கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:
கர்ம, பக்தி, ஞான மார்கங்களில் எல்லாவற்றிலும் சாதனை என்று வந்துவிட்டாலே அஹிம்ஸை, அன்பு, பக்தி போன்றவற்றை மிக முக்கியமாக வலியுறுத்திப் பெரியவர்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆன்மீகப் பெரியவர்கள் பல நேரங்களில் தர்மம் பண்ணு, தர்மம் தலை காக்கும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் தர்மம் பண்ணுவது என்றால் என்ன?, எது தர்மம் என்பது பல நேரங்களில் தெரிவதில்லை. பொருள் வேண்டுபவர்களுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு (அதுவும் 80G வரி விலக்கு இருந்தால் மட்டுமே.. :-)) தருவது தர்மம் என்ற அளவில் ஆகிவிட்டது நமது வாழ்கை. ஆனால் தர்மம் என்பது வேறு தானம் என்பது வேறு என்பதை நாம் எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று பார்க்கலாமா?. இதை தெளிவிக்கவே தர்ம சாஸ்த்திரம் என்று தனியாக ஒன்றை, வேத-புராண-இதிகாசங்களின் சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார்கள் நமது மூதாதையர்கள்.
அஹிம்ஸா சத்யம் அஸ்தேயம் செளசம்
இந்திரிய நிக்ரஹ ஏதம் சாமாதிகம் தர்மம்
சாதுர்வர்ணே பிரதிர் மனு.
என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. அதாவது அஹிம்ஸை, சத்யம், அஸ்தேயம், செளசம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய ஐந்து விஷயங்களையும் நியமனமாகக் கொண்ட வாழ்கையை நடத்துதலே தர்ம வாழ்க்கை. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் தர்மம், ஆக தர்மம் என்னும் இந்த ஐந்துடன் தானத்தையும் சேர்த்த வாழ்கை ஆன்மீகத்தில் நம்மை உயர்த்தும் என்று கூறலாம் தானே?.இதில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கலாமா?
அஹிம்ஸை என்றால் நாம உடனே நினைக்கறது உயிர்களை துன்புறுத்தாமை, உணவுக்காக கொல்லாமை போன்றவற்றை மட்டுமே. ஆனால் பிறருக்கு எந்த விதத்திலும் மன வருத்தத்தை ஏற்படுத்தாது இருப்பதும் அஹிம்ஸைதான். இந்த மாதிரி வாழ்வது சிரமம் தான், ஆனால் பழகப் பழக இதை அனுபவத்தில் கொண்டுவர முடியும். நாம் வருந்த நேரிட்டால் உடனே அதற்கு எதிர் வினையாக நாம் செய்யும் செயலே பல நேரங்களில் எதிரில் இருப்பவருக்கு ஹிம்ஸையாகிறது. ஆகவே பிரச்சனை/மனவருத்தம் ஏற்படும்/ஏற்படுத்தும் என்று தோன்றுகிற/உணர்கிற நேரத்தில் அமைதியாக இருப்பது அல்லது அவ்விடத்திலிருந்து விலகி இருப்பதும் அஹிம்ஸை தான்.
அடுத்து வருவது சத்யம்.இது நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. ஆனால் விளையாட்டுக்குச் சொல்வதாகவும், இந்த விளையாட்டு, 100 பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துவது என்பதெல்லாம் மஹா பாபங்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும். எந்தக் காரணத்திலும் அசத்யமான வார்த்தைகளைப் பேச மாட்டோம் என்று இருக்க வேண்டும். ஒருவர் எதிரில் இருந்தால் ஒன்று சொல்வது, இல்லையென்றால் இன்னொன்று என்பதானவைகள் அசத்யத்தில் சேர்ந்து, நமக்கு பாபத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் பெரியோர்.
அஸ்தேயம் என்றால் பிறன் பொருளுக்கு ஆசை கொள்ளாது இருத்தல். நம்மிடம் இல்லாத பொருளை அடுத்தவனிடத்தில் அபகரிக்க எண்ணவும் கூடாது என்கிறார்கள். அதாவது அடுத்தவன் சொத்துக்கு ஆசைப் படாமல் இருக்க வேண்டும். இந்த அஸ்தேயம் இல்லையென்றால் சத்யமும் அஹிம்ஸையும் நம்மால் செயல்படுத்த இயலாது. நியாயமான வழியில் கிடைப்பதை இறையின் பிரசாதமாக ஏற்று, அநியாயமாக பிறருடைய பொருளுக்கு ஆசை கொள்ளாது இருப்பது இந்த மூன்றாவது தர்மம்.
செளசம் என்றால் பவித்ரம்/பரிசுத்தம் என்று பொருள். உடல் பரிசுத்தம் என்பது முக்கியம்தான், அதைவிட மேலாக, மனதளவில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இங்கு சொல்லப்படும் செளசம். செளசம் இருவகைப்படும், பாஹ்ய செளசம், இதுதான் நமது உடல் தூய்மை, இன்னொன்று ஆப்யந்த்ர செளசம் என்பதான மனதளவில் தூய்மை. அதாவது குழந்தை போன்ற, கல்மிஷமில்லாத மனதுடன் இருத்தல். மனதில் கல்மிஷம் இருக்கும் வரையில் மேலே சொன்ன மற்ற மூன்று விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை தின்றுவிடக்கூடும் என்கிறார்கள்.
கடைசியாக வருவது இந்திரிய நிக்ரஹம். நமது பஞ்ச இந்திரியங்களது செயல்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். காஞ்னம்-காமினி-கீர்த்தி ஆகியவை பற்றி பெரியவர்கள் சொல்லியதை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்த இந்திர்ய நிக்ரஹம் என்பது காதால் நல்லவற்றைக் கேட்பதும், உணவுக் கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் பேணுதல், கண்களால் எதை எல்லாம் காணக் கூடாது என்று பலவிதங்களிலும் நம்மைப் புடம் போடச் செய்வது. இதுவும் ஒரு முக்கியமான தர்மம்.
சரி, இதெல்லாம் யாருக்குச் சொல்லப்படுகிறது?, மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் உண்டானவை என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. தர்ம வழியில் செல்ல வேண்டும், இறையருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் எல்லோருக்கும் இவை ஐந்தும் முக்கியம். இப்படி வாழ்பவனே தார்மீக வாழ்கை வாழ்பவன், தார்மீகன். இப்படி வாழத் தலைபடுவோமானால் இறையனுபவம் பெறுதல் சுலபம். ஆகவே நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் இந்த ஐந்து விஷயங்களையும் நினைவில் கொள்ள முயலுவோம்.
3 comments:
Nalla thagaval
mikka nanri
முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் டெம்பிள்...ஆமாம் நீங்க ஆணா?, பெண்ணா?..உங்களை எப்படி அழைக்கிறதுன்னு தெரியல்ல..மன்னியுங்கள்.
//அதாவது குழந்தை போன்ற, கல்மிஷமில்லாத மனதுடன் இருத்தல். மனதில் கல்மிஷம் இருக்கும் வரையில் மேலே சொன்ன மற்ற மூன்று விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை தின்றுவிடக்கூடும் // இந்த சுபாவம் மட்டும் வாய்க்கப் பெற்றால், மனதுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நாம் செளகர்யமா இருக்கலாம்....
Post a Comment