Friday, October 16, 2009

தீபாவளித் திருநாள்..அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


சாதாரணமாக தமிழகத்தில் தீபாவளி என்பது நரக-சதுர்தசி மட்டுமே. ஆனால் அண்டை மாநிலங்களில், அடுத்து நாளான அமாவாசை, மற்றும் பிரதமை வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. "தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா" என்று பல பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்போம். அதாவது நரக-சதுர்தசியன்று அதிகாலை நேரத்தில் எண்ணை தேய்த்து, வென்னீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணையில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவிற்கான காரணம் பூமாதேவி தனது மகன் நரகாசுரனை அழித்த ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதே காரணம் என்பர். கங்காஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் இந்த நன்நாளில் மிக விசேஷம். இந்த நாளில் தான் காசியில் தங்க அன்னபூரணி லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் நகர்வலம் வருகிறாள்.அடுத்த நாள் அமாவாசை, வட தேசங்களில் ஸாத் பூஜா என்று பெண்கள் தமது இல்லத்தில் இருக்கும் ஆண்கள் நலனுக்காகச் செய்யும் பூஜை. இதே போல நம் பக்கமும் பல இல்லங்களில் அவரவர் இல்லத்துப் பழக்கங்களின்படி கேதார கெளரீ விரதம் என்று விமர்சையாக விரதமிருந்து மாங்கல்ய பலனுக்காக செய்யப்படுகிறது. பல இல்லங்களில் அமாவாசை தினத்தன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜையும் செய்யப்படுகிறது.
ப்ரதோஷ சமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத்
தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: சக்த்யா தேவக்ருஹேக்ஷுச
ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸ்த-வஸ்த்ரோப ஸோபிநா

என்பதாக, மாலை வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் குபேரரையும் பூஜிப்பது சில இல்லங்களில் பரம்பரையாக வழக்கம். இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, சர்வாபரணங்களும் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பூஜை செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வட இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் தீபாவளியன்று புதுக்கணக்கு ஆரம்பித்தல் இன்றும் நடைமுறையில் இருப்பது இதனாலேயே.இந்த தூலா/ஐப்பசி மாத அமாவாசை கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மிக பிரசித்தம். முன்னொரு காலத்தில் ஒரு வைணவர் திருமணம் செய்யாது ப்ரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு ஸ்ரீ சாரங்கனனுக்கு கைங்கர்யம் செய்து வந்தாராம். அவரது உறவினர்கள் அவரை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்து, அவ்வாறு செய்து கொள்ளாவிடில் பிற்காலத்தில் அவருக்கு அந்திமக் கிரியைகள் செய்யவும் ஆளின்றி அநாதையாக போகும் நிலை வரும் என்றேல்லாம் சொல்லுகின்றனர். அப்போது அந்த வைணவர் தமக்கு திருமணம் வேண்டாம் என்றும் தமது அந்திமக் கிரியைகளை சாரங்கனே செய்வான் என்றும் கூறுகின்றார். இந்த பெரியவர் கட்டிய கோபுரந்தான் சாரங்கபாணி கோவில் ராஜ கோபுரம். காலங்கள் உருண்டோட, அந்த வைணவர் தூலா மாத அமாவாசையன்று வைகுந்த பதவியை அடைகிறார். அன்று தீபாவளி, எனவே யாரும் அவருக்கு அந்திம சம்ஸ்காரம் செய்ய முன்வரவில்லை. அப்போது எங்கிருந்தோ ஒரு வைணவ பிரம்மச்சாரி வந்து பெரியவரின் அந்திமக் கிரியைகளைக் குறைவின்றிச் செய்துவிட்டுப் போகின்றார். அவரை யார் என்று விசாரிக்கத் தேடியபோது காணவில்லையாம். அப்போதுதான் ஊர் மக்கள் அப்பெரியவர் சொன்னபடி பெருமாளே வந்து அந்திம சம்ஸ்காரம் செய்ததை உணர்கின்றனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் சாரங்கபாணிக்கு கையில் பித்ரு காரியத்துக்கு உபயோகிக்கும் பவித்திரம் அணிவித்து சிராத்த சமையல் செய்து நிவேத்யம் செய்கின்றனர். அத்துடன் நில்லாது, பெருமாள் பெயரில் இரு வைணவப் பெரியவர்களை வரித்து சிராத்தமும் நடக்கிறது.

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பலிபாட்டிமை என்று பிரதமை தினமும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக பல விதங்களில் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் நாமும் அவரவர் இல்லத்து வழக்கத்தின்படி இறைவனை வணங்கி இனிமையாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Tuesday, October 6, 2009

விதுர நீதி...

10 நாட்கள் முன்பு இல்லத்திற்கு அருகில் இருக்கும் ராகி-குட்டா கோவிலில் ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. அங்கே ராமசந்த்ர பட் என்பவர் விதுர நீதி பற்றி ரொம்பவும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். கன்னடத்தில்தான் பேசினார் என்றாலும் அவரது பிரசங்கம் நன்றாகப் புரிந்தது. அந்த பிரசங்கம் முடிந்தபின்னர் அவருடன் சிறிது நேரம் பேசினேன். அந்தப் பிரசங்கமும், அவருடன் தனியாக பேசியதுமே இந்த இடுகை.


