Sunday, May 25, 2008

அமர சிம்மனும்-ஆதிசங்கரரும்...




ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம் இருந்திருக்கிறார்கள். இலக்கியத்தில் அவர்களால் நாம் பெற்றவை மிக அறிதானவை. ஐம்பெரும் காப்பியங்கள் என்று நாம் போற்றும் சிந்தாமணி, வளையாபதி போன்றவை எல்லாம் ஜைன நூல்கள் தான். வடமொழியில் பஞ்சகாவியங்கள் என்று இருப்பதைத் தவிர, ஜைனர்களுக்கு என்று தனியாக பஞ்ச காவியங்கள் இருக்கிறதாம். அமரசிம்மன் என்று ஒரு ஜைன அரசன், ஆதி சங்கரர் காலத்தில் வசித்தவன். இவன் பல ஜைன மத நூல்களை எழுதினான் என்றும் அவற்றை எல்லாம் அவனே அழித்து விட்டான் என்று தெரிகிறது. இவனது படைப்புத்தான் அமரகோசம் என்னும் நிகண்டு @ அகராதி. ஜைன மததவர் எழுதிய இந்த அகராதியை அழியாமல் இருக்கக் காரணம் ஆதிசங்கரர் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இது சம்மந்தமான கதையினைப் பார்க்கலாம்.


ஆதிசங்கரர் காலத்தில் பாரதம் முழுவதிலும் 72 சமயங்கள் இருந்தன, அவற்றினால் சனாதன மதம் தொய்வுற்றிருந்தது, அதனை மீட்க அவர் பஞ்சாயத பூஜை முறையும் ஷண்மதங்களையும் ஸ்தாபனம் பண்ணினார் என்றெல்லாம் அறிகிறோம். இதற்காக அவர் சஞ்சாரம் செய்கையில் அமரசிம்மனையும் சந்தித்தார். பெளத்த கொள்கை என்பது பொதுவாக எல்லாமே மாயை, சூன்யம் என்பார்கள். ஜைனர்களோ இந்த மாயை @ சூன்யத்திற்குப் பின்னால் ஏதேனும் ஒன்று இருந்தும் இல்லாதிருக்கலாம் (அஸ்தி நாஸ்தி) என்பர். இப்படிக் கொள்கை உடைய அமரசிம்மனுடன் ஆச்சார்யார் வாதம் செய்து சனாதன இந்து மதத்தை நிலை நிறுத்த முடிவாகியது.




இவர்கள் வாதம் செய்ய முடிவு செய்தவுடன் அமரசிம்மன் ஒரு தடுப்பு (துணியால் ஆன திரை) இருவரையும் பிரிக்கும்படியாக செய்து ஆளுக்கு ஒரு பக்கத்தில் இருந்து வாதத்தை ஆரம்பித்தனர். அமரசிம்மன் தெளிவாக, அழகாக எல்லாவற்றையும் பற்றி பேசினான். என்னதான் சிறந்த புத்திசாலி என்றாலும், கேள்விகளுக்கு அழகாக தொடர்புடன் பதில் சொல்வது சங்கரருக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இவ்வாறாக பதிலளிக்கிறான் அரசன் என்று சிறிது யோசித்தார். ஈஸ்வர அவதாரமல்லவா உடனே காரணம் தெரிந்தது. அவர் அமரசிம்மனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் குரலில் பதிலளித்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்.






அமரசிம்மன் மிகவும் ஸ்ரத்தையுடன் பல நாட்கள் சரஸ்வதியை உபாஸித்திருக்கிறான். [ஜைன மதம் ஒரு கடவுள்/ கடவுள்கள் தத்துவத்தை எதிர்க்கிறது] இவ்வரசன் ஜைனமத்தவனாக இருந்தாலும் ஜைன மதம் பற்றி புத்தகங்கள் எழுத சரஸ்வதியின் அனுக்கிரஹம் பெற உபாசனை செய்திருக்கிறான். இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' என்பது போல ஜைன மததில் இருந்து கொண்டு, ஜைன மத நூல்கள் எழுத சரஸ்வதியை வணங்கியிருக்கிறான். இவ்வாறாக எழுதிய ஜைன க்ரந்தங்களில் நமது இந்துமதத்தையும் நிறைய கண்டனம் செய்திருக்கிறான்.
சரியோ-தவறோ ஒரு காரியத்தை முழு மூச்சாக எடுத்துச் செய்தால் அதன் பலனை இறைவன் நமக்கு தருவான் என்பதற்கு உதாரணமாக இவன் உபாசனைக்கும், சிரத்தைக்கும் உயர்வளித்து இவனுக்கு சரஸ்வதி அனுக்கிரகம் செய்திருக்கிறாள்.






இங்கே வாதப்போரில் திரைக்குப் பின்னே அவனருகில் ஸரஸ்வதி தேவியை கடத்தில் ஆவாஹனம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் அது ஆச்சார்யார் முன் உதவாது என்று அறிந்து அவரை எதிர்க்க சரஸ்வதியையே தஞ்சமடைந்திருக்கிறான். இவனது உபாசனைக்கு பலனளிக்க அவளும் கட்டுப்பட்டிருக்கிறாள். எனவே சரஸ்வதியின் அறிவுரைப்படியே கடத்தில் ஆவிர்பஹிக்கச் செய்துவிட்டு, சுற்றிலும் திரையெல்லாம் போட்டுக் கொண்டது. அவனுக்காக அவள் பதிலளித்திருக்கிறாள். ஆச்சார்யார் ஈஸ்வர ஸ்வரூபம், ஒரு விதத்தில் சரஸ்வதி மஹேஸ்வரனுக்கு சஹோதரி முறை. ஆகவே ஆச்சார்யார் மனதில் நடந்தது, நடப்பது ஆகியவை எளிதாக புரிந்தது.




ஆச்சார்யார் சரஸ்வதியிடம் 'உன்னை வழிபட்டுக் கொண்டே அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தை எதிர்க்கும் இவனுக்கு அனுக்கிரகம் செய்யலாமா?' என்று மனதால் கோரிக்கை எழுப்புகிறார். அதிலும் இத்துணை நேரம் எனக்கு பதிலளித்து அவனுக்கு அனுக்கிரகித்திருக்கிறாயே , இது சரியா என்று நினைக்கையில் சரஸ்வதியும் அமரசிம்மன் உபாசனைக்கு ப்ரதிபலன் தந்தாயிற்று என்று உணர்ந்து உடனே கடத்திலிருந்து விலகி எதாஸ்தானம் சேர்கிறாள். அதன் பின் அமரசிம்மனால் ஆச்சார்யாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான்.





இவ்வாறாக தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன் தான் எழுதிய க்ரந்தங்களை எல்லாம் தீக்கிரையாக்கத் துணிகிறான். தனது சித்தாந்தம் தோற்றபின் தனது சித்தாந்ததை நிலைநாட்ட எழுதிய நூல்கள் வீண் என்றே அவற்றை அழிக்கிறான். சரஸ்வதி கடாக்ஷத்தில் மிக அழகான ஜைன க்ரந்தங்கள் இவன் படைத்திருந்தானாம். எல்லாம் ஒவ்வொன்றாக தீயில் போட்டுவிடுகிறான். இதை அறிந்த ஆச்சார்யார் மிகுந்த வருத்தமடைந்து உடனடியாக அவனிடத்து வந்து அவனது செயலைத் தடுக்கிறார். அப்போது எல்லாம் போக அவன் கையில் இருந்தது கடைசியாக ஒரு நூல், அதுதான் 'அமர கோசம்'. ஆச்சார்யார் தடுத்திருக்கவில்லையெனில் இதுவும் நமக்கு கிடத்திருக்காது. இந்த நூலை அழியாமல் காத்து அதற்கு 'அமரத்துவம் அளித்துவிட்டார் ஆச்சார்யார்.



எந்த மதத்திலும் நேர்மை, சத்யம் உள்ளவர்கள் இருப்பார்கள். அமரசிம்மனும் தான் எழுதிய அகராதியில் இந்த நேர்மையினை கடைப்பிடித்திருக்கிறான். தனது கொள்கையை திணிக்காது, பிற மதங்களை சேர்ந்த வார்த்தைகளை விலக்காமல், எதிர்க்காமல். அவற்றுக்கு அந்தந்த மதத்தில் என்ன அர்த்தம், பெருமை சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கொடுத்திருக்கிறான்.



