Saturday, September 26, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-3- *நவராத்திரி சிறப்பு இடுகை - 9*

விஷ்ணு, பிரம்ம-ருத்ரர்களைப் பார்த்துச் சொல்கிறார். இவள்தான் நமக்கெல்லாம் காரணமாயிருப்பவள். எங்கும் நிறைந்தவளாகவும், வேதங்களுக்கு உற்பத்திஸ்தானமாகவும், சகல ஜகத் காரணங்களுக்கும் காரணியாக விளங்கும் ஈஸ்வரி. ஜகத் பிரளயத்தில் இவள் சமஸ்தானமான பிரபஞ்சத்தை சம்ஹரித்து தன்னிடத்து ஒடுக்கிக் கொண்டு விளையாடுகிறாள். இப்போது நாம் தரிசிக்கும் தேவி சர்வ பிஜாக்ஷர ஸ்வரூபிணி, அவள் பக்கத்தில் சர்வாபரண பூஷிதைகளாக இருக்கும் சக்திகள் அனைவரும் அவளது அம்சம். பூர்வ-ஜென்மத்தில் நமது நற்-கர்மங்களினால் அவளைத் தரிசிக்கும் உயர்வினைப் பெற்றோம் என்று கூறுகிறார். மூவரும் அவளருகில் சென்று நமஸ்கரிக்க எண்ணம் கொண்டு விமானத்திலிருந்து இறங்கிச் செல்ல ஆயத்தமாகையில் முற்றிலும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண்களாகிய தாம் எப்படிச் செல்வதென்ற எண்ணம் தோன்ற, அப்போது தேவி தன் பார்வையாலேயே அவர்கள் மூவரையும் ஸ்திரீ ரூபமுடையவர்களாக மாற்றினாள். பின்னர் எந்த சங்கோஜமும் இன்றி அவர்கள் தேவியின் சன்னிதானத்தை அடைந்து அவளை நமஸ்கரிக்கின்றனர்.


நமஸ்கரிக்கயில் அவளது திருவடியை நோக்கிய சமயத்தில் கண்ணாடி போன்ற அவளுடைய நகத்தின் மத்தியில் கோடி பிரம்மாண்டங்களையும், அதனதன் திரிமூர்த்திகளையும், திக்-பாலகர்களையும், சப்தசராசர்ங்களையும், சகல கந்தர்வர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவதைகள், வசுக்கள், சித்தர்கள், பிதுர் தேவதைகளையும், ஆதி சேஷன் போன்ற மஹா நாகங்களையும் கண்டனர். சிருஷ்டிக்கு உட்பட்ட எல்லாவற்றையும் பார்த்தார்கள். இவற்றைக் கண்டு ஆச்சர்யமுற்று தேவியே எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் என்று அறிந்து ஆனந்தமடைந்தனர். அக்கோலமே புவனேஸ்வரி கோலம். மும்மூர்த்திகளும் தனித்தனியாக அவளை பலவாறு துதித்து வணங்குகின்றனர்.


நவாக்ஷர ரூபமான தேவியை இவ்வாறு வணங்கிய மும்மூர்த்திகளைப் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைச் செய்தவளாய் பின்வருமாறு சொல்கிறாள். ஹே, தேவர்களே நானே பராசக்தி, எனக்கும் பரமசிவத்துக்கும் எந்த பேதமும் இல்லை. சர்வசம்ஹார காலத்தில் எல்லாம் என்னிடம் ஒடுங்கும். உத்பவ காலத்தில் புத்தி, சம்பத்து, தைரியம், கீர்த்தி, நினைவாற்றல், சிரத்தை, தீர்க்காலோசனை, தயை, நாணம், பசி, தாகம். பொறுமை, தேஜஸ், சாந்தி, இச்சை, நித்திரை, சோம்பல், நரை, திரை, மூப்பு, ஞானம், அஞ்ஞானம், ஆசை, அபேக்ஷை, பலம். பலவினம். உதிரம், சருமம், நேத்ரம், வாக்கு, பொய், மெய், நாடிகள் என்று புத்தியால் கற்பிக்க்கப்படும் பேத ரூபங்களாக எல்லாமும் நானாகவே இருந்து, அதனதன் செயல்களையும், பலனையும் செய்பவளாக இருக்கிறேன். உலகில் பலஹீனமாயிருப்பவனை அசக்தன் என்று கூறுவது அதனால்தான். என்னிடத்திருந்து பிரிந்திருந்தால் உங்களால் ஏதும் செய்ய இயலாது. இவ்வாறாக கூறி செளந்தர்யவதியாகவும், வெண்மையான ஆடை உடுத்தியவளாகவும் ரஜோ குணத்தை கொண்டவளாகவும் உள்ள மஹாசரஸ்வதி என்னும் சக்தியை தன்னிலிருந்து பிரித்து பிரம்மனுக்கு அளித்து, இச்சக்தியை உன் மனைவியாகக் கொண்டு அவளை உன் மனையாளாக மட்டும் நடத்தாது என் அம்சம் என்று நினைத்து இவளுடன் சத்ய லோகத்தில் சிருஷ்டியை தொடங்க பணிக்கிறாள்.

இவ்வாறே உத்தமமான மஹாலக்ஷ்மியை அழைத்து விஷ்ணுவிடம் சேர்பித்து, என்னுடைய நிமித்தமாக கொடுக்கப்பட்ட இவளை மனைவியாகக் கொண்டு லக்ஷ்மி நாராயணனாக வைகுந்தத்தில் வசிக்கப் பணிக்கிறாள். பின்னர் பிரும்மனைப் பார்த்து, ஹே பிர்ம்மனே, மஹா-விஷ்ணு உன்னால் வணங்கப்படுபவனாக இருக்கட்டும். இவன் சத்வகுண சம்பன்னன் ஆகவே உன்னிலும் மேம்பட்டவன். உலகில் சத்ரு பயமும், அசுர பயமும் ஏற்பட்டும் காலங்களில் இவன் பல ரூபங்களெடுத்து உலகின் கஷ்டங்களை போக்குவான் என்றாள். பின்னர் ருத்திரரைப் பார்த்து மனோகரையாகவும், மஹாகாளியாகவும் விளங்கும் கெளரியை ஏற்றுக் கொண்டு தமோ-குணத்தை பிரதானமாகக் கொள்ளச் செய்து கைலாசத்தில் வாழப் பணிக்கிறாள்.


