Tuesday, April 6, 2010

ரமணீ, ராகேந்து வதநா...


மஹாதேவி

மஹதீ என்றால் மிகப் பெரிய, அளவிட முடியாத சரீரம் என்று பொருள். இதனால் தான் அடிமுடி காண முடியாத இறைவனை மஹாதேவன் என்றும் அவளுடைய பத்னி மஹாதேவி என்றும் கூறப்படுகின்றனர். தேவிபுராணம் அளவிட முடியாத பெரிய சரீரத்தை உடையவள் என்று கூறியிருக்கிறது. கண்டகி நதிக்கு அருகில் இருக்கும் சக்ர தீர்த்தத்தில் வசிக்கும் தேவிக்கு மஹாதேவி என்று பெயர் என்பதாக சக்தி பீட நிர்ணயத்தில் கூறப்படுகிறது.

மஹா லக்ஷ்மி

முந்தைய நாமத்தில் கூறப்பட்டது போல அளவிட முடியாத லக்ஷ்மிகரத்தை உடையவள் மஹா-லக்ஷ்மி. இவளே விஷ்ணு பத்னி ரூபத்தில் இருப்பவள். கரவீர க்ஷேத்திரம் என்று புராணகாலத்தில் சொல்லப்பட்ட கோலாபுரத்தில் இருப்ப்வள் இவளே என்று பாத்ம புராணம் சொல்லியிருக்கிறது. பாத்ம புராணத்தில் இவளைச் சொல்லும் போது மஹாலன் என்னும் அரக்கனை அழித்ததால் மஹா லக்ஷ்மி என்று பெயர் பெற்றாள் என்று இருக்கிறது. இது தவிர, சிவ புராணம், மார்க்கண்டேய புராணம், மைலாரா-தந்திரம் ஆகியவற்றிலும் அம்பிகையின் ரூபமே மஹா-லக்ஷ்மி என்று கூறப்பட்டிருக்கிறது.

ரமா என்னும் நாமமும் லக்ஷ்மி ஸ்வரூபமாக லலிதையைக் கூறும் பொருளில் வருவதுதான். தேவி பாகவதத்திலும் புவனேஸ்வரி ப்ரபாவத்தின் போது, மஹா-லக்ஷ்மி, மஹா-சரஸ்வதி மற்றும் கெளரி ஆகியோர் அம்பிகையின் ஸ்வரூபமாக அவளிலிருந்து பிரிந்தவர்கள் என்றே சொல்லியிருக்கிறது. கன்யா பூஜையில் 13 வயது பெண்குழந்தையை மஹா-லக்ஷ்மியாக வரித்துச் செய்வது வழக்கம்.

இவள் எப்படி இருக்கிறாளாம்?, ரமணீயமாக இருக்கிறாளாம், ஆகவே ரமணீ என்று ஒரு நாமா. அதாவது பக்தர்களிடத்தில் இனிமையாக விளையாடுபவள்/பழகுபவள் என்பது பொருள். எவ்வளவு அயர்ச்சி, குழப்பம் இருந்தாலும், பூர்ண சந்திரனைப் பார்க்கையில் நமக்குள் ஒரு இனம் புரியாத சாந்தம்/அமைதி கிட்டுகிறது. அது போல பக்தர்களுக்கு மகிழ்வை/சாந்தத்தை தரும் வதனத்தை உடைய அம்பிகைக்கு ராகேந்து வதநா என்று பெயர். அதாவது, பூர்ண சந்திரன் போன்ற வதனத்தை உடையவள். அம்பிகையின் வதனத்தை அர்த்த சந்திரன், பூர்ண சந்திரன் என்று பலவிதமான நாமங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

[நம்பிக்கை குழுமத்திற்காக எழுதப்பட்டது, படம் உதவி, "அடியேன் முத்துசாமி"]

4 comments:

Jayashree said...

"பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா " ஸரத் கால சந்திரனின் முகத்தை ஒத்தனள்--சௌந்தர்ய லஹரி.
ராக இந்து வதனா பூர்ண சந்த்ரனின் முகத்தை ஒத்தவள் !! ராக - இதுல ப்ரகாசம், ரங் ஆ மௌலி?

மதுரையம்பதி said...

கலக்கல் ஜெயஸ்ரீ மேடம். :)

தக்குடு said...

இந்த சந்திரன் இருக்காரே! அவர் நல்ல யோகக்காரர், அம்பாள் கூட எவ்வளவு சம்பந்தம் அவருக்கு!!!!!..:)

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு, நீங்க சொல்றது சரிதான், சந்திரனை அவள் தனது தலை மேலயே வச்சுண்டு கொண்டாடறாளே?.