Thursday, October 16, 2008

ஸ்ரீ வித்யாரண்யர்14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.


ஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.

இவற்றைத் தவிர, "ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே "பஞ்சதசீ" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், "விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு "காலமாதவம்" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு "ஸங்கீத ஸாரம்" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே "மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.
அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா

வித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே!


அவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.

Thursday, October 9, 2008

விஜய தசமி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 12*மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுல வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி

மாணிக்கத்தாலான வீணையை வாசிப்பவள் (இந்த வீணைக்கு மஹதி என்று பெயர்), அழகான வாக்கு உடையவள், மஹேந்திர நீலம் போன்ற காந்தி உடையவள் மதங்கரின் பெண்ணாகப் பிறந்தவள், அவளுக்கு நமஸ்காரம்.(சியாமளா தண்டகம்)

அன்னை சரஸ்வதீயின் இன்னொரு ரூபமே லகு-சியாமளா எனப்படும். இவளது அருள் இருந்தால் எல்லா கலைகளும் லகுவாக சாதகனுக்கு அப்யாசம் ஆகும். இவளே வாக்வாதினி என்றும், சாரதா என்றும் கூறப்படுபவள். குருவினிடத்து சந்தேகங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தைக்குப் பொருள். குருநாதர்கள் சில அரிய விஷயங்களை பலதடவை கேட்டாலன்றி உபதேசிக்க மாட்டார்கள். மேலும் சில விஷயங்களை பலமுறை கேட்டு/படித்தால் தானே மனதில் வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆகையால் வாக்வாதினி என்பதற்கு குருவாக இருந்து பலமுறை சொல்லிப் புரியவைப்பவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படி பலவாறு துதிக்கப்படும் சரஸ்வதி தேவியின் கருணாகடாக்ஷம் நமக்கு எல்லாவற்றையும் அருளக்கூடியது. இந்த விஜய தசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக வித்யாரம்பம் போன்றவை பல மடங்கு அபிவிருத்தி ஆகி வெற்றியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம். முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் காலத்தின் கடைசி ஒரு வருடம் அக்ஞாத வாசத்தின் போது வன்னி மரப் பொந்தில் அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது ஒளித்து வைக்கின்றனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது உத்தரனை முன்னிருத்திக் கொண்டு வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வெல்கிறான் விஜயன். அவன்
இவ்வாறு அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படும். இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான்.

இவ்வாறு சிறப்புற்ற இந்த நல்ல நாளில் அன்னை பராசக்தி மகிஷன் உள்பட்ட எல்லா அசுரர்களையும் வென்று ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக ராஜ்ய லக்ஷ்மி, பராசக்தி, மற்றும் ஞானஸ்வரூபியான வாகீஸ்வரி போன்ற தேவதைகளை வணங்கி அவர்களை பலவிதங்களிலும் ஆராதித்து அவர்களது அருளை வேண்டுவோம். வித்யைகள் பலவற்றை நமக்கு கற்றுக் கொடுத்த ஆச்சார்யர்களுக்கும், குருவிற்கு இந்த நன்னாளில் அனந்த கோடி நமஸ்காரங்கள் செய்து அவர்களது அருளை, ஆசிகளை வேண்டுவோம்.

அன்னைக்கு பூ மாலைகளும், பாமாலைகளும் சூட்டி அவளருளை வேண்டுவது நமது வழக்கம். அதன்படி இந்த பதிவுடன் நவராத்திரி சிறப்புப் பதிவுகள் முடிவுக்கு வரும் இவ்வேளையில் அவளருள் வேண்டி பாமாலை சாற்றியுள்ளார் நமது கவிக்கா என்று அழைக்கப்படும் கவிநயா. அவரது கவிமாலையைக் கீழே தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், அவர் எனது இந்த வலைப்பூவில் அன்னைக்கு கவிதாஞ்சலி செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தவுடன், தயங்காது எழுதிக் கொடுத்து, பல மாற்றங்களையும் செய்தார். கவிநயா அக்காவுக்கும், மஹாத்மியம் அருளிய தம்பி கணேசன் மற்றும் இந்த 12 நாளும் அன்னையின் சிறப்புக்கள் பலவற்றை எழுத காரணமான எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் பராம்பிகை சகல செளபாக்யங்களையும் அருள இந்த நன்னாளில் பிராத்திக்கிறேன்.


மகிஷனின் மமதையை அழித்திட உதித்திட்ட
மங்கையர்க் கரசி மாசக்தி!
விகசிக்கும் ஒளியென விண்ணிலே சுடரென
என்னுள்ளே ஒளிர்ந்திடும் ஸ்ரீசக்தி!
தேவர்கள் பணிந்திட மூவரும் போற்றிட
ஆயுதம் தரித்திட்ட ஆதிசக்தி!
நாவலர் பாவலர் நயமுடன் போற்றிடும்
நாரா யணியே நவசக்தி!