பின்னர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூவரும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் முத்தொழிலுக்கு கர்த்தாக்களாக விளங்கி அதனையே ப்ராதான்யமாகக் கொள்ள வேண்டும் மகா சம்ஸ்கார காலத்தில் அண்ட சராசரங்களும் அழியும் காலத்தில் நீங்களும் என்னில் ஐக்கியமடைவீர்கள் நான் ஒடுங்கத் தக்கவள் அல்ல, குணங்களோடு கூடிய காலத்தில் சகுணையாகவும். குணங்கள் விலகிய காலத்தில் நிர்குணையாகவும் விளங்குகிறேன். தத்துவங்களுக்கு எல்லாம் மகத்தான சிவ ஸ்வரூபம் நானே. ஆதியில் நான் அகங்கார தத்துவத்தை உருவாக்கி அதிலிருந்து சத்வம் போன்ற முக்குணங்களையும், மகதத்துவமாகிய புத்தியையும் உருவாக்கினேன். பஞ்ச பூதங்களையும் அவற்றிலிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்களிலிருந்து ஐந்தும், மகத்தும் சேர்ந்த பதினொன்றே பரமசிவம் என்னும் ஆதி புருஷர். அவர்க் நிர்குணமாக எங்கும் வியாபித்தவர்காக இருப்பார். இப்போது நீங்கள் உங்கள் இடங்களுக்குச் செல்லலாம். எப்போது என்னை தியானிக்கிறீர்களோ அப்போது நான் உங்கள் முன்பு பிரசன்னமாவேன் என்று கூறுகிறாள். அக்கணமே அவர்களுக்கான சக்திகளைத் தவிர அந்த தீவே மறைந்துவிடுகிறது. இவர்கள் தங்கள் லோகங்களை அடைந்திடுகின்றனர்.


இந்த தரிசனத்தை பற்றி பிரம்மா நாரதரிடம் கூறி, அன்னையின் அந்த ரூபமே புவனேஸ்வரி ரூபம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக ஆரம்பிக்கும் தேவி பாகவதம், அம்பிகையின் பல திருவிளையாடல்களையும் சொல்கிறது. ஆனால் இந்த நவராத்திரிச் சிறப்பு இடுகைகளில் இத்துடன் தேவி பாகவதம் முடிவுபெறும். பின்னர் வேறொரு சமயத்தில் மற்றதைப் பார்க்கலாம்.ஸ்ரீ புவனேஸ்வரி மாதா கீ ஜெ!!!

Friday, September 25, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-2- *நவராத்திரி சிறப்பு இடுகை - 8*


பல வருட காலங்கள் கழிந்த பின்னர் அவர்களது மன உறுதியை மெச்சிய பராசக்தி அசரீரியாக அவர்களிடம் தோன்றி அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டாள். அசுரர்கள் இருவரும் அவளை வணங்கி தங்களது மரணம் அவர்கள் விரும்பும்போது மட்டுமே நடக்கவேண்டும் என்று கேட்க, அன்னையும் அவர்களுக்கு அந்த வரத்தையும், யாராலும் ஜெயிக்க முடியாத பராக்ரமத்தையும் அளித்தாள். இதன் காரணமாக மது-கைடபர்கள் மிகுந்த கர்வத்துடன் வலம் வருகையில் பிரம்மா தாமரைத் தண்டின் வழி வந்து இவர்களை சந்திக்கின்றார். பிரம்மாவிடம் இருக்கும் தாமரை மலரைக் கண்ட அவர்கள், அதை தமக்கு தருமாறு வற்புறுத்துகின்றனர். வாதம்-விவாதம் தொடருகையில் பிரம்மா தமது சக்தியால் மது-கைடபர்களது பிறப்பினைப் பற்றியும், அவர்களுக்கு அன்னை அருளியது பற்றியும் அறிகிறார். அவர்களை தன்னால் சமாளிக்க முடியாதென முடிவெடுத்து நாராயணனது உதவியினைப் கோரவும் இயலாது அவர் யோக நித்திரையில் இருப்பதால் அவரது உதவி கிடைப்பது தாமதமாகலாம் என்று உணர்ந்து அனைத்துலகுக்கும் மூலகாரணமான பரசாக்தியைத் துதிக்கிறார்.

பிரம்மன்னுடைய பிரார்த்தனையால் மகிழ்ந்த தேவி அவருக்கு அனுக்கிரகிக்கும் எண்ணத்துடன் தமது தாமஸ ரூபமான நித்திராசக்தியை நாராயணனுடைய திருமேனியில் இருந்து விலகச் செய்ய, நாராயணன் கண்விழித்து பிரம்மனின் நிலையினை உணர்ந்து அவருக்கு அபயமளித்து, பிர்மமனே அஞ்சவேண்டாம், நான் அவ்விரு அசுரர்களையும் வதம் செய்கிறேன் என்றார். பின்னர், அசுரர்களைப் பார்த்து யுத்தம் செய்ய வருமாறு கூறுகிறார். மது-கைடபர் ஆகிய இருவரும் விஷ்ணுவுடன் சண்டையிடுகிறார்கள். மாறி-மாறி தாக்கிக் கொண்டதில் 5000 வருடங்கள் கடந்ததாம். பின்னரும் சண்டை ஒரு முடிவுக்கு வராத காரணத்தால் நாராயணன் அவர்களைத் தந்திரத்தால் கொல்ல நினைத்து அவர்களிடம், நீங்கள் இருவரும் மாறி மாறி என் ஒருவனைத் தாக்குவதால் நான் சற்று களைப்புற்றிருக்கிறேன். சற்றே இளைப்பாறி பின்னர் போரைத் தொடரலாம் என்றார். அசுரர்களும் அதற்கு இணங்கினர். இந்த நேரத்தில் பரந்தாமன் யோகத்தில் ஆழ்ந்து அசுரர்களுக்கு தேவி அளித்துள்ள வரங்களைப் பற்றி அறிகிறார். இதன் பின்னர் அவர் பராசக்தியின் துணைநாடி தவமிருக்கிறார். அம்பிகையும் நாராயணன் முன் தோன்றி தமது மாயாசக்தியில் மது-கைடபர்களை மயக்குவதாகவும், அவ்வாறு மயங்கிய நிலையில் அவர்களிடம் அவர்கள் சாவுக்கு வரம் வாங்கிவிடவும் சொல்கிறாள். பின்னர் தமது மாயா சக்தியை அழகிய பெண்ணுருக் கொள்ளச் செய்து, அவளை அசுரர்களிடத்து அனுப்புகிறாள். அப் பெண்ணைக் கண்ட மதுகைடபர்கள் அவளை அடைய எண்ணுகையில் நாராயணன் அவர்களிடம் போருக்கு வரச் சொல்ல, அசுரர்கள் மாயாசக்தியான பெண்ணின் அழகால் வந்த பிரமிப்பில் போருக்கு வர மறுக்கின்றனர். அப்போது நாராயணனிடம் அவ்வசுரர்கள், நாராயணா, இதுவரை தோல்வியடைந்த உனக்கு நாங்கள் வரம் தருகிறோம், வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்று கூறுகின்றனர். அத்தருணத்தை எதிர் நோக்கியிருந்த நாராயணன் மிகவும் சந்தோஷித்து அசுரர்களிடம், தம் கையால் அவர்களை கொல்வதே தமக்கு வரமாக வேண்டும் என்கிறார்.


