Saturday, May 3, 2008

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 1



அன்னை பராசக்திக்கு இந்த புண்ணிய பூமியில் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. இவைகளில் பல தேவி பீடங்கள் என்று மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றை பற்றி ஒரு தொடராக 2-3 பதிவுகள் எழுத எண்ணம்.

யாதேவி சர்வ பூதேக்ஷு சக்தி ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறைகிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.

த்ரிகோணம் என்பது எல்லா சக்ரங்களிலும் காணப்படுவது, தேவி வழிபாட்டில் இந்த முக்கோணம் மிக முக்கியமானது. பிந்து என்று சொல்லப்படும் ஸ்ரீசக்ர மத்ய கோட்டம் த்ரிகோணத்தால் பிரித்துக் காட்டப்படுகிறது. [இதனாலேயே தேவிக்கு "த்ரிகோண மத்ய நிலையா" என்ற பெயரும் உண்டு.] பாரத தேசமே வடக்கே அகன்றும் தெற்கே குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கிறது. இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாகுமரி ஆகிய மூன்று ஊர்களையும் நேர்கோட்டால் இணைத்தால் அழகான முக்கோணம் உருவாகிறது. ஆக நமது இந்த புண்ணிய பூமியே பிந்து ஸ்வரூபமாகிறது. சக்தி பீடங்கள் என்று ஆரம்பித்து ஏதோ பூ ப்ரதக்ஷிணத்துக்கு வழி சொல்ற மாதிரி போகிறது. எனினும் இந்த தேசமே தேவி மயம் என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து. இதுபோலவே தேகமே ஸ்ரீ சக்ரம் என்று பாவனோபனிஷத் விளக்குவதாக கேள்விப்பட்டிருக்கேன். அது ஞான மார்க்கத்தில் அந்தர்முக வழிபாட்டில் பேசப்படும் விஷயம் என்றே தெரிகிறது. நாம் இங்கு பார்க்க இருப்பது தேசமே தேவி ஸ்வரூபம் என்பது எப்படின்னுதான்.

சக்தி பீடங்கள் பல இருக்கிறது. சில புத்தகங்களில் 64 சக்தி பீடங்கள் என்றும், சிலவற்றில் 108 என்றும், சிலவற்றில் 51 மாத்ருகா அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 சக்தி பீடங்கள் என்றும் பலவாறு கூறப்பட்டுள்ளது. இதில் 51 மாத்ருகா பீடங்களே மிக முக்கியமாக கொள்ளப்படுவது. இமயம் முதல் குமரி வரையில், காமரூபம் முதல் கூர்ஜரம் வரை இந்த சக்தி பீடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் பரவியிருக்கிறது. மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீ காமாக்ஷி விலாசம் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதில், பூமியானது ஐந்து கோடி யோஜனை (1 யோஜனை எத்தனை கிலோ மீட்டர் (அ) மைல் என்று யாருக்கேனும் தெரியுமா?) விசாலமுடையது என்றும் இதில் 6400 தேவி சம்ப்ந்தமான பீடங்கள் இருக்கின்றது, அதில் 64 சிறந்தவை, அந்த 64ல் 51 மிகச் சிறந்ததாகவும், இந்த 51ல் 18 உன்னதமானது என்றும் இந்த 18லும் 3 மிக உயர்ந்ததென சொல்லப்பட்டிருக்கிறது என்பர்.

மேலே சொன்ன மிக உன்னதமான மூன்று பீடங்களாவன, காமராஜ பீடம், ஜலாந்த்ர பீடம், ஒட்டியாண பீடம். இவை அமைந்துள்ள இடங்கள் முறையே காஞ்சி, ஜ்வாலாமுகி மற்றும் பூரி ஜகன்னாத் ஆகியன. காமராஜ பீடத்தில் ஹயக்ரீவர் ஸ்ரீசக்ரத்தை பூஜித்து அருள் பெற்றதாகவும், ப்ருகு முனிவர் ஜலாந்திர பீடத்திலும், வேத வியாசர் ஒட்டியாண பீடத்திலும் பூஜித்து அன்னையின் அருள் பெற்றதாகவும் தெரிகிறது.

சக்தி பீடங்கள் தோன்றிய வரலாற்றினை அடுத்த பகுதியில் காணலாம்.

14 comments:

jeevagv said...

சக்தி பீடங்கள் பற்றியா, நல்லது.

திவாண்ணா said...

நல்ல துவக்கம்.
விரிவாகவே எழுதலாமே!
இவற்றில் எங்கேனும் போயிருந்தால் சொந்த அனுபவங்கள்....

Geetha Sambasivam said...

//இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாகுமரி ஆகிய மூன்று ஊர்களையும் நேர்கோட்டால் இணைத்தால் அழகான முக்கோணம் உருவாகிறது. ஆக நமது இந்த புண்ணிய பூமியே பிந்து ஸ்வரூபமாகிறது. சக்தி பீடங்கள் என்று ஆரம்பித்து ஏதோ பூ ப்ரதக்ஷிணத்துக்கு வழி சொல்ற மாதிரி போகிறது. எனினும் இந்த தேசமே தேவி மயம் என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து. //

தேவையான இடங்களில் தேவையான உதவிகள் செய்யப் படும். ஃபீஸ் உண்டு! :P

Geetha Sambasivam said...