இந்த சம்பவம் எல்லா சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறது

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை. கீழே இருக்கும் பின்னூட்டங்கள் அங்கே இடப்பட்டது.

11 comments:
ஜீவா (Jeeva Venkataraman) said...
படித்தறிந்து கொண்டேன் திரு.மௌலி!

May 28, 2008 10:23 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்ணா!

May 29, 2008 2:59 AM
மதுரையம்பதி said...
வாங்க ஜீவா....

May 29, 2008 6:57 AM
மதுரையம்பதி said...
//நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்ணா!//

கே.ஆர்.எஸ் அண்ணா, அது வரலாறு சொல்லியிருக்கும் உண்மை. சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்குன்னு உங்களுக்காகத்தான் கேட்டு சொல்லியிருக்கேன்.. :-)

May 29, 2008 6:59 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்குன்னு உங்களுக்காகத்தான் கேட்டு சொல்லியிருக்கேன்.. :-)//

எனக்காகக் கேட்டுச் சொன்னதற்கு நன்றிங்கண்ணா!
நான் அமரகோசத்தை மறுக்கவில்லை! அதில் சொன்ன ஸ்வாமி/லோகமாதா குறிப்புகள் தெளிவாகத் தான் இருக்கு! நீங்க தான் அதை ஒருவருக்கு மட்டுமே ஆக்கிட்டீங்க! :-)

May 29, 2008 9:09 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சங்கர விஜயங்கள், சங்கரரின் காலத்தைச் சொல்வதில் பல மாறுபாடுகள் தெரிகின்றன! சிருங்கேரி, காஞ்சி பீடங்கள் கி.பி 78-820 என்றும், மற்றவை கி.மு என்றும் சொல்கின்றன.

கி.பி என்பதே இயல்பாகப் பொருந்தி வருகிறது என்பதே என் கருத்து.
மற்றபடி எனக்கும் இந்த வரலாறு பிடித்தமானதே!

கி.மு என்றால் அப்போது பெளத்தம்/சமணம் அவ்வளவாகத் தலை தூக்கவில்லை! புத்தரே கிமு ஆறு தான்! அப்படி இருக்க, எப்படி சங்கரர் ஹிந்து தர்மத்தை, அவற்றின் பெரும் தாக்கத்தில் இருந்து, கிமு-விலேயே காத்தார்?
இதில் மட்டும் தான் மாறுபடுகிறேன்!

மற்றபடி சங்கரர் மாற்று மதங்களின் மேல் துவேஷம் காட்டாதவர்! அன்பே உருவானவர்! லோக ஹிதோ என்று இருந்தவர்! நீங்கள் சொன்னது போல் பிற மத நூல்களையும் கூட, அதன் இலக்கியத் தன்மைக்காகவேனும் மதித்து நடந்தவர்!

வாதப் போரில் எவரையும் சேதம் செய்ததில்லை! ஆச்சார்யர் ஹ்ருதயம் தயா சாகரம் என்னும் கருணைக் கடல்!

May 29, 2008 9:51 AM
கேள்வி-பதில் பக்கம் said...
Shankarar is a guru like Buddha,JESUS,Mohammed,ramanuja,saibaba(not the present one). Sankarar's spiritual power restrained to india. In my opinion, he is not a jagad guru. We can CALL Buddha,JESUS,Mohammed as JAGAD GURUS. Shankarar is just a guru. If you believe JESUS as son of god (i don't believe either)then you have the right to trust shankarar's as a god man just clone of Lord shiva...
NEVER...NEVER...NEVER...GOD IS GOD AND HUMAN IS HUMAN...

May 29, 2008 11:30 PM
ambi said...
//இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' //

கேஆரெஸ் அண்ணாவுக்கு பயந்து வேண்டுமென்றே பழமொழியை மாற்றி சொன்னதை நானும் பயந்து கொண்டே கண்டிக்கிறேன். :))

படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோவிலா? என்று தான் எங்கூரில் சொல்வார்கள்.

