Sunday, May 30, 2010

மஹா பெரியவரும், எனது மாதாமஹரும்....

நேற்று மஹா பெரியவரது ஜெயந்தி, வைகாசி அனுஷம். நேற்று எழுத ஆரம்பித்தாலும், முடிக்க நேரமில்லை, ஆகவே இன்று இடுகிறேன்.

காசியாத்திரை கிளம்பி, ராமேஸ்வரம் செல்லும் வழியில் காரைக்குடி வழியாக வந்த பரமாசார்யார், காரைக்குடி, சாக்கோட்டை, இளையாற்றங்குடி போன்ற இடங்களில் தங்குகிறார். அவ்வாறான நேரத்தில் நகரத்தார் பகுதியில் பரமாசார்யார் பயணம் செய்யும் காலத்தில், ஸ்ரீமடத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய, ராமஸ்வாமி ஐயர் என்னும் பெரியவரைப் பணிக்கின்றனர் நகரத்தார்.

அப்போது முதல் பரமாசார்யாரின் அத்யந்த சிஷ்யராக விளங்கி, பரமாசார்யார் பெயர் சொல்லி விளிக்கும் பாரிஷதர்களில் ஒருவரானார் பெரியவர் ராமஸ்வாமி. ஆசார்ய ஸ்வாமிகள் நகரத்தார் எல்லையைத் தாண்டிய பின்னரும் அவருடன் ராமேஸ்வரம் வரையில் சென்று பின்னர் காரைக்குடிக்கு வருகிறார் பெரியவர் ராமஸ்வாமி.

இதன் பின்னர், ஒரு சில முறை பரமாசார்யாரை சோழ தேசத்தில் தரிசித்தாலும், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு பெரியவர் ராமஸ்வாமிக்கு மீண்டும் ஜகத்குருவின் தரிசனமும், அருளும் மீண்டும் கிடைக்கும்படியான ஒரு வாய்ப்பை அருளுகிறாள் கொப்புடையாள்.

மனைவி திடமாக இருக்கும் போதே மூத்த பெண்ணை நல்ல வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. வேலையின் காரணமாக மூத்தவன் சென்னையிலும், இளைய மகன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். தனது ஜேஷ்ட புத்திரனுக்கும் மணமாயிற்று. ருதுவாகும் முன்னர் திருமணம் செய்து வைக்கும் காலம் அது. தனது 5ம் வயதிலேயே தாயை இழந்த கடைசிப் பெண்ணை எப்படி நல்ல வரன் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பதென்று கவலையில் காரைக்குடியில் கொப்புடைநாயகியின் கோவில் பேஷ்காராக இருக்கிறார் பெரியவர் ராமஸ்வாமி.

கவலைகள் நீங்க இறைவனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுதல் ஒன்றே வழி என்பது இயல்பாக இருந்த காலமது. பெரியவரும் தனது கடைக்குட்டிப் பெண்ணின் திருமணம் நல்லபடி நடக்க வேண்டுமே என்ற கவலையை கொப்புடையாளின் பாதத்தில் சமர்பித்து, அனுதினமும் வேத விதிப்படி அனுஷ்ட்டானங்களைச் செய்து, பராசக்தியை வழிபட்டு வருகிறார்.


நமது ஸ்ரீ சரணருக்கு பீடாரோகணப் பொன்விழா நடத்த பக்தர்கள் முடிவு செய்து நாளும் குறித்திருக்கும் செய்தி தெரியவருகிறது. குல குருவான காமகோடி பெரியவரின் பீடாரோகணப் பொன்விழா தரிசனத்திற்காக காரைக்குடியில் இருந்து கலவையை (அப்போது ஸ்ரீசரணர் காம்ப் கலவையில்) நோக்கிச் செல்கிறார் பெரியவர் ராமஸ்வாமி. செல்லும் வழியிலேயே பெரியவர் தனக்கு கனாகாபிஷேகத்தை மறுத்து ஸ்ரீசங்கர பகவத்பாதருக்குக் கனகாபிஷேகத்தைச் செய்யச் சொன்னதும், ஸ்ரீ சரணர் கலவையை விட்டுக் கிளம்பி காஞ்சிபுரத்தை அடுத்திருக்கும் ஊர்களில் இருப்பதாகவும் தெரியவருகிறது. பெரியவரும் தனது பயணத்தை திசை திருப்பி காஞ்சியை அடைகிறார்.

காஞ்சியில் ஆசார்ய ஸ்வாமிகளின் தரிசனம் ஆயிற்று. ஸ்ரீமடத்திலேயே நான்கு நாட்கள் தங்கியிருக்க உத்தரவாகிறது. நான்காம் நாள் காரைக்குடி திரும்ப முடிவு செய்து ஆசார்யரது உத்தரவு பெறச் செல்கிறார் பெரியவர். ஸ்ரீ சரணரும், பெரியவரது மனத்தில் இருந்த கவலையை உணர்ந்தவராக," சீக்ரமாகவே பெண்ணின் திருமணம் நடைபெறும், தேடி வந்து பெண் கேட்பார்கள், நல்ல வரனாக அமையும்" என்று ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

காஞ்சியிலிருந்து வந்தவுடனேயே பெண் கேட்டு வந்தவர்கள், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அன்று முதல் மீண்டும் விசனத்தில் மூழ்கியவாறு ஒரு வருஷம் கழிகிறது. முன்பு பெண்ணை வேண்டாம் என்று சொன்னவர்களே தங்களது முடிவினை மாற்றிக் கொண்டு மீண்டும் பெண் கேட்டு அனுப்ப, உடனடியாகத் திருமணம் நிச்சயமாகிறது. நடமாடும் தெய்வமான ஸ்ரீ சரணரின் ஆசிகள் மெய்யான சந்தோஷத்தில், பெரியவர் தனது பெண்ணின் திருமணம் முடிந்தவுடன் சென்னைக்கு தம்பதியை அழைத்துச் சென்று சாதுர்மாஸ்ய பிக்ஷைக்கு ஏற்பாடு செய்து அவர் அருளைப் பெறச் செய்கிறார்.

