Monday, June 21, 2010

ஸத் சங்கம்....

உறவுகள், பிரிவுகள், நினைவுகள், அதன் தொடர்பான சிந்தனைகள் என்று, காலத்தின் கோலத்தில் அனைத்தும் அசைவுகளே!. சலனம் என்ற ஒன்று இருப்பது, இயற்கையை எப்போதும் உணர்த்துவதற்காகவே என்று தோன்றுகிறது. ஆக, ஆடும் மனத்தை எப்படி சமனப்படுத்துவது?. இதற்காக பிரயாசை செய்யதாலொழிய சாத்தியமாகாது. மனதை வசப்படுத்துதல் என்பதில் எப்போதும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படியான சூழ்நிலையிலும்,மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகவேண்டும். சரி,மனதை அடக்க/பழக்க என்ன செய்யவேண்டும்?. நம்மைச் சுற்றியிருக்கும் இருப்பவர்களை விலக்கி விட்டால் மன மயக்கம் தீர்ந்திடுமா?.

குளத்தில் தாமரைக் கொடி வளர்கிறது, மலரையும் தருகிறது. அக்கொடியை தண்ணீரிலிருந்து எடுத்து நிலத்தில் வைத்தால் வளருமா?. தண்ணீரில் இருந்தாலும் அதன் இலைகள் நீரில் பட்டும் படாமல் இருக்கிறதே?, அது போன்ற வாழ்வு வாழ வேண்டும் என்கிறார்கள் பெரியோர். தாமரை நீரை விட்டுச் சென்றால் வளராது, அது போல நாமும் நமது சுற்றத்தை விட்டு சென்றால் மட்டும் மனதை வெல்ல முடியாது. நமது கடமைகளை விலக்கி காட்டுக்குச் செல்லுதல் என்பது தாமரைக் கொடியை மண்-தரையில் நடுவது போன்றது என்கிறார்கள். ஆகவே, நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், உலகியலில் இருந்து விலகுதல் என்று இல்லாது, தாமரை இலைத் தண்ணீர் போல இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனதில் ஆயிரம் அபிலாஷைகளை வைத்துக் கொண்டு, வெளியில் எனக்கு ஏதும் வேண்டாம், நான் ஈச்வரனிடத்தில் மட்டுமே பந்தம் என்று இருக்கிறேன் என்றால் அது எப்படி சரியாகும்?. பாடும் பாடலென்னவோ "பிறவா வரம் தாரீர் பெம்மானே" என்பதாக இருந்தாலும், மனதென்னவோ மயக்க நிலையினை விட்டு வெளியில் வருவதில்லையே?. மரணத்தின் வாயில் கண்முன் வந்தாலும், மனமென்னவோ பண்பற்ற நிலையிலேயே இருக்கிறதே?...எப்போது தெளிவடையும் இந்த மனம் ?.

மகிழ்ச்சியாகட்டும், துக்கமாகட்டும் எல்லாம் மனதின் கல்பிதம் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் இருத்திக் கொண்டால் மனது தானாக அடங்கிவிடும் என்கிறார்கள் பெரியோர். இவ்வாறான நிலை எப்படி, எப்போது ஏற்படும்?. இதற்க்கான வழியைத்தான் பகவத்பாதர் "ஸத்சங்கத்வோ நிஸ்சங்கத்வம்" என்கிறார். அதாவது ஸத்புருஷர்களது [இங்கு புருஷர்கள் என்பது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல] தொடர்பில் இருக்க வேண்டும் என்கிறார். ஸத்புருஷர்களின் தொடர்பில் இருந்தால் மனதை நிலையாக இறையிடத்தில் செலுத்த முடியும் என்று கூறுகிறார், இந்த ஸத்-தொடர்பே ஸத்-சங்கம். தொடர்ந்து ஆன்மீகப் பெரியவர்களது நிழலில் இருந்து, அவர்களது சொல்-செயல் போன்றவற்றை கவனித்து, அதன்படி வாழ்ந்தால் மனதை தன்வயப்படுத்தலாம், இதுவே ஸத்-சங்கத்தின் பெருமை.

ஸத்-புருஷர்களுடைய தொடர்பால் நமக்கு நல்ல பழக்கங்கள் வரும். இரு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவன், தினம் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்வது, எளியவருக்கு உதவுவது போன்றவற்றைச் செய்பவன் என்றால்,அவனுடன் தொடர்பில் இருக்கும் மற்றொருவனுக்கும், பக்தி, பரோபகாரம் போன்றவை தானாக வந்துவிடும். இதுதான் ஸத்சங்கத்தின் பயன். இவ்வாறு பக்தி இருக்கும் இடத்தில் வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும். ஆக, ஸத்-சங்கம் என்பதன் மூலமாக ஆன்மீகத்தின் அடிப்படை அமையும் என்பது தெளிவாகிறது.

