
பிரம்மாண்ட புராணத்தில் வருவது லலிதோப்பாக்யானம் என்னும் பகுதி. லலிதை என்றாலே இனிமை என்று பொருள். இனிமையானவள் அம்பிகை என்பதால்தான் அவள் லலிதா. யாருக்கு இனிமையானவள்?. தேவர்களுக்கு, நம்மை போன்ற மானிடர்களுக்கு இனிமையானவள். பண்டாசுரன் என்பவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால், இந்த நாமத்தின் பொருளை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்ததால் மன்மதன் சாம்பலானான். அவனது சாம்பலில் இருந்து உருவானவன்தான் பண்டாசுரன் என்கிறது பிரம்மாண்ட புராணம். மன்மதன் தனது உருவத்தை விடுத்துச் சாம்பலானாலும் ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவள் கண்களுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான் என்று அவளுக்கு வரம் கிடைத்தது.இவ்வாறு அனங்கனாக - உருவமற்றவனாக இருப்பதால்தான் மன்மதனுக்கு 'அனங்கன்' என்ற பெயர் வந்தது. பண்டாசுரனது கொடுமைகளால் தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் துன்பத்தை பண்டனது கொடுமைகளை அனுபவித்தனர். அக்கொடுமைகளிலிருந்து மீள்வதற்காக அம்பிகையை நோக்கித் தவமிருந்தனர். பண்ட வதத்திற்காக இமயமலைச் சாரலில் தேவேந்திரன் செய்த தவத்தின் பயனாக, அவனது யாகத்தீயின் நெருப்பிலிருந்து ஒர் தங்கத்தட்டில் யெளவனம் மிகுந்த 16 வயதுப்பெண்ணாக உருவானவள்தான் ஸ்ரீலலிதா. அக்னிகுண்டத்தில் இருந்து வந்ததால் 'அக்னிகுண்ட ஸம்பூதா. இது போலதான் மலையத்வஜ பாண்டியனது யாகத்தீயில் உருவானவளே அன்னை மீனாக்ஷி.
இந்த நாமத்தை நாம் சற்றே பிரித்துப் பார்க்க வேண்டும், சித்+அக்னிகுண்ட ஸம்பூதா என்பதாகப் பிரித்தல் வேண்டும். சத்-சித்-ஆனந்தம் என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். இதில் 'சத்' என்பது சகல உலகத்திற்கும் சத்யமான பரமாத்மா. 'சித்' என்பது சைதன்யத்தை, அதாவது நமக்குள் இருக்கும் பரமாத்ம ஸ்வரூபத்தை குறிப்பது. சத்+சித் = ஆனந்தம், அதாவது பரமாத்மாவும், நமது ஜீவாத்மாவும் இணைந்தால்/ஐக்கியமானால் வருவது சச்சிதானந்தம். இந்த சத்தும், சித்தும் இணைகின்ற ஆனந்த நிலையே சிதக்னி. அந்த சிதக்னியில் பிறந்தவள் 'சிதக்னி குண்ட ஸம்பூதா'. ஆக என்றோ நடந்த தேவேந்திரனது யாகத்தில் பிறந்தவளை நாம் லலிதாவாகக் கொண்டாடவில்லை. நமது சிதாகாசத்தில் உள்ள அக்னியிலிருந்துபிறந்தவள் லலிதா. ஸ்ரீமாதாவான அம்பிகை, நமது சிதக்னி நன்றாக, பூரணமாக இருக்குமானால் அதில் அவள் தோன்றாது இருப்பாளா?.
சித் என்பதை ஞானஒளியாகவும், அதிலிருந்து பிறந்தவளாதலால் சிதக்னிகுண்ட ஸம்பூதா என்றும் பெரியவர்கள் சொல்வதுண்டு. அவித்தை என்பது இருட்டைக் குறிக்கும் சித் என்னும் ஞானஒளியில் தோன்றுபவள் என்பதும் சரியாகத்தானே இருக்கிறது.
நல்லவை பெருகப் பெருக அல்லவை/தீயவை அழிந்திடும். இவ்வாறாக நம்முள் நல்லவை பெருகிடும் நேரத்தில் அம்பிகை நம்முள்ளேயே, நம் சிந்தையில் உதித்திடுகிறாள். ரஹோயாகம் என்று ஒன்று சொல்லப்படுகிறது. இந்த யாகம் நமக்குள்ளே நாமே செய்வது. உடலாகிய யாக குண்டத்தில், அறிவாகிய தீயில் நமது கெட்ட எண்ணங்களையும், தீய குணங்களையும் ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால் அங்கு இறைவன் தோன்றுவான் என்பதே ரஹோயாகம். எனவே அபிராமி பட்டர் வெளியில் இருந்த தீயின் மேல் மட்டும் இருந்து அந்தாதி பாடவில்லை, அவரது மனத்துள்ளும் அக்னியை உருவாக்கி அதன் மூலமாகவே அபிராமியை வரவழைத்திருக்கிறார் என்றால் அது தவறல்ல அல்லவா?.
நம்பிக்கைக் குழுவுக்காக எழுதப்பட்ட இடுகை.