Friday, August 21, 2009

விநாயகரை வணங்கிடுவோம் - ஸ்ரீ மஹா-கணபதி நவார்ணவ வேதபாத ஸ்தவம்

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...முன்பு கணேச ருணஹர ஸ்துதி சொல்லி விநாயக சதுர்த்தி கொண்டாடினோம். இந்த வருஷம், 'ஸ்ரீ மஹா-கணபதி நவார்ண வேதபாத ஸ்தவம்' என்னும் ஸ்தோத்ரத்தைச் சொல்லி நமஸ்கரிப்போமா?. அதற்கு முன்னால் இந்த ஸ்தோத்ரத்தைப் பற்றிய சிறு தகவல். சாதாரணமாக வேத மந்திரங்கள் கொண்டு கணபதி பூஜை செய்வோம், மந்த்ரோபாஸகர்கள் பீஜாக்ஷரம் கொண்ட மந்த்ரத்தை வைத்து ஸ்ரீகணநாதனை ஆராதிப்பர். இரண்டும் தெரியாத நம்மைப் போன்றவர்களுக்காகவே இந்த நவார்ண வேதபாத ஸ்தவம் என்று நினைக்கிறேன். இரண்டும் தெரியாது, ஆனால் வேதசாரமாகவும், மந்த்ர ஸாரமாகவும் வேழமுகத்தவனை வணங்கிட இந்த ஸ்தோத்ரம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

"ஸ்ரீகணாதிபதயே நம" என்கிற மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தினையும் முதலாகக் கொண்டு 9 ஸ்லோகங்களும், இந்த ஒன்பது ஸ்லோகங்களில் ஒவ்வொன்றின் முடிவிலும் வேத மந்த்ரமும் சேர்த்துச் செய்யப்பட்டது இது என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சொல்வதற்கு எளிதாகவும், அழகாகவும் உள்ள இந்த ஸ்தோத்ரத்தை பார்க்கலாம்.


ஸ்ரீகண்ட-தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித
ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே

ஹாலாஹலம் என்னும் கொடிய விஷத்தை உண்டு, அதனை தனது கழுத்திலேயே நிறுத்திக் கொண்ட ஸ்ரீபரமேஸ்வரனின் புதல்வரே!, அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியே!, உபாஸிப்பவர்களுக்கு அஷ்ட-லக்ஷ்மிகளின் அருளைத் தருபவரே!, மஹா-லக்ஷ்மி நித்யவாசம் செய்யும் வில்வ பத்ரத்தால் பூஜிக்கப்படுபவரே!, தனக்கு மேல் ஒருவர் இல்லாத தலைவரே!, என்னுடைய குலத்தில் மஹாலக்ஷ்மி என்றும் நித்யவாசம் செய்யும்படி அருள வேண்டும். [ஸ்ரீயம் வாஸய மே குலே - வேத வாக்யம்]


கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித
பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே

யானை முகத்தோனே!, கணதேவதைகளின் தலைவனே!, சந்த்ரனால் அலங்கரிக்கப்பட்ட சிரஸை உடையவனே!, ஸச்சிதானந்த வடிவானவனே!, வேதங்களுக்குத் தலைவனே!, தங்களை ஸேவிக்கிறேன். [பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே - வேத வாக்யம்]


ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே
க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம:

'ண' என்னும் எழுத்திலிருந்து ஆறாவது எழுத்தான 'ந' என்பதன் பொருளான 'இல்லாமை/ஏழ்மை'யை ஒழிப்பவரும், பிணிகள் என்னும் காட்டினை அழிப்பவரும், தனது தயையால் உலகைக் காப்பவரும், காடுகளுக்கு எல்லாம் தலைவராகவும் இருக்கும் கணபதிக்கு நமஸ்காரம். [வனானாம் பதயே நம: - வேத வாக்யம்]


தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே
தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம:

நல்லறிவைக் கொடுப்பவரும், விரும்பியதை அளிப்பவரும், நல்லணிகளால் அலங்கரிக்கப்பட்டவரும், திசைகளின் தலைவருமான கணபதே! தங்களுக்கு நமஸ்காரம். [திசாம்ச பதயே நம: - வேத வாக்யம்]


பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே
பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம:

சத்யோஜாதன், வாமதேவன், அகோரன், தத்புருஷன், ஈசானன் ஆகிய ஐந்து பிரம்மங்களாக இருப்பவரும், அந்தணனைக் கொல்லுதல், கள் குடித்தல், தர்மம் செய்ய வைத்த பொருளைக் கொள்ளையடித்தல், பிறன்மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல், மேற்சொன்ன 4 வித இழி செயல்களைச் செய்பவருடன் சகவாசம் கொள்ளுதல் ஆகிய ஐந்து மஹா பாதகங்களையும் அழிப்பவர், நிலம், நீர்,காற்று, தீ, வானம் ஆகிய ஐந்து பூதங்களின் வடிவாக இருப்பவரும், பசுக்களின் தலைவனுமாகிய உங்களுக்கு நமஸ்காரங்கள். [பசூனாம் பதயே நம: - வேத வாக்யம்]