அன்று முதல் ஸ்ரீசரணர் சென்னையில் இருந்த காலம் முழுவதும் அவருடனே இருந்த பெரியவர், பின்னர் புதுக்கோட்டை வந்து தனது மூத்த மகளது இல்லத்தில் தங்குவதும், சென்னையில் தனது ஜேஷ்ட புத்ரனது இல்லதிலுமாக இருந்து வந்தார்.

பலவருஷங்கள் கழிகிறது, நமது ஆசார்யாள் காஞ்சியில் இருக்கும் போது, அவருக்கு, பெரியவர் காலம் ஆன தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மடத்து சிப்பந்தி ஒருவரைப் புதுக்க்கோட்டை அனுப்பி, பெரியவருடைய பதிமூன்று நாள் காரியங்களையும் வைதீக விதிப்படி நடத்தித் தர உத்தரவிடுகிறா. அதே போல, காஞ்சியில் இருக்கும் கோவில்களில் பதிமூன்றாம் நாள் மோக்ஷதீபம் ஏற்றவும் உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இவ்வாறாக தனது சிஷ்யர்களது மனக்கிலேசத்திற்கு ஒளஷதமாக மட்டுமல்லாது, அவர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அடைய அருள் புரிந்திருக்கிறார் நமது ஸ்ரீ சரணர்.

இங்கு கூறப்பட்ட பெரியவர் ராமஸ்வாமி, எனது தாயின் தந்தை. மஹா பெரியவர் அருளாசி வழங்கியது எனது தாயின் திருமணத்திற்கு. பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறி பின்னர் அதே பெண்ணை ஒரு வருஷம் கழித்து திருமணம் செய்தவர் எனது தந்தை என்பதைக் கூறவும் வேண்டுமா? :-)

இந்த நிகழ்ச்சி எனது தாய், தந்தை மற்றும், பெரியம்மா, ஆகியோரால் எனக்குச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு.

Wednesday, May 19, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 3 : சங்கரரும் சாரதையும்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

தெய்வங்கள் மற்றும் மஹான்களின் ஜனன தினத்திற்கு முன்னர், பின்னர் என்று ஏதேனும் ஒரு பத்து நாட்களோ, அல்லது 4 நாட்களோ பெரும் விழாவாகக் கொண்டாடுவது மரபு. இதில் ஜனன-தினத்திற்கு முந்தைய விழாவை கர்போத்ஸவம் என்றும், ஜனனத்திற்குப் பின்வரும் விழா நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்கள்.

இதைப் போலவே நாமும் சங்கர பகவத் பாதரின் கர்போத்ஸவதையும் ஜனனத்தையும் கொண்டாடிவிட்டோம். அவரது ஜனன தினத்தின் அடுத்த நாளான இன்று இந்தப் பதிவின் மூலமாக அவரது ஜ்னன உத்ஸவத்தையும் கொண்டாடி அவரது அருளை வேண்டிடுவோம்.

மஹான்களது ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது அவர்கள் சொல்லிய வழியைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவே!. இன்று நாம் சங்கர பகவத் பாதர் செய்த சாரதா புஜங்கத்தைப் பொருளுடன் பார்த்து, அந்த சாரதையின் அருளுக்குப் பாத்திரமாகி, ஞான வைராக்யத்தை வேண்டுவோம்.
ஸுவக்க்ஷோஜகும்பாம் ஸதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுபுண்யவலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதா நோஷ்ட பிம்பாம்
பஜே சரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

தனது ஸ்தனங்களில் அருளைக் கொண்டவள், அமுத கலசத்தைக் கையில் ஏந்தியவள், கருணையுடன் காத்திடும் அம்பிகை. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே அறியமுடிந்தவள், நிலவைப் போன்று ஒளிர்பவள், காருண்யம் தோய்ந்த புன்முறுவலுடைய எனதன்னை சாரதாம்பாளை இடைவிடாது துதிக்கிறேன்.

கடோக்ஷேதயார்த்ராம் கரே ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை: ஸுபத்ராம்
புரஸ்த்ரிம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

கடைக்கண் பார்வையாலேயே கருணையை அருள்பவள். கரத்தில் ஞான முத்ரையைக் காட்டுபவள். கலைகளின் இருப்பிடம் அவளே!. ஸ்வர்ணமயமான ஆபரணங்களுடன், விழி மூடாது உலகை ரக்ஷிப்பவள். துங்கா நதிக்கரையில் வாசம் செய்யும் எனதன்னை சாரதாம்பாளை வணங்குகிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வ்பக்த்தைக பாலாம் யச: ஸ்ரீகபோலாம்
கரே த்வக்ஷமாலாம் கனத் ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஒளிரும் நெற்றிச் சுட்டியை உடையவள், சங்கீத சேவையால் கவரப்படுபவள். தனது பக்தர்களைக் காப்பதில் கீர்த்தி பெற்றவள். புனிதமான கன்னங்களூடன் கையில் அக்ஷமாலையைக் கொண்டவள். கண்ணைக் கவரும் அணிமணிகளுடன் ஒளிர்பவள். அந்த அன்னை சாரதையை இடைவிடாது வணங்குகிறேன்.

