Wednesday, November 5, 2008

சமர்த்த ராமதாஸர் - 1

கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல. இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது. இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே போதேந்திரர், திருவிசை ஐயாவாள் என்று சில நாம பக்தி சிரோன்மணிகளை இங்கு கண்டோம். இன்று நாம் காண இருப்பது சமர்த்த ராமதாசர். தியாகராஜர், திருவிசையார், போதேந்திரர், மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் போன்றே இவரும் ராம பக்தியில் திளைத்தவர். ராமநாமத்தை பலகோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமசந்திர மூர்த்தியைப் பிரத்யக்ஷமாக கண்டவர். அவரது வரலாற்றினை அறியாலாமா? [ராமதாஸர் பற்றி திராச எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறார். அவர் ராமதாசர் பாடல்களை/பஜனைகளைப் பற்றி எழுத இருக்கிறார் என்றே நினைக்கிறேன், இது ராமதாசர் வரலாறு மட்டுமே]



பாரதத்தை அன்னியர்கள் ஆக்ரமித்த 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ராமதாஸர். இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள சதாரா என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜம்ப் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சூர்யாஜி பந்த்-ரேணுபாய் என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1605ஆம் ஆண்டு ராமநவமி தினத்தில் பிறந்தவர். தாய்-தந்தையர் இவருக்கு வைத்த பெயர் நாராயணன் என்பது. சிறுவயதில் இவரது உடலில், பின்பகுதி சற்று நீண்ட வால் போன்ற பாகம் இருந்ததாம்.ன் பின்னர் வயதான போது அது மறைந்துவிட்டதாக கூறுப்படுகிறது. பிற்காலத்தில் இவரை ஸ்ரீ ஹனுமானது அம்சம் என்று கூற இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் தந்தையை இழந்தாலும், அவரது தாயும் அண்ணனும் இவருக்கு காலத்தில் உபநயனம் போன்றவற்றைச் செய்து வைத்து வளர்த்து வந்தனர்.

சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார். அப்போது ஹனுமனது தரிசனம் மட்டுமன்றி அவரிடமிருந்தே ஸ்ரீராம மந்திரம் உபதேசமாகிறது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் நாராயணனது செயல்களில் அதிக மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது.

வேத பாராயணம், போன்ற நேரங்கள் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். அண்ணனின் மனத்தில் இருக்கும் எண்ணத்தை அறிந்த நாராயணன் வீட்டை விட்டு முழுதாக வெளியேறி நாஸிக் அருகில் ஒரு கிராமத்தில் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத் தொடங்குகிறார்.





இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார். இந்த தரிசனத்துக்குப் பின்னரே அவருக்கு சமர்த்த ராமதாஸ் என்ற பெயர் வழங்கலாயிற்று. தனது குருவான ஸ்ரீ ஹனுமனுக்கு கோவில் கட்டி அதனருகிலேயே தங்கி வந்தார்.


இவர் யாத்திரையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் எழுதப்பட்ட இடுகை. கீழே அங்கு வந்த பின்னூட்டங்கள்.

15 comments:
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஒவ்வொரு வியாழனும் ஒவ்வொரு மகானைச் சுவைக்கத் தரும் உங்களுக்கு மிகுந்த நன்றிகள் மற்றும் வந்தனங்கள்.

இந்த வலைப்பூ, ஆசார்யர்களின் அகரமுதலியாக மாறி அருள்பாலித்திடவும் ஆசார்யர்களே அருளட்டும்!

November 5, 2008 11:01 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ராமதாசர் வரலாற்றைத் தொடங்கியமைக்கு நன்றி!
சமர்த்த ராமதாசர் என்பதில் "சமர்த்த" என்பதன் பொருள் என்ன?

November 5, 2008 11:03 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல//

மிகவும் உண்மை!
பயனே இறைவனாக இருக்கும் போது, அவனைத் தரும் எதுவும் பயனுடையதுவே!

//இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்//

கலியுகத்தில் பக்தி தான் எளிதில் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது அதற்கு முன்னுள்ள யுகங்களிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுமா? ஏன்?

ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு மார்க்கம் உண்டா?
கலியுகத்துக்கு முன்னுள்ள யுகங்களின் மார்க்கங்கள் என்னவாக இருந்தது?

//ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது//

ஸ்வகர்மா என்றால் என்ன? ஒருவருடைய ஸ்வகர்மா எது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

November 5, 2008 11:09 PM
கவிநயா said...
பக்தியில் திளைத்த ஆச்சார்யர்களின் சரிதங்களைச் சொல்லி வருவதற்கு நன்றிகள் பல மௌலி. அவர்களைப் பற்றிப் படித்தேனும் அவர்கள் பக்தியில் ஓரளவேனும் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஸ்ரீ ராமதாஸரின் திருவடிகள் சரணம்.

November 5, 2008 11:28 PM
கீதா சாம்பசிவம் said...
समर्थ = தகுதி வாய்ந்த, திறமை உள்ள,
समर्थन = defending, vindicating, justifying or establishing

ராமதாசர் தன்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லுவதில் பெற்றிருந்த திறமையைக் குறிக்கும் விதமாய் ஏற்பட்டது என்று சொல்லிக் கேட்டிருக்கேன். வேறு அர்த்தம் இருந்தாலும் தெரிவியுங்கள்.

November 6, 2008 1:25 AM
கீதா சாம்பசிவம் said...
இந்த "ஸமர்த்த" என்ற சொல்லே நம் தமிழில் கெட்டிக்காரன் என்ற பொருளில் விளங்கும் "சமத்து" "அசடு" என்பது "அசத்து" என்று வடமொழியில் வரும்.असत=பல அர்த்தங்கள் இடத்துக்குத் தகுந்தாப் போல் வரும்,

இன்னொரு ராமதாஸரும் இருக்கின்றார். பத்ராசல ராமதாஸர். சாபத்தினால் சிறை சென்றவர்.

November 6, 2008 1:30 AM
மதுரையம்பதி said...
வாங்க கே.ஆர்.எஸ்.

நீங்கள் சொல்லியது போல ஆச்சார்யர்களே அருளட்டும்.

சமர்த்த என்பதற்கு கீதாம்மா சொல்லியவை இங்கே பொருந்தும். அவர் ராமச்சந்திர மூர்த்தி தரிசனம் கிடைத்த காரணத்தால் வந்த பெயர் என்பதால் கீதாம்மா சொன்னதே சரி என்று தோன்றுகிறது.

//கலியுகத்தில் பக்தி தான் எளிதில் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது அதற்கு முன்னுள்ள யுகங்களிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுமா? ஏன்//

கலி ஆரம்பிக்கப் போவது பற்றிய சகுனங்கள் தோன்றுவதைப் பற்றி பாரதத்தில் சொல்லியதும், க்ருஷ்ணனின் வார்த்தைகளும், பின்னாளில் வந்த பெரியவர்கள் சொன்னதும் தான் கலியில் பக்தி சுலபம் என்று. முந்தைய யுகங்களில் நடந்த புராண-இதிகாச நிகழ்ச்சிகளை வைத்தே பெரியவர்கள் ஒவ்வொரு யுகத்திலும் எந்த மார்க்கம் சிறந்ததாக இருந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.
"க்லெள வேங்கட" என்பது போன்றது தான் இதுவும்.

ஸ்வகர்மா பற்றி திவாண்ணா நிறைய எழுதியிருக்காரே?...

November 6, 2008 2:17 AM
மதுரையம்பதி said...
வாங்க கவிக்கா....சரிதங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளுதலும், படித்தலும் சித்த சுத்தி ஏற்படுத்தும் மற்ற கர்மாகளைப் போன்றதே.

November 6, 2008 2:38 AM
மதுரையம்பதி said...
வாங்க கீதாம்மா.

சமர்த்த - என்பத்ற்கு நீங்க சொன்னது சரிதான்னு நினைக்கிறேன். அவர் தமது நாம ஜபத்தால் தகுதியடைந்து தரிசனம் பெற்று பிறகே அவர் சமர்த்த ராமதாசராக அறியப்பட்டிருக்கிறார்.

மற்றபடி எனக்கு ஏதும் விசேஷ காரணம் தெரியவில்லை.

