Wednesday, February 27, 2008

குருவிடம் சில கேள்விகள்....பகுதி-1


சமிபத்தில் நான் படித்தது இது. இந்த பதிவுக்கு ஏற்றது. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதும் கூட. இதில் உள்ள கேள்விகள் ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்தரிடம் கேட்கப்பட்டது, பதில்கள் அவர் அளித்தவையே!. இரண்டு பதிவுகளாக இடுகிறேன்.


கேள்வி : குருவின் லக்ஷணம் என்ன?
பதில் : குரு என்பவர் தத்வதை அறிந்த ஞானியாகவும், சிஷ்யனின் நன்மையை விரும்புபவராகவும் இருக்க வேண்டும்.


கே: இக்காலத்தில் பலர் மஹான்களைப் போல நடிக்கிறார்கள், இப்படியான உலகில் உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது?
பதில் : குருவை இப்படித்தான் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று எங்கும் குறிப்புக்கள் நேரடியாக இல்லை. அனால் ஒருவன் மிகுந்த ஸ்ரத்தையுடன் குருவுக்காக காத்திருப்பானாக இருந்தால் ஈஸ்வரன் அவனுக்கு ஒரு சத்குருவை அடையச் செய்வான். நாம் யாரைக் குருவாக கருதுகிறோமோ அவர் ஞானியாகவும், நமது நன்மை மற்றும் உலக நன்மை விரும்புபவராகவும் இருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளலாம். இதில், ஞானி என்று யாரையாவது தீர்மானம் செய்வதற்கு பகவத் கீதையில் கூறப்பட்ட ஞானியின் வர்ணனைகளை உபயோகப்படுத்தலாம். ஆனால் கிருஷ்ணன் இந்த உபயோகத்திற்க்காக சொல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி : குருவைப் பற்றி சிஷ்யனின் மனப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?
பதில் : குருவும், தன் ஆத்மாவும், ஈஸ்வரனும் வேறல்ல என்ற நிலையில் இருக்க வேண்டும். "ஈஸ்வரோ குருராத்மேதி'" என்பதாக குருவின் ஆக்ஞையே ப்ரதானமாக ஏற்று நடக்க வேண்டும். யார் எவ்விதம் சொன்னாலும் குருவின் உபதேசத்தையே முடிவாக கொள்ள வேண்டும்.

கேள்வி : ஞானம் அடையாத ஒருவர் மற்றொருவருக்கு ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்ய முடியுமா?.
பதில் : ஆத்மாவை அறியாதவன் அதைப் பற்றி உபதேசிப்பது எங்கனம்?, இதொன்றும் மனனம் செய்து ஒப்பிவிக்கும் விஷயமல்லவே?. அறியாதவன் குருவாக உபதேசித்தால், சிஷ்யன் எவ்வளவு ஆராய்ந்தாலும் ஆத்மாவை அறிய முடியாது. ஆத்மாவை அறிந்தவன் உபதேசித்தால், கேட்பவன் மோக்ஷத்தை அடைகிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கேள்வி : ஆன்மீக ஈடுபாடுள்ளவன் தன் குருவைப் பற்றியோ, ஈஸ்வரனைப் பற்றியோ பிறர் நிந்திப்பதை காதால் கேட்பது தவறா?, அந்த சூழலில் சிஷ்யன் என்ன செய்ய வேண்டும்.
பதில் : ஆம்!, கேட்பதும் தவறே!. நிந்திப்பவனிடம் அவ்வாறு கூற வேண்டாம் என்று சொல்லலாம், கேட்காவிடில் அவ்விடத்தை விட்டு அகன்று விடலாம்.

கேள்வி : எந்த வயதில் ஆன்மிக சாதானையை தொடங்க வேண்டும்?
பதில் : எவ்வளவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. ப்ரஹலாதனும், த்ருவனும் சிறுவர்களாகவே இறைதரிசனம் பெற்றவர்கள்
தாமே?.

கேள்வி : மோக்ஷத்தை விரும்புவனுக்கு குரு தேவையா?
பதில் : மிகவும் தேவை.

Tuesday, February 19, 2008

பக்தி - குணங்கள் - சில எண்ணங்கள்...


இரண்டு நாட்கள் முன் நண்பர் ஒருவருடன் சாட்டிக் கொண்டிருந்ததை அசை போடும் விதமான பதிவு இது.

பக்தன் என்பவனுக்கு ராக த்வேஷம் இருக்க கூடாது. ராக த்வேஷம்ன்ன்னா?. ஜீவாவும், திரசவும், கேஆரெஸ்ஸும் எழுதும் பூர்வி கல்யாணி, ரிதி கெளளை, மோகனம் போன்றவை மேல் கூட த்வேஷம் ஏற்படுமா என்ன?. அட ஞஞன சூன்யமே!, ராகம் தெரியாட்டாக் கூட அதன் மெலடியை ரசிக்க வேண்டுமே?, அதைக் கூட ரசிக்கத் தெரியாம த்வேஷம் கொள்ளலாமா? அப்படின்னு திட்டாதீங்க. இந்த ராக த்வேஷம் வேற.


நாம் சில விஷயங்களில் ரொம்ப பற்றுடன் இருப்பதும், சிலவற்றை புறந்தள்ளுவதும் மிக சாதாரணம். இந்த மாதிரியான பிடித்தது, பிடிக்காதது அப்படின்னு இருப்பதையே ராகத்வேஷம் அப்படின்னு சொல்லியிருக்கு. பொதுவாக ராக த்வேஷம் கொண்டவர்களுக்கு பிறரைத் தொந்தரவு செய்யும் மனப்பான்மை இருக்கும். ஆனால் ஒரு பூரண பக்தனுக்கு / சரணாகதி செய்பவனுக்கு இந்த குணம் இருக்காது. ஏனென்றால் அவனுக்கு இறைவனை விட உயர்ந்த பொருள் என்று எதுவுமே கிடையாது. எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனுக்கு மற்றவற்றை த்வேஷிக்கவே தெரியாது / முடியாது. ஆகவே பக்தன் என்பவன் 'அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்' என்றபடியான யாரையும் தூஷிக்காத, எல்லோரையும் எற்றுக் கொள்ளும் நிலையினை அடைய வேண்டும். எல்லோரிடமும் ஸ்நேகம் /கருணை கொண்டு இருக்க வேண்டும்.


அடுத்த குணம் அஹங்காரம். பணம், படிப்பு, பதவி என்பதாக சில பல காரணிகள் அஹங்காரத்திற்கு. அஹங்காரத்தால் என்ன ஆகும் என்று நமக்கு தெரியும். எப்போ ஒருத்தனுக்கு அஹங்காரம் வருமோ அப்போது எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்கிற விவேகம் போய்விடும். விவேகம் போயிவிட்டதென்றால் தவறுகள் ஒரு தொடர் பதிவு ஆகிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் நல்ல/கெட்ட காரியங்களுக்கான பலன் அடுத்த ஜென்மத்தில் என்பார்கள், ஆனால் இந்த இரண்டில் ஏதோ ஒன்று மிக அதிகமாகிவிட்டால் அது அந்த ஜென்மத்திலேயே பலனளிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. தவறுகள் ஒரு அளவிற்கு மேல் தொடரும் போது அதற்கான தண்டனை அதே ஜென்மத்தில் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் இராவணன், சிசுபாலன், துரியோதனன் போன்றோர். ஆகையால் கர்வம்/அஹங்காரம் என்பது எப்போது ஒருவனுக்குள் புகுகிறதோ அப்போதே இறைவன் அவனிடத்திலிருந்து நீங்குகிறான் என்பது திண்ணம்.


பல நேரங்களில் நாம் மனம் வருந்தி, எந்த பாவமும் செய்யாமலே நமக்கு இப்படி ஆயிற்றே என்று வருந்துகிறோம். இறைவனை பழிக்கவும் தயங்குவதில்லை. ஆனால் மிக பெரிய பாராட்டு, பணம் கிடைத்தால் தலைகால் புரியாமல் குதிக்கவும் இறைவனை மறக்கவு செய்கிறோம். இது போல சுக-துக்கங்களில் இறைவனை சரி-சமமாக நினைக்கும் நிலை வர வேண்டும். நமது கர்மாவிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்/ கிடைத்திருக்கிறது என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்குமானால், நமது செயல்கள் எப்போதும் நல்லவையாகவே இருக்கும்.

நேரமின்மையால் நண்பனுடன் செய்த சாட் இத்துடன் நின்று விட்டது. மீண்டும் தொடர இருக்கிறோம். அப்போது இந்த பதிவுக்கு இன்னொரு பாகம் வரும்.

