குருகுலம் முடிந்து செல்லும் சிஷ்யனுக்கு, குரு உபதேசம் செய்கையில் "காஞ்சனா, காமினி, கீர்த்தி" ஆகிய மூன்றிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவற்றில் கவனமாக இல்லாவிடில், இந்த மூன்றும் சிஷ்யனை கீழ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார். சீடனும் குருவை வணங்கி 'தான் இந்த மூன்றிலும் எச்சரிக்கையாக இருந்து தானம், தவம் போன்றவை செய்து உயர்வடைவதாக' வாக்களித்து பின் விடைபெறுகிறான்.
அந்த சிஷயன் கங்கை கரையில் உள்ள ஒரு ஊரில் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். ஒருநாள் கங்கையின் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு வருகையில் ஒரு புதையலைக் கண்டெடுத்தான். இது காஞ்சனம், நம் குரு சொல்லியபடி இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆகையால் அந்த புதையலை வைத்து கோவில் எழுப்ப முடிவுசெய்து கோவில் கட்டும் வேலையாட்களிடம் அந்த செல்வத்தை கொடுக்கிறான். அவர்கள் இவனைக் கட்டிப் போட்டுவிட்டு செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார்கள். அவ்வாறாக கட்டப்பட்ட நிலையில் தனது குரு கூறியதை நினைவிருத்தி, இனி இந்த செல்வத்தை கையாலும் தொடுவதில்லை என்று ப்ரதிஞ்ஞை செய்து கொண்ட சமயத்தில் சில வழிப்போக்கர்களால் விடுதலை செய்யப்படுகிறான்.
இவ்வாறாக அவன் தவத்தை தொடருகையில் அவனது ஆஸ்ரமத்திற்கு அழகிய பெண் ஒருவள் வந்து, தான் கணவனால் கைவிடப்பட்டவள் என்று கூறி, தனக்கு ஆஸ்ரமத்தில் தங்க இடம் தர வேண்டுகிறாள். சிஷ்யனுக்கு மீண்டும் ஆச்சார்யரது உபதேசம் (காமினியிடம் கவனமாக இரு) மனதில் தோன்றுகிறது. ஆகையால் அந்த பெண்ணை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் அப்பெண் தனதுநிராதரவான நிலையினை கூறி அழுத காரணத்தால் தனி பர்ணசாலை அமைத்து தங்கிக் கொள்ள உதவுகிறார். நாளடைவில் சிஷ்யர் சம்சாரி ஆகிவிடுக்கிறார். திடிரென ஒருநாள் ஆச்சார்யரது நினைவு வருகிறது. அப்போது தான் திருமணம் என்ற பந்தத்தில் வீழ்ந்ததாக உணர்ந்து தனது ஆச்சார்யாரின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாது விட்டதற்காக வருந்தி, சன்யாசம் ஏற்று மீண்டும் தவம் செய்ய காட்டிற்கு செல்கிறார்.
இந்த முறை கடுமையான தவத்தாலும், மந்த்ர, தந்த்ர, யோக ப்ரயோகங்களாலும் பல ஸித்திகளை அடைக்கிறார் நம்ம சன்யாசி. ஒருநாள் ஒர்ஏழை, சன்யாசியிடம் வந்து, தான் பசியாலும், நோயாலும் மிகவும் வருந்துவதாகக் கூற, அதற்காக வருந்திய சன்யாசி தனது தாடியிலிருந்து ஒரு மயிர் இழையினை எடுத்து அந்த ஏழைக்கு அளித்து, அந்த இழை அவனுக்கு வேண்டிய பணத்தை தரும் என்று கூறி அனுப்புகிறார். ஏழையும் நம்பிக்கையுடன் சென்று அதை தனது பெட்டியில் வைத்து மூடுகிறான். மறுநாள் அந்த பெட்டி முழுவதும் தங்க நாணயங்கள் ஜ்வலித்ததாம். இதன் காரணமாக சன்யாசியின் புகழ் பரவுகிறது. ஆனால் சன்யாசியோ 'நான் எந்த ப்ரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. எனது வைராக்யத்தை கலைக்காமல் நான் தவத்தை தொடருவேன்' என்று இருந்தார். ஒருநாள் காலை ஆஸ்ரமத்தின் முன்னே மிகப் பெரிய கூட்டம். நமது சன்யாசி என்ன-ஏது என்று விசாரிக்கும் முன்னரே கூட்டத்திலிருந்த மக்கள் அவரது தாடி முடியுனை பிடித்து இழுத்து எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மக்கள் கூட்டமாக இழுக்க ஆரம்பித்ததில் சன்யாசி நினைவிழந்து, ரத்தம் சொரிய கிழே விழுந்துவிடுகிறார்.
சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் தனது குருநாதரை நினைத்தார். தனது குருநாதர் கூறியது மூன்றும் (காஞ்சனம், காமினி, கீர்த்தி) எவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்துள்ளது என்று உணர்கிறார். அது மட்டுமல்லாது, குருவின் உபதேசம் எவ்வளவு ப்ரத்யக்ஷமானது என்றும் உணர்ந்து, அன்றிலிருந்து மெளனத்தையே கேடயமாக்கி தனது தவத்தை தொடர்ந்தார்.
No comments:
Post a Comment