மஹாபாரதத்தின் இறுதிப் பகுதியில் 3 உபதேசங்கள் நடைபெறுகின்றது. ஒன்று நாம் மிகவும் அறிந்த(?) கீதோபதேசம், இன்னொன்று பீஷ்மர் தருமருக்கு அம்புப் படுக்கையில் இருந்தவாறு உபதேசித்த அறிவுரைகள் மற்றும் சஹஸ்ரநாமம். மூன்றாவதாக வருவது விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய ஆலோசனைகள், இதுவே விதுர நீதி என்று போற்றப்படுகிறது. பாரதத்தைக் கதையாகச் சொல்லுகையில் சுவாரஸ்யக் குறைவு ஏற்படாதிருக்க இந்த மூன்று உபதேசங்கள் விரிவாகச் சொல்லப்படுவதில்லை, அதிலும் குறிப்பாக விதுரரது உபதேசங்கள் 2-3 வரிகளிலேயே அடங்கிவிடுகிறது. ஆனால் மஹா-பாரதத்தில் இந்தப் பகுதி 605 ஸ்லோகங்களாக, 1200க்கும் மேற்பட்ட வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

குருஷேத்திரப் போரை தடுக்க முயலும் திருதராஷ்டிரர் முதலில் சஞ்சயனைத் தூது அனுப்பி பாண்டவர்களிடத்துப் பேசி போரைத் தவிர்க்க முயல்கிறார். சஞ்சயன் பாண்டவர்களிடத்துப் பேசியதும், அப்போது தருமர் அளித்த பதிலும் நாம் அறிந்ததே. இந்த உரையாடல் முடிந்து இரவு நேரத்தில் ஹஸ்தினாபுரம் திரும்பிய சஞ்சயன், தான் தருமரை சந்தித்துவிட்டு திரும்பி விட்டதாகவும், மறுதினம் அரசவையில் தூதுச் செய்திக்கான தருமரது பதிலைக் கூறுவதாகவும் திருதராஷ்டிரருக்குச் செய்தி அனுப்புகிறான். சஞ்சயன் என்ன பதிலைக் கொண்டு வந்திருப்பானோ என்ற கவலையில் இரவு நித்திரை வராது தவிக்கிறார் திருதராஷ்டிரர். நித்திரையில்லா அந்த இரவை பேசிக் கழிக்க முடிவு செய்து, பேசத்துணையாக விதுரரை அழைத்துவரச் செய்கிறார். இந்த நேரத்தில் திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் ஏற்பட்ட சம்பாஷணையே விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது.

விதுரர் வந்து அரசரை/திருதராஷ்டிரரை வணங்குகிறார். அச்சமயத்தில், திருதராஷ்டிரர் விதுரரிடம், "இனியவனே, நம்மில் நீதான் சாஸ்திரங்களையும், புனித நூல்களையும் நன்கு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாய். சஞ்சயன் நாளை அரசவையில் சொல்லக்கூடிய செய்தி என்னவாக இருக்கும்என்பதை நினைத்து எனக்கு உறக்கம் வரவில்லை. உடல் முழுதும் தகிப்பாகவும், உதறலாகவும் இருக்கிறது. அவன் என்ன செய்தி கொண்டுவந்துள்ளானோ?, தருமபுத்திரனின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பதும் உன்னால் மட்டுமே ஊகித்துச் சொல்ல முடியும் என்று தோன்றியதால் உன்னை இங்கு அழைத்தேன். உனது எண்ணங்களைச் சொல்வாயாக" என்று கூறுகிறார்.

இந்த இடத்தில் திருதராஷ்டிரருக்குப் பதிலாக விதுரர் கூறுவதாக இருப்பதுதான் விதுர நீதி என்று போற்றப்படுகிறது. இந்தப் பகுதி கேள்வி-பதிலாக இருந்தாலும், பெரும்பாலும் விதுரர் தமது பதிலில் அரசன் செய்ய வேண்டிய கடமைகளையும், அறநெறி வழுவாத அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகஎடுத்தியம்புகிறார். அரசர் பாண்டவர்களையும் தன் மக்களாகவே கருத வேண்டும் என்றும், பாண்டவர்களுக்கு அரசுரிமை அளிக்க வேண்டும் என்பதை தர்ம-சாஸ்திரம் மற்றும் வேதகால ரிஷிகளது கதைகளையும் உதாரணமாகக் காட்டி விளக்குகிறார். இந்த சம்பாஷணையை விதுரர் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.

பலகீனர்கள், வாழ்க்கைக்கான சாதனங்கள் அற்றவர்கள், சொத்தை இழந்தவர்கள், காதலிப்பவர்கள், திருடர்கள் இவர்களுக்கே இரவில் உறக்கம் வராது என்று கூறி, நீங்கள் மேற் சொன்ன எதிலும் அடங்காதவராயிற்றே!, மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் பேராசை அற்றவராயிற்றே,பிறகு ஏன் கலங்குகிறீர்கள் என்று கூறி, ஞானி என்பவர் யார்?, அறிஞர் என்பவர் யார்?, அவர்களது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், அறிவிலியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், பொறுமையின் மாண்பு என்று பல விஷயங்களைப் பட்டியலிட்டு பதிலுரைக்கிறாராம்.

சில-பல வருஷங்கள் முன்பு வரை கர்நாடகாவில் பள்ளிகளில் விதுர நீதி பாடமாக இருந்ததாம். விதுர நீதி தனியாக தமிழில் புத்தகங்கள் ஏதும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஸ்ரீ ராமசந்த்ர பட் அவர்கள் கன்னட புஸ்தகம் வைத்திருந்தார், கன்னடம் எழுத-படிக்கத் தெரியாததால் இரவல் வாங்க இயலவில்லை :-). தமிழில் ஏதும் புத்தகம் இருந்து, இதைப் படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள்.