November 6, 2008 2:44 AM
குமரன் (Kumaran) said...
கர்ம, பக்தி, ஞான யோகங்களில் பக்தி யோகமும் செய்வதற்கு மிகக்கடினம். பக்தி யோகம் என்றால் சாதனா மார்க்கங்களாக வேத வேதாந்தங்களில் சொல்லியிருக்கின்றதே அவற்றில் ஏதேனும் ஒரு உபாசனையைப் பின்பற்றுவது. எண்ணெய் ஒழுக்கு போல் இடையறாத உபாசனை எவ்வளவு கடினம் என்று சொல்லவும் தேவையில்லை.

கலியுகத்தில் எளிதான மார்க்க நாமசங்கீர்த்தனம் - அதனை பக்தியின் வகையில் சொல்லலாம். ஆனால் அதுவே முழுமையான பக்தி யோகம் இல்லை. நாம் சங்கீர்த்தனத்தின் மகிமையைத் தொடர்ந்து சொல்லுங்கள்.

November 7, 2008 6:33 AM
குமரன் (Kumaran) said...
தன்னறமும் பிறப்பும்
இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல. அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.

தன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. என் அனுபவத்தில் எனக்கு எப்போது சுயநினைவு தொடங்குகிறதோ அன்றுமுதல் மொழியில், புனைவுலகில் மட்டுமே என் தன்னறத்தை நான் கண்டிருக்கிறேன்.வேறு எந்தச்செயலையும் நான் என் செயலாக எண்ணியதேயில்லை. வேறு எத்துறையிலும் வெற்றியும் புகழும் செல்வமும் இருக்குமென்ற சஞ்சலத்தையும் அடைந்ததில்லை.

விளைவாக என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை. நான் ஓய்ந்து இருப்பதே இல்லை. ஆகவே எனக்கு வாழ்வு ஒரு தொடர்ந்த களியாட்டமாக உள்ளது. என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது. என் தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறேன். திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம். இந்நூலை எழுதுவது முதன்மையாக இத்தகுதியினால்தான்.

கீதை குறிப்பிடும் இந்த ‘ஸ்வதர்மம்’ (தன்னறம்) என்ற சொல் இந்தியக் கருத்துலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் திரித்தும் மழுப்பியும் பொருள் தரப்பட்ட ஒன்று என்று நித்ய சைதன்ய யதி தன் உரையில் குறிப்பிடுகிறார். சாதியவாதிகளின் மிகப் பெரிய ஆயுதமாக இது இருந்து வந்துள்ளது. கீதையின் ஒட்டுமொத்த வேதாந்த நோக்கு இவர்கள் கூறும் அர்த்தத்தை இவ்வார்த்தைக்கு அளிப்பதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்த போதிலும்கூட இன்று வரை இந்த அர்த்தப்படுத்தல் அளிக்கப்படுகிறது. மூலநூல்கள் மீது செலுத்தப்பட்ட இந்த வன்முறை கடந்த காலத்தில் நம் சமூகத்தில் உள்ள உயர்நிலை சக்திகள் பிறர் மீது செலுத்திய கடும் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் களம் அமைத்துத் தந்தது.

அதேபோல இன்று கீதையையே ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இடத்திற்கு இது பிறரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தெளிவான தர்க்கப்பூர்வமான வாசிப்பு என்பது இன்று ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அது புதைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதச் சேற்றிலிருந்து மீட்டெக்கும் பெரும் பணியாகவே பொருள்படும்.

நித்ய சைதன்ய யதி இதை விரிவாக ஆராய்கிறார். ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. அவற்றை பிரித்துப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் நித்யா. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான். ஸ்பானரை சுத்தியலாக பயன்படுத்தினால் ஸ்பானருக்கும் கேடு, வேலையும் நடக்காது.

மாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பிலுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன? அர்ஜுனனிடமிருந்து வீரத்தை விலக்கினாலும் அதுவே எஞ்சும். அவன் வீரன். ஆகவே ஞானமும் முக்தியும் கூட வீரம் மூலமே அவனுக்கு திறந்து கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

உலகமெங்கும் மனிதர்களை அவர்களில் இயல்புகளையொட்டி வகைவபிரிக்கும் ஒரு சிந்தனைப்போக்கு இருந்தபடியேதான் உள்ளது. மனிதனின் ஆதார இயல்புகள் பிறப்பிலேயே உருவாகி வருபவை என்ற புரிதல் எல்லா சமூகத்திலும் உள்ளது. இதை முற்றாக மறுப்பவர்கள் கூட இது ஒரு முக்கியமான கருத்துத்தரப்பு என்பதை மறுக்க மாட்டார்கள். நவீன கால பழக்கவியல் நிபுணர்கள் (Behaviourists) இக்கோட்பாட்டை மறுக்கக் கூடும். ஆனால் இன்றுவரை அவர்கள் விவாதித்து வருவது பிறவிப் பண்புகளை வலியுறுத்தும் நிபுணர்களிடம்தான். புகழ் பெற்ற ‘நாம்சாம்ஸ்கி-பியாகெட்’ விவாதத்தை இங்கே நினைவுகூரும்படி கோருகிறேன். மூளையியல் மற்றும் மொழியியல் நிபுணரான நாம் சோம்ஸ்கி சிந்தனையும் திறனும் பிறப்பிலேயே மூளையமைப்பில் உருவாகிவிடுகின்றன என்பதற்கு அழுத்தம் அளிக்கையில் பியாகெட் அதைமறுத்து சூழலும் பழக்கமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வாதிடுகிறார்.

தன்னறம் என்பதை குடிப்பிறப்பு அளிக்கும் தொழில் என்றோ, பிறப்பின் அடிபப்டையில் சமூகம் கட்டாயப்படுத்தும் கடமைகள் என்றோ பொருள்தரவேண்டியதில்லை. கீதை என்னும் உயர்தத்துவ நூல் அந்த தளத்தைச் சார்ந்ததே அல்ல. தத்துவ ஆசிரியரான நித்ய சைத்தன்ய யதி மேலைச் சிந்தனையில் அறவியல் குறித்துச் சிந்தித்த இருவரை இங்கு குறிப்பிடுகிறார். ஒருவர் ஏறத்தாழ கீதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவரான அரிஸ்டாடில். இன்னொருவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிந்தனையாளரான இமானுவேல் கன்ட். இவ்விருவரடைய இரு கருதுகோள்களுடன் ஒப்பிட்டு இந்த விஷயம் குறித்து வாசகர்கள் விரிவாக சிந்திக்கலாம். இங்கு எளிய குறிப்பாக மட்டும் அதைக் கூறலாம்.

-----

இரவிசங்கர்,

உங்கள் கேள்விக்கு அண்மையில் ஜெயமோகன் எழுதிய கீதைக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துத் தந்திருக்கிறேன். மேலும் படிக்க http://jeyamohan.in/?p=743

November 7, 2008 6:36 AM
மதுரையம்பதி said...
வாங்க குமரன். நீண்ட பின்னூட்டத்துக்கு முதல்ல நன்றி.

நீங்க சொல்லியிருக்கும் பல விஷயங்கள் புதிது எனக்கு தெரிஞ்சுக்க கொடுத்ததுக்கு நன்றி.

November 7, 2008 8:57 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
This post has been removed by the author.
November 8, 2008 10:39 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@குமரன்
ஜெயமோகன் சுட்டி தந்தமைக்கு மிகவும் நன்றி!
காலத்துக்கு இயைந்த நல்ல திறனாய்வு!
முழு கீதைக் கட்டுரையும் சாங்கிய யோகம் பற்றியும் வாசித்து முடித்தேன்! நன்றி!

November 8, 2008 10:43 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
வங்கிப் பணியில் இருந்தபோது தணிக்கை வேலையாக 30 நாட்கள் சதரா, சாங்லி போன்ற இடங்களில் வசிக்கும் பேறு கிட்டியது அப்போது ஸ்மர்த்த ராமதாஸரின் சமாதிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவருடைய ஒரு பாடலை பின்னால் இடுகிறேன். அவ்ருடைய சரித்ரம் புனிதமானது.சத்ரபதி சிவாஜிக்கு குருவாக விளங்கினார்.

November 9, 2008 9:22 AM