Friday, November 14, 2008

துலா மாத காவிரி நீராடல், கடைமுகம், முடவன் முழுக்கு

மேஷம் முதல் தொடங்கும் பன்னிரண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் நாட்களை 12 மாதங்களின் பெயராகச் சொல்வது வழக்கம். அதில் துலா மாதத்தில் சூரியன் சஞ்சரிப்பதை துலா மாதம் என்கிறோம். இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம்.

இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.


ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் (நாளை), ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு/கடைமுகம்" என்கிறார்கள். மாயவரம் என்று கூறப்படும் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.
ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடத்து வருந்தி பிரார்த்திக்கிறான்.


அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசிரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அனுக்ரஹிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.


மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய


[பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே, ஹே காவேரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்]

என்பதாக பிரார்த்தனை செய்து நாமும் முடிந்தால் ஒரு தினமாவது, அதுவும் இயலாத பக்ஷத்தில் மனதால் காவேரி நதியில் நீராடி இறையருளைப் வேண்டுவோமாக.

8 comments:

Raghav said...

மெளலி அண்ணா, காலையில எழுந்தவுடன் பார்க்கும் முதல் பதிவு.. துலா ஸ்நான பதிவு. உங்க பதிவ படிச்சாலே துலா ஸ்நானம் பண்ண பலன் கிடைக்கும்னு நம்புறேன்.. :)

நாம தான்.. தினமும் காவிரி ஸ்நானம் பண்றோமே..

கவிநயா said...

அப்படியா. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவிட்டிருக்கிறீங்க. காவேரித் தாயை நானும் நமஸ்கரித்துக் கொள்கிறேன். நன்றி மௌலி.

ambi said...

புதிய தகவல், இப்ப தான் கேள்வி படறேன். ரெம்ப நன்னி.

எங்க ஏரியாவுல காவிரி இன்னும் வரலை. சாயந்திரம், நானும் தம்பியுடையானும் உங்க வீட்டுக்கு குளிக்க வரோம். :))

பி.கு: வென்னீர் எல்லாம் ஒன்னும் போட்டு வைக்க வேணாம்.


//போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத்//

ஏற்கனவே சிலபேர் நம்மை XXX(கன்னட) வெறியர்கள்னு முத்திரை குத்தறாங்க. இதுல நம்ம காவிரி வேறயா? :))


//உங்க பதிவ படிச்சாலே துலா ஸ்நானம் பண்ண பலன் கிடைக்கும்னு நம்புறேன்//

ராகவ் அண்ணே, அதுக்காக வழக்கம் போல குளிக்காம இருந்துர வேணாம். :p

திவாண்ணா said...

இன்னும் யாரும் காவேரின்னு சோப் செய்யலியே?
:-))
இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம்.
முக்கியம்பா!

Raghav said...

//ராகவ் அண்ணே, அதுக்காக வழக்கம் போல குளிக்காம இருந்துர வேணாம். :p //

ஹி.. ஹி.. இப்புடில்லாமா உண்மைய போட்டு உடைக்கிறது.. மெளலி அண்ணா வீட்டுக்கு கார்த்திகை ஒண்ணாம் தேதி போய்.. சங்கல்பம் பண்ணி குளிச்சா... இந்த ஒரு மாசம் குளிச்சதுக்குண்டான பலனும் கிடைக்கும்.. நல்ல சாப்பாடும் கிடைக்கும்.. :) வேறு எதுவும் கிடைக்குமான்னு அவர் தான் சொல்லனும். :))

Raghav said...

//பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே //

மெளலிண்ணா, கங்கை தானே பரமசிவனின் ஜடாமுடியில் உள்ளது ? காவிரியின் கதை என்னவோ ?

குமரன் (Kumaran) said...

ஒவ்வொரு ஐப்பசி மாதமும் 'துலா காவேரி மஹாத்மியம்' படிப்பார் என் பாட்டி (அம்மம்மா). அவரிடம் இருக்கும் புத்தகத்தை ஒன்றிரண்டு வருடங்கள் நானும் படித்திருக்கிறேன் சிறுவயதில். :-)

jeevagv said...

இந்த முடவன் முழுக்கு பற்றிய குறிப்பு பொன்னியின் செல்வனில் வருமல்லவா! (அப்படி தோராயமா ஒரு நினைவு)
கடைமுழுக்கு - இப்போ நடப்பதெல்லாம் - காவிரிக்க அரசியல் கடை அடைப்பு தான் - அதுவும் ஒரு வகையில் கடைகளுக்கு முழுக்குதான்!