இக்கட்டான சூழ்நிலையினை உணர்ந்த அசுரர்கள் இருவரும், தமது தவற்றை உணர்ந்தாலும் ஹரியிடம் பின்வருமாறு கூறுகின்றனர், வரம் என்று கேட்டுவிட்டதால் எங்களைக் கொல்ல அனுமதிக்கிறோம், ஆனால் எங்களைக் கொல்லும் இடமானது பல யோஜனை பரப்புள்ள, நீரில்லாத இடமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களது சூழ்ச்சியை உணர்ந்த பரந்தாமன் மெல்லச் சிரித்தவாறு தமது உருவத்தை பெரிதாக்கி தமது துடைகளை இரண்டாயிரம் யோஜனை உடைய நீரில்லா இடமாக காண்பித்து அங்கு அவர்களை இருத்தி கொன்றார். அசுரர்கள் உடல் பாற்க்கடலில் பரவிய இடமெல்லாம் பூமியாகியதாம். அதனால்தான் பூமிக்கு மேதினி என்று பெயர் என்று கூறுகிறது தேவி பாகவதம்.


இவ்வாறாக மது-கைடபர்கள் அழிந்த நேரத்தில் அங்கே ருத்திரரும் தோன்ற, அப்போது தேவி அசிரீரியாக "நீங்கள் மூவரும் உங்களுக்கு உரிய தொழில்களான சிருஷ்ட்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் மேற்கொண்டு உங்கள் பதவிகளில் சுவஸ்த சித்தர்களாக இருங்கள்" என்று கூறுகிறாள்.

மூவரும் குரல் வந்த திசையினை வணங்கி, ஹே! அம்பிகே எங்கு பார்க்கிலும் ஒரே ஜல மயமாக இருக்கிறதே நாங்கள் எங்கள் தொழிலை எப்படி, எங்கே நடத்துவது, பிரஜைகள் எங்கே?, நாங்கள் அசக்தர்களாக இருக்கிறோமே? எங்கள் கர்மாகக்களை நடத்த சக்தியில்லையே என்று கூறினர். அப்போது அவர்கள் அருகே ஒர் அழகிய விமானம் தோன்றி அருகே வந்து நிற்க, அசரீரி அவர்களை அதில் ஏறிக்கொள்ள சொன்னதன் படி அவர்கள் மூவரும் அதில் ஏறுகின்றனர். வானில் கிளம்பிய விமானம் சற்று நேரம் பறந்த பிறகு ஒரிடத்தில் இறங்கியது. அங்கே அடர்ந்த வனங்களும், தடாகங்களும், உத்தியான வனங்களும் இருந்தது. அவ்வனத்தில் பலவகைப்பட்ட மிருகங்களும், மக்களும் ஆங்காகே வாசம் செய்வதை கண்டு மும்மூர்த்திகள் வியப்படைந்தனர்.

மீண்டும் விமானம் கிளம்பி இன்னொரு இடத்திற்கு சென்று இறங்க, அதனைக் கண்டவுடன் அது தேவலோகம் என்று அறிந்தனர். அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள், தச-திக்பாலகர்கள் ஆனந்தமாக இருந்து வந்தனர். மறுபடி விமானம் பறக்கையில் அவர்கள் கண்ட இன்னொரு இடம் பிரம்மனை திடுக்கிடச் செய்தது. ஆம்!, அது சத்ய லோகம், அங்கே ஒரு சத்ய ஸ்வரூபியாக நான்முகன் தாமரையில் அமர்ந்திருக்க, முனிவர்கள் பலவிதமாக ஸ்தோத்திரம் செய்வதைக் கண்டனர். அவர் ஆச்சர்யத்துடன் சிந்திக்கையில் விமானம் நகர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்றது. அங்கே புலித்தோலணிந்த பரமன் நந்திகணங்கள் சூழ இருப்பதைக் கண்டனர். இதே போல வைகுந்தத்தில் சர்வாபரண பூஷிதராக லக்ஷ்மி-நாராயணனைக் கண்டனர். இவற்றையெல்லாம் பார்த்து வியந்தவாறு இருக்கையில் விமானம் அவர்களை ஒர் அலைகள் மிகுந்த கடலுக்குக் கொண்டு சென்றது. கடலின் நடுவில் ஒர் தீவு. அத்தீவில் பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தனர். பழங்கள் நிறைந்த மரங்களும், வாசனை நிறைந்த மலர்களும் பூத்துக் குலுங்கியது. அங்கே இருக்கும் அழகிய உத்தியான வனத்தின் நடவுல் ரத்தினங்களால் இழைக்கப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் அழகிய கட்டில் ஒன்று சிறந்த வேலைப்பாடுகளுடன் இருந்தது. அக்கட்டிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஓர் மாது வீற்றிருந்தார். அவரைக் கண்டதும் மனதில் ஒர் நிம்மதியும், நிறைவும், மகிழ்வும் உருவாவதை உணர்ந்தனர் மும்மூர்த்திகள். அஷ்ட கோண வடிவான ஸ்ரீசக்ர பீடத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது அவளுடைய முக காந்தியை வெளிப்படுத்துவதாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கையில் அவள் அநேக முகங்களையும், கை-கால்களையும் கொண்டு விசுவரூபமாகத் தெரிந்தாள். அவள் யார் என்று தெரியாது மும்மூர்த்திகள் சிந்தித்துக் கொண்டிருக்கையில் முதலில் விஷ்ணுவிற்கு தெளிவு பிறக்கிறது.


Thursday, September 24, 2009

தேவி பாகவதம்-புவனேஸ்வரி தரிசனம்-பகுதி-1 - *நவராத்திரி சிறப்பு இடுகை - 7*

பரிக்ஷித் மஹாராஜனை தக்ஷகன் கொன்றதால் பரிஷித்தின் மகன் ஜனமேஜயன் தக்ஷகனை கொல்வதற்கு சர்ப்ப யாகத்தை ஆரம்பிக்கிறான். ஈரேழு உலகிலும் இருக்கும் சர்ப்பங்களை மந்திரத்தால் வரவழைத்து ஆகுதியாகச் செய்கையில் அஸ்திகர் என்னும் முனிவர் யாகசாலைக்கு வருகிறார். [இந்த அஸ்திகர் பற்றிய வரலாறு பிறகு பார்க்கலாம் ]அவரை வரவேற்று உபசரித்த ஜனமேஜயன், தன்னால் முனிவருக்கு ஆகக் கூடிய காரியம் ஏதாகிலும் இருக்குமானால் செய்ய காத்திருப்பதாக கூறுகிறான். முனிவரும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலைச் செய்தல் என்றால் அது சர்ப்ப யாகத்தை அப்போதே பூர்த்தி செய்வதேயாகும் என்று கூற, அரசன் அதிர்ந்தாலும் கொடுத்த வாக்கை காப்பற்றும் பொருட்டு யாகத்தை அத்துடன் நிறுத்திவிடுகிறான்.