அலைகட லெனஅருள் பொழிந்திடு வாய்
அலைமகளே எழில்மிகு அலர்மகளே!
முழுநில வெனஒளிர் செழுமல ரழகே
முகில்வண்ணன் மார்பினில் உறைபவளே!
வாரிதி யினிலே வந்துதித் தவளே
வானவர் வணங்கிடும் வசுந்தரியே!
நீள்நிலம் காத்திடும் நாய கியேநில
மகளே பங்கயத் திருமகளே!

அறிவிருள் நீக்கி அருள்கலை மகளே
கலைகளின் ராணி கலைவாணி!
நெறியினில் நிறுத்தி பிணியினை போக்கும்
பிரம்மனின் சகியே எழில்வேணி!
வெண் டாமரையில் வீற்றிருக் கும்பெண்
தாமரையே எங்கள் பாமகளே!
ஒன்றாய் பலவாய் திருவாய் திகழ்ந்தென்றும்
நன்றே நல்கிடும் நாயகியே!

அன்னை சக்திஉந்தன் அடிபணிந் தோமே
அம்பிகை யுன்திரு வடிசரணம்!
பண்ணில் உனைவைத்து பாடிவந் தோமே
பர்வத புத்திரி பதம்சரணம்!
விண்ணில் உறைபவரும் போற்றிப் பணிகின்ற
விடைவா கனன்துணை யேசரணம்!
மண்ணில் உழல்கின்ற மாந்தருக் கருளிடும்
மங்கையுன் மலரடி கள்சரணம்!

--கவிநயா

Wednesday, October 8, 2008

சரஸ்வதியை வணங்குவோம் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 11*

வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதீ பூஜை. "மூலேநா ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்" என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புன:பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.


நாத்யாபயேந்ந ச விஸேத் நா அதீயீத கதாசந
புஸ்தகே ஸ்தாபிதே தேவீம் வித்யாகாமோத் விஜோத்தம

என்பதாக புஸ்தகங்களில் ஆவாஹனம் செய்துவிட்ட பிறகு எந்த வித்யையும் புதிதாக கற்கவும், கற்பிக்கவும் கூடாது என்பது சம்பிரதாயம். இதனால்தான் சாதாரண நாட்களில் குழந்தைகள் பாடம் படிக்க/எழுதாத போது இன்று என்ன சரஸ்வதி பூஜையா? என்று கேள்வி கேட்பது வழக்கமாயிற்று. அக்ஷர வடிவமான ஸரஸ்வதி இந்த பூஜையால் சந்தோஷமடைந்து நமக்கு நல்லறிவு, நினைவாற்றல் போன்றவற்றை அளித்துக் காப்பார். நல்ல கல்வி, அறிவு, சொல்வன்மை, செல்வம், பதவிகள், விருதுகள் போன்றவற்றை பெற்றுத்தரும் சரஸ்வதியை போற்றும் விதமாக தேவகுரு பிரஹஸ்பதியால் இயற்றப்பட்ட ஒரு ஸ்தோத்ரம் பத்ம புராணத்தில் இருக்கிறது. அதனை இன்று பார்க்கலாம்.

சரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ரிதிஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோநேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

அனைத்து உயிர்களின் இதயத்திலும், தனது கணவரான பிரம்ம தேவனது கழுத்தில் இருப்பவளும், சந்திரனுக்கு எப்போதும் பிரியமுள்ளவளுமான ஸ்ரீ சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதி த்வம்ஸ காரிணீம்

நல்லறிவினையும், உயர்ந்தவையெல்லாம் தருபவளும், தூய்மையானவளும், கையில் வீணையுடன் விரும்பிய அனைத்தையும் தருபவளும், ஐம் என்னும் பீஜம் போன்ற மந்திரங்களில் ப்ரியமுள்ளவளும், தரம் தாழ்ந்த புத்தியுடையவர்களை நாசம் செய்பவளாகவும் விளங்கும் சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.


ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்

நல்ல ஒளியாக இருப்பவளும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவளும், வெண்மையானவளும், வீடு பேறு அருளுபவளூம், மிக அழகான அங்கங்களை உடையவளும், எப்போதும் மங்களத்தை அருளுபவளுமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்ய-மண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்

தாமரையில் அமர்ந்திருப்பவளும், சிறந்த காதணிகளை அணிந்தவளும், வெண்மையான நிறத்தவளும், மனதிற்கு சந்தோஷத்தை அருளுபவளூம், ஸுர்ய மண்டலத்தில் வசிப்பவளும், மஹாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான சரஸ்வதியை நமஸ்கரிக்கிறேன்

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸுரதிந்து ஸமப்ரபாம்
ஸரஸ்வத்யுவாச:, வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே


இவ்வாறாக பிருஹஸ்பதியால் ஒரு மாதம் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய வாக்தேவி அங்கு பிரத்யக்ஷமாகிறாள். அப்போது அவள், "உனக்கு மங்களம் உண்டாகட்டும், உனது விருப்பத்தை கேள்" என்று கூற;

ப்ருஹஸ்பத்யுவாச:, யதி மே தேவி ஸ்ம்யக் ஞானம் ப்ரயச்சமே

பிருஹஸ்பதியும், "ஹே தேவி எனது விருப்பங்கள் எல்லாம் நல்ல அறிவு மட்டுமே, அதை அருளுங்கள்" என்கிறார்.

ஸரஸ்வத்யுவாச, இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம்
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தெளதி ஸம்யக் வேதவிதோ நர:
லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாசம் கரிஷ்யாம ந ஸம்ஸய:

சரஸ்வதியும், "அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் தூய ஞானத்தை உனக்குத் தருகிறேன். மற்றும் இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைவர். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று வேளையும் யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாக்கில் நானிருப்பேன்" என்கிறார்.

இவ்வாறு சகல வித்யைகளையும், ஞானத்தையும் அருளும் அன்னை மஹா-சரஸ்வதியின் சரணாரவிந்தங்களைப் பணிந்து, ஞானதேவி நம் சொல், செயல், சிந்தனைகளை சீர்படுத்த வேண்டுவோமாக.

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காம-ரூபிணீம்
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே சதா

Tuesday, October 7, 2008

திதி நித்யா - *நவராத்திரி சிறப்பு இடுகை - 10*


"பிரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா" என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். பிரதிபன் என்பது பிரதமையை குறிக்கும் சொல். ராகா என்பது பூர்ணிமையை குறிப்பது. பிரதமை முதல் பூர்ணிமை வரையில் மேலும் பூர்ணிமை கழிந்த பிரதமை முதல் அமாவாசை வரையிலும் வரும் திதிகளாக பூஜிக்கப்படுபவள் அம்பிகை. இதுதான் மேலே இருக்கும் நாமாவளியின் சாரம். ஒவ்வொரு திதியிலும் அம்பாளை என்ன விதமாக பூஜிக்க வேண்டும் என்று தாந்திர சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, இம்மாதிரி விசேஷங்களால் வழிபடப்படுபவள் அம்பிகை என்றும் இந்த நாமாவளிக்கு அர்த்தம் சொல்லலாம்.

அமாவாசையிலிருந்து பெளர்ணமிவரை அல்லது பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி உண்டு என்பது நாம் அறிந்ததே. நமது பண்டைய காலத்திலிருந்தே பெரியோர்கள் பஞ்சாங்கம் என்ற பெயரில் ஒவ்வொரு தினத்தையும், மாதத்தையும், வருடத்தையும் கணக்கிட்டு அதிலிருந்து மன்வந்திரம், யுகம் என்று தொடருவதை நாம் அறிவோம். பஞ்சாங்கத்தில் வருபவையாவது; திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்பது. சங்கல்பத்தில் வருவது நினைவிருக்கலாம். இது போலவே ஸ்ரீவித்யை உபாசகர்களுக்கு என்று ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது. இதன் பெயர் அஷ்டாங்கம் என்பது. இதில் வருவதாவது: யுகம், பரிவ்ரித்தி, வருஷம், மாதம், வாரம், தத்வ தினம், தின நித்யா, கடிகை என்ற எட்டுவிதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் 9 நாட்கள் சேர்ந்தது ஒரு வாரம், 16 மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம் என்று மேலே செல்லும். இதில் ஒவ்வொரு திதிக்கும் உரியவளாக அம்பிகையின் அம்சமான ஒரு தேவி உண்டு. இந்த தேவிகள் மகாவித்தையுடன் சேர்ந்து பதினாறு பேர். இவர்கள் எல்லோருமே அம்பிகையின் அங்க தேவதைகள். சாக்ஷாத் அம்பிகையே 16ஆம் நித்ய தேவதை. அம்பிகையின் மஹா மந்திரமான ஷோடசியில் 16 அக்ஷரங்கள் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அக்ஷரங்களுக்கும் அதி-தேவதையாக ஒரு நித்யாதேவி இருக்கிறாள். பதினாறாம் அக்ஷரம் சந்திர கலா ரூபமாகையால் ஸாதா பரா என்று சொல்லப்படும் மஹாவித்யை. மற்ற 15 கலைகளும்/நித்யாக்களும் இந்த மஹாவித்யையில் அடக்கம் என்பர். இப்போது எந்த திதிக்கு யார் தேவதை என்று பார்க்கலாமா:


