தையுடன் செய்யும் காரியங்களே பலனைத்தரும் என்பது தான் அவர் சொல்லியிருப்பது. இதையேதான் கீதையிலும், "ஸ்ரத்தாவான் லபதே ஞானம்" என்கிறார் பரமாத்மா. அதாவது ச்ரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்று பொருள். அதாவது குருவினிடத்தில் சிரத்தையுடன் உபதேசம் பெறுபவனே ஞானம் அடைவான் என்பது மறைபொருள்.

கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் "ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி" என்று சொல்லியிருப்பதாகச் சொல்வர் பெரியோர். அடிப்படையாக ச்ரத்தையையும், அத்துடன் கூட பக்தி மற்றும் த்யானம் ஆகிய இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம் என்று கூறியிருக்கிறார்கள். இதில் முக்யமாக நாம் பார்க்க வேண்டியது பக்தி, த்யானம் என்பதற்கெல்லாம் முதலாகச் சொல்லியிருக்கும் அடிப்படை விஷயமான 'ச்ரத்தை' என்பதே.

ஆக, நாம் பயணம் செய்வது கர்ம, பக்தி, ஞான யோகங்களில் எந்த வழியிலாக இருந்தாலும் அதற்கு அவசியமானது ச்ரத்தை. இப்படியான மிக அவசியமான விஷயத்தை மனதில் கொள்வோம், நாம் செய்யும் எல்லாவற்றையும் ச்ரத்தையுடன் செய்வோம், இறையருள் வேண்டுவோம்.

Saturday, July 3, 2010

மஹநீயா, தயா மூர்த்தி, ஆத்ம வித்யா. மஹா வித்யா


ஆத்மாவே ப்ரம்ஹம் என்று கூறும்படியான ஞானம் வரச்செய்பவள் பராசக்தி. ஆகவே அம்பிகையை ஞான ஸ்வரூபமானவள் எனலாம். இதைச் சொல்லும் நாமமே "ஆத்ம வித்யா". அத்வைத சித்தாந்தத்தை சூக்ஷ்மமாகச் சொல்லும் நாமம். இதையே ஆத்மாஷ்டாக்ஷர மந்த்ர ரூபிணி என்றும் கூறலாம் என்று கூறுகிறார் பாஸ்கரர். இப்படியான ஆத்மவித்யையே ப்ராதான்யமானவள் என்பதாகச் சொல்வதே "மஹா-வித்யா" என்னும் நாமம். 'மஹதீ'யாகவும், வித்யா ரூபிணியாகவும் இருக்கும் அம்பிகையை மஹா வித்யா என்பது பொருத்தம் தானே?. வன துர்கையை துதிக்க என்றே ஒரு வித்யை சொல்லப்பட்டிருக்கிறது, அதற்கான பெயர் மஹா வித்யை என்கிறார்கள் ஆன்றோர்.

வித்யை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை, யக்ஞ-வித்யா (கர்மாக்களைப் பற்றியது), மஹாவித்யா (உபாசனையைப் பற்றியது), குஹ்ய-வித்யா (மந்த்ரவித்யை), ஆத்ம-வித்யா (ப்ரம்ஹ வித்யை) ஆகியவை. இந்த நான்கு வித்யைகளும் சேர்ந்ததே பஞ்சதசீ என்னும் "ஸ்ரீவித்யா".

இந்த நான்கு வித்யைகளும் அம்பிகையே என்பதை விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சதசீ என்பது 15 அக்ஷரங்களைக் கொண்ட அம்பிகைக்கான மந்திரம். இதற்கும் அடுத்த நிலையே ஷோடசீ எனப்படும் மஹா மந்திரம், இதுவே மந்திரங்களில் மஹோன்னதமானது.இதன் உபதேசம் ஆகி, பின்னர் பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டால் மட்டுமே ஆவரண பூஜைகள் செய்ய தகுதி.இந்த மஹா ஷோடசி மந்திர வித்யையை, "ஸ்ரீ ஷோடசாக்ஷரீ வித்யா" என்கிறார்கள் வாக் தேவதைகள். இந்த மஹா ஷோடசியையு,ம் ஸ்ரீவித்யை என்று கூறுவார்கள்.

"மனு-சந்த்ர-குபேரச்ச லோபாமுத்ரா ச மன்மத:" என்று வரும் அம்பிகையின் முதல் பன்னிரு பக்தர்களில் மன்மதனுக்கும் இடமுண்டு. அவனால் வணங்கப்பட்ட முறையை அனநங்க வித்யா அல்லது காதி வித்யா என்று தனித்துக் கூறப்படும் அவன் சிறந்த பக்தர்களில் ஒருவன். இவ்வாறு மன்மதனால் வணங்கப்பட்ட தேவியைக் குறிக்கும் நாமமே, "காம சேவிதா" என்பது. காமனால் சேவிக்கப்பட்டவள் ஸ்ரீ ஷோடசீ என்பது பொருள்.

இப்படி ஸ்ரீவித்யாவாக இருப்பவள் தயை மிகுந்தவளாக இருப்பதால் அவளை "தயாமூர்த்தி" என்கிறார்கள். தயையே மூர்த்தியாகக் கொண்டவள் தானே நமது அம்பிகை, அவளை தயா ஸ்வரூபம், தயா மூர்த்தி என்பது சரியே!. இப்படியான தயா மூர்த்தியை எல்லோரும் பூஜிக்கத்தக்கவளாக இருப்பதால்தான் "மஹநீயா" என்று கூறுகிறார்கள்.