ஸுஸீமந்தவேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத் வஜ்ரபாணிம்
ஸுதா மந்த்ரஸ்யாம் முதாசிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முன்வகிட்டுடன் கூடிய பின்னலில் குஞ்சலங்களை உடையவள். மருண்ட மான் போன்ற விழியினை உடையவள். கிளியுடன் பேசி மகிழ்பவள், இந்திராதியரால் வணங்கப்படுபவள். புன்னகையுடன் கூடிய வசீகர முகலாவண்யம் உடையவள். அலையலையாப் புரளும் கூந்தலுடையவள்.அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தேக சாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனஸ்தாம சிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தாபனஸ: ஸர்கபூர்வஸ்திதாம் தாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

காருண்யம் மிக்க பேரழகி, கொடி போன்ற மேனியளாக ஜொலிப்பவள். நிர்மலமான குணமுடைய நித்யகல்யாணி. தவமுனிவர்களும் தொழும் பிரபஞ்சத்தின் முதலானவள். அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேதி ரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

மகா-நவமி காலங்களில் மான், அன்னம், சிங்கம், யானை, குதிரை, காளை, கழுகு ஆகிய வாகனங்களில் அழகாக வந்து பக்தர்களுக்கு அருள்பவளும், எப்போதும் அமரிக்கையானவளுமான எனது அன்னை சாரதையை வணங்குகிறேன்.

ஜ்வலத் காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானஸாம்போஜ ஸுப்ராந்த ப்ருங்கீம்
நிஜ ஸ்தோத்ர ஸங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஜ்வலிக்கும் அனல் போன்ற ஜோதி ரூபமானவள். அனைத்து உலகையும் தன்வசப்படுத்தியவள். அடியவர்களின் இதயத்தாமரையில் வண்டாக ரீங்கரிப்பவள். இயற்கையான நாதம், நடனம், ஸ்தோத்திரம் போன்றவற்றின் உள்ளொளியானவள். அவ்வாறான எனது சாரதாம்பாளை வணங்குகிறேன்.

பவாம் போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமாணாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சிஹ்நாம்
சலச்சஞ்சலாசாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முக்கண்ணன், மாதவன் போன்றோரால் வணங்கப்படும் பெருமையுடையவள். ஒளிவீசும் புன்-முறுவலுடையவள், அவளது காது குண்டலங்கள் அசைந்து-அசைந்தாடுவது அழகுக்கு அழகு சேர்க்கும். இப்படியான என் அன்னை சாரதையை எப்போதும் முழுமனதுடன் வணங்குகிறேன்.

ஸ்ரீ சங்கரரும், ஸ்ரீ சாரதாம்பிகையும் எல்லோருக்கும் அவரவர் மனோபீஷ்டங்களை நிறைவேற்றி அருளட்டும்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Tuesday, May 18, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 2 : சங்கரருக்கு பராசக்தி தரிசனம்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

இன்று சங்கர ஜெயந்தி, அவரது பிறந்த தினமான வைசாக சுத்த பஞ்சமி. இந்த நன்னாளில், அவருக்கு முதன்முதலில் கிட்டிய இறை-தரிசனத்தைப் பார்ப்போமா?.

சிறப்புப் பதிவு-1 இங்கே!ஒருநாள் சிவகுரு அவர்களால் பூஜை செய்ய இயலாத நிலை, ஆகையால் தாய் ஆர்யாம்பாள் குழந்தை சங்கரரரிடம் பாலைக் கொடுத்து அனுப்பி அம்பிகைக்கு நிவேதனம் செய்யச் சொல்லுகிறார். சங்கரரும் கோவிலை அடைந்து அம்பிகையின்முன் பாலை வைத்துவிட்டு அம்பிகையை நோக்கி 'என் தந்தைக்கு பதிலாக நான் வந்திருக்கிறேன், எப்போதும் போல இன்றும் நீ பாலை கொஞ்சம் அருந்தி, மீதத்தை எனக்குத் தா" என்று பிரார்த்தனை செய்கிறார். குழந்தை சங்கரரின் பரிசுத்தமான பிரார்த்தனைக் கேட்ட அம்பிகை, அவர் கொண்டுவந்த பாலை எடுத்து அருந்துகிறாள். அப்போது தன் முன்னால் இருக்கும் குழந்தையின் சிறப்பினை நினைத்தவாறு முழுவதையும் அருந்திவிடுகிறாள்.

தனக்கு மீதம் ஏதும் வைக்காது பால் முழுவதையும் அருந்தியதைக் கண்ட பாலகர் வருத்தமுற்று அழ ஆரம்பித்துவிடுகிறார். அப்போதுதான் அம்பிகைக்கு தனது செயல் புரியவருகிறது. கருணா ரூபமான அவள் தனது செல்லக் குழந்தை, ஈச்வரனதுஅம்சமான அக்குழந்தையின் அழுகையை சகியாது, குழந்தை சங்கரரை தனது மடியிலிருத்தி, தனது ஸ்தனத்திலிருந்து பாலைத் தருகிறாள். பின்னர் குழந்தையை கொஞ்சி, இல்லத்திற்கு அனுப்புகிறாள். இல்லம் திரும்பிய பாலகர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார் என்பது மாதவீய சங்கர விஜயத்தில் கூறப்பட்டிருப்பது.