சரி ஸத் புருஷர் என்பவர் யார்? என்ற கேள்விக்கான விடையையும் பார்த்துவிடலாம். எவனுக்கு ஈச்வரனிடத்தில், வேத, தர்ம சாஸ்தரத்திடத்தில் அசையாத நம்பிக்கை இருக்கிறதோ அவரே ஸத்-புருஷர் என்கிறார் ஆதி-சங்கரர். ஆகவே நாமும் ஈச்வரனைப் பிரார்த்திப்பது மட்டுமின்றி வேத-வேதாந்தங்களிடத்தும், தர்ம சாஸ்திரங்களிடத்தும் நம்பிக்கை வைத்து நல்ல ஸத்-சங்கத்தை வேண்டுவோம். நம்மிடையே மறைந்திருக்கும் ஸத்-புருஷர்களது சகவாசத்தால் நாமும் நன்னெறிகளைப் பற்றிக் கொள்ள பராசக்தி அருளட்டும்.

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!

14 comments:

குமரன் (Kumaran) said...

நல்ல சிந்தனை. அதிலிருந்து தான் சத்சங்கம் தொடங்குகிறதாம்.

திவா said...

நல்ல சிந்தனை தொடரட்டும். :-)

Jayashree said...

ஸ்த் சங்கம் நல்லோர் சேர்க்கை என்று அர்த்தப்படாமல் நல்ல எண்ணங்களின் சேர்க்கைனு நான் நினைக்கிறேன் மௌலி. அத்வானத்தில் ஆடுகளோடு மனிதர்களாய் இருக்கிற எங்களை போன்றவர்களுக்கு constant company நற் சிந்தனை தான்.COMPANY எப்பவாவது தான் !! நல்லோர் சங்கம் கிடைக்கும் போது அது ஆழமாக நீண்டு நிலைக்கிறதும் உண்மை தான் . வஸிஷ்டர் ராமருக்கு சொனன முமுக்ஷு ப்ரகரணம் என்ற யோக வஸிஷ்ட்டத்தில் கூறி இருக்கிற படி சத் சங்கத்தால் பலர் சம்சார சாகரத்தை கடந்துள்ளார்கள்.அறியாமையை அகற்றி, ஆபத்தை தவிர்த்து, சூரியனை போல ஒளியை தந்து, ஏற்ற்த்தாழ்வுகளை நீக்கி, சாந்தி,ஆத்ம விசாரம் இவைகளை தந்து சந்தோஷத்தை தருவது.

கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல ஸத்-சங்கத்தை வேண்டுவோம்!

அருமையாகச் சொன்னீர்கள் மௌலி!

பிரஹதாரண்யக உபநிஷத் 3.4.5 இல் சொல்வதும் இதைத்தானே!

எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம்!

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்று குறள்வாக்கும் கூட இதைத் தானே சொல்கிறது!

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....நல்லா சிந்திக்கிறீங்க...:)

மதுரையம்பதி said...

வாங்க திவாண்ணா...உங்களது ஆசியிருந்தால் தொடரலாம்..:)

மதுரையம்பதி said...

அருமையாகச் சொன்னீர்கள் ஜெயஸ்ரீ-மா...தாயகத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் நீங்க நற்சிந்தனை என்று சொல்லுகிறீர்கள்....இந்தியாவிலேயே இருந்தாலும் எனக்கும் அதே நிலைதான். அரக்க-பரக்க ஓடுவதே வேலையாக இருக்கிறது...இடையே கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் படிக்கவும், எப்போதாவது எழுதுவதும் மட்டுமே நடக்கிறது...யோக வாசிஷ்டம் படிச்சிருக்கீங்களா?...எனக்கு அறிமுகமே இல்லை :(. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் படிக்கும் ஆவல் அதிகமாகிறது...புத்தகத்தைத் தேடவேண்டும். நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்...நல்ல குறளை நினைவுபடுத்தினீர்கள்...நன்றி.

தக்குடுபாண்டி said...

சங்கத்துல ஓரமா நின்னுன்டு எட்டிப்பாக்கர்துக்கு மட்டுமாவது தக்குடுவுக்கு அனுமதி வேண்டும்!!..:)

Matangi Mawley said...

நீங்க எழுதியிருக்கும் விதம் அருமை.
ஒரு பிரச்சனையை என்னவென்றால்- Like - Minded சங்கம் கிடைப்பதுதான்..

Anonymous said...

சார்,

எனக்கும் ஒரு அனுமதி...

அப்பப்ப நாங்களும் வந்து படிச்சுட்டு போகலாமில்லையா?

எங்களுக்கும் நல்ல பழக்கவழக்கங்கள், விஷயங்கள் வரட்டுமே. அனுமதி உண்டா...
:-)

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு...உங்களுக்கு அனுமதியா?, நீங்கதான் முதல் ஆள்..:)

மதுரையம்பதி said...

வாங்க மாதங்கி, முதல் வருகைக்கு நன்றி.

//ஒரு பிரச்சனையை என்னவென்றால்- Like - Minded சங்கம் கிடைப்பதுதான்.//

கிடைக்கும், மனதார வேண்டிடுவோம்...கிடைக்கும்....:)

மதுரையம்பதி said...

வாங்க அனானி...

//அப்பப்ப நாங்களும் வந்து படிச்சுட்டு போகலாமில்லையா?
எங்களுக்கும் நல்ல பழக்கவழக்கங்கள், விஷயங்கள் வரட்டுமே. அனுமதி உண்டா...//

தாராளமா வந்து படிக்கலாம், மற்றவர்களை வருத்தாது, கருத்துக்களையும் பகிரலாம். :-)