Friday, July 23, 2010

ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா


அம்பிகையின் வாசஸ்தலத்தை ஸுமேரு அதாவது என்பது மேருமலை என்பர். அந்த மேரு பர்வதத்தின் நடுவில்/உச்சியில் மங்களமாக இருப்பவள் என்பதே "ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா". இந்த மேரு மலை எங்கே, எப்படி இருக்கிறது, யாரெல்லாம் இம்மலையில் இருக்கிறார்கள் என்பதை, துர்வாசர் தனது லலிதா ஸ்தவ ரத்னம் என்ற க்ரந்தத்தில் சொல்லியிருக்கிறார், அதைக் கொஞ்சம் பார்க்கலாம். மேரு மலையானது கைலாஸத்திற்கும் அப்பால் இருப்பதாகவும், இது முழுவதும் ஸ்வர்ண மயமானது என்று கூறுகிறார். இம்மலைக்கு நான்கு உச்சிகள் இருப்பதாகபும் இதன் மூன்று உச்சிகளில் ப்ரம்ஹ, விஷ்ணு ருத்ரர்கள் வாசம் செய்வதாகவும், நான்காவது உச்சியில் நானூறு யோஜனை உயரத்தில் இருக்கும் நகரத்தில் அம்பிகை இருப்பதாகச் சொல்கிறார்.

அம்பிகை வசிக்கும் நகரத்தின் பெயரே ஸ்ரீமன் நகரம், இதைச் சொல்லும்போது 'ஸ்ரீமன் நகர நாயிகா' என்கிறார்கள் வாக் தேவதைகள், அதாவது லக்ஷ்மீகரமான நகரத்தின் நாயகி என்று பொருள் சொல்லலாம். ஸ்ரீவித்யா நகரம் என்பதையே இப்படிச் சொல்லுவதாகச் சொல்கிறார்கள் பெரியோர். இந்த நகரமானது இரண்டு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1. லலிதா ஸ்தா ரத்னில் சொன்னது போல, ஸுமேரு மலையில்; 2. எல்லா பிரம்மாண்டங்களுக்கும் வெளியில், ஸுதா சமுத்ரத்தின் மத்தியில் இருக்கும் மணித்விபத்தில் இருப்பதாக ருத்ரயாமளம் எனும் நூலில் சொல்லபடுகிறது. ஸ்ரீமன் நகரம் என்பதே ஸ்ரீசக்ரந்தான் என்பது தீக்ஷதரது உரையில் சொல்லப்பட்டிருக்கீறது.

ஸ்ரீமன் நகரத்தில் இருக்கும் நாயகி, ஸ்ரீசக்ர நாயகியின் இல்லத்திற்கு சிந்தாமணி-க்ருஹம் என்று பெயர். மஹா-பாரதத்தில் சிந்தாமணியின் சிறப்பினை நாம் அறிவோம். சிந்தாமணி ரத்னத்திற்கு ஆகர்ஷண சக்தியும், கேட்டதைக் கொடுக்கும் சக்தியும் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. அது போன்ற சிந்தாமணி ரத்னங்களால் நிர்மாணிக்கப்பட்ட இல்லமாம் அது. ஆகவே அவள் "சிந்தாமணி க்ருஹஸ்த்தா". அதாவது சிந்தாமணிகளால் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் வசிப்பவள் என்று பொருள். மந்திரார்த்தமாகப் பொருள் சொல்லுகையில், அம்பிகையின் மந்திரங்களே சிந்தாமணிகள் என்றும் அவற்றில் வாசம் செய்பவள் என்றும் பொருள் கூறுவார்கள் சாக்த நெறியாளர்கள்.


சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கும், பெரிய தாமரைப் புஷ்பங்கள் நிறைந்த காட்டில் அம்பிகை இருக்கிறாள் என்கிறார்கள் "மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா" என்னும் அடுத்த நாமத்தில். க்ருஹத்தில் ஏது குளம், தாமரைக் காடு?. சாதகம் செய்பவர்களது ஸஹஸ்ராரம் என்னும் இடமான புருவ மத்தியில் இருக்கிறாள் என்பதே பொருள். சாதனையாளர்களது சஹஸ்ராரத்தில் என்பதையே தாமரைகள் நிறைந்த காடு என்கிறார்கள். ருத்ரயாமளத்தில் இந்த பத்மாடவீ யானது, ஸுதா சமுத்ரத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.இதனை அடுத்த நாமத்தின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

யோக சாஸ்திரத்தில் ஸஹஸ்ராரத்தை அடையும் குண்டலினீயானது அம்ருத தாரையில் நனையும் என்றும், அதுவே சிவ-சக்தி ஐக்ய பாவத்தை உணர்த்துவது என்று கூறுவார்கள். ஸஹஸ்ராரம் என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட பத்மம், அங்கு சந்த்ர கலை அம்ருதமாக வர்ஷிக்கும் இடத்தில் அம்பிகை இருக்கிறாள் என்பதை, "ஸுதா ஸாகர மத்யஸ்தா" என்கிறார்கள். இந்த சஹஸ்ரதள பத்மத்தில் வசிப்பவள் என்பதை "ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா" என்னும் நாமமும் சொல்லுகிறது.

"யோவைதாம் ப்ரும்ஹணோ வேத அம்ருதேனோவ்ருதாம் புரிம்" என்று ச்ருதி வாக்கியமும், "பிந்துஸ்தானம் ஸுதாஸிந்து:" என்று ருத்ரயாமளமும் கூறுவது இந்த ஸுதா ஸாகரத்தையே. இதையே செளந்தர்ய லஹரியில், "ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபிவாடீ பரிவ்ருதே" என்னும் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசார்யாள்.

6 comments:

தக்குடுபாண்டி said...

அற்புதமான வர்ணனை அண்ணா! செளந்தர்யலஹரியுலும் சிந்தாமணி க்ருஹம் பற்றிய தகவல் அருமையா இருக்கும்.

Jayashree said...

புருவ மத்தி ஆக்ஞா சக்ரம் இல்லையா மௌலி?

இரண்டு வெள்ளை இதழ்கள், இடா பிங்களா சுஷம்னா நாடியுடன் சேருமிடம் , சேர்ந்து பின் மூணா ஏறுமிடம் தலையின் மேல்பகுதி சஹஸ்ரார சக்ரம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன் அந்த இடம் புருவமத்திலேந்து ஒரு கோடு உள்ள வரைந்தா அது , three dimensionally மூச்சு இரண்டு மூக்குத்வாரம் வழியா உள்ளே சந்திக்கும் இடத்திலmeet பண்ணற இடம் , a sort of a point of convergence , pineal gland ஐ குறிப்பதாக ஐதீகம்னு என்னோட understanding .
Anatomically it represents a point in the centre of the brain between the two hemispheres in a small groove where two thalamic bodies meet and is above the pituitary gland. In human pineal gland secretes melatonin which modulates sleep wake cycle.
Ah !! well எதா இருந்தா என்ன . இப்போதைக்கு இத படிக்கும்போது, அவளோட அந்த Grandeur உண்டாக்கற சந்தோஷம் நிஜம். ஏன்னா அதுதான் NOW, PRESENT மத்ததை என்னிக்காவது பாத்தா வந்து சொல்லறேன்) பாத்தா திரும்பி வருவேனா? எல்லா ஜீவனும் salvageable னு சாமி சொல்லி இருக்கு)

குமரன் (Kumaran) said...

இங்கே உங்க பெங்களூருவுல இருக்கிற இராதாகிருஷ்ணர் கோவில் நினைவுக்கு வருது மேருமலை சிகரங்களைப் பத்தி படிக்கிறப்ப. இந்தக் கோவில்ல தானே முதல்ல நரசிம்மர், அப்புறம் பாலாஜி, அப்புறம் இராதாகிருஷ்ணர்ன்னு ஒவ்வொரு சிகரமா இருக்காங்க. :-)

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....இந்தியா வந்தும் அமெரிக்க நேரத்தில் தான் வேலையா? :), மன்னிக்கவும் ப்ளாக் படிப்பதா? :)


//இந்தக் கோவில்ல தானே முதல்ல நரசிம்மர், அப்புறம் பாலாஜி, அப்புறம் இராதாகிருஷ்ணர்ன்னு ஒவ்வொரு சிகரமா இருக்காங்க.//

ஆமாங்க குமரன்....ஆனாப் பாருங்க அது ஒருத்தருக்குப் பிடிக்கல்லை, அங்க க்ருஷ்ணன் இல்லை அப்படின்னுட்டாரு...இல்லாத சிறாருக்குச் சோறு போடறது பெரிய விஷயம் இல்லையாம். சோற்றின் அருமை பசித்தவனுக்குத்தானே தெரியும் :)

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு, அப்படியே அந்த ஸ்லோகத்தை ஒரு தரம் இங்கு பதிந்தால் என்ன குறைந்தா போயிடுவீங்க? :)

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா!..

//எதா இருந்தா என்ன . இப்போதைக்கு இத படிக்கும்போது, அவளோட அந்த Grandeur உண்டாக்கற சந்தோஷம் நிஜம். ஏன்னா அதுதான் NOW, PRESENT மத்ததை என்னிக்காவது பாத்தா வந்து சொல்லறேன்) பாத்தா திரும்பி வருவேனா//

இது தான் நிதர்சனமான வார்த்தைகள்....நானும் உங்களைப் போல தான்....:)