இந்த நிகழ்வினை செளந்தர்யலஹரியிலும் சொல்லியிருக்கிறார் ஆசார்யார்.
அந்தப் பாடல்,

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா (75)

[அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!. ]

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள், தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. சரி, இது சம்பந்தரைக் குறிப்பது என்று எடுத்துக் கொள்வதானால் இருவருக்கும் உண்டான காலம் வேறுபடுவது மிகத் தெளிவு. செளந்தர்ய லஹரியை அளித்தது அவர் ஹிமாசலம் சென்று ஈச்வர தரிசனம் பெற்ற பிறகே, அதற்கு முன்னரே அவர் பல ஸ்லோகங்கள், பாஷ்யம் போன்றவற்றைச் செய்துவிடுகிறார். அவ்வாறு பல நூல்களையும் படைத்ததால் உலகம் அவரைக் கொண்டாட, அந்தக் கொண்டாட்டத்தை, உலகம் புகழ்ந்ததன் காரணத்தை இந்த ஸ்லோகத்தில், அன்னையின் ஸ்தனங்களது விசேஷத்தைப் பற்றிச் சொல்லுகையில் சொல்வதாகச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.இரண்டாவதாக சங்கரரருக்குக் கிடத்ததும் அம்பிகையின் தரிசனமே!, இது எல்லா சங்கர விஜயங்களில் மற்றும் பெரியோர்களால் ஏற்கப்பட்ட ஒன்று. பிரம்ஹச்சார்யத்தின் பகுதியாக பிக்ஷை எடுக்கையில் ஏழைக் குடும்பத்தின் வறுமையை நீக்கப் பாடிய போது,மஹா-லக்ஷ்மி அவருக்கு மட்டும் தெரியுமாறு தோன்றி அந்த வறியவர் குடும்பத்திற்கு அருளினாள். இந்த சந்தர்ப்பத்தில் பாடியதே "கனகதாரா ஸ்தோத்ரம்". முதலில் பகவதி தரிசனம், பின்னர் லக்ஷ்மியும் தரிசனம். அடுத்து சரஸ்வதி தரிசனம் தந்ததும் நமக்குத் தெரிந்தது தான்.

மண்டனமிச்ரருடன் வாதம் செய்கையில் அவருடைய பத்னியாக வந்தது சரஸ்வதி. மண்டன மிச்ரருடன் (பிரம்ஹாவின் அவதாரம்) வாதத்தில் வென்ற பின்னர் கற்பில் சிறந்த அவருடைய மனையாள் உபய பாரதி, தனது பதியின் தோல்வியைச் சகியாது, சங்கரருடன் வாதம் செய்ய ஆரம்பித்து, அவளும் தோல்வியடைவதும், அவ்வாறு தோல்வியடைந்த பின்னர் மண்டன மிச்ரர் வாதத்தின் ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சன்யாஸம் ஏற்கிறார். அப்போது உபய-பாரதி,அந்தர்யாமியாகிறார். ஜகதகுரு தனது யோக சக்தியின் மூலமாக வந்தது யார் என்று அறிவதாகச் சொல்கிறது சங்கர விஜயம்.

ஆக சங்கரருக்கு முதலில் அனுக்ரஹம் செய்தது பராசக்தியே என்று தெரிகிறது. பிற்காலத்திலேயே மற்ற ரூபங்களின் தரிசனம் கிட்டியிருக்கிறது.
இந்த நான்னாளில் பரம பூஜ்யரான சங்கர பகவத்பாதர் பதம் பணிவோம்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Monday, May 17, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு -1 : ஆதிசங்கர பகவத்பாதர் வைஷ்ணவரா?, சைவரா?,சாக்தரா?...

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர


நாளை சங்கர ஜெயந்தி. இதையொட்டி இன்று, நாளை, நாளைய மறுநாள் என மூன்று இடுகைகள் இட இருக்கிறேன். முதல் இடுகை கீழே!

சங்கரர் என்னும் பதத்தை சம்பு: + கரர் என்று பிரித்துச் சொல்லுவார்கள். சம்பு என்பது ஈசனைக் குறிப்பது, "சம்பு:" என்றால் மங்களம் என்றே பொருள, "கரர்" என்றால் கார்யம் செய்பவர். ஆக, சங்கரர் என்றால் மங்களத்தைச் செய்பவர். சர்வ லோகங்களுக்கும் மங்களத்தை அருளுபவன் சங்கரன். நமக்கெல்லாம் ஆசார்யராக, பரம பூஜ்யராக இருந்து வேத வேதாங்கங்களையும், பக்தியையும் புனரோத்தாரணம் செய்த பகவத் பாதருக்கு சங்கரர் என்ற பெயர் மிகச் சரிதான். ஏன் ஆதி சங்கரர் என்று சொல்கிறோம்?, அவர் காட்டிய வழியில் வந்து கொண்டிருக்கும் பல ஆசார்யர்களுக்கும் 'சங்கர' என்ற பதமே பெயரில் இருப்பதால், இந்த பரம்பரையின் முதலாவதானவர் என்று குறிக்க ஆதி சங்கரர் என்று குறிப்பிடுவதாகிறது. பகவத்பாத சங்கரரை ஈசனின் திரு அவதாரமாகவே சொல்கிறோம். அதை நமக்கு அவ்வப்போது நினைவுபடுத்தி, அதன் மூலமாக குருவும், தெய்வமும் ஒன்றே என்பதாகவும் கொள்ளலாம்.


ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லுகையில், "அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:" என்பது வழக்கம். அதாவது, உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு என்பது பொருள். ஈஸ்வரனுடைய க்ரியா சக்தியே அம்பிகைதான். இங்கே ஈச்வரனே அவதாரம் செய்திருக்கிறார் என்றாலும், அவதாரக் கோலமோ, சன்யாச கோலம். ஆகவே இந்த அவதாரத்தில் வெளியில் செய்யும் கார்யங்களை அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை முன்னிருத்தி நாராயணபரமாக எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறார். இதனால்தான் இன்றும், ஸ்ரீமடங்களின் பீடாதிபதிகள் எல்லாம் அனுக்ரஹ பாஷணத்தின் போது நாராயண ஸ்ம்ருதி செய்வதே வழக்கம். இவ்வாறு புறத்தே நாராயணனைச் சொல்லிய அவதாரமாக இருந்தாலும், தனது அவதாரத்தில் அவர் காட்டிய கருணை, அம்பிகையின் கருணைக்கு ஈடானது. மனதுள் அம்பிகையைக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கருணை, ஆகவே தமது உள்மனத்தில் அம்பிகையைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம். பாரத தேசம் முழுவதும் யாத்ரை செய்து பல சாக்தக் கோவில்களிலும் உக்ரமான தெய்வங்களை சாந்த ஸ்வரூபமாக்கி, மக்களை ஆகர்ஷித்து அருளும் தெய்வங்களாகச் செய்தும், பாதாதி கேச, கேசாதி பாத ஸ்தோத்ரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் என இவர் ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமில்லை. எழுபத்தியிரண்டு மதங்களால், இறை நம்பிக்கையில் பல்வேறு த்வேஷங்களுடன் இந்து மதம் சிதறுண்டு இருந்த நேரத்தில், ஷண்மத ஸ்தாபனம் பண்ணி பக்தர்களையும், இறைவனையும் இணைத்தவர் நமது பகவத்பாதர்.சரி, ஞான குருவான தக்ஷிணா மூர்த்தியே மனித ரூபத்தில் சங்கரராக அவதாரம் செய்துவிட்டார். சரி, மனித ரூபம் என்று எடுத்துக் கொண்ட பிறகு வாழ்ந்து காட்டுவது தானே முறை. ஆகவே நற்காரியங்களை பெரியவர்கள் செய்து காட்டினால்தானே சிறியவர்கள் செய்வார்க்ள் என்பதை புரிய வைக்க குருவின் மூலம் ஞானம் பெறுவதுதே முறை என்று தனக்காகவே நர்மதா நதி தீரத்தில் காத்திருக்கும் கோவிந்த பகவத் பாதரை அணுகுகிறார் நமது ஆதி-பரமாசார்யார். கோவிந்த பகவத் பாதர் யார் என்று பார்த்தால் அவரே பதஞ்சலி. பூர்வீகத்தில் சிதம்பரத்தில், திரைக்குப் பின்னால் வியாக்ரண பாடம் நடத்தி, அந்த நிகழ்வில் குரு வாக்யம் மீறப்பட்டதால், அங்கு பாடம் நடத்திய குருவான பதஞ்சலியே வேறு பிறவியெடுத்து சந்திர சர்மாவாக வந்தவர். பதஞ்சலி யார்?, என்றால் அவர் ஆதிசேஷனின் அவதாரம். ஆக, இந்த சனாதனத்தையும், அத்வைதத்தையும் நமது ஆசார்யாளிடம் அளிக்க பல ரூபங்களில் ஆதிசேஷனே வந்திருக்கிறான்.

கோவிந்த பகவத் பாதரும், நமது ஆசார்யாளுக்காகவே காத்திருக்கிறார். ஏனப்படிக் காத்திருக்க வேண்டும்?, வேறு சிஷ்யர்கள் யாருக்காவது உபதேசத்தைப் பண்ணியிருக்கலாமே?. பத்ரிகாச்ரமத்தில் வியாசரின் தரிசனம் கிட்டிய போது, வியாசர் கூறியபடி நமது ஆசார்யாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார். சரி, கோவிந்த பகவத் பாதரை சந்தித்தாயிற்று, ஆனால் கோவிந்த பகவத் பாதருக்கோ வந்திருப்பவர்தான் வியாச பகவான் கூறிய சங்கரர் தானா? என்ற கேள்வி எழுகிறது. யார் நீ? என்று தனது குகையிலிருந்து வெளியில் வராமலே கேள்வியெழுப்புகிறார். அப்போது நமது ஆசார்யாள் பத்து ஸ்லோகங்களால் தன்னை தெரிவிக்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களும் "தசச்லோகி" என்று அழைக்கப்படுகிறது.


இறைவன் மனிதப் பிறவி என்று எடுத்தாலும் சில நேரங்களில் தனது ஸ்வய ரூபத்தை பூடகமாக வெளிக்காண்பிப்பது உண்டு. அதைப் போன்றே நமது ஆசார்ய ரூபத்தில் வந்த ஈசவரனும், "தானே சிவம் வந்திருக்கிறேன்" எனும்படியாக முடியுமாறு பத்து ஸ்லோகங்களில் சொல்கிறார். அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் என்று சொல்வது போல, இந்த பத்து ஸ்லோகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும், நானே சிவம் என்று முடிக்கிறார் சங்கரர். இந்த குறிப்பை உணர்ந்த கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரை சிஷ்யராக ஏற்கிறார். இதே முறையில் தான் பிற்காலத்தில் நமது ஆசார்யர், ஹஸ்தாமலகரைப் பார்த்து 'நீ யார்' என்று கேட்ட சமயத்தில், பத்து ஸ்லோகங்களைச் சொல்லி தன்னை பிரம்ம ஞானி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களுமே ஹஸ்தாமலகீயம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சாதாரணமாக குருவின் படைப்புக்களுக்கு சிஷ்யர்கள் வார்த்திகம்/விளக்க நூல் எழுதுவார்கள். ஹஸ்தாமலகீயத்திற்கு ஆதிசங்கரரே வார்த்திகம் செய்ததாகச் சொல்லுகிறார்கள். அந்த 10 ஸ்லோகங்களத்தனையும் அத்வைத தத்துவங்களால் நிரம்பப் பெற்றது என்பதால் அதற்கு விளக்கம் பரம-தயாளுவான நமது ஆசார்யாரே எழுதினார் என்பது பொருத்தம் தானே?.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

[ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.]ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

Monday, May 10, 2010

மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா


பண்டாஸுரனுடைய ஸைன்யத்தை வதம் செய்வதில் முயற்சியுடைய சக்திகளின் பராக்ரமத்தால் ஸந்தோஷம் அடைந்தவள் என்பதே 'பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா' என்னும் நாமத்தின் பொருள். பண்டாஸுரனுடைய படைகளை வதம் செய்வ முயலும் சக்திகள் யார்?, எல்லாம் அம்பாளின் ரூபங்களான, வாராஹீ, நாரஸிம்ஹி, நகுலி, தூமாவதி, மந்திரிணி, தந்திரிணி போன்ற சக்திகள் தாம், இந்த சக்திகளின் பராக்ரமத்தால் பண்டனுடைய படைகளை சிதறடிக்கச் செய்வதால் மகிழ்கிறாளாம் அன்னை. பண்டன் என்பதே ஜீவாத்மா, அவனுடைய படைகளை (அதாவது பேத பாவத்தை) நாசம் செய்யும் சக்திகளைக் கண்டு சந்தோஷப்படுபவள் என்று பாஸ்கரர் சொல்லுகிறார்.

பண்டாசஸுரனுடைய படைத் ஸேனாபதி/தளபதிகளான தமனகன், சித்ரகுப்தன் போன்றோர் இரவு நேரத்தில் அன்னையின் சக்ரராஜத்தை சூழ்ந்து கபட யுத்தம் செய்ய முயலுகின்றனர். அப்போது திதி நித்யா தேவதைகள் அம்பிகைக்கு முன்னர் தங்களது வீரத்தை வெளிப்படுத்தி அசுர தளபதிகளை வீழ்த்துகின்றனராம். அதைக் கண்ட அம்பிகை மிகுந்த மகிழ்வடைகிறாள், இதைச் சொல்வதே 'நித்யபராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா'. அதாவது நித்யா தேவதைகளது பராக்ரமத்தைப் பார்ப்பதில் மகிழ்பவள். ஜீவாத்மாவிடத்திருக்கு சாஸ்வதமான ஆத்ம சக்தி அதிகரித்து வருவதைக் கண்டு ஸந்தோஷிப்பவள். திதி நித்யா தேவதைகள் சேனாதிபதிகளை வீழ்த்தியது போல மந்த்ரிணி என்றழைக்கப்படும் ச்யாமளா தேவியானவள், விஷங்கன் என்கிற பராக்ரமம் மிகுந்த அசுரனை (இவன் பண்டனுக்கு சஹோதரன்) வதைக்கிறாள். விஷங்கனது வதத்தால் மகிழும் அம்பிகையைச் சொல்வதுதான் "மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா".

மந்த்ரிணியம்பா விஷங்கனை வதைத்தது போலவே வாராஹி விசுக்ரன் என்னும் அரக்கனை வதம் செய்கிறாள். இந்த அசுரனும் பண்டனுக்குச் சகோதரனே. விசுக்ரனது ப்ராணனை போக்கடித்த வாராஹியின் வீரத்தால் மகிழ்ந்தவள் என்பதைக் குறிக்கும் நாமாவே, 'விசுக்ர-ப்ராண-ஹரண வாராஹீ வீர்ய நந்திதா' என்பது.

இந்த விஷங்கன், விசுக்ரன் இருவரும் பண்டனுடைய புஜங்களிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த கடைசி இரண்டு நாமங்களும் லலிதோபாக்யானத்தில் கொஞ்சம் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது விஷங்கனை வாராஹி வதம் செய்ததாகவும், விசுக்ரனை மந்த்ரிணி வென்றதாகவும் சொல்லியிருக்கிறது. ஆனால் வாக்தேவதைகள் சொல்லிய சஹஸ்ரநாமமே ப்ரமாணம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Saturday, May 8, 2010

ஆசிரியர்-மாணவர்-சீக்ஷாவல்லி...

பலவருடங்களுக்கு முன்னர் நான் மதுரையில் படித்து வருகையில் அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் இருந்த ஸ்வாமிகளை பார்க்கும் வாய்ப்பு சில நாட்கள் முன்னர் கிடைத்தது. நான் அவரை கிட்டத்தட்ட 18 வருஷங்கள் கழித்துச் சந்தித்தேன். அவரும், மதுரையிலிருந்து பல இடங்களுக்கு மாறுதலாகி, கடைசியாகத் தற்போது பெங்களூர் வந்திருந்தார். அவரும், அவருக்குத் தெரிந்த 3 ஆன்மிக நண்பர்களும் சந்தித்துக் கொண்டோம், அதன் ஜிஸ்ட் இங்கே. இன்றைக்கு பள்ளிகளில் ஆசிரியர்-மாணாக்கர் தொடர்பு பற்றிப் பேச ஆரம்பித்து, அது சீக்ஷாவல்லியில் முடிந்தது. கீழே இருப்பது நாங்கள் சந்தித்த யதியின் சொற்கள், எழுத்து வடிவம் மட்டுமே என்னால் செய்யப்பட்டது.

******

பணம், புகழ் போன்ற எல்லாம் சந்ததித் தொடர்பின் மூலம் வரலாம் அல்லது தானே முயன்று சம்பாதிக்கலாம், அவையெல்லாம் அழிந்திடக்கூடியது, ஆனால் குரு/ஆசிரியர் மூலமாகப் பெறப்படும் ஞானமே அழிவில்லாதது என்று சொல்லி இருக்கிறார்கள். பகவத்பாதர் தனது ப்ரச்னோத்ர மாலிகாவில் 'எது விஷம்' என்ற கேள்விக்கு பதிலாக, குரு/ஆசிரியர்களுக்குச் செய்யும் அவ-மரியாதையைச் சொல்லியிருப்பதன் மூலம் தெளிவாகிறது.

