Sunday, March 21, 2010

சாரதாராத்யா...

ஆதி சங்கரர் அவதாரத்தின் போது பிரம்மாவே மண்டனமிச்ரராகவும், சரஸ்வதி தேவியே சரஸவாணியாகவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மண்டனமிச்ரரை வாதத்தில் வென்றபிறகு சரஸ்வதியின் அம்சமான சரஸவாணிய சிருங்ககிரியில் சாரதா என்று எழுதருளச் செய்தார் ஸ்ரீஆசார்யாள் என்பது சங்கர விஜயம் சொல்லும் வரலாறு. மூலமூர்த்தியான சரஸ்வதியுடன் இணைவதற்காக புறப்பட்ட சரஸவாணியை பூவுலகத்தில் நமக்கெல்லாம் புகலிடமாக சிருங்கேரியில் ஸ்தாபித்தார் என்றால் அது மிகயாகா. சரஸவாணியாக இருந்த போதிலும் அவள் ஞானத்தில் சிறந்தவள் என்றே தெரிகிறது. சாரதையாக எழுந்தருளிய பிறகு பக்தர்களுக்கு எல்லாம் ஞான சாரத்தை வழங்கி வருகிறாள். அந்த சாரதையாலேயே வழிபடப்படுபவள் என்பதுதான் சாரதாராத்யா என்னும் நாமம். கலைமகளும், திருமகளும் வணங்கும் தெய்வம் ஸ்ரீலலிதை என்பதை முன்னமே பார்த்தோம், அதுவே இங்கும் பொருளாக, கலைமகளால் வழிபடப்படுபவள் என்பதாகச் சொல்வதே சாரதாராத்யா.

வசந்தகாலத்தில் வரும் நவராத்ரி வசந்த நவராத்ரி என்பதைப் போல சகலரும் கொண்டாடும் நவராத்ரியை சாரத நவராத்ரி என்பது வழக்கம். சாரதாராத்யா என்பதை சரத்-ஆராதித்யா என்று பிரித்தால் சரத்காலத்தில் பூஜிக்கப்படுபவள்,சரத்காலத்தில் வரும் நவராத்ரியில் வழிபடப்படுபவள் என்று பொருள். காளிகா புராணம் மற்றும் சப்தசதீ ஆகிய இரு நூல்களும் சரன்நவராத்ரியை இவ்வாறே குறிப்பிட்டுள்ளன.

சஹஸ்ரநாமத்தை அருளிய வசின் தேவதை/வாக்தேவதைகளும் ஞானத்தை அருள்பவர்கள்தாம், அவர்களையும் சாரதைகள் என்றே கூறுகிறார்கள் பெரியோர். ஆக, சாரதாரார்த்யா என்பதற்கு வசின் தேவதைகளால் ஆராதிக்கப்பட்டவள் என்றும் பொருள் கொள்ளலாம். சம்பந்தர், ஆதிசங்கரர் மற்றும் பல ஞான ஆசார்யர்களையும், யோகிகளையும், துறவிகளையும் விசாரதர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறான விசாரதர்களால் வணங்கப்பட்ட சாரதை என்று ஸ்ரீபாஸ்கர ராயர் குறிப்பிட்டுளதாகத் தெரிகிறது.

துராராத்யா - துர்+ஆராத்யா என்பது இன்னொரு நாமம். இங்கு 'துர்' என்பதற்கு 'கெட்ட/தீய' என்று பொருள் கொள்ளக்கூடாது. துர் என்றால் விடாப்பிடியாக/அடைந்தே தீருவது என்பதான பொருளைக் கொள்ள வேண்டும். கடுமையான விரதமுறைகளால் அம்பிகையை ஆராதிப்பது என்பதாக பொருள் கொள்ள் வேண்டும். இன்றும் நாம் தீ மிதித்தல், அலகு குத்திக்கொள்ளுதல் போன்ற வழிபாடுகளைக் காண்கிறோம். இவையெல்லாம் இந்த நாமத்தை அடிப்படையாகக் கொண்டே என்று கூறலாம். இதையே இன்னொரு விதத்தில் மிகவும் சிரமப்பட்டு ஆராதிக்கப்படுபவள் என்றும் சொல்கிறார்கள். அதாவது சபலமுடையவர்கள், இந்திரியங்கக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிரமமானவள் என்று பொருளாகும். இந்த நாமத்துடன் வாமாசாரம், ஆபிசாரம் போன்ற வழிபாடுகளை நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது மிக முக்கியம்.


இன்று சிருங்கேரி ஆசார்யாளது 60ஆம் வார்ஷிக ஜெயந்தி. பராம்பிகையின் அருளைப் பெற்ற அவரை வணங்கிடுவோம். சாரதா பீடத்தின் நாயகரான ஸ்ரீ பாரதி தீர்த்தரது அருளுக்குப் பாத்திரமானால் கண்டிப்பாக ஸ்ரீசாரதா நம்மிடம் கருணை கொள்வாள்.

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!
சிருங்கேரி சங்கர!
ஸ்ரீசாரத சங்கர!

11 comments:

இலவசக்கொத்தனார் said...

அண்ணா நமஸ்காரம். சௌக்கியமா? பேசியே நாளாச்சே!

தக்குடு said...

