Friday, October 26, 2007

ஸ்ரீ மாதாலலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம் ஆரம்பிப்பதே "சிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்" என்று ஆரம்பிக்கிறது. அதாவது அன்னையை சிந்துர வர்ணத்தினள் என்று குறிப்பிடுகிறது. சிந்துர விக்ரஹாம் என்று இல்லாது சிந்தூராருண அதாவது சிந்தூர அருண விக்ரஹாம். அதாவது "உதிக்கின்ற செங்கதிர்" என்பதைத்தான் சிந்தூராருண விக்ரஹாம் என்று குறிப்பிடுகிறார்கள் இங்கே.

அன்னையைப் பலவிதங்களில் நமக்கு தெரியும், இவற்றையெல்லலம் மூர்த்தங்கள் என்போம். காமாக்ஷி, மீனாக்ஷி, தாக்ஷாயினி, அன்னபூர்ணேஸ்வரி என்பதாக பல மூர்த்தங்கள்/ரூபங்கள். இந்த ரூபங்கள் எல்லாமே பராசக்தி என்றாலும் இந்த மூர்த்தங்களுக்கென்று ஆயுதங்கள், நிறம் எல்லாம் தனியாக இருக்கிறது. மீனாக்ஷி என்றால் அவள் மரகத நிறத்தவள் என்றும் அன்ன பூரணி ஸ்வர்ண நிறத்தவள் என்றும், காமாக்ஷி சிவந்த நிறமென்றும் கூறப்படுகிறது.

அன்னை, தக்ஷனின் மகளாக தாக்ஷாயினி என்று சொல்லப்படும் போது அவள் உமாதேவி என்ற விதத்தில் கரிய நிறத்தவளாக அறியப்படுகிறாள். லலிதா, காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி போன்ற ரூபங்கள் சிவந்த ரூபமாக அறியப்படுகிறது. இதற்கான காரணத்தை பகவத்பாதர் "ஜகத் த்ராதும் கருணா: கசித் அருணா:" என்கிறார். அதாவது உலகைக் காக்க வந்தவள், அந்த செயலைச் செய்ய கருணையுடன் அருண ஸ்வருபமாக தன்னை காணச் செய்தாள் என்கிறார்.

கலர் ஆப் ஜெனிஸிஸ் என்பதன்படி பார்த்தோமானாலும் பல இடங்களில் தோற்றம் என்பதன் நிறமாக கொள்வது சிவப்பு நிறத்தைத்தான். சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவப்பாக இருப்பான். அந்த நேரத்தில் அந்த கிரணங்கள் பட்டு பூமியும் ஒருவிதமான இளஞ்சிவப்பினை தரும். இதையே பாலா திருபுர சுந்தரியின் தியான ஸ்லோகத்தில் "அருண கிரண ஜாலை:" என்பதாகச் சொல்கிறார்கள். அதாவது அருணனின் கிரணங்கள் போன்ற நிறத்தவள் என்பதாக. மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா, இருக்கும் அந்த கமலத்தின் நிறமும் இளஞ்சிவப்பே. (வெள்ளைத்தாமரை சரஸ்வதிக்காக, ஞானத்தின் நிறமாக)பிரம்மனின் வேலை படைப்புத்தொழில் என நாமறிவோம்.

ஆக, படைப்பு என்ற தொழிலுக்கான நிறம் சிவப்பு, அதிலும் இளஞ்சிவப்பு என்பதாகக் கொண்ட காரணத்தால்தான் இவ்வாறாக சிந்தூராருண விக்ரஹாம் என்று கூறினார்கள். எனவேதான் அன்னை சிருஷ்டிக்கான வடிவில் வரும் சமயத்தில் கருமை நிறத்தில் வராமல் (கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்) பூலோகத்தில் ஒவ்வொரு ஜிவனுக்கும் தாய் என்பவள் போல உலகிற்கெலாம் தாயாக இருந்து படைத்துக் காப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துக் காக்க வருகிறாள். இவ்வாறாக சர்வ உலகங்களுக்கும் தாயாக இருப்பதை குறிப்பதாகவே சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமாக 'ஸ்ரீ மாதா' என்று ஆரம்பிக்கிறது.

இவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து இந்த சஹஸ்ர நாமத்தை எழுதியவர் யார் என தெரியுமா?....வசினி எனப்படும் வாக் தேவதைகள் தான் அன்னை லலிதாவின் ஆணைப்படி சஹஸ்ரநாமத்தை எழுதியவர்கள். இந்த வசினி தேவதைகள் அன்னையுடன் நித்ய வாசம் செய்பவர்கள். இதனை அகத்தியர் மூலமாக நமக்கு அளித்தவர் ஹயக்ரீவர்.

10 comments:

கீதா சாம்பசிவம் said...

அருமையான விளக்கம். படைப்பைக் குறிக்க அன்னை சிவந்த நிறத்திலும் ஐயன் வெண்மை நிறத்திலும் தோன்றுவான். அதுதான் நம் கோவில்களிலும், வீடுகளிலும் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பதும், கோலங்களுக்குச் செம்மண்ணால் பார்டர் கட்டுவதின் தாத்பரியமும் கூட. அது தவிர, விஞ்ஞான முறையில் பார்த்தாலும் இதுவே சரியா இருக்கும்.

கீதா சாம்பசிவம் said...

உங்க பதிவை என்னோட லிஸ்டிலே போட்டாலும் அங்கே இருந்து வர முடியலை. வேறு வழியாத் தான் வர வேண்டி இருக்கு! :(

நாகை சிவா said...

நல்ல தகவல்கள்....

:)

ஜீவா (Jeeva Venkataraman) said...

இளஞ்சிவப்பு நிறம்தான் ஆக்கத்தின் நிறமா!

//கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்//
ஆகா, பல விஷயங்கள் இப்போ சொல்லாமலே புரியுது!
:-)

மதுரையம்பதி said...

//ஆகா, பல விஷயங்கள் இப்போ சொல்லாமலே புரியுது!//

ஜீவா, புரிந்தது நலம்....இதே அன்னை கருமை நிறத்தில் காளியாகவும் இருக்கிறாள்.

மதுரையம்பதி said...

சிவா,

தங்களது முதல் விசிட்டுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

கீதாமேடம்,

மிக அழகாக நடைமுறையில் இருக்கும் பழக்கங்களை காண்பித்திருக்கிறீர்கள்...நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமுடையாள் என்று அபிராமி பட்டர் சொன்னதும் இதனால்தானோ.

குமரன் (Kumaran) said...

சிந்தூராருண விக்ரஹாம் என்பதற்கு மிக அருமையாக விளக்கம் சொல்லிவிட்டு அதனுடன் லலிதையின் முதல் திருநாமத்தை இணைத்தது அற்புதம் மௌலி.

கவிநயா said...

அருமையாய் இருக்கு படிக்க. என்ன்னோட அம்மா படம்! :) நன்றி.