ஒரு யோசனைக்கு எவ்வளவு நவீனக் கணக்கு என்று வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. கணக்கைச் சரியானு பார்த்துவிட்டுச் சொல்றேன்.

Geetha Sambasivam said...

முதலில் திருவாரூர் கமலாம்பிகையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை, பரிசீலிக்கவும். அனைத்து சக்திகளும், அடங்கிய ஒரே பீடம் திருவாரூர் கமலாம்பிகை!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜீவா..

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்டிப்பாக எழுதலாம். இன்னும் சில ஊர்கள் பற்றியும் எழுத முடியும். முயற்சிக்கிறேன், :)

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்டிப்பாக எழுதலாம். இன்னும் சில ஊர்கள் பற்றியும் எழுத முடியும். முயற்சிக்கிறேன், :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...இப்படி வாலண்டியரா உதவுகிறேன் அப்படிங்கறீங்களே, உங்கள் வரவு மிக நல்ல வரவுதான்....:).

பீஸ் பத்தி நம்ம தனியா பேசிக்கலாம். :)

//ஒரு யோசனைக்கு எவ்வளவு நவீனக் கணக்கு என்று வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது//

வால்மிகி ராமாயணத்துல பார்த்துச் சொல்றீங்களா?, ஓ அப்பவே நவின முறைகள் (மீட்டர், கிலோ மீட்டர், மைல் எல்லாமும் இருந்துச்சா? :-)
புதசெவி

//முதலில் திருவாரூர் கமலாம்பிகையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை, பரிசீலிக்கவும். அனைத்து சக்திகளும், அடங்கிய ஒரே பீடம் திருவாரூர் கமலாம்பிகை!//

கண்டிப்பாக ஆரம்பிக்கலாமே!. ஆனா எல்லா சக்திகளும் அடங்கியது அப்படிங்கறதுல எல்லாம் பல வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. :)
உங்களிடம் கமலாம்பா பற்றிய தரவுகளை தர முடியுமா?

ஒவ்வொரு பீடத்தை பற்றியும் தனியாக எழுத முடியுமான்னு தெரியல்ல. பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

//ஆனா எல்லா சக்திகளும் அடங்கியது அப்படிங்கறதுல எல்லாம் பல வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. :)//

முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.

Geetha Sambasivam said...

மெளலி, யோஜனைக்கு அளவு வால்மீகி ராமாயணத்தில் இருக்கு, என்றாலும் தேட முடியலை, மன்னிக்கவும், ஆனால் "ராமாயண சிரோமணி" என்ற புத்தகத்தில் பூர்வ மீமாம்ஸை தத்துவத்தின் கணக்குப் படி இரண்டரை யோஜனை என்பது, கிட்டத் தட்ட அறுபது மைல் என்று சொல்லப் பட்டிருக்கிறதாய் வேறு ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன் படி பரத்வாஜ ஆசிரமம் இருந்ததாய்ச் சொல்லப் படும் பிரயாகையில் இருந்து சித்ரகூடம் இரண்டரை யோஜனை என்று வரும். இன்றைய கணக்குப் படி பிரயாகையில் தான் பரத்வாஜ ஆசிரமம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்ற இடத்தில் இருந்து சித்ரகூடம் கிட்டத் தட்ட எண்பது மைல். இது மட்டும் உறுதியாய்ச் சொல்ல முடியும். ஆகவே யோஜனையைக் கணக்கிட்டுக் கொள்ளவும். நான் கணக்கில் ரொம்ப வீக்! :)))))))

மெளலி (மதுரையம்பதி) said...

//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.//

ரெண்டுமுறை போயிருக்கேன்...2-3 நாட்கள் இருந்து அங்கு ஜபம் பண்ணின அனுபவம் உண்டே!!

மெளலி (மதுரையம்பதி) said...

//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.//

ரெண்டுமுறை போயிருக்கேன்...2-3 நாட்கள் இருந்து அங்கு ஜபம் பண்ணின அனுபவம் உண்டே!!

குமரன் (Kumaran) said...

சக்தி பீடங்களைப் பற்றிய தகவல்களைத் தரத் தொடங்கியதற்கு நன்றிகள் மௌலி. மூன்று நான்கு இடுகைகளில் சொல்லி முடிகின்ற ஒன்றா இது? எவ்வளவு விரித்துச் சொல்ல முடியுமோ அவ்வளவு விரிவாகச் சொல்லுங்கள்.

பாரத தேசத்தையே சக்தியின் உருவமாகக் கொண்டு பார்த்தால் காமராஜ பீடமாக காஞ்சி காமகோடி பீடமும், ஒட்டியாண பீடமாக பூரியும், ஜலாந்த்ர (எச்சில் இருக்கும் வாய்? கங்கை இருக்கும் திருமுடி?) பீடமாக ஜ்வாலாமுகியும் பொருத்தமாகத் தோன்றுகிறது.