Wednesday, January 30, 2008

வேத வியாசர்..
மனிதன் மன நிறைவுடன் வாழ வழிகாட்டுவது வேதங்கள். உலகில் உள்ள கலைகள் எல்லாம் வேதத்தில் அடக்கம். அப்படி சிறப்பான வேதத்தை காத்து நமக்களித்தவர் வேத வியாசர். தெய்வத்தை நம்பி தெய்வ பலத்தால் வாழ்க்கை கடைத்தேற வழி காண்பித்தவர் வியாசர். மஹா பாரதத்தை நமக்கு அளித்தவர்.

தக்ஷிணா மூர்த்தியை ஆதி குரு என்கிறோம். வியாசரோ விஷ்ணு அம்சம், இதுதான் "வியாசாய விஷ்ணு ரூபாய: வியாச ரூபாய விஷ்ணவே". இவரை இந்து மதத்தின் எல்லா பிரிவுகளும் ஆதி குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்தான் நமக்கு வேதங்களை பிரித்து தந்தவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஆகியோர் மிக அழகாக பாஷ்யம் பண்ணி தங்களது மத கோட்பாடுகளை நிறுவிச் சென்றுள்ளனர்.


குரு என்று சொல்லும் போது நாம் தக்ஷிணா மூர்த்தியிலிருந்து ஆரம்பிப்பது கிடையாது. ஸ்ரீமன் நாராயணனை முதலாக கொண்டே எல்லா குரு பரம்பரையும் ஆரம்பிப்பதை காணலாம். அப்படி வருகையில் இரண்டாவதாக வருவதே வியாசர். இன்றும் இந்தியாவில் இருக்கும் எல்லா சன்யாசிகளும் தமது சாதுர் மாஸ்ய விரத சங்கல்பத்தில் வியாசரை முன்னிறுத்தி அவரிலிருந்து தமது குரு வரையில் இருப்பவர்களை பூஜிப்பத்தை பார்த்திருக்கலாம். இப்படியாக பெயர் பெற்ற குரு வியாசரை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடங்குகிறோம்.


பி.கு: இந்த வலைப்பூ எந்த ஒரு குறிப்பிட்ட ஆச்சார்ய பரம்பரையை மட்டும் சார்ந்ததாக இருக்காது. இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம். குருவருள் துணை செய்யட்டும்.

Tuesday, January 29, 2008

க்ஷிப்ர ப்ரஸாதிநி, சதுரங்க பலேஸ்வரி


க்ஷிப்ரம் என்றால் சீக்கிரம் விரைவு என்று பொருள். திருஞான சம்பந்தர் அழைத்தவுடன் வந்து ஞானப்பால் தந்த அன்னையை "விரைவாக வந்து அருள்புரிபவள்" என்பதைத்தான் க்ஷிப்ர ப்ரஸாதிநீ என்கிறது சஹஸ்ர நாமம். இராமனிடம் சரணாகதி அடைய வந்த விபீஷணன், 'நிவேதயதமாம் க்ஷிப்ரம்' என்கிறானாம். இதற்கு 'என் சரணாகதியினை உடனடியாக தெரிவியுங்கள்' என்பது பொருள்.

