தானும், பரப்பிரம்மமும் ஒன்று என்பதான ஞானம் இல்லாதவர்களை பசுக்கள் என்று ச்ருதியில் சொல்லியிருக்கிறதாம். பாசம் என்பது நாம் அறிந்ததே, இதுவும் மாயை என்றே சொல்லியிருக்கிறார்கள். பஞ்சபூதங்களால் ஆன தேகத்தை 'தான்' என்று நினைத்து அதற்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட ஜீவனாகிய பசுவுக்கு அபேத/வேற்றுமையில்லாத/ ப்ரம்ஹ ஞானத்தை ஈந்து, பாசத்திலிருந்து/மாயையில் இருந்து விடுவிப்பவளுக்கு 'பசுபாச விமோசினீ ' என்று சொல்கிறார்கள்.
பசுக்களாகிய ஜீவன்களுக்கெல்லாம் பரமனே பதி என்னும் பொருளில் பசுபதி என்றும் சொல்லி இருக்கிறார்கள்.அதன்படி பிரம்மவித்யையில் லயிக்கும் சமயத்தில் அபேத ஞானம் ஏற்பட்டு பாசமானது விலகி ஜீவனானவன் பதியாகவே ஆகிடுவான் என்கிறார்கள். இவ்வாறான நிலை வருவதற்கு அருளுபவளை பசுபாச விமோசினீ என்பதும் தவறில்லையே?.
ஸமயாந்தஸ்தா
அந்தர்முகமாக ஸ்ரீசக்ரத்தை பாவனை செய்து, அதற்குப் பூஜை மற்றும் உபாஸனைகளைச் செய்யும் முறையை 'ஸமய' என்று கூறுவார்கள். [பகிர்முகமாக ஸ்ரீசக்ரம், மேரு போன்றவற்றை வைத்துச் செய்வது 'குலம்'] ஸமய வழியில், மானசீகமாகச் செய்ய்படும் முறையே ஸகல யோகிகளாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முன்னர் பார்த்த ஒரு நாமத்தில் சொன்னபடியாக வஸிஷ்ட, சுக, சனக, ஸனந்தன, ஸனத்குமாரர்களால் செய்யப்பட்ட சுபாகம பஞ்சகம் இந்த வழியிலானதே. இவ்வாறு ஸமய மார்க்கத்தில் வழிபடப்படுபவள் என்பதே ஸமயாந்தஸ்தா என்னும் நாமம். இதன் தொடர்புடைய இன்னொரு நாமம் 'ஸமயாசார தத்பரா' என்பது. அதாவது மேற்கூறிய ஸமயமார்க்கமாக உபாசனை செய்வதால் மகிழ்பவள் என்று பொருள். இந்த ஸமய மார்க்கத்தில் உபாஸனை செய்வதைப் பற்றி ருத்ர யாமளம் என்னும் நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள் பெரியோர்.
இந்த நாமாவுக்கு இன்னொரு பொருளும் சொல்லப்படுகிறது. அதாவது, சிவம்,சக்தி ஆகிய இருவரும் ஸமானமாக இருப்பதால் சிவனுக்கு 'ஸமய:' என்றும் சக்திக்கு 'ஸமயா' என்றும் பெயர். இவர்களது ஸாம்யத்தை ஐந்துவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். சக்ரம் முதலியவற்றில் ஸமமாக இருப்பது அதிஷ்டான ஸாம்யம், ஸ்ருஷ்டி முதலிய க்ரியைகளில் இருக்கும் ஸமமாக இருப்பது அனுஷ்டான ஸாம்யம், நிருத்யம் போன்றவற்றில் இருக்கும் ஸாம்யம் அவஸ்தானம் என்றும், சிவ, சிவா, பைரவ-பைரவி போன்றவற்றால் நாம ஸாம்யம், கடைசியாக நிறம், தரித்திருக்கும் ஆயுதங்கள் இவற்றால் ரூப சாம்யம் ஆகியவை.
ஸம்ஹ்ருதாசேஷ பாகண்டா
வேதம், வேதாங்கங்கள், மீமாம்ஸை, நியாயம், தர்ம சாஸ்திரம், புராணம் ஆகியவை எல்லாம் தர்மத்திற்கு இருப்பிடம் என்பர். இவற்றில் சொல்லியிருப்பதற்கு வெளியில் இருப்பதை புத்தியின் கற்பனையால் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார் லக்ஷ்மீதரர். இவ்வாறு மேலே சொன்ன வேத-வேதாந்த-தர்ம சாஸ்திர விரோதமான கற்பனையில் இருப்பவர்களை பா-கண்டன், பா என்றால் வேதம், அதை கண்டிப்பவன் என்று கூறி, அவ்வாறானவர்களை ஸம்ஹாரம் செய்பவள் என்று அம்பிகையைக் கூறுவதே இந்த நாமம். பாகண்டா என்பதும் பாஷண்டா என்பதும் ஒரே பொருளைத் தருவது, இன்றும் சில இல்லங்களில் அனாசாரமான செயல்களைச் செய்யும் குழந்தைகளை பாஷாண்டம் என்று திட்டுவதுண்டு..:-).
ஸதாசார ப்ரவர்த்திகா
மேலே சொல்லியபடி அம்பிகை பாகண்டிகளை ஸம்ஹாரம் செய்து, எல்லோரும் ஸதாசாரத்தை அனுசரிக்கச் செய்கிறாள் என்பதால் அவளுக்கு ஸதாஸாரத்தின் படியாக தனது பக்தர்களை வாழச் செய்பவள் என்பதான இந்த நாமம். ஸதாசாரம் என்றால் என்ன என்றும் பார்த்துவிடலாம். ஸதாசாரம் என்றால் உத்தமமான ஆசாரம், ஸத்துள்ள ஆசாரம், பிரம்மத்தை அடையக்கூடிய ஆசாரம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
[இந்த இடுகையில் 5 நாமங்கள் வந்திருக்கின்றது]
2 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment