Saturday, July 3, 2010

மஹநீயா, தயா மூர்த்தி, ஆத்ம வித்யா. மஹா வித்யா


ஆத்மாவே ப்ரம்ஹம் என்று கூறும்படியான ஞானம் வரச்செய்பவள் பராசக்தி. ஆகவே அம்பிகையை ஞான ஸ்வரூபமானவள் எனலாம். இதைச் சொல்லும் நாமமே "ஆத்ம வித்யா". அத்வைத சித்தாந்தத்தை சூக்ஷ்மமாகச் சொல்லும் நாமம். இதையே ஆத்மாஷ்டாக்ஷர மந்த்ர ரூபிணி என்றும் கூறலாம் என்று கூறுகிறார் பாஸ்கரர். இப்படியான ஆத்மவித்யையே ப்ராதான்யமானவள் என்பதாகச் சொல்வதே "மஹா-வித்யா" என்னும் நாமம். 'மஹதீ'யாகவும், வித்யா ரூபிணியாகவும் இருக்கும் அம்பிகையை மஹா வித்யா என்பது பொருத்தம் தானே?. வன துர்கையை துதிக்க என்றே ஒரு வித்யை சொல்லப்பட்டிருக்கிறது, அதற்கான பெயர் மஹா வித்யை என்கிறார்கள் ஆன்றோர்.

வித்யை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை, யக்ஞ-வித்யா (கர்மாக்களைப் பற்றியது), மஹாவித்யா (உபாசனையைப் பற்றியது), குஹ்ய-வித்யா (மந்த்ரவித்யை), ஆத்ம-வித்யா (ப்ரம்ஹ வித்யை) ஆகியவை. இந்த நான்கு வித்யைகளும் சேர்ந்ததே பஞ்சதசீ என்னும் "ஸ்ரீவித்யா".

இந்த நான்கு வித்யைகளும் அம்பிகையே என்பதை விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சதசீ என்பது 15 அக்ஷரங்களைக் கொண்ட அம்பிகைக்கான மந்திரம். இதற்கும் அடுத்த நிலையே ஷோடசீ எனப்படும் மஹா மந்திரம், இதுவே மந்திரங்களில் மஹோன்னதமானது.இதன் உபதேசம் ஆகி, பின்னர் பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டால் மட்டுமே ஆவரண பூஜைகள் செய்ய தகுதி.இந்த மஹா ஷோடசி மந்திர வித்யையை, "ஸ்ரீ ஷோடசாக்ஷரீ வித்யா" என்கிறார்கள் வாக் தேவதைகள். இந்த மஹா ஷோடசியையு,ம் ஸ்ரீவித்யை என்று கூறுவார்கள்.

"மனு-சந்த்ர-குபேரச்ச லோபாமுத்ரா ச மன்மத:" என்று வரும் அம்பிகையின் முதல் பன்னிரு பக்தர்களில் மன்மதனுக்கும் இடமுண்டு. அவனால் வணங்கப்பட்ட முறையை அனநங்க வித்யா அல்லது காதி வித்யா என்று தனித்துக் கூறப்படும் அவன் சிறந்த பக்தர்களில் ஒருவன். இவ்வாறு மன்மதனால் வணங்கப்பட்ட தேவியைக் குறிக்கும் நாமமே, "காம சேவிதா" என்பது. காமனால் சேவிக்கப்பட்டவள் ஸ்ரீ ஷோடசீ என்பது பொருள்.

இப்படி ஸ்ரீவித்யாவாக இருப்பவள் தயை மிகுந்தவளாக இருப்பதால் அவளை "தயாமூர்த்தி" என்கிறார்கள். தயையே மூர்த்தியாகக் கொண்டவள் தானே நமது அம்பிகை, அவளை தயா ஸ்வரூபம், தயா மூர்த்தி என்பது சரியே!. இப்படியான தயா மூர்த்தியை எல்லோரும் பூஜிக்கத்தக்கவளாக இருப்பதால்தான் "மஹநீயா" என்று கூறுகிறார்கள்.

4 comments:

jeevagv said...

//வித்யை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது//
நான்கோடு ஐந்தும் நற்றுணையாய் இருந்து நல்வழிப்படுத்த வித்யைகளாக, மஹாவித்யை பெற மனமதை திருப்பி அவள் அருள் பெறச் செய்யட்டும்...!

மதுரையம்பதி said...

வாங்க ஜீவா!...வருகைக்கும் வேண்டுதலுக்கும் நன்றி..ஆமாம், அம்பிகையிடம் எனக்கும் சேர்த்துத்தானே கேட்டிருக்கீங்க? :)

குமரன் (Kumaran) said...

விளக்கங்கள் மிக நன்று மௌலி. சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறீர்கள் போல.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்...இதுக்கு மேல விளக்கினா வரும் சிலரும் வராமப் போயிடுவாங்களோன்னு ஒரு பயந்தான். :)