Saturday, April 10, 2010

பஞ்ச ப்ராணன்களான, ப்ராணா, அபானா, வ்யானா, உதானா, சமானா ஆகியவற்றுக்கு ஈச்வரியாக இருப்பதால் அம்பிகையை ப்ராணேச்வரீ என்கிறார்கள். வேதத்தை, ப்ராண: என்று கூறுவதுண்டு, அப்படிப் பார்த்தால் வேதத்திற்கெல்லாம் தலைவியாக/ஈச்வரியாக இருப்பவள் எனலாம். ப்ராண என்பது இந்திரியங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இதன்படி இந்திரியங்களுக்கு ஈச்வரி. அம்பிகை எல்லா பிரபஞ்சங்களுக்கும் அதிஷ்ட்டானமாக/அடிப்படையாக இருக்கிறாள் என்பதை 'ப்ரதிஷ்டா' என்று கூறினர் வசின் தேவதைகள். இவளே சகல உலகத்தையும் உயிருடன் இருக்கச் செய்வதால் அவளை 'ப்ராணதாத்ரி' என்கிறார்கள். மேலே சொன்னது போல சகல இந்திரியங்களையும் தருபவள் என்றும் கூறிடலாம்.

இவளது ரூபத்தைச் சொல்லுகையில், எல்லோருடைய அனுபவத்தாலும் தெரியப்படுபவள் என்பதாக,'ப்ரகடாக்ருதி' என்கிறார்ள். ப்ரகடம் என்றால் வெளிப்படையாகத் தெரிவது என்று பொருள். ஸ்ரீசக்ரத்தின் முதலாவரண யோகினி தேவதைகளின் ரூபமாக இருப்பவள் என்றும் கூறலாம்.


ஸத், சித், ஆனாந்தம் என்ற லக்ஷணங்களுடன் கூடிய ப்ரம்மத்தின் சித் என்னும் பாகத்தை தன் ஸ்வரூபமக உடையவள், அதனால்தான் அவள் 'சித்ரூபிணீ'. பத்ம புராணத்தில் அம்பிகையின் மூர்த்தங்களைச் சொல்லுகையில் சகல ஜீவன்களுடைய சித்தங்களில் இருப்பது 'சித்கலா' என்ற சக்தி என்பதாகச் சொல்லியிருக்கிறது. சித் என்றால் ஞானம் என்று ஒரு பொருள், கலை என்றால் பாகம் எனலாம். ஆக சகல ஜீவன்களின் சித்தத்திலும் இருப்பவள் என்று பொருள் சொல்லி, ஜீவன்களின் ஆனந்தம் என்பது ப்ரம்மானந்தத்தின் ஒர் அம்சமே என்று கூறும்படியாக, அடுத்து வருவது 'ஆனந்தகலிகா'. ஆனந்தகலிகா = ஆனந்தத்தின் அம்சமானவள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனந்தகலிகா என்பதையே, ஸச்சிதானந்தமான பரபிரம்மத்தின் ஆனந்த ரூபம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அத்வைதத்தில் பாம்பு-கயறு உதாரணம் சொல்லி மாயையை விளக்குவார்கள். அதாவது இருட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் கயற்றைப் பார்த்து பாம்பு என்று கலக்கமுறுவதாகவும், அருகே சென்றால் அது கயறு என்று தெரியும் இது மாயையால் விளைவது என்று சொல்லப்படும், இதனாலேயே அவள் 'மஹாமாயா' எனப்படுகிறாள். இந்த மாதிரி கலக்கங்கள் இல்லாதவளாம் அம்பிகை, அகவே அவள் 'நிராபாதா'. அதாவது கலக்கமில்லா புத்தியுடையவள். நிராபாதாவிற்கு அடுத்து வருவது நிர்பேதா, அதாவது பேதங்கள் ஏதுமில்லாதவள். சக்தி பெரிதா?, சிவம் பெரிதா? என்பதெல்லாம் உண்மையை நெருங்காதவர்களது கூற்று என்றும் யோகிகளுக்கு இந்த பேதங்கள் இல்லாததை உணர்வர் என்பது கூர்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

3 comments:

Jayashree said...