யாகத்தை நிறுத்தினாலும் தமது குலத்திற்கு விரோதியான சர்ப்ப குலத்தை அழிக்க முடியவில்லையே என்று மனமுடைந்தான் ஜனமேஜயன். அப்போது வைசம்பாயனர் என்றழைக்கப்படும் வியாசர் ஜனமேஜயனது வருத்தத்தை போக்கவும், அவனது சந்ததியினர் அடைந்திருக்கும் களங்கம் நீங்கவும் தேவிபாகவதம் என்னும் உத்தம புராணத்தை அவனுக்குச் சொல்கிறார். அப்போது, அவர் ஜனமேஜயனிடம், "தேவியினால் மஹாவிஷ்ணுவுக்குச் சொல்லப்பட்ட இந்த புராணத்தை கேட்பதால் உன் தந்தை நல்ல கதி அடைவார், இது கேட்பவரை பரிசுத்தமடையச் செய்யும், ஜனன-மரண துக்கங்களில் இருந்து விடுவிக்கும்" என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட ஜனமேஜயன், தமக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, "சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனப்படும் முத்தொழிலுக்கும் ஆதாரமாக இருப்பவர்களும், சகுண ஸ்வருபமானவர்களுமான பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் ஆகிய மூவரும் தேவர்களில் சிறந்தவர்கள் என்றும் சச்சிதானந்த ஸ்வரூபிகள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கும் மரணம், சுக-துக்கம் போன்றவை உண்டா?, நித்திரை போன்ற அவஸ்தைகள் உண்டா?, இவர்களுக்கு உதிரம் போன்ற சப்த தாதுக்களுடன் கூடிய தேகம் உண்டா?, அவர்களது குணங்கள் என்ன?. அவர்களது வசிப்பிடம் எப்படி இருக்கும், அவர்களது லீலாவினோதங்கள் போன்றவை பற்றி எல்லாம் கூறுங்கள்" என்று பணிவுடன் கேட்கிறான்.இக்கேள்விகளைக் கேட்ட வியாசர் பெரிதும் மகிழ்ந்து, 'அரசே, நீ கேட்டவை எல்லாம் மிக அரிய விஷயங்கள். இவற்றையெல்லாம் நானும் முன்பு நாரத மஹரிஷியிடம் கேட்டேன். அப்போது அவர் சிரித்தவாறு சில செய்திகளை சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் ஒருமுறை மீண்டும் வற்புறுத்திக் கேட்ட சமயத்தில் எல்லாவற்றையும் கூறினார். அவற்றை உனக்கு கூறுகிறேன் கேள்" என்று கூறி நாரதர் தமக்கு கூறியதை பின்வருமாறு கூறுகிறார். நாரதர், தமக்கும் இக்கேள்விகள் எழுந்ததாகவும், தமது ஐயங்களை தன் தந்தையான பிரம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும். தற்போது சொல்வது பிரம்மனது வாக்கு என்று கூறித் தொடர்கிறார். ஒருமுறை பிரளய வெள்ளத்தில் எல்லாம் அழிந்து பிரம்மன் ஒருவனே இருந்தாராம். அப்போது அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்தாராம். எங்கும் நீர் மயமாக இருக்கையில் தாம் யாரால் உருவாக்கப்பட்டார்?, தன்னை ஒடுக்குபவர் யார்?. என்றெல்லாம் யோசித்தக் கொண்டிருக்கையில் தாம் அமர்ந்திருக்கும் தாமரை எதனை ஆதாரமாக கொண்டிருக்கிறது...அது ஏதோ ஒர் இடத்தில் நிலை பெற வேண்டுமெ என்று உணர்ந்து, அந்த தாமரையின் தண்டுடன் கீழ் நோக்கிச் செல்கிறார். அத்-தண்டின் அடிப்பகுதியில் ஓர் அத்புதமான காட்சியைக் கண்டார். மேக-சியாமள வர்ணத்தில், பீதாம்பரதாரியாக, சதுர்புஜங்களில் சங்கு-சக்ர, கதா-பத்மங்களைத் தாங்கியவராக மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருப்பதையும், அங்கு இரு அசுரர்கள் நீர்பரப்பில் இருப்பதையும் கண்டார்.

மஹா-விஷ்ணு ஆதிசேஷன் மீது சயனித்து உறக்கத்தில் இருந்த போது அவரது காதுகளில் இருந்த அழுக்கானது வெளிவந்து இரு அசுரர்களாக ஆகினர். அவர்கள் பெயர் மது, மற்றும் கைடபர் என்பதாகும். இவர்கள் பார்கடலில் பரந்தாமன் காதிலிருந்து வெளிவந்து அந்த கடலிலேயே விளையாடி வந்தனர். இவர்களைத்தான் பிரம்மன் பார்க்கிறார். ஒருசமயம் இவர்களுக்கு சந்தேகம் வந்தது. எந்த பொருளும் ஆதாரம் இல்லாது இருக்க முடியாது. மிக பெரியதாகவும், நீர் மயமாகவும் இருக்கும் இக்கடலுக்கு ஆதாரம் எது?, இதைப் படைத்தது யார்?. இக்கடலில் இருக்கும் தாம எப்படி தோன்றினோம். என்றெல்லாம் எண்ணினர். அவற்றிற்கு பதிலை தேடிய போது தம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்றும் அந்த சக்தியே அவர்கள் விளையாடும் கடலையும் தாங்குகிறது என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது வானத்தில் ஏதோ ஒரு பேரொளி மற்றும் சப்தம் தோன்றி மறைகிறது. அதை கவனித்த மது-கைடபர்களுக்கு அது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. தம்மை இயக்கும் சக்தியே அந்த சப்தமாகவும், பேரொளியாகவும் வந்ததாக உணர்ந்து, அச்சக்தியை தரிசிக்க எண்ணினர். பேரொளியுடன் வந்த சப்தத்தையே ஆதாரமாகக் கொண்டு அதை தியானித்து புலன்களை அடக்கி தியானம் செய்தனர்.

Wednesday, September 23, 2009

மஹாலக்ஷ்மியை வணங்குவோம் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 6*
பாற்கடலில் மறைந்த செல்வங்களையும், அமிர்தத்தையும் பெற வேண்டி அதைக் கடைவதென்ற முடிவுக்கு வந்தனர் தேவர்கள். பாற்கடலைக் கடைவது தேவர்களால் மட்டும் ஆகாத செயல் என்று கூறி அசுரர்களது வலிமையையும் பெற யுக்தி கூறுகிறார் பிரம்மா. அதன்படியே தேவ-அசுரர்கள் இணைந்து, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன் கூர்மாவதாரமெடுத்து மத்தைத் தாங்க பாற்கடல் கடையப்பட்டது. வலி-தாங்காத இயலாத வாசுகி விஷத்தைக் கக்க, அதை உண்ட பரமன் நீலகண்டன் ஆனார். இவ்வாறு கடைந்த பாற்கடலில் இருந்து முதலில் உச்சைஸரவஸ் என்ற விசேஷக் குதிரை வந்ததாம், பிறகு காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம், சுரா பானம், சந்திரன் போன்றவை தோன்றியது. இவற்றிற்கு பிறகு தகடையும் தேவாசுரர்கள் வியக்கும் விதமாக மிகுந்த பிரகாசத்துடன், சுகந்தமும், சோபையும், பொருந்திய யுவதி தோன்றினாள். கைகளில் தாமரையுடன் தோன்றிய அவள் அங்கிருந்த பரந்தாமனருகில் சென்று தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டாள். இவ்வாறு இணைந்த பிறகே தேவர்களுக்கும் தெரிந்தது. நாராயணனைப் பிரிந்த மஹா-லக்ஷ்மிதான் மீண்டும் வந்து அவருடன் இணைந்திருக்கிறார் என்று. ஏன் பிரிந்தார் என்னும் கதை பிறகு ஒருமுறை பார்க்கலாம்.