Wednesday, February 13, 2008

ஸ்ரீ குரு குண ஸ்தவனம்...குரு ராகவேந்திரர்ஸ்ரீ ராகவேந்திரரை எல்லோருக்கும் தெரியும். மந்திராலயத்திற்கு போகாத ஆன்மிக சீலர்கள் குறைவே. எல்லாம் சரி, மந்திராலயத்தில் குருராயரின் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் இன்னொரு பிருந்தாவனம் இருக்கிறதே?, அது யாருடையது?. அவர் பெயர் என்ன?. அவரை மட்டும் எப்படி குருராஜர் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்?. இவற்றை எல்லாம் பார்க்கலாமா?.


மந்திராலயத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் (குரு ராஜருக்கு இடது புறம்) இருப்பது ஸ்ரீ வாதீந்திரர் என்னும் யதியின் பிருந்தாவனம். இவர் குருராஜனிலிருந்து 5வது தலைமுறையில் வந்த ஆச்சார்யரது பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம்தான் முதன் முதலில் குரு ராகவேந்திரருக்காக கட்டப்படது. ஆனால் குருராஜன், இதனை அப்படியே வைத்திருக்கச் சொல்லி தனக்காக வேறு ஒன்று எழுப்ப ஆணையிடுகிறார். அப்போது இந்த பிருந்தாவனத்தை என்ன செய்வது என்று திவான் வெங்கண்ணா கேட்ட பொழுது, அது பற்றி பின்னர் தெரிவிப்பதாக சொல்கிறார் குருராஜன்.

ஆயிற்று, குருராஜன் தன்னால் தேர்வு செய்த கற்பலகைகளை (கற் பலகைகள் அவராலேயே குறிப்பிடப்படுகிறது. அந்த கற்பாறைகளில் ஸ்ரீஇராமன் அமர்ந்து இருந்ததாக அவரே சொல்லியதாக கூறப்படுகிறது) கொண்டு கட்டப்பட பிருந்தாவனத்தில் அமர்ந்து விட்டார். இவ்வாறு பிருந்தாவன பிரவேசம் செய்யும் போது தான் இன்னும் 700 வருடங்கள் ஜீவ சரீரத்துடன் பிருந்தாவனத்துள் வாசம் புரியப் போவதாகவும், அதன் அறிகுறியாக 700 ம்ருத்திகா பிருந்தாவனங்கள் நாடெங்கிலும் தோன்றும் என்றும் அருளியுள்ளார். ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரர் உத்தரவுப்படி அவருக்குப் பின் ஸ்ரீ யோகீந்திரரும், பின் ஸுரிந்திரர், ஸுமதீந்திரர், உபேந்திரர் என்று குரு பரம்பரையில் நான்கு ஆச்சார்யர்கள், ஆனாலும் குருராஜனுடைய பிருந்தாவனத்தின் இடது பக்கத்தில் இருக்கும் அந்த பிருந்தாவனம் காலியாகவே இருக்கிறது.ஐந்தாவதாக வருபவர் வாதீந்திரர். இவரே குருராஜன் உத்தரவின்படி குருராஜனுடைய மூல பிருந்தாவனத்திற்கு அருகிலிருக்கும் பிருந்தாவனத்தில் எழுந்தருளுகிறார். 79 ஆண்டுகளுக்கு முன்னால் பிருந்தாவன பிரவேசம் செய்த குருராஜன், வாதீந்திர தீர்த்தரின் சீடர் கனவில் வந்து தனதருகில் இருக்கும் பிருந்தாவனத்தை வாதீந்திரருக்கென உத்தரவிட்டாராம். இவ்வாறாக வாதீந்திரர் குருராஜன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.


இந்த வாதீந்திரர் குருராயரை வணங்கி எழுதிய நூலே குரு குண ஸ்தவனம். இந்த நூலில் வாதீந்திரர், குருராயரால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த நூல் 38 பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றிய வாதீந்திரர், ராயரின் ஜீவ பிருந்தாவனத்தின் முன் படித்து, அவருக்கு சமர்பணம் செய்கிறார். அவ்வாறு செய்கையில், திடிரென அவர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் ஒரு புஷ்பம் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கையில் குருராஜனது பிருந்தாவனம் லேசாக கேட்டதை ஆமோதிப்பது போல ஆடியதாம். இதனை அங்கிருந்த எல்லோரும் பார்த்து அதிசயித்தனராம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலில் இருந்து குரு பக்தி பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தை இன்று பார்க்கலாம். குரு குண ஸ்தவனத்தின் 12ஆவது ஸ்லோக கருத்து கிழே.


குருவே! கர்ம, ஞான மார்க்கங்களை அறியும் விஷயத்தில் நான் திறமையில்லாதவனாக இருக்கிறேன். இந்த உடம்பு நிலையில்லாதது என்பதால், வித்வான்களால் கூறப்படும் மோக்ஷ உபாயத்தையும் (நிவ்ருத்தி கர்மா), பக்தி வகைகளில் ஒன்றான ஸ்ரவணத்தின் மூலம் அடையக் கூடிய கடவுளை நேரடியாக காணும் (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) வழியினையும் பெறக்கூடிய நிலையில் நான் இல்லை.


ஆனால் குருவே, தங்கள் அருளால், அனுக்ரஹத்தால், இடைவிடாத குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும். இவ்வாறு சிறப்பு மிகுந்த அருளினை நல்கி, தன்னை வணங்கியவர்களுக்கு நற்புத்தியைக் கொடுத்து, அவர்களின் அறிவினைத் தூண்டுகிற க்ரந்தங்களை தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை என்னாளும் வேண்டுகிறேன்.

Friday, February 8, 2008

தெய்வத்தின் குரல்

கீதை பற்றிச் சொல்லும் போது மஹா பெரியவரது ஒரு கருத்து.

சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாகத்தான் சமூகத் தலைவர்களாகப்பட்ட அறிவாளிகள் எல்லாக் காரியமும் செய்ய வேண்டும். தாம் அந்த நிலைக்கு மேலே சென்றுவிட்டால் கூட சமூகத்திற்கு வழிகாட்டிகளாக இருப்பதால் சாஸ்த்ர கர்மாக்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்

ந புத்திபேதம் ஜனயேத் அஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்

ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்தஸ் ஸமாசரன் [கீதை 3.26]


தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தேகார்யாகார்ய வ்யவஸ்திதெள [16.24]


ரிஃபார்ம் செய்பவர்களுக்கும் கீதை வேண்டியிருக்கிறது. ஆனால் இம்மாதிரி விஷயங்களை அப்படியே மறைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அல்லது ஒரு படி மேலே சென்று இதெல்லாம் இடைச்செருகல் என்று சொல்லி விடுவார்கள்.


நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 338

-------------------------

ஸமயாசாரம் என்பது சமய-அனுஷ்டானம். ஹிந்து மத்த்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எவ்வாறு உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈச்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் பிறந்த குலத்தின் ஸமயாசாரத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.

"பூர்வை: ஆசரித குர்யாத்: - உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு. அதாவது முன்னோர்களது ஆசார-அனுஷ்டானங்களைக் கடைபிடி.

அந்யதா பதிதோ பவேத் - அவ்வாறு குலமுன்னோர்களது வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால், அதாவது தனது பிறந்த சமயத்தில் இருக்கும் சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்களில் இருந்து வேறு கிளைக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான். பதனம் என்றாம் விழுவது; பதிதன் என்றால் அதோகதியில் விழுந்துவிடுவது.

நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 334

----------------------------------------------------------------------------------------

ஹைஜீன், மெடிக்கல் வால்யூ எல்லாவற்றையையும் விட முக்யம் பிராதஸ்நானம். சாஸ்த்திரவத்தாக, மந்திரத்துடனோ, கோவிந்த நாம பூர்வமாகவோ பண்ணப்பட்டால் அது வெளி அழுக்கைப் போக்குவதுடன், ஆத்மாவையும் சுத்தி செய்து, மனசிலும் அப்போதைக்கு ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்துவது த்ருஷ்டமாமத் தெரிகிறது. ப்ராதஸ்நானத்தால் நெர்வர்ஸ் ஸிஸ்டம் ஸ்ட்ரெங்க்தன் ஆவது போகப் போகத் தெரியும், ஆத்மசுத்தி ரொம்ப நிதானமாகத் தெரியும்.

பிராத ஸ்நானத்தை மந்திர பூர்வமாக, அல்லது பகவந் நாம பூர்வமாக விதிப்படி பண்ணும் போது அதனால் கிடைக்கும் பலன் டைரக்டாகத் தெரியாமல் என்றைக்கோதான் உண்டாகும். இந்த ஜன்மாவிலோ, இந்த லோகத்திலோகூட இல்லாமல் அது உண்டாகலாம். அந்த அத்ருஷ்ட பலன்தான் ஆசாரங்களின் லக்ஷ்யம். இப்படி அத்ருஷ்ட பலனைத் தைகுற ஸமாசாரங்களைப் பற்றி நமக்கு ஆசார விதிகள் செய்து கொடுத்து இர்ருக்கிறார்கள் மஹரிஷிகள். இதில் நமக்கு பிரத்யக்ஷ நிரூபணம் இல்லை, அல்லது இதற்கு விஞ்ஞான ரீதியான் அடிப்படை இல்லை என்று அலக்ஷ்யம் செய்வது சரியாகாது.


