Friday, September 30, 2011

2011 - நவராத்ரி: குலாம்ருத ரசிகா, கெளலின்யா, குல சங்கேத பாலின்யா...
சாதாரணமாக இல்லங்களிலும், கோவில்களிலும் ஸ்ரீ சக்ரங்கள் வைத்துப் பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு படம், கடம், சக்ரம், சிலை போன்றவற்றில் இறைசக்தியை இருத்தி வழிபடும் முறை பாஹ்யம் என்பார்கள். அதாவது வெளிப்படையாக ஸ்ரீசக்ரத்தை வைத்துப் பூஜிப்பது என்பது பாஹ்யாகாசம் என்றும், ஹ்ருதயத்தில் மானசீகமாக ஸ்ரீசக்ரத்தை உபாசிப்பதை தகராஹாசம் என்றும் கூறுகிறார்கள். மானசீகமான ஸ்ரீசக்ரத்தை வியத் (வியத்=ஆகாசம்) சக்ரம் என்கிறார்கள். இவ்வாறு மனசீகமாக செய்யப்படும் பூஜைக்கு "ஸமயம்" என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு மானசீகமாக அம்பிகையை வழிபடுவதாலேயே அவளுக்கு "ஸமயாந்தஸ்தா" என்று ஒரு நாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. வசிஷ்ட்டர், சனகர், சனந்தனர், சனத்குமாரர், சுகர் போன்ற மஹரிஷிகள் அம்பிகையை இவ்வாறு வழிபட்டதாகத் தெரிகிறது. இவ்விதமான பூஜாமுறையை ஸமய பஞ்சகம் என்கிறார்கள். இவ்வாறு, ஆறாதாரம் முதலான பாவனையான பூஜையில் சந்தோஷமடைபவள் என்பதைக் குறிக்கும் நாமமே "சமயாசார தத்பரா" என்பது.
முந்தைய பதிவில் நாம் ஆறாதாரங்களில் அம்பிகையின் லீலாவினோதங்களை அறிந்தோம். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியே ஒரு சக்தி ரூபம்தான் என்றும் நாமறிவோம். இந்த குண்டலினி சக்திக்கு குலஸ்திரீ என்று ஒரு பெயர். குலம் என்றால் குடும்பம் என்ற பொருள் நாமறிவோம். இதைத் தவிர குலம் என்று ஸுஷும்னா மார்க்கத்தினையும் சொல்லியிருக்கிறார்கள். யோகிகள் குலத்தைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பதெல்லாம் தங்களது குண்டலினி யோக முயற்சியைக் காத்து வெற்றியடையச் செய்யப் பிரார்த்தித்தலே. இந்த குலம் என்ற பதத்தினைக் கொண்டு ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பல நாமங்கள் சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. அவற்றைப் பார்க்கலாமா?.

குலாம்ருத ரசிகாயை (90) - சஹஸாரத்தினை குண்டலினி சக்தி எட்டும்போது ஏற்படும் அம்ருத தாரையில் ரசனையுடையவள் என்று பொருள்.

குலசங்கேத பாலின்யை (91) - குல சம்பந்தமான ரகசியங்களைக் காப்பவள். அதாவது வேதம், பூஜை, மந்திரம், சக்ரம் போன்றவற்றில் இருக்கும் ரகஸியங்களைக் காப்பவள். அம்பிகையின் உபாசனா முறைகள் குரு-சிஷ்ய சம்பிரதாயத்தையொட்டி வருவது. இவ்வாறான உபாசனா முறையை ரகஸியமாகக் காப்பவள் அம்பிகை.

குலாங்கனாயை (92) - குலஸ்த்ரீ போன்றவள். சரீரத்திற்கு குலம் என்று ஒரு பொருள், அதன்படி குலஸ்திரீயாக சரீரத்திற்குள் இருப்பதாகப் பொருள்.

குலாந்தஸ்தாயை (93) - இந்த நாமத்தில் குலம் என்பது நகரம், வீடு, தேகம், வம்சம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் வசிப்பவள் குலாந்தஸ்தா.

கெளலின்யை (94) - குல என்றால் சக்தி; அகுல என்றா சிவன். கெளலின்யை என்பது சிவ-சக்தி சேர்ந்த ரூபம்.

