Tuesday, July 27, 2010

பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகிய ஐவரை பஞ்ச ப்ரம்ஹா என்பார்கள். இந்த ஐவரும் தங்களுடைய சக்திகளுடன் இல்லாவிடில், செய்வதற்கு ஏதுமின்றி பிரேதம் போன்றிருப்பதாக லலிதோபாக்யானம் கூறுகிறது. இந்த ஐவரில், முதல் நால்வர் கால்களாகவும், ஸதாசிவன் பலகையாகவும் கொண்ட மஞ்சத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாளாம். இப்படி, சக்திகள் இல்லாத பஞ்சப்ரம்ஹாக்களினாலான மஞ்சத்தில் வீற்றிருக்கும் அவளை, "பஞ்சப்ரேதாஸனாஸீனா" என்கிறார்கள் வாக்தேவதைகள். பஞ்சப்ரம்ஹங்களினாலான மஞ்சம் என்பதால் பஞ்சப்ரம்ஹாசனம் என்றும் அதில் அமர்ந்திருக்கும் அம்பிகையை "பஞ்ச ப்ரம்ஹாஸந ஸ்திதா" என்றும் கூறுகிறார்கள். மஞ்சத்தின் பலகையாகச் சொல்லப்படும் ஸதாசிவன், தத்வங்களுக்கு எல்லாம் மஹத்தான தத்துவமாக இருக்கிறானாம்.

இந்த பஞ்ச ப்ரம்ஹாக்களை பஞ்ச ப்ரம்ஹங்கள் என்றும் கூறுவதுண்டு. பரப்ரம்ஹத்தின் மாயா வினோதத்தால் பரப்ரம்ஹத்தின் ஐந்து தோற்றங்கள் போல இவர்கள் தோன்றுவதால் இவர்களை இப்படிக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தைக் கூறுவதே "பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ" என்னும் நாமம். இந்த நாமத்திற்கு பெரியோர்கள் பல விதத்தில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் பார்த்திடலாமா?

பரசிவனுடைய பஞ்ச முகங்களாகிய ஈசானன், தத்புருஷன், வாம தேவ, அகோர, ஸத்யோஜாதன் ஆகிய ஐவரையும் பஞ்சப்ரம்ஹாக்கள் என்று கூறி, அவர்களது தோற்றத்தில் இருப்பதும் அம்பிகையே என்பர். இதே போல ஸ்பர்சம், சப்தம், ரூபம், ரஸம், கந்தம் ஆகியவற்றை ப்ரம்ஹ ஸ்வரூபமாகச் சொல்வதுண்டு. இவற்றிலிருந்தே பஞ்சபூதங்களான ப்ருத்வீ, அப்பு, வாயு, தேஜஸ் போன்றவைகள் தோன்றுவதாகவும், இந்த ரூபங்கள் எல்லாம் அம்பிகையின் ரூபங்களே என்று கூறுகிறார்கள்.

இப்படி பஞ்சப்ரம்ஹாஸனத்தில் இருப்பவளான அம்பிகையை இன்னொரு இடத்தில் கணக்கற்ற தளங்களை உடைய பத்மத்தின் மேல் எழுந்தருளியவளாகச் சொல்வதுதான் "ஸஹஸ்ராராம்புஜாரூடா" என்னும் நாமம். எண்ணிக்கையில் அடங்காத அளவு இதழ்களை/தளங்களை உடைய தாமரை என்பது சஹஸ்ராரத்தைக் குறிப்பது. அங்கு இருக்கிறாள் என்று கூறி, அந்த பத்மத்தின் நடுவில் இருக்கும் சந்த்ர மண்டலத்தில் இருந்து அம்ருதத்தை சகல நாடிகளிலும் பெருகச் செய்கிறாளாம், இதைக் குறிப்பதே "ஸுதா தாராபி வர்ஷிணீ". இந்த நாமத்தை "ஸுதா தாராபிவர்ஷிணீ என்றும் கூறலாம் என்கிறார்கள் பெரியோர்.

4 comments:

தக்குடுபாண்டி said...

Present sir!!! waiting for jeyashreema comment....:) so that i will get some extra treat along with this article.

Jayashree said...

கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
""கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே ''

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள்,
அகம் மகிழ் "ஆனந்தவல்லி" அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.


சௌந்தர்ய லஹரி
"
மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருதமாகாசமுபரி
மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே.

ஸுதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதைஹி
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹ்ஸஹ
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி"

ஆனந்த, அம்ருத வர்ஷினி, அம்ருதானந்தமயீ......

அருமைமா மௌலி!! sort of hectic fortnight. படிச்சுண்டுதான் வரேன்.

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு....உங்க எதிர்பார்ப்பு வீணாகுமா?, ஜெயஸ்ரீ மேடம் வந்துட்டாங்க..:)

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீமா!....வேலைப் பளூவிற்கு இடையில் வந்து, தொடர்புடைய வரிகளை அள்ளி அளித்தமைக்கு நன்றிகள் மா!.