ஸ்நானம் செய்யும் போது அகமர்ஷண சூக்தம் சொல்ல வேண்டும். அது தெரியாதவர்கள், சொல்ல அதிகாரமில்லாதவர்கள் கோவிந்த நாமத்தைச் சொல்ல வேண்டும். தேகத்திற்கான ஸ்நானமே ஆத்மாவின் அழுக்கையும் அலம்பிவிட மந்திரங்கள், கோவிந்த நாமா சொல்லப்பட்டிருக்கிறது. அகம் என்றால் பாபம்; மர்ஷணம் என்றால் உடலைக் தேய்த்துக் கழுவிடுதல்.

நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 346-347

-----------------------------------------------------------------------------------

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

திருக்குறள்

பிராம்மணன் வேதத்தை மறந்து போய்விட்டால் கூடப் பரவாயில்லை, மறுபடி அத்யயனம் பண்ணிக் கற்றுக் கொண்டுவிடலாம். ஆனால் அவன் தனது ஒழுக்கத்தில், ஆசாரத்தில் இருந்து வழுவினால் அவனது ஜென்மாவே கெட்டு, வீணாகும் என்கிறார் திருவள்ளுவர்.

"ஆசார ஹீநம் ந புநந்தி வேத:" என்னும் சாஸ்திர அபிப்பிராயத்தை அப்படியே echo பண்ணி இருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தால்தான் ஒருத்தனுக்கு உயர்வு என்று ஜெனரலாகச் சொல்லிவிட்டு, உடனேயே இப்படி பிராம்மணனின் ஒழுக்கத்தை ஸ்பெஷலாகச் சொன்னதால் அவர் தற்கால் அபேதவாதிகளில் ஒருத்தரில்லை என்று தன்னைக் காட்டிக் கொள்ளுகிறார்.கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தின் கடைசிக் குறளில் 'அறுதொழிலோர் நூல் மறப்பர்' என்று கூறுகிறார். அதாவது வேதத்தை மறப்பது தனிமனித கெடுதலாகயில்லாது தேசத்திற்கே ஷாமங்களை ஏற்படுத்தும் என்பதாக கூறுகிறார்.இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், அறுதொழிலோர் மறைநூல் மறப்பதே உலகுக்குத் தீமை என்றும், அதனை மறந்தால் கூடப் பரவாயில்லை அதனை விட பெரிய ஹானி அவன் தனது குலாசாரத்தை, பிறப்பொழுக்கத்தை விடுவதுதான் என்கிறார்.

நன்றி: தெய்வத்தின் குரல் பக்கம் 470-474

-----------------------------------------------------------------------------------------

ஸதாசாரம் என்பதற்கு லக்ஷணம் சொல்லுகிற போதே அது ச்ருதி-ஸ்மிருதிகளின் மூல ரூல்களுக்கு விரோதமில்லாமல் இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது,

யஸ்மிந் தேசே யத் ஆசார: பாரம்பர்ய: க்ரமாகத:

ச்ருதி-ஸ்ம்ருத்-யவிரோதேந ஸதாசாரஸ்-ஸ உச்யதே

பரம்பரையாக, அநேக ஸ்த்துக்கள் வெவ்வேறு தேசங்களிலோ, அல்லது ஒரு தேசத்தின் வெவ்வேறு சீமைகளிலும் எவ்வாறு வாழ்ந்திருக்கிறார்களோஅந்த முறைக்கு ஸதாசாரம் என்று லக்ஷணம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லும்போது, நம் தேசத்தில் எந்த சீமையானாலும், ஆசாரங்கள் ச்ருதி-ஸ்மிருதிகளுக்கு விரோதமாக அதாவது, ஆசாரம் என்பது வேத மற்றும் மூல தர்ம சாஸ்திரங்களுக்கு விரோதமாக போகாதவையாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருக்கிறது.


சாஸ்திரங்களில் அது போடுகிற விதிக்கு மாறாக அதுவே விலக்கு தருகிற இடத்தில் மட்டுந்தான் நாமும் விலகிப் போகலாம். மற்றபடி மூலத்தின்படி செய்ய வேண்டும். செய்வது என்பது தற்போதைய வாழ்கை முறையில் ஸாத்யமோ இல்லையோ, மனசளவிலாவது மூல சாஸ்திர ரூல்தான் அதாரிடி என்ற எண்ணம் வேண்டும். அந்தப்படி பண்ணத்தான் நம்மால் முடிந்த அளவு முயல வேண்டும்.

நன்றி: தெய்வத்தின் குரல் பக்கம் 523-524

-----------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------
வம்சாவளியாக அநுஷ்டானங்களின் அனுபவ பலம் வஜ்ரம் பாய்ந்திருக்கிற சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு நமக்கான சாச்வத க்ஷேமத்தைக்
கொடுப்பதில் இருக்கிற வெயிட் தனி மநுஷயர்கள் புதிதாகப் பண்ணிக் கொடுக்கிற ஒழுங்கு முறைகளில் இருக்கவே இருக்காது. அவர்க
மஹானாகவே இருக்கலாம்., அனுக்ரஹ சக்தி உள்ளவராகவே இருக்கலாம். அப்படியானாலும் அவரிடம் சரணாகதி பண்ணியிருக்கிற சில பேரைத்தான் அவருடைய சக்தி பரிசுத்தி செய்ய முடியுமே தவிர, எல்லா ஜனங்களுக்கும் ப்ராசீன ஆசாரங்கள் காலக்ரமேண, slow and steady என்கிறபடி நிதானமாயிருந்தாலும், தளர்ச்சியில்லாமல் நிச்சயமாக சித்த சுத்தி தருவது போல் தரமுடியாது. தனி மநுஷ்யர் எத்தனை நாள் சாச்வதம்?. அவருடைய சக்தியெல்லாம் இருக்கிறவராக இன்னொருத்தர் எப்படி வர முடியும்?.


வழி-வழியாக வந்திருக்கிற தர்ம பீடங்களில் பீடாதிபதி முக்கியமில்லை. எந்த பீடாதிபதி வந்தாலும், போனாலும் மாறாமல் நிலையாயிருக்கிற ஸாம்பிரதாயிகமான ஆசார-அனுஷ்டானங்களும் தத்வங்களும், ஸித்தாந்தகளுந்தான் இங்கே முக்கியம். இவற்றைத் தாமே வழுவறப் பண்ணுவதுதான் பீடாதிபதிக்கு பெருமை தருவது. ஸாதாரண ஜீவன் ஒன்று எவ்வளவு கர்மா மூட்டையுடன், அழுக்கு மூட்டையுடன் பிறந்திருக்கிறது என்று கவனித்து, அத்தனையையும் அடித்துத் துடைத்து சுத்தம் பண்ணவே இந்த பீடங்கள் சாஸ்திரங்கள் கூறும் ஏராளமான ஆசார-அனுஷ்டானங்களைச்
சொல்கின்றன.


நவீன ஸ்வாமியார்கள், 'ஆசாரம் வேண்டாம், உபவாசம் வேண்டாம், எல்லாம் ஈச்வரப் பிரசாதம்தான்; எதை வேணுமானாலும் தின்னுங்கள், ட்ரெஸ்ஸில் என்ன இருக்கிறது?, ஈச்வரன் மனஸப் பார்க்கிறானே தவிர இதுகளையா பார்க்கிறான் என்று சொல்லி, ஏதோ கொஞ்சம் பஜனை, ஜபம், தியானம் பண்ணினால் போதும் என்று ஒரேடியாக டைல்யூட் செய்துவிடுகிறார்கள். காலக் கிரமத்தில், இம்மாதிரியான செயல்களால் அனுஷ்டானங்களை எல்லாம் அழிந்தபிறகு இருப்பதே ஹிந்து சமயம் என்று நினைத்து மேம்போக்காக சில சாதனைகளைப் பண்ணுவதோடு நின்றுவிட்டால் நிலையான பிரயோஜனம் ஏதும் இருக்காது.

---------------------------------------------------------

அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது ச்ரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரு கண்கள் போல. குரு என்றால் வழிகாட்டுபவர், அவர் காட்டும் வழியில் நாம் செல்லவேண்டும். கண் இருந்தால்தானே ஒரு வழியில் போக முடியும். அப்படி நமக்கு இரு கண்களாக இருப்பவைதான் விநயமும், ச்ரத்தையும். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலே இன்னொன்றும் வந்துவிடும். ஒன்றிடம் நான் அடங்கிக் கிடக்கிறோம் என்றாலே அதுதான் நமக்கு நல்லது செய்யும் என்ற த்ருட நம்பிக்கையாலேயே அப்படி கிடக்கிறோம். அதே மாதிரி, ஒன்றிடம் நாம் அதுவே ப்ரம ப்ரயோஜனம் தருமென்று த்ருட நம்பிக்கை வைக்கிறோமென்றால், அந்த ப்ரயோஜனத்தைப் பெற அதனிடம் அடங்கிக் கிடக்கத்தானே செய்வோம்?.