தடித்கோடி ப்ரதீகாசதனவே விச்வ ஸாக்ஷிணே
தபஸ்வித்யாயினே துப்யம் ஸேநாநிப்யச்சவோ நம:

கோடி-மின்னலுக்கு இணையான ஒளி மிகுந்த உடலை உடையவரும், உலகனைத்திற்கும் ஸாக்ஷியாக இருப்பவரும், தபஸ்விகளை தன்மனதில் கொண்டவரும், படைகளுக்கெல்லாம் தலைவருமான தங்களுக்கு நமஸ்காரம்.
[ஸேநாநிப்யச்சவோ நம: - வேத வாக்யம்]


யே பஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்
நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம:

அழிவற்றவரான உங்களை வழிபடுபவர்கள் தங்களுடன் கலந்துவிடுகின்றனர், அவ்வாறான சிறப்பை நல்குபவரும், பலவித ரூபங்களைக் கொண்டவரும், மிகப் பெருமை வாய்ந்தவருமான உங்களுக்கு நமஸ்காரம். [முஷ்ணதாம் பதயே நம - வேத வாக்யம்] {முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை; வேறு பொருள் தெரிந்த்வர்கள் கூறினால் மகிழ்வேன்}

நகஜாவர புத்ராய ஸுர ராஜார்சிதாய ச
ஸகுணாய நமஸ்துப்யம் ஸும்ருடீகாய மீடுஷே

பார்வதீ தேவியின் சிறந்த புதல்வரும், தேவேந்திரரால் பூஜிக்கப்பட்டவரும், நற்குணங்கள் பொருந்தியவரும், எல்லோருக்கும் எப்போதும் இன்பங்களை அளிப்பவருமான தங்களுக்கு நமஸ்காரம். [ஸும்ருடீகாய மீடுஷே - வேத வாக்யம்]


மஹாபாத கஸங்காத மஹாரண பயாபஹ
த்வதீயக்ருபயா தேவ ஸர்வாநவ யஜாமஹே

பெரிய பாவக்கூட்டங்களிலிருந்து காப்பதற்கும், பெரிய போர்களில் ஏற்படும் அச்சத்தை எங்களிடமிருந்து அகற்றவும் தங்கள தயவினைக் காட்டுவீர்களாக. நாங்கள் உங்களை வணங்குகிறோம். [ஸர்வாநவ யஜாமஹே -வேத வாக்யம்]நவார்ணவரத்ந நிகம பாதஸம்புடிதாம் ஸ்துதிம்
பக்த்யா படந்தியே தேக்ஷாம் துஷ்டோபவகணாதிப

கணாதிபரே!, ஸ்ரீ கணாதிபதயே நம: என்னும் மந்திரத்தில் ஆடங்கிய ஒன்பது ரத்னங்கள் போன்ற எழுத்துக்களை ஆரம்பத்திலும், வேதவாக்யங்களை முடிவிலும் கொண்ட இந்த ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை அருளூவீராக.

Friday, August 14, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 5 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)அத்ரி மஹரிஷிக்கும் அனுஸுயா தேவிக்கும் மூம்மூர்த்திகளும் மகவாகப் பிறந்ததை நாம் அறிவோம். பிரம்மன் சந்திரனாகவும், மஹாவிஷ்ணு தத்தராகவும், ஈசன் துர்வாஸராகவும் பிறந்தனர். மூவரும் பராசக்தியை வழிபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். மிகுந்த உரிமை எடுத்துக் கொள்ளுபவர்களை என்ன தலையில் ஏறி உட்காருகிறாய் என்பது போல, சந்திரன் பிறைவடிவில் அன்னை காமாக்ஷியின் திருமுடியை அலங்கரிக்கும் அணியாகி அவளை சந்திர மெளலிச்வரி ஆக்கினான். முதலில் பிரம்மனாக கோவில் எழுப்பி, பின்னர் பரம சாக்தனாக எப்போதும் அன்னையுடனேயே இருக்கும் ஆசையில் சந்திரனாக அமர்ந்துவிடுகிறான். தேவி தன்மேல் இருக்கை தந்த சந்திரனை, ஜீவர்கள் குண்டலினி சாதனையின் முடிவில் தமது சிரத்தில் (சஹஸ்ரகமலத்தில்) அனுபவிக்கின்றனர். இந்த உள் அனுபவத்தை/குண்டலினி மார்க்கத்தை, தந்த்ர-மந்த்ர-யந்த்ர யோக சாஸ்த்ரத்தின் மூலமாக தத்தரும், துர்வாஸரும் நமக்கு அளிக்கச் செய்தனர். தீக்ஷை பெற்று கோவில்களில் உலக நன்மைக்காக பூஜை செய்வதான முறைகள் ஆகமம். இவ்வாறான ஆகமங்களில் ஒன்றான 'ஸெளபாக்ய சிந்தாமணி' என்னும் சாக்த ஆகமத்தை அளித்தவர் துர்வாஸர். இன்றைக்கும் காமாக்ஷி கோவிலில் இந்த முறையிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன.