நமது வேதங்களில் ஆசிரியர்-மாணவன் தொடர்பு பற்றியும், ஒரு ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் மரியாதையும், முக்கியத்துவமும், மாணவர்களின் கடமை போன்றவை மிக அழகாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மாவே குருகுலம் சென்று பயின்றதும், குருவே கற்றுத்தர மறுத்தாலும், மானசீகமாக வில்வித்தை பயின்ற ஏகலைவனையும் கண்டிருக்கிறோம். ஆசிரியருக்கு இணையாக த்ரிமூர்த்திகளையும் சொல்லி இருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.

கல்வி கற்பதில் நேர்மை வேண்டும், மாறாத உறுதியும், அறிவுக் கூர்மையும், ஆசிரியன் மீது அசையாத நம்பிக்கை ஆகியன மாணாக்கருக்கு இருக்க வேண்டியவை என்றும், அதே போல ஆசிரியனும் மாணவனிடத்தில் அன்பு கொண்டு இருக்க வேண்டும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு ஆசிரியர் தனது சீடனுக்கு/மாணவனுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞானத்தின் மூலமாக பிரம்மத்தின் பாதையைக் காண்பிக்கிறாரோ, அவரே 'ஸத்குரு' என்று போற்றப்பட்டிருக்கிறார்.

கல்வி பயில்வதில் மூன்று நிலைகளைச் சொல்கிறார்கள், அவை, கேட்டல், கேட்டதை மனதில் வாங்கி ஆராய்தல், அறிந்ததை தியானத்தின் மூலமாக நிலைத்திருக்கச் செய்தல் என்பன. இதுவே சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் என்று சொல்லப்படுவது. ஆதி சங்கர் விவேகசூடாமணியில் உண்மையான சீடனின் கடமைகள், ஆசிரியரின் பங்கையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதில் (விவேக சூடாமணி) ஆசிரியர்/குரு தனது சிஷ்யனுக்கு ஞானத்தை ஊட்டுவது என்பது, இயற்கையானது வசந்தகாலத்தில் எப்படி நம்மிடமிருந்து எந்த் எதிர்பார்ப்பும் இல்லாது நமக்கு இனிமை அளிக்கிறதோ அதுபோன்றது என்று கூறி ஆசிரியர்/குரு தன்னலமற்று இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

தைத்ரீயோபநிஷதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி. இதில் குருகுலத்தில் பயில வேண்டிய முறை, உபாசனை, தியானம், கல்வி கற்றபின் உலகத்தில் எப்படி வாழ்வது போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. குருகுல வாசத்தின் முடிவில், குருகுலத்தை விட்டுச் செல்லும் மாணவனுக்கு ஆசார்யனால் பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிவுரைகள் ஒருவனது வாழ்வு முழுவதும் பின்பற்றத்தக்கதாக இருப்பது சிறப்பு. அவற்றில் சிலதைப் பார்க்கலாமா?

ஸத்யான்ன ப்ரமதி தவ்யம் - சத்யத்திலிருந்து எப்போதும் தவறக்கூடாது.

தர்மான்ன ப்ரமதி தவ்யம் - தர்ம நெறியில் எப்போதும் இருக்க வேண்டும்.

ஸ்வாயாயப்ரவசநாப்யாம் ந ப்ரமதி தவ்யம் - கற்றைதை பயிற்சி செய்யவும், பிறருக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ - பெற்ற தாயும், தந்தையும் கடவுளாக வணங்கப்படத்தக்கவர்

ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ - கல்விக் கண் திறந்த ஆசார்யனும், விருந்தினரும் கடவுளுக்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

தேவ பித்ரு கார்யாப்யான்ன ப்ரமதி தவ்யம் - தேவ, பித்ரு கர்மாக்களைத் தவறாது செய்ய வேண்டும்.

இவற்றை மனதில் நிறுத்திக் கொண்டு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தர்மத்தையும், சத்யத்தையும் கடைபிடித்தால் அதுவே தர்ம வாழ்கை என்று முடித்தார் அந்த யதி.

Thursday, May 6, 2010

தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா'தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா', அதாவது தேவர்களும், முனிவர்களும், கணங்களும் தமது ஆத்ம ரூபமாக போற்றும் அம்பிகை என்பது பொருள். இதையே வேறு விதமாக தேவர்கள், ரிஷிகள் மற்றும் கணங்கள் துதிக்கும் சிறப்பு வாய்ந்தவள் என்றும் கொள்ளலாம். வைபவம் என்றால் எங்கும் பரவியிருப்பது என்று ஒரு பொருள் சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தால் அம்பாள் ஸர்வ வியாபியாக இருப்பதை துதித்தார்கள் எனலாம். 'ஸங்காத' என்பதை ஸம்யக் + காத என்று பிரித்து, பண்டாசுர வதத்தைச் சுட்டுவதாகவும் சொல்லலாம். 'தேவர்ஷிகண' என்பதை பிரம்மா முதலான த்ரிமூர்த்திகளாகவும், ரிஷி என்பதற்கு வஸிஷ்டாதி ரிஷிகளையும், கண என்பதற்கு ஆதித்யன் முதலான கணங்களையும் சொல்லுவது வழக்கம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து துதிக்கிறார்கள், கதறுகிறார்கள் அம்பிகையிடத்தில். ஏதற்காக இவ்வாறு என்றால் பண்டாசுரன் படுத்தும் பாடு தாங்காமல் அம்பிகையிடம் இறைஞ்சுகிறார்கள். இதே நாமம் அக்னி புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

'பண்ட' என்றால் நல்லது என்று பொருள், பண்டன் என்றால் நல்லவன். அசுரனில் அதென்ன நல்ல அசுரன்?. இந்த இடத்தில் கொஞ்சம் லலிதோபாக்யானத்தைப் பார்க்க வேண்டும். ஈசனது நெற்றிக்கண்ணின் தழலால் மன்மதன் சாம்பலாகிறான். அந்த சாம்பல் கைலாசத்தில் இருக்கும் போது குழந்தை கணேசர் அந்த சாம்பலை தனது கைகளால் பிடித்து ஓர் உருவத்தைச் செய்கிறார். கைலாசத்தில் உருவான அந்த சாம்பலால் ஆன உருவமும், ஸ்தல விசேஷத்தின் காரணமாக தவத்தில் ஆழ்ந்துவிடுகிறது. இதன் தவத்தைக் கண்ட பிரம்மா, 'பண்ட, பண்ட' (நல்லது, நல்லது) என்று வாழ்த்துகிறார். தவத்தின் மூலம் சிவனது அருளுக்குப் பாத்திரமாகி ஆற்றல் பெறுகிறது அந்த சாம்பல் பொம்மை. ஆற்றல் வந்துட்டாலே அஹங்காரம் வந்துடும் என்பது பூலோகத்தில் மட்டுமல்ல, கைலாசத்திலும் அதேதான் போல. பண்டனுக்கு ஆற்றல் வந்ததும் அஹங்காரமும் வந்துவிட்டுகிறது. அஹங்காரமுற்ற பண்டன், பண்டாசுரனாகிறான். நல்லவர்கள் கூட செயல்திறன்/ஆற்றல் வந்துவிட்டால் அஹங்காரம் வந்து தீயவர்களாகிவிடுகிறார்களே?, அதைக் காட்டுவதுதான் பண்டாசுரன் படைப்பு. தனக்கு ஈசன் அளித்த ஆற்றலை தவறாகப் பயன்படுத்தி சகல உலகங்களையும் ஆட்டிப் படைக்கிறான். அப்போது அவனை அடக்குவதற்காகவே எல்லோரும் அம்பிகையிடம் முறையிடுகிறார்கள்.

தேவர்களுக்கு உதவ, தேவேந்திரனுடைய வேள்வித் தீயில் இருந்து சிதக்னி குண்ட சம்பூதாவாக உருவாகிறாள் ஸ்ரீ லலிதை. உதித்த லலிதை எப்படி உதித்தாளாம்?, பண்டாசுரனை ஸம்ஹாரம் செய்யத் தேவையான சக்திகளின் ஸைன்யத்துடனேயே உதித்தாளாம். இவ்வாறு அஹங்காரத்தை/பண்டனை அழிக்கத் தேவையான சக்திகளை தன்னுள் கொண்ட லலிதை என்பதைத்தான் 'பண்டாஸுர வதோத்யுக்த சக்திச்ஸேனா ஸமன்விதா' என்னும் நாமம் சொல்கிறது. சக்தி ஸைன்யம் எப்படியிருந்தது என்றால் சதுரங்க சைன்யமும் இருந்தது, இதனால் 'சதுரங்க பலேசஸ்வரி' என்ற நாமம். ஸைன்யத்துடனேயே உதித்தாள் என்றால் என்ன விதமான ஸைன்யம்? என்பதையும் பார்த்துடலாமா?

யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய எல்லாவற்றுடன் உதித்தாள். அம்பிகையின் யானைப் படைக்குத் தலைவியாக ஸம்பத்கரீ என்னும் தேவி உதித்தாள். இந்த ஸம்பத்கரீயின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட யானைகளின் கூட்டத்தால் அம்பிகை சேவிக்கப்படுகிறாள் என்பதை குறிக்கும் நாமமே,"ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜ ஸேவிதா".இந்த ஸம்பத்கரீயே அம்பிகையின் ஆயுதங்களில் அங்குசமாக இருப்பவள். ஞானம் (அறிவு), ஞாத்ரூ (அறிபவன்), ஞேயம் (அறியும் பொருள்) இந்த மூன்றின் வித்யாசங்களைத் தெரிந்து கொண்டு இவற்றை ஸம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான வ்ருத்திக்கு ஸுக-ஸம்பத்கரீ என சொல்லுவார்களாம்.

அம்பிகையின் சதுரங்க ஸைன்யத்தில் குதிரைப்படைக்குத் தலைமை தாங்குபவள் அச்வாரூடா என்னும் சக்தி, இவள் அம்பிகையின் கையில் இருக்கும் பாசம் என்னும் ஆயுதமாவாள். இந்த அச்வாரூடாவின் உத்தரவுக்குட்பட்ட பல கோடி குதிரைகளால் சூழப்பட்டவளாம் அம்பிகை, இதுவே 'அச்வாரூடஸ்திஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா.' பஞ்ச இந்திரியங்களை அச்வங்களாகச் சொல்லி அதன் தலைமையாக மனஸ் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். இந்திரிய்ங்களின் மூலமாக மனஸ் தனக்குச் சாதகமானதைச் செய்துகொள்வதால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, மனதுக்கு அடங்கிய இந்திரியங்களான குதிரைகளால் சூழப்பட்டவளாகிறாள் ஸ்ரீ லலிதை.

இந்த நாமாக்களுக்குப் பின்னர் அன்னையின் ரத ஸைன்யம் பற்றிச் சொல்லும் 3 நாமங்களை நாம் முன்னரே பார்த்துவிட்டோம்.