கீதையிலே பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், ச்ரத்தையையும் சொல்லியிருக்கிறார். முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம். பிறகு பரிப்ரச்னம் என்கிறதாக கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது, ஸேவை என்பவற்றை சிஷ்ய லக்ஷணமாகச் சொன்னார். ஸேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு; பலவெஇதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை ஸ்வீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. அப்பறம் "ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்" [சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான்].என்றும் சொல்லியிருக்கிறார்.


பரிப்ரச்னம் [கேள்வி கேட்பது] என்பது எப்படி விநயமாகும்?. குரு சொல்வதில் நிச்சயம் ஏற்படாவிட்டால்தானே இப்படிக் கேட்கத் தோன்றும்?.
ஆகையால் குரு சொல்வது புரியவில்லை அல்லது அவரிடமே ஸந்தேகத்தைக் காட்டுவது போல அல்லவா இந்த பரிப்ரச்னம் என்பது தோன்றுகிறது?. "ஸம்சயாத்மா விநச்யதி" என்பதாக கீதையில் சந்தேகக்காரன் நாசமடைகிறான் என்று வேறு சொல்லியிருக்கிறாரே?. குருவின் கூற்றில் சந்தேகத்தை எழுப்பி, அதன் மூலமாக விநச்யதி என்று பகவானது சாபத்தை ஏற்பதை எப்படி விநயமாகச் சொல்வது என்று தோன்றலாம். இங்கே பரிப்ரசனத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது குருவை வளைத்து வளைத்து கேள்வி கேட்பது அல்லது அவரது கூற்றில் ஸந்தேகப்படுவது என்பதாக இல்லை. குரு சொன்னது தனக்கு நன்றாகப் புரிந்ததா என்று "தன்னைத் தானே" கேள்வி கேட்டு, ஆத்ம சோதனை பண்ணிக் கொண்டு, புரியாதவற்றை விளக்கமாக குருவிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளல் என்பது தான். தனக்கு அணு அளவு புரியவில்லை என்றாலும், மறைக்காது, ஒளிக்காது அதனை குருவிடம் சமர்ப்பித்து, அதனை தெளிவு பெறுதல் என்பது வினயம் தானே?.


நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 7; பக்கம் 286-288

------------------------------------------------------------------------------

நாம் சாந்தர்களாக இருக்க வேண்டும், ஸத்வ குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதால்தான் ஆஹார விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடம்பை மட்டுமல்லாது உள்ளத்தையும் வளர்ப்பதாக உணவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே சாஸ்திரத்தில் போஜன விதிகளை ஏற்படுத்தியுள்ளனர். பரம சாத்விக உணவானாலுங்கூட அளவு முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு சாப்பாடு, ஒரு பலகாரம் என்றிருப்பது நல்லது. இல்லாவிடில் இரண்டு சாப்பாடு, ஒரு டிபன் என்று இப்போது பலர் வைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தாலும், ஒவ்வொரு வேளையும் மிதமாகச் சாப்பிட வேண்டும். வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாராமும் அரை வயிற்ற்குக்குத்தான் சாப்பிடணும். கால் வயிற்றுக்கு ஜலம் குடிக்கணும், மற்ற கால் வயிறு காலியாக வாயுவுக்கு விட்டுவிடணும்.


சனிக்கிழமை, குருவாரம், ஸோமவாரம், மாதா-பிதா இல்லாதவர்களானால் அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற நாட்களில் ஒரு வேளை சாப்பாடு, ஒருவேளை பலகாரம் என்று வைத்துக் கொள்ளுதல் நலம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை லங்கணம் , அதாவது முழுப் பட்டினி போட வேண்டும். அது தான் ஏகாதசி சுத்த உபவாசம். சுத்த உபவாசம் என்றால் முழுப்பட்டினி என்று தெரியும். உபவாசம் என்றால் 'கூட வசிப்பது என்று பொருள். பகவானுக்கு பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பதுதான் உபவாஸம். ப்ருஹதாரண்ய உபநிஷத்திலேயே பட்டினி போட்டு வ்ரதம் இருப்பதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.


ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி விரதம் சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்குப் பிறகு ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்று இருக்கிறது. ஏகாதசியன்று பூர்ண உபவாசமே சொல்லப்பட்டிருக்கிறது. சிவபரமான விரதங்களை வைஷ்ணவர்கள் அனுஷ்டிக்க மாட்டார்கள். அதே போல, வைஷ்ணவ பரமான விரதங்களை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் ஏகாதசி மட்டும் அத்தனை பேருக்கும்
பொதுவாக தர்ம-சாஸ்திரத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.


ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம், ஆனால் ரொம்ப கஷ்டமும் கூட. அடுத்தபடியாக ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது. அதற்கடுத்தது, நிஜப் பலஹாரமாக பழத்தோடு பால் சாப்பிடுவது. வியாதியஸ்தர்கள் ஒருவேளை பக்வமான இட்லி-தோசை போன்றவையும் பழமும் சாப்பிடுவது என்று இருக்கிறது. ஆனால் இவற்றில் முக்கியமாக ஒரு வேளை கூட அன்னம் உண்ணாது இருத்தல் முக்கியம்.


நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3 - பக்கம் 616-619, 657-658 & 675

--------------------------------------------------------------------------------------------

பரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மெளன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே, வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்றும் ஒரு ரூபம் இருப்பதைப் பார்க்கிறோம். 'நாததநும் அநிசம் சங்கரம்' என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேச்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். தநு என்றாம் சரீரம். இதில் ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன (ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வரஸப்தஸ்வர) என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார். ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரங்கள் எப்படியென்று புரியாமல் இருந்தது. வாஸுதேவாச்சார், ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி போன்ற எல்லோரிடமும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல் இருந்தது, பிறகு ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமமும், பஞ்சமமும் (ஸ, ப) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈச்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும் விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்தும் பரமேச்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும்படியான பிரமாணங்கள் அகப்பட்டன.


விக்ருதிகளான ரி, க, ம, த, நி என்னும் ஸ்வரங்களில் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது. ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பதின் முதல் எழுத்துக்களே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. எழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். 'ஸ'வுக்கு அடுத்து வரும் 'ரி'யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. 'க' ஆடு போடும் சத்தம். 'ம' க்ரெளஞ்ச பக்ஷியின் கூவல். 'ப' குயிலின் ஒலி. 'த' குதிரைக் கனைப்பு. 'நி' யானையின் பிளிறல்.

சீக்ஷா சாஸ்திரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாகவேண்டுமென்று சொல்ல்யிருக்கிறதோ, அதேபோல ஸங்கீத சாஸ்திரத்தின் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து, உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே தியாகராஜ ஸ்வாமிகள் 'சோபில்லு ஸப்தஸ்வர' என்னும் க்ருதியில் சொல்கிறார்.


நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 820-821

------------------------------------------------------------------------------------------------

ஆசார்யாளும் சரி, அவருக்கு முந்தி க்ருஷ்ண பரமாத்மாவும் சரி, கர்மயோக அதிகாரிகள், ஞானயோக அதிகாரிகள் என்று இரண்டே பிரிவுகளை மட்டும் பண்ணினார்கள்?, மூன்றாவதாக பக்தியோக அதிகாரிகள் என்ற பிரிவினை ஏன் பண்ணவில்லை?. ஏனென்றால் கர்மயோகி, ஞான யோகி ஆகிய இருவருக்குமே பக்தி அத்யாவச்யம் என்பதால் அதனை தனியாகப் பிரித்துச் சொல்லாது இரண்டு வழிகளுக்கும், இரு பிரிவுகளுக்கும் ஒரு முக்யமான அங்கமாக பக்தி பண்ண வேண்டியிருப்பதால் அதனைத் தனியாகச் சொல்லவில்லை. கர்மயோகியும் ஒரு லெவலில் பக்தி பண்ண வேண்டும், ஞான வழிச் செல்பவனும் ஒரு லெவலில் பக்தி பண்ணதான் வேண்டும். ச்ரத்தையில் கீழ் மட்டத்தில் ஒன்று, மேல் மட்டத்தில் ஒன்று என இரண்டு லெவல் சொன்னது போல பக்தி-சிரத்தை என்று சேர்த்துச் சொல்வதற்கு ஏற்றபடி இரண்டு லெவல்.

டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் கோர்ஸ்களில் லோயர்-ஹயர் என்ற இரண்டு இருப்பது போல கீழ் லெவல் கர்மாக்காரன் நம் கர்மாவை எல்லாம் பார்த்துக் கொண்டு, தவறானால் தண்டிக்க ஈச்வரன் இருக்கிறான். என்ற ஞாபகம் இருப்பதற்காக பக்தி பண்ண வேண்டும். அந்த லெவலில் இருந்து கொஞ்சம் முன்னேறி, சிதறி ஓடிக்கொண்டிருக்கும் மனசை ப்ரேமையினால் ஒருமுகப்படுத்துவதற்காக பக்தி பண்ண வேண்டும். இன்னும் கொஞ்சம் முன்னேறி-ஆனாலும் லோயர் தான்; ஹயருக்குப் போகவில்லை - பண்ணும் பக்தி, கார்யமெல்லாம் அவனுக்கே என்று 'பல த்யாகம்' பண்ணுவதால பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் 'ஹையர்' என்று சொல்வதான் ஞானயோகம் பண்ணுவது. தான் எந்த ஆத்மாவை - ப்ரம்மத்தை -அனுபவிக்க சாதனை பண்ணுகிறோமோ அதுவேதான் ஸகுணத்தில் ஈச்வரனாக இருப்பது, தனக்கு அத்வைத வாசனையைக் கொடுத்து இந்த வழியில் போகப் பண்ணியிருப்பவன் இந்த ஈச்வரந்தான், முடிவாக ஸித்தியும் அவன் அனுக்ரஹத்தால் தான் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தி பண்ண வேண்டும்.

அதற்கு மேலே - மேலோ, கீழோ, 'ஹை'யா, 'லோ'வா எதுவுமே தெரியாத - அநுபுதியையே அடைந்துவிட்ட ஆத்ம சாக்ஷாத்காரம் என்ற ஸித்தியைப் பெற்ற ஸித்தர்கள் (இங்கு குறிப்பிடுபவர்கள் அஷ்டமா ஸித்தி பெற்றவர்கள் அல்ல) கூட பக்தி பண்ணுவார்கள், அதற்குக் காரணமே கிடையாது என்று சுகாச்சார்யாள் கூட ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியிருக்கிறார்.

ஆக, இப்படி எல்லா நிலையிலும் கர்மா, ஞானம் ஆகிய இரண்டிலும் பக்தி இருப்பதால்தான் அதை தனியாகப் பிரித்துச் சொல்லவில்லை.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 6; பக்கம் 278-279
--------------------------------------------------------------------------------------------

ஸ்நானத்தில் 5 வகைகள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றில் ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான் ஜலத்தில் குளிப்பது 'வாருணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே, இதுவே முக்ய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பக்ஷம்தான். இதற்கப்பறம் வருவது தான் 'கெளண'மாக கழுத்துவரை குளிப்பது, இடுப்புவரை குளிப்பது போன்றவை. ஆனால் இந்த கெளண ஸ்நானங்கள் எல்லாம் ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும் போது விபூதி ஸ்நானம் செய்து கொள்ளுவார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை, ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்ற்கு சொல்கிறோம்.


பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கிறது. கோ தூளி என்று பெயர். ஸ்ரீக்ருஷ்ணனே இந்த பசுக்களில் தூள் சந்தனப் பொடி தூவினார் போல தனது உடம்பில் படிந்தபடி 'கோதூளீ தூஸரிதனாக' இருந்தானாம். இவ்வாறான 'கோ-தூளி' நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம், இதன் பெயர் 'வாயவ்யம்'. இது வாயுவுடன் ஸம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.


அபூர்வமாக சில சமயங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழிகிறதல்லவா, இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்திற்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது'திவ்ய-ஸ்நானம்' என்று பெயர். இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம்மிது தெளிப்பர். சந்தியா வந்தனத்தில் 'ஆபோ ஹி ஷ்டா' சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்துதெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை, இதன் பெயர் 'ப்ராஹ்மம்'. 'ப்ரம்மம்' என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோஷணத்திற்கு 'ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.


பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈச்வரார்பணமாகப் பண்ணுவதாகவேஅத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 500-501
-------------------------------------------------------------------------------------------

வியாஸரை விட நமக்கு/ஹிந்துக்களுக்கு பரம் உபகாரம் செய்தவர் இன்னொருவர் இல்லை. வேதங்களை விபாகம் செய்து, 5ஆம் வேதம் என்னும்படியான மஹாபாரதத்தை அளித்து, அவரவர் இஷ்ட தேவதையை முழுமுதல் தெய்வமாக ஆராதிக்க வசதியாக 18 புராணங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்ததுடன் பரம சத்யமான பிரம்ம தத்வத்தை ரத்தின சுருக்கமாகச் சொல்கிற பிரம்ம ஸூத்திரத்தையும் அனுக்கிரஹித்தவர் ஸ்ரீ வியாஸர். பிரம்ம ஸூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஸ்ரீ கண்டாசாரியர் (சைவ சித்தாந்தம்),வல்லபாசாரியார் (கிருஷ்ண பக்தி மார்க்கம்) ஆகியோர் தத்தம் சித்தாந்தப்படி பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள்.


ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிற நாம் அனைவரும் மேலே சொன்ன சித்தாந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கிறோம். மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் வளர்ந்து வருகிறது. அதனால் அவை ஒன்றில்லைஎன்றாகிவிடுமா?. அடிமரமும், வேரும் எல்லாக் கிளைகளுக்கும் ஒன்றுதானே?. அப்படித்தான் நாம் இத்தனை பேருக்கும், இத்தனை பிரிவுகளுக்கும் அடிமரமாக, வேராக இருக்கிறார் வேத வியாஸ மஹரிஷி.


ஹிந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஒரு தத்துவத்தின்பால் பிரிந்திருப்பதால் தோஷமில்லை. ஃபிலாஸபி என்று வரும்போது நான் அத்வைதி, எனக்கு சங்கரர், நீ த்வைதி, உனக்கு மத்வர், அவர் வசிஷ்டாத்வைதி, அவருக்கு ராமானுஜர் என்பதாகஇருந்துவிட்டுப் போவோம். பல அபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை ஆராய்ந்து பார்ப்பதில் தப்பில்லை. ஆனாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி, ஹிந்துவாகப் பிறந்த சகலரும் ஒன்று சேர்ந்து வேத வியாஸ பகவானை, அவரது படத்தைத் தோளில் சுமந்து கொண்டு வீதி பவனி எடுத்துவரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஹிந்து என்ற பெயரில் உள்ள நாம் எல்லோரின் நமஸ்காரங்களுகும் பாத்திரராக இருக்கிறவர் வேத வியாஸர். வைதிக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதார ஸ்தம்பம் போல் நிற்கிற ஸ்ரீ வேத வியாஸ மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை. அந்த மகா புருஷரை ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொருவரும் ஸ்மரிக்க வேண்டும். நமக்கு சாஸ்வத செளக்கியத்துக்கான வழியைக் காட்டிக் கொடுத்திருக்கிற வேத வியாஸருக்கு நாம் நன்றியைக் காட்டக் கடமைப்பட்டிருக்க்றோம்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 1; பக்கம் 588-589

-------------------------------------------------------------------------------------------

ஈஸ்வரன்தான் கர்மாவுக்குப் பலன் தருபவன், கர்மா தானாகவே பலனைத் தருவதில்லை என்பதுதான் அத்வைதிகளின் கொள்கை. 'கர்மாவே பலனைத் தருகிறது; ஈஸ்வரன் என்று ஒருத்தனைக் கொண்டுவர வேண்டாம்' என்று அபிப்ராயம் கொண்ட பூர்வ மீமாம்ஸகர்களை ஆசார்யார் முதலான அத்வைதிகள் நன்றாகக் கண்டித்து, ஸகலத்துக்கும் பலதாதா, லோக வ்யாபாரத்தையெல்லாம் நடத்தும் ஈஸ்வரந்தான் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும் மாயைக்கு உட்பட்ட கர்ம லோகத்தில்தான் அவனைப் பலதாதாவாகச் சொல்லியிருக்கிறார்களே தவிர மாயையிலிருந்து விடுபடும் ஞான சாதனையிலும், அதன் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வரும் பலன்கள தருகிறவன் ஈஸ்வரன் என்று அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை. 'கர்ம யோகத்தால் சித்த சுத்திஏற்படுகிறது;சித்தம் சுத்தமானபின் ஞான விசாரம் பண்ண ஜீவன் பக்வமாகிறான்' என்று சொல்வார்களே தவிர, 'கர்மயோகத்துக்ப் பலனாக ஈஸ்வரன் சித்த சுத்தி அநுக்ரஹித்து ஞான நிஷ்டைக்கு ஒரு ஜீவனைப் பக்குவப்படுத்துகிறான்' என்று சொல்வதில்லை. ஆனால் பகவத்பாதர் இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கிறார். கர்மத்திலிருந்து ஞானத்துக்குப் போக ஈஸ்வர க்ருபை வேண்டுமென்பதைக் கர்மா எல்லாம் போய் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதையே முக்யமாக விவரிக்கும் கீதையின் கடைசி அத்யாயத்தில்ஆசார்யாள் தனது பாஷ்யத்தில் சொல்கிறார்.