முக்கண்ணியான அம்பிகையின் துதி நூல்களில் 'லலிதா ஸ்தவ ரத்னம், செளந்தர்ய லஹரி மற்றும் மூக பஞ்சசதீயும்' மூன்று கண்கள் போன்றது என்பர். இதில் லலிதா ஸ்தவ ரத்னம் என்பது துர்வாஸரால் அளிக்கப்பட்டது. சம்ஸ்க்ருத விருத்த முறைகளில் ஒன்றின் பெயர் 'ஆர்யா' என்பது. அந்த குறிப்பிட்ட விருத்த முறையில் லலிதா ஸ்தவ ரத்னத்தை செய்திருப்பதால் இந்த நூலுக்கு 'ஆர்யா த்விசதி' என்று ஒரு பெயர் உண்டு. இருநூறு ஸ்லோகங்களால் ஆனதால் த்விசதி. சுமேரு மத்ய நிவாசினியான அம்பிகையின் ஸ்ரீசக்ர வெளிச் சுற்றிலிருந்து ஆவரணம், ஆவரணமாக வர்ணிப்பதால் 'ஸ்ரீ சக்ர வர்ணனம்' என்றும் இந்த நூலுக்கு ஒரு பெயருண்டு. இந்த நூல் ஸ்ரீ சக்ர அனுஷ்டானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது என்பர். காமாக்ஷியின் பூஜாக்ரமத்திற்கு மூல புருஷரான துர்வாஸரது ஸ்தவ ரத்னத்தில் இருந்து சில ஸ்லோகங்களை மட்டும் பார்த்து ஆடிமாத கடைசி வெள்ளியில் அன்னையின் அருளைப் பெறுவோம்.

வந்தே கஜேந்த்ர வதநம் வாமாங்கரூட-வல்லபாச்லிஷ்டம்
குங்கும-பராக-சோணம் குவலியிநீ-ராஜ-கோரகாபீடம்

மஹாகணபதியை வணங்கும் முதல் ஸ்லோகம் இது. தன் இடது தொடையில் அமர்ந்துள்ள வல்லபையால் தழுவப்பட்டவரும், குங்குமம் போன்று சிவந்த நிறத்தவரும், குவளைப் பூ மலர்வதற்குத் தேவையான சந்திரனை சிரசில் சூடியிருப்பவருமான சிறந்த யானை முகத்தவனை வணங்குகிறேன்.

அடுத்ததாக, காமேஸ்வரியை தனது இடது தொடையில் அமர்த்தியிருக்கும் காமேஸ்வரனை எப்படி த்யானிக்கிறார் என்று பார்க்கலாம்.

பாசாங்குசே க்ஷுசாப ப்ரஸவ சர-ஸ்புரித கோமள கராப்ஜம்
காச்மீர பங்கிலாங்கம் காமேசம் மநஸி குர்மஹே ஸததம்

[பாசம், அங்குசம், கரும்புவில், மலரம்புகள் போன்றவற்றை மென்மையான கர கமலங்களில் ஏந்தி, குங்குமச் சாந்து போன்ற மேனியுடைய காமேஸ்வரனை வணங்குகிறேன்.] இதில் காமேஸ்வரனுக்கும், காமேஸ்வரிக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதான கருத்தில் அதே ஆயுதங்களை காமேஸ்வரனும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

அங்குரித மந்தஹாஸாம், அருணாதா காந்தி-விஜித பிம்பாபாம்
கஸ்தூரீ மகரீயுத கபோல ஸங்க்ராந்த கநக தாடங்காம்

முளைவிடும் புன்னகையுடையவளும், கொவ்வைப் பழத்தை வெல்லும் செவ்வொளி உதட்டினளும், கஸ்தூரிக் குழம்பு பூசப்பட்ட கன்னத்தில் பிரதிபலிக்கும் தங்கத் தாடங்கங்களை உடையவள் என்று கூறுகிறார். பின்னர் அன்னையை நமஸ்கரிக்கும் போது,

நதஜன ஸுலபாய நமோ, நாலீகஸ நாபி லோசநாய நம:
நந்தித கிரிசாய நமோ, மஹஸே நவ நீப பாடலாய நம:

என்று அம்பிகையை பெண்பாலில் சொல்லாது ஒளி என்பதாகத் துதிக்கிறார். வணங்கும் அடியவருக்கு எளிதில் கிட்டும் ஒளிக்கு நமஸ்காரம்; தாமரைக் கண்படைத்த (ஒளிக்கு) நமஸ்காரம்; பரமேஸ்வரனை மகிழ்விக்கும் (ஒளிக்கு) நமஸ்காரம்; புத்தம்-புது கடம்ப மலர்போல் சிவந்த (ஒளிக்கு) நமஸ்காரம் என்று பொருள். எல்லாமும் ஒளியாக, அன்னையைக் கண்ட துர்வாஸர், பின்வருமாறு வணங்குகிறார்.