குலயோகின்யை (95) - குலத்துடன் சம்மந்தமுடையவளாக, குலத்தை இயக்குபவளாக இருப்பவள் குலயோகின்யா

அகுலாயை (96) - குலத்துக்கு மேலாக இருப்பவள். சரீரத்தில் குண்டலினியின் இருப்பிடமான மூலாதாரத்திலும், மேலே சஹஸ்ராரத்திலும் பத்மங்கள் இருக்கின்றன. இதில் அடிப்பாகத்தில்/மூலாதாரத்தில் இருக்கும் பத்மத்தை அகுலம் என்றும், மேல் பாகத்தில் இருப்பதை குலம் என்று சொல்கிறது ஸ்வச்சந்த சங்கிரகம் என்னும் நூல்.

Wednesday, September 28, 2011

2011 - நவராத்ரி: தேகம் முழுவதும் தேவி...


நமக்கெல்லம் ஆறு ஆதாரங்கள் பற்றித் தெரியும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையே அந்த ஆதாரங்கள். இந்த ஆதாரங்களில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த ஆறு சக்ரங்கள் ஒவ்வொன்றிலும் தேவி தன் நாயகனுடன் இணைந்து எவ்வாறு செயல்படுகிறாள் என்பதை ஆதிசங்கரர் நமக்கு செளந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். சாதகன் இந்த சக்ரங்களின் ஒவ்வொரு நிலையை அடையும் போதும் அவனால் இவற்றை உணர முடியும் என்கிறார்கள் பெரியோர். முந்தைய பதிவில் நாம் பார்த்த அக்னி கூடம்ம், சூர்ய கூடம், சோம கூடம் என்பதெல்லாம் இந்த ஆறாதாரங்களே.

மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அனாகதம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோம/சந்த்ர கண்டம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி கண்டத்திற்கும் சூர்ய கண்டத்திற்கும் இடையில் வருவது பிரம்ம கிரந்தி என்றும், சூர்ய கண்டத்திற்கும், சோம கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி விஷ்ணுக்ரந்தி என்றும், சோம கண்டத்திற்கு மேற்பட்ட சஹஸ்ராரம்-த்வாதசாந்தம் என்பதற்கு இடைப்பட்டது ருத்ரக்ரந்தி என்றும் கூறப்படுகிறது. இங்கே கண்டம், கூடம், மண்டலம் என்பதெல்லாம் அந்தந்தச் சக்ரங்களைக் குறிக்கும் வேறு பெயர்களாகக் கொள்ள வேண்டுகிறேன். கிரந்தி என்பது நாடிக்களின் முடிச்சையும், அந்த நாடிகளில் ஏற்படும் ஜென்ம வாசனையால் ஏற்படும் சிக்கல்கள் எனக் கொள்ளலாம்.

பிரம்மக்ரந்தியை கடப்பதன் மூலம் சிருஷ்டி வாசனையும், விஷ்ணுக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக ஸ்திதி வாசனையினையும், ருத்ரக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக் சம்ஹார வாசனையும் விலகுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த மூன்று கண்டங்களிலும் அம்பிகை இருப்பதையே லலிதா சஹஸ்ர நாமத்தில் "வஹ்னிமண்டல வாஸினி, பானு மண்டல மத்யஸ்த்தா, சந்திர மண்டல மத்யகா" என்னும் மூன்று நாமங்கள் குறிப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறார் எனது குரு. இதையே வேறொரு இடத்தில் வாக்தேவிகள், சிரஸில் சந்திரனைப் போன்ற வெண்மையாக அம்பிகை இருக்கிறாள் என்பதை, "சிர: ஸ்திதா சந்த்ர நிபா" என்றும், புருவ மத்தியில் "பாலஸ்தேந்த்ர தநு: பிரபா" என்பதாக வானவில்லை ஒத்த நிறங்களுடன் இருப்பதாகவும், ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்ற பிரகாசிப்பதை"ஹிருதயஸ்தா ரவிப்பிராக்யா" என்றும் கூறுகிறார்கள்.

