Saturday, November 22, 2008

திருநெல்வேலி - பாபநாசம் [நவ-கைலாசங்கள் -2]

நவ கைலாசங்கள் பற்றி ஆகஸ்ட் மாதத்தில் எழுத ஆரம்பித்தேன். ஒரு தொய்வுக்குப் பிறகு மீண்டும் இதனை எழுத தொடங்குகிறேன். இந்த தொடரினை முடிக்க, நவகிரஹங்களும் அருளட்டும். நவகைலாசங்களில் முதலாவதாக வரும் பாபநாசம் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நவக்கிரஹங்களில் முதலாவதான சூரியனின் சக்தி அளப்பரியது. சூரியனது இயக்கத்தாலன்றோ பயிர், உயிர் செழிக்கிறது?. சூரியன் இல்லாத ஒரு உலகம் கற்பனை கூடச் செய்ய முடியாதே?. இதே போல ஜோதிஷ சாஸ்திரத்தின்படி, மனித ஆயுளில் ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் பெற்று இருக்கும். அந்தந்த திசையில் என்ன பலன்கள், அவற்றின் தாக்கம் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் சுப்பையா வாத்தியார் விரிவாக அவரது வகுப்பறையில் பாடம் நடத்தி வருகிறார். சாதாரணமாக நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு போன்றவற்றிற்கு சூரியனை வழிபடச் சொல்லியிருக்கிறார்கள் ஆன்றோர். சூரியனின் அருள் வேண்டுபவர்கள் இன்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்றவற்றை பாராயணம் செய்யக் காண்கிறோம். மேலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும், விரதமிருப்பதும் இன்றும் பல இல்லங்களில் நடக்கிறது. இவை எல்லாம் சூரிய வழிபாட்டின் ஒர் அங்கம் தான். சூரியனை வழிபடுவதன் மூலம் நவக்கிரஹங்களின் பாதிப்பு குறையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இந்த பதிவில் பார்த்தது போல அகஸ்தியர் தாமிரபரணியில் இட்ட முதல் பூ கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். பாப-விநாசம் என்றும் பாப-நாசம் என்றும் கூறுவதிலேயே இந்த இடத்தின் பெருமை நமக்கு புலனாகிறது. நாம் செய்த பாபங்களை எல்லாம் நாசம்/நசியச் செய்து, நம்மை நல்வழிப்படுத்துகிறார் இங்கிருக்கும் இறைவன். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி சமவெளியை அடைவது இந்த பாப-விநாசத்தில்தான் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்த இடத்தில்தான் அகஸ்தியரும் தவமிருந்து அம்மை-அப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது, அவருக்கு சிறு கோவிலும் இருக்கிறது. சிவ தம்பதியினர் தமது தெய்வீகத் திருமணத்தை அகஸ்தியருக்கு காண்பித்த இடம் பாபநாசம் என்று கூறுகின்றனர். இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான் என்றும் சொல்கிறார்கள். பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் ஒரு சமயம் இந்திர லோகத்தில் இந்திரனிடம் மலைகளின் மகத்துவம் பற்றி பேசுகையில் மேரு போன்ற மலைகள் எவ்வாறு மகத்துவம் பெற்றன என்று இந்திரன் கேட்க அப்போது மலைகள் தவம் புரிந்து ஈசனிடம் அருள் பெற்றன என்றும் அவ்வாறு அருள் பெற்ற மலைகள் மேரு, பொதிகை, கைலாயம் என்று கூறினாராம். மேலும் தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.

இங்கு இருக்கும் ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. இந்த கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மீன் இலச்சினை பொறிக்கப்பட்ட கல் மண்டபங்களும், பாண்டியன் விக்கிரம சிங்கன் கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரிகிறது. சுமார் 80 அடி உயரமுடைய ராஜ கோபுரம், கர்பகிரஹத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்களும், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், திருமண மண்டபம் போன்றவற்றுடன் கூடிய ஆகம விதி வழுவாது கட்டப்பட்டிருக்கும் கோவில் என்று கூறுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டிய பாண்டியன், விக்ரமசிங்கனது பெயரில் இந்த ஊர் விக்ரமசிங்க புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.