பவநமயி பாவகமயி க்ஷோணிமயி ககநமயி க்ருபீடமயி
ரவிமயி சசிமயி திங்மயி ஸமயமயி ப்ராணமயி சிவே பாஹி

[வாயுவானவள், தீயானவள், மண்ணானவள், விண்ணானவள், நீர்மயமானவள், கதிரவனானவள், மதியானவள், திக்குகள் ஆனவள், கால-தத்வமானவள், உயிரானவள் ஆகிய மங்கள ரூபிணியே காப்பாற்று]. நாமும் இவ்வாறே அன்னையை வணங்கிடுவோம்.

முதலில் பரமேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்ட காமகோடி பீடம், பின்னர் துர்வாஸராலும், சங்கர பகவத்பாதராலும் புனரோத்தாரணம் செய்யப்பட்டதாகச் சொல்வர். 'நகரேக்ஷு காஞ்சி' என்று புகழப்படும் காஞ்சியில் நித்யவாசம் செய்யும் அம்பிகை எல்லோருக்கும் நல்லருள் நல்க பிரார்த்தனை செய்திடுவோம்.

ஜெய ஜெய காமாக்ஷி!
ஜெய ஜெய காமாக்ஷி!

Wednesday, August 12, 2009

கோகுலாஷ்டமி : வரகூர்

தேவகி, வசுதேவர், உத்தவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்டு, ப்ரஹஸ்பதி மற்றும் வாயுவால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தை, குரு+வாயு+அப்பனை பற்றிய பஞ்சரத்னம் ஒன்று இருக்கிறது. இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. எனது தந்தைவழிப் பாட்டி ஸ்ரீமதி யக்ஞாம்பாள் அனுதினமும் தனது பாராயணத்தின் ஒருபகுதியாக இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாளை கோகுலாஷ்டமிக்கான சிறப்புப் பதிவாக அந்த பஞ்ச ரத்னத்தையும், அதற்கு எனக்குத் தெரிந்த பொருளையும், வரகூர் க்ஷேத்திரத்தில் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையும் பார்க்கலாம்.


கல்யாணரூபாய கலெள ஜனானாம் கல்யாணதாத்ரே கருணா ஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாயுத ஸ்த்கராய வாதாலயாதீச நமோ நமஸ்தே.

கலியுகத்தில் மங்களமான ரூபத்துடனும், பக்தர்களுக்கு மங்களங்களை அருளுபவனும், சங்கு-சக்ரம் முதலிய திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவனுமான ஸ்ரீ குருவாயுரப்பா உனக்கு பல நமஸ்காரங்கள்.


நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை: பக்தை: ஸதா பூர்ண மஹாளயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன நிவர்த்திதாஸேஷ ருஜே நமஸ்தே.

எப்போதும், நாராயணா!, கோவிந்தா! என்னும் திவ்ய நாமங்களை உரக்க ஜபம் செய்யும் பக்தர்கள் நிரம்பிய ஆலயத்தில் அமர்ந்திருப்பவனும், தங்களது தீர்த்தமெனும் கங்கைக்கு நிகரான ஜலத்தில் ஸ்நானம் செய்பவர்களது அனைத்து ரோகங்களையும் போக்குபவனுமான குருவாயுரப்பா, உனக்கு நமஸ்காரம்.


ப்ராஹ்மேமுஹூர்த்தே பரித: ஸ்வபக்தை: ஸந்த்ருஷ்டஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைலஸம்ஸேவக ரோகஹர்த்ரே வாதாலயாதீஸநமோ நமஸ்தே.

பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் விடியற்காலையில், பலதிசைகளில் இருந்தும் வந்த பக்தர்கள் தரிசிக்க விச்வரூப தரிசனத்தை அளிப்பவனே!, உனக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணையை உள்ளும், புறமும் உபயோகிப்பவர்களின் ரோகங்களை நீக்குபவனுமான ஸ்ரீ குருவாயுரப்பா, உனக்கு நமஸ்காரம்.


பலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிஸ்ச புராணரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ நமஸ்தே.

உன் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, தங்கள் குழந்தைகளை ரக்ஷிக்கிறவர்களாலும், எப்போதும் ஸ்ரீபாகவதத்தை பாராயணம் செய்கிற பக்தர்களாலும் நன்கு பூஜிக்கப்படும் உனக்கு நமஸ்காரம்.


