
பண்டாஸுரன் பிறப்பினை மீண்டும் ஒருமுறை நினைவில் கொண்டுவர வேண்டும். ஈசனது நெற்றிக் கண்ணால் எறிக்கப்பட்ட மன்மதனது சாம்பலில் உருவானவன் பண்டாஸுரன். ஆயிற்று பண்டாஸுரனது வதம், தேவர்கள் எல்லோரும் பராம்பிகையை பூஜிக்கின்றனர். அப்போது தேவ-தேவர்கள் எல்லோரும் தங்களிடத்து இருக்கும் சிறந்த பொருட்களை அம்பிகையிடத்து சமர்பித்து அவளை வாழ்த்துகின்றனர். அப்போது, அங்கே அனங்கனாக இருக்கும் மன்மதனது இணையாளும் இருக்கிறாள். அவளது மனதில் தனது மணாளன் மட்டும் அனங்கனாக இருப்பதால் மற்ற தேவர்களைப் போல உருவத்துடன் வந்து வழிபட இயலவில்லையே என்ற வருத்தம் ரதிக்கு மனதில் தோன்றுகிறது. அதனை உணர்ந்த பரதேவதை அனங்கனுக்கு அவனது பழைய ரூபத்தை அளிக்கிறாள். ஹரனது நேத்ராக்னியால் பஸ்மமான காமனுக்கு சஞ்சீவினி என்ற மூலிகை போல இருந்து வாழ்வளித்தவள் என்னும் பொருளைத் தரும் நாமமே 'ஹரநேத்ராக்னி ஸம்தக்த காம ஸஞ்ஜீவநெளஷதி'. அன்னையின் இந்தப் ப்ரபாவம் லலிதோபாக்யானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சரி, இவ்வாறு சகல லோகங்களுக்கும் நன்மையை அளிக்கும் விதமாக பண்டாஸுரனை வதைத்த பின்னர் தேவர்கள் வாழ்த்தும் போது எப்படி இருந்தாளாம்?, தன் பக்தர்களுக்கு காமேச்வரரையே கொடுப்பவளாக, பரசிவத்தை அனுபவிக்கத் தருபவளாக, அதாவது பிரம்மானந்த அனுபவத்தைத் தருபவளாக கருணையுடன் இருந்தாளாம். காமேச்வரனிடத்தில் கலந்தவளாக அம்பிகையைச் சொல்வது சிறப்பு. பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கு 'தாயம்'என்று பெயர், காமேஸ்வரரையே தனது சொத்தாக, தாயமாக இருப்பதால்தான் தனது பக்தர்களுக்கு அந்த பரசிவத்தை அனுபவிக்கத் தருகிறாள். காமேச்வரனுடன் எப்போதும் பிரிவின்றி இணைந்தே இருக்கும் அவள், கருணையுடன் தனது பக்தர்களுக்கு சிவ-சாயுஜ்யத்தை அருளுவதாகச் சொல்லும் நாமமே 'காம-தாயிநீ'.
இவ்வாறு சிவத்தில் கலந்து, சிவத்திலிருந்து பிரிக்க முடியாது இருந்து, தனது பக்தர்களுக்கு சிவானுபூதியை அருளுபவள் அழகிய கண்களுடன் இருந்தாளாம். அந்த அழகிய கண்களாலேயே தன்னை வழிபடுபவர்களுக்கு அருளுபவளாம், அதனாலேயே அவள் 'காமாக்ஷி'. ஒட்டியாண பீடமாகிய காஞ்சியில் வாசம் செய்யும் தேவியைக் குறிக்கும் நாமம் இது. 'க' என்றால் சரஸ்வதியையும், 'ம' என்பது லக்ஷ்மியையும் குறிக்கும் அக்ஷரங்கள் என்பர். லக்ஷ்மி-சரஸ்வதியை கண்களாகக் கொண்டவள் என்றும் கூறலாம். லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கண்களாகக் கொண்டு தனது பக்தர்களுக்கு அருளுபவளைக் காமாக்ஷி என்று கூறலாம் என்கிறார் லக்ஷ்மீதரர். காமாக்ஷி எப்படி இருந்தாளென்றால், அவள் தன்னுடைய வஸ்த்ரம், ஆபரணம், புஷ்பம் எல்லாம் சிவந்த நிறத்துடன், உதிக்கின்ற சூரியனது நிறத்தைப் போன்று இருந்தாளாம். இவ்வாறு சிவந்த நிறத்தை உடையவள் என்பதைச் சொல்லுவதே 'ஸர்வாருணா'.