திதி-- நித்யைகள்
----------------------------------------------
பிரதமை-- காமேஸ்வரி
துவிதியை-- பகமாலினி
திருதியை-- நித்யக்லின்னா
சதுர்த்தி-- பேருண்டா
பஞ்சமி-- வஹ்நி வாசினி
சஷ்டி-- மஹா வஜ்ரேஸ்வரி
சப்தமி-- சிவதூதி
அஷ்டமி-- த்வரிதா
நவமி-- குலசுந்தரி
தசமி-- நித்யா
ஏகாதசி-- நிலபதாகா
துவாதசி-- விஜயா
திரயோதசி-- ஜ்வாலா மாலினி
சதுர்த்தசி-- ஸர்வ மங்களா
பெளர்ணமி-- சித்ரா

இந்த 15 நித்யைகளுக்கும் மேலாக மஹா நித்யை என்று கூறப்படும் பராம்பிகை 16ஆம் நித்யை. இதனால் சஹஸ்ர நாமத்தில் வரும் இன்னொரு நாமாவளி, "நித்யா ஷோடசிகா ரூபா" என்பது.

இந்த திதி நித்யா தேவிகள் அனாதியான ஆத்ம சக்திகள் என்பர். ஆத்ம ஞானத்தினால் பெருகுவது ஆத்ம சக்தி. இப்படி ஆத்மசக்தி ஏற்படுவதைக்கண்டு சந்தோஷிப்பவள் என்பதைத்தான் "நித்யா பராக்ர-மாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா" என்று சஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்படுகிறாள். ஸ்ரீவித்யை உபாசனையில் தலைசிறந்தவர்களான வசிஷ்டர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகபிரம்மம் ஆகிய ஐவர். இவர்களது அனுஷ்டான வழியைச் சொல்லும் சுபாகம தந்திர பஞ்சகம் என்னும் மார்க்கத்தை அனுசரித்ததே சமயாசாரம். இதில் சுபாகம பஞ்சகம் என்பதில் இந்த திதி நித்யா பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தேவதைகள் இரண்டிரண்டாக சேர்த்து எட்டு வர்கங்களாக இருப்பதால் ஸ்ரீ சக்ரத்தின் எட்டு தளங்களில் இரண்டு இரண்டு தேவதைகளாக பூஜிக்கத்தக்கவர்கள்.

நவாவரண பூஜையிலும், சுவாஸினி பூஜையிலும் இந்த திதி நித்யா பூஜை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு திதிக்கும் ஒரு நித்யையாக சுவாஸினிகள் வரிக்கப்பட்டு, 16ஆவது நித்யையாக ஒரு வயதில் மூத்த சுமங்கலியை பராபட்டாரிகாவாக ஆவாஹனம் செய்வர். ஒவ்வொரு நித்யைக்கும் அவரவர்கட்குரிய தியான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து, மூலமந்த்ரத்தால் பூஜிக்கப்பட்டு பஞ்சோபசாரம், தீபாராதனை போன்றவை செய்யப்படும். இதன் பிறகே திரிசதி அல்லது சஹஸ்ரநாமத்தின்படி சுவாஸினிகள் பூஜிக்கப்பட்டு பின்னர் போஜனம் செய்விக்கப்படும். சென்னை-நங்கநல்லூரில் இருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனை தரிசிக்கும் முன் உள்ள 16 படிகளில் ஒவ்வொரு படிக்கும் இந்த வித்யைகளின் பெயரை வைத்து, அவர்களுக்கான சக்ரமும் அந்த படிகளின் அருகில் இருக்கும் கைப்பிடிச் சுவரில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதனாலும் இந்த கோவில் மிகுந்த சிறப்பினை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.

சக்ர ராஜம் என்றால் அது எப்படி ஸ்ரீசக்ரத்தைக் குறிக்கிறதோ அதுபோல தந்த்ர ராஜம் என்ற நூல் திதி நித்யா தேவிகளைக் குறிக்கும் தந்திர சாஸ்த்ர நூல். இந்த திதி நித்யா பற்றி இன்னொரு புத்தகம் இருக்கிறது, அதன் பெயர் நித்யா ஷோடசிகார்ணவம் என்பது. இவை தவிர அகஸ்தியர் தீந்தமிழில், வித்யைக்கு ஒன்றாக 16 விருத்த பாக்களை அருளியிருக்கிறார். அதன் பெயரே "ஷோடச விருத்தம்" என்பது தான். இவ்வாறான சிறப்புக்களை உடைய திதி நித்யா தேவிகளை இந்த நவராத்திரியில் துதித்து அவர்களது அருளைப் பெறுவோமாக.