நித்யான்னதாத்ரே ச மஹீஸுரப்யே: நித்யம் திவிஸ்த்தைர் நிசிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே.

அனுதினமும் எல்லோருக்கும் அன்னம் அளிப்பவரும், தினந்தோறும் இரவில் தேவர்களால் பூஜிக்கப்படுபவரும், அன்னை தேவகி, பிதா வசுதேவர் மற்றும் பக்தர் உத்தவர் ஆகியோரால் பூஜிக்கப்பட்டவருமான உனக்கு நமஸ்காரம்.குருவாதபுரீஸ பஞ்சகாக்யம் ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம்து ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி:

ஸ்ரீகுருவாயுரப்பனைக் குறித்த ஐந்து ஸ்லோகங்களடங்கிய இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு மங்களம் உண்டாகும். பத்தாயிரம் மன்மதனுக்கு ஒப்பான வடிவழகுடைய ஸ்ரீ நாராயணன் நமது ஹ்ருதயத்தில் காக்ஷியளிப்பார்.ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனே நம:

*******************************************

வெகுநாட்கள் கழித்து திங்களன்று நண்பன் சேஷசாயி போன் செய்திருந்தான், அவன் ஸ்ரீ-ஜெயந்தியை வரகூரில் கொண்டாட இருப்பதாகவும், உடன் வர முடியுமா என்றும் கேட்டான். வரகூரில் என்ன விசேஷம் என்று கேட்டதில் கிடைத்த தகவல் கீழே!. படங்கள் கூகிளார் உபயம்.

கிருஷ்ண பக்தியில் சிறந்த ஒருவர் ஒருசமயம் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டார். வயிற்று வலி தீர வேண்டி பல ஸ்தலங்களுக்கும் சென்று பெருமாளை வேண்டி வருகையில், தஞ்சை திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள வரகூர் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஒரு வினாயகர் கோவிலில் இரவு தங்குகிறார். நள்ளிரவில் அவரது ஸ்வப்னத்தில் ஒருவர் தோன்றி, காலையில் கண்விழிக்கும் போது கண்ணில்படும் விலங்கினைத் தொடர்ந்து செல்லுமாறும், அவ்வாறு சென்றால் அவரதுவயிற்று வலி நீங்கும் என்றும் கூறுகிறார்.

அவ்வாறே காலையில் கண்விழிக்கையில் தனது கண்களில் அகப்பட்ட வராகத்தைத் தொடர்ந்து செல்கிறார் பக்தர். வராகம் ஒரு பெருமாள் கோவிலுள் சென்று மறைகிறது. வந்தது வராக மூர்த்தியே என்றுணர்ந்த பக்தர் மனமுருகி, அப்பெருமாளைப் பாடினார்.அவரது வயிற்றுப் பிணி தீர்ந்தது. இறைவன் வராஹ ரூபத்தில் காக்ஷியளித்ததால் அவ்வூர் வராஹபுரீ என்றும், வரகூர் என்றும் அழைக்கப்பெறலாயிற்று.வயிற்றுப்பிணி நீங்குவதற்காகப் பாடல்கள் பாடிய பக்தர் நாராயண தீர்த்தர், அவர் பாடியது ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி.

இன்றும் இவ்வூரில் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடி, ஸ்ரீகிருஷ்ணனின் ஜனனம் முதல் ஸ்ரீருக்மிணி கல்யாணம் போன்றவற்றைக் கொண்டாடுகின்றனராம். நடுநிசிக்கு மேல் உறியடி உற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

கீழே- வரகூர் பெருமாள் உறியடி அலங்காரத்தில்வரகூரில் மக்கள் கொண்டாடும் உறியடி விழா கீழே!ராதே கிருஷ்ணா!

ராதே கிருஷ்ணா!

Friday, August 7, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 4 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)


லலிதோபாக்யானத்தில் 'ப்ராங்முகீ தத்ர வர்த்தேஹம் மஹாலக்ஷ்மீ ஸ்வரூபேண' என்று சொல்லப்படுகிறது. அதாவது லலிதையே மஹா-லக்ஷ்மி ஸ்வரூபமானவள் என்பதாகச் சொல்வது. போன இடுகையில் நாம் பார்த்த கனக மழை என்பதே லக்ஷ்மி ஸ்வரூபமான தேவியின் திருவிளையாடல் தான். காமாக்ஷியின் மூலஸ்தானத்தில், அவளது இடப்புறச் சுவற்றின் வெளியிலே அரூப லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் ஸ்வரூப லக்ஷ்மியும் இன்றும் நமக்கு அருள் புரிவது நாம் அறிந்ததே. இவ்வாறாக அரூபமாகவும், ஸ்வரூபமாகவும் தாயார் இருப்பது பற்றியதே இன்றைய ஆடி வெள்ளி இடுகை. நமது வாழ்வில் நடப்பது போன்றே கடவுள்களிடத்தும் ஊடல், கூடல், கிண்டல் போன்றவை இருப்பதாகச் சொல்லும் நிகழ்ச்சி இது.


