Friday, April 16, 2010

வாமநயனா, புண்யா புண்ய பலப்ரதா, குஹ்யரூபிணீ, சுபகரீ


(623) கேவலா, (624) குஹ்யா, (706) குஹாம்பா, (606) குஹஜன்பூ:, (707) குஹ்யரூபிணீ

"குஹ்யா" என்றால் அதி ரஹஸ்யமாக இருப்பவள் என்று பொருள் சொல்லலாம். எங்கு ரஹஸ்யமாக இருக்கிறாள்?, நமது ஹ்ருதயத்தில், காமராஜ பீஜத்தில் ரஹஸ்யமாக இருக்கிறாள், பூரணமாக, ஏகாந்தமாக இருக்கிறாள். இதனால் அவளை "கேவலா" என்று சொல்லியிருக்கிறார்கள். கேவலா என்றால் பூரணமாக, ஞானவிசேஷ ரூபமாக இருப்பது என்று சொல்கிறார்கள். குஹ்யா என்றால் ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கியம் என்றும், அந்த ஐக்கியத்திற்கான உபாஸனா மார்க்கத்தின் மூலமாக அடையக்கூடியவள் எனலாம்.

தாராசுரனால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவனிடமிருந்து விடுதலை பெற அம்பாளைப் பிரார்த்திக்கின்றனர். அந்தப் பிரார்த்தனையின் பலனாக பிறந்த காங்கேயன் பற்றி புராணங்களில் பார்த்திருக்கிறோம். இந்த சுப்ரமணியரது தாய் என்பதான நாமமே "குஹாம்பா" என்பது. இதையே குஹையில் இருக்கும் அம்பிகை என்றும் கூறலாம், அதாவது ஹ்ருதயம் என்னும் குஹையில் இருப்பவள். ஹ்ருதய குஹையில் இருப்பவள் என்பது ச்ருதி வாக்யம் என்றும் தெரிகிறது. இது போன்ற இன்னொரு நாமம் குஹஜன்மபூ:. இதன் பொருளும் ஸ்கந்தனுக்குத் தாயாக இருப்பவள் என்பதே. குஹூ என்றால் சூழ்வது என்று பொருள். அஞ்ஞானத்தில் ஆழ்ந்த ஜீவன்களைக் குஹர்கள் என்று பெயர். இந்த ஜீவன்கள் எல்லாம் அம்பிகையிடத்திருந்தே உற்பத்தி ஆவதாகவும் அதனால் அவளுக்கு "குஹஜன்மபூ;" என்று யாக்ஞ்யவல்கியர் சொல்லியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பரம ரஹஸ்யமான ரூபத்தை உடையவள் என்னும் பொருள் தரும் நாமம் "குஹ்யரூபிணீ" என்பது. அதாவது ஞானரூபிணி என்பது பொருள். குஹ்யோபநிஷத் என்று ஒரு உபநிஷத், அது அம்பிகையின் ரூபம் என்று கூர்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக குஹ்யோபநிஷதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம் என்று கூறியிருக்கிறார்கள் பெரியோர்.

(332) வாமநயனா, (288) புண்யா புண்ய பலப்ரதா, (682) சுபகரீ

அம்பிகையின் கண்கள் மிக அழகானவை என்னும் பொருளில் ஒரு நாமமே வாமநயனா. இதையே இனிமையான/அழகான அறியும் விதத்துடனானவள் என்றும் கூறலாம். வாமாசாரம் என்ற முறையில் வழிபடுபவர்களையும்
அழைத்து/அணைத்துச் செல்லும் மாதா என்றும் சொல்லலாம்.