இவ்வாறு மஹாலக்ஷ்மி வந்த பிறகு தன்வந்திரி தேஜோ ரூபமான அம்ருத கலசத்தை கையில் ஏந்தி பாற்கடலில் இருந்து வெளி வந்தார். இதன் பிறகு மோகினி அவதாரத்தை அறிவோம். தேவர்கள் அம்ருதம் கிடைத்தபின் எல்லாப் போர்களிலும் அசுரர்களை வென்றனராம். இவ்வாறு தேவர்கள் வெற்றிக்கு காரணம் மஹா-லக்ஷ்மி என்று உணர்ந்து அவளைப் பணிந்து போற்றுகிறான். அவ்வாறு தேவேந்திரன் போற்றிய ஸ்லோகத்தை (மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்) இன்று முதல் பாராயணம் செய்து மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், சங்கு, சக்ரம், கதை போன்றவற்றை கையில் தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்.


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக் கொடுப்பவளும், அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அணிமா போன்ற ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும், தேவியும், போகம், மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!, உங்களுக்கு நமஸ்காரம்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மாஹேஸ்வரியும், யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும், விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும் போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும், உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களி அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான தாயே!, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்கிறானோ!, அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:


இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹா-பாபங்களும் விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம் முதலியவை உண்டாகும்.

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும் படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு, கேட்கும் வரங்களையும் மங்களங்களையும் தருபவளாக இருப்பாள்.
கோல்ஹாபூர் தேவீ கீ ஜே!

Tuesday, September 22, 2009

தேவீ-மஹாத்மியம் (அறிமுகம்-2) - *நவராத்திரி சிறப்பு இடுகை - 5*தேவி-மஹாத்மியத்தை முதலில் படிக்கையில் நமக்கு தோன்றுகிறது என்றால், என்னதிது? அம்பிகையை எதிர்க்கும் அளவுக்கு இந்த மஹிஷன், சும்ப-நிசும்பர்கள் பராக்கிரமம் நிறைந்தவர்களா? என்று. அவர்களுடைய சேனாபதிகளின் பலத்தை பார்தாலே தெரியும். முன்பே கூறியது போல ரக்தபீஜன் எனும் சேனாபதி மிகப்பெரிய பராக்கிரமசாலி, மாத்ருகா தேவிகளையே சேனாபதிகளாக உடைய தேவியின் படைக்கு மிகப்பெரும் சவாலாக ரக்தபீஜன் அமைந்தான். வைஷ்ணவி-தேவியும், கெளரியும் சரமாரியாக வாளால் வெட்டியும், சூலத்தால் குத்தியும் அவனை மாய்க்க முயன்றும் முடியவில்லை காரணம், ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனுடலில் இருந்து சிந்தும் போது இன்னொரு ரக்தபீஜனாக எழுந்தனர். கோடிக்கணக்கில் உருப்பெற்றவர்களை கண்டு தேவியின் படையானது திகைத்து நின்றது. சும்ப நிசும்பர்களோ தேவியே திணறும் அளவுக்கு ஆக்ரோஷமாக போர் புரிந்தனர். மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு பராசக்தியிடமிருந்து அன்னை காளிகாதேவி தோன்றி அவனது ரத்த்தை முழுவதும் பானம் பண்ணிதாலேயே அவனை வேரோடு மாய்க்க முடிந்தது. இவளது வாஹனமான சிம்மமோ உறக்க கர்ஜனை செய்து கொண்டும் பிடரி மயிற்றைச் சிலிர்த்துக் கொண்டும் சத்ருக்களின் உடலில் உயிரைத் தேடுவது போல் காணப்பட்டது. இவ்வாறாக 14 படைத்-தலைவர்களையும் நாரஸிம்ஹி, நாராயணி, சிவதூதி, ஐந்தரி போன்ற சக்திகளாக தோன்றி வெவ்வேறு பாணங்களால், வெவ்வேறு நிலைகளில் வீழ்த்தினாள் அன்னை.


யுத்த பூமியெங்கும் ரத்த ஆறும், உடல்களாலான சகதியுமாக காக்ஷியளித்தது. அம்பிகை மிகப்பெரும் பராக்கிரமசாலிகளான சண்ட முண்டர்களையும் வதம் செய்த பின்னர் அந்த கோபம் கண்களில் கொப்பளிக்க "ஸோபி கோபான் மகாவீர்ய குரஸுண்ண மகீதல: ச்ருங்காப்யாம் பர்வதானுச்சாம்- ச்சிஷேப ச நனாத ச" என்பதாக (மகாவீர்யம் உடையவனும்,பூமியை பிளப்பவனும், கொம்புகளால் உயர்ந்த மலைகளை தூக்கி எறிபவனாகவும்) கோபத்துடன் கர்ஜித்தவாறு வறண்ட பாலைவனத்தின் நடுவே இமய மலையென மகிஷன் வந்து நின்றான். எதிரிகளை உதிரிகளாக்கி புழுதியில் புரட்டியெடுக்கும் எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் படைகளோ பக்தியில்லாத மனத்தில் சூழ்ந்து நிற்கும் இருள் போல் பூமியெங்கும் வியாபித்து இருந்தனர். மாத்ருகா தேவியரின் படையோ வானத்து நட்சத்திர கோட்டம் போல் எண்ணில் அடங்காமல் இருந்தனர், அதன் நடுவே கோடி சூரிய பிரகாசத்துடன் சிம்மவாகினியாய் காலில் தண்டையும், இடுப்பில் யானைத்தோலும், பரசு, பாசாங்குசம், டமருகம், திரிசூலம், சாபம், பாணம், புசுண்டி, சங்கு, சக்கரம், கதை,வில், அக்னிசட்டி என எல்லா ஆயுதங்களையும் தாங்கி கழுத்தில் கபால மாலையும் அணிந்து வெற்றி தேவதையாக காட்சியளித்தாள் சண்டிகை. சண்டிகை லலிதா த்ரிபுரசுந்தரியின் சதுரங்க சேனையின் ப்ரதான தேவதை.


எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவள். இவளே அபராஜிதா (தோல்வியே இல்லாதவள்) என்றும் அழைக்கப்படுபவள். தேஜோவதியின் சிம்மவாகனமானது தனது கர்ஜனையால் நூற்றுக்கணக்கில் அசுர சேனையை கொன்று குவித்தது. அம்பிகையின் ஆர்ப்பரிக்கும் தாக்குதலில் இந்திரியங்கள் இயக்கம் மறந்து அரக்கர்களின் ஈரக்குலை நடுங்க உயிருக்கு பயந்து ஊதப்பட்ட பஞ்சாய் எரிமலையில் விழுந்த புழுவாய் ஏற்றத்தில் இரங்கும் யானையாய் ஜம்புலங்களும் ஒடுக்கம் பெற்று சிங்கத்தை எதிர்த்த ஓநாய்களாக அரக்கர் படையும் அதன் தலைவனும் ஒழிந்து போனார்கள்.