பாரதீ தீர்த்தம் பாவயாமி//
பாரதீ ரூபம் பாவயாமி//

தக்குடு said...

இவ்ளோ விஷயம் எங்களுக்கு கிடைக்கும் என்பதால்தான் மதுரையம்பதி அண்ணாவை எழுதுமாறு அடியேன் பணித்தேன். முயற்சி வீண்போகவில்லை. 'சரஸ்சந்த்ர வதனா' ஸ்படிகம் போன்ற தெளிவான புத்தியை எங்களுக்கெல்லாம் வழங்கட்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

தக்குடு அண்ணாத்தே!, நீங்க சொன்னதுக்காக நான் பண்ண முடிந்தது பெரியவரது படமும், அதன் கீழ் தட்டச்சிய 2 வரிகளும்தான்....2-3 நாட்கள் முன்பு சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக ஏதாவது எழுதியிருக்கலாம் என்ற குறை எனக்கு இருக்கிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

நமஸ்காரம் இலவச அண்ணாத்தே!, பிங்கினேன், ஆனால் நீர் அப்போது இல்லை போல...நாளை காலை பார்க்கலாம்..:)

Jayashree said...

சங்கரர் கொலுசு சத்தம் கேட்கவில்லையே என்று துங்கபத்திரைக் கரையில் திரும்பி பார்த்ததினால் நமக்கு இன்று கிடத்தவள்
ஷரத் ஆராத்யா!! எவ்வளவு அழகு!!!!
புரட்டாசி: october sky - ககன தாரகைகள் ஒளி சூழ வருபவள் மாதா!!
இலை உதிர் காலம்-metaphorically - அனுபவசாரம் முதிர்ந்து ஞானம் சித்திக்கும் நிலை ?தொட உதிர்ந்து விடும்!!
பனிக் காதலனின் முதல் அணைப்பில் சிவப்பவள். பனி- யோக நித்ரா: சிவப்பு -அன்பு;
ஞானம் சித்திக்கவும், ஞானியாலும் தொழப்படுபவள்!!
எங்கள் குல குரு ஆச்சாரியருக்கு என் நமஸ்காரங்கள்

தக்குடு said...

//ஞானம் சித்திக்கவும், ஞானியாலும் தொழப்படுபவள்!!
எங்கள் குல குரு ஆச்சாரியருக்கு என் நமஸ்காரங்கள்
// அப்படிச்சொல்லுங்கோ ஜெய்ஷ்ரி மேடம்...:)

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மா....கருத்துக்கு நன்றிகள்....தக்குடு ஏதோ சொல்லியிருக்காரு கவனிங்க...:)

குமரன் (Kumaran) said...

மௌலி,

நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் அன்னையின் திருப்பெயர்களின் விளக்கங்களைப் படித்து வருகிறேன். பெரும்பாலும் சேமித்து வைத்துப் பேருந்தில் படிப்பதால் பின்னூட்டம் இடுவதில்லை; கோவித்துக் கொள்ளாதீர்கள்.

வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி; சரத் காலத்தில் வரும் நவராத்திரி சரத் நவராத்திரி என்று நினைக்கிறேன். அதனைத் தான் சாரதா நவராத்திரி என்று சொல்லியிருக்கிறீர்களோ?

துராராத்யா என்பதற்கு சுதுர்லபா என்பதற்குச் சொல்லும் பொருளைப் போல் சொல்வதே பொருத்தம் என்று தோன்றுகிறது. எளிமையாக அடைய முடியாதவள் என்பது சுதுர்லபா என்பதற்குப் பொருள்; அது போல் மிகவும் கடினமான முறைகளால் வணங்கப்படுபவள் என்பதை துராராத்யா என்ற திருநாமம் சொல்கிறது போலும். நீங்களும் நன்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சிருங்கேரி ஆசார்யர்கள் எங்கள் குடும்பத்திற்கு ஆசாரியர்கள் என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆசாரியரது திருநட்சத்திரத்தன்று இந்த இடுகையைப் படிக்க இயலாமல் போனது. அதனால் என்ன? இப்போதும் என் வந்தனத்தை ஆசாரியரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....நீங்க படிக்கறீங்கன்னு தெரிஞ்சது...நன்றி...:)

நான் அப்படியெல்லாம் கோபப் படமாட்டேனுங்க....கோவம் வருமென தெரிந்தால் அங்கிருந்து போயிடுவேன்.:)

துர்லபா பற்றி பின்னாடி எழுதலாமுன்னு இருக்கேன்...:). எப்போது வேண்டுமானாலும் பெரியவர்களைப் பணியலாம்...வார்த்தந்தி மிகசிறந்த தினம் அவ்வளவுதானே?....

மதுரையம்பதி said...

//வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி; சரத் காலத்தில் வரும் நவராத்திரி சரத் நவராத்திரி என்று நினைக்கிறேன். அதனைத் தான் சாரதா நவராத்திரி என்று சொல்லியிருக்கிறீர்களோ//

அதே தான் குமரன்...4 நவராத்ரிகள், ஒவ்வொன்றுக்கும் தேவியின் ஒரு ரூபத்தை சிறப்பாக வழிபடுவது வழக்கம், அதன்படி சரத் நவராத்ரியில் சாரதா என்பார்கள்.

மேலும் 4 நவராத்ரிகள் எப்போது என்பது கீழே!

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி, தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.