காளிதாஸன் மிகப் பெரிய கவிஞன் மட்டுமல்ல சிறந்த சாக்தனும் கூட. அந்த காளிதாசனை ஓரே இரவில் திடிரென கவிஞனாக்கியவள் அன்னை. காளிதாசனும், ஞான சம்பந்தரும் மட்டுமா?, அபிராமி பட்டர் 100 பாடல்களை பாடி முடிக்கும் முன் அம்மாவாசை இரவில் பூர்ண நிலவினை காட்டிய அருளியவள் அல்லவா?.பாஸ்கர ராயர் பற்றி சாக்தர்களுக்கு தெரியாமல் இருக்காது. லலிதா சஹஸ்கர நாமத்துக்கு பாஷ்யம் அருளியவர்களில் ஒருவர். இவரது ஏழ்மையினை போக்கியதும் திடிரென ஒரு பகல் பொழுதில் தான். இவர் பூஜித்த மஹா மேருவை இன்றும் பாஸ்கர ராயபுரத்தில் அவரது பூர்விக இல்லத்தில் காணலாம்.ஒரு நாள், கையிலாயத்தில் அன்னையும், அப்பனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்களாம். அதில் அம்பிகை ஜெயித்து விடுகிறாள். ஆனால் நடுவராக இருந்த திருமாலோ ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்து அன்னையிடம் வாங்கி கட்டிக்கொள்கிறாராம். அப்போது அன்னை திருமாலை பாம்பாக பிறக்க சபித்து விடுகிறாளாம். இந்த சாபம் தீர நாராயணன் திருவாலங்காட்டில் பாம்பாக ஜெனித்து தவமியற்றி விமோசனம் அடைந்தது புராணம். இந்த புராணத்திலிருந்து அன்னைக்கு ஒரு நாமம் தோன்றியது. அந்த நாமமே 'சதுரங்க பலேஸ்வரி என்பது.

Monday, January 28, 2008

ராஜ மாதங்கி


தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருபவள் ராஜ மாதங்கி. இந்த அன்னையே ராஜ ஸ்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்தர்களில் சிறந்தவரான மஹாகவி காளிதாஸர் எழுதிய "ச்யமளா தண்டகம்" இவளைக் குறித்து எழுதியதே. அதில் காளிதாஸர்,

மாதா மரகதச்யாமா மாதங்கி மதுசாலினி

சூர்யாத்கடாஷம் கல்யாணி கதம்பவனவாஸினி

ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுகே

ஜய ஸங்கீதரஸிகே ஜய லீலா சுகப்ரியே


என்றும்,


மாணிக்க வீணா முபலாலயந்தீம்

மாதலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


என்றும் போற்றுகிறார். இவளை உபாசித்தால் வித்தை, தனம் ஆகிய இரண்டையும் அள்ளித்தருவாள் என்பது காளிதாஸரின் வாக்கு.


மதங்கர் என்னும் ரிஷிக்குப் பிறந்த அருந்தவச் செல்வியே இராஜ மாதங்கி. திருவெண்காட்டில் (ச்வேதாரண்யம்) ஆடிமாதம் வெள்ளிக் கிழமையன்று ரிஷி அவர்கள் அங்கிருந்த மதங்க தீர்த்தத்தில் குழந்தையாக கண்டெடுத்த்தாராம். இவளுக்கு ஏழு வயதிருக்கும் போதே மதங்க மஹரிஷி பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டாராம். இதற்காக மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில் சப்தமியன்று திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காடு தல வரலாறு கூறுகிறது.


இவள் அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மந்த்ரிணி என்பதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை மீனாக்ஷியே மந்த்ரிணி ரூபம் என்பதால் மீனாஷியே மாதங்கி ஸ்வருபம் என்றும், தச மஹா வித்தையில் வருபவள் மீனாக்ஷியே என்பர். மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர், "வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரஸிகா" என்று கூறுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ச்யாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துஸ்வாமி திக்ஷதரவர்கள் ஆகிய இருவரும் இவளை கானமூர்த்தி / சங்கீத ரஸிகே என்றெல்லாம் கூறிப்பாடியிருக்கிறார்கள். இவற்றில் ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர்.

ராஜ மாதங்கியின் அங்க தேவதையான லகுஸ்யாமளா பற்றி கேனோபனிஷதத்தில் குறிப்பு இருக்கிறது. இவளது அங்க தேவதைகளாக 6 தேவதைகள் (ஹசந்தி ச்யாமளா, சுக ச்யாமளா, சாரிகா ச்யாமளா, வீணா ச்யாமளா, வேணு ச்யாமளா, லகுச்யாமளா) கூறப்பட்டுள்ளது. இந்த தேவதைகள் பல கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் தந்திடுவாள் என்கிறார்கள். இப்பெரும் சக்தியினை பற்றி ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம் போன்ற நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்டு இச்சக்திக்கான மூலமந்த்ரங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவளை பற்றி சாக்த ப்ரமோதத்தில் கூறுகையில் "காசித் காயனதேவதா விஜயதே வீணாவதி" என்பதாக, உலகிற்கே உரித்தான கான தேவதையாக கூறப்பட்டுள்ளது.