கீதையின் இரண்டாம் அத்யாயத்தில் முதலில் ரொம்பவும் ஞானவேதாந்த தத்வங்களைச் சொல்லிவிட்டு, இதுவரை ஸாங்கியம் சொன்னேன், இனிமேல் யோகம் சொல்கிறேன் என்ற்கு கர்ம யோகத்தைப் பற்றி பகவான் சொல்ல ஆரம்பிக்கிறார் (கீதை அத்யாயம் 2, ச்லோகம் 39).ஸாதாரணமாக ஸாங்கிய என்றால் கபிலரது ஸாங்கிய யோகத்தையும், யோகம் என்றால் பதஞ்சலியின் ராஜயோகத்தையும் நினைப்போம். இங்கே பகவான் சொல்வது ஞான யோகத்தை ஸாங்கியமாகவும், கர்ம மார்க்கத்தை யோகமென்றும் சொல்கிறார். இது கர்மா செய்கிற யோகமானாலும், இதுவேதான் கர்ம பந்தத்தை அறுக்கிறது என்று கூறுகிறார். ஆசையின் மேல், பலனை உத்தேசித்து கர்மா பண்ணினால் அத்ய் ஸம்ஸார பந்தத்தை உண்டுசெய்கிறது. ஆசையை விட்டு, பலனை உத்தேசிக்காது, லோக க்ஷேமத்துக்காகவும்,சித்த சுத்திக்காகவும் சாஸ்த்ரீய கர்மாவைச் செய்தால் அது பந்தத்தை அறுக்கிறது. 'கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி' - 'கர்மக் கட்டை அறுத்துப் போடுவாய்' என்கிறார். இந்த இடத்தில் ஆசார்யார் தமது பாஷ்யத்தில் 'ஈச்வராநுக்ரஹத்தைக் காரணமாகக் கொண்டு ஞானத்தை அடைந்துதர்ம-அதர்மங்கள் எனப்படுகிற கட்டான கர்மக்கட்டை அறுப்பாய்' என்று விளக்கியிருக்கிறார். 'ஈச்வர ப்ரஸாத நிமித்த ஞான ப்ராப்தே' என்று பாஷ்யத்தில் இருக்கிறது. கர்மா போவதைவிட ஞானம் வருவது முக்யம், ஞானத்தை அடைவதற்கு வழியாகவே ஒருவன் கர்மாவைப் போக்கிக் கொள்வதற்கு ஈச்வரன் அநுக்ரஹிக்கிறான் என்ற அபிப்ராயத்தை ஆசார்யார் நிஸ்ஸந்தேகமாக வெளியிட்டிருக்கிறார்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 4; பக்கம் 726-728

----------------------------------------------------------------------------------------

கர்ம மார்க்கத்தால் இருவித பலன்கள், ஒன்று கர்மாவினால் நேரடியாக ஏற்படும் பூலோக-ஸ்வர்க்க லோக சந்தோஷ பலன், இன்னொன்று கர்மாவின் மூலமான எந்தப் பலனும் வேண்டாம் என்று ஈஸ்வரார்ப்பணம் பண்ணிவிட்டு, அவனுடைய ஆஜ்ஞை என்பதாக மட்டும் பண்ணிக் கொண்டுபோனால், நாளடைவில் உண்டாகும் சித்த சுத்தி என்கிற பலன். சித்த சுத்தி அத்தோடு முடிவதில்லை, அதுவே நிவ்ருத்தி மார்க்கம் என்னும் ஞானயோகத்தில் ப்ரவேசிப்பதற்கான யோக்யதையையும் உண்டாக்கிவிடுகிறது. இரண்டு விதமான பலன் என்று நான் சொன்னாலும், வாஸ்தவத்தில் கர்ம பலன் என்றால் அது நேரடியாக பூலோக-ஸ்வர்க்க லோகங்களில் தரும் தற்காலிக சந்தோஷங்கள்தான். இந்தப் பலன் வேண்டாமென்று நினைத்தாலும், கர்மா செய்யாதிருக்க முடியாதே என்பதாலும், விதிப்படி ஸ்வதர்மங்களைச் செய்வதால் நமக்கு ஒரு டிஸிப்ளின் உண்டாகிறது என்பதாலும்,சமூகத்திற்கும், ஒழுங்கான வாழ்க்கைக்கும் உதவ முடிகிறது என்பதால் கர்மா முக்கியம். கர்மாக்களின் நேரடியான பலனாக சித்த சுத்தி ஏற்படுவதில்லை. இஹாமுத்ர பலன் வேண்டாம் என்று நினைத்து பண்ணும் கர்மாக்களுக்குப் பலனாக ஈஸ்வரப் ப்ரசாதமாக வருவதே சித்த-சுத்தி. நேர்ப் பலன் வேண்டாமென்றிருந்தாலும், நம்முடைய ஆஜ்ஞை என்பதாலும், ஸமூகத்திற்கு கர்மாவின் பலன்கள் தேவையாக இருக்கிறது என்பதை உத்தேசித்து நம்முடைய ப்ரீதிக்காக இவன் இவ்வளவு நன்றாகக் கர்மாநுஷ்டானம் செய்கிறானே?, இந்த மனோபாவத்திற்க்காக இவனுடைய சித்தத்தின் அசுத்தங்களைப் போக்குவோம் என்று ஈஸ்வரனே அனுக்ரஹிப்பதுதான் சித்த-சுத்தி.


ஞான மார்க்கத்தில் போகவும் யோக்யதை இல்லை, கர்மாவினால் ஏற்படும் ஸந்தோஷங்களிலும் நிறைந்த நிறைவில்லை என்றிருக்கிறவர்களிடம் பகவான், "உன்னால் கார்யங்களை விடமுடியாததால், பண்ணிக்கொண்டே போ. ஆனால் பலனில் ஆசை வைக்காதே, பலத்தாயகம் பண்ணி, என் ப்ரீதிக்காகஎன்று கர்மங்களை அநுஷ்டி. அதனால் க்ரமத்தில் சித்த சுத்தி உண்டாகும். பின்னர் ஞான மார்க்கத்தில் பிரவேசிக்கலாம் என்கிறார். கர்ம மார்க்கம் என்பது இங்கே கர்ம யோகம் என்றே உயர்வு பெற்று விடுகிறது. யோகம் என்றால் சேர்ந்திருப்பது. பரம ஸத்யத்தில் ஒரு ஜீவனைச் சேர்ப்பதற்கு உதவும் வழிகளைஅத்யாத்ம சாஸ்திரங்களில் யோகம், யோகம் என்று சொல்லியிருக்கும். நேராக இவற்றில் ஒவ்வொன்றுமே முடிவான ஸத்ய லக்ஷ்யத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதில்லை. மெயின் ரோட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கிற சந்து மாதிரி இருந்தால் கூடப் போதும், அதுவும் யோகம் தான். லக்ஷ்யத்தில் நேரே சேர்ப்பது ஞான யோகம், அந்த மெயின் ரோடுக்குக் கொண்டுபோய் விடுவது கர்ம யோகம். மெயின் ரோட்டுக்குப் போக பல ஜென்மங்கள் பிடிக்கலாம். ஆனாலும் ஒருநாள் கொண்டு விட்டுவிடும்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 299-300

---------------------------------------------------------------------------------------------

யஸ்ய தேவே பராபக்திர்-யதா தேவே ததா குரெள

தஸ்யைதே கதிதாஹ்யர்த்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந:

என்று ச்வேதாத்வதர உபநிஷத் சொல்லுகிறது. அதாவது, ஸாக்ஷாத் ஈச்வரனிடத்தே எவ்வளவு பக்தி வைக்க வேண்டுமோ, அதே அளவுக்கு குருவிடமும் பக்தி வைக்க வேண்டும் என்பதாகச் சொல்கிறது. அவ்வாறு பக்தி வைக்கும் மஹாத்மனான சிஷ்யனுக்கே குரு உபதேசிக்கும் விஷயத்தின் உள்ளர்த்தம் முழுவதும்வெளிப்படும் என்று சொல்கிறது. ஈச்வர பக்திக்கு ஸமானமாக குருபக்தி உள்ள சிஷ்யனை 'மஹாத்மா' என்று உயர்த்திச் சொல்லியிருப்பதால், இந்த பக்தி பாவமே அவனுக்கு ஆத்ம ஞானத்தைக் கொடுத்து மஹாத்மா என்னும்படியான நிலைக்கு ஆக்கிவிடுகிறது என்று தெரிகிறது. மேலே உள்ள ஸ்லோகத்தில் 'யஸ்ய'என்று அதாவது, 'எவனுக்கு' என ஆரம்பித்து , எவனுக்கு ஈச்வரனிடத்து உத்தம பக்தி இருக்கிறதோ, அந்த மஹாத்மாவுக்குத் தத்வார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும் என்று சொல்லியிருக்கிறது.