இவ்வாறாக மஹிஷனை ஸம்ஹரித்த தேவியை போற்றி தேவர்கள் துதிக்கிறார்கள், அதிலிருந்து சிலவற்றை கீழே பார்க்கலாம்.

யஸ்யா: ப்ரபாவ-மதுலம் பகவானனந்தோ ப்ரம்மா ஹரச்ச ந ஹி வக்து-மலம்
பலஞ்ச ஸா சண்டிகாகில-ஜகத்பரிபாலனாய நாசாய சாசுப-பயஸ்ய மதிம் கரோது


எவளுடைய அளப்பதற்கரிய பெருமையையும், பலத்தையும் ப்ரம்மா-விஷ்ணு-சிவனாலும் வர்ணிக்க இயலாதோ அந்த சண்டிகை அசுபத்தினால் எற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்க திருவுள்ளம் கொள்ள வேண்டும்.

ஹேது: ஸமஸ்த-ஜகதாம் த்ரிகுணாபி தோஷைர்ந ஜ்ஞாயஸே ஹரிஹராதிபி-ரப்யபரா
ஸ்ர்வாச்ரயாகில-மிதம் ஜகதம்சபூத-மல்யாக்ருதா ஹி பரமா பரக்ருதி ஸ்த்வமாத்யா

உலகனைத்துக்கும் காரணம் நீ; முக்குண வடிவங்கள் உடையவளானாலும் குணத்வேஷம் இல்லாதவள் நீ; ஹரி-ஹரன் போன்ற தேவர்களுக்கும் எட்டாதவள் நீ;எல்லோருக்கும் புகலிடம் நீ;உலகெலாம் தோன்றியது உன்னுடைய அம்சத்தால்; முதன்மையானதும், மாறாததும், உயர்ந்ததுமான மூலப் பிரகிருதி நீ.

மேதாஸி தேவி விதிதாகில சாஸ்த்ர ஸாரா துர்காஸி துர்க பவஸாகர நெளரஸங்கா
ஸ்ரீ: கைடபாரி க்ருதயைக க்ருதாதிவாஸா கெளரீ த்வமேவ சசிமெளலி க்ருத ப்ரதிஷ்டா

ஸகல சாஸ்திரங்களையும் உண்ர்ந்த புத்தி ரூபம் நீ, விஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்யும் நீ, சந்திர சேகரனோடு உறையும் கெளரியாகவும் இருக்கிறாய்.

இவ்வாறாக, சப்தஸதியில் உள்ள ஸ்துதிகள் அளவிடாத பலனை தரவல்லது. 5 - வது அத்தியாயத்தில் "யாதேவி ஸர்வ பூதேஷு"- எனத்தொடங்கும் பகுதியால் செய்யப்படும் நமஸ்காரங்கள் பிறப்பில்லா நிலையை தரும் என்று சொல்லப்படுகிறது.

"பலிப்ப்ரதான பூஜாயா மக்னி கார்யே மகோத்ஸவே சர்வம் மமைதஸ்சரித முச்சார்யம்ச்ராவ்யமேவச" - என்பதாக தேவியே சொல்கிறாள். (பலிப்ப்ரதானத்திலும், அக்னிகார்யத்திலும், மகாஉற்சவங்களிலும் இந்த என் சரிதம் வாசிக்கப்பட வேண்டும்) இதனால் தான் எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் சண்டி பாராயணம் செய்யப்படுகிறது. இந்த பாராயணத்தின் பலனாக அம்பிகை நம் மனதில் உள்ள காம,க்ரோத,மத,லோப,மாச்சர்யங்களை ஒழித்து எல்லா செல்வங்களையும் அருளட்டும்.

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மேலே சொல்லியது மஹிஷ வதம் மட்டுமே, இது போலவே இன்னும் பல அசுரர்களை அன்னை மாய்த்ததும், அப்போது தேவர்கள் அன்னையை துதித்ததும் மஹாத்மியத்தில் இருக்கிறது. அதனை பிறகு ஒரு சமயம் கணேசன் நமக்காக எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

Monday, September 21, 2009

தேவீ-மஹாத்மியம் (அறிமுகம்-1) - *நவராத்திரி சிறப்பு இடுகை - 4*

முன்பு கூறியபடி கடந்த வெள்ளியன்றே இந்த தொடர் மீள்பதிவுகள் ஆரம்பித்திருக்க வேண்டியது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. இங்கு வரும் பதிவுகள் சென்ற வருடம் நவராத்ரிக்கு இட்டவை. முதல் மூன்று பதிவுகளின் சுட்டிகள் கிழே!.

நவராத்ரி முதல் நாள் பதிவு

நவராத்ரி இரண்டாம் நாள் பதிவு

நவராத்ரி மூன்றாம் நாள் பதிவு

கிழே இருப்பது நான்காம் நாள் பதிவு

************************************************************************

நவராத்திரி 9 தினங்களும் பதிவிடுவது என்று முடிவு செய்தவுடன், அமாவாசை, விஜய தசமியும் சேர்க்க 11 தினங்களாகுமே. எப்படி இத்துணை பதிவுகள் எழுதறதுன்னு ஒரு அச்சம். இதற்காக யாரிடம் உதவி கேட்கலாம் அப்படின்னு யோசித்த போது நண்பர் கணேசன் (அம்பியின் தம்பி) நினைவுக்கு வந்தார். உடனே போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்டேன். அவர் சரின்னு சொன்ன போதே அம்பிகை அருள் கிடைத்த உணர்வு. உடனே அவரிடம் தேவி-மஹாத்மியம் எழுதமுடியுமா என்றேன். எழுதறேன், ஆனால் மேலோட்டமாகத்தான் எழுதுவேன் பரவாயில்லையா என்று கேட்டார். சரி மஹாத்மியம் ஒர் அறிமுகம் என்ற வகையில் எழுதுங்கள் என்றவுடன் ஏற்றார்.


தேவி-மஹாத்மியம் ஏதோ செளந்தர்ய லஹரி போல இல்லை. இதனை பாராயணம் பண்ண விசேஷமாக குரு அனுமதி வேண்டும். ஜபங்கள் எடுத்துண்ட எல்லோரும் கூட இப்புத்தகத்தை எடுத்து வச்சுண்டு பாராயணம் பண்ண முடியாது. திரு கணேசன் சில வருடங்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் சாரதாம்பாள் சன்னிதியில் இதைப் பாராயணம் பண்ணினவர். மஹா பவித்ரமான இந்த சப்தசதி அவர் மூலம் நமக்கு அறிமுகமாவது என்பதே அம்பாளின் அருள் நமக்கு கிஞ்சித்தும் இருக்கிறது என்பதை காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. இனி வருவது அவரது எழுத்துக்கள், இதை இரு இடுகைகளாக பிரித்து இந்த வலைப்பூவில் இடுவது மட்டுமே நான் செய்தது. எனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இதை எழுதிக் கொடுத்த திரு. கணேசனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிழே இருப்பதிலிருந்து அவர் எழுத்துக்கள், படம் கூகிளாண்டவர்.

