Tuesday, March 9, 2010

ஸ்ரீ மஹாராக்ஞி-2


அடுத்த நாமமான ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது. ராஜராஜன் என்ற பதம் ஈஸ்வரனைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனுக்கே ஈஸ்வரி என்பது ராஜராஜேஸ்வரி என்ற நாமம். எந்த ஒரு பொருளையும் படைப்பது என்பது ஒரு செயலானால், அவற்றை நல்ல/சிறந்த முறையில் படைத்தல் என்பது சிறப்பானது என்றாலும் படைத்த படைப்பை காப்பாற்றுவது படைப்பதைவிட கடினமான செயல்தான். சர்வ லோகங்களையும் படைத்த ஸ்ரீமாதா, தான் படைதத உலங்களை சீராக இயக்கவும், அதில் உள்ள ஜீவராசிகளைக் காப்பதுமான செயலைச் செய்கையில் அவள் மஹாராக்ஞிஎன்று போற்றப்படுகிறாள். முற்காலத்தில் நாட்டை ஆண்ட ராஜாவை மஹாவிஷ்ணு ஸ்வரூபமாக வர்ணித்த கவிதைகளை இன்றும் நாம் படிக்கிறோம். ராஜாக்கள் தமது நாட்டை, நாட்டிலுள்ள சகல ஜீவன்களுக்கும் நன்மையானவற்றைச் செய்கையில் அவர்களது செயல் ஸ்ருஷ்டி என்னும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கு இணையாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஈஸ்வரன் பஞ்சகிருத்யங்களை சக்தியின் உதவியாலேயே செய்கிறான். அன்னைக்கே இன்னுமோரு பெயர் "பஞ்சகிருத்திய பராயணா" என்றும் உள்ளது. அது என்ன பஞ்சகிருத்தியம்?, அப்படியென்றால் என்றால் என்ன?.

பஞ்சகிருத்தியம் என்பது ஐந்து தொழில்கள். பஞ்சகிருத்திய பராயணா என்றால் ஐந்தொழிலைச் செய்பவள் என்றே அர்த்தம். இந்த ஐந்து தொழில்களையே சற்று எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்)
ஆகிய முத்தொழில்கள் என்று சொல்கிறோம்.உலகில் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்க வேண்டும், ஸ்ருஷ்டித்தவற்றை காக்க (ஸ்திதி) வேண்டும். தகுந்த காலத்தில் அவற்றை நீக்கவும் வேண்டும். சம்ஹாரம் என்பதை அழித்தல் என்பதாக சொல்வது தவறு என்றே தோன்றுகிறது. இன்றைய அறிவியலும் எந்த சக்தியும் அழிவதில்லை, இன்னோன்றாக மாறுகிறதென்றே சொல்கிறதல்லவா?. இதனையே கம்பர் தனது பாயிரத்தில் "தாமுளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்" என்று கூறுகிறார்.

ஆக, இந்த மூன்று செயல்களும் நடைபெற வேண்டுமானால் இன்னும் இரு செயல்கள் வேண்டியிருக்கிறது, அதுவே திரோபாவம் (அ) திரோதானம் என்று கூறப்படும் மாயை (அ) மறைத்தல். ஐந்தாவது செயல் அனுக்ரஹம். ஆக இந்த ஐந்து தொழிகளையும் அன்னையின் சக்தியாலேயே செய்கிறானாம் ஈஸ்வரன். மஹாராணியான அம்பிகையின் உற்ற தோழிகள் லக்ஷ்மியும், சரஸ்வதியும், இதையே இன்னொரு நாமத்தில், 'ஸசாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண ஸ்திதா' மஹாராணிக்கு சாமர கைங்கர்யம் செய்பவர்களாகச் சொல்லியிருக்கிறார்கள் வசின் தேவதைகள். அம்பிகையின் இடது புறத்தில் லக்ஷ்மியும், வலது புறத்தில் சரஸ்வதியும் நின்று கொண்டு, அம்பிகையின் அருள் நாடுபவர்களுக்கு ஐஸ்வர்யத்தையும், ஞானத்தையும் வாரிவழங்குகிறார்கள்.

அம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி என்றும் ஒரு நாமம் உண்டு என்று பார்த்தோம். தேவராஜனான இந்திரன் மற்றும் மற்ற மேல்-கீழ் உலத்து ராஜாக்களுக்கும், மூம்மூர்த்திகளுக்கும் ஈஸ்வரியானவளை ராஜராஜேஸ்வரி என்று கூறியிருக்கிறார்கள் தேவி மஹாத்மியத்தில். இவற்றை எல்லாம் எளிமையாக நமக்குத் தந்துவிடுகிறார் அபிராமி பட்டர்,

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

ஸ்ரீமாதா என்பதை ஆத்தாளை, அதாவது உலகனைத்தையும் படைத்தவளை (பூத்தாளை), சகல உலகங்களுக்கும் தாயான ஜகன்மாதாவை/ஸ்ரீமாதாவை (ஆத்தாளை), சகல லோகங்களையும் காப்பவளை (காத்தாளை) என்று கூறியிருக்கிறார். அடுத்து வரும் இருவரிகள் பின்னர் லலிதையின் நாமங்களுக்கு நயமாகப் பொருந்தும், அதை அப்போது பார்க்கலாமா?...

[இந்த இடுகையும் முன்பு இங்கே எழுதியதுதான். மேலே இருப்பது நம்பிக்கை குழுமத்திற்காக தற்போது சற்று மாற்றி எழுதியிருக்கிறேன்]

2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச சார். மிக அருமையான கீர்த்தனையை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். பாடலது சுட்டி இருப்பின் தாங்க ஐயா.