ஒரு நாள் பரமபதத்தில், பரமபத நாதனும்-ஸ்ரீ தேவியும் உரையாடுகையில் அன்னை தமது நாதனை பலவாறாகப் பரிஹாசம் செய்கிறாள். மந்தகாஸத்துடன் மாதவனும் அவற்றை ரஸித்து வருகையில் தாயார் ஏனோ சற்றே எல்லை மீறி, 'மோஹினி ரூபமெடுத்த நீங்கள் சிவனையும் கூட மயக்கியது உண்மைதான், அது உங்கள் மாயா சக்தியால் செய்த தந்திரமே தவிர, ரூப லாவண்யத்தால் அல்ல. எது எப்படியாகிலும் நீங்கள் கருப்பு நிறத்தவர் தானே, உம்மீது யார் ப்ரேமை கொள்ள முடியும்' என்று ஏளனம் செய்கிறார். தாயார் ஏளனமாக இவ்வாறு கூறியது அவரது மனத்திலிருந்து வந்தது என்று புரிந்துகொண்டார் பரந்தாமன். ஆயினும் சினம் கொள்ளாது, 'அது சரி, ஆனால் பாற்கடலைக் கடைந்த போது நீயாகவே வந்து எனக்கு மணமாலை சூடியது ஏனோ?' என்று சிரிப்புடன் வினவுகிறார். 'ஓ, அதற்குக் காரணம் பாற்கடலின் ப்ரகாசம் மற்றும் எனது உடலின் பொன் வண்ணத்தால் எங்கும் ஜோதி மயமாக அப்போது இருந்தது, அப்போது அங்கிருந்த உங்கள் கருமையான மேனி கூட முலாம் பூசப்பட்ட தங்கமாகத் திகழ்ந்தது. அதில் மதிமயங்கி மாலையிட்டுவிட்டேன்' என்று தாயார் கூறுகிறார்.

இந்த பதிலைக் கேட்ட சாந்த மாமலை சீற்றம் கொண்டது, விளையாட்டு வினையாகியது. 'ரமா என்று இன்பமே உருவானவளாகக் கூறப்பட்ட நீ இன்று உனது வாக்கால் துன்பத்தை தேடிக் கொள்கிறாய். வாஸ்தவத்தில் நீ மதி-மயக்கம் அடைந்தது இன்றே. உன்னுடைய அதி செளந்தர்யம் உனக்கு கர்வத்தை உருவாக்கியிருக்கிறது. இப்போதே நீ குரூபியாகி மண்ணுலகில் வாசம் செய்வாயாக' என்று சக்ரதாரி தமது ப்ரியசகியைச் சபித்துவிடுகிறார். ஸ்ரீபதியின் பாதத்தில் வீழ்ந்து மன்னிக்க வேண்டுகிறாள் ஸ்ரீதேவி. 'பூலோக மக்களுக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் நடக்கும் எமது நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாடகம் இன்னும் கொஞ்சம் நீடிக்க வேண்டும். நீ காமகோடியில் வாசம் செய்து காமாக்ஷியைத் துதித்து வா. அவளருளால் நீ மீண்டும் என்னை அடைவாய்' என்று கூறுகிறார்.

விஷ்ணு லோகத்தை இழந்த கமலினி, கடாக்ஷிப்பாய் காமாக்ஷி என்று தனது தவத்தை காஞ்சீயில் ஆரம்பிக்கிறாள். ஆக காமாக்ஷி மட்டுமல்லாது, சந்த்ர சகோதரியும் தவமியற்ற ஆரம்பிக்கிறாள். பத்மினி, பத்மஹஸ்தை, பத்மாஸனை, என்று ஈரேழுலகும் புகழும் பத்மநாப பத்னி, தனது பத்ம நயனங்களை மூடி த்யானத்தில் இருக்கிறாள். தனது ரூப லாவண்யம் இழந்து, கருமையான நிறத்துடன் இருக்கும் ஸ்ரீதேவிக்கு தரிசனம் தருகிறாள் காமலோசனி. தரிசனம் தந்தது மட்டுமல்லாது, 'அஞ்சன காமாக்ஷி' என்று விளித்து, தான் வேறு, லக்ஷ்மி வேறல்ல, தானே லக்ஷ்மி ரூபிணியும் என்று தெளிவிக்கிறாள். பாதம் பணிய வந்த பத்மாசனாக்ஷியை தடுத்து, 'எனது புருஷாகாரமான விஷ்ணுவின் வாக்கைக் காக்கவும், இல்லற தர்மத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஒன்று சொல்கிறேன் கேள். இங்கிருக்கும் எனது அர்ச்சா ரூபத்தின் இடது பக்கத்தில் நீ இந்த நிலையிலேயே பிம்பமாக இரு. எனது பக்தர்கள் தாங்கள் பெறும் எனது குங்குமப் பிரசாதத்தை உன்மேல் தரித்த பின்னரே தமது உடலில் தரிக்கட்டும். இவ்வாறு சிலர் செய்தவுடன் உனது குரூப ரூபம் மறைந்து ஸர்வாங்க செளந்தர்யையாக ஆகிடுவாய். அவ்வாறு ஆனபின் எனது வலது பக்கத்தில் இரு' என்று கூறுகிறாள். இன்றும் காமகோடி பீடத்தில் இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்குச் செய்யும் குங்குமார்ச்சனை பிரசாதத்தை பெறும் அன்பர்கள் அங்கே இடதுபுறம் இருக்கும் அஞ்சன காமாக்ஷியும் கேசாதி-பாதம் தடவிய பின்னரே தாம் தரிக்கின்றனர். இதன் மூலமாக அன்னை ஸ்ரீதேவி தனது ரூப லாவண்யத்தை மீண்டும் பெற்று காமாக்ஷியின் வலப்புறம் வாசம் புரியத் தொடங்குகிறாள்.