எல்லோருடைய அனுபவத்தாலும் தெரியப்படுபவள் என்பதாக,'ப்ரகடாக்ருதி' என்கிறார்ள். ப்ரகடம் என்றால் வெளிப்படையாகத் தெரிவது என்று பொருள்.""

ஓ.. ப்ரகட ஆக்ருதி யா.. புரிஞ்சது.

ப்ரதி இஷ்டா னு பிரிச்சா இப்படி மீனிங் ஆகுமா? ப்ரதிங்கறது - (தளைகளை) வேரறுப்பவள் ? இஷ்டா - ஆசா பாசங்கள் . ஆசைகளை திருப்பிவிடுபவள்?? தன்னை நோக்கி? இப்ப சமீபத்ல ஒரு article படிச்சேன் . அதுல intellect ஓட assistants ஆ அஹம்காரம் , மனஸ், செயல் ஞான இந்த்ரியங்கள்னும், இதுல 2 வது assistant க்கு ப்ரதி ஹ்ர்த்ர் நு பேர்னு படிச்சேன் இதுல ப்ரதி related to the word harthr is -one who severs. ஹர்தர் நா தான் அகற்றுபவர் நு அர்த்தமா? இல்லை ப்ரதியா நு புரியல்ல அதுமாதிரி இங்கேயும் prathi related to the word ishta அப்படி மீனிங் இருக்குமோனு தோனித்து ! ஒரே word ஆ ப்ரதிஷ்டா - கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணறாளே அதுமாதிரியா? consecrated னு? இன்னும் ஒரு விளக்கம் - நிலைத்த நிர்வாக சக்தி - yes !! நீங்க சொல்லி இருக்கிற அடிப்படை சக்தி!! நிறைய எனக்கு தெரியாது இருக்கே மௌலி !! லலிதா சஹஸ்ரனாமம் பூர எழுதச்சொன்னா நீங்க ஆயுசுக்கும் எழுதணும் :))To you ..., i bet it would be a pleasure to write :))

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மா.

//ப்ரதி இஷ்டா னு பிரிச்சா இப்படி மீனிங் ஆகுமா? ப்ரதிங்கறது - (தளைகளை) வேரறுப்பவள் ? இஷ்டா - ஆசா பாசங்கள் . ஆசைகளை திருப்பிவிடுபவள்?? தன்னை நோக்கி? இப்ப சமீபத்ல ஒரு article படிச்சேன்// நல்லாயிருக்கே இந்த அர்த்தம்...ஆனா அப்படி பொருள் வருதான்னு லெக்ஸிகன்ல ஒரு முறை பார்த்துக்கணும்...:)

ஹர்த்தா -> ஹரன், அப்படின்னா அழிப்பவர், அறுப்பவர் என்று சொல்லலாம். அப்படிப் பார்த்தால் நீங்க சொல்லும் ஆசா-பாசங்களைத் திருப்பி/விலக்கி விடுபவள் என்று சொல்லலாம். அருமை.. :)

//நிறைய எனக்கு தெரியாது இருக்கே மௌலி !! //

உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நிறையத் தெரியல்ல...தொடர்ந்து தெரிஞ்சுக்க முயற்சிப்போம்....

//லலிதா சஹஸ்ரனாமம் பூர எழுதச்சொன்னா நீங்க ஆயுசுக்கும் எழுதணும் :))To you ..., i bet it would be a pleasure to write :))//

எனக்கு மகிழ்ச்சிதான், இறையருளும் இருக்கணும்..

தக்குடுபாண்டி said...

//உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நிறையத் தெரியல்ல...தொடர்ந்து தெரிஞ்சுக்க முயற்சிப்போம்// இரண்டு பேரும் என்ன தெரிஞ்சுண்டாலும் மறக்காம இங்க வந்து சொல்லுங்கோ! அப்பதான் என்ன மாதிரி ஆசாமிகளுக்கு கொஞ்சமாவது எதாவது புடிபடும்...:)