மூலாதாரத்தில் தனுஸ், புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன் செம்பருத்தி மலர் போன்ற செந்நிறத்தினளாக, தேவியை த்யானம் செய்ய வேண்டும் என்கிறது ருத்ர யாமளம். இதே போல ஸ்வாதிஷ்ட்டானத்தில் நிலைத்த மின்னல் போன்ற வடிவில் இருப்பதாகவும், அவள் பிரம்மக்ராந்தியைப் பிளந்து செல்லுகையில் அக்னி போன்ற காந்தியுடன் இருப்பதாகவும், அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாகவும், ஆக்ஞையைக் கடக்கையில் மின்னல் கொடி போன்று விளங்குவதாகவும் த்யானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


மூலாதாரத்தில் பஞ்சதசியாகவும், ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும், ஆக்ஞாவில் வாராகியாகவும், ஸஹஸ்ராரத்தில் மஹா ஷோடசியாகவும், த்வாதசாந்தப் பெருவெளியில் பரா என்னும் முதிர்ந்த சுவாசினியாகவும் த்யானிக்கப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது. ஆகவே நாமும் அவளை த்யானிப்போம், அவளை உணரத் தலைப்படுவோம்.

துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:

Tuesday, September 27, 2011

2011 - நவராத்ரி: சர்வ மங்களா


அண்ட சராசரங்கள் அனைத்தையும் பலவித சக்திகள் இயக்குகின்றன. ஸ்தூல ரூபமான பெளதிக சக்திகளை ஸூக்ஷ்ம ரூபிணிகளான சக்தி தேவதைகளே ஆள்கிறார்கள்.இந்த சக்தி தேவதைகளையே நாம் பலவிதங்களில் பூஜிக்கிறோம். இந்த சக்தி தேவதைகளோ, மஹான்களது மனத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு லோக க்ஷேமார்த்தமான பல காரியங்களை நடத்துகின்றனர். இந்த சக்தி தேவதைகளே பாரதத்தின் பல இடங்களில் பல ரூபங்களாக வழிபடப்படுகின்றனர். இவ்வாறான சக்தி தேவதைகளின் மஹோன்னதத்தை சிறப்பித்து வழிபடவே நவராத்ரி. இந்த நவராத்ரிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தி தேவதைக்கு சிறப்புத்தந்து வழிபடுகிறோம்.


இந்த சக்தி தேவதைகளே 51 சக்தி பீடங்களில் போற்றப்படுகிறார்கள். இவ்வாறான 51 பீடங்களில் நான்கு பீடங்களை மட்டும் மந்த்ர பீடங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவை, காமகிரி பீடம், ஜலாந்த்ர பீடம், பூர்ணகிரி பீடம், மற்றும் ஒட்டியாண பீடம் என்பன. வேதத்திற்கு ப்ரணவம் எத்தனை முக்கியமானதோ, அது போன்றது சாக்தத்தில் 'ஹ்ரீம்' என்னும் அக்ஷரம். இந்த அக்ஷரமானது நான்கு பகுதிகளை உடையது. இந்த நான்கையும் ஸ்தூல ப்ரணவ பீடம், ஸூக்ஷ்ம ப்ரணவ பீடம், காரண பிரணவ பீடம் மற்றும் மகா காரண ப்ரணவ பீடம் என்று நான்காகச் சொல்லியிருக்கிறார்கள்.


சரி, இந்த நான்கு பீடங்கள் என்பன முன்பு இங்கு சொல்லியது போன்று உருவான பீடங்களில் உள்ளவை அவ்வளவுதானே?, என்றால் அதுதான் இல்லை. இவை நமது உடலிலும் இருக்கின்றன. அக்னி கூடம் எனப்படுவது அடி வயிறு, சூர்ய கூடம் எனப்படும் ஹ்ருதயம், சோம கூடம் எனப்படுவது முகம், மற்றும் சஹஸ்ரார கூடம் எனப்படுவது உச்சந்தலை. இவற்றில் அக்னி கூடம் என்பது காமகிரி பீடம், சூர்ய கூடம் எனப்படுவது ஜலாந்த்ர பீடம், சோம கூடம் எனப்படுவது பூர்ணகிரி பீடம், கடைசியாக சஹஸ்ரார கூடம் என்பது ஒட்டியாண பீடம். இந்த நான்கு பீடங்கள்/கூடங்களிலும் உள்ள தேவதைகள் பல நாமங்களில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்றும் பார்த்துவிடுவோம்.


காமகிரி பீடத்தில் வாகீஸ்வரி ஸ்வரூபத்தில் மஹா காமேஸ்வரீ, ஜலாந்த்ர பீடத்தில் காமகலா ஸ்வரூப மஹா வஜ்ரேஸ்வரீ, பூர்ணகிரி பீடத்தில் பராபர சக்தி ஸ்வரூப மஹா பகமாலினி, கடைசியாக ஒட்டியாண பீடத்தில் பரபிரம்ம ஸ்வரூபத்தில் ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி. இவளே ச்ர்வ மங்களா என்று சஹஸ்ர நாமத்தில் 200ஆவது நாமமாகச் சொல்லப்படுபவள். கும்பகோணத்தில் கும்பேஸ்வரரின் பத்னியாக கொலு வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் மங்களாம்பிகை என்பதாகும். இவள் எழுபத்து மூன்று அக்ஷரங்களால் ஆன பீடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த எழுபத்து மூன்று என்னும் எண்ணானது [பிந்துவுடன் சேர்த்து] ஸ்ரீசக்ரத்தைக் குறிப்பதே ஆகும்.


ஆகவே, சர்வ மங்களத்தையும் அருளும் ஜகன்மாதா ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரியை நவராத்ரி நாட்களில் துர்கா-லக்ஷ்மி-சரஸ்வதியுடன் சேர்த்து பூஜிப்போம்.


துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:

Sunday, September 18, 2011

மஹாளய பக்ஷம் : "ராமோ விக்ரஹவான் தர்ம:" பகுதி-3


முன்னர் "ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் இரண்டு இடுகைகள் இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இந்த இடுகை அதன் தொடர்ச்சி. முந்தைய பகுதிகளுக்கான உரல் கீழே!

பகுதி -1
பகுதி -2

ராமபிரானது பித்ரு வாக்ய பரிபாலனம் நாமெல்லாம் அறிந்ததே!. தந்தை சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று கானகம் சென்றார். சித்ரகூடத்தில் பர்ணசாலை அமைத்து இருந்த காலத்தில் பரதன் புடைசூழ வந்து மீண்டும் நாடாள அழைக்கையில் தந்தையின் மறைவினைச் கேள்விப்படுகிறார் ஸ்ரீராமர்.


தனது பிரிவால் தந்தை உயிர் நீத்ததை அறிந்து பல்வாறு புலம்பியழுகிறார், பின்னர் தசரதருக்கு மகனாக தான் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்தார் என்கிறார் வால்மிகி மகரிஷி. அயோத்யா காண்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

ஆநயேங்குதி பிண்யாகம் சீரமாஹர சோத்தரம்
ஜலக்ரியார்த்தம் ததாஸ்ய கமிஷ்யாமி மஹாத்மந:

இந்த வாக்யம் ஸீதையைப் பார்த்து ராமர் சொல்வதாக அமைந்திருக்கிறது. ஸீதே! உனது மாமனார் இறந்துவிட்டார். அவருக்கு நான் தர்ப்பண்ம், பிண்டதானம் போன்றவை செய்யவேண்டும், அதற்கு தேவையான பிண்டங்களை தயார் செய்ய இங்குதீ மரத்தில் உள்ள பழங்களை பிண்டமாக உருட்டிக் கொண்டு வா! என்று கூறுகிறார்.

