அம்பிகை அவ்வப்போது பல அவதாரங்களைச் செய்து உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் அருளுகிறாள். இவ்வாறான அவதாரங்களில் ஒன்றுதான் சூர்ய வம்சத்தில் நிகழ்ந்தது. ஆமாம், மதுரையை அரசாண்ட மலையத்வஜனுக்கும், காஞ்சன மாலைக்கும் புதல்வியாக, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில் மூன்று வயது பாலையாக பிறந்தாள் மீனாக்ஷி. மீன் போன்ற நீண்ட கண்களுடன் இருந்ததால் மீனாக்ஷி என்று பெயர் பெற்றாள்.
தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசாக்ஷி ஏற்று, பற்பல தேசத்து அரசர்களையும் வென்று முடிவாக அஷ்டதிக் பாலகர்களையும் போரில் சந்திக்கிறாள். எல்லாத் திசைகளையும் வென்று கடைசியாக ஈசான்ய திக்கில் ஈசனையே எதிர்க்கத் துணிவு பெற்று, போரை ஆரம்பிக்கிறாள். ஈசனை, சுந்தரேசனைக் கண்டவுடன் அன்னையின் உடலுள் ஒரு மாற்றம், அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேவிட, அவருக்கு மாலையிடத் தயாராகிறாள்.
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருமணத்தில், சஹோதரனாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனது தேவியுடன் அங்கயற்கண்ணியை தாரைவார்க்க, ஸ்ரஸ்வதியுடன் ப்ரம்ஹா திருமணத்துக்குத் தலைமையேற்க, சப்தரிஷிகள் வேதமோத, இந்திரன் முதலான தேவர்கள் பூமாரிப் பொழிய, நாரதர் கானம் பாட, பூதகணங்கள் தாண்டவமாட, அப்ஸரஸ்கள் நாட்டியமாட, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கைப்பிடித்து சப்தபதியைச் செய்து மாங்கல்யம் அணிவிக்கிறார்.
இந்த சுப நிகழ்ச்சி இன்று மதுரையில் உற்சவமாக, மதுரையின் மிகப்பெரும் திருவிழாவாக, வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் நடைபெறும் திருவிழாக்களின் தலை சிறந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஹாலாஸ்ய க்ஷேத்திரமான மதுரையில் நேற்று திக்விஜயம் ஆயிற்று.திருப்பரங்குன்றத்துக் குமரனும், தாரைவார்க்க பவழக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு நேற்றே வந்தாயிற்று. இவர்கள் இருவரும் இன்னும் சிறிது நேரத்தில்
மேடையேறி மணமக்களுக்காக காத்திருப்பர். சர்வாலங்காரங்களுடன் மதுரை நகராளும் அம்பிகையும், சர்வலோக சரண்யன் ஸ்ரீ சுந்தரேசனும் மேடைக்கு வந்துவிடுவர். நானும் சென்று அந்த திவ்யமான தெய்வீகத் திருமண தரிசனத்தைக் காணச் செல்ல வேண்டும். என்னுடன் நீங்களும் வாருங்கள், உங்களுக்கும் வி.ஐ.பி ஸ்பெஷல் பாஸ் இருக்கிறது.
ஸுமீனாக்ஷி ஸுந்தரேசெள பக்தபகல்ப மஹீருஹெள
தயோனுக்ரஹோ யத்ர தத்ர ஸோகோ ந வித்யதே
[பக்தர்களின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றிடும் பிராகாசிக்கும் கற்பக விருக்ஷங்களாக இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அருள் யாருக்கு இருக்குமோ அவர்களுக்கு துன்பம்/சோகம் சிறிதுமில்லை]
ஹர ஹர சுந்தர!
மீனாக்ஷி சுந்தர!
7 comments:
இப்போது தான் கேபிள் டிவியில், மீனாக்ஷி திருக்கல்யாணத்தைப் பார்த்து விட்டு, இணையப்பக்கம் வருகிறேன், அதற்குள், மௌலியின் பக்கத்தில்...!
//மேடையேறி மணமக்களுக்காக காத்திருப்பர். சர்வாலங்காரங்களுடன் மதுரை நகராளும் அம்பிகையும், சர்வலோக சரண்யன் ஸ்ரீ சுந்தரேசனும் மேடைக்கு வந்துவிடுவர். நானும் சென்று அந்த திவ்யமான தெய்வீகத் திருமண தரிசனத்தைக் காணச் செல்ல வேண்டும். என்னுடன் நீங்களும் வாருங்கள்//
நிச்சயம் உடன் வருகின்றேன்.
ஆஹா!! அழகி அழகன் கல்யாணம் ஆச்சா !இப்பவும் நினைச்சிண்டேன் மாசி வீதி உலா ராத்திரி கூட்டம் நெருக்கும்னு. ரொம்ப சந்தோஷம் . மாப்பிள்ளை வந்தாரா?:)))) இங்கேயும் ஆச்சு.எனக்கும் மருமகள் வந்தாள்:)))) !!! தனி மடலில் பார்க்கவும்:))
வாங்க கிருஷ்ணமூர்த்தி சார், கல்யாணம் ஆச்சு, வாங்க விருந்துக்கு 50ஆயிரம் பேருக்கு விருந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடக்கறது...சாப்பிட்டுட்டு தாம்பூலம் வாங்கிண்டுதான் போகணும் நீங்க...:)
வாங்க கைலாஷி சார்.
வாங்கோ ஜெயஸ்ரீ-மா...ஆமாம் மாப்பிள்ளை வந்தாச்சு. :) நீங்க நினைச்சுண்ட அந்த மேலமாசிவீதி கூட்டத்தையும், அங்கு மக்கள் தம்பதிகளுக்கு வழங்கும் வரவேற்பு/வாழ்த்துக்களுக்கும் முன்னோட்டமாக நேற்று திக் விஜயம் பார்த்தேன்....இன்னைக்கு யானை வாகனம்-பூப்பல்லாக்கு பார்க்க முடியாது, பெங்களூர் கிளம்பணும் :(
பாண்டிய வம்சம் சந்திர வம்சம் என்று நினைத்திருந்தேன். சோழர்கள் தான் தங்களைச் சூரிய வம்சம் என்று சொல்லிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். மலையத்வஜ பாண்டியன் சூரிய வம்சம் என்று சொல்லியிருக்கிறீர்கள் மௌலி. சரி தானா?
Post a Comment