-------------------------------------------------------------------------------------------------நமாமி சங்கராச்சார்யம் சர்வலோகைக பூஜிதம்,
பஜெ ஸ்ரீ பாரதீதீர்த்தம் ஸாரதா பீட ஸத்குரும்!
"குண்டலக்காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமெனும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே" - என்ற திருமந்திர வாக்கின் மூலம் திருமூலர் காலம் தொட்டே சண்டி உபாசனை இங்கு இருந்து வருவதை அறியலாம். மார்கண்டேய புராணம்,பத்ம புராணம் முதலியவற்றில் சண்டி பாராயணம் தெளிவாக வருகிறது, இதில் அம்பிகையானவள் சண்டிகா தேவியாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த ரூபத்திற்கு அப்படியென்ன சிறப்பு என இனி நாம் காணலாம்.

"கலெள சண்டி வினாயகெள" - அதாவது கலிகாலத்தில் அற்புதமான பலன்களை அளிப்பதில் சண்டியும், கணபதியும் தலைசிறந்த தேவதைகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த சண்டிகையின் புகழை விரிவாக கூறுவதே தேவீ-மாகாத்மியம் ஆகும்.


இந்த ஸ்தோத்ரம் முழுவதுமே மூலமந்திர ரூபமானது, உதாரணமாக ஸாவர்ணிஸ்ஸூர்யதனயோ என்று துவங்கும் ஸ்லோகம் புவனேஸ்வரி மந்த்ரமாக அமைந்துள்ளது. அன்னையின் ஆராதனை முறையை விளக்கும் டாமர தந்திரம் மற்றும் யாமள தந்திரம் முதலியவற்றில் இதன் பாராயணமுறை விளக்கப்பட்டுள்ளது. இதன் படி தேவீ-மாகாத்மியம் கவசம்,அர்க்கம்,கீலகம் முடிவில் மூன்று ரகசியம் என்று கொண்டதாக இருக்கும்.


இதற்கு ஸப்தசதீ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் 700 ஸ்லோகங்கள்(ஸப்த என்றால் 7,ஸதம் என்றால் 100) ஆகும். 13 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ப்ரதம சரித்ரம், மத்யம சரித்ரம் மற்றும் உத்தம சரித்ரம் என 3 பகுதிகளாக உள்ளது. முதலில் மதுகைடப வதமும், இரண்டாவதில் மகிஷாசுர வதம் + அம்பாள் ஸ்துதியும், மூன்றாவதில் அரக்கர்களின் அழிவிற்கு முன்பும் பின்பும் தேவி ஸ்துதி காணப்படும். பாராயணத்திற்கு முன்பும்,பின்பும் நவாக்ஷரி எனப்படும் சண்டியின் மூலமந்திரம் ஜபிக்கப்படும். பாராயணத்திற்கு முன்பு ஜபிக்கப்படும் அர்கலா ஸ்தோத்ரம் தனியாக பாராயணம் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் உள்ள ஜயந்தி மங்கலா காளி எனும் ஸ்லோகம் சத்ருக்களை நடுங்க செய்யும்.ஸுரதன் எனும் மன்னனுக்கும், ஸமாதி எனும் வணிகனுக்கும் ஒரு ரிஷியின் மூலமாக தேவியின் பெருமைகள் சொல்லப்பட்டு அவர்கள் உயர்ந்த நிலையை அடைவதாக இந்த ஸ்தோத்ரம் அமைந்திருக்கும். துர்கா ப்ரதீப: எனும் நீலகண்டர் எழுதிய உரை, நாகேசி எனும் நாகேச பட்டர் உரை மற்றும் பாஸ்கரராயர் எழுதிய "குப்தவதி" ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஆராதனையில் ஜபம் ,யாகம், தர்ப்பணம் ஆகியவை மிகவும் முக்கியம் ஆகும். இதில் பல அர்த்தங்கள் தத்துவ உட்பொருள் கொண்டதாக உள்ளது. இதன் மந்திரங்களே சண்டி யாகத்திற்கு உச்சரிக்கப்படுகிறது. பாராயணம் மட்டும் செய்யும் பொழுதும் சிறந்த பலனை தரும் அற்புத பொக்கிஷம் ஆகும். இதில் பல இடங்கள் தேவியின் வாக்காக வெளிப்படும் (தேவ்யுவாச) அதனால் இந்த ஆராதனையானது சாக்த உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.


மகிஷாஸுரனின் 14 படைத்தலைவர்கள்(சாமரன், உதக்ரன், கராலன், உத்ததன், பாஷ்கலன், பிந்திபாலன், தாம்ரன், அந்தகன், உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மகாபானு, பிடாலன், துர்தரன், துர்முகன்) சண்டி-தேவியால் போர்களத்தில் அழிக்கப்பட்டு, அதன்பின், ரக்தபீஜன்,சண்ட முண்டனுடன் மகிஷாஸுரனும் வதைக்கப்படுவான். மேலே கூறிய ஓவ்வொரு அசுரனும் மிகுந்த பலவான்கள், அவர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. உதாரணமாக, ரக்தபீஜன் பெற்ற வரத்தின் படி அவன் உடலில் இருந்து பூமியில் சிந்தும் ஒவ்வொரு துளியில் இருந்தும் ஒரு ரக்தபீஜன் தோன்றுவான்(குளோனிங் தொழில் நுட்பம்!!). அவனின் ரத்தம் முழுவதும் குடித்து காளியானவள் வென்று வீழ்த்தினாள்.13 அத்தியாயங்கள் முறையே மதுகைடப வதம், மகிஷாசுர சைன்ய வதம், மகிஷாசுர வதம், தேவி ஸ்துதி,தேவீதூத ஸம்பவம், தூம்ரலோசன வதம், சண்ட-முண்ட வதம், ரக்த பீஜ வதம், சும்ப-நிசும்ப வதம், தேவி ஸ்துதி, பலஸ்துதி, வரப்பிரதானமென அமைந்துள்ளது. இதில் அம்பிகை கூறும் போது "என்னுடைய அருள் பெற்றவன் இதை பாராயணம் செய்யும் பாக்கியத்தை அடைவான், செய்பவன் கடுமையான துன்பத்தில் மாட்டிக்கொண்டாலும் நொடிப் பொழுதில் அவனை அதிலிருந்து நான் மீட்பேன், இந்த பாராயண ஸப்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் ஒழிந்து போகும் என்று கூறியிருக்கிறாள். பாராயணத்திற்கு முன்பு ஜபிக்கப்படும் அர்கலா ஸ்தோத்ரம் தனியாக பாராயணம் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் உள்ள ஜயந்தி மங்கலா காளி எனும் ஸ்லோகம் சத்ருக்களை நடுங்க செய்யும்.

இனி வருவதை நாளை அடுத்த பதிவில் தொடரலாம்.