ஏதோ ஒரு வேகத்தில் சபித்தாலும், லக்ஷ்மிகரம் இழந்த வைகுந்தத்தில் நாராயணன் சோபையற்று தமக்குத் தாமே சாபம் கொண்டதாக வருந்தியிருகிறார். எப்படி ஈசன் தாக்ஷாயினியை இழந்து தவித்தாரோ அந்த ஸ்திதி தனக்கும் ஏற்பட்டதே என்று தாபத்தை உணர்கிறார். கச்சியில் பராசக்தி என்ன திருவிளையாடல் புரிகிறாளோ?, எப்போது அஞ்ஜனியை காஞ்சமாக ஆக்க முடிவு செய்திருக்கிறாளோ? என்று எண்ணி காமகோட்டத்தில் யாரும் அறியாமல் புகுந்து பார்க்கிறார். ஒளிந்து வரும் நாதனைக் கண்டுகொண்டாள் பத்மாசினி. ஒளிந்து நின்ற பெருமாளைப் பார்த்து, 'வாராய் கள்ளா' என்று முகமன் கூறுகிறாள். திருட்டுத்தனமாக வந்ததால் மட்டும் 'கள்ளா' என்று அழைக்கவில்லை, எல்லோர் மனதையும் திருடிடும் எழிலான கோலத்தை அடிப்படைக் கருத்தாக வைத்து 'கள்ளா' என்று அழைக்கிறாள். அன்னை பராசக்தி/காமாக்ஷியின் முன்னிலையில் பிரிந்த தேவ தம்பதிகள் கூடினர்.

இன்றும் காமாக்ஷி கோவிலில் அஞ்சன காமாக்ஷி என்றழைக்கப்படும் அரூப லக்ஷ்மி மற்றும், ஸ்வரூப லக்ஷ்மியை தரிசிக்கிறோம். தண்டனை நீங்கி ஸ்வரூபம் பெற்ற தாயாரைக் காண வந்த மாதவனுக்கும் காமகோட்டத்தினுள்ளேயே கோவில் இருக்கிறது. இவரது மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். ஆம், வைஷ்ணவ திவ்ய தேச மூர்த்திகளில் இவரும் ஒருவர், ஸ்ரீவராக ரூபம். பிருத்வீ க்ஷேத்ரத்தில், பூமியை தூக்கி நிறுத்திய வராஹர் இருப்பதும், அருகிலேயே வாராஹியும் இருப்பது முறைதானே. இவரை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். பாடல் கீழே!

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துறைநீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய், உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய், கள்வா
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு-
பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே.

----------------(2059) திருநெடுந்தாண்டகம் 8

இவ்வாறாக வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று காமாக்ஷி சன்னதியில் இருக்கிறது என்றால், இன்னொன்று இதே காஞ்சியில் ஏகம்பன் கோவிலில் இருக்கிறது. அப்பெருமாளை 'நிலாத் திங்கள் துண்டத்தாய்' என்று விளிக்கிறார் திருமங்கையாழ்வார்.

இந்த வெள்ளியில் அன்னை காமாக்ஷி, மஹா-லக்ஷ்மி மட்டுமல்லாது அன்னையின் புருஷாகார ரூபமான மஹா-விஷ்ணுவையும் வணங்கிடுவோம்.