கர்மாவுக்கு கிடைக்கும் பலனை வாமம் என்று கூறுவார்கள். கர்மாவின் பலன்களை அடையும்படி செய்வதால் அவளை வாமநயனா என்றும் சொல்லலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இதன் தொடர்ச்சியான இன்னொரு நாமம்,
'புண்யா புண்ய பலப்ரதா' என்பது. புண்யா புண்ய பலப்ரதா என்றால் புண்யம், அபுண்யம்/பாபம் ஆகியவற்றுக்குப் பலனைக் கொடுப்பவள் என்று அர்த்தம். ஸ்வதர்மத்தின்படி நடக்கிறவனுக்கு விசேஷமான பலன்களை உறுதி செய்தும்,
ஸ்வதர்மத்தில் செய்யக்கூடாதவைகள் என்று சொல்லியிருப்பதைச் மீறி நடப்பதால் ஏற்படும் பாபங்களையும் அம்பாளே கொடுப்பதாகவும் பொருள் சொல்லக்கூடிய நாமமே இது என்கிறார் பாஸ்கரர்.

மந்திர உபதேசம் இல்லாதவர்கள் ஸஹஸ்ர நாமத்தை, த்ரிசதியை பாராயணம் செய்ய/அர்ச்சனை செய்யக் கூடாது என்பது ஒரு விதி. இவ்வாறான நியம, நிர்பந்தங்கள் இல்லாது அம்பிகையை ஆராதித்தாலும் எந்த கெடுதலும் செய்யாது, சுபத்தை அருளுபவள்
என்று கூறும் நாமம் சுபகரீ. அதாவது பக்தர்களுக்கு சுபத்தையே அருளுபவள். ஸ்ரீமாதா என்று சொல்லிவிட்டாலே போதுமே?, எந்தத் தாய் தன் குழந்தைகளுக்கு அசுபமான செயலைச் செய்வாள்?, அது போல ஜகத்-ஜனனி தனது
பக்தர்களுக்கு எப்போதும் சுபத்தையே அருளுபவள் என்பதை தெளிவாக்கும் நாமம் இது.

6 comments:

vijayaragavan said...

"""மந்திர உபதேசம் இல்லாதவர்கள் ஸஹஸ்ர நாமத்தை, த்ரிசதியை பாராயணம் செய்ய/அர்ச்சனை செய்யக் கூடாது என்பது ஒரு விதி. """
shocked for a moment:)

Jayashree said...

வாம ங்கறது சிவன், இடதுபக்கம் னும் பொருள் படலாம் இல்லையா? அப்போ
1) சிவனின் கண்களானவள்- காமேஸ்வர க்ருபாகடாக்ஷி!!!கண்ணம்....மா:))))

2) இடது கண்ணானவள்- இடதுகண் என்னது? - சந்திரன் -( the female principle); எதை ஆள்கின்றது சந்திரன் ? மனதை ; அதை ஆட்டிவிக்கும் சக்தி எங்கேந்து? சந்த்ர மௌலீஸ்வரனின் பத்னி இடத்திலிருந்து.அப்போ என்னது இடது கண் 3வது கண் சுஷும்னான்னா???????! இப்படியும் இருக்கலாமோ?

குமரன் (Kumaran) said...

நிறைய நாமங்களை இங்கே சொல்லிவிட்டீர்கள்! ஓரிடத்தில் வாம நயனா என்று எழுதுவதற்குப் பதிலாக காம நயனா என்று தட்டச்சுப்பிழை வந்திருக்கிறது. அதுவும் சரி தான் என்றாலும் இங்கே பொருள் சொல்ல வந்தது வாமநயனா என்ற நாமத்திற்கு என்பதால் அதனைச் சரி செய்துவிடுங்கள்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்...ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க...நன்றி :).

பார்த்துச் சரி செய்திட்டேன்.

மதுரையம்பதி said...

வாங்க விஜய், எல்லாம் குருவருள், அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டு செய்யுங்கள்.

மதுரையம்பதி said...

//சிவனின் கண்களானவள்- காமேஸ்வர க்ருபாகடாக்ஷி!!!கண்ணம்....மா:))))//

கலக்கலாச் சொல்லியிருக்கீங்க ஜெயஸ்ரீ-மா. 2ம் பாயிண்ட்டை இன்னும் கொஞ்சம் தெளிவாக்கிடுங்களேன், ப்ளிஸ்.