பிற்கால பாண்டிய அரசர்களில் ஒருவர் சமணமதத்தை சார்ந்தவராக இருந்து சைவ பக்தர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினாராம். அப்போது சமணத்தை ஏற்காத, மிகுந்த சிவபக்தி உடைய குடும்பம் ஒன்று ஊரை விட்டு வெளியேறுகிறது. குடும்பத்தவர் பல இடங்களுக்குச் செல்லுகையில் குழந்தைகளான அண்ணன், தங்கை பிரிந்து விடுகின்றனர். பலகாலம் கழித்து காசியில் அவர்கள் சந்திக்கையில் கவரப்பட்டு தமது உறவுமுறை அறியாமல் அறியாமல் திருமணமும் முடித்துவிடுகின்றனராம். மணமான பிறகு தமது உறவின் முறையினை அறிந்து வருந்தி ஈசனிடம் முறையிட, அசிரீரியாக அவர்களுக்கு பாபவிமோசனம் சொல்லப்படுகிறது. அந்த அசிரீரியின் கூற்றுப்படி இருவரும் கரிய நிறத்தாலான ஆடை அணிந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்றும், எந்த தீர்த்தத்தில் நீராடுகையில் அவர்களது கரிய நிற ஆடை வெண்மை அடைகிறதோ அப்போது அவர்களது பாவம் விலகும் என்றும் அறிகின்றனர். இதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி வருகையில் பாபநாசத்தில் அவர்கள் கோவிலுக்கு எதிரில் உள்ள படித்துறையில் நீராடி எழுகையில் தமது ஆடைகள் வெண்மை அடைந்ததைக் கண்டு தமது பாபங்கள் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

இங்கு சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரிகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பின்னர் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. கோவில் எதிரில் இருக்கும் படித்துறையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் என்று கூறுகின்றனர் பெரியோர். சிவராத்திரியும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.


தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் என்றால் மிகையில்லை.

இந்த ஊரின் சிறப்பாக எனக்கு கூறப்பட்டதை எழுதியிருக்கிறேன். படங்கள் கூகிளாண்டவரிடமிருந்து பெறப்பட்டவை, இணையத்தில் இவற்றை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்தவர்கள் இன்னும் அதிக செய்திகளை அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

12 comments:

கவிநயா said...

அடேயப்பா, எவ்வளவு தகவல்கள். கூகுளாண்டவர் தந்த படங்களும் நல்லாருக்கு. மிக்க நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

நான் மதுரைக்காரன் தானே. அதனால் முதன் முதலாக இந்தத் தலத்தைப் பற்றி படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி மௌலி.

Anonymous said...

அண்ணா,
ஒரு வழியா திருனெல்வேலி வந்தாச்சா???? இனிமேலாவது break விடாம எழுதுங்க....:)

தம்பி

ambi said...

வெரிகுட், பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

இனிமே ப்ரேக் விட்டு எழுதினா ஜாமான் செட்டோட பி.டி.எம்முக்கு ஆட்டோ அனுப்புங்கடே!ன்னு எனக்கு அண்ணாச்சி கொத்தனார் கட்டளை இட்டு இருக்கார். :))

திவா said...

உள்ளேன்!

தி. ரா. ச.(T.R.C.) said...

பாபநாசம் கோவிலுக்கு சமீபத்தில் போயிருந்தேன் ஆனால் இவ்வளவு விஷயம் தெரியாது. கோட்டிடு போன கைடுப் பசங்க சரியில்லை,பேசாம உங்களோட போயிருக்கலாம்

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...வருகைக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க குமரன். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)

மதுரையம்பதி said...

வாங்க தம்பியாரே...நான் எழுத தான் முயற்சிக்கிறேன்...நேரம் கிடைக்கறது கஷ்டமா இருக்கு. எப்படியும் இந்த வருஷ முடிவுக்குள்ள இந்த தொடர்ல அடுத்த 2-3 போஸ்ட் போட்டுட முடிவு. பார்க்கலாம்

மதுரையம்பதி said...

வாங்க அம்பி.

//வெரிகுட், பல தகவல்களை தெரிந்து கொண்டேன். //

நீங்கல்லாம் இன்னும் அதிகமான செய்திகளை பின்னூட்டத்தில் சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்படி பண்றீங்களே அண்ணா-தம்பி இருவரும்..நியாயமா?...:)

//இனிமே ப்ரேக் விட்டு எழுதினா ஜாமான் செட்டோட பி.டி.எம்முக்கு ஆட்டோ அனுப்புங்கடே!ன்னு எனக்கு அண்ணாச்சி கொத்தனார் கட்டளை இட்டு இருக்கார்.//

ஆஹா!, ஆட்டோ வேறயா?...அவரை எங்கே காணோம். ? :)

மதுரையம்பதி said...

உள்ளேன்னு சொல்லிட்டு விட்டா எப்படி திவாண்ணா..வாங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு முறை இந்த தலங்களுக்கு போயிட்டு வரலாம் :)

மதுரையம்பதி said...

வாங்க திரச ஐயா...

கூட்டிக்கிட்டு போன கைடுகளை என்ன பண்ணலாம்?...ஆட்டோ அனுப்பி கவனிக்கச் சொல்லலாமா? :))