தந்தையின் மறைவால் மிகுந்த வருத்தமடைந்தாலும், மகனாக, மறைந்த தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமகிரியைகளை செய்யத் தொடங்குகிறார். இவ்வாறு செய்ய ஆற்றங்கரைக்குச் செல்கையில் முதலில் ஸீதையும், பின்னர் லக்ஷ்மணனும் செல்ல, கடைசியாக ராமர் சென்றாராம். வனவாசம் செல்வதைச் செல்லுகையில், முதலில் ராமனும், பின்னர் ஸீதையும், கடைசியாக லக்ஷ்மணனும் வருவதாகச் சொன்ன வால்மிகி, குறிப்பாக இந்த இடத்தில் மாற்றிச் சொல்கிறார், இதன் காரணமென்ன?. ஸம்ஸ்காரத்திற்குச் செல்லும் போது சிறியவர்கள் முதலிலும், பின்னர் பெரியவர்கள் என்பதாக மூத்தவர் கடைசியில் செல்ல வேண்டும் என்ற தர்ம சாஸ்த்ர விதியை ராமர் கடைப்பிடித்ததை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கடுத்த ஸ்லோகத்தில் (அயோத்யா காண்டம்,102) இராமர் இன்றுவரையில் பிண்டப்பிரதானத்திற்குச் சொல்லப்படும் மந்திரத்தைச் சொல்லி தனது தந்தைக்கு பிண்டதானம் செய்ததாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வால்மிகி மஹரிஷி. இவ்வாறு சொல்லிய பின்னர், இந்த பிண்டதானத்திற்கு உபயோகம் செய்த பொருட்கள் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார். அதில், இலந்தைப் பழத்துடன் கூடிய ஐங்குதீ பழங்களால் ஆன பிண்டத்தை தர்பத்தில் வைத்து மந்திரம் சொன்னதாகச் சொல்லுகிறார். என்று இக்கர்மாவைச் செய்யும் பலருக்கும், அதென்ன பழத்தாலான பிண்டம்?, நாமெல்லாம் அன்னத்தாலான பிண்டமல்லவா வைத்துச் செய்கிறோம்? என்று தோன்றலாம்.

கர்மா செய்பவர் என்ன உணவினை உண்ணுகிறாரோ, அதனாலேயே பிண்டம் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்த்ர விதி, அதனால்தான் தனது உணவான ஐங்குதீ, மற்றும் இலந்தைப் பழத்தாலான பிண்டத்தைச் செய்து அக்கர்மாவைச் செய்ததாகச் சொல்லுகிறார் வால்மிகி.

இங்கு இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. தசரதரது மறைவினையொட்டி பரதன் மற்றும் சத்ருக்னன் தமது தந்தையின் ப்ரேத மற்றும் பித்ரு கார்யங்களைச் செய்தாலும், ராமபிரானும் தனது தந்தையின் மறைவு கேட்டவுடன் கர்மாவைச் செய்யத் தலைப்படுகிறார். அதான் தனது தம்பிகள் செய்துவிட்டார்களே, நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சாஸ்த்ரவிதிப்படி தான் செய்யவேண்டியதைச் செய்யத் தயாராகிறார். அதனால்தான் ராமரை தர்ம தேவதையின் உருவமாகச் சொல்லுகிறார்கள். இதே போல பின்னர் ஆரண்ய காண்டத்தில் ஒருமுறை ப்ரத்யாப்திக சிராத்தம் செய்ய வேண்டிய நாளில் ராம-லக்ஷ்மணர்கள் தமது குடில்களிலிருந்து சென்றவர்கள் அபரான்ன காலத்தில் குடிலுக்கு திரும்பாததால் சீதா தேவியே பிண்டகளை இட்டதாகவும், அதை தசரதர் ஏறதாகவும், பின்னர் அசரீரியாக ஸ்ரீராமருக்குத் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் வால்மிகீ.

இவற்றின் மூலமாக பித்ரு கர்மா என்பது எத்துணை முக்கியம் என்று தெரிகிறது. தற்போது மஹாளய பக்ஷம் நடக்கிறது. இக்கர்மாவிற்கு அதிகாரம் உள்ளவர்கள் பக்ஷிய மஹாளயமாக 16 நாட்களோ அல்லது 15 தினங்களில் ஒருநாள் பார்ணவ சிராத்தமாகவே அல்லது ஹிரண்யமாகச் செய்து உணவிடுதலோ செய்யவோம். இவ்வாறு ஏதும் செய்ய இயலாத சூழ்நிலை இருக்குமானால் தனது தாய்/தந்தையினருக்கான திதியன்று மட்டுமாவது தில தர்பண ரூபமாக சிராத்தம் செய்யத் தலைப்படுவோம். இந்த 15 தினங்களில் செய்யப்படும் சிராத்தங்களானது நமது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதெனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் ஒவ்வொரு நாளன்று செய்யப்படும் தர்பணங்களுக்கும், ஒவ்வொரு விசேஷ பலன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பதினைந்து தினங்களில் மட்டுமே நமது பித்ரு வர்க்க, மாத்ரு வர்க்க பித்ருக்களைத் தவிர மற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குரு போன்றவர்களுக்குத் தர்பணம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்.