May 30, 2008 6:24 AM
மதுரையம்பதி said...
//சிருங்கேரி, காஞ்சி பீடங்கள் கி.பி 78-820 என்றும், மற்றவை கி.மு என்றும் சொல்கின்றன.//

இல்லை, சிருங்கேரி மட்டுமே கி.பி என்று கூறும்...மற்ற எல்லா மடங்களும் கி.மு என்று தெளிவாக இருக்கின்றனர். மற்ற மடங்கள் எல்லாவற்றிலும் அவர்களது ஆச்சார்ய பரம்பரை என்பது மிக நீண்டது...காஞ்சி பரமாச்சார்யார் 68ஆம் அதிபதி, துவாரகை 89ஆம் அதிபதி என்பதாக தெரிகிறது.
இவர்கள் இந்த பரம்பரையில் எல்லா ஆச்சார்யர்களது பெயர், அவரது காலம் எல்லாம் வழிவழியாக தொகுத்து வைத்திருக்கிறார்கள்....

சிருங்கேரி மடத்தின் கீழ் வரும் 8 மடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கி.முவிலிருந்து ஆச்சார்ய பரம்பரை கொண்டு வருகிறது. அதற்கு அவர்கள் கூறும் விளக்கமும் இருக்கிறது. இதை இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன் :)

May 30, 2008 10:11 PM
கவிநயா said...
இந்த அமரகோசம்தான் அங்க வந்ததா? என்னமோ உங்க மாதிரி சிலரோட புண்ணியத்துல தெரியாத செய்திகளெல்லாம் (புரிஞ்சும் புரியாமயும்) கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன். நன்றி, மௌலி!

May 31, 2008 11:29 PM
குமரன் (Kumaran) said...
தமிழிலும் பற்பல நூற்களை எழுதியவர்கள் சமணர்கள் தான். திருவள்ளுவ நாயனாரும் சமணர் என்றொரு கருத்து உண்டு.

சீவக சிந்தாமணி, வளையாபதியைப் பற்றி அறியேன். ஆனால் சிலப்பதிகாரம் சமணத் துறவியாம் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது என்பது பெரும்பான்மையோர் எண்ணம். ஆனால் அவர் சமணர் இல்லை சைவரே என்ற கருத்தும் உண்டு.

வாதத்தின் போது இருவருக்கும் நடுவில் ஏன் திரையிடப்பட்டது என்று தெரியுமா மௌலி? நீறு தரித்த நெற்றியைச் சமணர் பார்க்கக் கூடாது என்று திரையிடப்பட்டதாகவும் துறவி சமணர்களைப் பார்க்கக் கூடாது என்று திரையிடப்பட்டதாகவும் படித்த நினைவு - ஆனால் தெளிவான நினைவில்லை.

இந்து மதக் கடவுளர்கள் எல்லோரையுமே சமணர்கள் வணங்கிவருவதை இப்போதும் பார்க்கலாமே மௌலி? ஏன் அமரசிம்மன் சரஸ்வதி அருள் பெற்றதைப் பற்றி இப்படி சொல்கிறீர்கள்?

சரஸ்வதி சிவனுக்கு எப்படி உடன்பிறந்தவள் ஆகிறாள் மௌலி?

ஆசாரியர் இன்னும் விரைவில் தடுத்திருக்கலாம். அமரகோசத்தைப் போல் இன்னும் நிறைய நமக்குக் கிட்டியிருக்கும். :-(

June 5, 2008 10:25 PM

SANKARAN said...

Hi this is sankaran,I thank you first, i never seen a ambal charita in tamil.good work.Maduraiyambathi doing lot of spirutal clarifactions in tamil discourse is great job. I pray to god more & more stories come in maduraiyampahi. i am reading one month of your blogs in various stories of ambal,shiva & meenakshi vaibhavam etc. lalitha sahasranamam is beautiful explanation.

மதுரையம்பதி said...

வாங்க சங்கரன் சார். முதல் வருகைக்கு நன்றி...அவ்வப்போது வந்து படிங்க... :)