Wednesday, August 5, 2009

ஆவணி அவிட்டம்...நாம் உபயோகிக்கும் துணிகள், பாத்திரங்கள், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பல பொருட்களுக்கும் தேய்மானம் ஏற்படுவதைக் காண்கிறோம். சிறிதுகாலம் உபயோகம் செய்யப்பட்டுவிட்டால் அது பழைய பொருளாகிறது. நாளாக, ஆக, பொருட்களின் செயல்பாடும் குறைகிறது. இது போன்றே நாம் தினசரி வாழ்வில் சந்த்யாவந்தனம், பூஜை, ஹோமம் போன்றவை செய்யும் போது சொல்லப்படும் வேத மந்திரங்களும் பழயதாகிறது (யாதயாமம்). குறிப்பாக நமது வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கு யாதயாம தோஷம் [மஹா சங்கல்பத்தில், 'அதீதாநாம் சந்தஸாம் அயாதயாமத்வாயா'] ஏற்படுகிறதாகச் சொல்யிருக்கிறார்கள் மஹரிஷிகள். இந்த தோஷம் நீக்கி, சொல்லும் மந்திரங்கள் தோஷம் நீங்கியதாக, புத்தணர்ச்சியை அடைந்து நம்மை சரியான வழியில் இட்டுச் செல்லக்கூடியதாகச் செய்யும் கர்மாவே 'உபா கர்மா'.


வேதத்தை மீண்டும் அத்யயனம் செய்ய ஆரம்பிப்பதே உபாகர்மாவின் நோக்கம். இதன் ஒரு அங்கமாகவே மஹா சங்கல்பம், மற்றும் யக்ஞோபவித தாரணம் போன்றவை. ரிக் வேதத்தினர் சிரவண மாதத்தில் சிரவண நகஷத்திரத்தன்றும், யஜுர் வேதத்தினர் சிரவண மாச பெளர்ணமியன்றும், சாம-வேதிகள் பாத்ரபத மாச ஹஸ்த நக்ஷத்திரத்தன்றும் இந்த உபா கர்மாவைச் செய்யவேண்டும் என்று ஆபஸ்தம்பர் முதலான மஹரிஷிகள் சொல்லியதாகத் தெரிகிறது.

அதெப்படி வேதத்திற்கே தோஷம் என்று சொல்லப்படுகிறது?. நமது அனாசாரத்தால், வேதோக்த/வைதீக கர்மாக்களை செய்யாததால் இந்த தோஷம் தோன்றுகிறதாம். இது வேதத்திற்கான தோஷம் என்பதைவிட வேதத்தைப் பிரயோகிக்கும் நமக்கு அதனால் உருவாகும் சக்தி குறையும் என்றே கூறப்படுகிறது. கும்பாபிஷேகம் செய்த கோவில்களில் ஸம்ரோக்ஷணம் என்று 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்வது போன்றதே இது. ஸ்ரீ க்ருஷ்ணருக்கு மட்டும் இந்த தோஷம் இல்லாது இருக்கட்டும் என்று அவரது குரு சாந்தீபினி முனிவர் அருள் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. 'கிருஷ்ணன் சொல்லியபடி நட, ராமன் போலவாழ்'என்று பெரியவர்கள் கூறுவர். வால்மிகி முனிவர் ராமாயணத்தில் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சந்த்யாவந்தனம் போன்றவற்றை எப்படி வழுவாது செய்தார் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

வேதத்யயனம் செய்பவருக்கல்லவா இந்த தோஷம்?. நாம் ஏன் செய்ய வேண்டும்?. மூன்று வேதங்களின் சாரம் என்று காயத்ரி மந்திரத்தைச் சொல்கிறார்கள் மஹரிஷிகள். வேத அத்யயனம் செய்யாவிடினும், சந்த்யாவந்தனத்தில் காயத்ரி ஜபமாக செய்து வருவதால் இக்கர்மா நாமும் கண்டிப்பாகச் செய்யவேண்டியதே!. வேத அத்யயனம் செய்யாதிருப்பதே தவறு, அத்துடன் உபா கர்மா செய்யாது இன்னொரு தவற்றினை ஏன் செய்ய வேண்டும். மேலும், சன்யாசிகள் சாதுர்-மாஸ்யத்தில் வேத-வ்யாஸரை பூஜிப்பது போல, இக்கர்மாவில் வேதத்தைத் தந்த வ்யாஸருக்கு பிரம்மசாரி, க்ருஹஸ்தர், மற்றும் வானப்ரஸ்தர் நன்றி செலுத்தும்படியான பூஜையும் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த தினத்தில் வேதாரம்பம் என்பதாக குரு/ஆசார்யாரிடமிருந்து அத்யயனம் ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினம் இன்று. வேத மாதாவையும், ஹயக்ரீவரையும், வ்யாஸரையும் வணங்கி சகல வித்யைகளும், ஞானமும் அருள வேண்டுவோம்.


ஞானாநந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்,

ஆதாரம் சர்வ வித்யானம் ஸ்ரீஹயக்ரீவம் உபாஸ்மஹே!

இந்த நல்ல நாளில், இங்கு வரும் பெரியவர்கள் எல்லோருக்கும் எனது பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.