பிரகாசிக்கும் என்றால் உள்ளர்த்தங்கள் மூளைக்குப் புரியும் என்று அர்த்தம் செய்து கொள்வதோடு முடிவதில்லை. மூளைக்குப் புரியும்படியாக ரஹஸ்யார்த்தங்களை குருவே சொல்லிவிடுகிறார். பக்தியினால்தான் இந்த மூளைக் கார்ய்த்தைப் பண்ணிக் கொள்ளவேண்டும் என்றில்லை. பின்னே என்ன அர்த்தம் என்றால், உபதேசத்தின்ஸாரமாக எந்த அநுபவம் இருக்கிறதோ, அது சிஷ்யனின் ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும். ஈச்வர க்ருபையில், குரு க்ருபையில் மறைபொருளை, சிக்கலான விஷயத்தை ஸ்பஷ்டமாகப் புரிந்துகொண்டு விடுகிற திறமை பெறக் கூடும்தான். ஆனால் இன்னும் சற்று ஆலோசித்துப் பார்த்தால், இப்படி மூளையின் சாதிப்போடு விஷயத்தைமுடித்துவிட்டால் அது பிரயோஜனமில்லை என்று தெரியும். அத்யாத்மக உபதேசம் எதற்கு இருக்கிறது?, மூளையின் த்ருப்திக்கா?, இல்லையே?. மூளையின் த்ருப்தி அஹங்காரம் சேர்ப்பதல்லவா?. அத்யாத்மக உபதேசமோ அஹங்காரம் அழிவதற்கல்லவா. ஆகையினால் மூளை ரீதியான ப்ரகாசத்தில் எதையோ தெளிவு செய்வதென்றுவைத்துக் கொண்டால் கூட, அதுவும் பிரத்யக்ஷமாக சிஷ்யனுக்கு அனுபவத்தில் வரவேண்டும். ஸ்வாநுபூதி என்பது இப்படி ஒருவர் நேராகத் தானே அனுபவிப்பதுதான். ஸ்வாநுபூதி என்பதை அபரோக்ஷாநுபூதி என்றும் சொல்வார்கள். அபரோக்ஷாநுபூதி என்ற பெயரிலேயே ஆசார்யாள் ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார்.

பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்யமாக இருப்பது. அபரோக்ஷம் என்பது பரோக்ஷம் என்பதற்கு ஆப்போஸிட், நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு என்பது அபரோக்ஷம். அநுபவத்திற்கு வராதவரையில் ஒன்றைப் பற்றியஅறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாக புஸ்தகத்தில் படித்தும், நெட்டுருப் போட்டும், கோட் (quote) பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் செய்தாலும், அது காதுக்குள்ளும், காது வழியாகமூளைக்குள்ளும் போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரையில் கூட அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமகாக்ப் பேசணும். அப்போதுதான் அது அபரோக்ஷம்.


ஒரு ஸித்தாந்தமென்றால் அது ச்ருதி, யுக்தி, அனுபவம் என்ற மூன்றுக்கும் பொருந்துவதாக, மூன்றுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கருத்தையே எல்லா ஆசார்யர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். ச்ருதி சொல்கிற விஷயங்களை அப்படியே ஏற்க வேண்டும். அதற்கு விரோதமில்லாமலும், அதன் முடிவுக்கே கொண்டு விடுவதாகவும்,அல்லது அதில் குறிப்பு மட்டும் காட்டியிருப்பதை நன்றாக விளக்கியும், அதில் சொல்லாமல் விட்ட் விஷயங்களை நன்றாக ஆராய்ச்சி பண்ணியும் புத்திவாதம் செய்வதுதான் யுக்தி. முடிவிலே ச்ருதியும் யுக்தியும் அநுபவத்தில் கொண்டுவிட்டால்தான் ப்ரயோஜனம். அந்த அநுபவம் ஹ்ருதயம் என்பதான உயிருக்குள்ளேயே ஏற்படுவது. ஆகவே ஈச்வர பக்தி இருப்பவனுக்கே, அதோடுகூட அந்த ஈச்வர பக்திக்கு இணையான குருபக்தி உள்ள்வனுக்கே தத்வார்த்தமெல்லாம் பிரகாசிக்கும் என்று சொல்கிறபோது அந்த ப்ரகாசம் என்பது இந்த அநுபூதிதான். ப்ரகாசம் என்பதை அப்படியே மொழி பெயர்த்த மேல்நாட்டினர் அதை enlightenment என்றும் illumniation என்று சொல்கிறார்கள்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 89-91

------------------------------------------------------------------------------------------

ஞான வழியில் லக்ஷ்ய ஸித்தியை அடைவிக்கிற முடிவான நேர்ஸாதனத்திற்கு நிதித்யாஸனம் என்று பெயர், இது த்யான யோகத்தைச் சார்ந்ததுதான். உயிரோடு உறவு கொண்டாடி ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதான பக்தி யோகத்தையும், கரைத்துக் கொண்ட த்யான யோகமாகத்தான் அதை அப்யஸிக்க வேண்டும். விவேக சூடாமணியில் இதை ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். தாம் மட்டும் அப்படிச் சொல்லவில்லை, வேதத்திலேயே அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாந் முமுக்ஷோ:

முக்தேர்-ஹேதூந் வக்தி ஸாக்ஷாச்-ச்ருதேர்கீ:

அடிப்படை ச்ரத்தை, அதோடு பக்தி யோகம், த்யான யோகம் இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம், இப்படி சாக்ஷாத் வேத வாக்யமே சொல்கிறது என்று சங்கராசார்யார் கூறியிருக்கிறார். கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. இதன் ஆரம்பமே, "ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி" என்பதுதான். ப்ரம்ம சூத்ர பாஷ்யத்திலும் ஆசார்யாள் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ப்ரம்ம ஸுத்ரத்தில் ப்ரஹ்மானுபவத்தை உண்டாக்கும் ஸாதனத்திற்கு "ஸம்ராதனம்" என்று பெயர்.ஆராதனம், ஆராதனை என்ற மாதிரியே அர்த்தம் கொடுப்பது 'ஸம்ராதனம்' என்ற வார்த்தை. பக்தி வழிபாட்டைத்தான் பொதுவாக ஆராதனை என்று கூறுகிறோம்.இங்கே ஞான வழிபாட்டை 'ஸம்ராதனம்' என்று கூறியிருக்கிறார். இவ்வார்த்தையை ஆசார்யாள் விளக்கி பாஷ்யம் பண்ணும் போது "பக்தி-த்யான-ப்ரணிதானாதி அநுஷ்டானம்"என்றே சொல்லியிருக்கிறார். 'ப்ரணிதானம்' என்றால் ஸமாதி, ஸமாதானம் முதலிவை மாதிரி 'பரிபூர்ணமாக ஒருமுகப்படித்திச் சேர்த்து வைப்பது' என்று அர்த்தம். அந்தஃகரணத்தைப் பூர்ணமாக ஒருமுகப்படுத்தி த்யானம் செய்வதுதான் அந்த ஸாதனம் என்றே தோன்றும். ஆனால் அதே ஆசார்யாளே இங்கே பக்தியை முதலில் போட்டுஅப்புறமே த்யானத்தைச் சொல்லி இரண்டிலும், இரண்டாலும் ப்ரணிதானம் பண்ண வேண்டும் என்கிறார்.

பிரம்ம ஸுத்ரத்தில் ஒரு இடத்தில் ஒருவன் தான் பெற்றுக்கொண்ட உபதேசத்தை விடாமல் பல ஆவிருத்தி மனனம் செய்ய வேண்டும் - அதாவது ஆலோசனை பண்ணி, அலசி-அலசி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வருகிறது. இங்கே மூல ஸுத்ரத்தில் பக்தி பாவத்துடன் செய்கிற உபாஸனையோ அல்லது ஞான ஸாதனை பற்றியோஏதுமில்லை, பொதுவாக ஆவிருத்தி பண்ணனும் என்று மட்டும் இருக்கிறது. இதற்கு முன்னாலும், பின்னாலும் வரும் ஸுத்ரங்களைக் கொண்டு பார்த்தால், ஞான மார்க்கத்தில் மஹாவாக்ய உபதேசம் பெற்ற பிறகு முமுக்ஷு பண்ண வேண்டிய மனனம்தான் இங்கே சொல்லியிருப்பது என்று தெளிவாகிறது. ஆசார்யாள் இதை மிக தெளிவாக பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஆனால் இந்த ஸுத்ரத்தின் முடிவில் தொகுத்துச் சொல்லும் போது அவராகவே உபாஸனா மார்க்கத்தைப் பற்றியும் சொல்லி, அறிவது, உபாஸிப்பது என்ற இரண்டையும் வித்யாஸப்படுத்தாமல் ஒன்றாகவே உபநிஷதங்களில் சில இடங்களில் சொல்லியிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 6; பக்கம் 518-520
------------------------------------------------------------------------------------------

ப்ருஹதாரண்யகத்தில் பட்டினி இருந்து விரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது. ஆத்மாவை அடைவதற்கு அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ், உபவாசம் போன்றவற்றை அனுஷ்டிக்கவேண்டும் என்பதாக வருகிறது. 'அநாசகேந' என்று உபவாசத்தைச் சொல்லியிருக்கிறது அங்கே. அசனம் என்றால் சாப்பாடு, 'ஆச' என்றால் சாப்பிடுவது.'அநாசகேந'என்றால் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயல்கிறார்கள் என்ற்கு இந்த உபநிஷத் சொல்கிறது.

இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாபிகலாக பாஷ்யம் செய்து இருக்கிறார். சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதனால் இங்கே அசனம் என்று கூறியிருப்பது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியைவிடுமாறெ இந்த மந்திரம் சொல்கிறது என்று பாஷ்யம் செய்திருக்கிறார். ஆனால் இம்மாதிரி ஆசை அற்றுப் போக பட்டினி கிடந்து உபவாசம் இருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆசார்யாளுக்குத் தெரியாததல்ல. நம்முடைய பூஜா பத்ததிகள், கோவில், குளம், உத்ஸவம், பண்டிகை வ்ரதம் எல்லாவற்றுக்குமே புனர்ஜீவன் தந்தவர், ஏகாதசி விரதத்தை அவசியமில்லாதது என்று சொல்லவே மாட்டார். அவர் இங்கே சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. இனிமேல் சாப்பிடுவதேயில்லை என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதையே தவறு என்று சொல்கிறார். அந்தமாதிரி உடலைச் சித்ரவதை செய்வதால் அந்த வதையை நினைத்தும், அதனை சமாளிப்பதிலும் மனஸ் போகுமே தவிர ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார். கிருஷ்ண பரமாத்வாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.'நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத:...'[கீதை 6.16-17] என்பதில் பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாக பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாக சாப்பிடறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும் என்கிறார். ரொம்பவும் தீவிரமாகவும், 'forced' ஆகவும் உபவாஸாதிகளைஅநுஷ்டித்தால் எல்லாம் சிதிறிப் பிரயோஜனமில்லாமல் போய்விடும். அதனால் படிப்படியாகப் போக வேண்டும். என்பதுதான் நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் ஆகியோரது அபிப்ராயம். அவர்கள் சொன்ன context-ல் அடியோடு நிராகரிப்பது போல அழுத்திச் சொல்லும்படியாகியிருக்கிறது.

மருந்தென வேண்டாவாக் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்

என்று திருவள்ளூவர் கூறியதில், வயிற்றில் ஏற்கனவே போட்டது ஜீரணமான பிறகே உண்பது என்று தெரிந்த பின்னர் உண்பது ஆரோக்யம் என்று தெரிகிறது. காந்தியும் ஆத்ம சுத்திக்காகவே தான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். உண்ணாவிரத சமயத்தில் தமக்குப் புத்தியில் தெளிவு ஏற்பட்டதாகவும், மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார். இப்படியாக உடல் நலத்தோடு, உயிர் நலத்தையும், இம்மையோடு, மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள். முதலில் கஷ்டமாக இருந்தாலும், அப்யாஸத்தால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதேஇக்ஷு க்லேசாத் யதா ஆநந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம்


அதாவது, கரும்பை கசக்கிக் கிலேசப்படுத்துவதாலேயே கருப்பஞ்சாற்றை எடுத்து பானம் பண்ணுகிற இன்பம் கிடைக்கிறது, இதேபோல உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரசம் கிடைக்கிறது.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 661-665

------------------------------------------------------------------------------------------

நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள். அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயகஷரமான 'சிவ'.


உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப்பொருளாஅக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.


வேத நான்கினும் மெய்ப்பொருளாவது

நாத (ன்) நாமம் நமசிவாயவே

அவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில், சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை' என்று சொல்லியிருக்கிறார்.

சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி தான் ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில்,'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். ' சிவ சிவ என்கிலர் தீவினையாளர்' என்று திருமூலரும் திருமந்திரத்தில் சொல்வது இதைத்தான்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989

Monday, February 4, 2008

ஆச்சார்ய உபாசனை..குருவைப் பணிந்து பணிவிடை செய்வது ஞானிகளின் லக்ஷணங்களில் ஒன்று. ஞானிகளின் குணங்களாக தற்பெருமையின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, ஊக்கம், அடக்கமுடைமை இவற்றுடன் ஆச்சார்ய சேவையும் கூறப்பட்டுள்ளது.


குருவைப் பணிந்து பணிவிடை செய்வது "சாரீரத்துவம்" என்று கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா கீதையில், 'தேவர், மறையவர், ஆச்சார்யர், அறிவாளிகள் இவர்களை வழிபடுதலை 'உடல்வழித் தவம்' என்கிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தில் சாரீரத்துவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆதி சங்கரரும் "குரு சரணாம்புஜ நிர்பர பக்த" என்கிறார். அதாவது குருவைப் பற்றிக் கொள்' என்கிறார். மேலும் 'ஆச்சார்ய தேவோபவ' என்பதிலிருந்து, சங்கரரின் ஆச்சார்ய பக்தி தெரிகிறது. மேலும், எவன் ஒருவன் இறை வழிபாடும், குருவும் இல்லாது இருக்கிறானோ அவனுக்கு மனச் சாந்தி கிட்டாது என்கிறார்.
குருவை ஒரு மத்யஸ்தராகவும் கூறலாம். இறைவனைக் காணும் முன் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் பகுதியாக குருவைக் காண வேண்டும். பின்னர் அந்த குருவே ஈஸ்வர ரூபத்தை காண்பிப்பார். மனம் சாந்தி பெற குரு அனுக்கிரகம் அவசியம். புலனடக்கம், திருவருள், குருவருள் ஆகிய மூன்றும் இருந்தால் மனச் சாந்தி தானாக சித்திக்கும்.
சரி, சாந்தி, சாந்தி என்கிறேனே, யார்? / எது சாந்தி?. மனது சஞ்சலம் இல்லாமல் இருப்பதுதான் சாந்தி. சலனத்திற்கு எதிர்ப்பதமே சாந்தி. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், "ஸந்யா ஸ்க்ருத சம: சாந்தோ, நிஷ்டா சாந்தி: பராயணம்" என்று வருகிறது. பகவானே சாந்த ஸ்வரூபி, அதனால் அவனுக்கு "சாந்தன்" என்ற பெயர் உண்டு. சாந்த நிலை என்பது இறைவனே!. அதனாலேயே பிரணவாகாரமாக ஓம்! சாந்தி என்று கூறப்படுகிறது. இந்த சாந்த நிலையினை நமக்கு உணர்த்த, அதனை நோக்கி வழிகாட்ட குரு அவசியம்.


ஆதி சங்கரர் தன் தாயிடம் சன்யாசத்திற்கு உத்தரவு வாங்கிய பின்னர் குருவினை தேடி செல்கையில், நர்மதா நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதரைச் சந்திக்கிறார். அப்போது கோவிந்த பகவத் பாதர், சங்கரரிடம், 'நீ யார்?' என்று குகையின் உள்ளிருந்தபடியே கேட்க, சங்கரர், நான் உடம்பல்ல, என்று ஆரம்பித்து 10 ஸ்லோகங்களில் அத்வைத சாரத்தைச் சொல்லி விடுகிறார். இந்த 10 ஸ்லோகங்களுக்கு நிர்வாண சதகம் என்று பெயர். அந்த 10 ஸ்லோகங்களை கேட்ட பின் கோவிந்த பாதரால் உள்ளே இருக்க முடியவில்லையாம். வெளியில் வந்து சங்கரரைப் பார்க்கிறார். உடனேயே அவருக்கு சங்கரரிடம் இருக்கும் உயர்ந்த சிஷ்ய குணங்கள் புலனாகிறதாம். பிறகே அவர் சங்கரருக்கு சன்யாசமும் அளித்து சிஷ்யராக ஏற்றாராம். சங்கரரே பரமேஸ்வர அவதாரம், ஆனால் அவரும் கூட குரு வேண்டுமென்று தேடினார் என்பதன் மூலம் குருவின் அவசியம் தெளிவாகிறது.
குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவாகவும் இருக்கிறார், அந்த குருவை வணங்குவோம்.