Tuesday, January 22, 2008

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,
பசியினால் இளைத்தே வீடு தோறும் இருந்தும்
பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"


என்று வாழ்ந்த வள்ளலார் ஸித்தி அடைந்த தினம் தைப்பூசம். இவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதி சமரஸ சமய ஸன்மார்க்கத்திற்காக (மத நல்லிணக்கம்) பெரும் தொண்டாற்றி அதற்க்காக வடலூரில் சத்ய ஞான சபை என்னும் இயக்கத்தை தோற்றுவித்தார். இவர் எழுதிய எட்டாயிரம் பாடல்களே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது.இவரது மந்திரமே அருட் பெரும் ஜோதி- தனிப் பெரும் கருணை என்பதாகும். இறைவனை ஜோதி வடிவில் வழிபடவும், தியானம் செய்யவும் தூண்டினார்.


1823-ல் சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார் (அ) வள்ளலார். இவரது தாய், தந்தையர் பெயர் கிருஷ்ணம்மா, ராமையா என்பதாகும். இவர் 30-101-1874 அன்று தாம் நிறுவிய சித்தி வளாகத்தில் சித்தியடைந்ததாகவும், மற்ற ஞானிகள் போல் அல்லாது பூத உடலை பூவுலகில் விடாது, அந்தர்யாமி ஆனதாக சொல்லப்படுகிறது. அவர் தம் கையால் ஏற்றிய விளக்கு இன்றும் வடலூரில் பிரகாசிக்கிறது. இவர் அங்கு நிறுவிய தர்மசாலையில் இன்றும் அன்ன தானம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நாளை தைப்பூசம். வடலூர் சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் மிக பிரசித்தி. நாமும் இந்த மஹானின் அருளாசியினை வேண்டுவோம்.

Saturday, January 19, 2008

என்ன எழுதுவது? எதை எழுதுவது?

கடந்த சில நாட்களாக மீண்டும் பதிவுகளை வாசித்தாலும், எழுத முனையவில்லை. எழுத நினைத்தவை நிறைய இருக்கிறது. ஆரம்பித்த செளந்தர்ய லஹரி அப்படியே நிற்கிறது. மார்கழிக்கான பதிவுகள் என நினைத்த சில அப்படியே விட்டுப் போயிற்று. புதிதாக தெரிந்து கொண்ட பித்ரு கர்மாவினைப் பற்றிக் கூட சில பதிவுகள் எழுதலாம். புல்லாகி-பூண்டாகி விமர்சனம் கூட எப்படியோ ஒரு மாதிரியாகத்தான் எழுத முடிந்தது. என்ன தவறுகள் இருக்கோ தெரியவில்லை. குமரன் மன்னிப்பாராக. பஞ்ச நதிகளைப் பற்றி எழுத என்று எடுத்த குறிப்புக்கள், மாதங்கீ என்னும் நாமம் பற்றிய குறிப்புக்கள், சில திருமுறை பாடல்களுக்க்கான கதைகளும், கோபால சுந்தரி பற்றியும் எழுத முன்பே நினைத்திருந்தேன்.


ஆனால் மனம் ஒருமித்து ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. அதற்கு சோகம் என்று பெயரிடவும் தெரியவில்லை. ஏதோ அடிமனதில் ஒரு நெருடல். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது என்னளவில் சரி தானோ?. படித்த அத்வைதம் பழக்கத்தில் இல்லாத குறையோ?. என்னமோ பார்க்கலாம்.