யா தேவீ ஸர்வபோதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

Wednesday, September 16, 2009

மானஸ பூஜை - சதுஷ்சஷ்டி உபசார பூஜை

உடலையே ஆலயமாக எண்ணி ஹிருதய கமலத்தில் இறைவன்/இறைவியை பூஜித்தலே மானஸ பூஜை என்பர். நெஞ்சத் தாமரையில் திருவுருவை ஸ்தாபித்து 'தான்' அழிய நிற்பது ஆதார யோகம், இதை ஞானமார்க்கத்தின் படிக்கட்டு என்கிறார்கள் பெரியவர்கள். நிர்குண பிரம்ம உபாஸனையே மானஸீக பூஜை, ஆனால் சகுண உபாஸனை பழகியவர்களுக்கே நிர்குண உபாஸனை கைகூடும் என்றும் ஆன்றோர் கூறுகிறார்கள். எந்த பூஜையாகிலும் பல கிரியைகள் செய்யப்படுகின்றன. இக்கிரியைகள் ஆன்மாவின் ஸ்தூல, ஸுக்ஷ்ம உடலையும், அதன் மூலமாக ஆன்மாவையும் பண்படுத்தவே. இவ்வாறு பண்பான ஆன்மாவே ஞான வழிக்கு ஏற்றது என்பர். இதையே, உமாபதி சிவாச்சாரியார் "கிரியை எனமருவு மவையாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்" என்கிறார். ஞானத்திற்கு நிமித்தம் கிரியைகள். பூசலார் கட்டிய மானஸீக கோவில் நாம் அறிந்ததே. இந்த மானஸ பூஜையை திருநாவுக்கரசர் சொல்கையில் பின்வருமாறு கூறுகிறார்.

காயமே கோவிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனம் மணிலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனாருக்கும் போற்றி அவிக் காட்டினோமே.


ஞான குருவான ஆதிசங்கரர் சகுண உபாசனைக்கு எத்தனை எத்தனையோ ஸ்லோகங்கள், பூஜா கிரமங்கள், சக்ரப் பிரதிஷ்ட்டைகள் செய்து கொடுத்திருப்பது நாம் அறிந்ததே, அவரே நிர்குண ப்ரஹ்மமாக இறைவனை பூஜிக்கவும் நமக்கு பல வழிகளைக்காட்டியிருக்கிறார். அவற்றில் சிவ மானஸ பூஜா, தேவி மானஸ பூஜா, விஷ்ணு மானஸ பூஜா போன்றவை அடக்கம். சிவ மானஸ பூஜா ஸ்லோகங்களுக்குப் பொருள் இங்கே!.

அம்பிகைக்கு ஸஹஸ்ர நாமத்தில் 'ரஹோயாகக் க்ரமாராத்யா, ரஹஸ்தர்ப்பண தர்ப்பிதா' என்று இரண்டு நாமங்கள் உண்டு. இந்த நாமங்கள் இரண்டும் மானஸீக பூஜையைக் குறிப்பனவே. உள்ளுக்குள்ளே இடைவிடாமலும், விறகில்லாமலே வளர்ச்சியுடன் எரிந்து கொண்டிருப்பதும், மோகத்திற்கு சத்ருவாகவும், அற்புதமான ஜ்வலிப்புடன் ஞானாக்னியில் பிருத்வி முதல் சிவன் வரையில் இருக்கும் விச்வத்தை யாகமாக அளிப்பதன் மூலமாக அன்னையை மகிழ்விப்பதை ரஹோயாகக் க்ரமாராத்யா என்பர். ரஹஸ்யமாக செய்யப்படும் தர்பணத்தால் சந்தோஷிப்பவள் என்பது இரண்டாம் நாமத்தின் பொருள். மந்த்ர-தந்த்ர சாஸ்த்திரங்களில் ஒரு நிலைவரை வந்தபின் புரசரணம் என்பதாக தர்ப்பணம், ஹோமம் முதலியவை செய்வது வழக்கம். அவ்வாறான தர்ப்பணத்தால் சந்தோஷிப்பவள் அன்னை என்பதே 'ரஹஸ்யதர்ப்பண தர்ப்பிதா' என்பதன் பொருள். இந்த ரஹஸ்ய தர்ப்பணம் என்பதை ஏதோ மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்வது என்று பொருள் கொள்ளக் கூடாது. நாம் செய்யும் செயல் எல்லாம் இறைவனை/இறைவிக்கான செயல்களே என்று நினத்து முழுவதுமாக நமது கர்மாக்கள் எல்லாம் பரப்பிரம்ம உபாஸனை என்ற நிலை எய்துதலையே இந்த நாமா குறிப்பிடுகிறது. இதே பொருளில் வருவதுதான்,

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

என்னும் ஆனந்த லஹரி (செளந்தர்ய லஹரி - 27) ஸ்லோகம். இதில், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும் என்கிறார். இந்த நிலை அவ்வளவு எளிதல்ல. தவறான செயல்கள் எல்லாம் செய்துவிட்டு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதல்ல இங்கு சொல்லப்படுவது. இறையுணர்வில் எப்போதும் இருக்கும் ஒருவரது செயல்கள் எல்லாம் இறைவனை மானஸிக வழிபாடாகவே ஆகும் என்பதுதான் இதன் பொருள் என்றே தோன்றுகிறது.

பகவத்பாதர் மானஸீகமாக அன்னையை இன்னும் ஒரு விதத்தில் போற்றி வணங்கியிருக்கிறார், அதன் பெயர் சதுஷ்-சஷ்டி உபசார பூஜை என்பது. இன்னும் 2 பதிவுகளில் செளந்தர்யலஹரி வலைப்பூ முடிவுக்கு வருகிறது. ஆகவே, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாதாவை வணங்கும் விதமாக ஆசார்யார் அருளிய சதுஷ்-சஷ்டி உபசாரங்களை அங்கு சொல்லிட இருக்கிறேன். சதுஷ்-சஷ்டி என்றால் 64. அறுபத்து நான்கு உபசாரங்களை மனதால் அன்னைக்கு அளித்து அவளது அருளை வேண்டிடுதலே இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜை. செளந்தர்ய-லஹரிக்கு வீரை-கவிராஜரது மொழி பெயர்ப்பினை அளித்ததுபோல இந்த 64 உபசாரங்களையும் அருந்தமிழில் அழகாக வடித்து அளித்திருக்கிறார் நமது கவிஞர் + பதிவரான சகோதரி கவிநயா அவர்கள். செளந்தர்ய லஹரியில் இட என்று கேட்டதும் தயங்காமல் உடனடியாக செய்து தந்த அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் நவராத்ரி தினங்களில் தினமும் இங்கே வந்து 64 விதமான உபசாரங்களைச் செய்து அன்னையை வணங்கிட வேண்டுகிறேன்.

Friday, September 4, 2009

மஹாளய பக்ஷம் - முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்தல்


பக்ஷம் என்றால் 15 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 15 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம். இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள். புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.

அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள்,சகோதரர்கள்-அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.

மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம். பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 15 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம். இந்த 15 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர். நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.

ஹரி: